“வீட்டுக்கு வந்த புள்ளைய வெளியே சாப்பிடச் சொல்றது எனக்குத்தான் ரொம்ப கஷ்டமா இருக்கு..”
“அது பரவாயில்லை.. நான் என்ன சின்ன பிள்ளையா? ஒரு வேளை சாப்பாடுதானே, நான் மேனேஜ் பண்ணிப்பேன்.”
“நீங்க என்னதான் சொன்னாலும் என் மனசு கேட்க மாட்டேங்குதுப்பா.. வீட்டுல இவளும் ஒரு பொண்ணுன்னு இருக்காளே… சமையலும் செய்யத் தெரியாது, ஒன்னும் தெரியாது..!”
அவ்வளவுதான்! தன் பெற்றோர் ஆதியை இப்படித் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும், தன்னைத் தொடர்ந்து குத்திக் காட்டுவதும் மதியின் பொறுமையைச் சோதித்தது. அவளது கோபம் உச்சக்கட்ட எல்லையைத் தொட்டது!
“ஆமா..! எனக்குச் சமைக்கத் தெரியாது, வீட்டு வேலை செய்யத் தெரியாது… எதுவுமே ஒழுங்கா பண்ணத் தெரியாது, நான் ஒத்துக்கிறேன்! ஆனா அதே சமயம், யார் வீட்டுக்கும் விருந்தாளியாப் போய் நந்தி மாதிரி உட்கார்ந்துக்கிட்டு… அந்த வீட்டு ஆளுங்களை எங்கேயும் போக விடாம இப்படித் தர்மசங்கடப்படுத்தக் கூடாதுன்னு மட்டும் எனக்கு நல்லாத் தெரியும்..!” அவள் ஆத்திரத்தில், தான் என்ன பேசுகிறோம் என்ற உணர்வே இல்லாமல் வார்த்தைகளைக் கொட்டித் தீர்த்தாள்!
“மதி..!!!” அப்பாவின் அந்தப் பயங்கரமான கர்ஜனை அவளைச் சுயநினைவுக்குக் கொண்டு வந்தது. தான் எவ்வளவு பெரிய தப்புச் செய்துவிட்டோம் என்பதை உணர்ந்து அவள் விதிர் விதிர்த்துப் போனாள்.
“என்ன பேச்சுடி இது..? ஆதி தம்பிகிட்ட உடனே ஸாரி கேளு! நாங்க உனக்கு இப்படி பேசத்தான் கத்துக் கொடுத்திருக்கோமா?” என்று அம்மா அதட்ட,
“மதி..!” அப்பா தன் கோபத்தை அடக்கிக் கொண்டு, பற்களைக் கடித்தபடி உறுமினார்.
தண்மதி அவரது பேச்சை மதிக்காமல், அந்த இடத்தை விட்டு விறுவிறுவென்று நகர்ந்து, படிக்கட்டுகளில் ஏறி மொட்டை மாடிக்குச் சென்று மறைந்தாள். ரேணுகாவும் அவளுக்குப் பின்னால் போக முயன்றார், ஆனால் ஆதி அவரைத் தடுத்தான்.
“இருங்க ஆன்ட்டி.. நான் மதி கிட்ட பேசுறேன். அவ என்மேல இருக்கிற கோபத்துல பேசிட்டா, நீங்க வருத்தப்படாதீங்க,” என்று அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, மதியைத் தொடர்ந்து மாடிக்குச் சென்றான்.
அவள் தான் பேசிய வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்தாள்…
நான் ஏன் இவ்வளவு முரட்டுத்தனமா நடந்துக்கிறேன்? திரும்பப் பெற முடியாத, மாற்ற முடியாத வார்த்தைகளை ஏன் இப்படி யோசிக்காம கொட்டுறேன்..? எனக்கு என்ன ஆச்சு? ஒரு லேடி ஹிட்லர் மாதிரி நடந்துக்றேன், எனக்குள்ள எந்தப் பேய் புகுந்தது? இது என்னோட உண்மையான குணம் கிடையாது… எப்போதும் கோபமும் குத்தலுமாக அடுத்தவரை எடுத்தெறிந்து பேசும் இந்தப்பெண் யாரென்று அவளுக்கே தெரியவில்லை ஆனா என்னால என்னைக் கட்டுப்படுத்தவே முடியலையே! இப்படியே போனா நான் எங்க போய் நிக்கபோறேன்..?’
இப்படிப் பல கேள்விகள் அவளது மனதிற்குள் சுழன்றடித்து,
யார் மேல் இருக்கும் கோபத்தில் நான் இப்படி நடந்து கொள்கிறேன் யாரை தண்டிப்பதற்கு இப்படி நெருப்பாய் தகிக்கும் வார்த்தைகளைக் கொட்டுகிறேன்..
ஏன் என்னால் ஆதித்யாவை மன்னிக்க முடியவில்லை,
ஆதி செய்த தவறை உணர்ந்து திரும்பி வந்து மன்னிப்பு கேட்டு தன் காதலையும் சொல்லி விட்டான்.இதற்குதானே அவள் ஐந்து வருடங்களாக தவம் இருந்தாள். அப்புறம் இன்னும் எதற்காக இந்த வீம்பை கட்டிக்கொண்டு அழவேண்டும்? ஏன் இப்படி அவனையும் வறுத்தி தன்னையும் வதைத்துக்கொள்றோம், இதன் முடிவுதான் என்ன என்று ஒன்றும் புரியாமல் தவித்தாள்.
மனம் கவலையுறும் போதெல்லாம் செய்வது போல் தன் இதயக்கூட்டின் மேல் கைவைத்து அழுத்தினாள், அங்கே கைகளில் தட்டுபட்ட வட்ட வடிவ பெண்டண்டை கையில் இறுகப்பற்றிக்கொண்டாள்.
“ஆதி சார் நீங்க எங்க போனீங்க? நீங்க மட்டும் சொன்ன மாதிரி திரும்ப வந்திருந்தா எனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா? எங்க இருக்கீங்க? எனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் உங்ககிட்டதானே வந்து நிப்பேன், இப்ப இந்த பிரச்சனையில இருந்து வெளிய வர, எனக்கு ஒரு வழி சொல்லுங்க.. ப்ளீஸ் வாங்க சார், ஐ மிஸ் யூ..” என்று மனதில் கதறியபடி நின்றிருந்தாள்.
பின்னால் கேட்ட அழுத்தமான காலடிச் சத்தம் அவளது சிந்தனையைக் கலைத்தது. அவள் மூச்சுவிட மறந்து அப்படியே சிலையாக நின்றாள். அவன் அவளருகில் வந்து அவளைப்போலவே தொடுவானத்தை வெறித்தபடி நின்றான்.
அவள் ஆதிக்காக வருந்தவில்லை, மாறாகத் தான் நாவடக்கம் இல்லாமல் பேசி தன் பெற்றோரின் கௌரவத்தைக் கெடுத்துவிட்டோமே என்று தான் தவித்துக் கொண்டிருந்தாள்.
இருவரில் யாருமே பேச்சைத் தொடங்க முன்வரவில்லை; அடுத்தவர் முதலில் பேசட்டும் என்று காத்திருப்பது போல அங்கொரு மௌனம் நிலவியது.
அதே நேரத்தில், கீழே இருந்து அம்மாவின் குரல் அவர்களுக்குக் கேட்டது.
“மாமா, ஏன் இப்படி என்னவோ மாதிரி இருக்கீங்க..?”
“இல்லை ரேணு.. மனசே சரி இல்லை…”
“விடுங்க மாமா.. அவ சின்னப் பொண்ணு, தெரியாம பேசிட்டா. உங்களுக்கே தெரியும் அவ இந்த மாதிரி பேசுற பொண்ணு கிடையாதுன்னு. ஏதோ கோபத்துல பேசிட்டா.. இப்போ அவளே அதை நினைச்சு ஃபீல் பண்ணிட்டுதான் இருப்பா…”
“அதில்லை ரேணு.. மதி என்னதான் குழந்தைத்தனமா இருந்தாலும், பொறுப்பில்லாம நடந்துகிட்டாலும், அசட்டுத்தனமா பிடிவாதம் பிடிச்சாலும்… என்னைக்குமே அதுக்காக நான் வருத்தப்பட்டதே கிடையாது. ஏன்னா என் பொண்ணு எப்பவுமே யாரையுமே ஹர்ட் பண்ண மாட்டா, அடுத்தவங்கள அன்பா நடத்துவா, அவ இருக்கிற இடம் எப்பவும் கலகலப்பா சந்தோஷமா இருக்கும். என்ன குறை இருந்தாலும் என் பொண்ணு மாதிரி ஒரு தங்கமான பொண்ணு கிடையாதுன்னு நான் கர்வமா இருப்பேன் தெரியுமா? ஆனா லைஃப்ல முதல் தடவையா அவளைச் சரியா வளர்க்கலையோன்னு இப்போ நான் ஃபீல் பண்றேன் ரேணு.. என்னதான் கோபம்னாலும் இப்படியா எடுத்தெறிஞ்சி பேசுறது? இப்படிப் பண்பு இல்லாம பொண்ணை வளர்த்துட்டோமேன்னு இன்னைக்கு நான் வருத்தப்பட்டு நிற்குறேன்மா..!”
அப்பாவின் வார்த்தைகளில் இருந்த அளவற்ற வேதனை மதியின் இதயத்தைத் துண்டு துண்டாக உடைத்தது. தன் நெஞ்சுக்குள் இருந்து முட்டி மோதி வந்த அழுகையை அவள் கஷ்டப்பட்டு தொண்டைக்குள்ளேயே அமுக்கினாள். ஆனால், அவளது கண்களிலிருந்து தறிகெட்டு வழிந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த அவளால் முடியவில்லை. அவள் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு, அந்த மொட்டை மாடிச் சுவரை பலமாகப் பற்றிக்கொண்டாள். அவளது மூச்சு திணறியது, உடம்பு அப்படியே கம்பி போல விறைத்துப் போனது.
“இதுக்குத்தான் நீ ஆசைப்பட்டியா?” ஆதியின் கரகரப்பான குரல் அவளது மரத்துப் போன காதுகளுக்குள் நுழைந்தது.
“இங்கிருந்து போயிடுங்க… என்னை தனியா விட்டுட்டுப் போங்க…” வெடித்துவரும் அழுகையைக் கட்டுப்படுத்தக் கடுமையாகப் போராடியபடி, சிரமப்பட்டு வார்த்தைகளை முணுமுணுத்தாள். தான் இப்படி உடைந்து போய் நிற்பதை அவன் பார்ப்பதை அவள் சற்றும் விரும்பவில்லை.
“இல்லை, என்னால போக முடியாது, நான் போகவும் மாட்டேன். என்னைப்பாருடி..!” அவன் அதட்டலாகக் கட்டளையிட்டான்.
அவளிடமிருந்து எந்தப் பதிலும் வராததால், அவளைத் தன் பக்கமாகப் பலவந்தமாக இழுத்துத் தனக்கு நேராகத் திருப்பினான்.
“நாம தனியா இருக்கும்போது நீ என்னை எவ்வளவு வேணாலும் கத்தலாம், அசிங்கப்படுத்தலாம், கேவலமா நடத்தலாம்… இல்ல உனக்கு என்ன தோணுதோ அதை பண்ணிக்கோ. ஆனா ப்ளீஸ்… நான் உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன், உன்னோட பெத்தவங்கள மட்டும் காயப்படுத்தாத. அவங்க எந்தத் தப்பும் பண்ணல..!”
“நீங்க எனக்குப் புத்திமதி சொல்லத் தேவையில்லை.. அவங்க என்னோட பேரண்ட்ஸ்..” தன் சொந்தம் என்ற உரிமையோடு சொன்னாள்.
“எல்லாம் உங்களாலதான் நீங்க இங்க இருக்கறதுதான் பிரச்சனையே.. என் அப்பா அம்மாவே என்னை வெறுத்துட்டாங்க.. எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான். நான் இப்படி கொடூரமான ராட்சஸியா மாறினதும் உங்களாலதான், என்று அடக்கமுடியாமல் பொங்கி அழுதபடி அவன் மார்பில் தன் கைகளை முஷ்டியாக்கி சராமாரியாகத் தாக்கியவளை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு அவளது வசவுகளையும் குற்றச்சாட்டுகளையும் பதக்கம் போல் நெஞ்சில் தாங்கிக்கொண்டு அவள் முதுகை வருடி ஆசுவாசப்படுத்தியபடி அளவற்ற குற்ற உணர்ச்சியுடன் நின்றிருந்தான் ஆதித்யா.
அவள் அழுகை விசும்பலாக மாறிய பிறகும் அவனைவிட்டு விலகாமல் அவன் அணைப்பிலேயே நின்றவள், ஒரு பெருமூச்சுடன் விலக எத்தனிக்க, அவன்விடாமல் தன் பிடியை இறுக்கினான்.
“விடுங்க..” என்றான் பலவீனமாக,
“ம்கூம்..”
“ச்சு.. விடுங்க..” என்று சிணுங்கலாக ஒலித்தது அவள் குரல்.
“சாரி பேபி..” அவன் சாரி என்றதும் அவளுக்கு மீண்டும் தன் கசப்பான நினைவுகள் முட்டி மோதிக்கொண்டு வர, எங்கோ போயிருந்த வீம்பு திரும்ப வந்து ஒட்டிக்கொண்டது..
அவனை பலம் கொண்ட மட்டும் பிடித்து தள்ளியதில், அவள் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலி அவன் சட்டை பட்டனில் மாட்டி இழுக்கப்பட்டு அறுந்து அவன் சட்டையிலே தொங்கியது,
அதை கீழே விழும்முன் சட்டென்று கையில் பிடித்தவன் தன் முகத்துக்கு நேரே அந்த மெல்லிய சங்கிலியை எடுத்துப்பார்க்க,
விண்டேஜ் லுக்கில் இருந்த அந்தச் சிறிய தங்கப் பெண்டன்ட், ஒரு ஊசல் (Pendulum) போல அவன் கண்முன்னே ஆடியது.அதன் தடிமனான கிறிஸ்டல் குடுவைக்குள் பல தசாப்தங்கள் பழமையான அடர் வெண்கல நிறத்தில் (Antique Brass) ஒரு குட்டி திசைகாட்டி ஒளிந்திருந்தது. காலங்கள் கடந்தும் அதன் பளபளப்பு குறையாத அந்தப் பழைய ஆங்கில எழுத்துக்களுக்கு (N, S, E, W) நடுவே, அதன் மெல்லிய காந்தமுள் லேசாக நடுங்கி, துல்லியமாக வடதுருவத்தைக் காட்டி நின்றது.
அந்த திசையில் பார்த்தவனின் பார்வை அங்கே நின்றிருந்த தண்மதியின் முகத்தில் நிலைத்தது.