Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

49. பிரியா முரளி - கண்ணாமூச்சி ஏனடா

கண்ணாமூச்சி ஏனடா… – 24

கண்ணாமூச்சி 24

விஷ்வா தன் காதலின் சுவடுகளை மட்டும் அவளிடம் விட்டுவிட்டு அந்த நள்ளிரவு நேரத்து நிழல்களுக்குள் ஒரு மாயாவியைப் போல மறைந்து போனான். அவன் சென்ற பிறகும், நிலா அசைய மறந்து சிலையாய் சமைந்து நின்றுவிட்டாள். தான் காண்பது கனவா? உண்மையாகவே விஸ்வநாத் இங்கு வந்து தன்னிடம் காதல் சொல்லிச் சென்றானா? நம்பமுடியாத திகைப்பில் மூச்சு விடவும் மறந்து நின்றாள். அவனது அதிரடியான நெருக்கமும், அவளிடம் நடந்துகொண்ட விதமும் ஏற்படுத்திய மயக்கம் அவளது உணர்வுகளைக் கிறங்கடித்து விட்டிருந்தது.
எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தாளோ தெரியாது, எங்கிருந்தோ ஏதோவொரு சலனம் அவளது மோனம் காலத்து நிஜ உலகிற்குள் தள்ளியது, ஆனாலும் விஷ்வாவின் நெருக்கம் தந்த மயக்கத்தில் இருந்து மீளாமலேயே பிரமை பிடித்தவள் போல கீழிறங்கிச் சென்று மெதுவாகத் தன் அறைக்குள் வந்து கதவைத் தாழிட்டாள். ஆனால், அவளது மனம் இன்னும் விஷ்வா காட்டிய அந்த அந்தரங்க நெருக்கத்திலேயே லயித்துக் கிடந்தது. 
அவளது இதழ்களின் மேல் இருந்த அவனது விரலின் தீண்டல் தந்த வெதுவெதுப்பு இன்னும் அவளது உதடுகளில் அப்படியே எஞ்சி நிற்பது போன்றொரு பிரமை. அவளது செவிகளுக்குள் இன்னும் அவனது மூச்சுக்காற்றின் வெதுவெதுப்பு, அவளது உடலெங்கும் சிலிர்த்து நடுங்கச் செய்தது. 


Advertisement

அவளைத் தன் கைகளுக்குள் சிறைபிடித்திருந்த விஷ்வாவின் கரங்களின் வலிமையும், அவனது உடலின் கதகதப்பும் அந்த அணைப்பில் அவன் காட்டிய உரிமையும் இப்போதும் அவளுக்குள் அப்படியே எஞ்சி நின்றது. முக்கியமாக, அவளது மனதின் ஆழம் வரை ஊடுருவும்படி நேராகப் பார்த்த அவனது காந்தப் பார்வை… நிலாவை அந்தத் தருணத்திலேயே கட்டிப்போட்டிருந்தது. அந்த அழகான சந்திப்பில் இருந்து வெளியே வர அவளது இதயத்திற்குச் சற்றேனும் விருப்பமில்லை, அவளது இதயம் அந்த இனிமையான தீண்டலை விட்டு வெளியே வர மறுத்து, அவனது நினைவுகளையே சுவாசித்துக் கொண்டிருந்தது. அவனது பிரத்யேக வாசனைத் திரவியத்தின் வாசமும் தலைக்கு மேல் மலர்ந்திருந்த ஜாதிமல்லியின் வாசனையும் ஒன்றாகக் கலந்து அவளது உணர்வுகளுக்குள் இன்னும் ஒரு கிறக்கமான காதலை ஏந்தி வந்து நிரப்பிக் கொண்டிருந்தது. 
நிலாவின் மனதுக்குள் அவளது தர்க்க ரீதியான பகுத்தறிவு ஒரு போர்க்களத்தையே உருவாக்கிக் கொண்டிருந்தது. அவளது புத்தி அவளுக்குள் நின்று கறாரான குரலில் எச்சரிக்கத் தொடங்கியது:
“நிலா… கொஞ்சம் நிதானமா யோசிச்சுப் பார். நீ எங்க, அவர் எங்க? பூமிக்கும் வானத்துக்கும் இருக்குற பிரம்மாண்டமான இடைவெளி இது. உன்னோட எளிய நடுத்தர வர்க்க வாழ்க்கை முறை வேற, அவரோட ஆடம்பரமான சினிமா உலகம் வேற. ரெண்டும் எப்படி ஒன்னா சேரும்?”

Advertisement

பயத்தின் குளிர்ச்சி அவளது நரம்புகளுக்குள் ஊடுருவ, அவளது உள்மனம் அடுத்த கேள்வியைக் கேட்டு அவளது அறிவைக் குத்தியது,

Advertisement

“இந்த விஷயம் மட்டும் வீட்டுக்குத் தெரிஞ்சா என்னாகும்? அப்பா இதைக் கேட்டு எவ்வளவு துடிச்சுப் போவார்? அம்மா எப்படி ரியாக்ட் செய்வாங்கன்னு உனக்குத் தெரியாதா? இந்த ரிலேஷன்ஷிப்னால கடைசியில உனக்கும் விஷ்வாவுக்கும் வலிதான் மிஞ்சும், அதை உன்னால தாங்க முடியுமா நிலா? உன்னால விஷ்வா கஷ்டப்படுறதை நீ தாங்கிக்குவியா?” சரமாரியாகக் கேள்விகளை அடுக்கியது அவளது புத்தி, எதற்கும் பதிலில்லை அவளிடம்.
ஆனால், அவளது இதயம் விஷ்வாவின் அந்த வெதுவெதுப்பான அணைப்பில் இருந்து இன்னும் வெளியே வர மறுத்து அவனது நினைவுகளையே ஆராதித்தது.
காதலுக்கும் எதார்த்தத்திற்கும் இடையே நடந்த அந்தப் போரில் தன் புத்தியிடம் தோற்று, மனதிடம் சரணடைந்த நிலாவுக்கு, அந்த முதல் காதலின் முதல் சந்திப்பின் முதல் இரவு முற்றிலும் தூக்கமில்லாத கனவுகள் நிறைந்த ஒரு இரவாகவே கழிந்தது. விடியற்காலை ஐந்து மணி அளவில் தான் அவளது கண்கள் லேசாக அயர்ந்தன.

Advertisement

விஷ்வாவின் லக்சுரி அபார்ட்மென்ட்டின் பால்கனியில் நள்ளிரவுக் காற்று மென்மையாக வீசிக்கொண்டிருந்தது. தூரத்திலிருந்த வங்காள விரிகுடா கடலின் அலைகளில் அவன் கண்களில் நிலைத்திருந்ததே தவிர, அவனது மனமோ நிலாவோடு கழித்த அந்தச் சில நொடிகளின் நினைவுகளிலேயே முற்றிலும் மூழ்கியிருந்தது. அன்று இரவு அவனால் ஒரு நொடி கூடக் கண் அயர முடியவில்லை.
அவனது உள்மனம் அவளது அலைபாயும் விழிகள் தந்த மயக்கத்திலே லயித்து நின்றது, 
“என்ன அழகான கண்கள்! அத்தனை உணர்ச்சிகளையும் தேக்கி என்னை அப்படிப் பார்த்தாளே… என்மேல் இருக்குற காதலும், தன் அப்பா அம்மாவோட நம்பிக்கையைக் காப்பாத்தணும்ங்கிற அந்தப் பொறுப்பும் அவளுக்குள்ள எவ்வளவு பெரிய போராட்டத்தை உண்டாக்கியிருக்கும்? அந்தத் தவிப்பு அத்தனையும் அவளோட கண்ணுல அப்படியே அப்பட்டமா தெரிஞ்சுதே!”
விஷ்வா தன் கைகளை லேசாக மூடித் திறந்து பார்த்தான். அவளது மென்மையான உடல் தன் கைகளுக்குள் ஒரு கவிதை போல அப்படியே பொருந்தி நின்ற அந்தப் பரவசம் இன்னும் அவனது விரல் நுனிகளில் எஞ்சியிருந்தது. திரைப்படங்களில் நடிக்கும்போது, எத்தனையோ பெண்களை விஷ்வா அனைத்திருக்கிறான், ஆனால் நிலாவை அணைத்தபோது அவனுக்குள் எழுந்த அந்தப் பாதுகாப்பு உணர்வை, அவளுக்காக இந்த உலகில் யாரை வேண்டுமானாலும், ஏன் இந்த உலகையே வேண்டுமானாலும் எதிர்த்து நிற்கலாம் என்ற உணர்வும் அவனுக்கு முன்பெப்போதும் தோன்றியதில்லை,
“என் கைக்குள்ள நிலா அத்தனை மென்மையாக உறைஞ்சு போய் நின்னாளே… அந்த செகண்ட்… இந்த உலகத்தின் எந்தவொரு கெடுதலும், எந்தவொரு கஷ்டமும் அவ பக்கத்துல கூட வராத அளவுக்கு என் நெஞ்சோடு சேர்த்து அவளை அப்படியே பாதுகாக்கணும்னு என் மனசு துடிச்சதே. அவதான் என் உலகம்…” விஷ்வாவின் மனம் தீர்மானமாக முடிவெடுத்திருந்தது.
தூரத்து இருளில் அலைமோதும் கடலைப் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த விஷ்வாவின் இதயத்திலும், நிலாவிற்கான காதலின் பேராழி அலை அலையாய்ப் பொங்கி அவனைக் கிறங்கடித்துக் கொண்டிருந்தது.
அடுத்த நாள் விடியல் இருவருக்குமே ஒரு புதிய எதிர்பார்ப்பின் ராகத்தை இசைத்துக் கொண்டுதான் பிறந்தது. நிலா காலையில் கண்விழித்ததே, தன் தலையணைக்கு அருகில் கிடந்த மொபைல் போனைத் தேடித்தான்.
 “நான் நாளைக்கு உனக்குக் கால் பண்றேன்” என்று நேற்று இரவு அவன் அவளது காதோரம் கிசுகிசுப்பாய் விதைத்துவிட்டுப் போன அந்த ஒற்றை வாக்கியம், அவளுக்குள் ஒரு புதிய கீர்த்தனையாக ஒலித்துக் கொண்டே இருந்தது. விஷ்வாவிடமிருந்து வரப்போகும் அந்த முதல் போன் காலுக்கான இனிமையான எதிர்பார்ப்பில் அவளது இதயம் தாளம் தப்பத் தொடங்கியது.
ஆனால், கடிகார முட்கள் நகர நகர, அவளது அத்தனை ஆசைகளையும் ஏமாற்றத்தின் நிழல் சூழ்ந்தது. விஷ்வாவிடமிருந்து எந்தவொரு அழைப்போ அல்லது ஒரு சிறு குறுஞ்செய்தியோ கூட  வரவில்லை. சமையலறையில் அம்மாவுக்கு உதவும்போதும், ஆபீஸ் கிளம்பத் தயாராகும்போதும் அவளது கவனம் முழுவதும் போனின் மீதே இருந்தது. 
நாள் முழுவதும் ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் தன் போன் திரையை ஆன் செய்து பார்த்துப் பார்த்து, அவளது ஏமாற்றம் மெல்ல மெல்ல ஒரு தீராத தவிப்பாகவும், மெல்லிய கோபமாகவும் உருமாறியது.
 “ஏன் இன்னும் கால் பண்ணல? நேத்து அவ்வளவு உரிமை எடுத்துக்கிட்டுப் பேசினவருக்கு, இன்னைக்கு ஒரு மெசேஜ் பண்ணக்கூட நேரமில்லையா? நேத்து உருகி உருகி பேசிட்டுப் போன சூப்பர் ஸ்டாருக்கு இன்னிக்கு நம்ம ஞாபகமே வந்திருக்காதோ?” என்று அவளது இதழ்கள் தனக்குள்ளேயே முணுமுணுத்துக்கொண்டன.
மறுபுறம், விஷ்வாவின் காலைப் பொழுதோ முற்றிலும் ஒரு அதீத குறும்புக்காரச் சிந்தனையோடு விடிந்தது. படுக்கையை விட்டு எழுந்ததும் அவனது விரல்கள் நிலாவின் நம்பரைத் தேடித் துடித்தாலும், அவனுக்குள் ஒரு அழகான காதல் விளையாட்டு விளையாடிப் பார்க்க நினைத்தான். 
நிலா நிஜமாகவே தன் அழைப்பிற்காகக் காத்திருக்கிறாளா, அல்லது ஒரு படி மேலே போய் அவளது சந்தேகங்கள் பிடிவாதங்களையெல்லாம் உடைத்துக்கொண்டு அவளாகவே தனக்குக் கால் செய்யும் அளவிற்கு அவளது நெஞ்சுக்குள் காதல் தவிப்பு கூடுகிறதா என்று பார்க்க அவன் ஆசைப்பட்டான்.
அதனாலேயே மனதில் தவிப்பு கூடி அவை இருப்புக் கொள்ள முடியாமல் செய்த போதும், தன வீட்டிலேயே இருந்த ஜிம்மில் உடல் சோர்ந்து தோய்ந்து போகுமளவுக்கு உடற்பயிற்சி செய்தான், தன்னைத் தானே வேளைகளில் ஆழ்த்திக் கொண்டாள் நிலாவை நினைப்பதைத் தவிர்ஹ்த்துவிடலாம் என்று தப்புக்கணக்குப் போட்டான், ஆனால் அவன் செய்யும் ஓவ்வொரு செயலிலும், அவள் நினைவு வந்து அவனை வாட்டியது.
ஆனாலும் கட்டுப்படுத்திக் கொண்டான் விஷ்வா. அவனது நினைவுகளில் நிலாவின் மிரண்ட விழிகள் மட்டுமே வந்துபோயின. போனை எடுத்து டைப் செய்யப் போகும்போதெல்லாம், 
“வேண்டாம் விஷ்வா… இன்னும் கொஞ்ச நேரம் தவிக்கட்டும். அவளுக்குள் இருக்குற இந்த விஷ்வாவோட இம்பேக்ட் என்னன்னு அவளுக்கே புரியட்டும். அவளோட அந்த அழகான தவிப்போட எஃபெக்ட்டை நேர்ல பாக்கணும்!”
என்று தனக்குத்தானே புன்னகைத்துக் கொண்டு, அவளுக்குள் தன் மீதான எதிர்பார்ப்பை இன்னும் சற்றே அதிகமாக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டுத் தன்னைத் தடுத்துக் கொண்டு கால் செய்யாமல் மௌனம் காத்தான்.
அன்றைய நாளின் முடிவில், அந்த மௌனப் போரில் அகப்பட்டுத் தவித்த நிலா முற்றிலும் சோர்வடைந்து போனாள். அந்த விளக்கங்களற்ற மௌனம் அவளுக்குள் ஒரு பெரும் ஏமாற்றத்தை வாரி இறைத்தது.
“நேத்து நைட் நம்ம வீட்டு மொட்டை மாடியில நடந்தது எல்லாமே நிஜம்தானா… இல்லை என்னோட கற்பனையா? அந்த நியூர ஹெட்பேண்ட் என்னோட மனசை ரொம்ப பாதிச்சிடுச்சோ? அதான் இப்போ அது இல்லாமலே விஷ்வாவைப் பாக்குற மாதிரி கற்பனை எல்லாம் வருதோ? ஜாதிமல்லிப் பந்தலுக்கு கீழ அவரைப் பார்த்தது, அந்த அணைப்பு, அந்தக் காதல், அவரோட விரல் தீண்டலும் வெறும் கனவுதானா?” என்று அவளது மனம் குழம்பித் தவித்தது. 
ஏமாற்றத்தின் வலி தாங்காமல் அவளுக்குக் கண்ணீர் முட்டியது. அடுத்த நாள் காலை, இனி அவனது நினைவே வேண்டாம் என்று தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு, வழக்கம் போல் அவள் ஆபீஸுக்குக் கிளம்பினாள் — அவளது காதல் அவளை நோக்கி ஒரு புதிய திருப்பத்தைத் தயார் செய்து வைத்திருக்கிறது என்பதை அறியாமலேயே!
நேற்று இரவு முழுக்க அவளது தூக்கத்தைக் கெடுத்துவிட்டு, இன்று ஒரு மெசேஜ் கூட அனுப்பாமல் ஆள் அட்ரஸே இல்லாமல் இருக்கிறானே என்கிற செல்லக் கோபமும் ஏமாற்றமும் அவளை வாட்டின. அதையெல்லாம் பற்றி நினைத்துக் கூடப் பார்க்கக் கூடாது என்ற வைராக்கியத்துடன் 
“நிலா, கான்சன்ட்ரேட், நீ குட் கேர்ள்தானே, சமத்து புள்ளையா ஆஃபீஸ் வேலை பாக்கணும் புரியுதா, வேற எதைப் பத்தியும் யாரைப் பத்தியும் யோசிக்ககூடாது” என்று தனக்குத் தானே பெப் டாக் கொடுத்துக் கொண்டு வந்தவள் கண்ணில் அனன்யா பட அவளை பார்த்து வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டவள், 
“ஹ்ம்ம், துரோகம் நெறைஞ்ச உலகம் இது நிலாபாப்பா, ஃபிரெண்டோ லவ்வரோ… எவனையும் நம்பாத…” என்று அவள் காதில் கேட்கும்படியே சற்று உரக்கவே முணுமுணுத்த நிலா, தனது லேப்டாப்பை வெளியில் எடுத்து வைத்து லாகின் செய்யத் தொடங்கினாள்.
“எது லவ்வரா… விஷ்வாவா? இது எப்போ நடந்துது?” என்பது போல் அனன்யா ஆச்சரியத்துடன் நிலாவைப் பார்க்க, நிலாவும் திரும்பி அவளைப் பார்த்து ஒரு கோபக் கனல்  பார்வை வீச, அனன்யா சப்த நாடியும் ஒடுங்கி தா வேலையைப் பார்க்கத் தொடங்கினால்.
அதே நேரத்தில், தன் பங்களாவில் அமர்ந்திருந்த விஷ்வாவுக்கு இனியும் நில்லவைக் வைக்கக் கூடாது என்று தோன்றியது. உடனடியாக அவன் பிரவீனை அழைத்தான்.
“பிரவீன், நிலா ஆபீஸ்க்கு வந்துட்டாளா?” என்றான் அவனுக்கு அழைத்து ஹலோ கூடச் சொல்லாமல். விஷ்வாவின் கேள்வியில் கிலி பற்றிக் கொண்டது பிரவீனுக்கு, “மறுபடியுமா? விஷ்வா, வேணாண்டா, ஏதாவது பிரச்னையை இழுத்து விட்டுதாதடா… அந்தப் பொண்ணை டிஸ்டர்ப் பண்ணாத, இதை இப்படியே விட்டுடு,” என்றான் கெஞ்சும் குரலில்.
“பயப்படாதடா… நான் ஒன்னும் உன் ஆஃபீசுக்குல்லாம் வரமாட்டேன், நீ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு…” என்றான் விஷ்வா.
“அப்பாடா…” என்றிருந்தது பிரவீனுக்கு. மேஜையில் இருந்த இன்டர்காம் மூலம் அனன்யாவை அழைத்து விவரம் கேட்டவன், “ஆமாம்டா, நிலா வந்துட்டாங்க,” என்றான்.
“சரி, இப்போ நீ என்ன பண்ற, நிலாவைக் கூட்டிக்கிட்டு என் வீட்டுக்கு வர்ற…” என்றொரு குண்டைத் தூக்கிப் போட்டான் விஷ்வா.
“யப்பா டேய், நான் உயிரோட இருக்குறது உனக்குப் பிடிக்கலையா, ஏண்டா இப்புடி படுத்துற, அந்தப் பொண்ணு பாக்கத்தான் குட்டியா டெடி பியர் மாதிரி கியூட்டா இருக்கா, அவ கோபப்பட்டு முறைச்சா அப்படியே பேஸ்மென்ட் நடுங்குதுடா… பயமா இருக்கு” என்றான் பிரவீன் நண்பனின் அராஜகத்தை எதிர்க்கும் விதமாக.
நிலாவைப் பற்றி பிரவீன் பேசக் கேட்டதை ரசித்த விஷ்வா, “அதெல்லாம் எனக்குத் தெரியாது, நீ கூட்டிட்டு வா நிலவை, இல்லைன்னா அவளைப் பாக்க நான் அங்க வருவேன்… பரவால்லையா?” என்று பிளாக்மெயில் செய்தான் விஷ்வா. சீரியசாகப் பேசுவதுபோல் இருந்தாலும் அவர் குரலில் ஒருவித மகிழ்ச்சி தெரிந்தது. 
அதையும்விட முக்கியமாக, நிலவும் விஷ்வாவும் சந்தித்துக் கொண்டது யாருக்குமே தெரியாததால், அவர்களின் கலக்கம் இன்னும் அதிகரித்தது.
“ஐயோ, வேணாம் வேணாம், நானே கூப்பிட்டு வரேன், நீ வை ஃபோனை,” என்றான் பிரவீன்.
“அதெல்லாம் வேணாம், நீ அவகிட்ட பேசுறதை நான் கேக்கணும், உன் ஃபோனை ஆன்லையே வை,” என்றான் விஷ்வா, நிலா என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறியும் ஆவலில்.
தனது ஃபோனை மேஜை மீது அப்படியே கவிழ்த்து வைத்த பிரவீன், இண்டர்காம் மூலம் அனன்யாவையும் நிலாவையும் தன கேபினுக்குள் அழைத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!