Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

73. வேணு கானமிதுContest Stories 2026

கானம் 20

அத்தியாயம்: 20

 காரின் கண்ணாடி தடுப்பை, ஏற்றி இறக்கும் பட்டனை அழுத்தியபடி சத்தமில்லாமல் அமர்ந்திருந்தாள் அதிதி.



Advertisement

அவளை அப்படிப் பார்க்க மனம் தாங்கவில்லை பத்ரிக்கு. அவளின் அதீத அமைதி பயத்தைத் தந்தது.

எத்தனை முயன்றும் அவள் பத்ரியை நெருங்க விடவில்லை. அவன் மீது ஏதோ கோபம். அவனிடம் மனம் விட்டுப் பேசவில்லை.

Advertisement

Advertisement

அவளைப் புரிந்து கொள்ளத்தான் வேலையை டெல்லியில் இருந்து சென்னைக்கு மாற்றச் சொல்லிவிட்டு வந்தான்‌. பள்ளிக்கு அவனே அழைத்துச் சென்றான். அவளுக்குப் பிடித்த இடங்களுக்குக் கூட்டிச் சென்றான். ரிதன்யா சொன்னது போல் அவனின் நேரத்தை அவளுடன் செலவிட்டான்.

இதோ இப்பொழுது கூட கோவளம் கடற்கரைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement

அதிதி, எப்பொழுதுமே பதிலுக்குப் பதில் பேசமாட்டாள் தான். அப்படிப் பேசியதெல்லாம் அவளின் சிறு வயதில். அவனை உரிமையுடன் அடித்து கொஞ்சி கெஞ்சி விளையாடிய பருவம் அது. தலை முடியைப் பிய்த்து எடுப்பாள். அதில் ஸ்பைக் வைத்து விடுவாள். ரெண்டைக் குடும்மி போட்டு போட்டோ கூட எடுத்து வைத்திருக்கிறான் அவளுடன்.

வாட்டர் பலூனில் தண்ணீரை நிரம்பி இருவரும் ஓடியாடி ஒருவர் மேல் மற்றொருவர் விளையாடிய காலமெல்லாம் வசந்தகாலமாக மின்னி மறைந்தது.

இப்பொழுது வளர்ந்து விட்டாள். அவ்வாறிருக்க அனுமதிப்பதில்லை என்பதை விட, ‘வளர்ந்து விட்டாய் இனியும் சிறு பிள்ளைத் தனமாக நடந்து கொள்ளாதே. பொறுப்பாய் இருக்க கற்றுக் கொள்.’ என்ற சீனிவாசனின் பேச்சால் மாறிப் போனாள். இல்லை தன்னை மாற்றிக் கொண்டாள். ஆனாலும் கைக் கால்களை உதறியபடி, கோபமாய்த் தன் அம்மம்மாவிடம் புகார் வாசித்து தன் வெறுப்பைக் காட்டத் தவறியதில்லை.

தாயுமில்லை தந்தையும் இல்லை என்றானபின் தாத்தா பாட்டி மட்டுமே அவளுக்கு. அவர்களாலும் எத்தனை காலத்திற்கு தான் அவளைத் தாங்க முடியும். காலம் ஓடிக் கொண்டே இருக்கிறது அல்லவா!

ஆதலால் அவளின் காலில் தான் அவள் இருக்க வேண்டும். அப்பொழுது தான் யாரும் உடன் இல்லையென்றாலும் தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும் திடமும் தைரியமும் அவளுக்கு வரும் என்று சீனிவாசன் அதிதிக்கு அதிக செல்லம் கொடுக்க அனுமதித்து இல்லை.

நவீன பேரண்டிங் முறையில், அனைவரும் இருந்தும் இல்லை என்ற சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவள் அவள். நான்கு வயது தொட்டு தனி அறை. அந்த வயதில் இருந்தே சுதாவின் உடல் நிலை காரணமாக அவளின் வேலையை அவள் தான் செய்து கொள்ளவேண்டும் என்று பழக்கி விட்டிருந்தார்.

அப்பொழுதெல்லாம் கல்லூரி முடித்து விட்டு வீடு வரும் பத்ரி தான், அவளின் குறும்புத் தனத்தைக் காட்ட சரியான ஆள். பெண் பிள்ளை அல்லவா அவனாலும் அவளை ஒரு கட்டத்திற்கு மேல் நெருங்க முடியாது போனது.

இவர்களின் உறவை யாரும் பிழையாக புரிந்து கொண்டு, தவறாக சித்தரிக்க கூடாது என்பதால் அவள் பருவம் ஏய்தியதும் தொட்டுப் பேச சீனிவாசன் அனுக்கவில்லை. அது அவனை விலக்கி வைத்தது அவளிடமிருந்து. பேச்சுக்கள் மட்டும் தான்.

அதுவும் தொடர்ந்து வந்த நாள்களில் மெல்ல மெல்ல மறைந்து போயிருந்தது எல்லாம். அதிலும் இந்த நான்கு நாட்களாக, அவன் பேச்சைத் தட்டாமல் கேட்கும் கிளிப் பிள்ளை போல் நடந்து கொள்ளப் பழகிக் கொண்டிருக்கிறாள். அவன் சேர்த்து விட்ட அத்தனை வகுப்புகளுக்கும், நேரம் தவறாது சென்று அமர்வதையே தன் தலையாயக் கடமை என்று ரீதியில் செய்து கொண்டிருக்கிறாள்.

இதோ இப்பொழுது கூட அப்படித்தான் இருக்கிறாள்.

கடற்கரையில் அலைகளுடன் விளையாடவில்லை. வா… என்று அழைத்தவனிடம், “காலெல்லாம் மண்ணாகும் மாமா. வேண்டாம்.” என்று காரில் இருந்தபடியே கடலை வேடிக்கைப் பார்த்தாள்.

நெடு தூர கார் பயணம் அவளுக்குப் பிடிக்கும் என்று நெடுஞ்சாலையில் காரை இறக்கி இலக்கில்லாது செலுத்தினான். இதுவரை எத்தனையோ முறை இருவரும் காரில் சென்றிருக்கின்றனர். ஒரு முறை கூட அது இத்தனை பேரமைதியாக இருந்தது இல்லை. ப்ளேயரில் பாடல் அலறும். அது கூடவே அவளும் பாடிக் கொண்டு, அவனையும் பாடச் சொல்லி, இருவரும் சேர்ந்தே பயணம் செல்வர்.

பதின்ம வயதைத் தொடும் யுவதிகளுக்கு அலைபேசி மட்டும் தான் எல்லாம். சாட்ஸ் பார்த்துக் கொண்டே வருவாள். அப்பொழுது சிலவற்றை அவனிடம் காட்டி,

“மாவய்யா… இதப் பாருங்களே… சிரிப்பா இருக்கு.” என்று சின்னதாய் சிரிப்பாள்.

இப்பொழுது எதுவும் செய்யாது நிசப்தமாக இருந்தது கார். எல்லாம் மாயமாகத் தெரிந்தது அவனுக்கு.

ரிதன்யாவிடம் பேசிய மறுநாளே, “என்னை மன்னிச்சிடுங்க மாமா. நான் தப்பு பண்ணிட்டேன். அம்மம்மா கார்டு டீடெயில்ஸ் குடுத்து பெரிய தப்பு பண்ணிட்டேன்.” என்று அழுதுகொண்டே செல் ஃபோன், வீடியோ கேம் செட் போன்ற நேரத்தை விழுங்கும் பொருள்களை எல்லாம் அவனின் முன் நீட்டினாள்.

“இனி உங்களுக்கு தலையிறக்கம் வர்ற மாதிரி நடந்துக்க மாட்டேன். என்னை மன்னிச்சிடுங்க மாமா.” என்றாள்.

ரிதன்யா தான் எதுவோ சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றியது.

ஆம், சொன்னால் தான்…

அன்று மாலையே பள்ளி மைதானத்தில் வைத்து, “எங்க இருந்து வந்தது இவ்ளோ தைரியம் உனக்கு. முன்னபின்ன தெரியாத ஒருத்தனுக்கு எந்த நம்பிக்கைல கார்டு டிடயில்ஸ்ஸ ஃபோட்டோ எடுத்து அனுப்பிருக்க?” என்று கோபத்துடன் கேட்டாள்.

“அது உங்களுக்கு தேவையில்லாதது.” என்று அன்று போல் இன்றும் சொன்ன அதிதி கன்னத்தைத் தாங்கி நின்றாள் மறுகணமே.

ஆம் அடித்து விட்டாள் ரிதன்யா.

“உம்மேல நம்பிக்க வச்சவங்களுக்கு நீ காட்டுற விஷ்வாசம் இது தானா? உம்மாமாவும் உன் பாட்டியும் உனக்கு எந்தக் குறையும் வந்திடக்கூடாதுன்னு பாத்து பாத்து கவனிக்கிறாங்க… அவங்களுக்கு நீ நன்றியோட இருக்க வேண்டாம். இப்படித் துரோகம் பண்ணாமலாவது இருக்கணும்.”

“நான் ஒன்னும் துரோகம் பண்ணல. ஏமாந்திட்டேன். நல்ல எமாந்திட்டேன். என்னை ஏமாத்திட்டாங்க. நான் நம்பின ஆள் எல்லாம் என்னை ஏமாத்திட்டாங்க. நீங்க அவன், அம்மம்மா, மாமா அம்மான்னு எல்லாம் என்னை ஏமாத்திட்டீங்க.” என்றாள் கேவியபடி.

பார்க்கவே பாவமாக இருந்தது ரிதன்யாவிற்கு.

“இன்னைக்கு வந்து இத்தனை பேச்சு பேசுற நீங்க! இத்தனை நாள் எங்க போயிருந்தீங்க? நான் பேசலன்னதும் நீங்களும் ஒதுங்கித்தானப் போனிங்க. நான் எவ்ளோ தேடினேன் தெரியுமா உங்கள. உங்கள என்னோட அம்மா மாதிரி நினைச்சேன். ஆனா… ஆனா…. உங்களுக்கும் நான் முக்கியமில்லேல. நான் யாரோ தான… போங்க… எனக்கு யாரும் வேண்டாம். யாருக்கும் நான் வேண்டாம்.” என்று ரிதன்யாவைப் பிடித்து தள்ளி விட்டு, புலம்பத் தொடங்கிய சிறுமியை இழுத்தணைத்து ஆறுதல் கூறினாள்.

ரிதன்யாவிற்கு அவளின் உள்ளக் கொதிப்புப் புரியாமல் இல்லை.

நான் தேடிய அக்கறை, அன்பை நீங்கள் தந்து கொண்டிருந்தீர்கள். திடீரென விட்டுச் சென்றால் எப்படி… ஏன் என்னைப் பாதியில் விட்டுச் சென்றீர்கள்? என்ற கேள்வி சிறுமியின் வார்த்தைகளில் தொக்கிக் கொண்டு நின்றது.

இதுவரை அனுபவித்து வந்த கஷ்டங்கள் போதும். இனியாவது நிம்மதியாக மகளுடன் வாழவேண்டும் என்று நினைத்தவள், யாரும் தன்னையும் தன் ஒழுக்கத்தையும் குறை கூறாதபடி கவனமாக இருக்க நினைத்தாள். கணவன் இல்லாதவள். குடும்பத்தாரின் ஆதரவும் இல்லாதவள். அவள் செய்யும் சிறு தவறுகள் கூட பின்னாட்களில் அவளின் மகளின் எதிர்காலத்தை வளைத்து கேள்விக்குறியாக்க கூடும்.

ஏன் இவளின் மாமனே சொன்னானே… ஏமாற்றுக்காரி… கணவனுடன் அனுசரித்து வாழத் தெரியாதவள்.‌ அதிதியை வைத்து வீட்டிற்குள் நுழையப் பார்க்கிறாள் அது இது என்று. அதுபோன்ற விமர்சனங்கள் தன் மகளைத் துரத்தக் கூடாது என்று தான் விலகி இருக்க நினைத்தாள்.

இல்லை அது தவறு. அதிதியைக் கவனித்திருக்க வேண்டும். கொஞ்சமேனும் கவனித்திருக்க வேண்டும். அவள் ஒன்றும் சிறுமி அல்ல. பருவப் பெண். எடுத்துச் சொன்னால், சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு அதிதியிடம் முதிர்ச்சு உண்டு.

புரியவைத்தாள். தன் அவலநிலையை.

முள் சேலை என்று பழங்கதைகளைச் சொல்லி பெண்ணை மட்டும் பழிக்கும் சமூகம், குத்திக் கிழிக்கும் முள்ளைத் தூர எறிய என்றும் சொல்வதில்லை. முள்ளின் கூர் முனையை உடைத்தெறி என்றும் சொல்வதில்லை.

எல்லா குற்றச் சாட்டும் பெண் தலையில் தான் வந்து விழும். அப்படிப்பட்ட கால கட்டத்தில் இருந்து கொண்டு, கடைசிவரை உன்னுடன் இருப்பேன் என்ற பொய்யான வாக்கைத் தர இயலாது என்றாள்.

ரிதன்யா சொல்ல வருவது புரிந்தது அதிதிக்கும். ஆனாலும் மனத்திற்குள் சொல்லில் வடிக்க முடியாத எரிச்சல், கோபம், இயலாமை, கண்ணீர் என்று அதிதி அனைவரையும் வெறுக்கத் தொடங்கியிருந்தாள். அதை அவள்தான் செயலிலும் காட்ட,

“இவ யாரு எங்கள் ரெண்டு பேருக்கும் இடைல? அட்வைஸ் கேட்டா கேட்டத மட்டும் பண்ணிட்டு சும்மா இருக்க வேண்டியது தான். தேவையில்லாம என் பட்டர் பன் அடிச்சி… அழ வச்சிருக்கா!” என்றவனுக்குக் கோபம், வீங்கிச் சிவந்திருந்த தன் மருமகளின் இமைத் தடுப்புகளைப் பார்த்ததும்.

குடும்பம் தான் முதன்மை என்ற அவனின் உண்மையான குணம் தலை தூக்கி, ரிதன்யாவைப் பள்ளியில் சந்தித்து திட்டு விட்டு வந்திருந்தான்.

இருவருக்குள்ளும், முகத்தை நிமிர்ந்து பார்த்து புன்னகைக்கும் அளவிற்கு வளர்ந்திருந்த உறவு மீண்டும் ஒட்டாக நறுக்கப்பட்டது.

அதிதியின் வார்த்தைகளை ஆராய்ந்து பார்த்தவனுக்கு, செய்த பிழைக்கு வருந்தினாளே தவிர ஏன் செய்தேன் என்பதற்கான காரணத்தைச் சொல்லவில்லை என்றது புரிந்தது.

ரிதன்யா சொன்னது உண்மை தானா? தன்னைக் கண்டு பயப்படுகிறாளா? என்ன உணருகிறாள்?

எங்கு தவறினோம் என்று அவனுக்கு அவனே கேட்டுக் கொண்டான். தன்னைத் தாய்ப்‌போல் பார்த்துக் கொண்ட தமக்கையின் மகளை, சரிவர வளர்க்காது போய்விட்டோமோ என்று குற்ற உணர்வு அவனை ஆட்சி செய்தது.

திரும்பி தன் பட்டர் பன்னின் முகம் பார்த்தான். விழிகள் சாலையில் நிலை குத்தி நிற்க, கண்களில் ஒரு வித வெறுமை.

எப்படித் தங்களுக்குள் விழுந்திருக்கும் சிக்கலைப் பிரிப்பது என்ற யோசனையில் இருந்தான்.

சாலையில் விற்றுக் கொண்டிருந்த ஐஸ் கிரீம் வண்டியைப் பார்த்து முதுகுத் தண்டு விடைக்க எழுந்து அமர்ந்தாள். அது கடந்து செல்லும் வரை கழுத்தை அதன் பக்கமே வைத்திருந்தவள், சென்றதும் இருக்கையில் சாய்ந்தாள்.

மாலை நேரம்…

அதுவும் மேகம் மோடம் போட்டுக் கொண்டிருக்கிறது.

நிச்சயம் கேட்டால் வாங்கித் தரமாட்டான் என்பதால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்தாள்.

அவள் வாய்த்திறந்து தன் ஆசைகளைச் சொல்லாதது அவனுக்குச் சுருக்கென்று இருக்க, காரை ஓரங்கட்டி வாங்கிக் கொடுத்தான்.

“காய்ச்சல் வரும்னு சொல்வீங்க?” என்று கேள்வியோடு பார்க்க,

“கூப்பிட்டா எந்நேரமும் வீட்டுக்கு வர டாக்டர்ஸ் இருக்காங்க. சாப்பிடு.” என்றான். காரில் சாய்ந்து கொண்டு குழந்தை போல் ரசித்து உண்டவளை முதல் முதலில் கையில் ஏந்தியது நினைவிற்கு வந்தது.

“அக்காளுக்குக் குழந்த பிறந்திடுச்சி தம்பி… அதுவும் பெண் குழந்த.” என்று சீனிவாசன் தான் அவனது கல்லூரி விடுதிக்குத் தகவல் சொன்னார்.

“ஹாஸ்பிட்டல்ல சேத்ததும் எங்கிட்ட தான முதல்ல சொல்லிருக்கணும். ஏன் செல்லல?” என்று கோபத்தில் குதித்தவன், அடுத்த சில மணி நேரத்தில் அந்தப் பூஞ்சிட்டைப் பார்க்க பறந்த வந்து விட்டான்.

ரோஜாக் குவியலைத் துணியில் மொத்தமாக கட்டி தொட்டிலில் வைத்திருந்தனர். ஆசையும் ஆவலும் போட்டி போட்டுக் கொண்டு தள்ளி, அவளைத் தூக்கத் தெரியாது தூக்கி, குழந்தையை வீரிட்டு அழு வைத்து விட்டான்.

எப்படித் தூக்க வேண்டும் என்று பவானி பாடம் நடத்தினாள். அவள் சொன்னபடி அணைவாய், கழுத்தை வாகாக பிடித்துத் தூக்கினான். அழவில்லை குழந்தை. அவனுடன் ஒன்ற ஆரம்பித்த பின் அவனைத் தவிர மற்றாட்கள் தூக்கினால் அழுதது.

மருமகளைக் கன்னத்தோடு கன்னமாக அணைத்த படியே திரிந்தான். தொட்டிலில் அவள் தூங்கிய நாட்களைக் காட்டிலும் அவன் நெஞ்சில் தூங்கிய நாட்கள் தான் அநேகம். கல்லூரிக்குக் கூட செல்லாது அவளுடன் தான் இருப்பான். இரவில் உறங்காது அழுதால், பைக்கில் தூக்கி வைத்துக் கொண்டு சுற்றுவான்.

“மாமன்ட்ட வந்தா மட்டும் கெக்க போட்டு சிரிப்பா… எல்லாம் உனக்கு உன் மாமன் தானா…” என்று சுதா கேலியாக கேட்க, அதை அப்படியே பிடித்துக் கொண்டான்.

எல்லாம் நான் தான் என்று…

அப்பொழுதும் மட்டுமல்ல இப்பொழுதும் அப்படித்தான்.

கார் வீட்டை அடையும் போதே உணவு டெலிவரி செய்யும் இரு சக்கர வாகனம் வந்து நின்றது.

“ஐ…. பீசா…. வந்திடுச்சி… ரிதும்மா… வந்திடுச்சி… ஹே…” என்று கத்திக் கொண்டே படிக்கட்டில் அமர்ந்திருந்தவள், குதித்திறங்கினாள்.

காத்திருந்திருப்பாள் போலும்.

ஏற்கனவே ஆன்லயன் மூலம் காசு கொடுக்கப்பட்டிருந்ததால், டப்பாவை மட்டும் வாங்கிக் கொண்டு திரும்பினாள் சரிகா.

மாடியில் இருந்து மகளைப் பார்த்தபடி ரிதன்யா நிற்க, அவளைத் தன்னால் முடிந்த மட்டும் முறைத்தாள் அதிதி.

மருமகளின் உஷ்ணப் பார்வை பத்ரிக்குக் குளுகுளவென இருந்தது. தனக்கு மட்டுமல்ல அவளுக்கும் அதே நிலை தான். பாடம் கற்பித்த டீச்சரே தேர்ச்சி பெறுவாரா என்ற சந்தேக நிலைக்குத் தள்ளப்பட்டது குளுகுளுக்குக் காரணம்.

அதே இனிமையுடன் முகத்தைத் திருப்ப, சரிகா அவனைத் தீப் பார்வை பார்த்தாள்.

‘ஐயோ!! இந்த வாண்ட மறந்திட்டேனே!’ என்று பின் தலையில் தட்டிக் கொண்டவன், வீட்டிற்கு செல்ல எதானிக்க,

“பீசாவா!” என்று அதிதி தேங்கினாள்.

“ம்… பீசா தாங்கா… அதுவும் மூணு… மூணுமே எனக்கு மட்டும் தான். ஆக்சலி நான் நாலு கேட்டேன். ஆனா மூணு கோடு தான் கன்னத்துல இருக்கு. அதுனால மூணு தான் வாங்கித் தருவேன்னு சொல்டாங்க. அம்மா கணக்குல கொஞ்சம் வீக். ஐஞ்சி விரலால அடிச்சிட்டு… மூணு பீசா தான் வாங்கித் தந்திருக்காங்க.”

“ஓ… காலைல உன்ன அடிச்சதுக்குச் சமாதானம் செய்ய வாங்கித் தர்றாங்களா?” என்றபடி ரிதன்யாவைப் பார்த்தாள்.

“ஆமா ஆமா… ஆனா சமாதானமா இல்ல… தண்டனையா வாங்கித் தரணும்னு சண்டை போட்டு வாங்கிருக்கேன். இல்லன்னா அவங்க சாரியா நான் அக்சப்ட் பண்ண மாட்டேன்ல.” என்று டப்பாவை நுகர்ந்து பார்த்து சொல்ல, அதிதி வேகமாக வந்து டப்பாக்களை வாங்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினாள்.

“அக்கா… அது என்னிது…” என்று சிறுமி சினுங்க,

“இது என்னிது. என்னையும் உங்கம்மா அடிச்சிட்டாங்க. நாலு நாள் ஆச்சி. நான் எந்த வட்டியும் போடல. தண்டனையா இத மட்டும் நான் எடுத்துக்கிறேன். பதிலுக்கு… நான் சமாதானம் ஆகிட்டேன்னு உங்கம்மா கிட்ட சொல்லிடு.” என்று ரிதன்யாவைப் பார்த்து சொல்லியபடியே வீட்டிற்குள் செல்ல, ரிதன்யாவின் முகத்தில் குறுநகை படர்ந்தது.

“அம்மா… பீசா போச்சி… மறுபடியும் வாங்கித்தா…”

“நீ குடுத்த தண்டனைய நிறைவேத்திட்டேன். ஐ ஆம் டன்.” என்று இரு கையையும் தூக்கிக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.

பாவம் பீசா போன கவலையில் முகத்தைத் தொங்கப்போட்டார் போல் சரிகா நிற்க,

“சரி விடு பேரிக்கா… இன்னைக்கு இல்லன்னா இன்னொரு நாள்.” என்றபடி பத்ரி நகர, அவனின் முன் வந்து வழி மறித்து நின்றாள் சிறுமி.

“இன்னொரு நாள் இல்ல. நாளைக்கே எனக்கு வேணும். அதுவும் நீங்க தான் வாங்கித் தரணும்.”

‘நானா! எதுக்கு?’ என்பது போல் புருவங்களை உயர்த்த,‌

“இன்னைக்கி உங்களால எனக்குத் தான் லாஸ். காலைல அம்மாட்ட அடி… இப்ப பீசா… அதுனால எனக்கு பீசா நீங்க தான் வாங்கித் தரணும். நாளைக்கு இந்த நேரம் எனக்கு அது வேணும்.” என்று உத்தரவு போல் சொல்லி விட்டு அவனை முறைத்தபடியே, தன் இரு பக்க குதிரை வால்களும் காற்றில் அசைந்தாட ஓடிச் சென்றாள்.

அதிதி ரிதன்யாவை முறைத்தால் அதற்கு காரணம் தெரியும். சரிகா ஏன் பத்ரியை முறைக்க வேண்டும்.

கானம் இசைக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!