Skip to content
Post Views: 43
ரிதம் 36
ஒவ்வொரு வருடமும் விருதுகள் கொடுக்கும் தரவரிசைப் பட்டியல் மாறுபடும்.
Advertisement
இந்த முறை எந்த வரிசையில் கொடுக்கிறார்கள் என்று எல்லாவற்றையும் முதலிலேயே கௌதம் விசாரித்து வைத்துவிட்டான்.
அதன்படி விருதுகள் ஒவ்வொன்றாகக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. தொழில்நுட்பக் கலைஞர்கள், நீண்ட வருடங்கள் திரைத்துறைக்குப் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் என்று ஒவ்வொருவருக்காகக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
Advertisement
Advertisement
“சிறந்த இசையமைப்பாளர் தமிழ்” என்று கூறியதும், கௌதமுக்கு மட்டுமில்லாமல் நத்தாஷாவின் மனதிலும் ஏதோ ஒரு சொல்ல முடியாத சந்தோஷம் பரவுவதை அவளால் உணர முடிந்தது.
அவன் பெயர் வாசிக்கப்பட்டு அவன் எழுந்தபோது, அவளும் தன்னை அறியாமல் எழுந்து கைதட்ட ஆரம்பித்துவிட்டாள். அவர்கள் ட்ரூப் மெம்பர்ஸின் நிலையும் அதுதான். ராகினி மற்றும் ப்ரீத்தியின் நிலையும் அதுதான். துள்ளிக்குதிக்கப் போனவளை ரமேஷ் கைகள் கொண்டு அடக்கிப் பிடித்திருந்தான்.
Advertisement
வாங்குவது யாராக இருப்பினும், அவர்கள் நம் நெருக்கமானவர்கள் என்றால், அந்தச் சந்தோஷம் நம்மையும் ஆட்கொள்ளும்; அந்த நிலைதான் அவர்களையும் ஆட்கொண்டிருந்தது.
மேடை ஏறியவன், அந்த விளக்குகளின் ஒளியில் இன்னும் ஜொலித்துக் கொண்டிருந்தான். கருநீலக் கோட் சூட், அதற்கு ஏற்றது போல ஷூக்கள் என்று இருந்தவன், புன்னகையோடு மைக்கை வாங்கினான்.
“ஹாய் எவ்ரிஒன், இது என்னோட இரண்டாவது ஃபிலிம்பேர் அவார்ட். பட், மியூசிக் டைரக்டரா வாங்குவது இதுதான் முதல் தடவை. நான் இந்த இண்டஸ்ட்ரிக்கு வந்து அஞ்சு வருஷங்கள் ஆகிடுச்சு. ரொம்பக் கீழயிருந்து மேல வந்திருக்கேன். ஆரம்பத்துல இருந்து இன்னைக்கு வரைக்கும் என் கூட இருக்கிற என்னோட ட்ரூப் மெம்பர்ஸ்க்கு இந்த அவார்டைச் சமர்ப்பணம் பண்றேன். அப்படியே என்னோட வெற்றி தோல்வியிலும் கூட இருந்து, ஒவ்வொரு நொடியும் எனக்குத் துணையாய் இருந்து, என்னைத் தூக்கிவிட்ட என்னுடைய தாய்க்கும்…” என்றவுடன் பெருத்த கைதட்டல் கிடைத்தது.
“நான் அட்ரஸ் இல்லாம இருக்கும்போது எனக்குச் சப்போர்ட் பண்ண என்னோட ட்ரூப் மெம்பர்ஸையும் இந்தச் சந்தோஷமான நேரத்துல மேடை ஏற்ற விரும்புறேன்” என்று கூறி, அவர்களை நோக்கிச் கைகாட்டினான். ஒவ்வொருவராக எழுந்து நடந்து வந்தனர். அவளும் எழப்போக, அவள் கையைப் பிடித்துக்கொண்டாள் ராகினி.
“நானும் அவங்க ட்ரூப் மெம்பர்ஸ்தாண்டி.”
“அவர் சொன்னதைக் கவனிக்கலையா? இத்தனை வருஷம் அவர் கூட ட்ராவல் பண்ணவங்க. நீங்க இப்பதானே சேர்ந்தீங்க? அதனால அமைதியா உட்காருங்க” என்று கூறிவிட்டாள் ராகினி.
மனமே இல்லாமல் தங்கைக்காக அமர்ந்தாள். ஆனால், ராகினியை ஆட்டி வைத்துக் கொண்டிருப்பவனும் அவன்தான். கௌதம் சொன்னதினால் தான் அவள் அதைச் செய்திருந்தாள்.
பெரிய மேடை என்றாலும், அத்தனை பேர் ஏறி நிற்கும்போது மேடை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது போல இருந்தது.
ஆனால், தனக்குக் கிடைத்ததைத் தன்னோடு சேர்ந்து பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் அவன் சமர்ப்பிப்பது பெரிய விஷயமாகத்தான் தோன்றியது. அவனுடைய செயலை எல்லோரும் மனமாரப் பாராட்டினார்கள்.
மகாலட்சுமி, நத்தாஷா வராததை உணர்ந்து, கௌதமோடு நடக்கும்போது கேட்க, “நான்தான் சொன்னேன் வர வேண்டாம்னு” என்று அவன் கூறிவிட்டான்.
பின்னால் வந்துகொண்டிருந்த திவ்யாவுக்கும் அது கேட்டது.
‘பரவால்ல, அவளை அவாய்ட் பண்றாரு போல?’ என்று மனதிற்குள் ஒரு துள்ளல்.
அடுத்து வெவ்வேறு மொழிகளில் இசையமைப்பாளர்களுக்கும் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறந்த குணசித்திர நடிகர்களுக்கு கொடுக்கப்பட்டது.
அதன் பிறகு சிறந்த பாடகர்களுக்கான விருது என்று, முதலில் மலையாளச் சினிமாவில் பாடகர், பாடகிக்கான விருதைக் கொடுத்தார்கள்.
பிறகு, “தமிழில் சிறந்த பாடகிக்கான விருது” என்று அவர்கள் வாசிக்கும்போதே, அவள் உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை சிலிர்த்து அடங்கியது.
“மிஸ் நத்தாஷா” என்று கூறியதும், அனைவரின் கரகோஷம் வானைப் பிளந்தது.
அருகில் அமர்ந்திருந்த குடும்பமும், தோழியும் ஆர்ப்பரித்தனர். புஷ்பவல்லியின் கண்களில் ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது.
தயங்கித் தடுமாறி மேடை ஏறியவளை, அவனும் கைதட்டியபடியே பார்த்திருந்தான். அதே கருநீல வண்ண டிசைனர் சாரியில், மேடையின் ஒளியில் ஜொலித்துக் கொண்டிருந்தாள் நத்தாஷா. அவார்டை வாங்கும்போது கைகள் நடுங்கின.
“நீங்க ‘சரிகமபதநி’ மூலமா சினிமா இண்டஸ்ட்ரிக்கு வந்தவங்க. இந்த அவார்ட் பத்தி என்ன நினைக்கிறீங்க?” என்று தொகுப்பாளினி கேள்வி கேட்டார்.
“மன்னிக்கணும், நான் அந்த இசை நிகழ்ச்சி மூலமா இந்த மேடைக்கு வரல. என்னோட குரல் வளம் வெளியே தெரியறதுக்கு அந்த நிகழ்ச்சி ஒரு காரணமா இருந்திருக்கலாம். மத்தபடி, இன்னைக்கு உங்க முன்னாடி நத்தாஷாவா வர்றதுக்கு முக்கியமான காரணம் கௌதம் சார் மட்டும்தான். அவரோட விடாமுயற்சி எங்களைப் போல நிறைய பாடகி, பாடகர்களையும் உருவாக்கியிருக்கு. அதுல நானும் ஒருத்தி” என்று நிறுத்தினாள்.
“இந்த அவார்டை யாருக்காவது டெடிகேட் பண்ண விரும்புறீங்களா?” என்று தொகுப்பாளினி கேட்க.
“இதுக்கு முட்டுக்கட்டையா இருந்து, இப்ப தெய்வமான என் அப்பாவுக்கும், என்னைப் போல சாமானிய பாடகிகளுக்குக் கானல் நீரா இருந்த பரிசைக் என் கையில் கிடைக்க வச்ச கௌதம் சாருக்கும் நான் ஹானர் பண்ணிக்க விரும்புறேன்” என்று கூறியவள், அப்படியே அந்த மேடையின் மீது குப்புற விழுந்து வணங்கினாள். யாருமே எதிர்பார்க்கவில்லை. இதுவரை அந்த மேடையில் சொற்ப நபர்கள் மட்டுமே எப்போதாவது, எங்காவது செய்திருப்பார்கள். அவளின் அந்தச் செயல் பலரையும் ஆச்சரியத்தில் திளைக்க வைத்தது.
“அந்தப் பாடலை எங்களுக்காக இரண்டு வரி பாட முடியுமா?” என்று கேட்டனர். வேறு ஒரு பாடலைப் பாடினாள்.
“வேற ஏதாவது சொல்ல விரும்புறீங்களா?” என்று கேட்டனர்.
“கடவுள் சன்னதி வரைக்கும் என்னைக் கொண்டு போய் விட்டதுல என் ஃப்ரெண்ட் ப்ரீத்தி, அவளோட கணவர் என்னோட அண்ணன் ரமேஷ், என் தங்கை, என் அம்மா… இவங்க எல்லாருக்கும் நான் என் காலம் இருக்கிற வரைக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று நெஞ்சில் கையை வைத்தபடி கூறினாள்.
மேடையில் இருந்தபடியே அவள் பார்வை கௌதமைத் தேடியது. ஆனால், அவர்கள் இருக்கும் இடம் வெளிச்சமாகவும் அவன் நின்ற இடம் இருளாகவும் இருந்தது.
மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தவள்,அவன் எதிரில் வந்து அவன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள். அது அங்குச் சுற்றி இருந்தவர்களுக்கு மட்டும்தான் பார்வை பொருளானது.
“வாட் இஸ் திஸ் நத்தாஷா?” அவள் விழுவதற்கு முன்னாலேயே அவளைத் தூக்கிப் பிடித்திருந்தான்.
“தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்” என்றாள்.
“நான் சொன்னது ஞாபகம் இருக்கா நத்தாஷா? உன்னோட அவார்ட் வாங்கும்போது எனக்கான கிஃப்ட்டை நான் கேட்பேன்னு சொன்னேன். நீ கண்டிப்பா தரணும்” என்று வசீகரிக்கும் புன்னகையோடு கூறினான்.
அவள் சம்மதமாகத் தலையாட்டினாள்.
அவார்டை ராகினி கையில் வாங்கிக் கொண்டாள்; முத்தம் கொடுத்தாள், தடவிக் கொடுத்தாள், கட்டிப் பிடித்தாள்; இன்னும் என்னென்னமோ செய்தாள். அவளே வாங்கியது போல உணர்ந்தாள். அதன் பிறகு ப்ரீத்தி வாங்கிப் பார்த்தாள்.
மேடையில் சிறந்த ஆண் பாடகன் பெயர் வாசிக்கப்பட, நத்தாஷா துள்ளலோடு கைகளைத் தட்டினாள்.
அவனும் மேடை ஏறினான். “நான் இந்த அவார்டை என் அம்மா கூட வாங்கணும்னு நினைக்கிறேன்” என்று கூறினான்.
அவனுடைய தாய் மேடைக்கு அழைக்கப்பட்டார். அவரோடு சேர்ந்து நின்று அதை வாங்கினான். பிறகு அவனிடம் மைக் நீட்டப்பட்டது.
“சிறந்த இசையமைப்பாளருக்கான விருது, பாடகருக்கான விருது இரண்டும் ஒன்றுசேர உங்களுக்குக் கிடைச்சிருக்கு. அதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?”
“ஒரு பாடகனா இது என்னோட இரண்டாவது ஃபிலிம்பேர் அவார்ட். என்னோட முதல் அவார்ட், டெபியூட் சாங்குக்கு எனக்குக் கிடைச்சிருந்தது. ஆனா, இந்த வருஷம் இந்த நாளும் என் மனதிற்கு நெருக்கமான நாள். இங்க இந்த மேடையில யாரும் பண்ணாத ஒன்னை நான் பண்ணனும்னு நினைக்கிறேன். என்னோட ஃபியான்சியை அதிகாரப்பூர்வமா அறிவிக்கணும்னு நினைக்கிறேன். எங்க அம்மா முன்னிலையில, உங்க எல்லாரையும் சாட்சியா வச்சு அவளுக்கு மோதிரம் அணிவிக்கணும்னு நினைக்கிறேன்” என்றான் கௌதம்.
“தாராளமா சார். யார் அந்த லக்கி வுமன்? சமீப காலமா இளைய தலைமுறையினரின் கிரஷ் நீங்கதான். இது நிறைய பேரோட ஹார்ட்டை அட்டாக் பண்ணும். எனக்குமே நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு. சிங்கிளா இருந்தவங்க எல்லாம் இப்படி கமிட்டடானா, நாங்க எல்லாம் என்ன பண்றது?” என்று அந்தத் தொகுப்பாளினி நொந்து கொண்டார். அதற்கும் புன்னகையை உதிர்த்துவிட்டு, அவன் மைக்கைத் தூக்கிப் பிடித்தான்.
“என்னோட பிரைட் மிஸ் நத்தாஷா! அவங்களை மேடைக்கு அழைத்து வரும் பொறுப்பை அவங்க அம்மாகிட்டயும், தங்கை மற்றும் அண்ணன்கிட்டயும் ஒப்படைக்கிறேன்” என்று கூற, அவள் அதிர்ந்து வாயில் கையை வைத்துவிட்டாள்.
ஆனால், அவளைச் சுற்றி அமர்ந்திருந்த அவளுடைய குடும்பம் அவளைப் பிடித்துத் தூக்கி நிறுத்தியது.
“அம்மா என்ன இது?” என்று அவள் கேட்கும்போது, ஒளிவட்டம் சரியாக அவள் மேலே வந்து விழுந்தது. அங்கிருந்த கேமராக்கள் அவளை வட்டமடிக்க, அவள் தன் முக பாவனைகளை வெளியே காட்ட முடியாமல் திண்டாடினாள். ஆனால், அவள் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது. உணர்வுகளை அடக்கப் பெரும் பாடுபட்டாள்.
தன்னையே கேமராக்கள் குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருப்பது தெரிய, அதற்கு மேல் மற்றவர்களிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அதற்குள் ராகினியும் ப்ரீத்தியும் இரு கரங்களை பற்றியபடி நடக்கும் விதமாக அவளை அழைத்தனர்.
“என்னமா இது”? என்று அப்பொழுதும் மகள் சிறு குரலில் கேட்க.
“நாங்க, எது பன்னாலும் உன் நல்லதுக்குத்தான் பண்ணுவோம். எல்லாரும் உன்னையே பார்க்குறாங்க, அவ்வளவு பெரிய திரையில உன்னோட முகம் தான் பிரதிபலிக்குது” என்று அடக்கினார் புஷ்பவல்லி. அவளும் அந்தத் திரையைப் பார்த்துவிட்டு மேடையிலிருக்கும் கௌதமைப் பார்த்தாள்.
அவன் புன்னகையோடு அவளைத்தான் பார்த்திருந்தான். அருகில் இருந்த அவன் தாயின் புன்னகையும் வாடியிருக்கவில்லை. இதெல்லாம் முன்பே நிர்ணயிக்கப்பட்டதா? ஏற்கனவே பேசி வைத்துவிட்டார்களா? தன்னைத் தவிர யார் முகத்திலும் அதிர்ச்சி இல்லையே”? என்று நினைத்துக் கொண்டே அவள் முன்வரிசையை நோக்கி நடந்தாள். விருது வாங்கும் நபர்களுக்கு மத்தியில் அவள் அமரவில்லை; தன் தாய், சகோதரியுடன் அமர்ந்திருந்தாள்.
கௌதம் சொன்னது ரமேஷுக்கு அதிர்வாக இல்லை; ஏற்கனவே வீட்டில் அதை அவன் சொல்லிவிட்டான். அப்போதே ரமேஷ் நெகிழ்வாக உணர்ந்தான்.
“ஒரு அண்ணன் என்ன பண்ணணுமோ, அதை நீங்க பண்ணியிருக்கீங்க ரமேஷ், ப்ரீத்தி பண்ணது பெரிய விஷயமில்ல . பிரண்டுன்னா அப்படித்தான் இருப்பாங்க. ஆனா நீங்க பண்ணது பெரிய விஷயம்தான். உங்க தங்கச்சியை மேடைக்குக் கூட்டிட்டு வர வேண்டிய பொறுப்பு உங்களுடையது” என்று கூறிவிட்டான். அதை நினைத்தபடி அவர்களுக்கு பின்னோடு நடந்தான் ரமேஷ்.
தன்னைப் பார்க்கும் கேமராவைப் பார்த்துக் கொண்டே அவள் மேடை ஏறினாள்.
அவள் அதிர்ச்சி விலகாமல் இருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது. மைக்கைத் தாயிடம் கொடுத்துவிட்டு வேகமாகச் சென்றவன். கையை நீட்டினான். அவள் தயக்கமாக இருக்க,
ராகினி அவள் கையைப் பிடித்து அவன் கையில் ஒப்படைத்தாள். அவனும் அவளைப் பற்றியபடியே தாயின் அருகில் அழைத்து வந்தான்;
“எனக்கான கிஃப்ட் நீதான்” என்றான் மந்தகாசப் புன்னகையுடன். “என்னுடைய கிஃப்ட்டை நான் உன்னோட அவார்ட் ஃபங்க்ஷன் அப்போ கேட்பேன்” என்று அன்று கூறியது இப்போது ஞாபகம் வந்தது நத்தாஷாவிற்கு.
“சார், ஆனால் நான்…” என்று அவள் இழுக்க.
“உன்னைப் பத்தி எனக்கு எல்லாமே தெரியும் நத்தாஷா. நான்தான் உன்னைத் தவறவிட்டுட்டேன், அது என்னோட தப்புதான். அதுக்கான தண்டனையை என்னோட சரிபாதியா நீ அனுபவிச்சுட்ட. இனி நான் உன்னைத் தவறவிட மாட்டேன். யார் எதிர்த்து நின்னாலும் நீ என்னுடைய மனைவி” என்றான்.
கரகோஷம் மிக அதிகமாக எழுப்பப்பட்டது.
“ரொம்ப நன்றி, நான் இங்க என்கேஜ் பண்ணிக்கிறதுக்கு இவ்வளவு ரெஸ்பான்ஸ் இருக்கும்னு நான் எதிர்பார்க்கல. தேங்க்யூ சோ மச் கைஸ்!” என்று கூறியவன், தன் உதட்டில் கையை வைத்து ஆடியன்ஸை நோக்கிப் பறக்கும் முத்தத்தையும் வெளிப்படுத்தினான்.
திவ்யா அதிர்ச்சியாக நின்று கொண்டிருக்க, அவள் அருகில் இருந்தவர்கள் எல்லாம் கொண்டாட்டமாக அதைக் கொண்டாடினார்கள். எங்கிருந்தோ விசில் சத்தம் வேறு கேட்டது. திவ்யாவிற்குப் பற்றிக் கொண்டு வந்தது.
“அவங்களுக்கு இடையே என்ன ஸ்பெஷல்னு கேட்டியே, இப்ப தெரிஞ்சிருக்கும் என்ன ஸ்பெஷல்னு. இனிமே கௌதம் சார் மட்டுமில்ல, அவங்களும் நமக்கு முதலாளியம்மா” என்று சிறு குரலில் அவளுக்குக் கேட்கும்படி கூறினான் ஸ்ரீதர். அவள் அங்கிருந்து கோபமாக வெளியேறினாள்.
மேடையில், மகாலட்சுமி கொடுத்த மோதிரத்தை அவள் கையில் அணிவித்தான் கௌதம். ஒரு சொட்டு கண்ணீர் நத்தாஷாவின் கண்களிலிருந்து அவன் கைகளில் பட்டுத் தெறித்தது.
“ரொமான்டிக்கா மட்டுமில்ல, நெகிழ்வாவும் இருக்கு இந்தத் காட்சி. அப்படியே உங்க காதலைப் பத்தி சொல்லிடுங்க, நீங்க ரெண்டு பேரும் ஜோடியா பாடுன பாடலையும் பாடிக் காட்டிடுங்க” என்று அந்தத் தொகுப்பாளினி கூற.
“எங்களோட காதல் அப்படின்னு சொல்றதை விட, என்னோட காதல் அஞ்சு வருஷத்துக்கு முந்தையது. அதைச் சொன்னா ப்ரோக்ராம் நடத்த முடியாது. அதனால பாட்டை மட்டும் பாடிட்டு நாங்க கிளம்புறோம்” என்று கூறியவன், மைக்கை அவளிடம் திணிக்க, அவள் இன்னும் அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.
அவன் பொய் சொல்பவன் அல்ல; ஆனால் இப்போது என்ன சொல்லிக் கொண்டிருக்கிறான்? ஐந்து வருட காதலா? அவனைப் பார்த்து மூன்றரை வருடங்கள் தானே ஆகிறது’? என அவள் சிந்தித்துக் கொண்டிருக்க, அவன் பார்வையால் மைக்கைக் காட்டினான்.
சுற்றியிருக்கும் அத்தனை கூட்டமும் தங்களைப் பார்ப்பதை உணர்ந்து மைக்கை வாங்கியவள், அவன் பாட ஆரம்பித்ததும் இணைந்து பாட ஆரம்பித்தாள். பாடல் என்று வந்துவிட்டால் அவர்கள் குரலில் எந்தத் தொய்வுமிருக்காது; அவள் குரலிலும் அது இருந்திருக்கவில்லை.
error: Content is protected !!