Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

03. சிவயாழினி - மௌனமாய் ஒரு மோகனம்

மெளனம் 26

அலமேலு மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். லதா இப்போதெல்லாம் சாப்பிட மட்டுமே கீழே இறங்கி வந்தாள். எப்போதுமே மாடியில் இருந்தாள். ஆண்கள் அனைவரும் தொழிலில் முழுகவனத்துடன் இருக்க, ரஞ்சனியும் மருத்துவம் படித்துக் கொண்டிருந்ததால் யாருக்கும் அலமேலுவுடன் பேச நேரமிருக்கவில்லை. வீடு முழுக்க ஆட்கள் இருந்தும் தனிமையாகவே உணர்ந்தார். 
பெற்று வளர்த்த பிள்ளைகள் தன்னை ஒதுக்கி விட்டதாக மனதிற்குள் புழுங்க ஆரம்பித்தார். தன் மனகுமறலை கணவரிடம் சொல்லலாம் என்றால் அலமேலுவின் நெஞ்சுவலி நாடகத்தையும் சொல்ல வேண்டும். அவரின் எதிர்வினை எப்படியிருக்கும் என்று கணிக்க முடியாது, அதனால் அமைதியாக நாட்களை கடத்தினார்.


Advertisement

அன்று ரஞ்சனி கல்லூரிக்கு தயாராகி கொண்டிருந்தாள்.

Advertisement

“ரஞ்சு, உன் அண்ணனுங்க கல்யாணம் ஆனதும் என்னை மறந்துட்டானுங்க. நீயும் என்கிட்ட இப்போ எல்லாம் சரியாவே பேசறதில்ல, ஏண்டி?”

Advertisement

“அம்மா, காலேஜ்ல படிச்சிட்டு இருக்கும் போதே ஹாஸ்பிட்டல்ல டிரைனிங் எடுத்துக்க சொல்றாங்க. கிளினிகல் போஸ்டிங் போட்டு இருக்காங்க. கிளாஸை முடிச்சிட்டு ஈவ்னிங்ல அங்கே போய் வேலை பாத்துட்டு வர்றதுக்குள்ள டயர்டாயிடுது. நிக்க நேரமில்லாம ஓடிட்டு இருக்கேன். இதுல நான் எங்கேம்மா பேசறது?”

Advertisement

“இப்பவே ஹாஸ்பிட்டல்ல டிரிட்மெண்ட் பாக்க ஆரம்பிச்சிட்டியா?” அலமேலு ஆர்வமாக கேட்டார்.
“இல்லமா, டாக்டர்ஸ் டிரிட்மெண்ட் பண்றத நாங்க கவனிக்கணும், பேஷண்ட் கிட்ட பேசணும்னு சொல்லியிருக்காங்க”
“எந்த ஹாஸ்பிட்டலுக்கு போறே?”
“காலேஜ்ல எந்த ஹாஸ்பிடலுக்கு போக சொல்றாங்களோ அங்கே போகணும். எங்காச்சும் கிராமத்துல டாக்டர்ஸ் தேவை பட்டா அனுப்புவாங்க. எங்க காலேஜோட டைஅப் வச்சிருக்கற ஹாஸ்பிடலுக்கும் போக வேண்டியிருக்கும். எப்போ எங்கே அனுப்புவாங்கனு சொல்ல முடியாது”
“ரொம்ப கஷ்டமா இருக்கா ரஞ்சி?”
“இல்லமா, இன்ட்ரஸ்டிங்கா தான் இருக்கு. ஆனா உடம்புக்கு முடியாத உன்னை கூட இருந்து கவனிச்சுக்க முடியல, அதான் கவலையா இருக்கு. நெஞ்சுவலிக்கு கொடுத்த மாத்திரையெல்லாம் ஒழுங்கா சாப்பிடறீயா?”
“ம் சாப்பிடறேனே” அலமேலு திரும்பி செல்ல எத்தனித்தார்
“ஆப்ரேஷனுக்கு அப்புறம் நீ மறுபடியும் ஹெல்த் செக்அப் பண்ணிக்கவே இல்லல்ல? இன்னைக்கு என் கூட வாயேன், செக் பண்ணி பாத்துடலாம்”
“அதெல்லாம் வேணாம், நான் பாத்துக்கறேன். நீ காலேஜூக்கு கிளம்பு”
“ஆப்ரேஷன் பண்ணதுக்கப்புறம் உடம்பு எப்படி இருக்குதுனு பாத்துக்கறது நல்லதுமா” என்று ரஞ்சனி மேலும் அறிவுறுத்த, “ப்ச், அதெல்லாம் எனக்கு தெரியும் லதாவ கூட்டிட்டு போய் நானே செக்கப் பண்ணிக்கறேன். நீ காலேஜூக்கு கிளம்பு” என்று அலமேலு சலிப்புடன் சொல்லிவிட்டு பின்பக்கம் சென்று விட்டார்.
‘இந்தம்மா உடம்பை சரியா கவனிச்சுக்கவே மாட்டாங்க’ என்று மனதிற்குள் புலம்பியபடி கல்லூரிக்கு சென்றாள். அவளுடைய கல்லூரியில் “ஸ்டுடென்ட்ஸ் இன்னையிலருந்து உங்களுக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு கிளினிகல் போஸ்ட்டிங் இருக்கு” என்று அவளின் புரபசர் கூறிய மருத்துவமனை, சரவணனின் மாமனாருடையது.
சரவணனுடைய மாமனாரும் ரஞ்சனி படிக்கும் மருத்துவமனையின் முதலாளியும் பால்ய நண்பர்கள். அதனால் தான் ரஞ்சனிக்கு மருத்துவ கல்லூரியில் எளிதாக அவரால் இடம் வாங்கி தரமுடிந்தது.
மகிழ்ச்சியுடன் கிளம்பி ஆர்கே மருத்துவமனைக்கு சென்றாள். அங்கே கொடுக்கப்பட்ட வேலைகளை செய்து விட்டு கிளம்பும் போது, அங்கிருந்த வரவேற்பாளினியிடம் பேசினாள்.
“அலமேலுங்கிற பேஷண்ட்க்கு இங்கே தான் ஹார்ட் ஆபரேஷன் நடந்துச்சு. அவங்களுக்கு அடுத்த செக்அப் டேட் எப்போனு பார்த்து சொல்றீங்களா?”
“எந்த தேதியில ஆப்ரேஷன் நடந்துச்சு?” வரவேற்பாளினி கேட்க, ரஞ்சனி தேதியை கூறினாள்.
சில நிமிடங்களில் கணினியில் இருந்த தரவுகளை ஆராய்ந்து விட்டு, “மேம், நீங்க சொன்ன தேதியில செண்பகம்ங்கிற பேஷண்ட்க்கு தான் ஹார்ட் ஆப்ரேஷன் நடந்திருக்கு. அவங்க நேத்து தான் ஜெனரல் செக்அப் பண்ணிக்கிட்டு போயிருக்காங்க. அலமேலுங்கிற பேர்ல ஆப்ரேஷன் நடந்ததா டேட்டா எதுவும் இல்லையே”
“இல்லைங்க இங்கே தான் ஆப்ரேஷன் நடந்தது. எதுக்கும் நல்லா செக் பண்ணி பாருங்க”
“நீங்க சொன்ன தேதி மட்டும் இல்லாம அந்த மாசத்துல அலமேலுங்கிற பேர்லயே யாருக்கும் ஹார்ட் சர்ஜரி நடக்கல மேம்”
“அப்போ அஞ்சு லட்சம் ஹாஸ்பிடல் பில் கட்டியிருக்கோமே, அதுவும் இல்லனு சொல்லுவீங்களா?” ரஞ்சனி எரிச்சலுடன் கேட்டாள்.
“சாரி மேம், ஹாஸ்பிடல் ரெக்கார்ட்ல நீங்க பணம் கட்டினதுக்கான அப்டேட் எதுவுமில்ல?”
“வாட்?” அதிர்ந்த ரஞ்சனி முதலில் வசீகரனுக்கு தான் அழைத்தாள். அவன் மீட்டிங்கில் இருந்ததால் கைப்பேசியை அணைத்து வைத்திருந்தான். உடனே சரவணனுக்கு அழைத்தாள்.
“என்ன ரஞ்சி, கிளாஸ் டைம்ல போன் பண்ணியிருக்கே? பணம் எதாச்சும் கட்டணுமா?”
“அண்ணா, கொஞ்சம் ஆர்கே ஹாஸ்பிட்டலுக்கு உடனே கிளம்பி வா”
“ஏண்டா, உடம்பு எதுவும் சரியில்லையா?” சரவணன் பதட்டமாக கேட்க
“அதெல்லாமில்ல. முக்கியமான விஷயம் , உடனே கிளம்பி வா” என்றாள்.
என்னவோ ஏதோ என்று சரவணன் அவசரமாக காரை எடுத்துக் கொண்டு ஆர்கே மருத்துவமனையை அடைந்தான். ரஞ்சனி அவனுக்காக வாசலிலேயே காத்திருந்தாள்.
“என்னாச்சு ரஞ்சி?” கேட்டவனிடம் வரவேற்பாளினி சொன்ன விவரங்களை கூறினாள்.
“அதெப்படி நடந்த ஆப்ரேஷனையும், கொடுத்த பணத்தையும் இல்லனு சொல்லிடுவாங்க? வா நான் விசாரிக்கிறேன்” என்று சரவணன் மீண்டும் வரவேற்பாளினியிடம் விசாரிக்க, அவள் ரஞ்சனியிடம் கூறியதையே சொன்னாள்.
அவன் தன் கைப்பேசியில் இருந்த மருத்துவமனையில் பணம் செலுத்தியதற்கான விவரங்களை காட்ட, “சார் இதெல்லாம் தனியா டைப் பண்ணி பிரிண்ட் எடுத்த மாதிரி இருக்கு. எங்களோட அபிசியல் பில்லை பாருங்க வித்தியாசம் தெரியும்” என்று அவள் கணிணியில் பதிவிறக்கம் செய்த கட்டணசீட்டை காட்டினாள்.
இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. “என்னங்க இது அநியாயம்? ஒரு குடும்பமே ஹாஸ்பிட்டல்ல இருந்தோம். பணம் கட்டி ஆப்ரேஷன் முடிஞ்சதும் வீட்டுக்கு கூட்டிட்டு போனோம். அப்படி ஒரு ஆபரேஷனே நடக்கல, பணமும் நீங்க கட்டலனு சொல்றீங்க? இந்த ஹாஸ்பிடல் ஓனரோட மருமகன் நான். எனக்கே இந்த நிலைமைனா மத்தவங்களுக்கு என்ன நடக்கும்? இதை நான் சும்மா விட மாட்டேன்” என்று சரவணன் கத்த ஆரம்பிக்க
“சார் ப்ளீஸ் கத்தாதீங்க. நீங்க சொல்ற தேதியில நான் லீவுல இருந்தேன். எதாச்சும் மிஸ் ஆகியிருக்கலாம். எங்க ஓனர் வரைக்கும் விசயம் போக வேணாம். எதுக்கும் ஹார்ட் சர்ஜரி பண்ற டாக்டர்கிட்ட உங்கள கூட்டிட்டு போறேன். ஒரு வேளை நாங்க மிஸ் பண்ணியிருந்தாலும் அவர்கிட்ட ரெக்கார்ட் இருக்கும். வாங்க சார்” என்றாள்
சரவணனும் ரஞ்சனியும் அவள் அழைத்து சென்ற மருத்துவரின் அறைக்கு சென்றனர். “அம்மாவுக்கு ஹார்ட் சர்ஜரி பண்ண டாக்டர் இவரில்ல” என்றாள் ரஞ்சனி
“இந்த ஹாஸ்பிடல்ல இருக்கற ஒரே கார்டியாலஜிஸ்ட் இவர் தான் மேடம்” என்ற வரவேற்பாளினி, “சார் அலமேலுங்கிற பேஷண்ட்க்கு நீங்க ரீசன்டா ஹார்ட் சர்ஜரி பண்ணீங்களானு கொஞ்சம் உங்க ரெக்கார்டை பாத்து சொல்லுங்க சார்”
“கடைசியா செண்பகம்ங்கிற பேஷண்ட்க்கு மட்டும் தான் சர்ஜரி பண்ணியிருக்கு. அதுக்கு பிறகு எந்த ஆபரேஷனும் நடக்கல” என்று விட்டு அவர் வார்டுக்கு கிளம்பிவிட்டார்.
சரவணனனும் ரஞ்சனியும் குழப்பத்தோடு இருக்க, “சார் ஹார்ட் பேஷண்ட்னு தேடாம அலமேலுங்கிற பேஷண்ட் அட்மிட் ஆகியிருக்காங்களானு வேணும்னா பாத்து சொல்லட்டுமா சார்?”
“சரி பாருங்க”
சில நிமிடங்களில் பார்த்து விட்டு, “சார், நீங்க சொன்ன தேதியில அலமேலுங்கிற பேஷண்ட்டும் இங்கே தான் அட்மிட் ஆகியிருக்காங்க. அவங்கள பாத்தது கேஸ்ட்ரோஎன்டராலஜிஸ்ட், அதாவது வயிறு சம்மந்தமா செக் பண்ற டாக்டர். அவர் இவங்களுக்கு கேஸ்ரிக் பிரச்சனைனு ரிப்போர்ட் கொடுத்திருக்காரு. ஆனாலும் இவங்க ஏனோ பத்து நாளைக்கு ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருக்காங்க. அதுக்காக முப்பதாயிரம் பணம் கட்டியிருக்காங்க”
சரவணனனும் ரஞ்சனியும் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்
“அண்ணா எதுக்கு வீணா குழம்பிக்கிட்டு? அண்ணிய போன் பண்ணி வரச்சொல்லுங்க”
“வேணாம் ரஞ்சி. நீ இங்கேயே இரு. நான் வீட்டுக்கு போய் அம்மாவோட ரிப்போர்ட்டை எடுத்துக்கிட்டு வரேன்” என்ற சரவணன் ஒரு முடிவுடன் வீட்டிற்கு கிளம்பி சென்றான்.
மதியம் மூன்று மணி, இனி ஆண்கள் யாரும் வீட்டிற்கு வரமாட்டார்கள் என்பதால் அலமேலு கண்ணயர்ந்து இருந்தார். லதாவும் மாடியில் குழந்தையுடன் உறங்கி கொண்டிருந்ததால் வீடே நிசப்தமாக இருந்தது. சத்தமில்லாமல் அலமேலுவின் அறைக்குள் சென்று மருத்துவமனையில் அவருக்கு கொடுத்த அறிக்கைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு சென்றான்.
அவன் கொடுத்த மருத்துவ அறிக்கைகளை வரவேற்பாளினி ஆராய்ந்து பார்த்து விட்டு, “சார், இந்த ரிப்போர்ட்ல இருக்கற கம்ளெய்ண்ட் அன்ட் டிரீட்மெண்ட் மொத்தம் செண்பகத்துக்கு நடந்தது. ரிப்போர்ட்ல அலமேலுங்கிற பேரை மட்டும் மாத்தி உங்களுக்கு கொடுத்திருக்காங்க. எங்க ரெக்கார்ட்ல அலமேலு நெஞ்சுவலினு அட்மிட் ஆகியிருக்காங்க, ஆனா அவங்களுக்கு கேஸ்ரிக் தான் பிரச்சனைனு இருக்கு. உங்களுக்கு இந்த ரிப்போர்ட்டை கொடுத்த டாக்டரோட ரூம்  ரைட் சைட்ல இருக்கு. நீங்க அவர்கிட்ட கேட்டுக்கோங்க” என்றாள்
ஆத்திரத்தை அடக்கியபடி சரவணன் மருத்துவரின் அறைக்குள் நுழைந்து அலமேலுவின் மருத்துவ அறிக்கையை அவர் மேஜையின் மீது வீசினான். அவருக்கு சரவணன் லதாவின் கணவன் என்பது நன்கு தெரியுமாதலால், “என்னாச்சு சரவணன்” என்றபடி அவன் வீசியெறிந்த அறிக்கையை பார்த்தார். வரவேற்பாளினி கொடுத்த அறிக்கையும் அலமேலுவின் மருத்துவ அறிக்கையும் இருந்ததால் அவரால் விஷயத்தை கிரகிக்க முடிந்தது.
“மிஸ்டர் சரவணன், நீங்க கோபப்படறதா இருந்தா உங்க மனைவி மேலயும் அம்மா மேலயும் தான் கோபப்படணும். ஏன்னா லதா மேடம் சொல்லி தான் ரிப்போர்ட்டை மாத்தி கொடுத்தோம். அஞ்சு லட்ச ரூபாய் பில்லும் போட்டு கொடுத்தோம், ஆனா எனக்கு அம்பதாயிரம் நர்ஸ்க்கு இருபதாயிரம் ஹாஸ்பிடலுக்கு முப்பதாயிரம் தான் உங்க மனைவி லதா கொடுத்தாங்க. மீதி நாலு லட்சத்தை பத்தி எனக்கெதுவும் தெரியாது”
“ச்சீ நீங்கெல்லாம் உயிரை காப்பாத்தற டாக்டரா? இப்படியெல்லாமா போர்ஜரி பண்ணுவீங்க?” சரவணன் அருவெருப்புடன் கேட்க,
“நாங்க என்ன சார் பண்ண முடியும்? உங்க மனைவி லதா இந்த ஹாஸ்பிடல் ஓனரோட பொண்ணு, கிட்டத்தட்ட அவங்களும் ஓனர் மாதிரி தான். அவங்க சொல்றத கேக்காம இருக்க முடியுமா? இதுல எந்த பிரச்சனையும் வராதுனு சொன்னாங்க. அரசியல்வாதிங்க நெஞ்சுவலினு நாடகமாடற மாதிரி குடும்ப பிரச்சனைக்காகவும் நடிக்கறாங்கனு நானும் பெரிசா இதை கண்டுக்கல”
“என் வைஃப் லதா தான் ஹார்ட் ஆப்ரேஷன் நடந்தமாதிரி ரிப்போர்ட் தரச் சொன்னாங்களா?” மீண்டும் உறுதி செய்து கொள்ள கேட்டான்.
“ஆமா, சார். உங்கம்மாவும் லதா மேடமும் தான் என்கிட்ட ரெக்வஸ்ட் பண்ணி கேட்டுக்கிட்டாங்க. நான் தான் சொன்னேன்னு அவங்ககிட்ட சொல்லாதீங்க”
“நீங்க செஞ்சது லதாவோட அப்பாவுக்கும் தெரியுமா?”
“அவருக்கு இந்த விஷயமெல்லாம் தெரியாது சார், தயவு செஞ்சு சொல்லிடாதீங்க. என் மேல கம்ளெய்ண்ட் பண்ணி நான் பிராக்டீஸ் பண்ணவே முடியாதபடி செஞ்சிடுவாரு”
அவரை பேசி எந்த பயனும் இல்லை என்பதால் சரவணன் தான் வீசியெறிந்த மருத்துவ அறிக்கைகளை எடுத்துக் கொண்டு, “ரஞ்சி கிளம்பு வீட்டுக்கு போவோம்” என்றான்
“என்னண்ணா இது? அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்னு சொன்னதும் நமக்கு எவ்வளவு கஷ்டமாயிருந்துச்சு? அப்பா, நீ நானு எல்லாம் வீட்ல தூங்காம இருந்தோம். அம்மா நல்லபடியா குணமாகி வந்திடணும்னு எத்தனை கடவுளை வேண்டிக்கிட்டேன் தெரியுமா? ஆபரேஷன்னு சொன்ன அன்னைக்கு நானும் கூட இருக்கேன்னு சொன்னேன். அண்ணி என்னை காலேஜ்க்கு துரத்துறதுலயே குறியா இருந்தாங்க. அப்போ ஏன்னு புரியல, இப்போ தான் புரியுது.
ஆனா இந்த அம்மா ஏன் இப்படி இருக்காங்க? பெத்த பொண்ணு என்கிட்டயே நெஞ்சுவலினு நாடகமாடியிருக்காங்க. ஆனா லதா அண்ணிய மட்டும் நம்பியிருக்காங்க. மாமியாரும் மருமகளும் எப்போயிருந்து இந்தளவுக்கு குளோசா ஆனாங்கனு தான் தெரியல” ரஞ்சனி வழியெங்கும் புலம்பிக் கொண்டு வர, சரவணன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அவன் அமைதி ரஞ்சனிக்கு கிலியை கொடுத்தது. வீட்டை அடைந்ததும் சரவணன் விறுவிறுவென்று வீட்டிற்குள் நுழைவதை கண்டவள் என்ன பிரச்சனை நடக்குமோ என்று பயந்து அவசரமாக தந்தைக்கு போன் செய்தாள்.
“ரஞ்சி, உன்னை பிக்கப் பண்ண தான் காலேஜ்க்கு வந்துட்டு இருக்கேன்”
“அப்பா, நான் வீட்ல இருக்கேன். உடனே வீட்டுக்கு வாங்க” என்று அழைப்பை துண்டித்து விட்டு வீட்டிற்குள் சென்றாள்.
சரவணன் எதுவும் பேசாமல் நீள் இருக்கையில் அமர்ந்திருந்தான்.
“அண்ணா” ரஞ்சனி அழைக்க
“மேலே போய் லதாவ கூட்டிட்டு வா, வேற எதுவும் பேசக்கூடாது” அவன் முகத்திலிருந்த கடுமையை பார்த்தவள் பதில் பேசாமல் மாடிக்கு சென்றாள்.
பேச்சு சத்தம் கேட்டு அலமேலுவும் அறையிலிருந்து வெளியே வந்தார்.
“இன்னைக்கு என்னடா அதிசயம்? சீக்கிரம் வந்துட்டே?”
சரவணன் பதில் சொல்லாமல் அன்னையை வெறித்து பார்த்தான்.
அலமேலு குழப்பத்துடன் பார்க்க, ரஞ்சனியும் லதாவும் படியிறங்கி வந்தார்கள்.
“லதா, அம்மாவை அழைச்சிட்டு கிளம்பு” என்று எழுந்தான் சரவணன்
“எங்கே?” லதா குழப்பத்துடன் அலமேலுவை பார்த்தாள்
“ஆர்கே ஹாஸ்பிடலுக்கு”
“எதுக்குங்க? உடம்பு சரியில்லையா அத்தே?”
“அது அவங்களுக்கு எப்படி தெரியும் லதா? போய் செக்அப் பண்ணா தானே தெரியும்? ஹார்ட் சர்ஜரி பண்ணியிருக்கு, இப்போ கண்டிஷன் என்னனு பாக்க வேணாமா?”
“அது, அதுக்கு நீங்க எதுக்குங்க அலைஞ்சிட்டு இருக்கீங்க? நாளைக்கு நானே அத்தைய கூட்டிட்டு போய் செக்அப் பண்ணிட்டு வந்துடறேன்”
“ஏன் லதா? என் அம்மாவுக்கு செக்அப் பண்ண நான் கூட வரக்கூடாதா? ரஞ்சனியும் சீக்கிரமே வீட்டுக்கு வந்துட்டா. அவளும் கூட வந்தா அம்மாவோட ஹெல்த் கண்டிஷனை பாத்துப்பா இல்ல? கிளம்பு” என்றான்
லதா குழப்பத்துடன் அலமேலுவை பார்த்து கண்களால் என்னவென்று கேட்க, அவர் எதுவும் தெரியவில்லை என்று உதட்டை பிதுக்கினார்.
“திடீர்னு போய் நின்னா டாக்டர் இருப்பாங்களா சரவணன்? முதல்ல அப்பாயிண்ட்மென்ட் போட வேணாமா?”
“நான் ஆல்ரெடி அப்பாயிண்ட்மென்ட் போட்டுட்டு தான் வந்திருக்கேன். கிளம்பு. அம்மா பேசிட்டு இருக்கறது காதுல விழல? உனக்கு வேற தனியா சொல்லணுமா? கிளம்பு” அன்னையிடமும் உறுமினான்.
நடராஜன் வீட்டிற்குள் நுழைந்தார். 
“எங்கேடா கிளம்ப சொல்லிட்டு இருக்கே?” என்று மகனிடம் விசாரித்தார்.
“அம்மாவுக்கு ஹார்ட் சர்ஜரி பண்ணிட்டு வந்தோம். அப்புறம் எப்படியிருக்குனு அவங்களுக்கு செக்அப் பண்ண வேணாமா? ஆல்ரெடி லேட் ஆயிருச்சு, அதான் கிளம்ப சொல்லிட்டு இருக்கேன்”
“அடச்சே, உன் அம்மா மேல இருந்த கோவத்துல நானும் மறந்துட்டேன்டா. நானும் வரேன், எல்லாரும் கிளம்பலாம்”
அலமேலுவும் லதாவும் தடதடக்கும் இதயத்தோடு அசையாமல் நின்றிருந்தனர். 
 
“என்ன? ரெண்டு பேரும் சிலை மாதிரி நின்னுட்டு இருக்கீங்க? கிளம்புங்க” சரவணன் உறுமினான்
“சரவணா, எனக்கு மயக்கமா இருக்குடா. நாளைக்கு போகலாமா?” அலமேலு சோர்வாக இருப்பது போல காட்டிக் கொண்டார்
“மயக்கமா இருக்கா? அப்போ உடனடியா ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணு ரஞ்சி, என்னனு பாத்துடலாம்” சரவணன் நக்கலாக சொல்லவும் லதாவுக்கு ஏதோ புரிவது போல இருந்தது.
சரவணன் அமர்ந்திருந்த இடத்தில் இருந்த அலமேலுவின் மருத்துவ அறிக்கைகளை பார்த்துவிட்டாள். மெல்ல சென்று அதை எடுத்து பார்க்க, அதில் செண்பகம் என்கிற நோயாளியின் மருத்துவ அறிக்கையும் உடனிருக்க, அவள் கைகள் தானாக நடுங்கியது.
அலமேலுவுக்கு லதா ஏன் நடுங்குகிறாள் என்று புரியவில்லை. லதா சரவணன் எதிரே சென்று, “சரவணன்” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்.
“டேய் சரவணா? எதுக்குடா இப்போ லதாவ அடிக்கிறே? உனக்கென்ன பைத்தியமா?” என்று நடராஜன் வேகமாக வந்து அவன் கையை பிடித்திருந்தார்.
“எதுக்கு ரெண்டு பேரும் நாடகம் ஆடினீங்கனு மரியாதையா சொல்லிடு” என்று ஒற்றை விரலை நீட்டி எச்சரித்தான். சரவணனின் கண்கள் சிவந்து போயிருந்தது. இதுநாள் வரையிலும் கணவனின் ஆக்ரோஷ வடிவத்தை அவள் பார்த்ததேயில்லை என்பதால் உண்மையில் நடுங்கி போயிருந்தாள்.
“சரவணன், நான் வேணும்னு செய்யல”
“செய்யறதெல்லாம் செஞ்சிட்டு வேணும்னு செய்யல, வேணாம்னு செய்யலனு டயலாக்கா? என் அம்மா மேலே உனக்கென்னடி அக்கறை? எதுக்கு அவங்களோட சேர்ந்து நாடகம் போட்டே?” கர்ஜித்தான்
“என்னடா நடக்குது இங்கே?” நடராஜன் தலையை பிடித்துக் கொண்டார்
“உங்க பொண்டாட்டிய கேளுங்கப்பா, சொல்லுவாங்க” 
நடராஜன் அலமேலுவை பார்க்க, அவரின் முகம் வெளிறி போயிருந்தது. அதை பார்க்கும் போதே இருவரும் சேர்ந்து ஏதோ பெரிய தப்பு செய்திருக்கிறார்கள் என்று தோன்ற நடராஜன் அலமேலுவின் தோள்களை பற்றி உலுக்கினார். “என்னடி பண்ணி தொலைச்சே?” 
அலமேலு பதில் சொல்லாமல் அழ தொடங்க, ரஞ்சனி ஆர்கே மருத்துவமனையில் நடந்தவைகள் அத்தனையையும் கூறினாள்.
நடராஜன் இப்போது அலமேலுவின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார்.
“நெஞ்சுவலினு நாடகமாடினியா? உனக்கு ஹார்ட் அட்டாக்னு கேள்வி பட்டதும் புள்ளைங்க மூணும் பதறி போச்சுடி. தோளுக்கு மேல வளர்ந்த பசங்க கண்கலங்கி நின்னானுங்க. ரஞ்சி அழுதுட்டே இருந்தா, அவளை சமாதானம் செய்யறதுக்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? பசங்களுக்கு அப்புறம் நீயில்லாம போயிட்டா நான் தனியா என்ன பண்ணுவேன்னு நான் தவிச்ச தவிப்பு? 
பசங்க என்ன பண்றதுனு தெரியாம கதிகலங்கி நிக்கிறானுங்க. யாருக்கு யார் ஆறுதல் சொல்றதுனு தெரியல. எப்படியாச்சும் காப்பாத்திடலாம்னு நாங்க நினைச்சா, ஆபரேஷன் பண்ணிக்க மாட்டேன்னு நீ பண்ண பிரச்சனையில, வசி வேண்டாவை விரும்பறான்னு தெரிஞ்சும் அவனை திட்டி, அம்மாவ விட உனக்கு உன் காதல் தான் பெரிசானு கேட்காத கேள்வியெல்லாம் கேட்டு நீ சொன்ன பொண்ணை அவன கட்டிக்க சொல்லி கட்டாயப்படுத்தி சம்மதிக்க வச்சேன். 
ஒரு நாள் இல்ல, முழுசா பத்து நாளைக்கு மேல ஹாஸ்பிடல்ல நீ நடிச்சிருக்கே. யார் கொடுத்த தைரியத்துல நீ இந்த மாதிரி பண்ணே?” என்று அவர் மீண்டும் கை ஓங்க ரஞ்சனி தந்தையை தடுத்து பிடித்தாள்.
“யார் கொடுத்த தைரியம்? எல்லாம் மூத்த மருமக லதாவோட கைங்கர்யம். நேத்து வரைக்கும் மாமியாருக்கும் மருமகளுக்கும் ஆகாம இருந்துச்சு. இன்னொருத்தி வரப்போறானு தெரிஞ்சதும் ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்துக்கிட்டு நாடகமாடி நம்ம நாலுபேரையும் முட்டாளாக்கி இருக்காங்க” என்றான் சரவணன் வெறுப்புடன்
“சரவணன்” லதா அவன் கரத்தை பிடிக்க வர,
“தொடாதடி என்னை” என்று வெடுக்கென்று கையை பிடிங்கி கொண்டவன், “எதுக்கு இந்த மாதிரி கேவலமான திட்டத்தை போட்டேனு சொல்ல போறீயா? இல்லையா?” கணவனின் உக்கிரத்தில் ஆடி போனாள்.
“என்னை மன்னிச்சிடுங்க? என்கிட்ட வேலைக்காரியா இருந்தவ எனக்கு சமமா இந்த வீட்டு மருமகளா இருக்கறதானு எனக்குள்ள ஈகோ வந்துடுச்சு. அதனால தான் இப்படி பண்ணிட்டேன்” என்று அழுதாள்
“வேலைக்காரி மருமகளா இருக்கற வீட்ல சமமா உன்னால இருக்க முடியாதுன்னா நீ தான் கிளம்பி போயிருக்கணுமே தவிர, வேண்டாவ மருமகளா வரவிடாம தடுக்கறதுக்கு உனக்கு எந்த உரிமையும் இல்ல” விரல்களை சொடுக்கிட்டு, “கிளம்பு” என்று வெளிவாசலை காட்டினான்.
“சரவணா?” நடராஜன், லதா, அலமேலு மூவருமே அதிர்ந்தனர்.
“ஆரம்பத்துல இருந்தே நீ எம்எல்ஏவோட பொண்ணு, பெரிய இடம், நாங்க அப்பர்மிடில் கிளாஸ் நமக்குள்ள செட் ஆகாதுனு நான் சொல்லிட்டே தான் இருந்தேன். ஆனா நீ தான் எனக்கு பணம் பதவி அந்தஸ்து எல்லாம் பெரிய விஷயம் இல்ல, உங்களோட காதல் மட்டும் போதும்னு சொன்னே. அந்த வார்த்தைக்காக தான் உன்னோட காதலை ஏத்துக்கிட்டேன். ஆனா நீ இந்த வீட்டுக்கு வந்த பின்னாடியும் புரபசர் சரவணனோட பொண்டாட்டினு எப்பவும் சொல்லிக்கிட்டதே இல்ல.
எப்போ பாரு, நான் எம்எல்ஏவோட பொண்ணு, என்வீட்ல நான் ராணி மாதிரி இருந்தேன்னு என்னென்னவோ பேசிட்டு இருந்தே. நானும் பொண்ணுங்களுக்கு பொறந்த வீட்டு பெருமை பேசாம இருக்க முடியாதுனு அதையெல்லாம் கண்டுக்கல.
ஆனா இப்போ தான்டி தெரியுது, நீ என்வீட்ல கூட எம்எல்ஏவோட பொண்ணா தான் இத்தனை நாளா வாழ்ந்திருக்கே. என்னோட பொண்டாட்டியா நீ வாழவே இல்ல. அப்படி வாழ்ந்திருந்தா நீ ஸ்டேட்டஸ் பாத்திருக்க மாட்டே. நமக்குள்ள செட் ஆகாது, நீ கிளம்பு”
“சரவணா எடுத்தோம் கவுத்தோம்னு பேசாதடா. பொறுமையா இரு” நடராஜன் அதட்டினார்.
“உங்க பொண்டாட்டி என்ன பண்ணாலும் நீங்க வேணும்னா பொறுத்துட்டு போங்க. என்னால முடியாது. இவ்வளவு பண்றவ, நாளைக்கு இன்னும் என்னென்ன பண்ணுவா? என்புள்ளைய எதாச்சும் பண்ணிட்டு வேண்டா மேல பழி போட்டு துரத்தலாம்னு கூட திட்டம் போடுவா. இவ என்ன திட்டம் போடுவானு என்னால பாத்துட்டு இருக்க முடியாது” என்று தாட்சண்யமே இல்லாமல் பேசியவன், லதாவை திரும்பி கூட பார்க்காமல் கைநீட்டி, “டைவர்ஸ் நோட்டீஸ் வரும், கையெழுத்து போட்டு அனுப்பிட்டு எம்எல்ஏ பொண்ணா ராணி மாதிரி இரு, இப்போ கிளம்பு” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று மாடியேறி அறைக்குள் சென்று கதவை அடித்து சாத்திக் கொண்டான்.
(தொடரும்)

One thought on “மெளனம் 26

  • Buvana Buvana

    Appidipoduda saravana

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!