Skip to content
Post Views: 254
அத்தியாயம் 22
பிரபாகரன், அஞ்சனா, கிருபாகரன், நித்தியா நால்வரும் அந்த ஊரின் மைதானத்திற்கு வந்து சேர, எட்டு ஊர் மக்கள் கூட்டமும் அங்கு தான் இருந்தது.
Advertisement
காய் கறி,மளிகை சாமான் இருந்து காப்பு சீப்பு கடை முதல் உடைகள் பாத்திரம் என்று நூற்றுக்கு மேற்பட்ட கடைகள். மாதத்தில் ஒரு முறை சந்தை கூடும், இன்றும் ஜே ஜேஎன அல்லோகல்லோபட்டது அந்த இடம்.
நால்வரும் இறங்கிய மறு நொடி “கிருபா நித்திய அழைச்சிட்டு போய் சுத்தி பாரு…” என்று தம்பியை தனியாக தள்ளி விட்டவன் அஞ்சனாவின் கையை பிடித்துக் கொண்டு தோரணையாக நடக்க, அஞ்சனாவும் எந்த வித சங்கடமும் இன்றி தலை நிமிர்ந்தே நடந்தாள்.
Advertisement
Advertisement
கண்டிப்பாக பிரபாகரன் அகிலன் பொண்டாட்டியுடன் கடைவீதி சுற்றினான் என்ற செய்தி எட்டு ஊருக்கும் பரவும் என்பது தெரியும் தெரிந்தே தான் அங்கு வந்திருந்தான்.
முருகானந்ததின் மகனா இது என்று அனைவரும் ஆச்சரியமாக தான் பார்த்தனர். இது தெரியாமல் முருகானந்தமோ காதும் காதும் வைத்தது போல் அஞ்சனாவை போட்டு தாள்ளும் திட்டத்தில் இருந்தார்.
Advertisement
இந்த பக்கம் கிருபாகரனோ நான் விட்டாலும் சனி என்னை விடாது என்பது போல் இப்போதும் மனைவியை முன் செல்ல விட்டு ஒரு அடி தள்ளி பின் சென்றான்.
திருமணமான நாள் முதல் இது பழகி விட்டதே, பழக்க தோஷத்தில் மனைவியை தள்ளி நின்று ரசிக்கும் முடிவில் இருந்தான் போலும். அது தெரியாத நித்தியாவின் உள்ளுக்குள் இருந்த எரிமலை வெடித்துக் கிளம்ப தயாராக இருந்தது.
“அவ்ளவு சொல்லியும் பொண்டாட்டி கைய புடிச்சிட்டு வருவோம்னு இல்லாம பாடிகாட் வேலை பாக்கிறானே கிறுக்கு பய…” என்று பொறுமிக் கொண்டே நித்தியா ஒவ்வொரு கடையாக பார்த்துக் கொண்டே சொல்ல,
கிருபாகரனோ எப்போதும் போல் தன் மனைவியை ரகம் ரகமாக, அங்கிள் பார்த்து தன் ஃபோனில் போட்டோ எடுத்து கொண்டிருந்தான்.
மனைவி என்ற உரிமையில் மரபுச் சேலை விலகும் போது, இடுப்புச் சேலை நழுவும்போது என்று அவன் எடுத்த போட்டோக்கள் அத்தனையும் கிளுகிளுப்பாகவே இருந்தது.
அவனை அந்த ஊருக்கு சென்னையிலிருந்து வந்திருந்த நான்கு பெண்கள் நோட்டமிட்டு கொண்டிருந்ததை கவனிக்கவில்லை கிருபாகரன்.
அதில் ஒரு பெண்ணோ “ஏய் அங்க பாருங்கடி அந்த நீல கலர் சட்டைய…” என்று சொல்லி கிருபாகரனை காட்ட
மற்றும் ஒரு பெண்ணும் அவனைப் பார்த்துவிட்டு “ஹேய் சூப்பரா இருக்கான்டி…”
“கிராமத்து கட்டழகன் போல சுண்டி இழுக்கிறானே…”
“பக்கா ஹீரோ மெட்டீரியல் டி…” என்று மூவருமே ஆளுக்கு ஒரு கமெண்ட் சொல்லி கிருபாகரனை சைட் அடிக்க
“போதும் போதும் ரொம்ப அலையாதீங்கடி.. நம்ம அவன சைட் அடிச்சா அவன பாரு யாரோ ஒரு கல்யாணமான பொண்ண தப்பு தப்பா ஃபோட்டோ எடுக்கிறான் போல…” என்று ஒருத்தி சொல்ல
“என்னடி சொல்ற!…” என்று சொல்லி அவர்கள் கவனிக்க, அவன் யாரையும் கவனிக்காமல் ரொம்ப மும்முறமாக மனைவியை ஃபோன் வழியாக ரசித்துக்கொண்டிருந்தான்.
“ஆமாடி கன்னிப் பொண்ணுங்களுக்கு என்ன குறைச்சல்ன்னு இவன் கல்யாணமான பொண்ண சைட் அடிக்கிறான்.. வாடி போய் நியாயம் கேட்போம்…” என்றவாறு அந்த பெண்கள் கிருபாகரனை நெருங்கி
“ஹாய் ஹேண்ஷம்!…” என்று அழைக்க
திரும்பி பாத்தவன் “என்னங்க?…” என்றான்.
“இது உங்களுக்கே நல்லா இருக்கா.. ஒரு பொண்ணுக்கு தெரியாம அவள ஃபோட்டோ எடுக்கிறது தப்பு இல்ல.. அதுவும் கல்யாணமான பொண்ண…” என்று கேட்க
ஒரு நொடி அவன் செயலை கண்டு கொண்டனர் என்று நினைத்தாலும், தவறாக புரிந்து கொண்டனரே என்று திணுக்குற்றவன் “ஐயோ நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. அவ என் பொண்டாட்டி தான்…” என்று சொல்ல
அந்த பெண்கள் கிருபாகரனை நம்புவதாக இல்லை. அதிலும் அந்தப் பெண்களில் ஒருத்தி நேராக சென்று நித்தியாவை அழைத்து வர,
எதற்கு தன்னுடன் வரச் சொல்லி கூப்பிட்டார்கள் என்று புரியாமல் வந்த நித்தியா கிருபாகரனை சுற்றி அந்த பெண்கள் இருப்பதை பார்த்துவிட்டு “என்னாச்சு?…” என்று தன்னை அழைத்து வந்த பெண்ணிடம் கேட்க
“சிஸ்டர்.. இவர் உங்கள தப்பு தப்பா ஃபோட்டோ எடுத்துட்டு இருந்தாரு.. கேட்டா வைஃப்னு சொல்றாரு.. உண்மையா?…” என்று கேட்க
ஒரு நொடி கிருபாகரனை கீழிருந்து மேல் பார்த்தவள் “இல்லையே!.. இவர் யாருன்னே எனக்கு தெரியாது…” என்று சொல்லிவிட கிருபாகரனுக்கு தான் தூக்கி வாரி போட்டது.
“ஏய் என்னடி சொல்ற.. விளையாடாத நித்தி…” என்க
“யார் விளையாடினா.. நீங்க யாருங்க முதலாவது.. நான் தனியா தான் வந்தேன்…” என்றவள் அருகில் இருந்த கடைக்காரரிடம் “அண்ணா! நான் தனியா தானே வந்தேன்.. என் புருஷனு யாரையும் நீங்க பாத்தீங்க…?” என்று கேட்க
அந்த கடைக்காரர் வெளியூர் போல, அவள் தனியாக கடைசி சுற்றியதை பார்த்துவிட்டு “இல்லைங்களே.. நீங்க தனியா தான் வந்தீங்க…” என்று சொல்ல
திரும்பி கிருபாகரனை பாத்தவள் கன்ன கதுப்பினுள் நாக்கை சுழற்றி நக்கலாக பார்த்து வைக்க,
“ஏய் பழிவாங்குற நேரம் இது இல்லடி.. உண்மைய சொல்லிரு.. விட்டா பஞ்சாயத்து கூடிடும்…” என்று அவன் கெஞ்ச
“நான் என்னங்க உண்மை சொல்லணும்.. நீங்க சொன்னது தானே நான் ஃபாலோ பண்றேன்…” என்றவள் அவனை நெருங்கி அந்த பெண்களுக்கு தெளிவாக கேட்காத குரலில் “அறைக்குள்ள மட்டும் தானே நீங்களும் நானும் புருஷன் பொண்டாட்டி.. அத தான் நான் சொன்னேன்…” என்று சொல்லி கண்ணடிக்க
“ஏங்க பாக்க டீசண்டா இருக்கீங்க.. ஆனா பண்ற வேலை கேவலமா இருக்கு…” என்று அந்த பெண்களில் ஒருத்தி கேட்க
இதற்கு மேல் விட்டால் தன் கணவன் மானம் காற்றில் பறந்து விடும் என்று “சாரிங்க!.. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.. இவர் தான் என் புருஷன்…” என்று சொல்ல
‘அப்பாடா’ விட்டால் போதும் என்பது போல் நித்தியா அருகில் வந்து அவள் கையை பிடித்துக் கொண்டான் கிருபாகரன்.
“ஓ.. ஓகே சிஸ்டர்…” என்று ஒருத்தி சொல்ல
மற்றும் ஒருத்தியோ “பொண்டாட்டிய தூரமா இருந்து சைட் அடிக்கிறது கூட நல்ல ரசனை தான்…” என்று சொல்ல “ஹிஹி” என்று அசடு வழிய நின்று இருந்தான் கிருபாகரன்.
அந்த பெண்களும் சரி என தங்களது வேலையை பார்க்க சென்றுவிட, தன் கையைப் பிடித்து இருந்த கிருபாகரன் கையை விலக்கி விட்டு, பொருட்கள் வாங்குவதற்கு கையில் வைத்திருந்த கூடையில் இருந்து குடை ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டிய நித்தியா “வெயில் ஏறிடுச்சு குடைய விரிச்சு புடிங்க…” என்று சொல்ல
“என்ன?” என்று கிருபாகரன் திகைத்துப் பார்க்க
“என்ன?.. நான் உங்க பொண்டாட்டி தானே.. பொண்டாட்டிக்கு குட பிடிக்கலாம் தப்பு இல்ல…” என்று சொல்ல
‘சரிதான் தானா வந்து தலைய கொடுத்துட்டேன்…’ என்று தனக்குள்ளே புலம்பியவனிடம்
“என்ன குடைய புடிக்கிறீங்களா இல்ல இப்ப போன பொண்ணுங்கள கூப்பிட்டு போனா போகுதுன்னு இவர காப்பாத்த பொய் சொன்னேன்.. இவர் யாருன்னே தெரியாது பஞ்சாயத்த கூட்டுங்கன்னு சொல்லட்டுமா?.. உண்மை என்னன்னு தெரியுமா நான் கிருபாகரன் பொண்டாட்டின்றது பாதிபேருக்கு மேல தெரியாது.. அந்த லட்சணத்துல இருக்கு உங்க நிலைம…” என்று சொல்ல
“அடியே மானத்த வாங்கிடாத…” என்றவன் முகத்தை சுருக்கிக் கொண்டு குடையை விரித்து அவளுக்கு பிடிக்க, பீறிட்டு கிளம்பிய சிரிப்பை கட்டுப்படுத்தி மெலிதாக சிரித்துக் கொண்டவள் முன் நடக்க
“ஏய் எங்கடி போற?.. அதான் பொருள் எல்லாம் வாங்கியாச்சே வீட்ட போகலாம்…” என்று கூப்பிட
“ஏன் பொண்டாட்டிக்கு குட புடிக்க அவ்ளோ கஷ்டமா இருக்கா?…” என்று கேட்க
“அடியே எல்லார் முன்னாடியும் நான் உன் கையவே புடிச்சது இல்ல.. நீ என்னன்னா குட புடிக்க விட்டு இருக்க.. ஒரு மாதிரி இருக்கு நித்தி…”
“அப்படியா!.. சரி குடைய கொடுங்க…” என்று அவன் கையில் இருந்த குடையை வாங்கியவள்
தன் கையில் இருந்த பொருட்கள் அடங்கிய கூடையை அவன் கையில் திணித்து “இதை தூக்கிட்டு வாங்க.. உங்களுக்கும் சேத்து நானே குட புடிக்கிறேன்…” என்று சொல்ல
அந்த கூடையில் இருந்த பொருட்களை பார்த்துவிட்டு “அடியே எல்லாம் பொண்ணுங்க பாவிக்கிற பொருளா இருக்கு.. இத எப்படி நான் தூக்கிட்டு வர…”
“சார் உங்களுக்கு கல்யாணமாகி நாலு வருஷம் ஆச்சு.. சாதாரணமா நம்ம குடும்பம் நடத்தி இருந்தோம்னா நான் நெத்தியில வைக்கிற பொட்டுல இருந்து மாசா மாசம் வீட்டுக்கு தூரமான பாவிக்கிற நாப்கின் வரைக்கும் நீங்க தான் வாங்கி தந்து இருக்கணும்.. போனா போகுது நம்ம புருஷனாசேன்னு நானே எல்லாம் பாத்துக்கிட்டா இன்னுமே இளந்தாரி பையன் என்ற நினைப்புல சுத்துறீங்களோ.. கிளிப் வளையல் எல்லாம் வாங்கணும் வாங்க…” என்று சொல்ல
“நித்தி நீ வளையல் கடைக்கு போ.. இது எல்லாத்தையும் ஜீப்ல வச்சிட்டு வந்துடுறேன்…” என்றவன் அவள் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் ஒரே ஓட்டமாக ஓட
“ஏங்க!.. ஏங்க நில்லுங்க.. அதெல்லாம் வேணாம்…” என்று நித்தியா கத்தியது அவன் காதில் விழுந்ததாக தெரியவில்லை.
அடித்து பிடித்து ஓடுபவனை பார்த்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்துக்கொண்டேன் நின்றாள் நித்தியா.
சற்று தள்ளி பிரபாகரனும் அஞ்சனாவும் கைகோர்த்துக்கொண்டு வளையல் கடை நோக்கி செல்ல, அப்போது மண்பாண்டங்கள் மற்றும் விளக்குகள் விற்கும் கடையில் பரணி நின்று இருக்க,
அண்ணனை பார்த்த பின் தான் அஞ்சனாவிற்கு அவனிடம் எதுவும் விளக்கம் சொல்லாதது நினைவு வர “மாமா, அண்ணா…” என்று பரணியை காட்ட
அப்போதுதான் பிரபாகரனுக்குமே பரணி துர்க்கா விடயத்தை பற்றி அஞ்சனாவிடம் பேசாதது நினைவு வர, இன்று இரவு சரி இதைப்பற்றி பேசி சரியான முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்தவன்
“என்ன அவன்கிட்ட போய் பேசணுமா?…” என்று கேட்க
“ம்ம் ஆமா.. இதுவரைக்கும் அண்ணா கிட்ட எதுவுமே சொல்லல.. நீங்களும் வாங்கலேன்…” என்று கூப்பிட
“நான் வரல.. நீ போய் பேசிட்டு வா.. நான் உனக்கு வளையல் செலக்ட் பண்ணி வைக்கிறேன்…” என்ற பிரபாகரன் வளையல் கடையினுள் புகுந்து விட
“கோயில் தூண நடுவுல வச்சிட்டு பேச முடியும், நேர்ல பாத்து பேச முடியாது என்ன சண்டையோ இவங்க சண்ட…” என்று புலம்பியப்படியே பரணியை நோக்கி சென்றவள் “அண்ணா!…” என்று அழைக்க
தங்கையை பார்த்ததும் முதலில் மகிழ்ந்த பரணி பின் முகத்தை திருப்பிக் கொள்ள, தன்னை தமையன் தவறாக நினைத்து விட்டானோ என்று பதறியவள் “அண்ணா மன்னிச்சிடுங்க.. நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல.. அந்த அகிலன்…” என்று அவள் விளக்கம் கூற எடுக்க
“தெரியும் அஞ்சு.. நான் உன்ன தப்பா நினைக்கல.. ஆனா என்கிட்ட ஒரு வார்த்த சொல்லி இருக்கலாம் இல்ல.. அது சரி என் மேலயும் தப்பு இருக்கு என்னதான் சித்தி சித்தப்பா முடிவு பண்ணி இருந்தாலும் மாப்பிள்ளைய பத்தி நானும் ஒரு வார்த்த விசாரிச்சு இருக்கணும்.. அந்த நாய் உன் வாழ்க்கைய நாசம் பண்ணிட்டானே…” என்று பல்லை கடித்தவன்
“ஆனா நீ இப்ப பண்றது எனக்கு சரியா படல அஞ்சு.. நீ பிரபாவோட அப்பாவ பழி வாங்க பண்றேன்றது நல்லா தெரியுது.. ஆனா இது சரியான வழியில்ல.. அவருக்கு புத்தி புகட்டனும் என்றதுக்காக உங்க ரெண்டு பேரோட காதல அசிங்கப் படுத்துற.. இப்படி அகிலனோட பொண்டாட்டி பிரபாகரனோட இருக்கானு ஊருக்கு சொல்லி அவருக்கு புத்திப்பு கட்டிட்டு நீ போயிடுவ..
…நாளைக்கு உங்க ரெண்டு பேரோட உறவு எங்க ஆரம்பிச்சதுன்னா இந்த ஊர் என்ன சொல்லும்..கள்ள தொடர்புனு.. உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குற அழகான காதல் அது செத்துப் போயிடாது.. தப்பான ஒரு அடையாளமா உங்க கல்யாண உறவ காட்ட போறீங்களா?.. வேணா அஞ்சு, கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ என்ன நினைக்கிறாயோ அத பண்ணு.. நீ இப்படி பண்றதால ஒருவேள பிரபாவோட அப்பா திருந்திட்டாலும் இல்ல திருந்தாம போனாலும் அவருக்கு எந்த ஒரு பாதிப்பும் வரப்போறதில்ல.. உங்க ரெண்டு பேரோட உறவும் தான் பேசும் பொருளாகும்.. உன்னோட முதல் வாழ்க்க அசிங்கமானதா போயிடுச்சு இந்த வாழ்க்க நீ ஆசைப்பட்ட வாழ்க்க.. அது மேல எந்த களங்கமும் வராம பாத்துக்க…” என்று பரணி சொல்லவும் தான்
அகிலன் முருகானந்தம் மீது இருந்த கோபத்தினால் தங்கள் காதலை களங்கப்படுத்தி, கள்ளக்காதல் என்று அடையாளப்படுத்தி விட்டது எவ்வளவு பெரிய தவறு என்பது புரிந்தது.
“மன்னிச்சிடுங்க ண்ணா.. ஏதோ ஒரு ஆத்திரத்துல இந்த மாதிரி பண்ணிட்டேன்.. வேற எதையும் பத்தி ஆழமா யோசிக்கல…”
“நீ தான் யோசிக்கல.. அந்த மலமாடுக்கு எங்க போச்சு அறிவு? நீ சொன்னா அவன் செய்வானா.. நீங்க நினைக்கிற மாதிரி பிரபாவோட அப்பாவ மாத்த முடியாது.. ஏன் அவனுக்கு அவங்க அப்பா பத்தி தெரியாதா.. அவர அசிங்கப்படுத்துறதா நினைச்சுட்டு உங்க மேல நீங்களே அசிங்கத்த பூசிக்காதிங்க.. அந்த மடையன் கிட்ட புரியிற மாதிரி எடுத்து சொல்லு.. அப்படி அவங்க அப்பாக்கு பாடம் எடுத்தே ஆகணும்னு இருந்ததுனா அவன மட்டும் பண்ண சொல்லு.. வெளியில் இருந்து யாரும் வந்து ஏதாவது சொன்னாதான் அவனுக்கு புரியுமா என்ன…” என்று கேட்க
“மாமா மேல தப்பு இல்ல ண்ணா.. நான் தான் அகிலன பத்தி மட்டும் சொன்னேன்.. அவருக்கு கூட அந்த நிமிஷம் தான் தெரியும் அவங்க அப்பாவுக்காகவும் தான் நான் இத பண்ணனேன்னு.. இன்னும் நாலஞ்சு நாள்ல விவாகரத்து கிடைச்சிடும் உடனே கல்யாணம் பண்ணிக்கிறேன் அதுக்கப்புறம் வேணும்னா நீங்க சொன்ன மாதிரி ஏதாவது பண்ண முடியுதான்னு பாக்கிறேன்.. ஆனா சும்மா மட்டும் அந்த ஆள விட்ட மாட்டேன்…” என்று இறுதியில் காட்டமாகவே கூறி முடித்தாள்.
“சரி சரி.. விவாகரத்து கிடைச்சதும் சொல்லு.. இந்த கல்யாணமும் என் தலமையில தான் நடக்கும்…” என்று சொல்ல
“சரிண்ணா.. ஆனா என் தலமையில நடந்த கல்யாணத்த நீங்க இன்னும் கண்டுக்கிட்டதா தெரியலயே…” என்று துர்க்காவை பற்றி கேட்க
அவன் முகத்தில் புதுவித ஒளி. நேற்று இரவு கூட அவளை பற்றிய சிந்தனைகளில் தானே கழிந்தது.
மெலிதாக சிரித்தவன் “கண்டுக்கிட்டதால தான் புதுசா காமாட்சி விளக்கு வாங்க வந்திருக்கேன்…” என்று சொல்லி அவன் வாங்கி வைத்த விளக்கை காட்ட
“அண்ணா!…” என்று ஆனந்த கூச்சலிட்டவள் “பிறகு என்ன.. நேரா போய் வாடினு அவ கைய பிடிச்சு இழுத்துட்டு வர வேண்டியது தானே…” என்று சொல்ல
“இந்த நிமிஷம் என் மனசுல அவ என் துர்க்கா தான்.. அவ கூட கடைசி வரைக்கும் அழகான ஒரு வாழ்க்கய வாழனும்னு ஆவலா இருக்கேன்.. அதே ஆசையும் ஆவலும் அவளுக்கும் இருக்குன்னு தெரியுறப்போ கண்டிப்பா அது நடக்கும்…” என்று சொன்ன பரணி
வளையல் கடையிலிருந்து பிரபாகரன் அடிக்கடி எட்டிப் பார்க்க “போ அந்த மலைமாடு உன்னையே பாத்துட்டு இருக்கான்…” என்று சொல்ல
“அண்ணா துர்க்காவ பத்தி உங்ககிட்ட சில விஷயம் சொல்லணும்.. நாளைக்கு கோயிலுக்கு வாங்க…” என்று அவசரமாக சொன்னவள் பிரபாகரனை நோக்கி செல்ல
‘துர்க்கா பத்தி புதுசா என்ன!…’ என்று மனதில் நினைத்தவன் சரி நாளை நேரில் தெரிந்து கொள்வோம் என்று தன் வீட்டை நோக்கி சென்றான்.
error: Content is protected !!