Skip to content
Post Views: 71
ரிதம் 31
‘இந்த நத்தாஷா வராமலிருந்திருந்தால், அந்தப் பாடல் தனக்குக் கிடைத்திருக்கும். இந்த முறையும் அந்தப் பாடலுக்கான விருதைத் தான் பெற்றிருக்கலாம். இவள் வந்ததனால் தான், எல்லாம் கெட்டுவிட்டது’ என்று நினைத்தாள்.
Advertisement
இது எதுவும் தெரியாமல், நத்தாஷா சந்தோஷமாக அங்கு நடப்பவற்றைப் பார்த்து அவதானித்துக் கொண்டிருந்தாள். மற்றவர்கள் பாடும் பாடலாக இருந்தாலும், ஹம்மிங் செய்யத் தவறவில்லை. அவளைப் பொறாமையாகப் பார்க்கும் ஒரு பெண் அங்கே இருக்கிறாள் என்பதை அறியாமல் விட்டுவிட்டாள்.
திவ்யாவுக்கு அந்தத் ட்ரூப்பில் இணையும் தருவாயிலிருந்தே கௌதம் மீது ஒரு பெரிய கிரஷ் இருந்தது. அப்பொழுது அவன் வளரத் துடித்துக் கொண்டிருக்கும் இசைக்கலைஞன். அவனுடைய குரலில் அவளுக்கு எப்போதுமே ஒரு மயக்கம் இருந்தது. அவளுக்குத் மட்டுமல்ல, அந்த வயதுடைய பெண்கள் எல்லோருக்கும் என்று சொல்லலாம்.
Advertisement
Advertisement
அவளாகச் சரிகமபதநி போட்டியில் கலந்து கொண்டு, வெற்றியின் விளிம்பில் தோல்வியடைந்து துவண்டு இருக்கும்போது, அவன் வந்து தன் விசிட்டிங் கார்டைக் கொடுத்துவிட்டுச் சென்றான்.
தாடி படர்ந்த அவன் முகம் முழுவதும் அந்த ஹுட்டியில் மறைந்திருக்க, அது அவன் தான் என்று தெரியவில்லை. தன்னைத் தேற்றிக்கொண்டு கார்டைப் பார்க்கும் வரையில் அவளுக்கு அவன் யாரென்றே புரியவில்லை. பார்த்ததும் அவ்வளவு சந்தோஷம். அடுத்த நாள் விடியலிலேயே சென்று நின்றுவிட்டாள்.
Advertisement
அந்த இசைக் கல்லூரியில் கலந்துவிட்ட பிறகு, எல்லாம் அவள் வசமானது போலத் தோன்றியது. நிறையப் பாடல்கள் பாடும் வாய்ப்புக் கிடைத்தது; கற்றுக்கொள்ளவும் முடிந்தது. பாடலின் நுணுக்கங்களை அவன் வாயிலாகவும் தெரிந்து கொள்ள முடிந்தது. அவனைப் பார்க்கும் சந்தர்ப்பம், அவனுடன் பாடும் சந்தர்ப்பம், எல்லாமே கிட்டியது. அவனுடன் டூயட் பாடியிருக்கிறாள். ஆனால், அது ரிகர்சலில் மட்டும் தான். படங்களில் அவனுடன் சேர்ந்து பாடும் வாய்ப்பு அவளுக்குக் கிட்டியதில்லை. அதை எதிர்பார்த்துத் தான் காத்திருக்கிறாள்.
அவனாக எல்லோரிடமும் ஒன்றிப் பழக மாட்டான். அதுவும் பெண்களிடம் ஒரு அடி தூரம் தான் நிற்பான் கௌதம். பாடல், மியூசிக், கம்போசிங் என்பதைத் தாண்டி அவர்களுக்குள் வேறு எந்தப் பேச்சுக்களும் இருக்காது. அவன் மட்டும்தான் அப்படி இருப்பானே தவிர, மற்றவர்களெல்லாம் அப்படி இல்லை. சொந்தக் கதை, சோகக் கதை, ஏமாந்த கதை என்று எல்லா கதைகளையும் அடிப்பார்கள்.
ஆனால் அவன் சொல்லிக் கொடுப்பது, பாடச் சொல்லிக் கேட்பது, இசையின் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுப்பது, ரிகர்சல் செய்வது என்பதில் மட்டும் தான் இடம் பெறுவான். கதைக்காலட்சேபங்களில் இடம் பெற மாட்டான்.
அவளாக அவனைத் தேடிச் சென்று பேச முடியாது. அதற்கான சந்தர்ப்பத்தை அவன் உருவாக்கிக் கொடுக்கவே மாட்டான். அப்படியும் அவள் முயற்சி செய்தாள்; அது எல்லாம் தோல்வியடைந்தது. நத்தாஷா வந்ததிலிருந்து, தன்னுடைய இடம் குறைந்துவிட்டதாக நினைத்தாள் திவ்யா. அதை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் அதற்கான வழி தான் புலப்படவில்லை.
“என்ன திவ்யா எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க?? நீ மட்டும் ஒரு மாதிரி இருக்க? ஸ்டேஜ்ல பெர்பார்ம் பண்ணும்போது கூடச் சரியா பண்ணல? என்ன ஆச்சு உனக்கு, உடம்பு சரியில்லையா?” என்று கேட்டான் ஹேமந்த்.
“நான் பாட வேண்டிய பாட்டு. நான் பாடியிருந்தா எனக்குத் தான் கிடைச்சிருக்கும். கௌதம் சார் கூட டூயட் பண்ணணும்னு எனக்கு எவ்வளவு ஆசை தெரியுமா?” என்று தன்னையும் மறந்து கூறிவிட்டாள்.
அங்கு இருக்கும் எல்லாப் பெண்களுக்கும் கௌதமுடன் சேர்ந்து பாட வேண்டும் என்று ஆசை இருப்பது, அவனுக்குமே வந்த புதிதிலேயே தெரிந்துவிட்டது. ஏன், அவனுக்குமே அந்த ஆசை இருந்தது. ஏதாவது போட்டி பாடல் போல, அல்லது தோழர்களின் பாடல் போல இருந்தால் கௌதமோடு சேர்ந்து பாட வேண்டும் என்று நினைத்திருக்கிறான்.
ஆனால் நாம் நினைப்பதெல்லாம் இங்கு நடந்துவிடாதே?? வாய்ப்பு அமையும் போதுதானே எல்லாம் நடக்கும். அப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்ததனால் தான் அவர்கள் இங்கே வந்து சேர்ந்திருக்கிறார்கள் அல்லவா??
“சரி விடு, அந்தப் பாட்டை நீ பாடினா உனக்கு அவார்டு கிடைச்சிருக்கும்னு எல்லாம் சொல்ல முடியாது. இந்தப் பாட்டு இல்லனா அடுத்த வாட்டி கிடைக்கும். அதே மாதிரி கௌதம் சார் கூட டூயட் பண்றதுக்கும் வாய்ப்புக் கிடைக்கும். கவலைப்படாதே” என்று தோழனாக ஆறுதல் கூறினான் ஹேமந்த்.
“எங்க, இனி கிடைக்காது?? அதான் இப்ப அட்டை மாதிரி ஒட்டிட்டிருக்காளே?” என்று மேடையில் பாடிக் கொண்டிருந்த நத்தாஷாவை வன்மமாகப் பார்த்தாள். அவளோ பாடிக் கொண்டிருக்க, அவன் கீழே அமர்ந்தபடி அவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்ததைத் திவ்யாவும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.
“ஹேமந்த் எனக்கு ஒன்னு சொல்லு? என்னை விட நத்தாஷா அழகா?? என் குரலை விட அவள் குரல் நல்லா இருக்கா?” என்று கேட்டாள்.
“எதுக்கு இந்தத் தேவையில்லாத கேள்வி?? அவங்கவங்க இடத்துல அவங்கவங்க அழகா இருக்கீங்க” என்று அவன் கழன்று கொள்ளப் பார்த்தான். ஆனால் இவள் விடுவாளா?? வம்படியாகப் பிடித்து நிறுத்தி மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள்.
“டு பீ பிராங்க், உன்னை விட அவங்க அழகுதான். அதேபோல அவங்களோட குரலும் தனித்தன்மை வாய்ந்ததுதான். ரொம்ப பெக்யூலியர். எல்லாத்தையும் விடவும் அவங்க குணம், ரொம்ப நல்லவங்க. அவங்களுக்கு எப்படி பிரைஸ் கிடைக்காம போச்சுன்னு நானே நிறையத் தடவை நினைச்சிருக்கேன். ஸ்பெஷலி அவங்களோட டேலண்ட், அது எல்லாருக்கும் கிடைச்சிராது. பாரு, அவங்க சரிகமபதநி ஸ்டேஜ்ல பாடுன அதே பாட்டை குரல் மாற்றிப் பாடுறாங்க பாரு?” என்று அவன் சுட்டிக்காட்ட, இன்னும் அவளுக்கு எரிந்தது.
“சங்கீதம் பாட ஞானம் உள்ளவர்கள் வேண்டும்…….” என்று ஆணாகவும் பெண்ணாகவும் குரல் மாற்றிப் பாடிக் கொண்டிருந்தாள் நத்தாஷா. அந்தப் பாடலையும், அவர்கள் அதைப் பாடிய பாங்கையும் அவனாலும் மறக்க முடியாது.
எல்லாம் நல்லபடியாக முடிவடைய, கலைந்து செல்லலாம் என்று இருக்கும் நேரத்தில், கௌதமின் செக்ரட்டரியிடம் அனைவரும் பெயரைக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
மகாலட்சுமி நத்தாஷாவை நோக்கி வந்தார். கைகளைப் பிடித்துக் கொண்டார். “நான் அப்பவே சொன்னேன்ல??? உனக்குத் தான் இந்த வருஷத்துல அவார்டு கிடைக்கும்னு. கிடைச்சிடுச்சு பார்த்தியா?? நான் சொன்னது பலிச்சிருச்சு. எனக்கு என்ன கிப்ட் கொடுப்ப?” என்று கேட்டு வைக்க, இதே டோனில் அவன் கேட்டது ஞாபகம் வந்தது. அதற்கு அவள் கூறிய பதிலும் ஞாபகம் வந்தது.
அனிச்சைச் செயலாக அவள் பார்வை அவன்புறம் சென்று மீண்டது. ஸ்ரீதரிடம் பேசிக் கொண்டிருந்தாலும், அவளையே கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு அது புரிந்தது. ‘பரவால்ல நான் கேட்டதை ஞாபகம் வச்சிருக்காள்’ என்று மனதினுள் நினைத்துக் கொண்டான்.
“கண்டிப்பா பண்றேன் ஆன்ட்டி” மேம்போக்காகக் கூறினாள்.
“அவார்டு வாங்கின கையோட அடுத்த நாள் உன் வீட்டுக்கு வருவேன். நல்லா சமைச்சுப் போடணும். அப்புறம், அவார்ட் மணியில உன் அம்மாவுக்கு எடுக்கிற மாதிரி எனக்கும் ஒரு புடவை எடுத்துக் கொடுக்கணும். அது எந்தப் புடவையாக இருந்தாலும் பரவால்ல” என்று உரிமையாகக் கேட்டார். மறுக்கத் தோன்றுமா அவளுக்கு??
“கண்டிப்பா மேடம்” என்றாள்.
அதற்குள் கௌதம் அவளைப் பார்த்துக் கொண்டே வந்து நின்றான். “எனக்குக் கூட நத்தாஷா ஒரு பிராமிஸ் பண்ணிருக்காங்கம்மா. அவங்களோட குரலுக்கும், டேலன்டுக்கும் கிடைச்ச அவார்ட் தான்னாலும், நமக்கு கிப்ட் வாங்குற அருகதையும் இருக்கு” என்று கூறினான்.
“ஆன்ட்டி சொல்லிட்டாங்க சார், அவங்களுக்கு என்ன கிப்ட் வேணும்னு. நீங்க சொல்லலையே இன்னும்?” என்று கேட்டாள்.
“அதுதான் நான் சொன்னேனே?? நீ அவார்ட் வாங்கிகிட்டு என் முன்னாடி வந்து நிற்கும்போது தான் நான் அதை உன்கிட்ட கேட்பேன்னு. அதுவரைக்கும் கேட்க மாட்டேன்” புன்னகையுடன் கூறினான்.
“என்ன சார், அவங்களுக்குக் கொடுக்குற எல்லா பிரைஸ் மணியையும் கேட்டிருவீங்களா?? இல்ல அந்த அவார்ட்டையே வாங்கி எடுத்துட்டுப் போய் உங்க வீட்ல வச்சுக்கப் போறீங்களா?” திவ்யா வேண்டுமென்றே கேட்டாள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்பதற்காகவே அங்கு அருகில் வந்து நின்று கொண்டாள்.
“ச்சே ச்சே, அதெல்லாம் இல்ல, வேற கேட்பேன். அவங்களோட முதல் அவார்ட் அவங்களுக்கு ரொம்ப பிரீசியஸானது. அதைக் கேட்கிற அளவுக்கு நான் மோசமானவனில்லை. நான் கேட்டாலும் அதை அவங்க கொடுக்க மாட்டாங்க” என்றான். முகத்தில் நமட்டுச் சிரிப்பு மட்டும் வாடாமல் இருந்தது.
“இல்ல சார், எனக்குக் கிடைக்கப் போற இந்த அவார்ட் உங்களால் மட்டும் தான் கிடைச்சது. என்னதான் எனக்கு டேலண்ட் இருந்தாலும், அந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்கிறது இல்ல. அப்படி ஒரு வாய்ப்பை நீங்க கொடுத்ததுனால தான் என்னால இதைச் சாத்தியப்படுத்த முடிஞ்சுது. அது எனக்கு எவ்வளவு முக்கியமோ, அதைவிட நீங்க எனக்கு முக்கியம் சார். அதனால கண்டிப்பா நீங்க கேட்டா நான் அதைக் கொடுத்துடுவேன். என் வீட்டுச் செல்பில் அது அலங்காரப் பொருளாக இருக்கிறதைவிட, உங்களோட இந்த அகாடமில இருக்கிறது எனக்குப் பெருமைதான் சார்” என்று மனமாரக் கூறினாள்.
அந்தப் பேச்சை அவனே எதிர்பார்க்கவில்லை. அவனையும் மறந்து நின்றான். ராகினியும் பிரீத்தியும் தங்களுக்குள் பார்வையைப் பரிமாறிக் கொண்டு, கௌதமை ஆழப் பார்த்தார்கள். மகாலட்சுமியும் மெச்சதலாக உதட்டைச் சுளித்தார். அதற்கு மேல் அவன் எதையும் கூறவில்லை. அமைதியாக அவள் கூறியதை உள்வாங்கிக் கொண்டான்.
……
அதன் பிறகு வந்த நாட்கள் எல்லாம் எப்படித் கடந்தன என்று யாருக்கும் தெரியாது. கௌதமுக்கு மட்டும் தலைக்கு மேலே வேலை இருந்தது. சுற்றுலா செல்வதற்கான நாளும் வந்திருக்க, அனைவரையும் அழைத்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குப் புறப்பட்டிருந்தான். கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள். அவர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கான பயணத்தை மேற்கொள்வது என்பது சுலபமான காரியம் இல்லை. ஆனால், அதைக் கௌதம் செய்து முடித்திருந்தான்.
நேரம் தவறுவது அவனுக்குப் பிடிக்காது என்று கட்டுக்கோப்பான ஒரு சூழலைத் தான் அவன் அகாடமியில் உருவாக்கியிருந்தான். அது அவன் வீட்டிலிருந்தே உருவாக்கப்பட்ட ஒரு சூழல். அதனால் அவன் அகாடமி திறக்கும் போது அனைவரும் அதற்குப் பழகியிருந்தனர். அதேபோல இன்றும் அவர்கள் சரியான நேரத்திற்குப் கூடியிருந்தனர்.
அவர்களின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஒரு பயணம். கிட்டத்தட்ட மூன்று பெரிய பேருந்துகளில் அவர்களின் பயணம் கொடைக்கானலை நோக்கிச் சென்றது. சென்னையிலிருந்து மதுரைக்கு ஃபிளைட்டில் வந்துவிட்டார்கள். எல்லா ஏற்பாடுகளையும் தனி ஆளாகச் செய்திருந்தான். அதற்காக எத்தனை செலவு செய்தான் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், அவன் கீழ் வேலை செய்வது ஒரு சுகமான அனுபவம்; அதை அனைவரும் அத்தருணத்திலும் உணர்ந்து கொண்டிருந்தார்கள்.
ஒரு சிலர் தங்கள் குடும்பத்தாரையும் அழைத்து வந்திருந்தனர். ஒரு சிலர் தனியாகத் தோழமையோடு கொண்டாட நினைத்தார்கள். இன்னும் சிலர் துணையோடு கொண்டாட நினைத்தார்கள். அவன் அழைத்து வருவதனால் பெரும்பாலும் மற்றவர்களை அவன் தலையில் திணிக்கக் கூடாது என்று வெகு சிலர் அதைத் தவிர்த்திருந்தார்கள்.
ராகினியும் புஷ்பவல்லியும் நத்தாஷாவோடு வந்திருந்தார்கள். பிரீத்தியின் கர்ப்பம் உறுதியானதனால் அவளும், அவள் கணவனும் வரவில்லை. ஆசை இருந்தது, ஆனால் இப்பொழுது வேண்டாம் என்று பெரியவர் கூறிவிட்டார். அவளுக்கு அதில் வருத்தம்தான். ஆனால், குழந்தைப்பேறு என்பது முக்கியமல்லவா??
அவனே தனிப்பட்ட முறையில் ரமேஷுக்கு அழைத்துச் சுற்றுலாவிற்கு வருவதைப் பற்றிக் கேட்டிருந்தான். முதலிலேயே அவர்கள் அந்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்டதால், கௌதம் அவர்களைச் சமாதானப்படுத்தினான். “கண்டிப்பாக அடுத்த முறை போகலாம் குழந்தையோடு” என்று கூறிக் பிரீத்தியின் மனதில் பாலை வார்த்தான்.
“நல்லவேளை கௌதம் சார் நீங்க சொன்னீங்க. என் மண்டையை ரெண்டு நாளா உருட்டிக்கிட்டே இருக்காள். குழந்தை தங்குனது ஒரு சந்தோஷம்னா, இந்த டூருக்கு வர முடியலன்னு ஒரே துக்கம் அம்மணிக்கு. இனிமே கொஞ்சம் நிம்மதியா இருப்பானு நினைக்கிறேன்” என்றான் ரமேஷ்.
மகாலட்சுமி தன் மகனுக்குத் துணையாக வந்திருந்தார். பெரியவர்கள் என்று பெரிதாக யாரும் வரவில்லை. அவ்வளவு நீண்ட பிரயாணம் வேண்டாம், செலவுகளைத் தவிர்க்கலாம், இன்னும் சில காரணங்கள் என்று பெரியவர்கள் அவ்வளவாக வரவில்லை, வெகு சிலரைத் தவிர. இளம் ஆட்களின் பெற்றோர்களாக நான்கு பேர் மட்டும்தான் வந்திருந்தனர். அதில் மகாலட்சுமியும் புஷ்பவல்லியும் இருவர்.
மற்றவர்களை அவர்களுக்குத் தெரியாததனால் மகாலட்சுமியும் புஷ்பவல்லியும் அருகருகே அமர்ந்துவிட்டனர். மகன் சொன்னதும் ஒரு காரணம். “நான் இரண்டு பஸ்ஸுக்குமே போய் பார்க்கிற மாதிரி இருக்கும். உங்க கூடவே உக்காந்துட்டு வர முடியாது” என்றான்.
“அதான் பிரெண்ட் இருக்காங்கல்ல?? நான் பாத்துக்குறேன்” என்று அவரும் கூறிவிட்டார். ராகினியும் நத்தாஷாவும் ஒன்றாக அமர்ந்திருக்க, புஷ்பவல்லியும் மகாலட்சுமியும் ஒன்றாக அமர்ந்திருந்தனர்.
இவன் நின்று கொண்டுதான் பிரயாணம் செய்தான். அவ்வப்போது டிரைவர் சீட்டின் அருகில் அமர்ந்து விடுவான். வழிகளைச் சொல்வான்; கேள்விகள் கேட்பான்; பேசிக்கொண்டே வந்தான். அவ்வப்போது நத்தாஷாவின் பார்வை நின்று கொண்டிருந்தவனின் மீது சென்றுவிட்டு வந்தது. அவ்வப்போது புக் செய்திருந்த ரிசார்ட்டுக்கு அழைப்பு விடுத்து எல்லாம் தயாராக இருக்கிறதா என்று கேட்டான்.
அங்குச் சுற்றிப் பார்ப்பதற்குக்கூட அதே பேருந்தைத் தான் அவன் புக் செய்திருந்தான். எல்லா ஏற்பாடுகளையும் கனகச்சிதமாகச் செய்திருந்தான்.
மதுரையில் அவர்கள் காலை வைத்த நேரம் நத்தாஷாவின் இருதயம் நின்று துடித்தது. அவள் தாய்க்கும் அதுபோலத்தான். பிறந்து வளர்ந்த ஊர்; இதை விட்டு எங்கோ கண்காணாத இடத்தில் வளர்கிறார்கள். இப்பொழுது ஊரைச் சுற்றிப் பார்ப்பதற்காக இங்கு வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஊருக்கும் மதுரை ஏர்போர்ட்டிற்கும் எவ்வளவோ தொலைவு இருந்தாலும், நம் ஊர் என்ற எண்ணம் மட்டும் மனம் முழுவதும் நிரம்பியிருந்தது.
இத்தனை பேரை ஒன்றாகத் திரட்டி அனைவரையும் அழைத்துச் செல்வது என்பது பெரிய விஷயம். அதைக் அவன் கனகச்சிதமாகச் செய்து கொண்டிருந்தான்.
கொடைக்கானல் அவர்களை வரவேற்கும் விதமாகக் குளிர் காற்றை அவர்களுக்குப் பரிசளித்தது. சென்னையில் பார்க்க முடியாத குளிர்; உணர முடியாத இயற்கை. இயற்கையின் அழகே மனசாந்தியை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. பேருந்துகள் அணிவகுத்து ஒன்றன்பின் ஒன்றாக ரிசார்ட்டுக்குள் நுழைந்தது. மிகப்பெரிய ரிசார்ட், அதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகக் காபின்களை புக் செய்திருந்தான்.
“என்னமா எல்லாச் செலவும் இவருதுன்னு சொன்ன?? டிக்கெட் கூட அவரே புக் பண்ணிட்டாருன்னு சொன்ன? இப்போ இவ்வளவு பெரிய ரிசார்ட் வேற புக் பண்ணியிருக்காரு. அதுவும் இத்தனை பேருக்கு. நாம மட்டுமாவது கொஞ்சம் காசைக் கொடுத்துடலாமா?” என்று தயக்கத்தோடு கேட்டார் புஷ்பவல்லி.
“நான் கேட்டுப் பார்த்துட்டேன் அம்மா. ஆனால் சார் ஒத்துக்கல. நீங்க வேணா அவங்க அம்மா கிட்ட கேட்டுப் பாருங்க” என்றாள் நத்தாஷா. ஆனால், அவருக்கும் அதைக் எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை.
—……………
error: Content is protected !!