Skip to content
Post Views: 151
ஆழினியின் செயலால் அதிர்ந்தவனின் உலகம் ஒருநொடி நின்றுவிட்டு பின்பு சுழலுவதை போல் உணர்ந்தான் விஜய சிவமாறன். அவனது இரு கரங்களும் அன்னிச்சையாய் அவளது இடையை இறுக்கமாக அணைத்துக்கொள்ள, அவளது காதுமடலில் இரகசியம் கூறுவது போல்
“செல்லம்மா….” என்று மென்மையாக அழைத்தவனின் குரலில் தொலைந்தவள் தன்னவனை மேலும் அணைத்தவாறு
Advertisement
“உங்களுக்கு என்னை முன்னாடியே தெரியுமா மாறன்?” என்று வினவிய ஆழினியின் கேள்வியை கேட்டதும் அதிர்ச்சியில் விஜய சிவமாறனின் இதயமானது ஒருநொடி நின்று துடித்தது.
தன்னவனின் நெஞ்சில் சாய்ந்திருந்தவளின் செவிகளில் வேகமாக துடிக்கும் அவனது இதய துடிப்பின் சத்தத்தை கேட்டவள் அவனை நிமிர்ந்து பார்த்து
Advertisement
Advertisement
“எழிலரசனை நீங்க தான் இங்க வர வச்சிருக்கீங்கன்னு எனக்கு தெரியும்….” என்று கூறிய ஆழினியை விழியகலாமல் பார்த்தவனிடம்
“இதுவரை என் வாழ்க்கையில நடந்த எல்லாமே எழிலரசனுக்கு தெரியும், இன்பன் அவர் கூட டச்ல தான் இருந்தான்…. எனக்கு கல்யாணமானதுக்கு அப்புறம் தான் அவரும் கல்யாணம் பண்ணிப்பாருன்னு முடிவெடுத்ததை பத்தி இன்பன் என் கிட்ட சொன்னப்போ ரொம்ப கில்டியா இருந்துச்சு, இப்போ அதுவும் இல்ல…. ஆனா அவரை பத்தி பேசுறதுக்கு நான் உங்களை இங்க கூட்டிட்டு வரல….” என்று கூறி விஜய சிவமாறனின் கண்களை தன் கண்களின் வழியே ஆழமாக பார்த்தவாறு
Advertisement
“என் கண்ணை பார்த்து சொல்லுங்க மாறன்…. உங்களுக்கு என்னை முன்னாடியே தெரியும் தான?” என்று ஆழினி தீர்க்கமாக வினவ, அவளது கேள்வியை கேட்டவனின் தலை ஆமென்பதை போல் அன்னிச்சையாய் அசைந்தது.
விஜய சிவமாறனின் பதிலில் உறைந்தவள் அவனிடம் அடுத்த வார்த்தை கூறப்போகும் நேரம் தனது ஆள்காட்டி விரலால் அவளது உதட்டினை சிறைசெய்தவன்
“இன்னிக்கு நைட் உன் கிட்ட நான் எல்லாத்தையும் சொல்றேன் செல்லம்மா…. என்னை நம்பு….” என்று உறுதியாய் கூறியவனின் குரலில் எப்பொழுதும் போல் கட்டுண்டவள் அமைதியாய் நின்றுவிட்டாள்.
ஆழினியின் அணைப்பு சிறையிலிருந்து மனமேயில்லாமல் விலகியவன் தன் பையிலிருந்து ஓர் காகிதத்தை எடுத்து அவளது கைகளில் திணிக்க, அதை கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தவள்
“இது…. இது எப்படி….” என்று வார்த்தை வராமல் தடுமாறிய ஆழினியின் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் பெருக்கெடுக்கப்போகும் நேரத்தில் அதை தன் விரல்களால் துடைத்தவன்
“உங்க அப்பா அவரோட நிலத்தை என் அப்பா கிட்ட தான் வித்தாரு செல்லம்மா…. ஹோட்டல் கட்டுறதுக்காக நாங்க வாங்கின நிலம் இது…. சீக்கிரமே அதை ஆரம்பிக்கனும்னு நான் தான் அப்பாவை ஃபோர்ஸ் பண்ணி பாதி பணத்தை கட்டிட்டு உன் அப்பா, சாரி…. என் மாமா கிட்டயிருந்து நிலத்தோட பத்திரத்தை வாங்க சொன்னேன்…. அதேபோல தான் எல்லாமே நடந்துச்சு, ஆனா முழு பணம் கொடுக்குற நாள் அன்னிக்கு மாமா வரல…. நாங்களும் அவரோட ஃபோன் நம்பர்க்கு எவ்வளவோ ட்ரை பண்ணோம், எங்கெங்கோ விசாரிச்சோம் ஆனா எங்களுக்கு எந்த இன்ஃபர்மேஷனும் கிடைக்கல…. அதுக்கு அப்புறம் சில பிரச்சனை, அப்பாவுக்கும் உடம்பு முடியாம போயிடுச்சு, இந்த நிலம் வாங்கினதையே நான் மறந்துட்டேன்…. நம்ம கல்யாணத்துக்கு அடுத்த நாள் சில பேப்பர்ஸ் நான் செக் பண்ணிட்டு இருக்கும்போது தான் இந்த பத்திரம் என் கையில கிடைச்சுது…. போலீஸ் கிட்ட கொடுத்து விசாரிக்கலாம்னு நினைச்சு பத்திரத்தை படிச்சு பார்த்தேன், அதுக்கு அப்புறம் தான் அதிலிருக்க பெயர் வச்சு இது சந்தான கிருஷ்ணன் மாமாவுக்கும் ஆதிலட்சுமி அத்தைக்கும் சொந்தமானதுன்னு புரிஞ்சிக்கிட்டேன்…. இது உனக்கும் இன்பனுக்கும் சொந்தமானது…. என் மாமனார் மாமியார் ஆசைப்படி அங்க ஒரு வீட்டை கட்டி இன்பனுக்கும் நீலவேணிக்கும் கல்யாணம் பண்ணலாம் செல்லம்மா…. அதுனால தான் இன்பனோட கல்யாண தேதியை நான் தள்ளி வச்சேன்….” என்று கூறிய விஜய சிவமாறனை இமைக்காமல் பார்த்த ஆழினியின் கண்கள் மீண்டும் கலங்க ஆரம்பித்துவிட்டது.
ஆழினியின் கண்ணீரை துடைத்தவன் அவளை தன் நெஞ்சோடு அணைத்தவாறு
“உன் கிட்ட நான் நிறையா பேசணும் செல்லம்மா…. என் மனசிலிருக்க எல்லாத்தையும் உன் கிட்ட ஒன்னுவிடாம கொட்டனும்…. நம்ம பையன் பர்த்டே பார்ட்டி முடிஞ்சதும் நான் எல்லாமே சொல்றேன்…. இன்னும் கொஞ்ச நேரம் எனக்காக காத்திரு செல்லம்மா….” என்று விஜய சிவமாறன் கூறிவிட்டு தன்னவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் பதிக்க, அவனின் திடீர் செயலால் அதிர்ந்தவளின் முகம் நாணத்தில் அந்திவானமாய் சிவந்துவிட்டது.
அவனவளது வதனத்தை இரசித்தவன் தன் மனதினை அரும்பாடுபட்டு அடக்கியவாறு ஆழினியின் கைகளை இறுக்கமாக பற்றி நிச்சயதார்த்த விழா நடக்கும் மணமேடைக்கு அழைத்து சென்றான் விஜய சிவமாறன். இன்பன் மற்றும் நீலவேணியின் நிச்சயதார்த்த பரிசாக நிலத்தின் பத்திரத்தை விஜய சிவமாறன் வழங்கிவிட்டு ஆழினியிடம் கூறிய அனைத்தையும் அவர்களிடம் ஒன்றுவிடாமல் கூறியிருந்தான்.
விஜய சிவமாறன் கூறியதை கேட்ட இன்பன் கலங்கிய விழிகளுடன் தன் மாமனை அணைத்து இன்பத்தில் கரைய ஆரம்பிக்க, அவர்களின் பாசப்பிணைப்பை கண்ட பெரியவர்கள் அனைவரும் மனநிறைவுடன் புன்னகைத்து கொண்டிருந்தனர்.
நிமிடங்கள் அத்தனையும் நேரங்களாய் கரைய, இன்பன் மற்றும் நீலவேணியின் நிச்சயதார்த்த விழா நிறைவுப்பெற்று ஆதவ் கிருஷ்ணனின் பிறந்தநாள் விழா கொண்டாட்டமும் ஆரம்பமாக தொடங்கியிருந்தது.
மின்னும் விளக்குகள், அழகான அலங்காரங்கள், பொம்மைகள், குழந்தைகளுக்கென சிறிய அளவில் அமைத்திருந்த விளையாட்டு கூடங்கள் என்று சிறு சிறு விஷயங்களிலும் காட்டப்பட்ட கவனம் என அந்த இடமே ஒரு கனவு உலகம் போல காட்சியளித்தது.
இன்பனும் நீலவேணியும் தங்களின் செல்ல கண்ணனின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் வேலையில் பம்பரமாய் சுற்றி கொண்டிருந்தனர். சொந்த பந்தங்கள் மட்டுமல்லாது தன் தொழில் துறை நண்பர்கள் அனைவரையும் அழைத்திருந்தான் விஜய சிவமாறன். அலைக்கடலாய் ஆர்ப்பரித்த கூட்டத்திற்கு நடுவில் விழாவின் கதானாயகன் ஆதவ் கிருஷ்ணனுடன் ஆழினியும் விஜய சிவமாறனும் வருகை புரிந்திருந்தனர்.
கருப்பு நிறத்திலான கோட் சூட்டை அணிந்து அழகான குறுநகையுடன் கம்பீர நடையிட்டு விஜய சிவமாறன் வர, அவன் அருகில் தங்க நிறத்திலான லெஹெங்காவை அணிந்து அழகோவியமாய் ஆழினி நடந்துவர, அவ்விருவரின் கைகளை பிடித்தவாறு கருப்பு நிறத்தில் தங்க கற்கள் பதித்த கோட் சூட்டில் துள்ளி குதித்தவாறு நடந்து வந்த நீலவிழி கண்களுடைய சுருள் முடி அழகனின் கன்னக்குழி சிரிப்பில் அங்கிருந்த அனைவரும் சொக்கித்தான் போனார்கள்.
மூன்று அடுக்குகள் கொண்ட வண்ணங்கள் நிறைந்த கேக்கின் முன்பு ஆதவ் கிருஷ்ணன் நின்றிருக்க, அவனின் வலது புறத்தில் விஜய சிவமாறனும் இடது புறத்தில் ஆழினியும் நின்றிருந்தனர். அவர்களின் அருகில் ஆதவ் கிருஷ்ணனின் பன்னு மாமா, வேணி அத்தை, பரு பாட்டி, ஆறுமுகம் தாத்தா, ராணி பாட்டி, செல்வி ஆன்டி மற்றும் அங்கிருந்த அவன் வயதொத்த நண்பர்கள் அனைவரும் நின்றிருந்தனர். சிறிது நேரத்தில் பிறந்த நாள் வாழ்த்து பாடல் ஒலிக்க ஆரம்பிக்க, தன் முன்னிருந்த கேக்கினை தன் அன்னை மற்றும் தந்தையின் கரங்களை பற்றியவாறு உற்சாகமாக வெட்ட தொடங்கினான் ஆதவ் கிருஷ்ணன்.
தன் மகனின் மகிழ்ச்சியை கண்டு விஜய சிவமாறன் மற்றும் ஆழினியின் இதழ்களும் மனமும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. அதனை முற்றிலுமாய் அழிக்கும் விதமாய் அங்கு வருகை புரிந்திருந்தாள் ஒருவள்.
கருப்பு நிற புடவையில் வெள்ளி நிற கற்கள் பதித்த புடவையில்,பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடக்கும் மண்டபத்திற்குள் அவள் நுழைந்த தருணமே அனைவரின் பார்வையும் அவள் மீது திரும்பியது. ஒற்றை முந்தானையாய் புடவையை உடுத்தியிருந்தவளின் அங்கங்கள் அந்த வலைவலையாய் இருக்கும் புடவையில் அப்பட்டமாய் எடுத்து காட்டியது. அவளை கண்டு அங்கிருந்த சிலர் தங்களின் முகத்தை சுளித்து கொள்ள, பலர் அவர்களுக்குள் இரகசியமாக ஏதோ பேசி கொண்டனர்.
அவர்களின் இரகசிய பேச்சிற்கு காரணமான விஜய சிவமாறன் மட்டுமல்லாலு ஆழினியும் அவளை கண்டு பேரதிர்ச்சியில் நின்றிருந்தனர். அவ்விருவரது முகத்தில் தோன்றிய மாற்றத்தை கண்டு உள்ளுக்குள் சிரித்தவள் ஆதவ் கிருஷ்ணன் அருகில் சென்று
“ஹாப்பி பர்த்டே டியர்….” என்று அவள் கூறியவாறு ஓர் பரிசு பெட்டியினை அளித்துவிட்டு சிறியவனின் கன்னத்தில் தன் உதட்டு சாயம் விழும் அளவிற்கு அழுத்தமாக முத்தம் பதித்திருந்தாள்.
ஆதவ் கிருஷ்ணன் அருகில் நின்று தன்னையே இமைக்காமல் பார்க்கும் ஆழினியை கண்டு ஏளனமாக நகைத்தவள் அவள் அருகில் நின்றிருந்தவனது நெஞ்சின் இடது பாகத்தில் தன் வலது கரத்தினை வைத்து மெல்லமாக தட்டியவாறு
“இன்னும் பத்திரமா இருக்கா? இவளுக்காவது தெரியுமா? இல்ல அதையும் மறைச்சிட்டியா?” என்று நக்கலாக வினவியவளின் கரத்தினை தட்டிவிட்டு சபை நாகரிகம் கருதி அமைதியாய் நின்ற விஜய சிவமாறன் அவளை தீயாய் முறைத்து கொண்டிருந்தான். அவன் அருகில் நின்றிருந்த ஆழினியோ அங்கு நடப்பதை புரியாமல் பார்த்தாலும் அவளது கண்களின் ஓரம் துளிர்த்திருந்த கண்ணீர் துளியானது துளிர்விட காத்திருந்தது.
ஆழினியின் மனநிலையை புரிந்தவள் போல் அவளை அலட்சியமாக பார்த்தவள் தன்னை கோப விழிகளுடன் நோக்கும் விஜய சிவமாறனிடம்
“போயிட்டு வரேன் ஷிவ்…. பட், ஐயம் ஸ்டில் வெயிட்டிங் ஃபார் யு….” என்று அவள் கூறிய கூற்றை கேட்ட விஜய சிவமாறன் கோபத்தை கட்டுப்படுத்த வழி அறியாமல் தன் பற்களை நரநரவென கடித்தவனிடமும் அவளை விழியாகலாம் பார்த்திருந்த ஆழினியிடமும் சிறு தலையசைப்புடன் விடைப்பெற்று சென்றிருந்தாள் விஜய சிவமாறனின் முன்னாள் மனைவி, அவள் ஷைலஜா.
ஒளி வீசும்….
error: Content is protected !!