பாறையில் மலர்ந்த தாமரையே! 27
மேலே நட்சத்திரம் கொட்டி கிடக்கும் வானம்.. கீழே நிலவொளி பிரதிபலிப்பில் செம்மண் கலந்து தங்கத்தை உருக்கி வார்த்தது போல் தகதகக்கும் ஏரி.
சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டான் வேணு..! “உங்களுக்கு?” என சிகரெட் பாக்கெட்டை வாத்சல்யனிடம் நீட்ட.. சிரித்துக் கொண்டே “வேண்டாம் பழக்கமில்ல!” என மறுத்தான் அவன்.
“உங்க பர்சனல் விஷயங்கள்ல நான் தலையிடறதா தப்பா நினைக்க வேண்டாம்..” மெதுவாக பேச்சை ஆரம்பித்தான் வாத்சா..!
“பரவாயில்லை சார்.. எங்க குடும்பத்துக்காக எவ்வளவோ உதவி செய்யறீங்க..! நீங்க என்ன வேணாலும் கேட்கலாம் கேளுங்க..!” புகையை வெளியிட்டபடி வேணு!
Advertisement
“இப்படி தினமும் குடிச்சுட்டு வர்றதும் பொண்டாட்டிய போட்டு அடிக்கிறதும் சரின்னு தோணுதா உங்களுக்கு..?”
“தினமும் குடிக்கிறதில்ல சார்.. மண்டையில பிரஷர் ஏறி பிரச்சினையெல்லாம் ஒன்னு சேர்ந்து நண்டா குடையும்போது வேற வழியில்லாம குடிக்கறேன்.. அப்புறம் இவ.. எப்ப பாரு பணம் பணம்னு என் உசுர வாங்கறா..! இவ தொல்லை தாங்க முடியாமத்தான் பாதி நாள் வீட்டுக்கே வர்றதில்ல.. மீதிநாள் இப்படி..! பசங்களுக்காகத்தான் பாக்கறேன் இல்லனா..” என்றவன் அத்தோடு நிறுத்திவிட்டு மீண்டும் சிகரட்டை புகைக்க தொடங்கினான்.
வாத்சல்யன் பதில் பேசாமல் மௌனம் காக்க அவனே தொடர்ந்தான்.
Advertisement
“வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகணும்னா.. வசதியானவங்க இருக்கற ஏரியாவுல குடி போகணும்னு அவதான் சொன்னா செஞ்சேன். பசங்கள பெரிய ஸ்கூல்ல சேர்க்கணும்னு சொன்னா.. அதையும் செஞ்சு தொலைச்சேன்.”
Advertisement
வாத்சல்யன் சிரித்தான். “வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகணும்னு பசங்கள பெரிய ஸ்கூல்ல சேர்த்தது.. பெரிய வீடு பார்த்தது எல்லாம் ஓகே தான். ஆனா வருமானத்துக்கு வழி பண்ணணுமே..?”
“அதுக்குத்தான் சார் முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.. எங்க..? என் எதிர்காலம் முன்ன போனா முட்டுது.. பின்ன போனா உதைக்குது.. இப்ப வேலை செய்யற கம்பெனியில சம்பளத்தை புடிச்சு வச்சுக்கிட்டு பிரச்சனை பண்றானுங்க.. கேட்டா நஷ்டக் கணக்கு காட்டறானுங்க.. இவகிட்ட இந்த எழவையெல்லாம் சொல்லி புலம்பினா.. எதையும் புரிஞ்சுக்காம காட்டு கத்து கத்தறா.. நான் என்னதான் சார் பண்ண முடியும்..! இந்த வயசுல இன்னொரு கம்பெனிக்கு வேலைக்கு போய் மறுபடியும் முதல்லருந்து ஆரம்பிச்சு எப்ப முன்னேறி வர்றது..! எப்படி சமாளிக்க போறேன்னு நினைச்சாலே தலை சுத்துது சார்.”
“வேணு.. கவலைப்பட்டா ஆச்சா..! நீங்க யோசிக்கற மாதிரிதானே உங்க மனைவியும் யோசிச்சு கவலைப்படுவாங்க.. உங்களுக்கு இருக்கற அதே டென்ஷன்தானே அவங்களுக்கும்.. குடும்பத்தையும் பராமரிச்சு பிள்ளைகளையும் பார்த்துக்கிட்டு வேலைக்கும் போயிட்டு வர்றவங்களுக்கு எவ்வளவு மன உளைச்சல் இருக்கும்னு யோசிச்சு பாத்தீங்களா..?”
Advertisement
வேணு பதில் பேசாமல் வாத்சா சொன்னதை காதில் வாங்கியபடி புகைத்துக் கொண்டிருந்தான்.
“நீங்க கொஞ்சம் தோள் கொடுக்கணும்னு அவங்க எதிர்பார்க்கறது நியாயம்தானே! உங்க கஷ்டத்த சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்கன்னு கோபப்படுறீங்களே.. அவங்களுக்கும் உங்களை விட வேற யாரு இருக்காங்க.. பணப்பிரச்சனையைப் பத்தி ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசி முடிவெடுக்கணும்.”
“ஐயோ அதுதான் சார் பிரச்சனை.. நான் சொல்றத காது கொடுத்து கேட்கவே மாட்டேங்கறா.. எதுக்கெடுத்தாலும் மூஞ்சிய விகாரமா வச்சுக்கிட்டு வாள்.. வாள்ன்னு கத்த ஆரம்பிச்சுட்டா அப்புறம் எப்படி பொறுமையா பேசறது சொல்லுங்க..! குழந்தைகளுக்காகத்தான் பொறுத்துக்கறேன்.. ஆனா இந்த பசங்க அதுக்கு மேல.. கொஞ்சங்கூட சரியில்ல.. எது சொன்னாலும் எதிர்த்து எதிர்த்து பேசுதுங்க..! அவ்வளவு கஷ்டப்பட்டு ஃபீஸ் கட்டறோம் ஆனா மார்க் ஒன்னும் உருப்படியில்ல..! ஏன் ரெண்டு பேரும் இவ்வளவு கம்மியா மார்க் வாங்கியிருக்கீங்கன்னு கேட்டா பதில் பேசாம அலட்சியமா பாக்குதுங்க.. கோவத்துல ரெண்டு பேரையும் அடிச்சு வெளுத்துட்டேன்.”
“பாருங்க இதுதான் நீங்க பண்ற தப்பு..! நீங்க ரெண்டு பேரும் எப்ப பாரு சண்டை போட்டுக்கிட்டே இருந்தா அவங்க எப்படி ஒழுங்கா படிப்பாங்க.. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க வேண்டியது உங்க கடமை இல்லையா..?”
“எல்லாம் மனசுக்கு புரியுது சார்.. ஆனா கோபம் வந்தா என்ன பண்றேன் என்ன பேசறேன்னு ஒன்னும் தெரிய மாட்டேங்குது..! குடும்பத்தை பொறுப்பா நடத்தணும் குழந்தைகளை ஒழுங்கா வளக்கணும்னு எனக்கும் ஆசைதான்.. ஆனா அதுக்கேத்த வசதி இல்ல சார்..! கம்பெனியில் ஒழுங்கா சம்பளம் கொடுத்த வரைக்கும்.. வீட்ல எந்த பிரச்சினையும் வந்ததில்லை! இப்பதான் எங்களுக்கு கொஞ்சம் நேரம் சரியில்லை.. திடீர்னு கம்பெனியை விட்டு போக சொல்லிட்டா என்ன பண்றதுன்னு தெரியல.. ஒரு கால் டாக்ஸி வாங்கி ஓட்டணும்னு ஐடியால இருக்கேன் சார்.. ஊபர்.. ஓலாவோட கொலாபரேட் பண்ணிக்கிட்டா.. கொஞ்சம் நல்லா சம்பாதிக்கலாம்னு நினைக்கிறேன்..! லோனுக்கு அப்ளை பண்ணனும்..! என்ன பண்றது.. எங்க போறது ஒன்னும் புரியல..!”
“லோன் வாங்க நான் ஹெல்ப் பண்றேன்..!”
“சார்..?” கண்கள் விரித்து அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக அவன் பக்கம் திரும்பினான் வேணு.
தெரிந்தவர்கள் நண்பர்கள் உறவினர் என அனைவரிடமும் இந்த லோன் விஷயம் பற்றி சொல்லி உதவி கேட்டிருக்கிறான் வேணு.. கண்டுங்காணாமலும் கடந்து போனவர்களும் கையை விரித்தவர்களும்தான் அதிகம்.. சிலர் பார்க்கலாம் என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார்கள்.. பல ஃபோன் எடுப்பதே இல்லை..!
வாத்சல்யனிடம் பணம் கறக்க வேண்டும்.. அல்லது உதவி கேட்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தன் மனதிலிருப்பதை கொட்டி தீர்க்கவில்லை வேணு..
ஏதோ ஒரு ஆற்றாமையில் புலம்பி கொண்டிருந்த நிலையில் திடீரென நான் உனக்கு உதவி செய்கிறேன் என்று நட்புக்கரம் நீட்டினால் அதிர்ச்சியும் வியப்பும் எழத்தானே செய்யும்.
பேச மறந்து செயலற்று நிற்கிறான் வேணு..
“ஆறுதலுக்காக இதை சொல்லல.. உண்மையாவே உங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்னு தோணுச்சு..!”
சிகரெட்டை அவசரமாக கீழே போட்டு காலால் நசுக்கி விட்டு.. வாத்சல்யனின் கைகளைப் பிடித்துக் கொண்டான் வேணு..
“ஆனா ஒன்னு.. லோன் எடுத்து கார் வாங்கின பிறகு பொறுப்பா குடும்பத்தை பாக்கணும்.. லோன் ஒழுங்கா கட்டனும்.. மறுபடி குடிச்சிட்டு வீட்டுக்கு வராம.. ஊர் சுத்த கூடாது.. நான் எனக்கு வேண்டியவங்களுக்கு உதவி செய்வேன்.. துணையா இருப்பேன்.. ஆனா என்னை ஏமாத்தணும்னு நினைக்கிறவங்கள என்ன வேணாலும் பண்ணுவேன்..!” இறுதி வார்த்தைகள் மிரட்டின.
“சத்தியமா ஏமாத்த மாட்டேன் சார்.. திக்கு தெரியாத திசையில கிடைச்ச கலங்கரை விளக்கம் மாதிரி நீங்க..! நிச்சயமாக கடினமா உழைப்பேன்.. பொறுப்புன்னு வந்துட்ட பிறகு இந்த குடி பக்கம் போகவே மாட்டேன்.”
“அப்புறம் உங்க மனைவி..?”
“பணக்கஷ்டம் பிரச்சனையெல்லாம் தீர்ந்து போயிட்டா எங்க ரெண்டு பேருக்கும் சண்டை போட வேண்டிய அவசியமே இல்லையே சார்..!”
“அவங்க சண்டை போட்டு கத்தினாலும் நீங்க பேசி புரிய வைங்க வேணு..! உங்களுக்கு கோவம் வந்தா சண்டை போடறீங்க, கைநீட்டி அடிக்கறீங்க.. வீட்டை விட்டு வெளியே போய் குடிச்சிட்டு ஊர் சுத்தறீங்க..! அவங்க பாவம்.. குடும்பம் குழந்தையின்னு அந்த வீட்டுக்குள்ளேயே சுத்தி சுத்தி வரணுமே.. முதல்ல நீங்க ரெண்டு பேரும் குழந்தைகளோட நிறைய நேரம் செலவிடுங்க..!”
“புரியுது சார்.. இனிமே தப்பு வராத மாதிரி நடந்துக்கறேன்.”
“முத்துக்கு முத்தா மூணு குழந்தைகள் இருக்காங்க ஆனா உங்களுக்கு அருமை தெரியலையே..! கடவுள் எல்லாருக்கும் எல்லாத்தையும் அள்ளி கொடுத்துடறதில்ல..! இருக்கிறதை வைச்சு நாமதான் சந்தோஷமா வாழறதுக்கான வழியை தேடிக்கணும்..” இதைச் சொல்லும் போதே அவன் முகத்தில் சோகம் இழையோட வாத்சல்யன் எதைப் பற்றி பேசுகிறான் என வேணுவால் புரிந்து கொள்ள முடிந்தது..
“அப்படி சொல்லாதீங்க சார்.. உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும்.! கண்டிப்பா உங்களுக்கு குழந்தை பிறக்கும் சார்..” வேணு நெஞ்சை நிமிர்த்தி உறுதியான குரலில் சொல்ல.. வாத்சல்யனுக்கு உள்ளூர உறுத்தல்.
“உங்க மனைவிக்கு மூணு குழந்தைகளும் சிசேரியனாமே!”
“ஆ.. ஆமா சார்!” என்றவன் வாத்சல்யன் எதற்காக இது குறித்து கேட்கிறான் என்ற ரீதியில் விழித்தான்.
“தேவையில்லாம எல்லை மீறி பேசறதா நினைக்க வேண்டாம்.. மீனாட்சி எனக்கு தங்கச்சி மாதிரி.. அந்த உரிமையில சொல்றேன்.. குழந்தை பிறக்கும் போது முதுகு தண்டுல ஊசி குத்தற அந்த வலி காலம் முழுக்க உயிரை வாட்டி எடுத்துடும்னு கேள்விப்பட்டிருக்கேன்.. வீட்டு வேலை செய்ய முடியல.. முதுகு வலி.. மன உளைச்சல்.. வேலைக்கு போகணும் குழந்தைங்கள பாக்கணும்.. இதுல பணக்கஷ்டம் வேறன்னு மீனாட்சி.. என் பொண்டாட்டி லக்ஷ்மிகிட்ட சொல்லி வருத்தப்பட்டுருக்காங்க..!”
“சா..ர்?”
“ஆம்பளைங்களுக்கு உழைச்சு களைச்சு வர்ற அசதி மட்டும்தான்… ஆனா பொம்பளைங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள்.. அவங்க கத்தறாங்க சண்டை போடுறாங்கன்னா அவ்வளவு மன உளைச்சல் வலியில இருக்கிறாங்கன்னு நீங்க புரிஞ்சுக்கணும்.. அந்த நேரத்துல நீங்களும் தாங்கி பிடிக்கலைனா அவங்க என்ன பண்ணுவாங்க பாவம்..!”
“நான் ஒன்னும் இரக்கமில்லாதவன் இல்ல சார்.. பொண்டாட்டி மேல எனக்கும் பாசம் உண்டு.. அவ கஷ்டப்படும்போது எத்தனையோ நாள் இதையெல்லாம் யோசிச்சுப் பார்த்து அவளுக்காக வருத்தப்பட்டுருக்கேன்.. ஆனா டென்ஷன்ல என்ன பேசறேன் என்ன பண்றேன்னு ஒன்னும் புரிய மாட்டேங்குது.”
“வருத்தப்பட்டா போதாது வேணு.. உதவி செய்யணும்.. ரெண்டு பேரும் வேலைகளை பகிர்ந்துக்கோங்க.. மனசுல இருக்கறதை ஓப்பனா ஷேர் பண்ணிக்கோங்க.. நீங்க சந்தோஷமா இருந்தீங்கன்னா குழந்தை நிச்சயமா மாறுவாங்க..!”
“ரொம்ப ரொம்ப நன்றி சார்.. மனசு இப்பதான் தெளிவா இருக்கு.!” பேச்சுக்காக சொல்ல வில்லை வேணு.. மனதார பேசுகிறான் என வாத்சல்யன் புரிந்து கொண்டான்.
“இனி வீட்டுக்கு வெளியே நின்னு சண்டை போட மாட்டீங்களே..!”
“சண்டையே போட மாட்டேன் சார் அவ அடிச்சா கூட வாங்கிக்கறேன் போதுமா..?”
வாத்சல்யன் சிரித்தான்..!
“போகலாமா..!” இருவருமாக அங்கிருந்து பைக்கில் கிளம்பினார்கள்.
“இப்ப ரெண்டு பேரும் அழறதை நிறுத்த போறீங்களா இல்லையா..?” லஷ்மி செல்லமாக அதட்டிய பிறகும் கூட.. விசித்து விசித்து அழுகையோடு திணறிக் கொண்டிருந்தனர் வினோத்தும் நந்தினியும்.
“அழாம இருந்தா உங்க ரெண்டு பேரையும் நாளைக்கு கடைக்கு கூட்டிட்டு போய் ஐஸ்கிரீம் வாங்கி தரலாம்னு நினைச்சேன்..!” எங்கோ பார்த்தபடி லக்ஷ்மி சொல்ல அந்த டெக்னிக் வேலை செய்தது.
அவசரமாக இருவரும் கண்களை துடைத்துக் கொண்டனர்.
இப்போது அவர்கள் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் லஷ்மி..!
“அம்மா அப்பா அப்படிதான்.. ஏதோ வேலை டென்ஷன்..! சண்டை போட்டுப்பாங்க அப்புறம் சேத்துக்குவாங்க.. அதையெல்லாம் பார்த்து நீங்க அழலாமா..?”
“போங்க ஆன்ட்டி..! அப்பாவும் அம்மாவும் எப்ப பாரு சண்டை மட்டுந்தான் போட்டுட்டுதான் இருக்காங்க.. அந்த கோவத்துல எங்களையும் அடிக்கறாங்க திட்டறாங்க..! அந்த வீட்ல இருக்கவே எங்களுக்கு பிடிக்கல..!” நந்தினி விம்மலோடு இப்படி சொல்லவும் திடுக்கிட்டு போனாள் லஷ்மி.
“அப்பாவுக்கு அம்மாவுக்கும் ஆயிரத்தெட்டு டென்ஷன்.. ஆனாலும் கூட உங்கள நல்லாத்தான பாத்துக்கறாங்க..!”
“இல்ல..! எங்கள நல்லா பாத்துக்கல.. எப்பவும் திட்டிக்கிட்டே இருக்காங்க..!” என்றான் வினோத்.
“இங்க பாருங்க..! சின்ன குழந்தைங்க படிக்கற வேலையை தவிர உங்களுக்கு பெருசா எந்த பொறுப்பும் இல்லை.. ஆனாலும் உங்களுக்கு எவ்வளவு கோவம் வருது.. அம்மா உங்களுக்கு எல்லாம் செஞ்சு வச்சிட்டு வேலைக்கு போகணும் வீட்டு வேலை பார்க்கணும்.. தீப்தி பாப்பாவை கவனிச்சுக்கணும். பாவம் உங்கம்மா எவ்வளவுதான் பார்க்க முடியும்.. அந்த டென்ஷன்ல ஏதோ கத்திட்டு போறாங்க..!” என்ற போதும் பிள்ளைகள் சமாதானம் அடையவில்லை.
இருவரும் தலை கவிழ்ந்து அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு.. சில கணங்கள் யோசித்தவள் பிறகு மேலும் தொடர்ந்தாள்.
“இந்த பிரச்சினையை தடுக்க ஒரு வழி இருக்கு.. ஆனா அதுக்கு நீங்க முயற்சி பண்ணுவீங்களானு தெரியலையே..?”
“என்ன பண்ணனும் ஆன்ட்டி..?”
“நீங்க ரெண்டு பேரும் இன்னும் சின்ன குழந்தைங்க இல்ல.. நல்லது கெட்டது புரிஞ்சுக்கற அளவுக்கு பெரிய பசங்களாகிட்டீங்க.. அம்மாவுக்கு நிறைய வேலை.. அதை சமாளிக்க முடியாம போகும்போது கோவம் வருது டென்ஷனாகிடறாங்க.. நீங்க நினைச்சா வீட்டு வேலைகளை அவங்களோட பகிர்ந்துக்கலாம்..”
“நாங்க என்ன செய்ய முடியும் ஆன்ட்டி..!”
“நந்தினி நீ அம்மாவுக்கு வீடு பெருக்கி கொடுக்கலாம்.. பொருட்களை அடுக்கி வச்சு வீட்டை சுத்தம் பண்ணலாம். தீப்தி பாப்பாவை பாத்துக்கலாம். அம்மாவோட அன்பா அனுசரனையா உட்கார்ந்து பேசலாம்.. அப்புறம் நீ வினோத்.. அம்மாவுக்கு அடிக்கடி கடைக்கு போய் தேவையான பொருளை வாங்கிட்டு வந்து கொடுக்கலாம்.. அம்மா துணி துவைச்சா நீ கொண்டுபோய் காய போடலாம். அவங்க களைச்சு உட்காரும்போது கைகால் பிடிச்சு விடலாம்.. இன்னும் எவ்வளவோ உதவி பண்ணலாம்.”
“இதெல்லாம் செஞ்சா அம்மா எங்களை இனிமே திட்ட மாட்டாங்களா..?”
“நிச்சயமா திட்ட மாட்டாங்க..! நீங்க உதவி செஞ்சா அம்மாவுக்கு வீட்டு வேலை குறைஞ்சிடும்.. கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். மனசு ரிலாக்ஸ் ஆகும்.. அச்சோ என் பிள்ளைங்க எனக்கு எவ்வளவு உதவி செய்றாங்கன்னு உங்க மேல அன்பு கூடும். ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க அப்புறம் நீங்களே ஓடிவந்து எனக்கு நன்றி சொல்வீங்க..!” லக்ஷ்மி சொல்ல பிள்ளைகள் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தன.
“இங்கே வீட்டுக்கு வந்தான் வேணு..!”
சோபாவின் மேல் கால்களை தூக்கி வைத்தபடி குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தாள் மீனாட்சி. வேணு குளித்துவிட்டு அவள் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டான்.
சில நிமிடங்களாய் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
“இந்த கம்பெனியில இனிமே சம்பளம் தருவாங்கன்னு தோணல மீனாட்சி..”
மீனாட்சி அமைதியாக இருந்தாள்
“கார் வாங்கி ஓட்டலாம்னு இருக்கேன்..!” என்றதும் அவள் பார்வை கணவனின் பக்கம் திரும்பியது.
“வாத்சல்யன் சார் ஹெல்ப் பண்றேன்னு சொன்னார்.. கண்டிப்பா நம்ம நிலைமை மாறும்.. அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருடி..! எனக்கும் பொறுப்பிருக்கு.. நானும் உங்க எல்லாரையும் நல்லபடியா வச்சுக்கணும்னுதான் ஆசைப்படறேன்.. ஆனா எதுவுமே நடக்க மாட்டேங்குது..!”
“சாப்பிடறீங்களா..?”
“ஹான்..?” வேணு விழித்தான்..
“சாப்பாடு எடுத்து வைக்கறேன். வாங்க..” தலையைக் கொண்டையிட்டுக் கொண்டு அடுப்படிக்கு சென்றுவிட.. “குழந்தைங்க எங்கே..?” உட்கார்ந்த இடத்திலிருந்து கேட்டான் அவன்.
“லஷ்மியக்கா வந்து கூட்டிட்டு போய்ட்டாங்க..!” என்றாள் இவள் சமையலறையிலிருந்து.
ஹோவென கூச்சல்..!
வேணு வெளியே வந்து பார்த்தான்.
எதிர் வீட்டு மாடியின் ஜன்னலில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது
வாத்சா.. லஷ்மி.. குழந்தைகள் அங்கே உரக்க கத்திக் கொண்டிருக்க இங்கே இவனுக்கு மெல்லிய குரலாக உற்சாக உரையாடல்கள் காதுகளுக்குள் கேட்டது.
பக்கத்து வீடுகளுக்கு இந்த கலகலப்பும் மகிழ்ச்சியும் நிச்சயமாக நியூசன்ஸ்தான்.. ஆனால் வாத்சல்யன் லஷ்மியை பொறுத்தவரை குழந்தைகளும் குதுகலமுமாக இது ஒரு அழகிய இரவு.
வேணுவைப் பொறுத்தவரை.. இத்தனை வருடங்களில் அவன் வாழாமல் தவறவிட்ட ஒரு பொக்கிஷ தருணம்.
வாத்சா பக்கத்தில் வினோத்தும் லஷ்மியின் அருகே நந்தினியும் விளையாடிய களைப்பில் அயர்ந்து உறங்கிப் போயிருக்க.. அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தபடி விழித்திருந்தனர்..
வாத்சல்யனின் பார்வை லஷ்மியை காதலாய் ஊடுவியது.. அவன் கரம் நீட்ட.. இவள் தன் கரத்தை கோர்த்துக் கொண்டாள்.
சேர்ந்திருந்த இரு கரங்களும் பிள்ளைகளை அணைத்துக்கொள்ள.. பெரியவர்கள் விழிகளை மூடினார்கள் உறக்கத்திற்காக..!
காதலாய் கூடி களித்திருந்தால் கூட இப்படி ஒரு சந்தோஷத்தை அனுபவித்திருப்பார்களா தெரியாது.. இப்போது இருவரின் மனமும் நிறைந்து போயிருந்தது.
- தொடரும்.
