Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

73. வேணு கானமிதுContest Stories 2026

கானம் 29

அத்தியாயம்: 29

காரணமின்றி காலம் யாரையும் அறிமுகப்படுத்துவதில்லை…



Advertisement

சிலர் நம் கர்மாவாக வந்து வாழ்க்கையை மாற்றிச் செல்வர்…

சிலர் நம்மோடு கடைசி வரை இருந்து வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்பர்…

Advertisement

Advertisement

யார் எதற்காக வந்தார்கள் என்பதை காலம் மட்டுமே சொல்லும்…

இது இந்தக் குடும்பத்திற்கு ஏற்ற வரிகள்.

Advertisement

அதிதிக்கு ஆசை உள்ளது. தாய்க்கு விரும்பம் உள்ளது என்பதற்காக ரிதன்யாவைத் திருமணம் செய்து கொள்வதா? என்று நினைக்கும் போதே, முதல் முறை ஈர கேசத்துக்கு மத்தியில் மின்னிய அலங்காரமற்ற பெண்ணவளின் நிர்மலமான முகமும்,

இரவில் கொலுசொலி சத்தத்தில் இறங்கி வந்தவளின் பரிதவிப்பான முகமும், கோயிலில் தன்னைப் பார்த்தும் உதிர்த்தச் சின்னச் சிரிப்பில் விஸ்தரித்த மங்கையின் முகமும் நினைவில் வந்து நிற்காமல் இல்லை.

ரசித்தான்.

முதல் முறை ஒரு பெண்ணை ரசனையோடு ஏறிடும் போது உண்டாகும் புல்லரிப்பு அவனுக்குள்ளும் வந்தது தான். அதைத் தந்தவளும் ரிதன்யா மட்டும் தான்.

மறக்க முடியாத மதி முகம் அவளுடையது.

ஆனால்…

அதற்காகவெல்லாம் திருமணம்…

அதுவும் ஒரு குழந்தையுடன் நிற்கும் பெண்ணை இந்தச் சமூக அவலத்தில் இருந்து காக்க வேண்டி, பரிதாபப்பட்டா திருமணம் செய்து கொள்வது?

பிறந்த குழந்தையாக, விவரம் தெரியாத பிள்ளையாக, தந்தையின் முகம் பார்க்காத குழந்தையாக இருந்தால் கூட பரவாயில்லை. நன்கு விவரம் அறிந்த, அதுவும் இன்னும் சில வருடத்தில் பூப்பெய்தும் பருவத்தில் இருக்கும் ஒரு பெண் பிள்ளைக்கு என்ன சொல்லி தன் உறவை வளப்படுத்துவது. அதை இந்த ஊர் எப்படி பார்க்கும். அவன் பார்த்து வளர்ந்த குழந்தை தான் அதிதி. ஆனால் அவளுடனேயே அவன் பழக்கத்தை விமர்சித்த உறவுகள் உண்டு.

ஒருவேளை ரிதன்யாவுடன் காதல் உண்டாகியிருந்தால் கூட இருவரின் அன்பை விளக்கிச் சொல்லலாம். அவன் அந்தச் சிறுமியிடம் அத்தனை நேசமாக ஒன்றும் பழகிவிடவில்லையே.

மதில் மேல் பூனையாக நிலையாத மனம் கொண்ட சிறுமியை எப்படி?? ரிதன்யாவைத் திருமணம் செய்து கொண்டால் உண்டாகும் சாகத பாதகங்களைப் பற்றிய, அநேக சிந்தனைகளில் அவன் உழன்று கொண்டிருக்க, சரிகா புன்னகை பூத்த முகத்துடன் அவன் முன் வந்து நின்றாள்.

அன்று ரோசமாக, அவன் வாங்கித் தந்த பீசாவின் மீது கையை வைக்காதவள், இன்று ஒரு டப்பாவைத் தூக்கிக் கொண்டு அவனின் முன் நின்றாள்.

“இது உங்களுக்குத்தான்.” என்று நீட்ட, வாங்கிப் பார்த்தவன், புருவ முடிச்சுடன் அவளை ஏறிட,

“மேகி… நானே செஞ்சேன்.” என்றவளின் செயலிலும், சிறு வெட்கம் கலந்த அவளின் ஆர்வப் பார்வையிலும் துணுக்குற்றான்.

அன்று ‘எனக்கு உங்கள பிடிக்கல.’ என்று வெறுப்புடன் சொன்னதற்கு காரணம் இருக்கும் போது, இன்று, ‘உங்களுக்காக கொண்டு வந்தேன்.’ என்று காட்டும் அக்கறைக்கும் காரணம் இருக்கும்.

அவளிடமே கேட்டான்.

“இத்தன நாளா மொறைச்சிட்டு இருந்தவ, இன்னைக்கி அதிசயமா மேகி தர்ற! என்ன விசயம்?” என்க, அவள் நாணிக் கேணி உடல் வளைத்து,

“பாட்டியும் ஆச்சியும் ஒரு வாரமா ஒன்னு பேசிட்டு இருக்காங்க…” என்றதும், என்ன பேசியிருப்பார்கள் என்பதை யூகித்தவனுக்குக் கோபம் வந்தது. சிறு பிள்ளைகள் இருக்கும் இடத்தில் இப்படியா அக்கறையற்று பேசுவது என்ற சீற்றம் வந்தாலும், சரிகாவின் பேச்சை ரசிக்க நினைத்து,‌

“என்ன பேசிக்கிட்டாங்க?”

“அது… அது… நீங்க… நீங்க… ரிது ம்மாவ கல்யாணம் பண்ணிக்கப் போறிங்கன்னு சொன்னாங்க..” கனத்த மௌனம் அவனிடம்.

“நீங்க என்னோட அம்மாவ கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் உங்கள அப்பான்னு கூப்பிடட்டுமா?” என்ற சிறுமியை ஆயாசமாகப் பார்த்தான்.

‘அதெல்லாம் எதுவும் கிடையாது. அவர்கள் பொய்யாய்ப் பேசுகின்றனர்.’ என்று சொல்லத் தான் வாய்த் திறந்தான். ஆனால் அதற்குள் சிறுமி பேசிக் கொண்டே சென்றது அவனின் இதயத்தை வால் கொண்டு அறுத்தது.

“அப்பாவானா அம்மாவ அடிக்க கூடாது. மிதிக்க கூடாது.‌ சண்டை போடாம என்னோட அம்மா நல்லா பாத்துப்பேன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணணும்.” என்று உள்ளங்கையை அவன் வசம் நீட்டியவள், சத்தியத்தை வாங்காது தன் கதையைத் தொடர்ந்தாள்.

“அம்மாவ மட்டுமில்ல என்னையும் பாத்துக்கணும்.

அப்பாவான பின்னாடி நான் நைட் ஒம்போது மணிக்கு மேல முழிச்சிருந்தா திட்ட கூடாது. என்னைப் பொட்டக் கழுதன்னு சொல்ல கூடாது. என்னை பைக்ல முன்னாடி உக்கார வச்சி ஸ்கூலுக்கு கூட்டீட்டு போகணும். ப்ராக்ரஸ் கார்டுல சைன் அப்பான்னு உங்க பேர போடணும். பேரன்ஸ் டீச்சர் மீட்டிங்கு வந்து என்னோட டீச்சர மட்டுமில்லாம என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாத்தையும் பாத்து, நான் தான் சரிகா அப்பான்னு சொல்லணும். யூனிஃபார்ம் போட்டு விடணும். புக்குக்கு கவர் போட்டுத் தரணும்.

எனக்கு அத்லட் பிடிக்கும். அம்மா பாவம். அவங்களால வேலை, வீட பாத்திட்டு என்னையும் அதுக்கு ட்ரெயினிங் குடுக்க கூட்டீட்டு போக முடியால.

நீங்க அப்பாவா வந்தா என்னைப் போக அனுமதிப்பீங்களா… என்னைத் தூக்கி சுத்துவீங்களா!” என்று பேசி முடிக்கும் முன்னரே சிறுமியை இழுத்தணைத்தான் தன் நெஞ்சோடு.

ஏக்கம்… ஏக்கம்… ஏக்கம்..

தந்தையான விக்ரமிடமிருந்து மகளுக்குக் கிடைக்காத ஏக்கம்…

அப்படியே அதிதி தான்…

தன்‌ மருமகள் மறுகிய விடயத்திற்காக இச்சிறுமியும் மறுகி இருக்கிறாள்.

இருவரும் ஒரே போல் தெரிய, அவர்களின் ஆசைகள் நிறைவேறுமேயாயின் இந்தத் திருமணத்தைச்‌செய்து கொள்வதில் தவறில்லையே.

அவள் கேட்ட கேட்காத அத்தனையையும் செய்து விடத் துடித்து உள்ளம்.

பெண் பிள்ளை என்று விக்ரம் காட்டத் தவறிய பாசத்தை ரிதன்யா ஈடு செய்தாள். அவள் பார்வையின் பொருள் புரிந்தே அனைத்தையும் கணக்குப் பார்க்காது வாங்கி கொடுத்து முயன்று மட்டுமே இருக்கிறாள்.

மூவரையும் கூட்டிக் கொண்டு சென்னையைச் சுற்றி வந்த அந்த மூன்று நாள்களில், சரிகாவின் கண்களில் தெரிந்த பொலிவு, தான் தாய் தான்… தந்தையாக அவளுக்கு மாற முடியாது என்பதை உணர்த்தியது ரிதன்யாவிற்கு.‌

ஜன்னலுக்கு உள்ளே நின்று உலகைப் பாதுகாப்பாக, உணர்வுப் பூர்வமாக, அன்போடு அணுகும் முறையைத் தாய் கற்றுக் கொடுக்கிறாள் என்றால், உலகை அனுபவ ரீதியாக, அறிவோடும், தொடர்ந்து ஜீவித்திருக்கும் சாதுர்யத்தையும் கற்றுத் தர தந்தை அவசியம்.

எந்த வயதினரானாலும், வாழ்க்கை பரிபூரணமாக மாற தாயும் தந்தையும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அதை பத்ரி சுட்டிக்காட்டி,

“இப்ப சொல்லு… என்ன பேச வந்த?” என்றவனுக்கு மௌனத்தைப் பதிலாகத் தந்தவள், ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு உறங்கும் இரு சிறுமிகளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“பேச எதுவும் இல்லை. யூ மேக் ஏ ரைட் டிசிசன்.” என்று தன் சம்மதத்தைச் சொன்னாள்.

ஏனெனில், “அதி மாமாவ எதுக்கு அப்பான்னு கூப்பிடுற சரிகா.”

“கூப்பிடக் கூடாதாம்மா! மாமாவ கல்யாணம் பண்ணிட்டா அத்தை. பெரியம்மாவ கல்யாணம் பண்ணிக்கிட்டா பெரிப்பா. சித்திய கல்யாணம் பண்ணிக்கிட்ட சித்தப்பா! அப்ப அம்மாவ கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்பான்னு தான சொல்லணும்.” என்று புத்திசாலித் தனமாக பேச,

“இதெல்லாம் உன் ஆச்சி சொல்லிக்குடுத்தாங்களா?”

“நோ… நோ… நானே சிந்திப்பேன்… ஐ ஹவ் எ ப்ரைன்.” என்று தலையைத் தட்டிச் சொல்ல,

“உனக்கு என்ன தெரியும்? புதுசா வர்ற உறவுகிட்ட நீ எதிர்பாக்குறது எல்லாம் கிடைச்சிடுமா! எந்த நம்பிக்கைல அவன அப்பான்னு கூப்பிடுற” என்று கோபமாக அதட்டினாள். அதற்கு சிறுமியோ,

“அதி அக்கா மாமா ம்மா… அக்காவையும் பாட்டியையும் அவ்ளோ சூப்பரா பாத்துக்கும் போது, வைஃப்பையும் பிள்ளையையும் பாத்துக்க மாட்டாங்களா ம்மா.” என்றவள் எந்த இடத்திலும் தன்னையும் தாயையும் பிரித்து பேசவே இல்லை.

இரண்டாம் திருமணத்தில் பாதிக்கப்படுவது என்னவோ குழந்தைகள் தான். ஆனால் தன் விடயத்தில் அது நிச்சயம் நடக்காது. பத்ரி நடக்க விட மாட்டான் என்ற நம்பிக்கையை, பெறாத பிள்ளையான அதிதிக்காக கலங்கி நின்றவனின் தோற்றமே தந்தது.

ரிதன்யா,‌ “குழந்தைங்களுக்காக நாம கல்யாணம் பண்ணிக்கிறது… சரியா இருக்குமா…” என்று இழுக்கும் போதே,

“எல்லாரும் கல்யாணத்த ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் செஞ்சுக்கிறாங்க. அம்மாக்காக, அப்பாக்காக, பிஸ்னஸ்காக, காதலுக்காக, நட்புக்காகன்னு ரீசன் ஏராளமான இருந்தாலும், வாழுற வாழ்க்கை அவங்களுக்கானதா இருக்கும் போது, அந்த உறவு லைஃப் லாங் வரும். இந்தக் கல்யாணமும் இந்தக் குழந்தைகளுக்காகத்தான். ஆனா வாழப் போற வாழ்க்கை… நமக்கானது.” என்றவன், அவளின் கரத்தைப் பற்ற, அவள் விருட்டென உருகிக் கொண்டாள்.

அவள் உருகிய வேகத்திற்கு இணையாக, மீண்டும் கரத்தைப் பற்றித் தன் கைக்குள் சிறை வைத்தவன், “நமக்குன்னா அதுல நீயும் நானும் சேந்து இருக்கோம். இருப்போம்.” என்று அழுத்தமாகச் சொன்னான். அவனின் பேசி, ஆணாதிக்கத் தனமாக பட்டு, பயத்தையே உண்டாக்கியது. அதை அவள் உடல் மொழி காட்டிக் கொடுக்க,

“தன்யா…. நாம இனி ஹாஸ்பெண்ட் அண்டு வைஃப். என்னோட தொடுதலுக்கு நீ இப்படி ரியாட் பண்றது, என்னை அவமதிக்கிற மாதிரி இருக்கு.” என்றவன் ஏர்போர்ட்டில் அவள் சிலையென நின்றதைக் குறிப்பிட்டும், இப்பொழுது நடுக்கிக் கொண்டு நிற்பதையும் பற்றிப் பேசினான்

“நான் உங்கிட்ட மிஸ் பிகேவ் பண்ண மாதிரியான ஃபீல்ல எனக்கு குடுக்குற.”

“ஐயோ… அப்படி இவ்லை… நான்… அவ்ளோ அடி‌பட்டிருக்கேன் பத்ரி… கல்யாணங்கிறது வெறும் வாய் வார்த்தை கிடையாது. அதுல… அதுல… என்னால… நான் பிசிக்கல் ரிலேஷன்சிப்க்கு…” என்று அவள் மேலே சொல்ல முடியாது தவிக்க, அவளின் தோளில் கரம் பதித்து லேசான அணைப்பைத் தந்தவன்,‌

“கல்யாண வாழ்க்கைல காதல், காமத்த விட முக்கியமானது உனக்கு நானும் எனக்கு நீயும் குடுக்குற மரியாதையும் மதிப்பும் தான். அது தான் ஒரு நல்ல குடும்பத்த கட்டமைக்க உதவும். முதல்ல நம்ம உறவ நீ மதிக்கணும். நாம ஒருத்தர்க்கு ஒருத்தர் மனம் விட்டு பேசி, எல்லாத்தையும் சேர் பண்ணிக்கணும். ஒரு புரிதல் நமக்குள்ள வந்ததும் காலமே நம்மல அடுத்த ஸ்டேஜ்க்கு தன்னால கூட்டீட்டு போகும். நாம போக வேண்டியது இல்லை. நடக்க வேண்டி எல்லாம் இயல்பா நடக்கும். யாரோட வர்புறுத்தலும் இல்லாம.” என்று பிடித்திருந்த கரத்தில் தன் விரல்களோடு அவள் விரல்களைப் பிணைந்து கொண்டு,

“நைட் நேரம்… யாருமில்லாத ரோடு… ஒரு வாக் போலாமா தன்யா.” என்க, அவள் தலை தானாக அசைந்தது.

நிறைய பேசினான். அவளையும் பேசத் தூண்டினான். மனத்தை மொத்தமாக கொட்டி விடவில்லை என்றாலும், கொட்டத் தயார் நிலைக்கு வைத்திருக்க உதவியது.

எதிர்கால என்னாகுமோ! என்று, இதுவரை அச்சுறுத்தி வந்த இரவை முதல் முறை தைரியமாக, ஒரு ஆடவன் கரம் பற்றிக் கடந்து செல்ல உதவினான். உன்னை உரிமையுடன் நித்தமும் பாதுகாப்பாய் அழைத்துச் செல்வேன் என்கிறான்.

வரவே வராதா என்றிருந்த விடியல், யாரோ கன்னத்தில் அறைந்ததைப் போல் சிவந்து கொண்டு வந்தது.

அது நம் வாழ்க்கைக்கான விடியல் என்றான்.

அவர்களின் திருமணம் ஆர்ப்பாட்டம் ஏதுவும் இல்லாது இரு பிள்ளைகளின் குதுகலத்தில் அரங்கேறியது.

அரக்கு நிறப் பட்டில் இருந்தவளையும் செம்பு வண்ண பட்டு வேட்டி சட்டையில் மிளிர்ந்தவனையும் வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தாள் அதிதி.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நடந்தேறியது திருமணம். சரிகாவின் துடுக்குத் தனத்தில் வாடாத புன்னகையுடன், ஆதவன் கண்ட அல்லியாய் முகம் உயர்த்தி, மஞ்சள் கயிற்றோடு கோர்க்கப்பட்ட, தங்கத் தாலியை ஆடவன் கட்டிவிட, அதை முழு மனதோடு ஏற்றுக் கொண்டாள் ரிதன்யா என்பதை பத்ரியின் வீடெங்கும் தொங்கிக் கொண்டிருக்கும் சட்டங்கள் சொல்லும்.

அதிலும் ரிதன்யாவின் நெற்றியில் பத்ரி குங்குமம் வைக்கும் படத்தை பத்ரியின் பெட்ரூபிலும், நால்வர் இருக்கும் படத்தை அதிதியின் அறையிலும், ஐவரும் சேர்ந்தெடுத்த குடும்ப படத்தை ஹாலிலும் மாட்டி வைத்துள்ளனர்.

திருமணத்தின் போது விக்ரமின் வீட்டார் வந்து வாசலில் கூடி நின்று, “எம்புள்ளைய தூக்கிக் குடுத்து ஒரு வர்ஷம் கூட ஆகல. அதுக்குள்ள இவள புது புருஷனத் தேடி கட்டிக்கிறாளோ…” என்றா நந்தினி கத்த, மற்றவர்களை முந்திக் கொண்டு, பத்ரி தான் பதில்களைத் தந்தான்.

அவன் வாயால் தந்த பதிலில் திருப்தியுறாதவர்களைக் காவல் நிலையத்தில் புகார் கொண்டு தந்தது.

“ரிதன்யா என்னோட மனைவி… அவள அசிங்கப்படுத்துற மாதிரி எது நடந்தாலும் நான் சும்மா இருக்க மாட்டேன்.” என்றவன், சொன்னது போல் அவன் மனைவிக்கான மதிப்பை அவளுக்குக் கொடுத்தான். விக்ரம் செய்து வைத்த காரியத்தால் எந்த இடத்திலும் அவளின் பெயருக்குச் சிறு சுணக்கம் கூட வந்திடாதபடி பார்த்துக் கொண்டான்

சின்னச் சின்ன தொடுகைக்கு அவளைப் பழக்கியிருந்தான். இப்பொழுதெல்லாம் அவன் கரம் பிடித்தாள் உடல் நடுக்கம் காண்பது இல்லை.

இன்றளவும் கணவனின் சம்பாத்தியம் எவ்வளவு என்று பல மனைவிகளுக்குத் தெரியாது. அவர்கள் தரும் பணத்திற்குள் அனைத்தையும் அடைக்க வேண்டும். போதவில்லை என்றால் மடிப்பிச்சை தான் வழி.

ஆனால் பத்ரி வித்தியாசமாகத் தெரிந்தான். தன் வங்கிக் கணக்கை இணைக் கணக்காக்கினான். வீட்டு நிர்வாகத்தை அவள் வசம் ஒப்படைத்தான். அவள் கவனிக்கத் தவறிய விடயங்களைக் கூட அவன் கவணிப்பான். இருவரும் திட்டமிட்டு குடும்பத்தை நடத்தத் தொடங்கினர்.

தினமும் புலணத்தில் உரையாடல்களைக் கையில் எடுத்தனர்.

என்ன செய்கிறாய்? என்று ஆரம்பித்து அன்றைய நிகழ்வுகளை இருவரும் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர்.

அவனின் பணியின் காரணமாக தூர தேசம் சென்றாலும், குறுஞ்செய்திகள் அனுப்பத் தவறியதில்லை.

எத்தனையோ வேலைக்கு மத்தியில், பல தரப்பட்ட பிரச்சினைகளுக்கு இடையில் தன் நினைவு அவனுக்கு இருக்கிறது என்பதே பெண்ணவளுக்குள் சிலிர்ப்பைப் பாய்ச்சியது.

என்று தன் மனைவி என்று விமானநிலையத்தில் வைத்து அறிவித்தானோ அன்று சாயத் தொடங்கிய மனம், தனக்கான நிமிடங்களை அவன் ஒதுக்கியதில் முழுதாக அவன் வசம் சென்றிருந்தது.

காதல் செய்ய இருவரும் பருவப் பிள்ளைகள் இல்லை. பொறுப்புள்ள பெற்றோரின் ஸ்தானத்தில் இருப்பவர்கள். ஆதலால் அனைத்தையும் பக்குவமாகவே கையாண்டனர்.

அவர்கள் வாழ்க்கையில் எல்லாம் இயல்பாக நடந்தது.

இன்பமான குடும்பமாக வாழத் தொடங்கி, இரு மாதங்கள் ஓடி விட்டன. ஆனாலும் இல்லறத்தை மட்டும் தொடங்க இருவரும் ஆர்வம் காட்டவில்லை. அதிதி சரிகாவுடன் ரிதன்யா படுத்துக் கொள்ள, சுதா ஹாலிலும், பத்ரி தனி அறையிலும் தூங்கினர். அவனின் பணியின் காரணமாக, குவார்ட்ஸ் மற்றும் வீடு என்று வந்து வந்து செல்கிறான்.

மகனுக்குத் திருமணம் முடிந்த போதும், இருவரும் தாயும் தகப்பனுமாக மட்டுமே இருந்தது சுதாவிற்கு வருத்தம் தான் என்றாலும், இத்தனை தூரம் செய்த கடவுள் அதையும் செய்வார் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

அவரின் நம்பிக்கையும் வீண் போகாது என்ற நம்பிக்கை சரிகாவால் கிடைத்தது.

அவள் தான் அந்த வீட்டில் பத்ரிக்காக யோசிக்கும் ஆள்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்று கணக்காக தனக்கும் சரிகாவிற்கும் ஒரு ஆடை எடுப்பது வழக்கம். அதிதிக்கும் சேர்த்து எடுக்கலாம் என்று மகள்கள் சகிதமாக கடைக்குச் சென்றாள்.

பெண்கள் பிரிவில் அதிதியும் ரிதன்யாவும் இருக்க, சரிகா ஆண்கள் பிரிவிற்கு சென்று பத்ரிக்கு டி சர்ட்களைக் எடுத்துக் கொண்டு வந்து கூடையில் வைத்தாள்.

என்ன வைக்கிறாள் என்று தெரியாது அதை வெளியே எடுக்க,

“ம்மா… அதை வை மா. அது அப்பாக்கு.” என்று அதட்டியவள், இன்னும் இரண்டைக் கொண்டு வந்து வைத்து விட்டு,

“இதுக்கும் சேத்து பில்லு போட்டிடுங்க.” என்றாள் அதிகாரமாக.

அவனுக்கு வாங்கிக் கொடுப்பதில் பிரச்சினை இல்லை.

அதை பத்ரி ஏற்பானா! மாட்டானா! என்பதில் தான் பிரச்சினை. மாட்டேன்! என்றால் சரிகாவின் மனம் சருகாகி விடுமே என்று.

விக்ரமிடம் ஒருசில அனுபவங்கள் இருந்ததால் பத்ரிக்கு வாங்கித் தர தயங்கினாள்.

ஆனால் அவளின் தயக்கத்தைத் தகர்த்தெறிந்து மகள் வாங்கித் தந்ததை அணிந்து காட்டி, “சட்டை மட்டும் வாங்கிருக்க. பேண்டுன்னு எதைப் போட?”

“உங்க சைஸ் தெரியாதுப்பா. இதுவே உங்கள மாதிரி இருக்குற ஆளக் கண்டு பிடிச்சி, அவங்கள கூட்டீட்டு போய், இந்த சைஸ் தான் என்னோட அப்பா இருப்பாருன்னு காட்டி, செலக்ட் பண்ணேன். தெரியுமா!” என்று முட்டைக் கண்ணைக் காட்ட, அவளை அள்ளி, குண்டு கன்னத்தில் முத்தமொன்றைப் பதித்தவன்,

“இந்த பீரோல என்னோட டிரெஸ் இருக்கும். அதுல இந்த இடத்துல சைஸ் போட்டிருப்பான். சைஸ் தெரியலன்னா… துணியா கூட வாங்கிட்டு வா… உன் அப்பா தைச்சுப் போட்டுப்பேன்.” என்றான்.

“ம்… ஓகேப்பா… அடுத்த முறை அம்மா கூட்டீட்டு போனா அப்படியே செய்றேன்.” என்றவள்,

“உங்களுக்கு அம்மா வாங்கித் தந்தாங்க… அம்மாக்கு நீங்க எப்ப வாங்கப் போறிங்க? ” என்று பத்ரியை ரிதன்யாவிற்கு புடவை வாங்கித் தர வைத்தாள்.

ரிதன்யாவையும், “அப்பா ஆசையா வாங்கிக் குடுத்திருக்காரு… போட்டுக் காட்டும்மா…” என்று நச்சரிப்பாள்.

புயல் காற்று வேணு கானமாக மாறி இவர்களின் வாழ்க்கை இசைத்துக் கொண்டிருக்க, தலைவனையும், தலைவியையும் அடுத்த நிலைக்கு அவர்களின் கானம் தூக்கிச் சென்றது.

கானம் இசைக்கிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!