Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

49. பிரியா முரளி - கண்ணாமூச்சி ஏனடா

கண்ணாமூச்சி ஏனடா… – 28

கண்ணாமூச்சி 28

அறைக்கதவைத் தாளிட்டுக் கொண்ட நிலா, படுக்கையில் விழுந்து தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மி விம்மி அழத் தொடங்கினாள். விஷ்வாவும் அனன்யாவும் பிரவீனும் சொன்ன அந்தப் பேரதிர்ச்சி தரும் உண்மைகளை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.
“இப்படியெல்லாம் கூட தொழில்நுட்பத்தால் செய்ய முடியுமா? என் மனதிற்குள் நான் பூட்டி வைத்திருந்த கற்பனைகளை ஒரு மென்பொருள் களவாடி இன்னொருவனுக்குக் காட்டியிருப்பதை நான் எப்படி ஏற்றுக்கொள்வது?” அவளது மூளை இந்தத் தவற்றை ஏற்றுக்கொள்ளப் பிடிவாதமாக மறுத்தது.
ஆனால், மறுபுறம் விஷ்வாவை ஆழமாகக் காதலிக்கும் அவளது இதயம் ஏதோ ஒரு புள்ளியில் மெல்லிய திருப்தியை அடைந்திருந்தது. இத்தனை நாட்களாகத் தனக்குள் நிகழ்ந்த, தான் அணு அணுவாக உருகி வாழ்ந்த அந்த விர்ச்சுவல் அனுபவங்கள் வெறும் மாயை இல்லை, அது நிஜம்! தான் ஒரு வெற்று நிழலை நிஜமென்று நம்பி ஏமாந்து போகவில்லை. அவள் காதலித்த விஷ்வா ஒரு சூப்பர் ஸ்டாராக இல்லாமல், அவளது தனி உலகத்திற்குள் ஒரு சாதாரண மனிதனாக வந்து அவளது கைப்பிடித்த விஷ்வா முற்றிலும் நிஜமானவன்! தான் இத்தனை காலம் அர்த்தம் தேடி அலைந்த அத்தனை உணர்வுகளும் இப்போது அர்த்தமுள்ளதாக மாறிவிட்டன. ஏனெனில், அந்த உணர்வுகளும், அந்த உணர்வுகளைப் பெற்றுக் கொண்ட விஷ்வாவும் ஒரு மாயத் தோற்றம் அல்ல, அவன் முற்றிலும் உண்மை!


Advertisement

மனதிற்குள் நடந்த இந்த எண்ணப் போராட்டத்தோடு அழுதுகொண்டே அந்த இரவைக் கழித்தாள் நிலா. அதிகாலை வேளையில், மன அழுத்தமும் தவிப்பும் அவளது உடலையும் மனதையும் தாக்க, கடுமையான காய்ச்சலில் விழுந்தாள்.
காலை ஆறு மணிக்கு நிலாவின் அறைக்கதவு லேசாகத் தட்டப்பட்டது. வழக்கமாக இந்நேரத்திற்கு எழுந்துவிடும் நிலா இன்னும் வெளியே வராததால், அவளது அம்மா தங்கம் காபி கப்புடன் உள்ளே நுழைந்தார். படுக்கையில் சுருண்டு படுத்திருந்த நிலாவின் அருகில் சென்று, “நிலா… நிலாம்மா… மணி ஆறாச்சு பாரு,” என்று அவள் தலையை மெதுவாக வருட… அவளது நெற்றியில் கை வைத்த அடுத்த விநாடி தங்கம் பதறிப்போனார்.
“ஐயோ! என்ன இது… உடம்பு தணலா கொதிக்குதே!” என்று பதைபதைத்தவர், அவசர அவசரமாக அறை வாசலுக்கு ஓடிவந்து நிலாவின் அப்பாவை அழைத்தார். “ஏங்க… சீக்கிரம் இங்க வாங்க! நிலாவுக்குக் காய்ச்சல் அடிக்குதுங்க… உடம்பு ரொம்ப சுடுது. என்ன ஏதுன்னே தெரியல, சீக்கிரம் நம்ம பேமிலி டாக்டருக்குப் போன் பண்ணுங்க!”

Advertisement

அப்பாவும் பதற்றத்துடன் ஓடிவந்து நிலாவைப் பார்த்துவிட்டு, உடனே தங்களின் குடும்ப மருத்துவரான டாக்டர் சந்திரனுக்கு அழைத்தார்.

Advertisement

மறுபுறம், இரவு முழுக்க நிலாவைப் பற்றி நினைத்துத் தவித்துக் கொண்டிருந்த அனன்யா, அவளது மொபைலுக்குத் தொடர்ந்து அழைத்துக்கொண்டே இருந்தாள். ஆனால் நிலாவின் ஃபோன் ‘சுவிட்ச் ஆஃப்’ என்றே வந்தது. தன் உயிர்த்தோழியை இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தள்ளிவிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சியும் பயமும் அனன்யாவை உலுக்கியது. அவளுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருக்குமோ என்ற பயத்தில், விடிந்ததும் விடியாததுமாக நிலாவின் வீட்டுக்கு விரைந்தாள் அனன்யா.  அதற்குள் டாக்டர் சந்திரனும் வந்து சேர்ந்தார்.
அறைக்குள் நிலாவைப் பரிசோதித்த டாக்டர் சந்திரன், அவளது நாடியைப் பார்த்துவிட்டு, தெர்மோமீட்டர் அளவை உற்று நோக்கினார். 103 டிகிரி காய்ச்சல் காட்டியது.
“காய்ச்சல் கொஞ்சம் அதிகமாதான் இருக்கு. ஆனா பயப்படறதுக்கு ஒண்ணுமில்லை. நான் இப்போதைக்கு ஒரு இன்ஜெக்ஷன் போடுறேன், காய்ச்சல் குறைஞ்சிடும். அப்புறம் இந்த மாத்திரைகளை மூணு நாளைக்குக் கரெக்டா குடுங்க. முக்கியமா அவளை எதைப்பத்தியும் யோசிச்சு ஸ்ட்ரெஸ் பண்ணிக்க வேண்டாம்னு சொல்லுங்க. நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்,” என்று அறிவுறுத்திவிட்டு விடைபெற்றார்.

Advertisement

சந்திரசேகர் மருந்து வாங்க வெளியே கிளம்ப, தங்கம் ஒரு துணியை நனைத்து நிலாவின் நெற்றியில் ஈரப்பத்து போட்டுக்கொண்டே இருந்தார். நிலா முற்றிலும் சோர்ந்து, முகம் வாடிப் படுக்கையில் கிடந்தாள். அவளது உடல் காய்ச்சலால் கொதித்தாலும், அவளது உள்ளம் உணர்வு ரீதியாக எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அனன்யா நன்றாகவே உணர்ந்தாள்.
தங்கம் நிலாவுக்குத் தேவையானவற்றைச் செய்துவிட்டு, “அனன்யா, நீ கொஞ்சம் நிலா பக்கத்துலயே இரும்மா. நான் அவளுக்குக் கஞ்சி காய்ச்சி எடுத்துட்டு வர்றேன்,” என்று சமையலறைக்கு நகர்ந்தார்.
மெதுவாக நிலாவின் படுக்கையோரம் அமர்ந்து, அவளது கைகளைப் பற்றிக்கொண்டு அனன்யா மீண்டும் அழத் தொடங்கினாள்.
“நிலா… ப்ளீஸ் நிலா, என்னை மன்னிச்சிடுடி. நாங்க வேணும்னே இதைச் செய்யல. ஏதோ ஒரு விளையாட்டுத்தனமா ஆரம்பிச்ச விஷயம், இப்படி ஒரு விபரீதமான திருப்பத்தை எடுக்கும்னு எங்களுக்கும் ரொம்ப லேட்டாதான் தெரிஞ்சது. உன்னை காயப்படுத்தணும்னு நான் கனவுல கூட நினைக்கலடி… என்னை மன்னிச்சிடு…” என்று அனன்யா மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டே இருந்தாள்.
நிலா அனன்யாவின் அத்தனை மன்னிப்புகளையும் மௌனமாக உள்வாங்கிக் கொண்டாள். ஆனால், அவளிடம் எதுவுமே பேசவில்லை. அவளது மௌனம் அனன்யாவை வதைத்தாலும், தோழியின் மீதான பாசத்தில் தங்கம் அவளுக்காகக் காய்ச்சி எடுத்துவந்த கஞ்சியைத் தன் கையாலேயே ஊட்டி விட்டாள். நாள் முழுக்க நிலாவின் அருகிலேயே அமர்ந்து, அவளுக்குப் பணிவிடைகள் செய்து அவளைக் கவனித்துக் கொண்டாள். நிலா அமைதியாக இருந்தாளே தவிர, அனன்யாவின் தவிப்பையும் உதவியையும் அவள் நிராகரிக்கவில்லை.
அதே நேரத்தில், தன் அபார்ட்மெண்ட்டில் விஷ்வா அலைபாயும் நெஞ்சத்தோடு தவித்துக் கொண்டிருந்தான். நிலாவின் மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால், அவனால் அவளைத் தொடர்புகொள்ளவே முடியவில்லை. அந்தப் பதற்றம் அவனுக்குப் பைத்தியம் பிடிக்க வைத்தது. பொறுமையிழந்தவன் உடனே பிரவீனை அழைத்தான்.
“பிரவீன்! நிலாவோட ஃபோன் ரீச் ஆகல. அவ ஆஃபீசுக்கு வந்தாளா இன்னிக்கு? எனக்கு அவகிட்ட பேசனும்டா,” என்று பதறினான்.
“இல்ல விஷ்வா, இன்னிக்கு நிலாவும் ஆஃபீசுக்கு வரலை, அனன்யாவும் வரலை,” என்றான் பிரவீன் கவலையாக. “இரு, அனன்யாகிட்ட பேசிட்டு உனக்கு கால் பண்றேன்,” என்று ஃ போனை வைத்தான்.
பிரவீன் அனன்யாவைத் தொடர்புகொண்டுவிட்டு விஷ்வாவை அழைத்து, “விஷ்வா… அனன்யா இப்போ நிலாவோட வீட்டுலதான் இருக்கா. நிலாவுக்கு உடம்பு சரியில்லை… கடுமையான காய்ச்சலாம்,” என்று விவரம் சொன்னான்.
இதைக் கேட்டதும் விஷ்வாவின் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. சற்றும் யோசிக்காமல் அனன்யாவுக்கு நேரடியாக அழைத்தான்.
“அனன்யா… நிலாவுக்கு எப்படி இருக்கு? ரொம்ப காய்ச்சலா? டாக்டர்கிட்ட போனாளா?” வரிசையாகக் கேள்விகளை அடுக்கினான். “ரொம்ப அழுதாளா?” இந்தக் கேள்வி மட்டும் மென்மையாக, மொத்த உலகத்தின் பாரத்தையும் சுமந்துகொண்டு வந்தது.
நிலா அப்போது விழித்திருந்தாலும், அனன்யா விஷ்வாவிடம்தான் ஃபோனில் பேசுகிறாள் என்று தெரிந்திருந்தாலும்,  அனன்யாவை ஒரு வெற்றுப் பார்வை பார்த்துவிட்டுத் தலையைத் திருப்பிக் கொண்டாள். அதைக் கவனித்த அனன்யா, தயக்கத்தோடு, “விஷ்வா சார், நிலாவுக்கு இப்போ பரவாயில்லை, டாக்டர் வந்து பார்த்துட்டு இன்ஜெக்ஷன் போட்டுட்டு போனார், இப்போ காய்ச்சல் குறைஞ்சிருக்கு,” என்றாள் மிக மெல்லிய குரலில்.
“எனக்கு அவகிட்ட பேசணும், அனன்யா, ஃபோன் அவகிட்ட குடுங்களேன்…” என்றான் கெஞ்சும் குரலில் விஷ்வா. அவனது தவிப்பு புரிந்தாலும், நிலாவின் முகம் திருப்பளைக் கண்டிருந்த அனன்யா, “இப்போ தூங்கிட்டு இருக்கா விஷ்வா சார், எழுந்ததும் பேசச் சொல்றேன்,” என்று கூற,
அவளின் பேச்சுக்குப் பின் இருந்த அர்த்தம் புரிந்துகொண்ட விஷ்வா, “சரி, அவ என்கிட்ட பேச வேண்டாம், ஆனா அவ எப்படி இருக்கானு நான் பார்க்கணும். ப்ளீஸ்… ஒரு தடவை வீடியோ கால் ஆன் பண்ணுங்க அனன்யா, நான் அவளைப் பார்க்கணும்,” என்று கெஞ்சும் குரலில் கேட்டான் விஷ்வா.
அனன்யா முதலில் மறுத்தாள். “இல்லை விஷ்வா சார்… இந்த நிலைமையில வீடியோ கால் பண்ணுனது நிலாவுக்குத் தெரிஞ்சா இன்னும் பிராப்ளம் ஆகும். ஏற்கனவே என் மேல ரொம்ப கோபமா இருக்கா, என்கிட்டே ஒரு வார்த்தை கூட பேசலை,” என்றாள்.
“ப்ளீஸ் அனன்யா… அவளுக்குத் தெரிய வேண்டாம். அவ எப்படி இருக்கான்னு நான் ஒரே ஒரு பார்வை மட்டும் பார்த்துக்கிறேன். என் மனசு கேட்கல…” என்று விஷ்வா பிடிவாதமாய் வேண்டினான்.
அவனது தவிப்பைப் புரிந்து கொண்ட அனன்யா, மெதுவாக வீடியோ காலை ஆன் செய்து, காய்ச்சல் சோர்வில் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த நிலாவை ஒரே ஒரு நொடி மட்டும் காட்டிவிட்டு உடனே கட் செய்தாள்.
கனத்த இதயத்தோடு விஷ்வா அந்த அழைப்பை முடித்தான். நிலா இந்த உண்மைகளை ஏற்றுக்கொண்டு, இதிலிருந்து மீண்டு வர அவளுக்குச் சற்றே கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று அவன் தனக்குள் ஒருவாறாகத் தீர்மானித்துக் கொண்டான். அன்றைய இரவு, நிலாவைப் பார்த்துக்கொள்வதற்காக அவளது வீட்டிலேயே தங்கிவிட அனன்யா முடிவெடுத்தாள்.
நள்ளிரவு தாண்டியது. மருந்தின் வீரியத்தாலும் அனன்யா, அம்மாவின் கவனிப்பாலும் காய்ச்சலின் வேகம் சற்றே குறைந்திருக்க, நிலா மெதுவாகக் கண்களைத் திறந்து சுற்றிலும் பார்த்தாள். அறை இருட்டாக இருந்தது, அனன்யா அருகிலிருந்த சோபாவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
நிலா மெதுவாகத் தன் மொபைலை எடுத்து ஆன் செய்தாள். ஸ்கிரீன் ஒளிரத் தொடங்கியதும் அனன்யாவிடமிருந்து வந்த மிஸ்டு கால்களும், அதைவிட அதிகமாக விஷ்வாவிடமிருந்து வந்திருந்த டஜன் கணக்கான மிஸ்டு கால்களும் திரையில் வரிசையாகக் காட்டின. அதோடு விஷ்வாவிடமிருந்து ஒரு மெசேஜும் வந்திருந்தது. அதைத் திறந்து படித்தாள்:
“நிலா… நமக்குள்ள நடந்த எல்லாத்தையும் நீ புரிஞ்சுக்க உனக்குத் தேவையான அளவு டைம் எடுத்துக்கோ. ஆனா ஒரு விஷயம் மட்டும் உண்மை… உன்மேல நான் வச்சிருக்கிற காதல் என் இதயத்தில் இருந்து வந்தது, அது முற்றிலும் உண்மையானது, அதுல  எந்த ஒரு மாயையும் இல்லை, பிளீஸ் புரிஞ்சுக்கோ…”
அதை வாசித்த நிலாவுக்குள் ஏதோ ஒன்று உருகியது. கடிகாரத்தைப் பார்த்தாள், நள்ளிரவு பன்னிரண்டைத் தாண்டியிருந்தது. எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தனர், ஆனால் அவளுக்கு மட்டும் தூக்கம் வர மறுந்தது. அவளது இதயம் இப்போது விஷ்வாவை நேரில் பார்க்கத் துடித்தது. இனிமேலும் தவிப்பதில் அர்த்தமில்லை என்று முடிவு செய்தவள், விஷ்வாவுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினாள்:
“எனக்கு உங்களை நான் நேர்ல பார்க்கணும் விஷ்வா…”
அங்கு தூக்கமில்லாத கண்களோடு படுக்கையில் புரண்டு கொண்டிருந்த விஷ்வா, நிலாவின் மெசேஜ் வந்த அடுத்த விநாடியே, பதறியடித்துக்கொண்டு அவளுக்கு நேரடியாகக் கால் செய்தான்.
நிலா லேசான நடுக்கத்தோடு அந்த அழைப்பை ஏற்றாள்.
“நிலா! எப்படி இருக்க? உடம்பு எப்படி இருக்கு? காய்ச்சல் குறைஞ்சிடுச்சா? ரொம்ப அழுதியா நிலா?” போனை எடுத்ததும் விஷ்வாவின் குரலில் காதலும் தவிப்பும் கரைபுரண்டு ஓடியது.
“இப்போ பரவாயில்லை விஷ்வா… காய்ச்சல் கம்மியாயிடுச்சு,” என்றாள் நிலா மெல்லிய குரலில். பின்னர் சற்றே நிதானித்து, “நாளைக்கு நான் உங்களைப் பார்க்கணும்…” என்றாள் தீர்க்கமாக.
“கண்டிப்பா நிலா. நாளைக்கு உன் உடம்பு ஓகேனா, பிரவீன் கிட்ட சொல்றேன். அவன் உன்னை என்கிட்ட கூட்டிட்டு வருவான்,” என்றான் விஷ்வா நிம்மதியோடு.
“நாளைக்கு உடம்பு சரியில்லைனாலும் நான் ஆபீஸ்க்கு வருவேன் விஷ்வா… உங்களைப் பார்க்கிறதுக்காக மட்டுமே வருவேன். ஆனா… எனக்கு உங்களை மட்டும் தனியா பார்க்கணும். பிரவீனோ, அனன்யாவோ யாரும் கூட இருக்கக் கூடாது,” என்றாள் நிலா தன் நிபந்தனையாக.
“பிரவீன் உன்னை கூட்டிட்டு வந்து என் வீட்டுல விட்டுட்டு உடனே கிளம்பிடுவான் நிலா. அங்கே நானும் நீயும் மட்டும்தான் இருப்போம், பயப்படாத,” என்று அவளுக்கு உறுதியளித்தான் விஷ்வா.
அந்த நள்ளிரவு அழைப்பு அத்தோடு முடிவடைந்தது. ஆனால், இருவருக்கும் தூக்கம் வரவில்லை. விடியப்போகும் அந்த அடுத்த நாளையும், தங்களின் நேருக்கு நேரான சந்திப்பையும் நோக்கிய பெரும் எதிர்பார்ப்புகளுடனேயே அந்த இரவின் மீதிப் பொழுது நகர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!