Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

88. வித்யா வெங்கடேஷ் - நிழலாடும் நின் நினைவில்

நிழலாடும் நின் நினைவில் – 25.01

ஓம் ஸ்ரீ சாய்ராம்

ஊர் பார்க்க சட்டையைப் பிடித்துச் சண்டையிட்டிருந்தாலும் கூடப் பரவாயில்லையாக இருந்திருக்கும் என ஷ்ரவன் நொந்துபோகும் அளவிற்கு இரண்டு நாட்களாக மௌனவிரதம் கடைப்பிடித்து தண்டித்தாள் அவன் தர்மபத்தினி.

சிகிச்சை பலனளிக்கவில்லை எனக் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் வருத்தம் கொண்டபோதும் அவனிடம் பரிவுடம் உறவாடினர். ஆனால் ரம்யாவோ அவன் நிழலைக் கூடத் தீண்டாமல் தள்ளியிருந்தாள்.

அறிவுரை சொல்லவந்த குடும்பத்தினரையும் வஞ்சனை இல்லாமல் ஒதுக்கிவைத்தாள். உள்ளத்தில் என்ன நினைத்துக் குழம்புகிறாள் என அவள் உயிர் தோழனால் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை.



Advertisement


ஞாயிற்றுக்கிழமை இரவு ஒன்பது மணியானதும், குழந்தை எந்நேரமும் வந்துவிடுவாள் எனப் பேராவலுடன் முன்வாசலே கதியென்று இருந்தான் ஷ்ரவன்.

தருணின் நீல நிற மாருதி ஸ்விஃப்ட் வாசற்கதவருகே நின்றதும், குழந்தையைத் தூக்கிக்கொள்ள விரைந்தோடினான்.

ஆழ்ந்த தூக்கத்திலிருந்த குழந்தையைக் கண்டதும் அவன் முகம் ஏமாற்றத்தில் சுருங்கியது. குழந்தையை அவனுக்குக் கைமாற்றிவிட்ட உத்ரா,

Advertisement

“என்ன ‘ண்ணா இது, இப்படி இளைச்சுப்போய் வந்திருக்கீங்க,” கவலைக்கொண்டாள்.

Advertisement

“ஷு! ஷு! அவ காதுல விழுந்துடப்போகுது”, கதவருகே நின்றிருந்த மனையாளை கண்ணசைத்துக் காட்டியபடி, முடி பரவலாக முளைத்திருந்த குழந்தையின் உச்சந்தலையை முகர்ந்து, அவள் துயில் கொள்ளும் அழகை ரசித்தான்.

அவர்கள் நல்லபடியாக வந்துவிட்டார்கள் என அறிந்துகொண்டதும் அமைதியாக நகர்ந்தாள் ரம்யா.

“உன்கிட்டயாவது சகஜமா பேசுவான்னு நெனச்சேன் உத்ரா,” இரவு உணவு முடித்து வந்தவளிடம் நொந்து புலம்பினான் ஷ்ரவன்.

Advertisement

தருண் சொல்லிக் கேட்டிருந்தபோதிலும் நேரில் காணும்போது மனம் கனத்துப்போனது உத்ராவிற்கு.

“நாளைக்கு இவ பெப்பா பெப்பான்னு உன் காலை சுத்தி வரத பார்த்ததும் அவ மனசு கரைஞ்சிடும் பாரு,” திலகா மகனுக்கு ஆறுதல் சொல்ல,”

“வந்து ஒருமணி நேரமாகப் போகுது. கண்ணத் திறந்து பெரியப்பாவைப் பார்த்து ஒரு குட்டி ஸ்மைலாவது பண்ணணும்னு தோணுதா உனக்கு,” மடியில் துயில்கொண்டிருந்த குழந்தையின் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளினான் ஷ்ரவன்.

வந்ததிலிருந்து குழந்தையை மடியிலேயே வைத்துக்கொண்டு தவம் கிடக்கும் அவன் ஏக்கத்தை உணர்ந்த உத்ரா, “அவள உங்களோடவே படுக்க வச்சுக்கோங்க ‘ண்ணா. கண்ணு முழிச்சதும் உங்கள பார்த்து சர்ப்ரைஸ் ஆயிடுவா,” யோசனை சொன்னாள்.

“ஏன்டி? பேசா மடந்தை பத்திரகாளியா மாறவா?” எச்சரித்தான் தருண்.

“அப்படியாவது உன் ஃப்ரெண்ட் என்கிட்ட முகம் பார்த்துப் பேசட்டும்டா,” குழந்தையுடன் எழுந்தவனின் முகத்தில் வண்டி வண்டியாக ஏக்கம் வழிந்தோடியது.

அவர்கள் பெரும் வியப்பிற்கு ஏற்ப ரம்யா சின்னதொரு எதிர்வினை கூடக் காட்டவில்லை. மாறாக, அதிகாலை ஐந்து மணிக்கு விழித்துக்கொண்ட விரூபாதான் கூவும் சேவலைக் காட்டிலும் பத்து மடங்காக அலறி அனைவரையும் எழுப்பி விட்டிருந்தாள்.

“மம்மா! மம்மா!” என ரம்யாவின் மார்பில் அட்டைப்போல ஒட்டிக்கொண்டிருந்த குழந்தை ஷ்ரவனின் முகத்தைப் பார்ப்பதற்கே நடுங்கினாள்.

“உன்னோட பெப்பா தங்கம்,” சமாதானப்படுத்தியும், ரம்யாவின் கழுத்தில் அழுந்த முகம் புதைத்துக்கொண்டு வீரிட்டு அழுதாள்.

“சிகிச்சைன்ற பேருல் அடையாளம் தெரியாத அளவுக்கு உடம்பை வருத்திக்கிட்டா, குழந்தை பயப்படத்தான் செய்வா,” சிடுசிடுத்து குழந்தையுடன் வசிப்பறைக்கு நடந்தாள்.

மற்றவர்கள் எல்லாம் அந்தக் காட்சியைக் கண்டு மிரண்டுபோக, மனையாளின் உள்ளத்தை அறிந்த கிளர்ச்சியில் விட்டத் தூக்கத்தைப் பிடித்தான் ஷ்ரவன்.

காலை உணவுக்குப் பிறகு, வந்திருக்கும் இடம் உணர்ந்து அனைவரிடமும் சகஜமாகப் பேசி விளையாட ஆரம்பித்திருந்தாள் விரூபா. கூடவே ‘பெப்பா! பெப்பா!’ என்ற அவள் தேடல்களும் தொடங்கியிருந்தது.

அதைக் கண்டுகொண்டவனின் உள்ளம் துள்ளாட்டம் போட்டது.

முகத்தைக் காட்டாது, “விரூகுட்டி! பெப்பா எங்க இருக்கேன்னு கண்டுபிடி பார்க்கலாம்,” என விருந்தாளிகளின் அறைக்கதவுக்குப் பின்னால் ஒளிந்திருந்தபடி குரல் கொடுத்தான் ஷ்ரவன்.

அவன் குரல் கேட்டு குதூகலமான குழந்தை கதவருகே ஓட, அனைவரும் அவள் முகபாவனையக் காண ஆவலாக உற்றுநோக்கினர்.

“மறுபடியும் அழுதுட்டே ஓடி வரப்போகுறா பாருங்க,” முணுமுணுத்தாள் ரம்யா.

உடம்பைக் கதவுக்குப் பின்னால் மறைத்துக்கொண்டு முகத்தை மட்டும் நீட்டினான் ஷ்ரவன். அதுவும் அவன் மொட்டையடித்த தலையை மறைக்கும் விதமாக, தொப்பிப்போட்டுக் கொண்டிருக்க, குழந்தையின் தயக்கம் இரண்டு நொடிகள் கூட நீடிக்கவில்லை.

முயல் பற்கள் மின்ன, ஓடிச்சென்று அவனிடம் ஏறிக்கொண்டாள்.

“விரூகுட்டி எங்க போயிருந்த இத்தனை நாளா,” கேட்டு ஆசை தீர முத்தமிட்டான்.

“வ்ரூம்ம்ம்ம்….கா…” வண்டி ஓட்டுவதுபோல செய்கை செய்து இளித்தாள்.

“விரூகுட்டி தலைமுடியைக் காணோமே! எங்க போச்சு?” அவன் மெல்ல குழந்தையின் தலையில் வருட, உதட்டைப் பிதுக்கி இல்லையென்று கைகளை அசைத்தாள்.

“பெப்பா தலைமுடியும் காணோமே,” அவளைப் போலவே உதட்டைப் பிதுக்கி தொப்பியை அகற்றி கண்ணாடி முன் நின்றான்.

கண்ணாடியின் பிம்பத்தை யோசனையாக ஏறிட்ட குழந்தை, அவன் தலையையும் தன் தலையையும் வருடி, சோதித்து, ஒப்பிட்டு என அரை நிமிடம் சிந்தனையில் கரைந்த போதிலும், அவன் தன் பெப்பா என்ற அளவுக்கு நம்பிக்கை கொண்டிருந்தாள்.

அனைவரும் சந்தோஷத்தில் பூரிக்க, “வவ் வவ்!” என அழகுகாட்டி முறுக்கிக்கொண்டாள் அவன் சரிபாதி.

அவள் கோபம் தணிகிறது என அனைவரும் நம்பிக்கையுடன் காத்திருக்க, வியாழக்கிழமை விரதத்தைத் தொடர்ந்து செய்யமாட்டேன் என மாமியாரிடம் தர்க்கம் செய்துகொண்டிருந்தாள்.

“அடம்பிடிக்காத ரம்யா. வேண்டுதல நிறைவேற்றித்தான் கடவுள் நம்ம விரதத்துக்கான பலனை கொடுக்கணும்னு இல்ல. சவால்களை தைரியமா எதிர்கொள்ள சக்தியையும், நிதர்சனங்களை ஏத்துக்குற பக்குவத்தைக் கொடுக்கிறதும் ஒருவிதமான விரத பலன்தான்,” திடமாக அறிவுறுத்தினார்.

“இல்லம்மா! என்னை மன்னிச்சிருங்க.எனக்கு எதுலயும் பிடிமானமே இல்ல,” பிடிவாதமாய் மறுத்தாள்.

“இப்ப என்ன ஆச்சுன்னு இவ்வளவு விரக்தியா பேசுற. அவன் குணமாகலேனாலும் பக்குவமா குடும்பம் நடத்துறேன்னு சொல்லித்தானே அன்னைக்கு அவனை சிகிச்சைக்கு அனுப்பின,” சற்று அழுத்தமாகவே இடித்துக்காட்டினார் திலகா.

“ம்ம்… சொன்னேன்தான். ஆனால் குணமாகணும்னு ஆத்மார்த்தமா முயற்சி செஞ்சவருக்கு அதுக்கான பலன் கொடுக்கலேனாலும் பரவாயில்ல. இந்த கடவுள் அவரை எப்படி வாட்டியெடுத்திருக்காருன்னு பாக்குறீங்க தானே,” நொந்தவள், “உருகி உருகி பூஜை செய்யற நம்மள மேலும் மேலும் சோதிச்சு சந்தோஷப்படுறதே கடவுளுக்கு வாடிக்கையா போச்சு,” என நொந்துபேசினாள்.

அவருக்குமே மகனின் பொலிவிழந்த உடல்வாகைக் காண வருத்தமாகத்தான் இருந்தது. ஓரிரு மாதங்களில் தேற்றிவிடலாம் என மனதளவில் ஆறுதல் சொல்லிக்கொண்டு இயல்பாக இருந்தார்.

“அப்படிச்சொல்லாத ரம்யா. இத்தனை சோதனையிலும் உன்னைத்தான் நம்பி இருக்கேன்னு நீ கடவுளுக்கு உன் மனவுறுதியைக் காட்டு,” அவர் போதிக்க,
தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டிருக்கும் மனையாள் அருகில் நடந்தான் ஷ்ரவன்.

“என்னுடைய வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்து நீயா ஒரு முடிவுக்கு வந்துட்டு ஏன் கடவுளை குறைசொல்ற,” கடிந்தான்.

“மறதிக்கு ட்ரீட்மென்ட் எடுத்துக்குப் போனவர் மூணே மாசத்துல இருபது கிலோ குறைஞ்சிருக்கீங்க. இன்னும் நாலு நாள் அங்க இருந்திருந்தீங்கனா உயிரோட வந்திருப்பீங்களா இல்லையான்னு கூடத் தெரியல,” எதிர்த்துப்பேசியவளின் தேக்கிவைத்த பயமும் வெள்ளமாய் பொழிந்தது.

அவள் மனத்தை உறுத்திய நெருடலை கண்டுகொண்டதில் பெருமூச்செறிந்தவன்,

“ரம்யாக்கு மட்டுமில்ல. உங்க எல்லாருக்கும் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தறேன். இத்தனை செஞ்சும் நான் குணமாகல, இவ்வளவு இளைச்சிட்டேன்னு மட்டும்தான் யோசிக்கிறீங்களே தவிர, இந்த மூணு மாசம் நான் கடைப்பிடிச்ச பழக்கவழக்கங்களால மனசாலையும் உடலாலையும் எவ்வளவு எனர்ஜெடிக்கா ஃபீல் பண்ணறேன்னு புரிஞ்சுக்கவே மாட்டேன்றீங்க,” அழுத்திக் கூறினான்.

அனைவரும் அவனை கேள்வியாக ஏறிட்டனர்.

“பாதிப்பு ஏற்பட்டிருக்கும் மூளையை ஒரு பழுதடைஞ்ச உறுப்பா மட்டும் பார்க்காம, அதோட கனெக்ட் ஆகிருக்குற நரம்பு மண்டலம், உடல், மனம்ன்னு எல்லாத்தையும் ஒருங்கிணைத்து சீர் செய்யறதுதான் ஆயுர்வேதத்தின் தனித்துவம். அதனால ஆயுர்வேத மருந்தும் சிகிச்சையும் முறையா வேலை செய்ய, முதல்ல நம்ம மனசையும் உடலையும் அதுக்கேத்த மாதிரி ஆரோக்கியமா வச்சுக்கணும். அதுக்காக சாப்பாட்டுலையும் தினசரி பழக்க வழக்கங்களையும் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்தாங்க.

ஒருநாள் ஃபோன் சார்ஜ் போடலேனா டென்ஷனாகுற அளவுக்கு நாம எல்லாரும் டெக்னாலஜில ஊறிப்போயிருக்கோம்.

மூணு மாசமா ஃபோன கண்ணாலக் கூடப் பார்க்கல. டி.வின்னா என்னன்னு கேக்குற அளவுக்கு ஆர்வம் குறைஞ்சிடுத்து. காபி, நொறுக்குத்தீனின்னு இப்படி எந்த க்ரேவிங்கும் வரல.

மொத்தத்துல மூணு மாசமா கேட்ஜெட்ஸ் கிடையாது; ப்ராஸெஸ்ட் ஃபுட் கிடையாது; ” அவன் அடுக்க,

“பொண்டாட்டியோட நச்சரிப்பு கிடையாது….” உம்மென்ற முகத்துடன் பட்டியலைத் தொடர்ந்தாள் ரம்யா.

“அதுவும்தான்….” நாக்கை உள்புறமாகச் சுழற்றி மென்னகைத்தவன், மனையாளை தோளோடு சேர்த்து அரவணைத்து நெற்றிமுட்டி சீண்டினான். அவன் மண்டையிலேயே நறுக்கென்று கொட்டு விழுந்தது.

இருவரின் பரிபாஷைகளை உளமார ரசித்து சிரித்தனர் குடும்பத்தினர்.

“பெப்பா! மம்மா!’ எனப் போட்டிப்போட்டு ரம்யா மேல் ஏறிக்கொண்டாள் அவர்கள் தேவதை.

கணவனுக்கு கொடுக்க முடியாத முத்தங்களை எல்லாம் ரம்யா குழந்தைக்குத் தந்து, “மொட்டக்குட்டி,” எனக் கொஞ்ச,

அவள் கைவிரல்களைத் தன் மண்டையில் பரப்பிக்கொண்ட ஷ்ரவன், “அதே காலி கிரௌண்ட் தான் இங்கேயும் இருக்குது. ஆனால் அங்க மட்டும் முத்தங்கள், இங்க கொட்டா? இது என்ன ஓரவஞ்சனை,” நமுட்டுச் சிரிப்புடன் வம்பிழுத்தான்.

பகிரங்கமாய் முத்தம் கேட்கும் கணவனின் குறும்பில் திடுக்கிட்டாள் பெண்.

“அடேய்! இந்த மூணு மாசம் ட்ரீட்மென்ட்ல உனக்கு இடம் பொருள் ஏவல் எல்லாம் சொல்லித்தரலையா?” தருண் சீண்டவும், அந்த இடமே சிரிப்பொலியில் நிறைந்தது.


சங்கடங்கள் தணிந்த பெண்மான் குறுக்கெழுத்து புதிருடன் அறைக்குள் நுழைந்தாள். தன் அலமாரி மொத்தத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டு அக்கப்போர் செய்து கொண்டிருக்கும் கணவரையும் குழந்தையையும் கண்டு அதிர்ந்தவள்,

“பெரியப்பாவும் பொண்ணும் என்ன செய்யறீங்க?” இருவரையும் கண்டித்தாள்.

பழைய நோட்டுப்புத்தகம் ஒன்றில் சரமாரியாகக் கிறுக்கிக்கொண்டிருந்த விரூபா, பேனாவை அவள் முகமருகே நீட்டி பல்லிளித்து மயக்க,

“காதல் காவியம் பார்ட் 2ன்னு நம்ம டைரி எங்கன்னு தேடுறேன் ரம்யா,” மெத்தையில் குவித்து வைத்திருக்கும் புத்தகம் ஒன்றை திறந்தபடி பேசினான்.

வெட்டும் பார்வையுடன் அவற்றை மீண்டும் அலமாரியில் அடுக்கியவள், “நோ மோர் லுக்கிங் பேக் ஷ்ரவன். இந்த நிமிஷத்துலேந்து நாம நம்ம புது லைஃப் ஸ்டார்ட் பண்ணறோம்,” தீர்மானமாக உரைத்தாள்.

“கோபப்படாம நான் சொல்றத கேளு ரம்யா,” என மெத்தையில் அமர்த்திக் கொண்டவன்,

“இவ்வளவு தூரம் முயற்சி செஞ்சும் பலன் இல்லையேன்னு எனக்குமே வருத்தம்தான். நிலையான சிகிச்சையில் பக்குவப்பட்டிருக்கும் இந்த உடலிலும் மனசிலும் ஸ்ட்ரெஸ் ஏத்திக்காம மனசுக்குப் பிடிச்ச விஷயங்களைத் தொடர்ந்து செஞ்சிட்டு வரச்சொல்லி டாக்டர் சஜஸ்ட் பண்ணாரு. அதான் நம்மகே நமக்கான டைரியை படிச்சு மனசுக்குள்ள ரீக்ரியேட் பண்ணிகிட்டா கொஞ்சம் ரிலாக்சிங்கா இருக்குமேன்னு தேடிட்டு இருக்கேன். எங்க வச்சிருக்கன்னு சொல்லு,” கெஞ்சிக் கேட்டான்.

மங்கையின் விழிகளின் நீர் கோத்துக்கொள்ள, “சரி! சரி! நோ மோர் லுக்கிங் பேக்,” என குறுக்கெழுத்துப் புதிர் புத்தகத்தை எடுத்தான்.

“உங்க அன்பையும் காதலையும் காலத்துக்கும் அனுபவிக்கணும்னு பேராசை எனக்கு. எங்க அதை நீங்க உருகி உருகி எழுதினால் நம்ம காதலும் பேப்பரோட தேங்கி நின்னுடுமோன்ற பயத்துல இனி நீங்க டைரியே எழுதக்கூடாதுன்னு ரூல் போட்டதே நான்தான்,” உம்மென்ற முகத்துடன் ஒப்பித்தாள்.

அவள் சிறுபிள்ளைதனமான சிந்தனைகளில் அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.

“டீச்சரே நோட்ஸ் எழுதி வச்சுக்கக்கூடாதுன்னு ரூல் போட்டா இந்த ஸ்டுடென்ட் எப்படிப் பாஸ் பண்ணறது விரூகுட்டி,” குழந்தையிடம் புலம்புவதுபோல மனையாளைச் சீண்டினான்.

புத்தகத்தை மடித்தும் கசக்கியும் ஒரு வழியாக்கிக் கொண்டிருந்த குழந்தையை வெடுக்கென்று தூக்கிக்கொண்ட ரம்யா, “நீ படிச்சு கிழிச்சது வரை போதும். கொஞ்ச நேரம் உன் மூளைக்கு ரெஸ்ட் கொடு,” அதட்டி, தோளில் சாய்த்து உறங்க வைக்க,

அது தனக்கான தூது என அறிந்து உதட்டுக்குள் சிரித்துக்கொண்டான் ஷ்ரவன்.

Click Here for Episode 25.02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!