தேன் சிந்துமோ மேகம்-04
அத்தியாயம் – 4
எழிலனின் பேச்சில் திகைத்தாலும், முகத்தில் காட்டிக் கொள்ளாமல் முறைத்துப் பார்த்தாள் நிலா.
“என்ன முறைப்பு? உன் ஃப்ரெண்ட் எல்லாம் வண்டி ஓட்டறாங்க தானே. நீயும் வண்டி ஓட்டினா, இப்போ யாரையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை தானே.” என்றான் எழிலன்.
“என் வீட்டில் என்னை வந்து கூப்பிட்டுக்குவாங்க. உங்களுக்கு என்னப் பிரச்சினை?” என்றாள் நிலா.
Advertisement
“இப்படி சின்ன விஷயத்துக்கும் அவங்களை எதிர்பார்க்கிறதால் தான், உன்னோட லைப் பற்றி நீ யோசிக்கிறது இல்லை” என்றான் எழிலன்.
“என் லைப் பற்றி நீங்க கவலைப்பட வேண்டாம்”
“நான் கவலைப்படாமா, யாரு கவலைப்படுவா?”
Advertisement
எழிலனின் கேள்விக்குப் பதில் சொல்ல நிலா வாய் திறக்கும் நேரம், ஆதிரா வண்டியோடு வந்து விட, எதுவும் பேசவில்லை.
Advertisement
எழிலனும் “அட. இதுதான் உங்க கியூட்டியா. நிஜமாவே கியூட்டா இருக்கு” என்றான்.
“எஸ் எஸ். நான் சொன்னா யாரும் ஒத்துக்க மாட்டாங்க. தாங்க்ஸ் எழிலன் சர்.” என்றவள், “நிலா, உன் பாசமலர் பாஷா வரதுக்குள்ளே மீ எஸ்கேப்” என்றாள் ஆதிரா.
அதோடு எழிலனின் புறம் திரும்பி “எழிலன் சர். ஒரு ஃப்ரீ அட்வைஸ். உடனே இடத்தைக் காலி பண்ணிடுங்க இல்லாட்டி சேதாரம் பலமா இருக்கும்” என்று கூறி, இருவருக்கும் பை சொல்லிவிட்டுச் சென்றாள் ஆதிரா.
Advertisement
“உங்க பாஷா குடும்பம் உன் ஃப்ரெண்ட கூட விட்டு வைக்கலையா?” எனக் கேட்டான் எழிலன்.
நிலாவோ ரோஷத்துடன் “அவ சும்மா சொல்றா. எங்க வீட்டில் இருக்கிறவங்க ரவுடியா என்ன? கொஞ்சம் பார்த்துப் பேசுங்க” என்றாள்.
“பாருடா. நிலவழகிக்குக் கோபம் எல்லாம் வருது” என எழிலன் ரசனையுடன் கூற, நிலாவின் முகம் சட்டென்று சிவந்து போனது.
அவனின் பார்வையில் முகம் சூடேறுவது போல தோன்ற, வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.
“என்ன அழகிக்குப் பேச்சே வரலை” என மேலும் எழிலன் நிலாவைச் சீண்ட, பதில் சொல்ல வேகமாகத் திரும்பினாள் நிலா.
அந்த நேரம் சரரென்று ஒரு ஆடி கார் வந்து நிற்கவும், நிலா நிதானித்தாள்.
புல்லட் வண்டியில் அமர்ந்திருந்த எழிலன் அந்த வண்டியைப் பார்த்திருக்க, வண்டியின் கதவைத் திறந்து இறங்கி வந்தான் எழிலனின் வயதை ஒத்த ஒருவன்.
எழிலனைப் பார்த்துவிட்டு அவன் அருகில் செல்லப் போக நிலா “அண்ணா” எனத் தடுத்தாள்.
“தனியா ஏன் நிக்கற? எதுவும் பிரச்சினையா நிலா?” எனக் கேட்டான் அவன்.
“ஒண்ணுமில்லை அண்ணா. இப்போ தான் ஆதிரா கிளம்பினாள்.” எனக் கூறவும், “கெட் இன் தி கார்” என்றான் அவளின் அண்ணன்.
நிலா அமைதியாகக் காரில் ஏற, அவளின் அண்ணனோ “டோன்ட் ஸ்டால்க் நிலா” என எழிலனைப் பார்த்துக் கூறிவிட்டு தானும் காரில் ஏறச் சென்றான்.
எழிலன் “மிஸ்டர் நிலவன்” என்றழைக்க, திரும்பிப் பார்த்தான் நிலாவின் அண்ணன் நிலவன்.
“உங்க சிஸ்டர மட்டும் என் லைப் பூரா ஸ்டால்க் பண்ணுவேன். தட்ஸ் மை ரைட்ஸ் பிகாஸ் ‘இன்னாரக்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று’.” எனப் பதிலைப் பாடலாகக் கொடுத்தான் எழிலன்.
“யு.” என எழிலன் அருகில் மீண்டும் செல்லப் போக, நிலா “அண்ணா, கிளம்பலாம்” என்றாள். “வில் சீ லேட்டர்” என்றபடிக் காரைக் கிளப்பினான் நிலவன்.
அதை சிறு ஏளனச் சிரிப்புடன் பார்த்த எழிலன், அந்த ஆடி காரைப் பின் தொடர்ந்து சென்றான்.
ஏதோ யோசனையில் வேறு எதுவும் கேட்காமல் கார் ஒட்டிக் கொண்டிருந்தான் நிலவன். நிலாவும் அசதி போல கண்களை மூடிக் கொண்டிருந்தாள்.
தன்னிச்சையாக கண்ணாடியைப் பார்த்த நிலவன் “காட். இப்போ எதுக்கு இவர் பின்னடியே வரார்” எனக் கோபமாகப் பேசினான்.
நிலவனின் பேச்சில் கண் முழித்த நிலாவும் “யாரைச் சொல்றணா?” என்றாள்.
“எல்லாம் அந்த லெக்சரரைத் தான் சொல்றேன்”
“அவரை எதுக்கு இப்போ இழுக்கறீங்க?”
“நான் ஏன் இழுக்கறேன்? அவர் தான் என்னைத் துரத்தறார்” என்றான் நிலவன்.
அண்ணன் என்ன சொல்கிறான் என யோசித்தவள், திரும்பிப் பார்க்க, ஹெல்மெட் முகத்தை மறைத்தாலும், எழிலனின் புல்லட் அவர்களைப் பின்தொடர்வது புரிந்தது.
நிலாவின் முகத்தில் கலக்கம் தெரிய, “இப்போ என்ன ஆச்சு? நாங்க எல்லாம் இருக்கோம். உன்னைத் திரும்பியும் அந்த தீப்பெட்டி வீட்டுக்கு அனுப்ப மாட்டோம்.” என்றான் நிலவன்.
“அண்ணா, அவங்க வீடு தீப்பெட்டி சைஸ் எல்லாம் இல்லை.” என மறுத்தாள் நிலா.
“அது சரி. அந்த வீட்டில் இருக்கறது நாலு பேர். ஆளுக்கு ஒரு பெட் ரூம் இருந்திட்டா பெரிய வீடா? நம்ம வீட்டு அவுட் ஹவுஸ் கூட அதை விடப் பெரிசா இருக்கும். தெரியும் தானே” என்றான் நிலவன்.
“வீடு அவங்களுக்கு கம்ஃபர்ட்டா இருக்கணும்னு அப்படிக் கட்டியிருக்காங்க. வீட்டைச் சுத்தி, மேலே டெரஸ்லே எல்லாம் நிறைய இடம் இருக்கு.”
“டெரஸ் எல்லாம் டியூஷன் எடுக்கனு விட்டு இருக்காங்க. சும்மா நாலு மரம், செடி இருந்தா பெரிய தோட்டமா என்ன? நாங்க மூணு பேர் வந்திருந்தப்போ எங்களுக்கு ஒரு ரூம் கூட இல்லை. ஹோட்டல்லே ரூம் போட்டு விட்டாங்க. இதே நம்ம வீட்ட பார்க்க வந்தப்போ வீட்டில் எப்படி வசதியா தங்கினாங்க?”
“அண்ணா, இது எல்லாம் தெரிஞ்சு தானே நான் சம்மதிச்சேன். அதை எல்லாம் பேசாத” என்றாள் நிலா.
“ம். நீ இப்படியே அவங்களுக்கு ஒத்து ஊதுற தைரியத்தில் தான் ஐஞ்சு வருஷமா நீ எப்படி இருக்கனு கூட எட்டிப் பார்க்காம இருக்காங்க” என்றான் நிலவன்.
இன்று காலையிலிருந்து நிலாவும் இதையே தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள். எழிலனின் அம்மா மலர்விழி தவிர மற்ற யாரும் அவளிடம் பேசுவதில்லை. அதிலும் எழிலன் ஒரு மெசேஜ் கூட கிடையாது. நிலாவின் மனமோ அவனின் மெசேஜ் மற்றும் பாடலுக்காக ஏங்கித் தவிக்கும்.
இருவரும் சேர்ந்து வாழ்ந்த காலங்கள் எனப் பார்த்தால் ஆறு மாதம் கூட இருக்காது. ஆனால் அந்த ஆறு மாதங்களில் நிலா எழிலன் மீது அத்தனை அன்பைக் கொட்டியிருந்தாள். அதை அவன் உணர்ந்திருப்பானா என்பதில் இன்னும் நிலாவிற்கு சந்தேகமே.
இந்த வருத்தத்தில் இருந்த நிலாவிற்கு, நிலவனும் பேச, அவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அதைப் பார்த்ததும் நிலவன் பதறி “சரி. சரி. நான் யாரைப் பத்தியும் எதுவும் சொல்லலை. நீ அழாத” என்றான்.
அண்ணன் தன் மேல் வைத்திருக்கும் பாசம் உணர்ந்தவளாக கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
பின் “இப்போ எதுக்கு நம்ம கூடவே வந்திட்டு இருக்கார் தெரியலையே” என்றாள் நிலா.
“ம். வேறே எதுவும் வேலை இல்லையோ என்னவோ?”
“இல்லைனா. எங்க காலேஜ்லே ஜாயின் பண்ணியிருக்கார்” என்றாள் நிலா.
“இது எப்போ உனக்குத் தெரியும்?” எனக் கேட்டான் நிலவன்.
“நேத்திக்கு புது லெக்சரர் வருவதா மெசேஜ் போட்டிருந்தார் ஹெச்ஓடி. இன்னிக்குக் காலையில் தான் இவர்னு தெரியும். அதோட ஹெச்ஓடிக்கு அடுத்ததா இவருக்கு போஸ்டிங் போட்டிருக்காங்க” என்றாள் நிலா.
“ம். உங்க காலேஜ் ஓனர் கிட்டேப் பேசறேன்.” என்றான் நிலவன்.
“ம்ச். வேலைக்குத் தான் வந்திருக்கார். அதை நீயே ஏன் பெரிசுபடுத்தற” என்றாள் நிலா.
“ம். நீ பேசினியா அவர் கிட்டே?” எனக் கேட்டான் நிலவன்.
“பொதுவா இன்ட்ரோ கொடுக்கும் போது மட்டும் பேசினேன். மற்றபடி எதுவும் இல்லை.” என்றாள் நிலா.
“ஓ. அதான் வாத்தியார் புல்லட் சகிதம் சென்னையைச் சுத்திகிட்டு இருக்காரா? சரி. வேலை எல்லாம் காலேஜோட முடிஞ்சது தானே. வீட்டுக்கும் பின்னடியே வந்திட்டு இருக்கார்.”
“எனக்கும் தெரியலை”
“கொஞ்சம் இரு” என்றவன், வீட்டின் அருகே திரும்பாமல், அதற்கு முன்னரே உள்ள பெரிய சாலையில் திரும்பிவிட்டான் நிலவன்.
எழிலன் அவர்கள் திரும்புவதை யோசனையோடு பார்ப்பது பின்புறக் கண்ணாடியில் தெரிந்தது. ஆனால் அவன் நேராகவேச் சென்று விட, நிலவன், நிலா இருவரும் பெருமூச்சு விட்டபடி அடுத்த வளைவில் திரும்பி தங்கள் வீடு இருக்கும் தெருவிற்கு வந்திருந்தனர்.
நிலவன், நிலா இருவரின் வீடும் இருப்பது பணக்காரர்கள் வசிக்கும் பகுதி அல்ல. எல்லா மக்களும் கலந்து இருக்கும் ஏரியா தான். ஆனால் இவர்கள் வீடு அந்த ஏரியாவிற்கு லாண்ட்மார்க் போன்றது. கடை, ஆபீஸ், வீடுகள் ஏதுவாக இருந்தாலும் அந்த பெரிய வீட்டிலிருந்து நாலாவது தெருவில், மூணாவது கடை என்பார்கள். அந்த அளவிற்கு இவர்களின் வீடு அளவில் பெரிது.
நிலாவின் வீட்டின் அருகே கார் வரும்போதே, அதற்கு அடுத்து இருந்த பெரிய கேட்டட் அபார்ட்மெண்டின் உள்ளே எழிலனின் புல்லட் செல்வது தெரிந்தது.
நிலவன் கார் அவர்கள் வீட்டு கேட்டில் நிற்க, காரை ஸ்கேன் செய்த பின் கேட் திறந்தது. ஆட்டோமேடிக் கேட். வாட்ச்மேன் எல்லாம் விசிடர்ஸ் வந்தால் அவர்களை விசாரிக்க, முறைப்படுத்த என்று பணியமர்த்தப் பட்டவர்கள்.
வீட்டு மனிதர்கள் யாரும் எதற்காகவும் வெளியில் காத்து நிற்க கூடாது என்பது அவர்கள் வீட்டின் விதி.
நிலவனின் கைகள் தன்னைப் போல காரை இயக்கினாலும், சிந்தனை முழுதும் எழிலன் பற்றியே இருந்தது. போர்டிகோவில் கார் நிற்கவும் தான் இருவரும் இருக்கும் இடம் உணர்ந்து இறங்கினார்கள்.
வீட்டிலேயே இருக்கும் நிரந்தர டிரைவர் வந்து நிற்க, அதை கவனிக்காமல் அண்ணன், தங்கை உள்ளே செல்லப் போனார்கள்.
“சர்” என்று டிரைவர் குரல் கொடுக்கவும், என்ன என்பது போல பார்த்தான் நிலவன்.
“கார் கரேஜ்லே விட்டுடவா?” எனக் கேட்டார் டிரைவர்.
அப்போது தான் அன்றைக்கு ஒரு பார்ட்டி செல்லவேண்டும் என்ற நினைவு வந்தது.
“இருக்கட்டும் இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் வெளியில் கிளம்பணும்” என்று விட்டு உள்ளே சென்றான் நிலவன்.
அவனைப் பின்தொடர்ந்த நிலா எங்கே என்பது போல பார்த்தாள். நிலவன் வெளி வேலைகள் அனைத்தும் முடித்தப் பின் தான் வீட்டிற்கு வருவான். குறைந்தது எட்டு மணி தான் அவனின் வழக்கமான வீடு திரும்பும் நேரம். இது போல சீக்கிரம் வந்தால் மீண்டும் வெளியே செல்வதில்லை.
நிலாவின் பார்வையைக் கண்டு “ஒரு வெல்கம் பார்ட்டி இருக்கு” என்றான் நிலவன்.
“ம். பிசினஸ் ரிலேடெட்டா ?”
“இல்லை. அலுமினி மீட் தான். இந்த தடவை நான் அசோசியேஷன் தலைவர் என்பதால் பிரெசைட் பண்ணியாகனும்.”
“ஓ. சரி” என்றபடி தன் அறை நோக்கிச் சென்றாள் நிலா.
“நிலா” என்று அவளைத் தடுத்த நிலவன், “எழிலன் கிட்டே பி கேர்ஃபுல்” எனக் கூறினான்.
நிலா அண்ணனுக்காக மெதுவாகத் தலையாட்டிவிட்டுச் சென்றாள். உள்ளே செல்லும்போதே அண்ணனின் கூற்றில் அவளறியாமல் சிரிப்பு வந்தது.
நிலவன் சரியாக இருபது நிமிடங்களில் ரெடியாகி, பார்ட்டிக்குச் சென்றான்.
அது த்ரீ ஸ்டார் ரக ஹோட்டல். தான் படித்தக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவனாக நிலவன் பொறுப்பேற்று இருந்தான். பொதுவாக காலேஜ் அலுமினி குரூப் என இருந்தாலும், ஒவ்வொரு ஊரிலும் இருப்பவர்கள் அவர்களுக்குள் ஒரு குரூப் உருவாக்கி இருந்தார்கள். அதில் சென்னை நகர அலுமினி குரூப் ஹெட் நிலவன்.
காலேஜ் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் இவர்கள் குரூப் மூலமாக உதவிகள் செய்வதும், படித்து வெளியே வருபவர்களுக்கு அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை கூறுவது என எப்போதுமே கலகலவென இருக்கும் குழு தான் இவர்கள். ஆக்கப்பூர்வமான விஷயங்களும் முன்னெடுப்பது உண்டு.
இதில் இன்றைக்கு பழைய அலுமினி ஒருவர் சென்னைக்கு ஆராய்ச்சி படிப்பிற்காக வந்திருப்பதாக தகவல்கள் வந்திருந்தது.
நிலவன் பார்ட்டி நடக்கும் ஹோட்டலுக்குச் சென்று எல்லாவற்றையும் சரிபார்த்தான். பிறகு மேடையில் போட்டிருக்கும் நாற்காலி ஒன்றில் அமர்ந்து கொண்டான்.
சற்று நேரத்தில் விழா ஆரம்பமாக, யார் அந்த ஆராய்ச்சியாளர் எனத் தேடிப் பார்க்க, நிலவனுக்குத் தெரியவில்லை. சென்ற வாரம் முழுதும் பிசினஸ் விஷயமாக வெளிநாடு சென்றிருந்ததால், விழா ஏற்பாடுகளைக் கவனித்தது அவனின் உதவியாளர்களில் ஒருவர் தான். இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மட்டுமே கொடுத்து இருந்தான். அதனால் தான் கொஞ்சம் முன்னதாகவே வந்து இருந்தான் நிலவன்.
விழா தொகுப்பாளர் “இன்றைய சிறப்பு விருந்தினர் பற்றிச் சொல்வதென்றால் அவர் மட்டுமல்ல. அவரது பெற்றோரும் பழைய மாணவர்களே. அந்த கல்லூரியிலேயேப் படித்து, அங்கேயே பேராசிரியராகப் பணியாற்றி தற்போது கல்லூரி முதல்வராகாவும் பணியாற்றுகிறார் நமது விருந்தினரின் தந்தை இளஞ்செழியன். அவரது அன்னை மலர்விழியும் நமது கல்லூரியில் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். இன்றைய விருந்தினரும் நமது கல்லூரியிலேயே படித்து, பேராசிரியராகவும் பணியாற்றி, தற்போது ஆராய்ச்சி மேற்படிப்பிற்காக சென்னை வந்திருக்கிறார். அவரை நமது பழைய மாணவர்கள் சங்கத்தின் சார்பாக வரவேற்கிறோம். இதோ பேராசிரியர் திரு எழிலன் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்” என்று வரவேற்றார்.
தொகுப்பாளர் பேசும்போதே ஓரளவு யூகித்து இருந்த நிலவன், எழிலனின் பேரைச் சொல்லும்போதே லேசாகத் தலையில் அடித்துக் கொண்டான். ஏனெனில் எழிலன் சென்னையில் தங்குவதற்கு வீடு பார்த்துக் கொடுக்குமாறு கேட்ட போது, தங்கள் வீட்டின் அருகில் உள்ள கேட்டட் வில்லாவைப் பற்றிக் கூறியது நிலவன் தான். எழிலன் தான் அந்த பழைய மாணவர் என்று நிலவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.
தொகுப்பாளர் “பேராசிரியர் எழிலன் அவர்களுக்கு, நமது அலுமினி சங்கத் தலைவர் அவர்கள் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்கிறார்” எனவும், முகத்தில் ஒட்ட வைத்த சிரிப்புடன் எழுந்து நின்றான் எழிலன்.
“வெல்கம்” எனக் கூறி நிலவன் பூங்கொத்துக் கொடுக்க, எழிலனோ “தாங்க்ஸ் மச்சான்” என்றான்.
எழிலனின் மச்சான் என்ற அழைப்பில் நிலவன் எழிலனை முறைக்க, அவனோ கண்ணடித்துச் சிரித்தான்.
-தொடரும்-
