Final_அத்தியாயம் 15_தேவனுக்கேற்ற தேவியோ_கார்த்திகா கார்த்திகேயன்
அத்தியாயம் 15
தேடி வந்த வரமும் நீ
தேடிக் கிடைக்காத
Advertisement
பொக்கிஷமும் நீ!!!
தருமர் பயங்கர கோபத்தில் இருந்தார். மனைவியும் சரி பிள்ளைகளும் சரி வீட்டை விட்டுச் சென்று இரண்டு நாட்கள் ஆகிறது. எங்கே சென்றார்கள் எதற்கு சென்றார்கள் எப்போது வருவார்கள் என்று எதுவுமே சொல்ல வில்லை.
Advertisement
Advertisement
அவர் அழைத்த போதும் சாணக்கியனும் சகுந்தலாவும் போனை எடுக்கவே இல்லை.
வீட்டுக்கு தலைவன் அவர். அப்படி இருக்க அவரை துளி கூட மதிக்காமல் இருந்த அவர்களின் செயல் அவரை வெறி ஏற்றியது என்று சொன்னால் அது மிகை இல்லை.
Advertisement
காலை பத்து மணிக்கு தான் அனைவரும் வீட்டுக்கு வந்து இறங்கினார்கள். முதலில் வீட்டுக்குள் நுழைந்த சகுந்தலாவை முறைத்துப் பார்த்தார் தருமர்.
ஆனால் சகுந்தலா அவரை கண்டு கொள்ளாமல் உள்ளே செல்லப் பார்க்க “சகு நில்லு, உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? முந்தாநேத்து ஈவினிங் போன? இப்ப தான் வந்துருக்க?”, என்று கேட்டார்.
“இப்ப என்ன? எங்க போனேன்னு தெரியணும் அதானே? இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாமே தெரிஞ்சிரும். நான் என் பிள்ளைங்களுக்கும் மருமகளுங்களுக்கும் பேரன் பேத்திக்கும் ஆரத்தி எடுக்கணும். என்னை தொல்லை பண்ணாதீங்க. எல்லாரும் வெளிய வெயிட் பண்ணுறாங்க”, என்று சொல்லி விட்டு உள்ளே செல்ல “இவளுக்கு என்ன பைத்தியமா யார் வந்திருக்கா?”, என்று எண்ணிக் கொண்டு வெளியே சென்றவர் அங்கே இருந்த கூட்டத்தைக் கண்டு அதிர்ந்து தான் போனார்.
ஸ்வேதாவின் தாய் தகப்பனும் வந்திருக்க மற்றவர்களை கண்டு கொள்ளாதவர் “வாங்க சம்பந்தி”, என்று அவர்களை மட்டும் வரவேற்றார்.
உள்ளே இருந்து வந்த சகுந்தலா அமர் ரதி மற்றும் இரண்டு பிள்ளைகளுக்கு ஆரத்தி சுற்ற அனைவரின் முன்னிலையில் அதற்கு எப்படி எதிர்வினை ஆற்ற என்று தெரியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தார்.
அனைவரும் உள்ளே சென்று அமர்ந்ததும் “வர முகூர்த்தத்துல ரதிக்கும் அமருக்கும் கல்யாணம்”, என்றாள் சகுந்தலா.
“சகு”, என்று அவர் அடிகுரலில் எச்சரிக்க “திவ்யாவுக்கு டைவர்ஸ் கிடைச்சதும் என்னோட பெரிய மகனுக்கு உங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணி கொடுப்பீங்களா சம்பந்தி?”, என்று கேட்க தருமரின் இதயத் துடிப்பு எகிறியது.
“சகு என்ன பேசிட்டு இருக்க?”, என்றார்.
“பொறுங்க இன்னும் முடியலை”, என்று சொல்லி விட்டு ஸ்வேதாவின் தாய் தந்தையிடம் “ஸ்வேதா எனக்கும் பொண்ணு மாதிரி தான். அவ வாழ்க்கை நல்லா இருக்கணும்னா ஒரு நல்லவன் கையில அவளை ஒப்படைக்கணும். அப்படி பாத்தா என் பசங்களை விட எல்லா விதத்துலயும் தகுதியானவன் இதோ இருக்கானே அரவிந்த். இவனும் இனி என் மகன் தான். இவனுக்கு உங்க பொண்ணை தருவீங்களா?”, என்று கேட்டாள்.
ஏற்கனவே இது எல்லாம் பேசி இருந்ததால் அவர்களும் சரி என்று சொன்னார்கள். போனிலே சாணக்கியன் ஸ்வேதா வீட்டில் பேசி விட்டான். அவர்களும் சம்மதம் என்று சொல்ல தருமர் முகத்தில் ஈ ஆட வில்லை.
“இன்னொரு முக்கியமான விஷயம் நான் வரப் போற இந்த எலக்சன்ல நம்ம கட்சி சார்பா நிக்க போறேன். நான் தான் எம்.எல்.ஏ கேண்டிடேட்”, என்று அறிவித்தான் சாணக்கியன்.
இந்த விஷயம் சாணக்கியன் மற்றும் சிவஞானத்துக்கு மட்டுமே தெரியும் என்பதால் அனைவருக்குமே திகைப்பு தான்.
“என்ன டா சொல்ற? ரொம்ப நல்ல விஷயம் டா. எனக்கு சந்தோஷமா இருக்கு”, என்று சொன்ன தருமர் சிவஞானத்தைப் பார்க்க “என் மக இல்லாம போனாலும் அவர் என் பெரிய மாப்பிள்ளை தான். அவர் என் அரசியல் வாரிசா இருந்தா சந்தோஷம் தான்”, என்றார் அவர்.
“ஆனா அதுல ஒரு கண்டிஷன் இருக்கு மாமா”
“சொல்லுங்க மாப்பிள்ளை”
“இனிமே என் அப்பா நம்ம கட்சில இருக்க கூடாது. கட்சி ஆபீஸ் பக்கமே வரக் கூடாது. இது வெளிய தெரியணும்னு இல்லை. ஆனா வரக் கூடாது. இதுக்கு சம்மதிச்சா நான் எல்லா பொறுப்பையும் ஏத்துக்குறேன்”, என்று சொல்ல அதிர்ந்து போனார் தருமர்.
“டேய் யாரை டா சொல்ற வரக் கூடாதுன்னு. நான் எத்தனை வருஷம் அந்த கட்சில இருந்துருக்கேன் தெரியுமா? எனக்கு ராசி இல்லைன்னு தான் உங்க ரெண்டு பேர்ல யாரையாவது நிக்க வைக்கணும்னு நினைச்சேன். இப்ப என்னையே தூர போடுவீங்களா? சம்பந்தி அவன் சொல்லுறான்னு ஏதாவது முடிவு எடுக்காதீங்க”
“இது விவாதம் பண்ண வேண்டிய நேரம் இல்லை சம்பந்தி. பெரிய மாப்பிள்ளை ஆசைப்படி நீங்க வீட்ல ரெஸ்ட் எடுங்க”, என்று சொல்ல தருமர் முகம் சிறுத்துப் போனது.
குழந்தைகள் வேலைக்கார பெண்ணுடன் வெளியே விளையாடிக் கொண்டிருக்க பெரியவர்கள் மட்டுமே அங்கே இருந்தார்கள்.
ஒரு நொடி அங்கே அமைதியே நிலவியது. அடுத்து யார் என்ன பேச என்று தெரியாமல் அமைதியாக இருக்க “எனக்கு ஒரு விஷயம் பேசணும்”, என்று சொன்ன சகுந்தலா உள்ளே சென்று விவாகரத்து பேப்பரை எடுத்து வந்தாள்.
அனைவரும் அவளை குழப்பமாக பார்க்க தருமரின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தவள் “எனக்கு உங்க கிட்ட இருந்து டைவர்ஸ் வேணும்”, என்றாள்.
இது வரை நடந்ததையே ஜீரணிக்க முடியாமல் இருந்தவர் இப்போது அதிர்ந்து எழுந்து நின்று விட்டார்.
“சகு”
“உங்களுக்கு வேணும்னா நான் பத்தோட பதினொன்னா தெரியலாம். ஆனா எனக்கு அப்படி இல்லை. இனி என் வாழ்க்கை முழுக்க பொது சேவை மட்டும் தான். கண்டவ கூட இருந்துட்டு வர எவனுக்கும் என்னோட ரூம்ல மட்டும் இல்லை. என் மனசுலயும் இடம் இல்லை”, என்று சொல்ல மொத்தமாக அதிர்ந்து விட்டார்.
“கவலைப் படாதீங்க. நாங்க வீட்டை விட்டு வெளிய போறோம்னோ இல்லை நீங்க வீட்டை விட்டு வெளிய போங்கனோ சொல்ல மாட்டேன். இங்கயே நீங்க வேற ரூம்ல இருக்கலாம். சாப்பாடு வேலைக்காரி தருவா. இனி எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை”, என்று முடிவாக சொல்லி பேப்பரை நீட்ட தருமரோ மன்னிப்பு கேட்டார். ஆனால் அதை காது கொடுத்து கேட்க தான் யாரும் தயாராக இல்லை.
ஒரு வருடத்திற்கு பிறகு..
தன்னுடைய கல்லூரியில் இருந்து வெளியே வந்தாள் திவ்யா. இப்போது அவள் வயிற்றில் ஆறு மாத குழந்தை இருந்தது.
ஆறு மாதம் ஆன போதும் லேசான வாந்தியும் சோர்வும் அவளுக்கு இருக்க அவள் வரவுக்காக காத்திருந்தான் அவள் ஆருயிர் கணவன் சாணக்கியன்.
அவனைக் கண்டதும் முகம் மலர்ந்த படி அவனை நெருங்கினாள்.
அவள் அருகே வந்ததும் கார் கதவை திறந்து வைத்தவன் அவள் பத்திரமாக ஏறி அமர்ந்ததும் அந்த பக்கம் சென்று காரைக் கிளப்பினான்.
“இன்னைக்கு டே எப்படி போச்சு திவி?”
“ஓகே தான் பா. என்ன எனக்கு தான் கொஞ்சம் டயர்டா இருந்துச்சு”
“இதுக்கு தான் சொன்னேன். இப்ப குழந்தை வேண்டாம்., முதல்ல படிச்சு முடிச்சு உன்னோட ஆராய்ச்சி ஆசையை பாருன்னு”
“ஏன்? இல்லை ஏன்ன்னு கேக்குறேன்? பிள்ளை வந்தா என்னை படிக்க விட மாட்டீங்களா? நீங்க பிள்ளையை பாத்துக்கோங்க. நான் என் வேலையை பாத்துக்குறேன். ஊருக்கு மந்திரியா இருந்தாலும் என் பிள்ளை உங்க பொறுப்பு தான் சொல்லிட்டேன்”, என்று வம்பிழுத்தாள்.
அவளுக்கு அவனது குழந்தை ஆசை நன்கு தெரியும். வீட்டில் அவந்திகா மற்றும் அவினாஷ் இருவரையும் அவன் பார்த்துக் கொள்ளும் பாங்கே அவன் இறந்த குழந்தையை எவ்வளவு மிஸ் செய்கிறான் என்று அவளுக்கு உணர்த்தும்.
அதனால் தான் குழந்தையைப் பெற்று அவன் கையில் கொடுக்க வேண்டும் என்ற உறுதியை அவளை எடுக்க வைத்தது.
தனக்காகவே இருக்கும் அவனுக்கு அவள் வேறு என்ன செய்யவாம். இப்போது வரை அந்த கொலையை செய்தது அவள் தான் என்று அவளுக்கு தெரியாது. சாகும் வரைக்கும் அவன் சொல்லவும் மாட்டான். உண்மை தெரிந்த பாண்டியனை அவளை சந்திக்கவும் விட மாட்டான். அமர் மற்றும் அரவிந்தும் சொல்ல மாட்டார்கள்.
“வீடு பக்கத்துல வந்துட்டோம். பிள்ளைகளுக்கு ஏதாவது வாங்கிட்டீங்களா? போனதும் உங்களை கேக்க போறாங்க”, என்றாள் திவ்யா.
“உன்னை பிக்கப் பண்ண வரும் போதே வாங்கிட்டேன் டி”, என்று சொன்னவன் அவர்கள் வீட்டுக்குள் காரை சென்று நிறுத்தினான்.
சாணக்கியன் இப்போது மீன் வளத்துறை அமைச்சர். தினமும் எல்லாம் மனைவியை அவனால் பிக்கப் செய்ய முடியாது, இன்று அனைவரும் குடும்பத்துடன் அரவிந்த் மற்றும் ஸ்வேதா திருமண வரவேற்புக்கு செல்ல இருப்பதால் தான் மதியம் விடுமுறை எடுத்திருந்தான். அவர்கள் திருமணம் நேற்று தான் வடபழனி கோவிலில் முடிந்திருந்தது.
சாணக்கியன் மற்றும் திவ்யா இருவரும் உள்ளே சென்றது தான் தாமதம் “பெரியப்பா என்ன வாங்கிட்டு வந்த?”, என்று ஒன்றாக கேட்ட படி அவன் காலைக் கட்டிக் கொண்டார்கள் இரண்டு வாண்டுகளும்.
“அவி குட்டி, பாப்பா ரெண்டு பேரும் பெரியப்பாவை முதல்ல விடுங்க. வந்ததும் இப்படி பண்ண கூடாதுன்னு சொல்லிருக்கேனா இல்லையா?”, என்று குண்டு கண்களை உருட்டி மிரட்டினாள் ரதி.
“விடு மா, என் பிள்ளைங்க என் கிட்ட கேக்காம யார் கிட்ட கேப்பாங்களாம்?”, என்ற சாணக்கியன் இருவரையும் அள்ளிக் கொள்ள “நீங்க கொடுக்குற இடம் தான் மாமா, ரொம்ப செல்லம் ரெண்டு பேருக்கும்”, என்றாள்.
“விடு அக்கா, அது அப்பா பிள்ளைங்க பாடு. நீ எதுக்கு டென்ஷன் ஆகுற?”, என்று கேட்டாள் திவ்யா.
“அதானே என்ன டா நீ இன்னும் சப்போர்ட்க்கு வரலையேன்னு நினைச்சேன். சரி இரு ஜூஸ் எடுத்துட்டு வரேன். குடிச்சிட்டு ,மேல போ”, என்றாள் ரதி.
“நானே போய் எடுத்துக்குறேன் அக்கா”, என்று சொல்லி விட்டு அவள் செல்ல “அமர் வந்துட்டானா மா?”, என்று கேட்டான் சாணக்கியன்.
“இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்ன்னு சொன்னாங்க மாமா. அத்தை இப்ப தான் வந்தாங்க. குளிக்க போயிருக்காங்க”
“ஒ”, என்று அவன் சொல்லும் போதே வேறு ஒரு அறையில் இருந்து வெளியே வந்த தருமர் அவன் கண்ணில் பட்டார்.
அவரைப் பார்த்தாலும் கவனிக்காதது போல “எல்லாரையும் கேட்டுட்டேன். இன்னொரு தெண்டம் ஒண்ணு எதுக்கு இருக்குன்னே தெரியாம இங்க இருக்குமே? அதைக் காணும்?”, என்று கேட்டு வம்பிழுத்தான்.
ரதி ஒரு மாதிரி கண்ணை உருட்ட “ஏய் யாரு டா தெண்டம்?”, என்று கேட்ட படி அங்கே வந்த தருமர் அவனை முறைக்க “யாரு கேள்வி கேக்காங்களோ அவங்க தான்”, என்று சொல்லி விட்டு பிள்ளைகளுடன் மேலே சென்று விட்டான்.
ரதியும் அவரை எதிர் கொள்ள மனதில்லாமல் உள்ளே சென்று விட்டாள். இப்போதும் அமர் தருமரிடம் ஒரு வார்த்தை கூட பேச மாட்டான். சாணக்கியன் மட்டும் தான் அவருடன் பேசுவான். சில நேரம் இப்படி மட்டம் தட்டவும் மறக்க மாட்டான். உணவு விஷயம் என்றால் எப்போதாவது ரதி பேசுவாள். மற்ற யாரும் அவரிடம் பேச மாட்டார்கள்.
அத்தனை சொந்தங்கள் அந்த வீட்டில் இருந்தாலும் தருமர் தனி தீவாக தான் இருந்தார். அப்படியே ஒதுக்கி தான் வைத்திருந்தார்கள். அவருடன் யாரும் சேர்ந்து உணவு அருந்த கூட மாட்டார்கள்.
இப்போது அவர் எந்த தவறும் செய்ய வில்லை தான் என்றாலும் முழுதாக திருந்தி இருக்கிறாரா என்று கேட்டால் கேள்விக்குறி தான்.
இப்போது மகன் அவமானப் படுத்தி விட்டு செல்ல எரிச்சலுடன் அங்கே அமர்ந்தவர் சமையல் அறையில் இருந்து வந்த திவ்யாவை ஒரு பார்வை பார்த்தார்.
அவளோ அப்படி ஒருவர் அங்கே இருக்கிறார் என்று கூட தெரியாதது போல அவர்கள் அறையை பார்த்து நடந்தாள்.
அப்போது அமரும் ஆபீஸில் இருந்து உள்ளே வர அவரை ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் கண்டு கொள்ளாமல் செல்ல மனதுக்கு ஒரு மாதிரி இருந்தாலும் கெத்தாக டிவியை போட்டு பார்த்துக் கொண்டிருந்தார்.
இன்னும் அவர் ஹாலில் இருந்து அவரது அறைக்கு எழுந்து செல்லும் வரைக்கும் யாரும் ஹாலுக்கு வர மாட்டார்கள் என்று தெரியும். ஆனாலும் வீம்பாக அமர்ந்திருந்தார்.
“ஐயா காப்பி தரவா?”, என்று வேலைக்கார பெண் கேட்டதும் “சரி”, என்றவர் அவள் கொடுத்தக் காபியை உறிஞ்சி குடித்த படி அமர்ந்திருக்க ஒவ்வொருவராக கிளம்பி வந்தார்கள்.
வீட்டில் பேசிக் கொண்டிருந்ததை வைத்து அவர்கள் வரவேற்புக்கு செல்கிறார்கள் என்று புரிந்தது. அவரை வா என்று அழைக்கவும் இல்லை. வறீங்களா என்று யாரும் கேட்கவும் இல்லை.
அனைவரும் கிளம்பி வர ஒவ்வொருவரையும் கவனித்த படி டிவியில் கவனம் வைத்திருந்தார்.
அவருக்கு எதிரே இரண்டு பிள்ளைகளும் டிப் டாப்பாக கிளம்பி வந்து அமர்ந்திருக்க அவர்களைத் தூக்கி கொஞ்ச வேண்டும் என்று ஆசையாக தான் இருந்தது. அதுவும் அமர் போலவும் தன்னுடைய சாயலிலும் இருந்த பேரனைக் கொஞ்ச அவ்வளவு ஆசையாக தான் இருந்தது.
ஆனால் அவர் அவந்திகாவை இது வரை தூக்காததால் அவள் அவரை விட்டு விலகியே இருக்க புதிதாக வந்த அவினாசும் அவள் மாதிரியே அவரை விட்டு ஒதுங்கி இருந்தான். முற்பகல் செயின் பிற்பகல் விளையும் என்று சும்மாவா சொன்னார்கள்.
பிள்ளைகள் அவர்களின் மனைவிகளுடன் அங்கே வர கடைசியாக தான் வெளியே வந்தாள் சகுந்தலா. அவளைக் கண்டதும் அவர் கண்கள் லேசாக மின்னியது.
ஏனோ அவளுக்கு துரோகம் செய்ததையும் மீறி ஒரு வார்த்தை பேச மாட்டாளா என்று ஆசையாக இருந்தது. ஆனால் சகுந்தலா அவர் பக்கம் திரும்பக் கூட வில்லை.
“குட்டீஸ் வாங்க போகலாம்”, என்றவள் இரண்டு குழந்தைகளையும் ஆளுக்கு ஒரு கையில் பிடித்த படி முன்னே செல்ல அவர்களுக்கு பின்னே மனைவிகளுடன் சென்றார்கள் அமர் மற்றும் சாணக்கியன் இருவரும்.
போகும் அனைவரையும் பார்த்த படி அமர்ந்திருந்தார். இது வரை அவர்கள் வீட்டுப் பிரச்சனை வெளியே தெரியாது தான். ஆனால் வீட்டுக்குள் தருமர் என்பவர் தனிமனிதன் மட்டும் தான்.
கார், பர்சனல் டிரைவர், அடியாட்கள், பூனை படை போல சாணக்கியன் என ஒரு கூட்டத்துடன் சிங்கம் போல வலம் வந்தவர் இப்போது வீட்டுக்குள் சுண்டெலியாக மாறிப் போனார். போகும் அவர்களை கண்டு ஒரு பெருமூச்சு மட்டும் வர அமைதியாக எழுந்து அறைக்குள் சென்றவர் கட்டிலில் படுத்துக் கொண்டார். அவருக்கும் அழைப்பு இருந்தது தான். ஆனால் போக மனதில்லை. ஏனோ தனிமை ஒரு மாதிரி அவரைக் கொல்ல அவர் கண்களின் ஓரம் ஒரு துளி கண்ணீர் மட்டுமே.
மண்டபத்தில் அமைச்சர் சாணக்கியன் குடும்பம் வந்து இறங்க முதலில் யாரும் அவனை கவனிக்காமல் போனாலும் சிறிது நேரத்தில் அங்கே முக்கிய பாத்திரமானான் சாணக்கியன்.
அவர்களுக்கு என்று தனி மரியாதை, சிறப்பு வரவேற்பு என்று அவர்கள் ஆரம்பிக்க அவன் எவ்வளவோ மறுத்தும் அவர்கள் கேட்கவில்லை.
அவனுக்கு கிடைக்கும் பேரும் புகழும் கண்டு அமரும் சரி சகுந்தலாவும் சரி பெருமை தான் கொண்டார்கள். திவ்யாவை சொல்லவும் வேண்டுமா?
அன்று இரவு அறைக்குள் வந்தாள் ரதி. இரண்டு பிள்ளைகளுக்கு நடுவே படுத்திருந்தான் அமர். அவளைக் கண்டதும் சிறு புன்னகையுடன் எழுந்து கொண்டான்.
ரதி இப்போது சென்னையில் ஒரு பிரான்ச் ஆரம்பித்து மற்ற கிளைகளை போனிலே நிர்வகித்துக் கொண்டிருந்தாள்.
“நாளைக்கு விசிட் போறியா கண்ணம்மா?”, என்று கேட்டான் அமர்.
“ஆமா போன மன்த் போனது? ஒரு தடவை எல்லா பிரான்ச் பாத்துட்டா நிம்மதியா இருக்கும்?”
“கூட வரவா டி?”
“உங்களுக்கே வேலை அதிகம்? நான் பாத்துக்குறேன். பிள்ளைங்க நீங்களும் இல்லைன்னா கஷ்ட படுவாங்க மா”
“சரி, அப்புறம் ஒண்ணு கேக்கணும்”
“கேளுங்க”
“சாயங்காலம் சாமி கிட்ட அவ்வளவு தீவிரமா என்ன வேண்டிக்கிட்ட?”
“நீங்க நம்ம குடும்பம் எல்லாரும் நல்லா இருக்கணும்னு தான்”
“என் மேல உனக்கு கோபமே வராதா டி?”
“கோபம் வர அளவுக்கு நீங்க என்ன பண்ணுனீங்களாம்?”
“இன்னும் என்ன பண்ணனும்? ஒரு பொண்ணு அனுபவிக்க கூடாத எல்லா கஷ்டத்தையும் நீ அனுபவிச்சிட்ட?”
“அது வேணும்னு நடந்தது இல்லை. விதி. இனி எத்தனை நாளுக்கு அதையே பேசுவீங்க?”, என்று கேட்டவள் அவன் குழப்பத்தில் இருக்கிறான் என்று புரிந்து அவள் மனம் கவர்ந்தவனின் மார்பில் நிம்மதியாக சாய்ந்து கொண்டாள். அவன் கரங்களும் அவளை வளைத்துக் கொண்டது. அவனுக்கென்று படைக்கப் பட்டவள் அவள் என்னும் போது அந்த விதியே அவர்களை ஒன்றிணைத்தது போல? இருவரின் எதிர்பார்ப்பும் அப்போதும் சரி இப்போதும் சரி காதல் மட்டுமே.
காதல் என்பது மிகப் பெரிய மாய உலகம், பிரிக்கவே முடியாத சிலந்தி வலைகளின் அணிவகுப்பு. அதை என்ன தான் அலசி ஆராய்ந்தாலும் குழப்பம் மட்டுமே மிஞ்சும். தவறு செய்தாலும் மன்னிக்கும்.
அத்தகைய காதலே அவர்களை இறுதி வரை இணைத்து வைத்திருக்கும் என்பதில் துளி கூட சந்தேகமே இல்லை. அமரதேவனுக்கேற்ற ரதி தேவி அவளே!!!
முற்றும்…
