பாறையில் மலர்ந்த தாமரையே! 29
இரண்டு மாதங்கள் முடிவடைந்திருந்த நிலையில் தேதித்தாளை கிழித்தெறிந்த நொடி நெஞ்சோரம் ஏதோ ஒன்று கனத்து நிற்கிறது..
ஆழிசூழ் உலகை போல வலிய சந்தோஷங்களில் தங்களை மூழ்கடித்துக் கொண்டாலும்.. கிரகணம் போல் நிழலாக படியும் சோகமும் குற்ற உணர்ச்சியையும் தவிர்க்க முடிவதில்லை.
வேணு இப்போதெல்லாம் பொறுப்பாக கார் ஓட்டுகிறான்.. அமோக வருமானம் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.. ஒரு நாள் ரைட் நிறைய புக் ஆகிறது.. இன்னொரு நாள் எதுவுமே இருப்பதில்லை.. ஆனாலும் சமாளிக்க முடிகிறது.
மீனாட்சி பழைய அலுவலகத்திலிருந்து வேலையை ராஜினாமா செய்து விட்டாள். லஷ்மி தனக்கு தெரிந்தவர்கள் மூலம் சிபாரிசு செய்து அவளுக்கு வேறு ஒரு புது கம்பெனியில் வேலை வாங்கி கொடுத்திருக்கிறாள்.
Advertisement
பழைய சம்பளத் தொகை கிடைக்காது என்றாலும் அங்கு போல் புது கம்பெனியில் பணத்தை நிறுத்தி வைத்துக் கொண்டு இழுத்தடிப்பதில்லை.. மாதாமாதம் ஒழுங்காக சம்பளம் வருகிறது.. இது போதுமே..!
வாத்சல்யன் சந்தான லஷ்மிக்கு தினமும் தீப்தியை பார்க்காமல் நாள் விடிவதில்லை.. முடிவதில்லை..
இதை பழக்கமாக்கி கொண்டால் பிறகு தங்களுக்குத்தான் பின்னாளில் வேதனை என்று மனம் உறுத்தினாலும்.. பால் பற்கள் தெரிய கண் முன்னே வந்து சிரிக்கும் தீப்தியின் பிஞ்சு முகத்தை பாராமல்.. அவளை தூக்கி கொஞ்சி கன்னத்தில் முத்தமிடாமல் வாத்சல்யனுக்கு மூச்சு முட்டுகிறது.
Advertisement
நடு இரவில் கூட அவர்கள் வீட்டு கதவைத் தட்டி.. “தப்பா நினைக்காதீங்க.. இப்பதான் வேலை முடிஞ்சு வர்றேன்.. பாப்பாவை பாத்துட்டு போகலாம்னு வந்தேன்..!” என வாசலில் பரிதாபமாய் நிற்பவனை பெருந்தன்மையாக உள்ளே அழைத்து அமர வைத்து.. உறங்கிக் கொண்டிருக்கும் பிள்ளையை கொண்டு வந்து அவன் கையில் கொடுக்கிறார்கள் வேணுவும் மீனாட்சியும்..!
Advertisement
அவர்களைப் பொறுத்தவரை வாத்சல்யனும் சந்தான லஷ்மியும் குழந்தை மீது வைத்திருக்கும் பாசம் மட்டுந்தான் கண்ணுக்கு தெரிகிறது.
என் பிள்ளைதான் எனக்கு மட்டுந்தான்.. என்று உரிமை கொண்டாடுவதில்லை அவர்கள்.
மூன்று குழந்தைகளும் வாத்சல்யன் சந்தான லஷ்மிக்கு முன்னுரிமை கொடுத்தாலும் பெற்றவர்களின் மனதில் எந்த அப்பழுக்கும் படிவதில்லை. சொல்லப்போனால் பிள்ளையில்லாத அந்த தம்பதியருக்கு தன் குழந்தைகள் இந்த அளவிலாவது ஆறுதலாக இருக்கிறார்களே என்ற நிம்மதியும் சந்தோஷமும் அவர்களிடம் உண்டு.
Advertisement
ஆனால் தீப்தியை பொறுத்தவரை லஷ்மி எப்போதும் அவளுக்கு வில்லிதான்.
அன்றொரு நாள் மீனாட்சியும் லஷ்மியும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மீனாட்சி சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருக்க.. லஷ்மி அவள் தந்த தேநீரை பருகியபடி சோபாவில் அமர்ந்திருந்தாள்.
வீட்டை விட்டு வெளியே வந்த ஐந்து வயது குழந்தை பாதாள சாக்கடையில் தவறி விழுந்ததாக திரையில் செய்தி ஓடிக் கொண்டிருந்தது. சிசிடிவியில் பதிவாகியிருந்ததை திரும்பத் திரும்ப காட்டிக் கொண்டிருந்தார்கள்.
“ஸ்ஸ்.. ஐயோ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்திருந்தாக்கூட அந்த குழந்தையை காப்பாத்தி இருக்கலாமே..!” பதறிப்போன மீனாட்சியின் கண்கள் கலங்கியிருந்தன.
லஷ்மிக்கும் கூட அந்த குழந்தையின் இறப்பை தொலைக்காட்சியில் பார்த்த கணம் மனம் வெகுவாய் பாதித்தது. உடம்பு நடுங்கியது. மேற்கொண்டு செய்தியை பார்க்க முடியாமல் தொலைக்காட்சியை அணைத்தாள்..
“அந்த குழந்தையோட அம்மா அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க..! பெத்த பிள்ளையோட சாவை கண் முன்னாடி பாக்கற வலி இருக்கே..!” என கண்களை உருட்டி தலையை உலுக்கினாள் மீனாட்சி. “அது நரகத்தை விட கொடுமையானது.. நினைச்சு கூட பார்க்க முடியாத வேதனை.. எதிரிக்கும் கூட அப்படி ஒரு நிலைமை வரக்கூடாதுக்கா.. கடவுள் அப்படி ஒரு தண்டனையை மட்டும் யாருக்குமே கொடுக்கக் கூடாது.”
திக்கென தொண்டைக்குழிக்குள் ஏதோ ஒன்று கடுமையான முட்களோடு உருண்டது.
“ம்ம்..! அம்மா அப்பா பொறுப்பா இருந்திருக்கணும்.. குழந்தையை கவனிச்சு பார்த்திருந்தா இப்படி ஒரு உயிர் சேதம் நடந்திருக்குமா..?” தனக்குள் உரசிக் கொண்டிருக்கும் கருப்பொருளுக்கு நியாயம் கற்பிக்க நினைக்கிறாள் லஷ்மி.
“அப்படி சொல்லாதீங்கக்கா.. எந்நேரமும் குழந்தையை கண்கொத்தி பாம்பா பாத்துட்டே இருந்தாலும் தப்பு நடக்கத்தான் செய்யுது. பெத்தவங்களுக்கு ஆயிரம் வேலை இருக்குமே..! அந்த காலத்துல நம்ம அம்மா அப்பா ஏழெட்டு பெத்து போட்டுட்டு பிள்ளைகளை கழுகு வட்டமிடற மாதிரி பாத்துட்டேவா இருந்தாங்க.. ஆனா இப்போ அப்படியில்லையே..! குழந்தைங்க மேல ஒரு கண்ணு வச்சு உஷாராத்தான் இருக்கோம்.. ஆனாலும் எப்படியாவது தப்பு நடந்திடுது.. சரி அப்படியே பெத்தவங்க கவனக்குறைவா இருந்தாலும்.. அந்தக் தப்புக்கு தண்டனை குழந்தையோட மரணம்னு சொல்றது அபத்தம் இல்லையா.. இதையெல்லாம் பார்க்கும் போது சின்ன பாப்பாவை நினைச்சு மனசு பக்கு பக்குன்னு ஆகிப் போகுது..” பலவீனமாக உதட்டை சுழித்தாள் மீனாட்சி..
“ஏ.. ஏன் காரணமில்லாம அவளை இழுக்கற..! நம்ம தீப்தி குட்டியை பாத்துக்க இத்தனை பேர் இருக்கோமே..!” நெஞ்சம் பதைபதைத்தாள் லஷ்மி.
“தெரியலக்கா.. தீப்தி குட்டி வெளியே போகும்போதெல்லாம் அவளுக்கு ஏதாவது ஆபத்து வந்துடுமோன்னு மனசு வேகமா அடிச்சிக்குது.. என்னன்னு சொல்ல தெரியல.. குழந்தையை பத்தி யோசிக்கும்போதெல்லாம் ஒரு மாதிரி படபடன்னு வந்துடுது..! பயமாயிருக்குக்கா..!” மீனாட்சி கண்கலங்கினாள்.
“ஏய் லூசு..! கண்டதையும் நினைச்சு மனச போட்டு குழப்பிக்காத..! நம்ம தீப்திக்கு எதுவும் ஆகாது..!” வார்த்தைகளை முடிக்க முடியாமல் நா வறண்டு போக எச்சில் விழுங்கினாள் லஷ்மி..!
“இப்பதான் குடும்பம் கொஞ்சம் நிம்மதியா இருக்குது..! ஆனா மனசுக்குள்ள ஏதோ சொல்லத் தெரியாத வலி.. என் தீப்தி குழந்தையை பாரமா இருக்கா.. இவளை ஏன்தான் பெத்தேனோ தெரியலைன்னு பலமுறை திட்டியிருக்கேன்.. ஆனா.. அதெல்லாம் சும்மா வாய் வார்த்தைதான்.. ஏதோ ஆத்தாமையில உளறிக் கொட்டினது.. என் குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்..” இவள் நெஞ்சை பிடித்துக் கொண்டு விம்மியதில்..
“ஏ…ய்!” என அலறினாள் லஷ்மி..!
மீனாட்சி அவளை வினோதமாக பார்த்துக் கொண்டிருக்க..! “இப்ப எதுக்கு சம்பந்தமில்லாம என்னென்னவோ பேசற..! உன்னோட ஓவர் திங்கிங் மூளையை கொஞ்சம் நிறுத்தி வை..! கற்பனை குதிரையை கட்டிப்போட்டுட்டு வேலையை கவனி..! நான் போறேன்.!”
ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து வெளியேறினாள் சந்தான லஷ்மி..!
வீட்டுக்கு வந்து கதவை சாத்திக்கொண்டு அமர்ந்தவளுக்கு உடம்பெங்கும் வேர்த்து கொட்டியது.
அந்த குடும்பத்தை மகிழ்விக்க எவ்வளவோ செய்திருந்தாலும்.. திட்டம் போட்டு சுயநலமாக தாங்கள் இழைத்திருக்கும் பெரும் துரோகத்திற்கு ஒரு பங்கு ஈடாகுமா இந்த உதவிகள ..! பாவத்திற்கு பரிகாரம் தேடிக் கொண்டிருக்கிறோமா..! அந்த தெய்வம் எங்களை மன்னிக்குமா..?
தெய்வம்தானே கண்முன்னே இப்படி ஒரு வழியை காட்டியது..?
சகிக்கவே முடியாத மரண ஓலங்கள் காதில் கேட்க.. இரு கைகளால் காதை பொத்திக் கொண்டாள் லஷ்மி..!
“அம்மாஆஆஆ..!” என்று அலறிய நேரத்தில்..
“ஏய்.. என்னாச்சு..!” என அவள் தோள்களைப் பற்றி உலுக்கினான் வாத்சல்யன்..
ஓரிரு கணங்களுக்கு பின்தான் இயல்பு நிலைக்கு திரும்ப முடிந்தது.. நிலைகுத்தி சிவந்து போயிருந்த கண்களும்.. வெளிறிப் போயிருந்த முகமும் மெல்ல சாந்தநிலைக்கு திரும்பியது.
அடுத்த கணமே சுதாரித்து விட்டாள் லஷ்மி..! மனதை அரித்து கொண்டிருக்கும் குற்ற குன்றலையும் பாரத்தையும் வாத்சல்யன் மீது இறக்கி வைக்க விரும்பவில்லை.
“எ.. என்னடி ஆச்சு..?” அவன் பதறிப் போய் கேட்க..
“ப்ச்.. சும்மா..! உங்களை ஏமாத்தத்தான்.. எப்படி இருந்தது என் ஷாக் ட்ரீட்மென்ட்..?” புருவங்களை உயர்த்தி கேட்டவளை அதிரடியாக தனக்குள் இழுத்துக் கொண்டு.. காதலினால் பல விதங்களில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து திணறடித்தான் வாத்சல்யன். கணவனின் காதலில் திளைத்து உலகம் மறந்து போனாள் லஷ்மி..!
நான்காம் மாதம் தொடங்கியிருந்த தருணம்.. இதயச் சுவர்களை சடார்.. சடாரென மோதிய வேதனை அலைகள் அவளை நிலை கொள்ளாமல் திணறடித்தன. நிம்மதியை இழந்த தருணங்களில்.. குழந்தை பிறக்கற வரைதான் இதெல்லாம் அப்புறம் எல்லாம் சரியா போயிடும்..! என நெஞ்சை தட்டி நீவிக் கொண்டாள்.
அன்றொரு நாள் தங்கையை பார்ப்பதற்காக முத்துலஷ்மியும்.. தங்க லஷ்மியும் வீட்டுக்கு வந்திருந்தனர்.
“வாங்க..!” பேருக்காக அழைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டான் வாத்சல்யன். பட்ட அவமானங்கள் கொஞ்சம் நஞ்சமில்லையே..! எதையும் மறக்க முடியவில்லை..
லஷ்மி.. வீட்டுக்கு வந்தவர்களை அழைக்கவும் இல்லை அவர்களிடம் முகம் கொடுத்து பேசவும் இல்லை.. தலையை திருப்பிக் கொண்டு வேறு பக்கம் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
முத்து லஷ்மி.. தங்கையின் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.
“எனக்கு தெரியும்.. நீ ரொம்ப கோவமா இருப்ப..! நாங்க செஞ்ச காரியம் அப்படி..! ஆனா அந்த நேரத்துல நாங்க அப்படி பேசி உன் வாயை அடக்கமா போயிருந்தா.. சண்டை வலுத்து என் புருஷனும் இவ புருஷனும் பெரிய பிரச்சனை பண்ணி எழவு வீட்டையே ஒரு வழியாக்கியிருப்பானுங்க..!”
“புருஷனை அடக்க துப்பில்ல ஆனா ஏற்கனவே நொந்து போயிருந்தவளை காயப்படுத்தி அங்கேயிருந்து விரட்டி அனுப்ப உங்களுக்கு மனசாட்சி கூசல..! உங்க எல்லாருக்கும் நான் வேண்டாதவதானே..! அப்புறம் எதுக்காக என்னை தேடி வந்தீங்க..?” வெடித்தாள் லஷ்மி.
“உன்கிட்ட ஒரு பொருளை கொடுத்துட்டு போகலாம்னு வந்தோம்..”
“எந்த பொருளையும் கொடுத்து சமாதானப்படுத்த வேண்டிய அவசியமில்லை.. பொருளுக்கு மயங்கறவ நான் இல்ல.. தயவுசெஞ்சு இங்கிருந்து கிளம்புங்க..!” சொல்லி முடிப்பதற்குள் கண்கள் நீர் வார்த்தன.
“இது நாங்க வாங்கிட்டு வந்த பொருள் இல்லை.. ஆச்சி உன்கிட்ட கொடுக்க சொல்லி என்கிட்ட ஒப்படைச்சது..!” தங்கலஷ்மி சொன்னதும் விழிகளில் தொக்கி நின்ற கேள்வியுடன் அவள் பக்கம் திரும்பினாள் லஷ்மி..!
“மத்த பொருளுங்களோட சேர்த்து இதையும் சபையில வச்சு உங்கிட்ட கொடுத்தா பிரச்சனை வரும்னு பயந்து யாருக்கும் தெரியாம இதை உன்கிட்ட ஒப்படைக்கணும்னு ஆச்சி சொல்லுச்சு..!” என்றபடியே பையிலிருந்து செவ்வக வடிவிலான ஒரு மரப்பெட்டியை எடுத்து அவள் மடியில் வைத்தாள் முத்து..
“இத்தனை நாள் பத்திரமா கட்டிக் காப்பாத்தி வைச்சிருந்த பொருளை பத்திரமா உன்கிட்ட ஒப்படைச்சிட்டோம்..! இப்பதான் நிம்மதியா இருக்கு.!” இழுத்து மூச்சு விட்டாள் முத்துலஷ்மி!
“இதெல்லாம் எதுக்கு? எடுத்துட்டு போய்டுங்க..! குண்டூசியா இருந்தாலும் சபையில கொடுக்கற அங்கீகாரம் தான் பெருசு.. வைரமா இருந்தாலும் ரகசியமா ஒளிச்சு கொடுக்கற பொருளுக்கு எந்த மதிப்பும் இல்லை..!” என்றாள் லஷ்மி!
“அப்படி சொல்லாத சந்து.. இந்த பெட்டியை பத்தின உண்மை தெரிஞ்சிட கூடாதுன்னுதான் அன்னைக்கு என் புருஷனுக்கு சப்போர்ட் பண்ணி பேசற மாதிரி நடிச்சேன்.. ஆச்சி உன் மேல ரொம்ப பாசம் வைச்சிருந்துச்சு.. என்ன நடந்தாலும் நாங்க உன் மேல வச்சிருக்கற அன்பு என்னிக்கு மாறாது. எந்த சொத்துபத்தும் வசதியும் நம்ம உறவை உடைக்க முடியாது.! உனக்காக எப்பவுமே நாங்க இருப்போம்..! நீ குழந்தையுங்குட்டியுமா நல்லபடியா வாழனும்னுதான்டி நாங்களும் ஆசைப்படறோம். அன்னிக்கு நாங்க சபையில குறுக்க வராம போயிருந்தா.. அந்த கூட்டம் இன்னும் உன்னை புண்படுத்தி பேசியிருக்கும்..! அங்கிருந்து உன்னை வெளியே அனுப்பத்தான் அப்படி செஞ்சோம்.!”
முத்துலஷ்மி அவ்வளவு எடுத்து சொல்லியும் கூட சந்தாவின் முகம் கனியவில்லை..
சகோதரிகளின் முகங்கள் வேதனையை பிரதிபலித்தன.
“பரவாயில்லை சந்து.. நீ கோவமா இருக்க..! என்னைக்காவது ஒரு நாள் நிதானமா யோசிச்சு பார்த்தா நாங்க செஞ்சது சரின்னு உனக்கு புரியும்.! இப்ப நாங்க கிளம்பறோம்..! கடவுள் உனக்கு நல்ல வழி காட்டுவார்.” தங்கலஷ்மி தங்கையின் தலையை தடவி கொடுக்க.. முத்துலஷ்மி அவள் நெற்றியில் முத்தமிட்ட பிறகு இருவருமாக அங்கிருந்து புறப்பட்டனர்.
சிலையாக அமர்ந்திருந்தாள் சந்தானலஷ்மி..! காயங்கள் நெஞ்சை கடுமையாக உறுத்திக் கொண்டிருந்தாலும்.. உடன்பிறந்த சகோதரிகளிடம் முகம் கொடுத்து பேசாமல் உபசரிக்காமல் வந்த வழியே திருப்பி அனுப்பிய.. தன் இரக்கமற்ற கல் நெஞ்சை எண்ணி.. உள்ளுக்குள் வெட்கி சுருண்டு போனாள் அவள்.
ஜன்னலுக்கு வெளியே வெயில் குறைந்து மாலை மங்கி.. இருட்டை சுமந்து கொண்டு இரவும் வந்துவிட்டது..
கூர்முனைகள் உரச மடியிலிருந்த மரப்பெட்டி தாங்க முடியாத பாரமாக கனத்து போக.. மெல்ல விழிகளை தாழ்த்தினாள் லஷ்மி..!
பெட்டியை திறந்து பார்க்கும் ஆசையில்லை.. அவளுக்கு இந்த பரிசு தேவையுமில்லை..
ஆனாலும் மறைத்து வைக்குமளவிற்கு அப்படி என்ன பொக்கிஷம் இருக்கிறது இதற்குள்.. என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம்..
மரப்பெட்டியை திறந்தாள். உள்ளே பெட்டியை நிறைத்திருந்த தங்கமும் வைரமுமான நகைகள் அவள் கண்ணை பறித்தன.
கண்கள் நிறைந்த ஆச்சரியத்தோடு நகைகளை கையிலெடுத்தாள்.. பொன் வைர ஆபரணங்களை அள்ளியெடுத்து மேனியில் சூடிக்கொள்ளும் ஆசை கிஞ்சித்திக்கும் இல்லை..
கையோடு அள்ளிக்கொண்ட நகைகளோடு மட்கிப்போன ஒரு காகிதமும் சேர்த்து வந்தது.
நகைகளைப் பெட்டியில் வைத்துவிட்டு காகிதத்தை பிரித்தாள்..
நவநீதம்மாளின் கோணல் மாணலான கிறுக்கல் கையெழுத்து.
‘என் செல்ல பொண்ணே..! என் சந்தான லஷ்மி..! பேருக்கேத்த மாதிரி மக்கா மனுஷாளோட நீ சந்தோஷமா இருக்கணும்டி..! உன் கைக்கு இந்த பெட்டி வந்து சேரும்போது ஆச்சி உயிரோட இருக்க மாட்டேன். இந்த பெட்டியை ரகசியமா உன்கிட்ட சேர்க்கறதுக்கு காரணம் இருக்கு..! சபையில உனக்குன்னு தனியா நான் எதுவும் கொடுக்க முடியாது.. பணந்தின்னும் கழுகுங்களாட்டம் எல்லாத்தையும் கொத்திட்டு போக ஒரு கூட்டம் தயாரா இருக்கு.. எல்லார் முன்னாடியும் இதை உன்கிட்ட சேர்ப்பிச்சா.. பிள்ளை இல்லைன்னு சொல்லி இதையும் களவாட திட்டம் போடுவானுங்க.. எனக்கு இதை உன்கிட்ட கொடுக்கணும்னுதான் ஆசை.. பழைய பொருளை பொக்கிஷமா எப்படி பாதுகாக்கணும்னு உனக்குத்தான் தெரியும்.. இந்த ஆச்சி வைரமா வைடூரியமா.. எப்பவும் உன் கூடவே இருப்பேன்.’
லஷ்மியின் கண்ணீர் துளிகள் அந்த பேப்பரில் விழுந்தன.
‘என்ன ஆத்தா.. அழறியா! எல்லாரும் உன்னை நாக்கு மேல பல்ல போட்டு பேசுறாங்கன்னு கலங்கறியா..! கவலைப்படாதே.. இந்த ஊர் வாய மூடற மாதிரி தங்க விக்ரகமா ஒரு பொண்ணும் முருகனாட்டம் அழகா ஒரு ஆணும் உனக்கு பொறக்கும்.. இந்த ஆச்சி சொன்னா அது கண்டிப்பா நடக்கும்.’
ஆச்சி காவிப்பற்கள் தெரிய சிரிப்பது போல் தோன்றியது.. ஒவ்வொரு எழுத்தும் ஒன்று சேர்ந்து அவளை மெய்சிலிர்க்க வைத்தன.. உள்ளம் நெகிழ்ந்திருந்தாள் லஷ்மி.
‘ஒரு ஈ எறும்புக்கு கூட கெடுதல் நினைக்காதவ நீ.. இந்த குடும்பத்துல நீ ஒரு தனிரகம் ஆத்தா..! அத்தனை பேரம்பேத்தி மத்தியில என் மனச தொட்டவ நீதான்டி பொண்ணே..! உனக்கு அப்படியே எங்குணம் பொண்ணே..! கெட்டது செய்றவங்களுக்கும் நல்லதே நினைக்கற புண்ணிய ஆத்மா என் பேத்தி.. அப்படிப்பட்ட உனக்கு என்ன குறைடி வந்துட போகுது..! நீ வேணும்னா பாரு..! உனக்கு வரிசையா புள்ளைங்க பிறக்கத்தான் போகுது.. அதுல ஒரு பிள்ளைக்கு என் பேரை நீ வைக்கத்தான் போற..! கடைசியா ஒன்னு சொல்லிக்கறேன்.. எம்புட்டு கோபம் வந்தாலும் யார் உன்னை காயப்படுத்தினாலும்.. உன் மேன்மையான குணத்தை மட்டும் விட்டுக் குடுத்துடாதே..!
அன்பு முத்தங்களுடன்
உன் ஆச்சி’
பாட்டி குறிப்பிட்டிருக்கும் அந்த மேன்மையான குணத்திற்கும் இந்த பரிசு பொருளுக்கும் இந்த கணம் தான் அருகதையற்றவள் என உணர்ந்திருந்த தருணம்..
கடிதத்தால் முகத்தை மூடிக்கொண்டு பெருங்குரலெடுத்து கதறினாள்
சந்தான லஷ்மி.
தொடரும்.
