Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

05. முகில் - ஊஞ்சலாடும் முகிலே

ஊஞ்சலாடும் முகிலே 46 நிறைவுப் பகுதி

அத்தியாயம் 46 நிறைவு அத்தியாயம்

 

ஹாலில் தனியே சோஃபாவில் அமர்ந்திருந்தான் கீர்த்திஸ்வரன். லதா என்னவென்று கேட்டும் பதில் தராதவன் முகம் கடுகடுவென்று இருக்க,

 



Advertisement

“அப்படியே அவங்கப்பாவ்வை உரிச்சு வச்சு பிறந்திருக்கான் பாரு. என்னனு ஒரு வார்த்தை கேட்டா பதில் சொல்லணும். முறைக்கிறான்!” என புலம்பியவர்,

 

“இவ வேற என்ன செஞ்சு வச்சான்னு தெரியலையே. சும்மா இருடின்னா கேட்குறாளா!” எனவும் சொல்லிக் கொண்டு சமையலறையை சுற்றிவர, தேவி சிரித்துவிட்டார் லதா பேச்சுக்களில்.

Advertisement

 

Advertisement

“என்ன சிரிப்பு! எல்லாம் பல்லவி குடுக்குற இடம் உனக்கு!” என்று அவரையும் பேசிவிட்டு மீண்டும் ஹாலை எட்டிப் பார்க்க, இன்னுமே மொபைலை பார்த்துக் கொண்டு தான் அமர்ந்திருந்தான் ஈஸ்வர்.

 

“பேசாம பல்லவி பாப்பாக்கு போன் பண்ணி என்னனு கேளுங்க ம்மா. அவங்க தான் என்னவோ விளையாட்டுத்தனம் பண்ணி தம்பி கோவமா இருக்கும்!” என்று தேவி எடுத்து சொல்ல,

Advertisement

 

“பண்ணிட்டேனே! எடுப்பேனாங்குறா. ஊடால ஸ்டேட்டஸ் வேற! எனக்குன்னு யார் இருக்கான்னு பாவமா ஒரு பொம்மையையும் சேர்த்து!” என்றவர் இன்றைக்கு என்ன நடந்தாலும் தான் தலையிடக் கூடாது எனும் முடிவில் இருந்தார்.

 

ஈஸ்வர் பல்லவி திருமணம் முடிந்து மூன்றே மாதங்கள் தான் ஆகியிருந்தது.

 

நிம்மதி மகிழ்ச்சி என்பது போல சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டைப் போல தினம் ஒரு பஞ்சாயத்து தான் வீட்டில். அதுவும் ஞாயிறு என்றால் சொல்லவே வேண்டாம் இவர்கள். லூட்டியை.

 

பல்லவி கீர்த்திஸ்வரன் காதல் வாழ்க்கையில் எல்லாம் எந்த குறையுமே இல்லை. அவளிடம் அவனின் முகமே வேறு என்பதை திருமணமான முதல் நாளே உணர்ந்திருக்க, 

 

“வாய் பேச தெரியாத உங்க மகன் வந்துட்டாரா அத்தை?” என அதைக் கொண்டே கிண்டல் பேச்சுக்களும் இருக்கும் பல்லவியிடம்.

 

அவளுக்கென்ற அவனுடனான தனிப்பட்ட நேரங்களில் பல்லவி நிலை தான் பாவம் என்பதாய் அமைதியாய் அடங்கிவிட, அவளை தனக்குள் அடக்கிக் கொள்பவனின் பேச்சுக்களை அத்தனைக்கு ரசிக்கக் கற்றுக் கொண்டிருந்தாள்.

 

அது எல்லாம் தனிமையில் தான். மற்ற நேரங்களில் எல்லாம் அத்தனை துடுக்குத்தனமும் சேர, அஞ்சலியும் வேறு அவளோடு சேர்ந்து என அரட்டைகள் மட்டும் பல்லாயிரம்.

 

மகேஸ்வரன் கூட இப்பொழுதெல்லாம் இவர்களின் சத்தங்களுக்கும் விளையாட்டுக்களுக்கும் பழகி இருந்தார்.

 

சொல்லியதை போலவே அவள் படித்தக் கல்லூரியிலேயே அலுவலகப் பணியில் சேர்ந்திருந்தாள் பல்லவி.

 

“இப்பவேவா? ஒரு ஆறு மாசமாவது ஆகட்டுமே” என்று லதா சொல்ல,

 

“என் லட்சியத்துல குறுக்க நிக்காதிங்க லதாம்மா. மூணு மாசமா உங்க பையன் கடனை நான் எப்படி அடைக்குறேன் தெரியுமா?” என்றவளை,

 

“என்ன டா உளறுறா?” என லதா கேட்க,

 

“அதான் உலர்றா இல்ல. அவகிட்டயே கேளுங்க அதை!” என்றவனுக்கும் அயர்ச்சி தான் அவள் செயலில்.

 

“என்ன டி பண்ணின?“ என்று கேட்க,

 

“இவங்ககிட்ட தான் கடன் வாங்கி இருக்கேன். வட்டியில்லாத கடன். வேலை கிடைச்சதும் இதையும் கொடுத்துடுவேன்!” என பல்லவி கெத்தாய் சொல்ல,

 

“போற வழில ஏதாவது ஹாஸ்பிடல் இருந்தா காட்டேன் இவளை. வெளில எந்த பிரச்சனையும் இல்ல. உள்ள எதாவது நமக்கு தெரியாம இருக்க போகுது!” என கிண்டல் செய்திருந்தார் லதா.

 

ஈஸ்வர் கூட இப்பொழுது வேலைக்கு அனுப்பவா என்று முதலில் யோசித்தான். அவள் பேசிய பேச்சில் தான் அவளே முடிவெடுக்கட்டும்! என்று அனுப்பி இருந்தான்.

 

இதோ அவள் வீடு திரும்பும் நேரம் அவளுக்கு முன் வந்து அவள் வருகைக்காக காத்திருந்தான் ஈஸ்வர். அதுவும் கோபமாய் என்பதில் தான் லதா தலையில் கை வைப்பது.

 

வந்தவள் ஹாலில் அவனைக் கண்டதும் கொஞ்சம் ஜெர்க்காகினாலும் மெதுவாய் அடிமேல் அடி வைத்து அவன் கண் மூடி பாராமல் இருக்கும் நேரமே அறைக்கு ஓடப் பார்க்க, அவள் மெல்லிய கொலுசொலி அறியாதவனா?.

 

நிமிர்ந்து பார்த்தவனைக் கண்டு, “குட் ஈவினிங் த்தான். தூங்கலை?” என்று கேட்டு அங்கேயே நின்றாள். உள்ளிருந்து பல்லவி குரலில் வந்துவிட்டார் லதாவும்.

 

திருமணத்திற்கு பின் அவளை முதல் மாற்றமாய் அத்தான் என அழைக்க வைத்திருந்தான் கீர்த்திஸ்வரன். அதை மற்ற நேரங்களில் எல்லாம் சொல்லிடாதவள் சரியாய் இப்படி மாட்டிக் கொள்ளும் நேரம் மட்டும் தப்பிக்க உபயோகிக்க, அதையுமே கண்டு கொண்டான்.

 

“இவளுக்கெல்லாம் சப்போர்ட் பண்ணிட்டு என்கிட்ட வராதீங்க ம்மா!” என லதாவைக் கண்டதும் ஈஸ்வர் சொல்ல,

 

“என்ன தான் பிரச்சனை?” என்ற லதா பல்லவியை முறைக்க,

 

“என்ன இருந்தாலும் உங்க பையனை சொல்லுவீங்களா? முதல்ல என்னை தானே முறைக்குறிங்க?“ என்றாள் பல்லவி.

 

“என்னனு சொல்லு. அவன் டென்ஷன் ஆகுறான்!” லதா கேட்க,

 

“வேறென்ன? வாய் தான்” என்றவளை பொறுமை பறக்கப் பார்த்தார் லதா.

 

“மதியம் போன் பண்ணினாங்க. சாப்டயா கேட்டாங்க. ஆச்சுன்னு சொன்னேன்” என கதையாய் ஆரம்பித்தவள் பேச்சில்,

 

“அதோட விட்டியா நீ? எவ்ளோ இம்சை பண்ற? எதுல விளையாடுறதுனு இல்ல?” என்றவன் நிஜமான கோபத்தில் கத்திக் கொண்டிருக்க, அதில் லதாவுக்குமே சந்தேகம் தான்.

 

“லாவண்யாவை இழுத்தியா?” என்றார் முறைத்தபடி மருமகளிடம்.

 

“ப்ச் ப்பா! எவ்ளோ விவரம்!” என்றவள்,

 

“ஆமா! லாவண்யாவை கல்யாணம் பண்ணிருக்கலாம்லனு சும்மா ஒரு ஃபிளோல கேட்டேன்!” என்றவள் காதைப் பிடித்து வலிக்க தான் திருகினார் லதாவும்.

 

“அவனுக்கு கோவம் வரும்னு தெரிஞ்சே பண்ணிருக்க” என்று சொல்லவும்,

 

“அவங்க தான் ஆரம்பிச்சாங்க பிரண்ட்ஸ்ஸோட ட்ரிப் போறேன்னு!” என்று அவனை பார்த்தபடி பல்லவி சொல்ல, பல்லைக் கடித்தவன் அறைக்கு சென்றுவிட்டான் கோபத்தோடே!

 

“இதுங்களோட!” என லதா ஆயாசமாய் பார்க்க,

 

“யூ டோன்ட் ஒரி மாமியார். நான் பாத்துக்குறேன் அவரை!” என பையை கையில் சுழற்றிக் கொண்டு அறைக்கு துள்ளி ஓட, தலையை அசைத்தபடி சென்றுவிட்டார் லதாவும்.

 

அறைக்குள் அவள் வருவது தெரிந்தும் அசையாமல் அவன் இருக்க, “இதென்ன த்தான் சும்மா பேசினத்துக்கு எல்லாம் இவ்வளவு கோபம்?” என கேட்டு அருகில் அமர்ந்து கைகளில் அவன் முகம் தாங்கி பல்லவி கேட்க,

 

“பேசாத பல்லவி. டென்சனாகுது!” என்றவன் முகம் அவள் கைகளில் இருந்தாலும் அவள் கண்களை சந்திக்காமல் முகத்தை திருப்பி இருந்தான்.

 

“சரி சாரி! அவ்வளவு தானே?” அவள் கேட்க, 

 

“ப்ச் போ டி!” என தட்டிவிட்டவன், பின் அவள் கைகளை எடுத்து தன் தலையில் வைத்து, “ப்ரோமிஸ் பண்ணு இப்படி பேச மாட்டேன் இனினு!” என்று சொல்ல,

 

“சும்மா சொன்னதுக்கு இவ்வளவா?” என்றாலும், கையை எடுத்துவிட்டவள்

 

“இனி சொல்லல!” என்றாள். அதன்பின் தான் அவனுமே தணிந்து வந்தான். மூன்று மாதத்தில் மட்டும் அத்தனை முறை இந்த வார்த்தையை விளையாட்டாய் என்றாலும் அவளுக்கு புரியும்படி தனக்கு பிடிக்கவில்லை என்றே சொல்லியும் கேட்காதவள் இப்பொழும் அத்தனை சாதாரணமாய் சரி என்று சொல்ல, அவளை நம்ப தான் முடியவில்லை அவனுக்கு.

 

“இனி இப்படி சொன்னா சீரியஸா நான் அக்ஷன் எடுப்பேன் பல்லவி. இது எனக்கு சுத்தமா பிடிக்கல!” என மீண்டும் அவன் சொல்ல,

 

“அதான் சரினு சொல்லிட்டேனே த்தான்!” என்றவள் அவன் மடியில் சாய்ந்துவிட்டாள். அதற்குமேலும் எங்கே கோபத்தை இழுத்து பிடிக்க?.

 

அவளுக்கு புரிய வேண்டுமே என அத்தனை பொறுமையாய் மீண்டும் அவன் எடுத்து சொல்ல,

 

“பல்லவி ஒருமுறை சொன்னாளே கேட்டுப்பா. இனி பேசினா சொல்லுங்க!” என்று பேசவும் விடவில்லை அவனை.

 

இரு நொடி அசையாமல் பார்த்தவன் அவள் தலையில் கொட்டு வைத்து நெஞ்சோடு அணைத்தும் கொண்டான்.

 

அஞ்சலியைப் போலவே தான் அவளும் இங்கிருப்பவர்களுக்கு செல்லப்பிள்ளை. 

 

இந்த குழந்தைத்தனம் அது அவர்களிடம் மட்டும் தான். மற்றபடி அத்தனை எளிதாய் வெளியுலகை தெரிந்து கொண்டிருந்தாள்.

 

அஞ்சலிக்கு கல்லூரிப் பற்றிய தெளிந்துணர்வையும் அவ்வபொழுது கற்று கொடுப்பாள். 

 

அதே நேரம், “ஒண்ணாம் தேதி சம்பளம் வந்துடுச்சு பாஸ். உங்க காசு இந்த மாசத்துக்கு அனுப்பிட்டேன்!” என்பவள் மீதி பணத்தில் பெரும் பங்கை தாய் கணக்கிற்கும் லதா கணக்கிற்கும் அனுப்பிவிடுவாள்.

 

“இதெதுக்கு டி?” என லதா முறைத்தாள்,

 

“வச்சிருங்க லதாம்மா. தேவைப்பட்டா வாங்கிப்பேன்ல? கணக்கு வழக்கு எல்லாம் நம்மளோட இருக்கட்டும். உங்க வீட்டுக்காரர் என் வீட்டுக்காரர்னு யாருக்கும் தெரிய கூடாது. அஞ்சலிக்கு வேணும்னா மட்டும் குடுத்துடுங்க!” என்று அவள் சொல்லி அந்த பக்கம் சென்றால் லதா மகனிடம் அன்று நடந்தது என்று ஒன்று விடாமல் எழுதிவிடுவார்.

 

“அவளோட ஆசை ம்மா இதெல்லாம். தனியா இருந்தது, கூடவே அவ அப்பாவை இழந்ததும் இன்னும் தனியா பீல் பண்ணிருக்கா. அப்ப நினைச்சதெல்லாம் தான் நம்மகிட்ட நடத்திக்கிறா. ரொம்ப நல்ல பொண்ணு” என்று கூறுபவன், அவளுக்கென்று அந்த மாதத்திற்கான செலவிற்கு என அவளுக்கு பணம் அனுப்பி வைக்க,

 

“நன்றி கணவரே!” என்ற செய்தியோடு, வீட்டிற்கு தேவையானதை எல்லாம் அவளே தான் வாங்கி வைப்பது யாரும் செய்யும் முன்.

 

மொத்தமாய் வீட்டின் அனைவரையும் கொள்ளை கொண்டிருந்தாள். மகேஸ்வரனோடு மட்டும் அதிக உறவாடல் இல்லை என்றாலும் முகத்திருப்பலும் இல்லை. 

 

ஆறு மாத காலம் இப்படி மகிழ்ச்சியும் சுவாரசியமும் என ஓடி இருக்க, அன்றைய தினத்தை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைப்பதை போல, தன் தாய்மை செய்தியை ஈஸ்வரிடம் அவள் வார்த்தைகளற்று விசும்பலோடு பகிர்ந்தவள் அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.

 

“பல்லவி! டேய்! நிஜமாவா?” என்றவன் தான் பார்த்ததை கொண்டாடும் மகிழ்ச்சியில் மனைவி முகம் நிமிர்த்த, அவள் தான் இன்னுமாய் அவனோடு இணைப்பை இறுக்கி இருந்தாள்.

 

அவள் உணர்வுகளையும் உணர முடிந்தவன் மெதுவாய் தட்டி கொடுத்து அவள் விசும்பலும் நிற்கும் வரை தலையில் கைவைத்து உடன் நின்று என அவர்களுக்கான நிமிடங்கள் எல்லாம் அழகானவை.

 

வீட்டில் ஏற்கனவே சந்தோசம் களைகட்டும். இப்பொழுது சொல்லவும் வேண்டுமா என்பதை போல லதா இனிப்போடு கொண்டாட, மகேஸ்வரன் வந்ததும் அவருக்கும் செய்தியோடு இனிப்பும் பகிரப்பட்டது.

 

தன் குடும்பம் விரிவடையும் மகிழ்ச்சி அவரிடமும் தான். எத்தனை இறுமாப்பாய் சுற்றி வந்தாரோ இப்பொழுது எல்லாம் அத்தனைக்கும் அமைதியாய் மாறிப்போனார்.

 

முன்பு அதற்கும் கூட கோபம் வரும். இப்பொழுது அனைத்தையும் ஏற்று கொள்ளும் பக்குவம் சேர்ந்திருந்தது. யாரும் இருந்திருந்து சொல்லி கொடுக்கவில்லை. காலம் மாற மாற அவராய் கற்று கொண்டது தான் அனைத்தும்.

 

இடையில் லாவண்யா திருமணம் வெளிநாட்டில் முடிந்ததாய் செய்தியோடு அடுத்த ஒரு மாதத்தில் இந்தியாவில் வரவேற்பும் நிகழ்வதாய் பத்திரிக்கை வந்து சேர,

 

“இனி எதாவது பேசின!” என மனைவியை அதட்டினான் கீர்த்திஸ்வரன் அதை அவளிடம் காண்பித்து.

 

“இப்படி ஏமாத்திட்டீங்களே அவங்களை. எங்கேலாம் சுத்தி துக்கப்பட்டு துயரப்பட்டு இந்த நாட்டைவிட்டே அனுப்பிட்டீங்களே இப்படி அவங்களை. எவ்வளவு நல்ல பொண்ணு தெரியுமா?” என லதா முன்பே கணவனிடம் அவள் சொல்ல,

 

“ஒரு நாள் ஈஸ்வர் சொன்னான். லாவண்யாவை விட இவ தான் ம்மா மோசம் பார்த்து பழகிக்கங்கனு. எத்தனை உண்மை தெரியுமா?” என பதிலுக்கு லதா வாரிவிட,

 

“ஆமாமா! என் அண்ணா கூட செஞ்ச தப்புக்கு தண்டனையா உங்களை காதலிச்சதுக்கு கல்யாணமும் பண்ணிக்கிச்சு. ஆனா நீங்க இருக்கீங்களே! என் அப்பா பண்ணினத்துக்கு மொத்த குடும்பத்தையும் எப்படியெல்லாம் பழி வாங்குனீங்க?” என அஞ்சலியும் சேர்ந்து கொள்ள,

 

“இதுக்கு மட்டும் மொத்த குடும்பமும் ஆஜர் ஆவிங்களே! ஒரு வார்த்தை சொல்லிற கூடாது இந்த பையனை. குடும்பமா கும்மி அடிச்சிட வேண்டியது. அதைப் பார்த்து என்னவொரு ஆனந்தம்?” என ஈஸ்வரை தான் அதற்கும் முறைப்பாள் பல்லவி.

 

“போச்சு! உங்க சந்ததி விரிவாக என் வேலையை விட வேண்டியதாகிப் போச்சு. இனி எப்படி நான் என் கடனை அடைப்பேன்?” என தினம் தினம் அவள் புலம்ப,

 

“அதான் அவன்கிட்ட கடன் வாங்குவியே வட்டி இல்லாம. அப்படி வாங்கி குடுத்துடு!” என்று சொல்லும் பொழுது சிரிப்பு பொங்கும் அனைவருக்குமே.

 

“வேற வழி? அவர் தான் தரணும். சும்மா எல்லாம் இல்ல. அதுவும் கடன் தானே?” என்பவள் சொல்லில்,

 

“இதே மாதிரி அழகும் அறிவுமா என் பேத்தியை பெத்து என் கையில சேர்த்துடு. அந்த காசை ரத்து பண்ணிடலாம். நான் சிபாரிசு பண்ணுறேன்!” என லதா சொல்ல, மகேஸ்வரணும் இத்தனை நாளும் இதை எல்லாம் அறிந்தவர்,

 

“ஏன் ரத்து பண்ணனும். பேத்தி பிறந்தா நானே அந்த கடனை அடைச்சிடுவேன்!” என்று சொல்லி தினசரி நாளிதழ் கொண்டு முகத்தை மறைத்துக் கொள்ள, லதாவும் ஈஸ்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவருக்கு அத்தனை சிரிப்பு.

 

பல்லவியும் அதில் கணவனைக் கண்டு கண் சிமிட்டி புன்னகைத்திருந்தாள்.

 

கணவன் மனைவி ஆண் மகன் பெண் மகள் என இருந்த பொழுதும் அத்தனை அமைதியாய் வீடு எப்பொழுதும் ஒரு நிசப்தமாய் என இருந்து வந்திருக்க, எப்பொழுதும் கலகலவென இருக்கும் ஒரு பெண் வந்து சேர்ந்த போது மொத்தமாய் மாறிப் போனது அந்த வீடு.

 

யாரும் யாருக்கும் சொல்லித்தர வேண்டியதில்லை. பிறப்பின் இருப்பில் கற்றுக் கொள்வது தான் அனைத்தும்.

 

கீர்த்திஸ்வரனின் காதல் மட்டுமே இங்கே ஒரு குடும்பத்தையே அவர்களுக்கான அடையாளத்தைக் காட்டிக் கொடுத்திருந்தது.

 

தனக்கு என்ன வேண்டும் என்ற ஒவ்வொருவரின் ஒரு தெளிவு தான் அந்த ஒட்டு மொத்த குடும்பத்தின் அடுத்தகட்ட வாழ்க்கையை இங்கே தீர்மானிக்கிறது.

 

அதுவும் திருமணம் என்ற ஒன்று ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு மைல்கல் தான். அதை காதலோடும் நேசத்தோடும் ஆண் பெண் என இருவருமே அவர்கள் கடந்து வரும் பாதைகளை கொண்டு செல்லும் விதம் தான் பல கதைகளையும் காதலையும் வரலாற்றாய் பதிவு செய்கிறது.

 

இங்கே கீர்த்திஸ்வரன் பல்லவி காதல் அவர்கள் குடும்பத்தின் நேசம் என காலம் கடந்தும் பாசம் தொடர்ந்து நிற்கும்.

 

 

சுபம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!