Skip to content
Post Views: 646
அலமேலு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போது, சமையலறையிலிருந்து அனைவருக்கும் பழரசம் கொண்டு வந்த லதாவை பார்த்து அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.
“அண்ணி, வழி மாறி கிச்சனுக்குள்ள போயிட்டீங்களா?” வசி கிண்டலடிக்க
Advertisement
“வழி தெரிஞ்சு தான் போனேன். போனது மட்டுமில்ல யூடியூப் பாத்து உங்க எல்லாருக்கும் நானே சமைச்சிருக்கேன்”
Advertisement
“ஏன்? எதுக்கு இந்த கொலைவெறி? இப்போ தான் ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்தோம், மறுபடியும் குடும்பத்தோட போய் அட்மிட் ஆகணுமா?” என்று வசி குறும்புடன் கேட்க,
Advertisement
“பாத்தீங்களா உங்க தம்பிய?” என்று லதா கணவனிடம் புகார் சொல்ல
Advertisement
“ஆரம்பிச்சிட்டீங்களா அண்ணியும் கொழுந்தனும்?” என்று சிரித்தான் சரவணன்.
“சரவணா, ரஞ்சிக்கு படிப்பு முடியப்போகுதில்ல? அவளுக்கு நல்ல வரனா பாத்துடணும்டா. அவளுக்கு கல்யாணம் பண்ணிட்டா என்னோட கடமை முடிஞ்சிடும். நான் நிம்மதியா போயிடுவேன்” என்றார் அலமேலு
“அப்படியெல்லாம் உன்னை நிம்மதியா போக விட்ருவோமா? என் அண்ணன் ரெண்டாவது ரிலீஸ் பண்ண போறான். அவனோடது ரெண்டு என்னாேடது நாலு, அப்புறம் ரஞ்சியோட குழந்தையும் நீ தான் வளர்க்கணும். முக்கியமா என் மாமனாரே எங்களுக்கு குழந்தையா வந்து பொறப்பாரு. அந்த குழந்தைக்கு நீதானேம்மா பணிவிடை செய்யணும்? அதுக்குள்ள போயிடுவேன்னு சொல்றே?” வசி கேட்க
“எனக்கு அந்த கொடுப்பினை இருந்தா கண்டிப்பா வளர்பேன்டா. சீக்கிரம் நல்ல செய்தி சொல்லு, முத்துமாணிக்கம் அண்ணனுக்கு செஞ்ச துரோகத்துக்கு அவர் பேரனுக்கு பணிவிடை செஞ்சு என்னோட பாவத்தை குறைக்க முயற்சி பண்றேன்”
“சீக்கிரம் நல்ல செய்தி வரும்” என்றபடி வசி மனைவியை கண்களால் தேடினான்.
ஆதிக் ஒரு இடத்தில் நிற்காமல் வீடெங்கும் ஓடிக் கொண்டிருக்க அவன் பின்னால் துள்ளி ஓடிக்கொண்டிருந்த தன் புள்ளிமானை அள்ளி கொண்டாட ஆசை துளிர்விட்டது. அவளை நோக்கி சென்றபோது அவள் வெற்றிகரமாக ஆதிக்கை தூக்கி தன் இடையில் வைத்துக் கொண்டாள்.
வசி ஆதிக்கை கொஞ்சுவது போல குனிந்து இருவருக்கும் மாறி மாறி தன் அன்பு முத்தங்களை அள்ளி வழங்கிவிட்டு எதுவும் தெரியாதது போல நகர்ந்து விட்டான். சின்னு சிலையென அதிர்ந்து விழிக்க, அவளை திரும்பி பார்த்து ஒற்றை கண்ணை சிமிட்டினான். அதில் செவ்வானமாக அவள் உடலும் முகமும் சிவந்து போக வசீகரனின் வசிய புன்னகையில் மயங்கி நின்றாள்.
லதாவும் சின்னபொண்ணும் இருவருமாக சேர்ந்து அனைவருக்கும் உணவு பறிமாறினர். சின்னபொண்ணு வசியின் அருகில் வந்து உணவு பறிமாறும் போதெல்லாம் யாருமறியாமல் அவள் இடையை கிள்ளுவது, கால் விரலை அழுத்துவது என்று வசி அவளை சீண்டிக் கொண்டே இருந்தான். அனைவரின் முன்பு அவன் சீண்டலை ஏற்கவும் முடியாமல் அதை ரசிக்கவும் முடியாமல் தவித்தவளின் கன்னங்கள் சிவந்து போயிருந்தது.
“நீங்களும் உட்கார்ந்து சாப்பிடுங்க” என்று அலமேலு சொல்லவும் இருவரும் அவரவர் கணவரின் அருகில் அமர்ந்து உண்ண தொடங்கியிருந்தனர். குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக பேசி சிரித்துக் கொண்டு உண்டதில் அவர்களின் வயிறும் மனதும் நிறைந்து போனது.
வசி அலமேலுவிடம் சீக்கிரம் நல்ல செய்தி வரும் என்று சொன்னதும், இன்றைய அவனின் தொடர் சீண்டலும் கள்ள பார்வையும் சின்னுவுக்குள் என்னென்னவோ எதிர்பார்ப்புகளை கிளப்பிவிட்டிருக்க, நாணத்துடன் அறைக்குள் சென்றாள்.
“சின்னு ஏன்டி இவ்வளவு லேட்? எவ்வளவு நேரமா உனக்காக காத்திட்டு இருக்கறது? அண்ணி வந்துட்டாங்க இல்ல, இனிமே கதவை சாத்தியே வை. இல்லனா ஆதிக் நடுராத்திரியில எழுந்து வந்து நம்மள டிஸ்டர்ப் பண்ணுவான்” என்று வசி அவசரமாக கதவை சாத்தி தாழிடவும், நாணத்துடன் தலை கவிழ்ந்தவளின் மனம் கட்டிலின் மீது பரப்பி வைக்கப்பட்ட புத்தகங்களை கண்டு முரண்டியது. நிமிர்ந்து கணவனை பார்த்தாள்.
“சின்னு, பிரிமிலினரி எக்ஸாம் நோட்டிபிகேஷன் வந்திருக்கு. காலேஜ் கடைசி செமஸ்டர் முடிஞ்சதும் எக்ஸாம். சோ ரெண்டுக்கும் நீ பிரிப்பேர் பண்ணனும் நமக்கு நேரமில்ல, நீ இப்பவே படிக்க ஆரம்பிச்சிடு, நான் ஆன்லைன்ல அப்ளை பண்ணிட்டு உன்கூட ஜாயின் பண்ணிக்கறேன்”
அவள் மெளனமாக கணவனை பார்த்தாள்.
‘எல்லாரும் இருக்கும் போது யாருக்கும் தெரியாம சீண்டிட்டே இருக்காரு, தனியா இருக்கும் போது இவர் தானா நம்மள சீண்டினதுனு டவுட் வர்ற மாதிரி சீரியசா இருக்காரே’
“என்ன சின்னு?” அவன் புருவம் உயர்த்த
எதுவுமில்லை என்பதாக தலையாட்டிவிட்டு கட்டிலில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தாள். வசீகரன் சொன்னது போலவே மடிக்கணிணியில் அரசுதேர்வுக்கு விண்ணப்பித்து விட்டு, அவளுடன் அமர்ந்து குறிப்புகளை எடுத்து கொடுக்க தொடங்கினான். நள்ளிரவு தாண்டும் போது சின்னபொண்ணு மிகவும் சோர்வாக இருக்கவும் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு அவனும் உறங்கினான்.
தினமும் இரவில் இருவரும் வெகுநேரம் விழித்து இருப்பதால் இருவரின் கண்கள் சிவந்து சோர்வாக இருந்தனர். சின்னபொண்ணு வகுப்பு நேரத்தில் சிலசமயம் தூங்கி விழவும் சரவணன் வசிக்கு போன் செய்தான்.
“டேய் வசி, அந்த பொண்ணை படுத்தி எடுக்காதடா”
“நான் என்னடா பண்ணேன்?” வசி புரியாமல் கேட்க
“தினம் பாக்கறேன், ரெண்டு பேரோட கண்ணும் சிவந்து போயிருக்கு, என்னை கேக்கறீயா? பைனல் எக்ஸாம் வேற வருதுடா. கிளாஸ் நேரத்துல அவளுக்கு தூக்கம் வருது போல, அடிக்கடி எழுந்து போய் முகம் கழுவிட்டு வர்றா”
“சரி இனிமே கொஞ்சம் சீக்கிரம் தூங்க விடறேன்”
“பாவம்டா அவ, சின்ன பொண்ணு தானே குழந்தைக்கு என்ன அவசரம்? அம்மாகிட்ட நல்ல செய்தி சொல்றேன்னு அந்த பொண்ணை போட்டு டார்ச்சர் பண்ணிட்டு இருக்காதே, எக்ஸாம் முடியறவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு”
இப்போது தான் சரவணனின் குற்றச்சாட்டு புரிய “எது? குழந்தைக்கு என்ன அவசரம்னு நீ என்னை கேக்கறீயா? வருஷத்துக்கு ஒண்ணுனு ரிலீஸ் பண்றவன்லாம் எனக்கு புத்தி சொல்ல கூடாதுடா. முதல் குழந்தை எழுந்து நடக்கறதுக்குள்ள இன்னொரு குழந்தைய ரெடி பண்ணிட்டு எனக்கு அட்வைஸ் பண்ண வந்துட்டான். என்ன கொடுமை சரவணா இது?” வசி கிண்டலடித்தான்.
‘இவன்கிட்ட பேசினா நம்ம மானம் தான் போகும்’ என்று சரவணன் நெற்றியை தேய்த்துக் கொண்டு பதில் பேசாமல் அழைப்பை துண்டித்தான்.
வசீகரனின் தூண்டுதலால் சின்னபொண்ணு கல்லூரியின் கடைசி தேர்வை எழுதி முடித்து, அதற்கு பின்பு வந்த முதல்நிலை அரசு தேர்வையும் நன்றாகவே எழுதியிருந்தாள். அதில் அவள் தேர்வு பெற்றதாக செய்தி வரவும், முதன்மை தேர்வுக்கான பயிற்சி மையத்தில் முழு நாளும் அவள் இருந்து படிக்கும்படி ஏற்பாடு செய்திருந்தான்.
அவளை அழைத்துக் கொண்டு வசி வீட்டுக்கு வந்தபோது வீட்டில் யாரோ விருந்தினர்கள் வந்திருப்பதை கண்டு குழப்பத்துடன் உள்ளே நுழைந்தான்.
“இவர் தான் சின்னபொண்ணு வூட்டுக்காரர்” என்று காவேரி யாரிடமோ அறிமுகம் செய்ய அவர்கள் அவனை பார்த்தனர். அவன் குழப்பத்துடன் மனைவியை பார்க்க, “மாமு, வெளிநாட்டுல தேவிகா, சந்திரானு ரெண்டு அக்காங்க இருக்கறதா சொல்லியிருக்கேன் இல்ல. அவங்க தான் வந்திருக்காங்க” என்று முணுமுணுத்தாளே தவிர அவர்கள் அருகில் செல்லாமல் கணவனின் பின்னால் நின்றாள்.
“வாங்க, என்ன திடீர்னு எல்லாரும் ஒண்ணா சேர்ந்து வந்திருக்கீங்க?”
“அப்பா இறந்ததும் எங்களால வர முடியல, இப்போ தான் பசங்களுக்கு லீவு கிடைச்சதுனு இந்தியாவுக்கு வந்தோம். அப்ப தான் சின்னபொண்ணுக்கு கல்யாணமாயிடுச்சுனு ஜமுனாவும் காவேரியும் சொன்னாங்க. அப்படியே பாத்துட்டு போகலாம்னு வந்தோம்” என்று சந்திரா சொல்ல,
“நல்லது, சின்னு, அவங்களுக்கு குடிக்க எதாச்சும் கொண்டா, அப்படியே எதாவது ஸ்பெஷலா சமைக்க சொல்லு” என்றான் மனைவியிடம்
“வந்தவங்களுக்கு இன்னுமா குடிக்க கொடுக்காம இருப்பேன்? அதெல்லாம் கொடுத்தாச்சு. சமையல் வேலைய லதா கூட இருந்து பாத்துக்கறா” என்ற அலமேலு, சின்ன மருமகளின் முகவாட்டத்தை பார்த்து, “தங்கம், ஏன்டா உன் மொகம் சோர்வா இருக்கு?” என்று அவளின் நாடியை பற்றி கேட்கவும், “லேசா தலை வலிக்குது அத்தே” என்றாள்.
“காளியப்பா, காபி கொண்டா” என்று அலமேலு குரல் கொடுத்துவிட்டு “எக்ஸாம் இப்போ தான் முடிஞ்சது. மே மாசம் வெயில் வேற, கொஞ்ச நாள் வீட்ல ரெஸ்ட் எடுக்கட்டும்னு சொன்னா டிரைனிங்னு அவளை ஏன்டா படுத்தறே” என்று மகனை முறைத்துவிட்டு மருமகளை தன்னருகே அமர்த்திக் கொண்டார்.
லதா காபியுடன் வருவதை கண்டு “நீ ஏம்மா வயித்த தள்ளிட்டு இதெல்லாம் எடுத்துட்டு வர்றே?” என்று பெரிய மருமகளையும் கடிந்தார்
“காளியண்ணே சமையல்ல பிசியா இருக்காரு அத்தை” என்ற லதா, சின்னபொண்ணிடம் காபியை கொடுத்து, “வேண்டா, காபி குடிச்சுட்டு முகம் கழுவிட்டு புது புடவை எடுத்து கட்டிட்டு வா. அதுக்குள்ள சாப்பாடு ரெடியாயிடும்” என்றாள்.
‘என்னக்கா நடக்குது இங்கே’ என்று காவேரியும் ஜமுனாவும் ஆச்சர்யத்துடன் வாயில் கைவைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“சரிக்கா” என்ற சின்னு காபியை வாங்கி கொண்டு, பொதுவாக நால்வரையும் பார்த்து, “அக்கா காபி குடிச்சீங்களா?” என்று கேட்டாள். நால்வரும் அவளை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டே தலையசைத்தனர்.
பின்பு சின்னபொண்ணு முகம் கழுவி உடை மாற்ற சென்று விட, வசீகரன் சின்னுவின் மூத்த அக்காக்களின் வசிப்பிடம் வேலை பற்றி பொதுவாக பேசிக் கொண்டிருந்தான். சின்னுவும் தயாராகி வந்ததும் அனைவரையும் சாப்பாட்டு மேஜையில் அமரவைத்து லதாவும் அலமேலுவும் உணவு பரிமாறினார்கள்.
சின்னபொண்ணு அக்காக்களிடம் பொதுவான நலம் விசாரிப்புகளை கேட்க, அவர்களும் அவளுக்கு பதில் சொல்லிக் கொண்டே அந்த வீட்டினர் வேண்டாவை வேண்டி கவனிப்பதை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அலமேலு சாப்பாடு வைக்க, “அத்தே போதும்” என்று சிணுங்கினாள்
“சின்னபொண்ணாவே இருந்துடுவியா? நல்லா சாப்பிட்டா தானே உடம்பு நல்லாயிருக்கும்” என்று அவளை திட்டிக் கொண்டே உணவை பறிமாறினார். அவரின் பேச்சில் அவள் மீதான அக்கறை நன்றாகவே தெரிந்தது.
சாப்பாட்டு முடிந்ததும் நால்வரும் சின்னபொண்ணுவை தனியாக அழைத்து சென்றனர், “வேண்டா, போன முறை வந்தப்போ வேண்டாத மருமகளா இருந்தே, இப்போ எப்படிடி வேண்டிய மருமகளாயிட்டே? உன் மாமியாரும் ஓரகத்தியும் உன்கிட்ட இவ்வளவு பாசமா இருக்காங்க? அப்படி என்னடி வசியம் செஞ்சே?” என்று ஜமுனா வியப்புடன் கேட்டாள்.
‘நான் எந்த வசியம் செய்யல, என்னோட வசியக்கார மாமு தான் எல்லாரோட மனசையும் மாத்திட்டாரு’ என்று மனதிற்குள் நினைத்தவள் கணவனை காதலுடன் பார்த்தாள்.
தூரத்தில் அமர்ந்திருந்தவன் மனைவியின் பார்வையில் எழுந்து அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தான். “என்ன சின்னு? உன் அக்காங்க என்ன சொல்றாங்க? முப்பது லட்சம் பணத்தை திருப்பி கொடுக்கறதுக்காக தானே வந்திருக்காங்க?” எனவும் சந்திராவும் தேவிகாவும் மற்ற இரு தங்கைகளை கேள்வியாக பார்த்தனர். அவர்கள் பதில் சொல்லாமல் தலையை கவிழ்த்துக் கொண்டனர்
“வேண்டா உன் வீட்டுக்காரர் எந்த முப்பது லட்சத்தை சொல்றாரு?” என்று அவர்கள் சின்னபொண்ணிடமே கேட்க, “அப்பா எனக்காக வச்சிருந்த நிலத்தை வித்த பணம் முப்பது லட்சத்தை காவேரி அக்காவும் ஜமுனா அக்காவும் பிசினஸ் பண்றதா சொல்லி வாங்கிக்கிட்டாங்க. அதை தான் சொல்றாங்க”
“உனக்குனு அப்பா வச்சிருந்த நிலத்தை பத்தி கேட்டதுக்கு நீ படிக்கறதுக்கும் கல்யாணத்துக்கும் செலவு பண்ணிட்டதா சொன்னாளுங்களே” என்று அவர்கள் இருவரும் மற்ற இருவரை முறைத்தனர்.
“என் மாமா எனக்கு சின்னுவ கொடுத்ததே போதும். அந்த பணம் எங்களுக்கு வேணாம், உங்களுக்கு விஷயம் தெரியுமானு தெரிஞ்சிக்கறதுக்கு தான் கேட்டேன்” என்றான் வசீகரன்.
“தெரியாது வசீகரன். இப்போ கூட அப்பாவோட வீட்டை வித்து பணத்தை பங்கு பிரிச்சுக்கலாம்னு சொல்லி தான் எங்களை இந்தியாவுக்கு வரவச்சாங்க”
“ஓ அதுக்காக தான் நாலு பேரும் சின்னுவ பாக்க வந்தீங்களா?” என்றான் குத்தலாக
“ப்ளீஸ் பணத்துக்காக வந்தோம்னு தப்பா நினைச்சுக்காதீங்க. ரொம்ப நாளாவே இவங்க ரெண்டு பேரும் இந்தியா வாங்கனு கூப்பிட்டுட்டே இருந்தாங்க. நாங்க சொந்த ஊருக்கு வந்து ரொம்ப வருஷமாச்சு, அப்பா இறந்தப்பவும் வரமுடியல, இப்போ லீவும் விசாவும் கிடைக்கவும் கிளம்பி வந்தோம். அப்பறம் தான் இவங்க வீட்டை விக்கறத பத்தி சொன்னாங்க, அஞ்சு பொண்ணுங்களும் கையெழுத்து போட்டா தான் வீட்டை விக்க முடியுமாம். நாங்களும் எங்க பழைய வீட்டை போய் பார்த்தோம். ரொம்ப பாழடைஞ்சு போயிருக்கு. யாருமில்லாம அந்த வீடு பூட்டி கிடக்கறதுக்கு அதை வித்தா எல்லாருக்குமே யூஸ் தானே? அதுக்கு தான் சின்னபொண்ணையும் பாத்துட்டு வீட்டை விக்கறது பத்தி பேசலாம்னு வந்தோம்”
“அக்கா, அப்பா வாழ்ந்த வீட்டை விக்க வேணாம்க்கா, நாமெல்லாம் பொறந்து வளர்ந்த வீடு, அதை விக்க வேணாம்” என்றாள் சின்னபொண்ணு
“வேண்டா புரியாம பேசாதே. நாங்க ரெண்டு பேரும் வெளிநாட்ல இருக்கோம். இந்தியாவுக்கு வர்றதா இல்ல. இவளுங்க ரெண்டு பேரும் பக்கத்து ஊர்ல சொந்த வீட்ல இருக்காளுங்க. நீயும் சென்னைல இருக்கே. ஏற்கனவே அந்த வீடு இடிஞ்சு விழற நிலைமையில இருக்கு. நாம யாரும் அங்கே போய் இருக்க போறதில்ல. அப்புறம் எதுக்கு வீணா அந்த வீட்டை விக்காம வச்சிருக்கணும்?” என்று சந்திரா கேட்க
“நமக்கு எப்பவாச்சும் பொறந்த வீட்ல போய் ரெண்டு நாள் இருந்துட்டு வரணும்னு தோணினா நாம எங்கேக்கா போறது? நம்ம பொறந்த இடத்துக்கு அடையாளமா அந்த வீடு தானே இருக்கு?” என்றாள் சின்னபொண்ணு ஆற்றாமையுடன்
மற்ற நால்வரும் அவரவர் பங்கிற்கு வீட்டை விற்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்களின் பணத்தேவையையும் சொல்ல, “சின்னு, அவங்க விருப்படி படி நடக்கட்டும், அந்த வீட்டை விக்கட்டும் விடு” என்று வசீகரன் சொன்னதும் சின்னுவின் முகம் வாடிவிட்டது.
“பரவால்ல வசீகரன், நீங்க பிராக்டிகலா யோசிக்கறீங்க. எங்க எல்லாரையும் விட சின்னவ, இந்த காலத்துல போய் சென்டிமென்ட்டலா பேசிட்டு இருக்கா” என்றார் தேவிகா.
“வீட்டை விக்கறதுனு முடிவு பண்ணீட்டீங்க, எவ்வளவு ரேட்னு சொல்லுங்க, நாங்களே அந்த வீட்ட வாங்கிக்கறோம்” என்றான் வசீகரன்
நால்வரும் அதிர்ச்சியாய் பார்க்க, சின்னபொண்ணு நம்ப முடியாமல் ஆச்சர்யத்துடன் கணவனை பார்த்து விழிவிரித்தாள். காவேரி சட்டென விலையை ஏற்றி சொல்ல, வசீகரன் உடனே ஒப்புக் கொண்டான். காவேரி வீட்டின் பத்திரத்தையும் வாரிசு சான்றிதழையும் எடுத்துக் கொடுக்க, மறுநாளே தேவையான ஆவணங்களை தயார் செய்து அவர்களிடம் கொடுத்து கையெழுத்து போட சொல்லி அனைத்தையும் வாங்கி கொண்டான்.
கையெழுத்திட்ட காசோலையை அவர்களிடம் நீட்டி, “நீங்க ரெண்டு பேரும் வெளிநாட்ல இருக்கறதால உங்களுக்கு சேரவேண்டிய பணத்தை முழுசா செக் எழுதியிருக்கேன். காவேரி ஜமுனா அண்ணிங்களுக்கு ரிஜிஸ்ட்ரேஷன் பண்றப்போ தான் பணம் கொடுப்பேன்.
அதுக்கு ரெண்டு காரணம் இருக்கு. ஒன்னு நானும் சின்னுவும் இப்போதைக்கு ஊருக்கு வரமுடியாது. மூணு மாசம் கழிச்சு ரிஜிஸ்ரேஷனுக்கு வர்றோம். இப்பவே பணம் கொடுத்துட்டா, இவங்க மனசு மாறி ரிஜிஸ்ட்ரேஷன் பண்றப்போ கையெழுத்து போடாம போக வாய்ப்பிருக்கு. இன்னொன்னு இவங்க ஏற்கனவே சின்னுவோட பணத்தை எடுத்துக்கிட்டாங்க, அது நான் கொடுக்க வேண்டிய பணத்துக்கு அட்வான்ஸா இருக்கட்டும்” என்றான் இருவரையும் கூர்மையாக பார்த்து
இருவராலும் மறுத்து பேசமுடியவில்லை. “என்னக்கா இது, வெளிநாட்ல இருந்தவளுங்கள வரவழைச்சு நாம பணம் வாங்கி கொடுத்த கதையா ஆயிடுச்சு, கடைசியல நமக்கு ஒண்ணுமில்லயே” என்று காவேரி புலம்பினாள்.
“வேண்டா வூட்டுக்காரர் விவரமான ஆளுனு அன்னைக்கே உனக்கு புரியலயா? அவர்கிட்ட வீட்டோட ரேட்டை ஏன்டி ஏத்தி சொன்னே? அவர் உன்னை கண்டுக்கிட்டாருனு நினைக்கிறேன். அதான் நம்மளை நம்ப முடியாதுனு பணத்தை கொடுக்காம போயிட்டாரு” என்றாள் ஜமுனா
சிலரை எப்போதும் திருத்தவே முடியாது போலும் என்று நினைத்துக் கொண்டாள் சின்னபொண்ணு.
“வசி, எங்க சின்ன பொண்ணை நல்லா பாத்துக்கோங்கனு நாங்க சொல்லவே தேவையில்ல. அவ வீட்டை விக்க வேணாம்னு எங்க கிட்ட சொன்னதுக்கே அவ ஆசைய புரிஞ்சுக்கிட்டு உடனே வீட்டை வாங்கிட்டீங்க. ரியலி யு ஆர் கிரேட், இன்னொரு விஷயம் கேக்கலாமா?” என்றாள் சந்திரா
“கேளுங்க”
“உங்க தங்கச்சி ரஞ்சனி டாக்டருக்கு படிக்கறாங்க தானே? முடிச்சிட்டாங்களா?” சந்திரா கேட்க
“பைனல் எக்ஸாம் போயிட்டு இருக்கு, ஏன் கேக்கறீங்க?”
“என் ஹஸ்பெண்ட்டோட பிரெண்ட் பையன் யுஎஸ்ல டாக்டரா இருக்கான். அவனுக்கு மெடிக்கல் படிச்ச நம்ம ஊரு பொண்ணை தான் பாத்துட்டு இருக்காங்க. அவங்களும் எங்களாேட இந்தியா வந்திருக்காங்க. கல்யாணம் முடிச்சிட்டு யுஎஸ் போகணும்னு ஐடியாவுல இருக்காங்க. அதான் கேட்டேன்”
“அப்பா அம்மா கிட்ட பேசுங்க” என்றான்.
அதற்குபின் மாப்பிள்ளை வீட்டார் முறைப்படி ரஞ்சனியை பெண் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தனர். ரஞ்சனிக்கு மாப்பிள்ளையை ரகுநந்தனை பிடித்து போனது, அதே சமயம் வெளிநாட்டில் எம்டி படிக்க வேண்டும் என்ற அவளது கனவும் நிறைவேறும் என்பதால் உடனடியாக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டாள்.
“ரஞ்சி டாக்டருக்கு படிச்சுட்டு நம்ம நாட்ல வேலைசெய்யாம, வெளிநாட்ல செட்டில் ஆக போறீயா?” என்றாள் சின்னபொண்ணு
“எம்டி படிக்கற வரைக்கும் இருப்பேன் அண்ணி, அப்புறம் அவரை குடும்பத்தோட இங்கேயே தள்ளினு வந்திடுவேன்” என்று ரஞ்சனி கண்சிமிட்டவும்,
“ரஞ்சி நீ உங்க அண்ணன மாதிரியே பண்றே” சின்னு சொல்ல
“வசி கூட இப்படி தான் கண்ணடிப்பானா?” என்று கேட்டு சின்னுவின் முகத்தை சிவக்க வைத்தாள்
யுஎஸ்ஸில் தனக்கு தெரிந்த நண்பர்கள் மூலமாக மாப்பிள்ளையை பற்றி வசீகரன் தீவிரமாக விசாரித்து கொண்டிருந்தான்.
“வேண்டாவோட அக்கா சொன்ன சம்மந்தம் தானே, எதுக்குடா நம்பாம விசாரிச்சுட்டு இருக்கே” என்றார் நடராஜன்
“உங்களுக்கு தெரியாதுப்பா, பொண்ணை கொடுக்கறதுக்கு முன்னாடி நல்லா விசாரிக்கணுமாம்”
“யார் சொன்னது?”
“என் மாமானார் தான்”
“எப்போடா சொன்னாரு”
“சரவணன் கல்யாண ரிசப்ஷன்ல”
நடராஜனுக்கு இப்போது வசீகரன் சின்னபொண்ணுவை திருமணம் செய்துக் கொள்ள காட்டிய தீவிரத்திற்கான அர்த்தம் புரிந்தது. அடுத்து வந்த சுபமூகூர்த்தத்தில் ரகுநந்தன் ரஞ்சனியின் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. மணமக்கள் குடும்பத்துடன் சந்திராவும் தேவிகாவும் வெளிநாட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.
அன்று வசீகரனும் சின்னபொண்ணும் டெல்லிக்கு கிளம்பி கொண்டிருந்தார்கள்.
“ஆமா, என் சின்ன மருமக ஐஏஎஸ் மெயின் எக்ஸாம் பாஸ் பண்ணிட்டா, டெல்லில இன்டர்வியூ இருக்கு அதுக்கு தான் என் மகனும் மருமகளும் கிளம்பிட்டு இருக்காங்க. கண்டிப்பா திரும்பி வரும் போது கலெக்டரா தான் வருவா, அவங்க வந்ததும் உங்களுக்கு சொல்றேன்” என்று அலமேலு தன் கைப்பேசியில் பதினைந்தாவது தடவையாக யாரிடமோ பெருமையாக பேசிக் கொண்டிருந்தார்.
“அலமு, உன் பெருமையெல்லாம் பொறவு பேசிக்க, மொதல்ல கிளம்பறவங்கள வழியணுப்பு” என்று நடராஜன் அதட்டவும் எழுந்து வந்தவர் சின்னபொண்ணுவின் முகத்தை இருகைகளால் வழித்து திருஷ்டி எடுத்தார்.
“வசி, தங்கத்தை பத்திரமா பாத்துக்கோடா”
“வேண்டா பொண்ணு எப்போ தங்கமா மாறினா?” என்றான் வசி கிண்டலாக
“வேண்டா பொண்ணு இல்லடா, வேணும் பொண்ணு, தங்கப்பொண்ணு” என்று மருமகளை கொஞ்சவும், “போதும் போதும் ஓவரா தான் போயிட்டு இருக்க. பெரிய மருமகளும் இருக்காங்கங்றது நினைவிருக்கா, அண்ணி முறைக்கிறாங்க பாரு, போய் அவங்களையும் கவனி”
“வசி, என்னை எதுக்கு வம்பிழுக்கறீங்க? வேண்டாவை கொஞ்சினா எனக்கு எந்த பொறாமையும் இல்ல. நம்ம வீட்ல ஒரு கலெக்ட்ரம்மா இருக்காங்கனா எனக்கும் பெருமை தானே? அதுமட்டுமில்லாம வீட்டோட ரெண்டாவது வாரிசை சுமந்துட்டு இருக்கறதால என்னையும் தான் அத்தை நல்லா கவனிச்சுக்கறாங்க, சோ இனி வம்பிழுக்கறதா இருந்தா உங்க பொண்டாட்டிக்கிட்ட மட்டும் வச்சுக்கோங்க” என்றாள் லதா
வசீகரன் சிரித்துக்கொண்டே அனைவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டு மனைவியுடன் டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டான். இருவரும் டெல்லியை அடைந்ததும் குளித்து தயாராகி யுபிஎஸ்சி ஹெட் குவாட்டர்ஸை நோக்கி காரில் பிரயாணம் செய்தனர்
“மாமு எக்ஸாம் எழுதிட்டேன். ஆனா இன்டர்வியூனா பயமா இருக்கு” என்றாள்.
“பயமா தான் இருக்கும், ஆனா அந்த பயத்தை வெளியே தெரியாம பாத்துக்க சின்னு. இன்டர்வியூ ரூமுக்குள்ள போகும் போது உன்னோட பேரை சொல்லி கூப்பிடுவாங்க. அந்த பேரு தான் உனக்கு தைரியத்தை கொடுக்கணும். பெண் குழந்தைங்கள வேண்டாம்னு இனி யாருமே நினைக்க கூடாது. வேண்டாம், போதும் பொண்ணுங்கிற பேரையும் வைக்கக்கூடாதுனு நீ உரக்க சொல்லணும். நீ சொல்றத மதிச்சு எல்லாரும் காதுகொடுத்து கேக்கணும்னா அதுக்கு நீ ஒரு நல்ல பதவியில இருக்கணும். இதுவரைக்கும் நீ எழுதின இந்த ரெண்டு எக்ஸாம் பெரிய விஷயமில்ல. இப்போ நீ கலந்துக்க போற இந்த இன்டர்வியூ தான் வேண்டாவை வேண்டியவளா இந்த உலகத்துக்கு அறிமுகம் செஞ்சு வைக்க போகுது. இத மட்டும் மனசுல வச்சுக்க, எல்லாம் சரியா நடக்கும்” என்றான் வசீகரன்
சின்னு கணவனின் கழுத்தில் இருகரங்களை கோர்த்து அவனை தன் பக்கம் இழுத்து அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.
“டாக்சி டிரைவர் பாக்கறான்டி” என்ற வசியின் வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ளாமல் மீண்டும் அவன் கன்னத்தில் இதழ் பதித்து “ஐலவ்யூ சோ மச் மாமு” என்றாள்
(தொடரும்)
error: Content is protected !!
Unmaiyavey vasi semada nee illainna chinna ponnu indha nilamaikku vara mudiyadhu