Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

88. வித்யா வெங்கடேஷ் - நிழலாடும் நின் நினைவில்

நிழலாடும் நின் நினவில் – 22

ஓம் ஸ்ரீ சாய்ராம்

இரண்டு நாட்களாக மருமகளிடமிருந்து அழைப்பு வராததிலிருந்தே ஏதோ சரியில்லை என உணர்ந்தார் திலகா.

“நீயா ஃபோன் பண்ணுறீயா. நான் கிளம்பி வரட்டுமா?” குறுஞ்செய்தியில் மிரட்டினார்.

அடுத்த நொடியே மாமியாருக்கு அழைத்தவள், கேவலுடன் தான் ஆரம்பித்தாள்.



Advertisement

தன் யூகம் சரியே என ஆசுவாசப்படுத்திக் கொண்டவர், “சொல்லக்கூடிய பிரச்சனைன்னா சொல்லு ரம்யா,” ஆறுதலாகப் பேசினார்.

அவள் மௌனத்தில் கரைய, “சரி! சொல்லவேண்டாம். தீபாவளிக்கு அவன் வாங்கித்தந்த பட்டுப் புடைவையையாவது கொண்டுவந்து கொடு…” இடைநிறுத்தியவர், “தீபாவளிக்கு வருவதானே?” வினவினார் கவலையுடன்.

தீபாவளி பண்டிகை அன்று பிள்ளைகளுக்கு நலங்கு வைத்து, எண்ணெய் தேய்த்துவிட்டு, அவர்கள் கங்கா ஸ்நானம் செய்தபின் பூஜை அறையில் வைத்து வழிபட்ட புத்தாடைகளை ஒரு கிராம் தங்கக் காசோடு கொடுப்பது, திலகா கடைப்பிடித்து வந்த பழக்கம்.

Advertisement

தீபாவளி அன்று நிறுவனத்தில் குடும்பத்தினருடன் லஷ்மி பூஜை செய்து வழிபட்டும், தீபாவளி விடுமுறை நாட்களுக்கு முன் மருமகள்களின் கையால் ஊழியர்கள் அனைவருக்கும் பரிசுப்பொருட்களையும் இனிப்புகளையும் விநியோகிப்பது தாமோதரனின் வழக்கம்.

Advertisement

மாதக்கணக்காய் பிரிந்திருக்கும் தம்பதிகள் தீபாவளி நன்னாளிருந்தாவது மனமொத்து சேர்ந்து வாழ்வார்கள் என மனக்கோட்டை கட்டியிருந்தவருக்கு, மருமகளின் மௌனம் பயத்தைக் கொடுத்தது.

அந்தப் பக்கத்திலோ, மாமியார் உரைத்ததையும், ‘சர்ப்ரைஸ்! சர்ப்ரைஸ்!’ எனக் கணவர் அழைத்துப்போன வழிப்பாதையையும் இணைத்து, புதிரை விடுவித்தவளுக்குத் தலையே சுற்றியது.

“ரம்யா! புருஷன் பொண்டாட்டி விஷயத்துல தலையிடக்கூடாதுன்னு பார்க்கிறேன். வீணா என் பொறுமையச் சோதிக்காத,” அதட்டினார் திலகா.

Advertisement

“அவர் புடைவை வாங்கித்தரத்தான் அழைச்சிட்டுப் போகுறாருன்னு எனக்குத் தெரியாது ‘ம்மா. சோமவார விரதம் முடிஞ்சும் இவருக்குக் குணமாகலேயேன்னு டிப்ரெஷன்ல சண்டைபோட்டுட்டேன்,” சண்டையின் தீவிரத்தை மட்டும் சொல்லாமல் மென்று விழுங்கினாள்.

“சரி! சரி! அழாத! உன் நிலைமை புரியுது ரம்யா. தீபாவளிக்கு வந்துடு தங்கம். இது எனக்கும் அப்பாக்கும் எத்தனை முக்கியம்னு உனக்குத் தெரியும்தானே,” கெஞ்சிக்கேட்டார்.

“தப்பெல்லாம் என்மேல தான்ம்மா. நீங்க அவர்கிட்ட எதையும் கேட்டுக்காதீங்க. நானே அவர்கிட்ட பேசிக்கிறேன்,” ரம்யா கூறவும்தான் அவருக்கு நிம்மதியே வந்தது.

மனையாளைப் பற்றிய நினைப்பே வேண்டாம் என்றிருந்தவனா அவள் அழைப்புகளை லட்சியம் செய்யப்போகிறான்!

கணவனிடம் தோற்றுப்போன பாவை, தீர்வு தேடி மாமியாரிடமே தஞ்சம் புகுந்தாள்.

“அவர் ஃபோன் எடுக்கவே மாட்டேன்றாரு ‘ம்மா. நீங்க நினைக்குற அளவுக்குச் சின்ன சண்டையில்ல…” என்றவளின் வார்த்தைகள் விசும்பல்களாக மாறியது.

அலைபேசியில் பேசித் தீர்க்க வேண்டிய விஷயமில்லை எனப் புரிந்துகொண்டார் திலகா. மனஸ்தாபத்தில் உழலும் தம்பதிகளுக்குத் தனிமையும் நேரமும் கொடுக்க விழைந்தார்.

உத்ரா, குழந்தையுடன், தஞ்சாவூருக்குச் சென்றிருக்கும் இளையவன் திங்கட்கிழமை இரவு வண்டியில் தான் வரப்போகிறான் என்றாலும், வாரையிறுதியில், மணிவிழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக, பம்பாயில் வசிக்கும் கணவரின் பாலிய சிநேகிதரும் அவர் மனைவியும் தங்களுடன் தங்கப்போகிறார்களே எனக் கணக்கிட்டவர்,

“ரெண்டு நாள் பொறுத்துக்கோ ரம்யா; மண்டே அப்பா ஆபீஸுக்கு கிளம்பினதுக்கு அப்புறம் வா. அவன்கிட்ட மனசவிட்டுப் பேசு,” தீர்வு சொல்லி ஆசுவாசப்படுத்தினார்.

திங்கள் அன்று வசிப்பறையில் அமர்ந்து காபி அருந்திக்கொண்டிருந்த ஆண்கள் பக்கம் வந்தவர்,

“ஷ்ரவன்! எனக்கு ஒரே மூட்டுவலியா இருக்குடா. பத்து மணிவாக்குல கிளினிக் வரை அழைச்சிட்டுப் போறியா,” என கால் முட்டிகளை நீவிவிட்டுக் கொண்டபடி உட்கார்ந்தார்.

“என்ன பண்ணறது உனக்கு?இப்பவே போகலாம் வா,” தாமோதரன் மனையாளின் கால்களைப் பிடித்துவிட,

“நானே அழைச்சிட்டுப்போறேன் ‘ப்பா. நீங்க ஆபீஸுக்குக் கிளம்புங்க,” இடைபுகுந்து அன்னை விரித்த வலையில் விழுந்தான் ஷ்ரவன்.

மணி ஒன்பதாகவும் வாசற்கதவின் அழைப்பு மணி அடிக்கவும் சரியாக இருந்தது.

“யாருன்னு பாரு ஷ்ரவன்,” காலை நீவிவிட்டுக்கொண்டே சோர்ந்த குரலில் பாவலா செய்தார் திலகா.

கதவைத் திறந்தவன் ரம்யாவைக் கண்டதும் அனல்பார்வையில் சுட்டெரித்து விறுவிறுவென மாடி ஏறினான்.

உள்ளே வரலாமா வேண்டாமா எனத் தயங்கி நின்ற மருமகளுக்கு வா எனக் கண்ணசைத்தவர், “நில்லுடா! ரம்யா உனக்காகத்தான் வந்திருக்கா,” பெருங்குரலில் மகனை அதட்டினார்.

நிமிர்ந்து அமர்ந்திருக்கும் அன்னையின் உடல் மொழியிலேயே அவர் உடம்புக்கு ஒன்றுமில்லை எனப் புரிந்துகொண்டவன்,

“உன் அருமை மருமகள் விவாகரத்துப் பேப்பர்ல சைன் வாங்க வந்திருப்பா,” ஏளனமாக உரைக்க, தலைகுனிந்து நின்றாள் ரம்யா.

விவாகரத்து வரை சண்டை வளர்ந்திருக்கிறதா எனத் திடுக்கிட்டபோதும், அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் சமாளித்த திலகா,

“விவாகரத்து செய்யப்போறீங்களோ இல்ல விட்டுக்கொடுத்து வாழப்போறீங்களோ… எதுவா இருந்தாலும் இன்னைக்கே பேசி உங்க கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு ஒரு முடிவுகட்டுங்க,” தீர்மானக் குரலில் உரைத்து, தயாராக வைத்திருந்த அர்ச்சனை கூடையுடன் கதவைப் படாரென்று அடைத்து, கோவிலுக்குப் புறப்பட்டார்.

‘வலிக்கும் எனத் தெரிந்தே மீண்டும் அவள் விரிக்கும் பாசவலையில் விழுவதா!’ அனுபவங்கள் கற்றுத்தந்த பாடங்களை நினைவூட்டிக்கொண்டவன், நிமிர்ந்த முகத்துடன் அவளருகே வந்தான்.

“அறைக்கூட விழும்!’ என்ற எதிர்பார்ப்புடன் பெண்மான் இமைகள் படபடக்க நடுங்கி நின்றாள்.

“எனக்குக் குணமாகும்னு நம்பிக்கை இருந்தால்… அதைவிட முக்கியமா பொறுமையிருந்தால்… நீ எதிர்பார்க்கும் ஷ்ரவனா திரும்பி வருவேன்னு காத்திரு. இல்லேன்னா இன்னைக்கே டைவர்ஸ்க்கு அப்பளை பண்ணலாம்,” கர்ஜித்தவன்,

“ரெண்டு நிமிஷம் டைம். அதுக்குள்ள யோசிச்சு உன் முடிவை சொல்லு,” என மாடிப்படிகளை நோக்கி நடந்தான்.

இமைக்கும் நொடியில், ‘ஆஆஆஆஆ’ என வசிப்பறையே அதிரும் அளவிற்குப் பெருங்குரலில் கேவி, மண்டையே இரண்டாகப் பிளக்கும் அளவிற்கு முகத்தை இடைவிடாமல் சுவற்றில் ஓங்கி முட்டிக்கொண்டாள் ரம்யா.

மங்கையின் செயலில் திடுக்கிட்டு அவளருகே ஓடினான் ஷ்ரவன்.

முழு பலத்துடன் பின்னுக்கு இழுத்துத் தடுத்தவனுக்கு உண்மையிலேயே அவளைப் பளார் பளாரென அடிக்கக் கை பரபரத்தது.

“செய்யறத எல்லாம் செஞ்சிட்டு இப்போ எதுக்கு இப்படி முட்டாள்தனமா நடந்துகிட்டு என் உயிரை வாங்குற. அதான் விவாகரத்துக் கொடுக்குறேன்னு சொல்லிட்டேன்ல. இங்கிருந்து கிளம்பு,” கோபம் வார்த்தைகளாய் உருவெடுத்தது.

“நீங்க இப்படி என்னை வெறுத்து ஒத்துக்கிடக்கூடாதுன்னு தான் விலகியிருக்கணும்னு தள்ளித் தள்ளிப் போனேன். இப்போ எல்லாமே முடிஞ்சுடுத்து,” என்றவள் இரு கைகளாலும் நெற்றியில் அடித்துக்கொள்ள,

“ஸ்டாப் இட் ரம்யா,” என அவள் கைகளைச் சிறை செய்தவன், “பொது இடம்ன்னு கூடப் பார்க்காமல் கண்டபடி கத்தி என்னை வெறுத்து ஒதுக்கினது நீ! இப்போ என்மேல பழிப்போடுறீயா?” அழுத்தமான குரலில் அதட்டினான்.

அத்தனை நேரம் விக்கி விக்கி அழுதவளுக்கு ரோஷம் ஜிவ்வென்று ஏற, “என்னை அப்படிப் பேச தூண்டிவிட்டதே நீங்கதான்,” எகிறினாள்.

“நானா? தூண்டிவிட்டேனா?” புருவங்களை வளைத்தான்.

“ஆமாம்! வாயில ஈ போகுறது கூடத் தெரியாம, ‘உயிரே உயிரேன்ன்னு ஓடி வரும் மனிஷா கொய்ராலாவை நீங்க கண்கொட்டாமல் பார்த்துட்டு இருப்பீங்க.
ச்சே ச்சே! என் கணவருக்கு எந்தச் சலனமுமில்லன்னு நான் பெருந்தன்மையா டீ குடிக்கணுமா,” அவள் சண்டைபிடிக்க,

மண்டையை முட்டிக்கொண்டதில் அவள் மூளை கலங்கிவிட்டது என்ற முடிவுக்கே வந்தவன்,

“என்ன உளறுற ரம்யா,” என முழித்தான்.

“போதும் ஷ்ரவன். மனசுல்ல எதுவுமில்லன்னு நீங்க நடிச்ச வரைக்கும் போதும். லெட் அஸ் அக்செப்ட் ஆன்ட் ஃபேஸ் தி ரியாலிடி,” தர்க்கம் செய்தாள்.

‘வாழ்க்கையே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் ஏதொவொரு சினிமா பாடலுக்காக, அதுவும் தான் கண்ணெடுத்தும் பார்க்காத ஒன்றைப் பற்றி விவாதிக்கிறாளே என நொந்தவன்,

“ஹோட்டல்ல நான் ஷேர் மார்கெட் க்லோசிங்க் அப்டேட் தானே பாத்துட்டு இருந்தேன்,” வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டான்.

சில தனியார் சேனல்களின் பிரதான நிகழ்ச்சிகளின் கீழ் ஒளிப்பரப்பாகும் முக்கிய செய்திகள் நினைவுக்கு வர, உணவகத்தில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்த அதே சேனலை தொலைக்காட்சியில் உயிர்ப்பித்தாள்.

இத்தனை களேபரத்திலும் தொலைக்காட்சியை உயிர்ப்பிக்கும் அவள் செயலில், ‘பைத்தியம் முத்திப்போச்சு!’ எனத் தீர்மானித்தேவிட்டான்.

அவன் சொல்வதுபோல அந்தப் பாட்டு சேனலில் பங்குச் சந்தை நிலவரங்கள் ஓடிக்கொண்டிருக்க,

“சரி! நீங்க மனிஷா கோய்ராலாவை கவனிக்கலன்னே வச்சுப்போம்; காருல ஏன் அந்தப் பாட்டைப் போட்டு உருகி உருகி பாடினீங்கன்னு காரணம் சொல்லுங்க,” மடக்கினாள்.

மறுபடியும் அவள் எந்தப் பாடலைக் குறிப்பிடுகிறாள் எனப் புரியாமல் குழம்பியவன்,

“ஃபெ.எம் போடச்சொன்னது நீ; பாட்டுப் பிடிக்கலன்னு சி.டி. சூஸ் பண்ணது நீ; அதையும் பத்தே நிமிஷத்துல ஆஃப் பண்ணிட்ட,” திடமாகக் குத்திக்காட்டினான்.

பாடல்களையும் பாடல் வரிகளையும் சுட்டிக்காட்டினாள்.

மெலடி மெட்டுகளுடன் ஒரு வேகத்தில் தன்னிச்சையாகப் பாடுபவனுக்கு அடுத்த நிமிடம் அதிலிருந்து கேள்வி கேட்டால் திருதிருவென்று முழிப்பான்.

“ம்ம்! பாடிருப்பேன்! அதுல என்ன இருக்கு?” அலட்டலே இல்லாமல் கேட்டான்.

“என்ன இருக்கா? நினைத்தேன் வந்தாய் படத்துல யாரு ஜோடி சேருவாங்க? என்றாள் அதிகாரமாக.

“அதுல யாரு நடிச்சிருக்காங்கன்னு கூட எனக்கு ஞாபகமில்ல ரம்யா. அடிக்கடி கேட்ட பாட்டுன்னா, சப் கான்சியஸ்ஸா பாடியிருப்பேன்,” அவன் நொந்துபேசினான்.

“நிஜமாவே உங்களுக்கு அந்தப் படத்தோட முக்கோண காதல் கதை, அப்புறம் விஜய் அவர் காதலிச்ச ரம்பாவோடவே சேருறது, நிச்சயமான தேவயானி விட்டுக்கொடுக்கிறது… எதுவுமே ஞாபகமில்லையா ஷ்ரவன்,” என்றவளின் வெகுளித்தனத்தில்,

அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.

“சினிமா பார்க்கவே பிடிக்காதுன்னு இப்படி டைரக்டர் கணக்கா கதை சொல்ற,” கேலி செய்தவனுக்கு, கற்பனைக்கரசியின் மனப்போராட்டமும் ஓரளவுக்குப் புலப்பட ஆரம்பித்தது.

அவன் தன்மையாகக் கேட்க வாய்திறப்பதற்குள்,

“அப்போ ‘பாடுவதோ இந்த மும்தாஜின் தேகம்னு’ நீங்க பாடினது ஷர்மிலாவை நெனச்சு இல்லையா,” முந்திக்கொண்ட மங்கையின் முகபாவனையில் வெடித்துச் சிரித்தான் ஷ்ரவன்.

அவளுக்கும் ஒன்றோட ஒன்று இணைத்து வீணாகப் பயம்கொண்டிருப்பது மெதுவாகப் புலப்பட, குபுகுபுவென அழத் தொடங்கினாள்.

அவள் விழிநீரை ஆதுரமாய் துடைத்துவிட்டவன், “எனக்கு அடிப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருஷமாகப்போகுது ரம்யா. இந்த ஒரு வருஷத்துல ரெண்டு பேரும் சேர்ந்து எத்தனையோ படம் பார்த்திருக்கோம்; எத்தனையோ பாட்டு கேட்டிருக்கோம். என்னைக்கும் இல்லாம ஏன் இந்தமுறை மட்டும் இத்தனை சென்சிடிவ்வா நடந்துகிட்ட,” தன்மையிலும் தன்மையாகக் கேட்டான்.

பதிலை மனத்தில் ஒத்திகை பார்த்தவளுக்கு, எத்தனைப் பைத்தியகாரத்தனமாக நடந்துகொண்டிருக்கிறேன் என உரைத்தது.

“காரணம் சொன்னா என்னை லூஸுன்னு நினைக்கமாட்டீங்களே,” உதட்டைப் பிதுக்கினாள் பாவை.

“இனிமேல் தான் நான் அதைக் கண்டுபிடிக்கணும்னு நினைக்குறீயா?” அவன் சீண்ட,

“விடுங்க! நான் சொல்லமாட்டேன்,” முறுக்கிக்கோண்டாள் பாவை.

மங்கையின் முகத்தைக் கண்பார்க்க நிமிர்த்தியவன், “நீ என்மேல பைத்தியமா இருக்கன்னு நம்ம ஹனிமூன் சீன் ரீக்ரியேட் பண்ணப்பவே புரிஞ்சுகிட்டேன். ஆனால் நீ எதையும் மனசவிட்டுச் சொல்லமாட்டேங்குற; உன் மனசுல கற்பனை செஞ்சு வச்சிருக்க மாதிரி நடந்துக்கணும் பேசணும் பழகணும்னு எதிர்பாக்குற. அங்கதான் பிராப்லமே ரம்யா.

பழைய ஷ்ரவனா இருந்தா, கண்டிப்பா நீ சொல்லாமலேயே புரிஞ்சுட்டு இருந்திருப்பேனோ என்னமோ. இந்த நிலைமையிலும் உன்னை மனசார காதலிக்கிறேன்றதுல நான் ரொம்பத் தெளிவா இருக்கேன். அதை நீயும் மனசார ஏத்துக்கிட்டு, உன் எதிர்பார்ப்புகளை மனசவிட்டுச் சொல்லணும்,” என்றான் ஆற்றாமையுடன்.

“மனச திறந்து கேக்குறேன் ஷ்ரவன். ஹோட்டல்ல நான் சண்டைபோட்டத வச்சு என்னை வெறுத்துடாதீங்க ப்ளீஸ். கிவ் மீ அனதர் சான்ஸ்,” பனித்த கண்களுடன் மன்றாடினாள்.

“ம்ஹூம்!” அவன் மறுப்பாய்த் தலையசைக்க,

“ஷ்ரவன்….” அதிர்ந்தாள் பெண்.

“டைவர்ஸ் பண்ணணும் சந்தேகப்படுற அளவுக்கு உன்னை ட்ரிகர் பண்ண அந்தக் காரணத்தை நீ இன்னும் மனசவிட்டுச் சொல்லல ரம்யா,” நினைவூட்டினான்.

அன்று காலை உணவு மேஜையில் அவன் அலட்சியம் செய்ததில் தொடங்கிய மனப்போராட்டம் எனத் துப்பு கொடுத்தாள்.

“வயிறுமுட்ட சாப்பிட்டது போதாதுன்னு வீட்டுக்கு வேற பேக் பண்ணிட்டேனே,” சுட்டிக்காட்டினான்.

“ஆனால் பால்கோவாவை மொத்தமா ரிஜெக்ட் பண்ணிட்டீங்களே,” முகம் சுருக்கினாள் பேதை.

“அதான் அங்க வரும்போது சாப்பிடுறேன்னு சொன்னேனே,” அவன் மறுபடியும் நினைவூட்ட,

“இல்ல! நீங்க அப்படிச் சொல்லல. குறுக்கக் குறுக்கப் பேசாம, என்னைப் பேசவிடுங்க,” சிடுசிடுத்தவள்,

“பதினாறு வார பூஜை முடியறதுக்குள்ள உங்களுக்குக் குணமாகிடணும்னு ரொம்ப ஆசையா இருந்தேன். அது நடக்கலன்னு தெரிஞ்சதும், அட்லீஸ்ட் என் புருஷன் குணமாகி என்கிட்ட திரும்பி வருவாரா மாட்டாரான்னு ஏதாவது அறிகுறியாவது கொடு ஈஸ்வரான்னு வேண்டிட்டுத்தான் அத்தனை பிரசாதமும் பண்ணேன்.

எனக்குப் பிடிச்ச பால்கோவாவை முதல்ல எடுத்துச் சாப்பிட்டு, காதலா என்னை வம்பிழுப்பீப்பங்கன்னு ரொம்ப எதிர்பார்ப்போட இருந்தேன். ஆனால் நீங்க பால்பாயசம்தான் ஆல் டைம் ஃபேவரிட்ன்னு சொல்லி அதை ருசிச்சு ருசிச்சுச் சாப்பிட்டது மட்டுமில்லாம, பால்கோவா இங்கேயே இருக்கட்டும்னு அலட்சியப் படுத்தினீங்க,” அவள் விளக்கம் தரவும்,

“இரு! இரு! உன் கற்பனை வளத்தை நான் டீகோட் பண்ணறேன்,” மின்னல் வேகத்தில் இடைபுகுந்தவன்,

“பால்கோவா நீ! பால்பாயசம் ஷர்மிலா!” அப்படித்தானே,” நமுட்டாகச் சிரித்தான்.

“ம்ம்ம்,” எனத் தலையாட்டியவள்,

“அதுமட்டுமில்ல, பால்கோவா எத்தனை நாளானாலும் தாங்கும். ஸ்வீட் க்ரேவிங்க் வரும்போது சாப்பிட வசதியா இருக்கும்ன்னு சொன்னது என்னைக் குறிப்பிட்டுச் சொல்ற மாதிரியே இருந்துது.

இவ அம்மா வீட்டுலேயே இருக்கட்டும்; எனக்குக் குணமாகலேனாலும் எத்தனை நாளானாலும் இவ காத்திருப்பா; எனக்கு பார்க்கணும்னு ஆசை வரும்போதெல்லாம் நானே வந்து பார்த்துக்க்கிறேன்… அப்படின்னு…
நீங்க என்னை ஒரு கீப் மாதிரி ட்ரீட் பண்ணறதா தோணித்து ஷ்ரவன்,” அவள் கூறுவும்,

“போதும் ரம்யா! இதுக்குமேல சிரிச்சா என் வயிறே வெடிச்சிடும்…”

கண்களில் நீர் வழிய விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தவனுக்கு வாசற்கதவு திறக்கும் சத்தம் கூடக் கேட்கவில்லை. மாமியாரை முதலில் கண்டுகொண்ட ரம்யா, கணவனை அடக்கிவாசிக்குமாறு கண்ணசைத்து சமிக்ஞை செய்ய, அவனோ அவள் தன் கிண்டல்களுக்கு நெளிவதாக அர்த்தம் கொண்டு, இன்னும் கலகலத்துச் சிரித்தான்.

முகத்தில் எந்தவித எதிர்வினையும் காட்டாதபடி, உலகம் மறந்து சிரித்துக்கொண்டிருக்கும் மகன் எதிரில் வந்து நின்றார் திலகா.

அன்னையைக் கண்டு திடுக்கிட்டவன் அசடுவழிய நிற்க,

“டைவர்ஸ் பண்ணற மூஞ்சிங்கள பாரு,” இருவரையும் திட்டிவிட்டு பூஜையறைக்குள் புகுந்தார்.

கண்ணீர் மல்க இறைவனுக்கு நன்றி உரைத்தவர், தட்டில் இரண்டு பெரிய கட்டி கற்பூரங்களுடன் வசிப்பறைக்கு வந்து,

“ரெண்டுபேரும் கிழக்கு முகம் பார்த்து நில்லுங்க,” இறுகிய குரலில் கூறி, ‘ஊர் கண்ணு, உறவுக் கண்ணு…’ என முணுமுணுத்துக்கொண்டே திருஷ்டி வழித்து அகன்றார்.

அதற்கு பின்னும் அமைதியாக வீட்டு வேலைகளில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த திலகாவின் தவிர்ப்பில் ரம்யாவிற்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

மாமியாரிடம் ஓடிவந்து அவர் தோள்சாய்ந்து கட்டியணைத்தவள், “நீங்க மட்டும் கால் பண்ணலேன்னா நான் கண்டிப்பா எங்க உறவை விவாகரத்து வரை இழுத்துட்டுப் போயிருப்பேன் ‘ம்மா,” கேவி அழுதாள்.

மருமகளின் உப்பிய முகத்தைக் கண்டதிலேயே ஏற்கனவே நிறைய அழுதிருக்கிறாள் எனப் புரிந்தது அவருக்கு. அவள் விழிநீரைத் துடைத்துவிட்டவர்,

“போனது போகட்டும் ரம்யா. ஏதோ சின்ன மனஸ்தாபத்துனால பிரிஞ்சு இருக்கீங்கன்னு நெனச்சால், விளையாட்டுப்போல ஆறு மாசமாச்சு,” அவர் ஆதங்கம் பொறுக்காமல் சுட்டிக்காட்டவும்,

“இனி இங்கேயதான் இருப்பேன் ‘ம்மா. எங்கேயும் போகமாட்டேன்,” என்றாள் இமைக்கும் நொடியில்.

“இல்ல ரம்யா. இன்னும் கொஞ்சநாள் போகட்டும்,” ஷ்ரவன் குறுக்கிட,

“நான் தெளிவாகிட்டேன் ஷ்ரவன். இனி கண்டதையும் யோசிச்சுக் குழம்பமாட்டேன்,” கண்களைச் சுருக்கி மன்றாடினாள்.

“அம்மா! என்னோட இந்த பார்டியல் மெமெரி லாஸ்னால எங்களுக்குள்ள முளைச்ச சின்ன விரிசல் நாளைடைவில் பெருசாகி, பிரிஞ்சிருக்க முடிவெடுத்தோம். முழுசா குணமாகாத இந்த நிலையில், சேர்ந்து வாழுறோம்னு முயற்சி செஞ்சு இன்னொரு விரிசலுக்கு வழிசெய்ய எனக்கு விருப்பமில்ல,” தீர்மானக் குரலில் உரைத்தான்.

“அப்படியெல்லாம் எதுவும் நடக்காது ஷ்ரவன்…” விடாமல் மன்றாடினாள் ரம்யா.

கடந்த இரண்டுமணி நேரத்தில் மகனிடம் பிரதிபலித்த வெவ்வேறு உணர்வுகளையும், சேர்ந்து வாழ மறுக்கும் அவன் உறுதியையும் ஒப்பிட்டுப் பார்த்தவருக்கு, மனஸ்தாபங்களுக்கு நிரந்தர தீர்வு காண விரும்புகிறான் எனத் தெள்ளத்தெளிவாகப் புரிந்தது. அதேசமயத்தில், திரும்பி வந்துவிடுகேறேன் எனச் சொல்லும் மருமகளுக்கும் அவரால் மறுப்புச் சொல்ல இயலவில்லை.

“இது உங்க லைஃப் டிசிஷன். நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வாங்க. நம்ம எப்பவும்போல தீபாவளி பண்டிகையை குடும்பமா கொண்டாடணும். இதுமட்டும்தான் என் வேண்டுகோள்,” சொல்லி நகர்ந்தார்.

“ஷ்ரவன்….” ரம்யா முகம் சுளிக்க,

“காலேஜ்க்கு கிளம்பு. நாளைக்கு ஆபீஸ் ஸ்டாஃப்க்கு கிஃப்ட்ஸ் தரணும். காலையில வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்,” என விரட்டிவிட்டான்.


பொங்கல், ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை என வருடத்தில் மூன்று நாட்கள் எஸ்.டி. நிறுவனமே திருவிழாக்கோலத்தில் ஜொலிக்கும். ஆனால் அந்த வருடம், ஷ்ரவனுக்கு ஏற்பட்ட விபத்தால், அனைத்தும் தலைகீழாக மாறியிருந்தது. பொங்கல் விழாவைக் கொண்டாடவே இல்லை. ஆயுத பூஜை நன்னாள் ஞாயிற்றுக்கிழமையில் வர, வீட்டுப் பிரச்சனைகள் ஊழியர்களின் கவனத்துக்கு எட்டாமல் தப்பித்தது. தீபாவளிக்குள் எல்லாம் சரியாகிவிடும் என்ற பெரும் நம்பிக்கையுடன் இருந்த திலகாவை, ஊடல் கொண்ட ஜோடிகள் ஒரு வழியாக்கிவிட்டது தான் மிச்சம்.

அவற்றை எல்லாம் அசைபோட்ட வண்ணம் விழாவிற்குக் கூடியிருந்தவர்களைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தார் திலகா. தீபாவளி சிறப்பு விருந்தில் குடும்பத்தினருடன் பங்கேற்க வந்திருக்கும் ஊழியர்களுடன் சகஜமாகப் பேசிப்பழகும் பிள்ளைகளின் அழகை ரசித்துப் பூரித்தார்.

தீபாவளி ஊதியப் பணத்தொகை, பட்டாசுகள், பரிசுப்பொருட்கள், இனிப்புகள் எனக் கைக்கொள்ளா அளவிற்கு வெகுமதிகளைப் பெற்ற ஊழியர்களும் தலைகால் புரியாத சந்தோஷத்துடன், பேத்தியைத் தூக்கிவைத்துக்கொண்டிருக்கும் தாமோதரனிடமும், திலகாவிடமும் தங்கள் நன்றிகளையும் வாழ்த்துகளையும் கூறிவிட்டு விடுமுறையை மகிழ்ந்தனுபவிக்க புறப்பட்டனர்.

பொருட்களை ஏறக்கட்டிய இளையவர்கள், பெரியவர்களைத் தேடி தாமோதரனின் அலுவலக அறைக்குள் வந்தனர். ஷ்ரவனைக் கண்டதும்,

“பெப்பா…பெப்பா,” என அவனிடம் தத்தித்தாவி வந்து தூக்கச்சொல்லி செல்லம் கொஞ்சினாள் விரூபா.

பட்டுப்பாவாடை சட்டையில் பரபரத்த குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவன் முத்தமிட,

“பெப்பா இல்லடி… பெரியப்பா சொல்லு,” பேத்தியின் கன்னத்தை வாஞ்சையாக கிள்ளினார் திலகா.

“பெப்பா….” அவள் இன்னும் அழுத்தமாய் உதட்டுக்களை மடக்கி உச்சரிக்க,

“பெப்பா பிக் கார்ட்டூன்ல வரமாதிரி கூப்பிடுறா ‘ம்மா,” என்றாள் உத்ரா.

“என் பொண்ணு உன்னை ‘பன்றி’ன்னு கூப்பிடுறான்னு சொல்லாமல் சொல்லிக்காட்டுறாடா என் பொண்டாட்டி,” தருண் மனையாளைச் சீண்ட,

“அண்ணா! நான் அப்படியெல்லாம் யோசிக்கவே இல்ல,” கணவனின் புஜம் பழுக்க கிள்ளி முறைத்தாள் உத்ரா.

இளையவர்களின் பரிபாஷைகளைக் கண்டு ரசித்த தாமோதரன்,

“வீட்டுக்குக் கிளம்பலாமா?” என்றார்.

“பாப்புவை உன் காருலேயே அழைச்சிட்டு வந்துடுடா,” தருண் அண்ணனிடம் கூற,

“இல்லடா! நான் ரம்யாவை டிராப் பண்ணனும். நீங்க கிளம்புங்க,” என்றான் ஷ்ரவன்.

“தீபாவளி வரைக்குமாவது நம்ம வீட்டுல இருக்கலாமே ரம்யா,” என்ற தாமோதரனின் கேள்வியில் அவர் அத்தனை மாதங்களாகத் தேக்கிவைத்திருந்த வருத்தம் பிரதிபலித்தது.

அம்மா வீட்டிற்குத் திடுதிப்பென்று சென்றது; அலுவகம் வருவதை நிறுத்தியது என எதைப்பற்றியும் ஒரு வார்த்தை கூடக் கேட்காத மாமனார் இன்று வாய்விட்டுக் கேட்டதும் பரிதவித்தாள் பேதை.

“ஷ்ரவன்… அப்பா சொல்றமாதிரி தீபாவளி வரைக்குமாவது…” ரம்யா தொடங்க,

“தீபாவளிக்கு முன்னாடி நாள் அழைச்சிட்டு வரேன் ‘ப்பா. அன்னைக்கு ஒரு நைட் நம்ம வீட்டுல தங்கட்டும்,” தீர்மானமாக உரைத்தான் ஷ்ரவன்.

“உனக்கு என்னதான்டா பிரச்சனை? ரெண்டு நாளுன்னு சொல்லி அவளை அம்மா வீட்டுல கொண்டுபோய் விட்டுட்டு, இப்படி மாசக்கணக்காக அழைச்சிட்டுவராம பிடிவாதம் பிடிக்குற,” கடிந்தார் தாமோதரன்.

‘தேவைதான் எனக்கு!’ ஷ்ரவன் மனத்தில் நினைக்க,

“ஆபீஸுக்கு வரமாட்டேன்னு சொன்னது; அம்மா வீட்டுக்குப் போகனோம்னு அடம்பிடிச்சது எல்லாம் நான்தான் ‘ப்பா. அவர்மேல எந்தத் தப்புமில்ல,” ரம்யா படபடவென்று போட்டு உடைக்கவும் ஆடிப்போனார் தாமோதரன்.

பெரிய சம்பவம் ஒன்று நடக்கப்போகிறது என திலகா, உத்ரா மற்றும் தருண் ஒருவரை ஒருவர் ஏறிட்டுக்கொள்ள,

அன்று அன்னைக்கு எடுத்துச்சொன்னதை போல அதே நிதானத்துடன் தந்தைக்கும் புரியவைத்தான்.

தம்பதிகளின் அந்தரங்கத்தில் தலையிட விரும்பாதவர், “வயசுக்கு ஏத்த மெட்சூரிட்டி இருக்கும்னு நம்புறேன்,” என அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


உம்மென்ற முகத்துடன் காரில் ஏறி அமர்ந்தவள் பக்கம் திரும்பி, “பட்டுப்புடைவை வாங்கிட்டு வீட்டுக்குப் போகலாம்னு நினைக்கிறேன். கற்பனைக்கரசி விவகாரம் செய்யாம வருவீங்களா,” எனக் கண்சிமிட்டினான் ஷ்ரவன்.

சற்றுமுன் மாமனார் குறிப்பிட்ட ‘வயதிற்கேற்ற பக்குவத்தையும்’, அன்று கடைக்குச் சென்ற வழியில் அவள் நடந்துகொண்ட விதத்தையும் ஒப்பிட்டவள், கள்ளென்று சிரித்தாள்.

“சிரிச்சு மழுப்பாத! வாய்திறந்து பதில்சொல்லுடி,” அவன் செல்லமாகக் கண்டிக்க,

“நீங்க பாட்டுப் பாடாம வந்தால் சரி,” எனப் பதிலுக்குக் கண்சிமிட்டினாள்.

கடைசி நிமிட வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் நசுங்கிய பூச்சியாய் ஷ்ரவன் மனையாளுக்குப் புடைவையைத் தேர்ந்தெடுக்க, பாவையின் பார்வையோ, மாடிப்படியையே தழுவி இருந்தது.

“ஷ்ரவன்! அந்த ஆளு என்னையே முறைச்சுப் பார்த்திட்டிருக்காரு,” சிணுங்கினாள்.

அவள் கை காட்டும் திசையில் திரும்பிப் பார்த்தவன், அந்த நபரை நொடியில் அடையாளம் கண்டுகொண்டான்.

“அவர் கடை டீ கப்பை உடைச்சிட்டு நீ பாட்டுக்கு பில் கட்டாம எஸ்கேப் ஆனீனா, பின்னாடியே வந்துதான் வசூல்பண்ணுவாரு,” அவன் நக்கல் செய்யவும், தர்மசங்கடத்தில் நெளிந்தாள் ரம்யா.

புடைவைகள் பக்கம் அவள் தலையை வலிய திருப்பியவன், “அவரை சைட் அடிக்கிறத விட்டுட்டு, புருஷன் செல்க்ட் பண்ணிருக்க புடைவை பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க பொண்டாட்டி,” எனக் காதோரம் கிசுகிசுத்தான்.

“அவ்வளவு பொஸெஸிவ்வா இருந்தால், புடைவை வாங்கின கையோட பொண்டாட்டியை வீட்டுக்கு அழைச்சிட்டுப் போவீங்களாம் புருஷரே,” இதுதான் சாக்கு என மடக்கினாள்.

திட்டத்தில் தெள்ளத்தெளிவாக இருந்தவனோ, கையில் வைத்திருந்த தாமரைப்பூ நிறத்தில் வெள்ளி ஜரிகை போட்ட புடைவையைக் கடைக்காரரிடம் நீட்டி,
“இதை பேக் பண்ணுங்க,” எனக் கூறி, அவளுக்குக் காத்திராமல் கட்டணம் செலுத்தும் கவுன்டரை நோக்கி நடந்தான்.

வாலெனத் தொடர்ந்தவள், “என்மேலிருக்குற கோபத்துல உங்களையும் அறியாம நம்ம வழக்கத்தை ரீக்ரியேட் பண்ணிருக்கீங்க தலைவரே,” அவன் கவனத்தை ஈர்த்தாள்.

தவிப்பாய் ஏறிடும் அவனை வாட்ட மனமில்லாமல், “எனக்குப் புடைவை வாங்கித்தரது மட்டுமில்ல…. அதை செலக்ட் பண்ணறதும் நீங்கதான்,” எனக் காதலாய் மொழிந்தாள்.

கேட்டவனுக்கு முகமெல்லாம் பல்ப் எரிந்தது. குதூகலத்துடன் கட்டணம் செலுத்தினான்.

தரிப்பிடத்திற்கு வந்தவர்கள் மீண்டும் அந்த உணவகத்தின் உரிமையாளரைக் காண நேரிட, மனையாளின் தோளினை இறுக்க அரவணத்தபடி அவரை நோக்கி நடந்தான் ஷ்ரவன்.

“என்ன பண்ணறீங்க ஷ்ரவன்?” ரம்யா நெளிய,

தன்னை நோக்கி வேகநடையிடும் ஷ்ரவனின் செயலில் திடுக்கிட்டவராய் பார்வையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டார் அந்த நபர்.

வலியச்சென்று அவர் தோளில் தட்டி அழைத்த ஷ்ரவன், “என் கண்ணைத் திறந்து வச்சதுக்கு ரொம்ப தாங்க்ஸ் சார். பாருங்க! நாங்க எவ்வளவு சந்தோஷமா இருக்கோம்,” என இன்னும் அதிகமாய் அவளைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டான்.

பெருமூச்சுடன் மென்னகைத்தவர், “ரொம்ப சந்தோஷம் தம்பி. ஹாப்பி தீபாவளி,” என வாழ்த்தினார்.

காரில் ஏறிக்கொண்டவள், “மூணாம் மனுஷங்க அட்வைஸுக்குத் தர இம்பார்டன்ஸ்ஸ, பெத்தவங்க அட்வைஸ்க்கும் தந்தால் நல்லா இருக்கும்,” ஜாடை பேசினாள்.

“மூணாம் மனுஷங்ககிட்ட வாய்வார்த்தையா சொல்றதுக்கும், வீட்டுல இருக்குறவங்க முன்னாடி சந்தோஷமா வாழ்ந்து காட்டுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு ரம்யா. தீபாவளி வரை காத்திரு. நல்ல முடிவா சொல்றேன்,” என்றான் திட்டவட்டமாக.

வெறுத்துப் பேசியவளின் வெள்ளந்தி மனத்தைக் கண்டேன்;
அழுது தீர்த்தவளின் அப்பழுக்கற்ற நேசத்தைக் கண்டேன்;
உரிமை சண்டையிட்டவளின் உன்னதமான காதலைக் கண்டேன்;
பற்றுறுதியுடன் தவம் கிடக்கும் தாரமே -விடை தேடுகிறேன்
ஆழ்மனத்தில் நிழலாடும் நின் நினைவில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!