Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

49. பிரியா முரளி - கண்ணாமூச்சி ஏனடா

கண்ணாமூச்சி ஏனடா… – 31

கண்ணாமூச்சி 31

கன்னத்தில் விழுந்த அறையின் வேகம், நிலாவின் உடலை மட்டுமன்றி அவளது ஆன்மாவையும் உலுக்கி எடுத்திருந்தது. சுவற்றில் மோதி அவள் தரையில் சரிந்தபோது, அவளது நெற்றியில் பட்ட காயத்தின் வலியை விட, நெஞ்சுக்குள் சுழன்றடித்த அவமானம் அவளது மூச்சை அடைத்தது.
“என்னங்க! என்ன காரியம் பண்றீங்க? பெத்த பொண்ணுன்னு கூடப் பார்க்காம இப்படியா கை நீட்டுவீங்க?” என்று தங்கம் கதறியபடி ஓடிவந்து, தரையில் விழுந்து கிடந்த நிலாவைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டார். அவளது வெளிறிய கன்னத்தில் ரங்கநாதனின் விரல் தடங்கள் சிவந்து தடித்திருந்தன.
ஆனால், ரங்கநாதனின் கண்கள் அக்னிப் பிழம்பாய் எரிந்து கொண்டிருந்தன. டிவியில் ஓடிக்கொண்டிருந்த அந்தச் செய்தியையும், அதில் விஷ்வாவும் நிலாவும் பால்கனியில் நின்றிருந்த புகைப்படத்தையும் சுட்டிக்காட்டி கர்ஜித்தார்.


Advertisement

“பொண்ணாடி இவ? நம்ம குடும்பத்தோட மானத்தை, மரியாதையை தெருவுல கொண்டு வந்து நிறுத்தியிருக்காளே, இவளையெல்லாம் அடிக்காம கொஞ்சவா முடியும்? ஊரே கூடி வேடிக்கை பார்க்குது தங்கம்! தலைநிமிர்ந்து கௌரவமா வாழ்ந்த குடும்பம்டி நம்மது. இன்னைக்கு டிவியைத் திறந்தா என் பொண்ணோட போட்டோவை வச்சு ஏதேதோ தப்புத் தப்பா பேசுறானுங்க! வாசல்ல மீடியாக்காரன் கேமராவும் கையுமா வந்து நிக்கிறான். அக்கம் பக்கத்துல இருக்கிறவன்லாம் என்னென்னவோ கேக்குறான். இதைப் பார்க்கவா நான் இவளை இவ்வளவு உசிரா வளர்த்தேன்?” என்று நெஞ்சில் அடித்துக் கொண்டார்.
நிலா அழுகையை அடக்க முயன்று, தொண்டை அடைக்க, “அப்பா… ப்ளீஸ் நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்கப்பா. அது… அது வந்து…” என்று வார்த்தைகளைத் தேடினாள்.
“இனிமே உன்கிட்ட கேக்குறதுக்கு ஒன்னும் இல்லை நிலா! நீ வளர்த்த லட்சணம் இதுதானா தங்கம்? ஆபீஸ்க்குப் போறேன்னு சொல்லிட்டு, அந்த சினிமாக்காரன் கூட சுத்திட்டு இருந்திருக்கா? பணமும் புகழும் இருந்தா என்ன வேணாலும் பண்ணலாமா? அப்பா அம்மாகிட்ட பொய் சொல்லிட்டு அவன் பின்னாடி போறதுக்கு உனக்கு வெக்கமா இல்லை?” என்று அவர் குரல் ஏமாற்றத்தாலும் வலியாலும் உடைந்தது.

Advertisement

இதே நேரத்தில், விஷ்வாவின் நிலைமை இன்னும் மோசமாகிக் கொண்டிருந்தது. பால்கனியில் நின்றபடி, தன் மொபைலை எடுத்து நிலாவுக்குத் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தான் விஷ்வா. ஆனால், நிலாவின் போன் ‘சுவிட்ச் ஆஃப்’ என்று வந்தது. அவனது நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது.

Advertisement

“அரவிந்த்! நிலாவுக்கு போன் கனெக்ட் ஆகல. அவங்க அப்பா எப்படி ரியாக்ட் பண்ணுவாருன்னு எனக்கு நல்லா தெரியும். மீடியா அவங்க வீட்டு வரைக்கும் போயிருக்குன்னா, நிலைமை ரொம்ப மோசமா இருக்கும். என்னால இங்க சும்மா உட்கார்ந்திருக்க முடியாது, நான் இப்போவே அவ வீட்டுக்குக் கிளம்புறேன்,” என்று விஷ்வா ஆவேசமாகக் கிளம்பினான்.
அரவிந்த் குறுக்கே வந்து அவனது தோள்களைப் பிடித்துத் தடுத்தான். “விஷ்வா! கொஞ்சம் புத்திசாலித்தனமா யோசிங்க. நீங்க இப்போ அங்கே போனா, உங்களைத் தொரத்திக்கிட்டு இந்த ஒட்டுமொத்த பிரஸ்ஸும் அங்கே போகும். ஏற்கனவே அவங்க குடும்பம் பதட்டத்துல இருக்கும். நீங்களும் அங்கே போனா, எரியுற நெருப்புல எண்ணெய ஊத்துற மாதிரி ஆயிடும். நயனிகா எதிர்பார்த்ததும் இதைத்தான். உங்களோட கரியரையும் பர்சனல் லைஃபையும் ஒரே நேரத்துல காலி பண்ணணும்னுதான் அவ இந்தச் சதியை பண்ணியிருக்கா. இப்போதைக்கு நீஞா அமைதியா இருக்கிறது மட்டும்தான் நிலாவுக்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது,” என்று எச்சரித்தான்.
விஷ்வா தன் தலையைக் கைகளில் தாங்கியபடி சோபாவில் அமர்ந்தான். அவனது முகம் கோபத்திலும் தவிப்பிலும் சிவந்திருந்தது. “நயனிகா… நீ பண்ணின இந்த வேலைக்கு உன்னை சும்மா விடமாட்டேன்,” என்று பற்களைக் கடித்தவன், நிலாவின் தற்போதைய நிலையை நினைத்து வேதனையில் துடித்தான். அவளைத் தனியே அந்தப் புயலில் சிக்க வைத்த குற்ற உணர்ச்சி அவனை வாட்டியது.

Advertisement

நிலாவின் வீட்டில், ரங்கநாதன் தன் இறுதி முடிவை அறிவிப்பது போல நிலாவைப் பார்த்துச் சொன்னார், “இனிமே நீ அந்த ஆபீஸ்க்குப் போக வேண்டாம். இந்த நிமிஷத்துல இருந்து உனக்கு வெளியில போறதுக்கு அனுமதியும் இல்லை. தங்கம்! இவளோட போனை வாங்கி என்கிட்ட குடு. இனிமே இவ யார்கூடவும் பேசக் கூடாது! பொழுது சாஞ்சதும் நாம ஊருக்குக் கிளம்புறோம், எல்லாம் எடுத்து வைச்சு தயாராகு” என்று உத்தரவிட்டார்.
நிலா தன் தாயின் மார்பில் முகம் புதைத்து விம்மி விம்மி அழுதாள். அவளது காதலும், அவளது விஷ்வாவும் நிஜம் என்று அவளுக்குத் தெரியும். ஆனால், அவளது குடும்பத்தின் மானமும், தந்தையின் நம்பிக்கையும் சிதைந்து போய்க் கிடக்கும் இந்தச் சூழலில், தன் காதலை எப்படி நிரூபிப்பது என்று தெரியாமல் அவள் தவித்துப் போனாள்.
வாங்கிய போனைத் தன் வேட்டியின் மடிக்குள் திணித்துக் கொண்ட ரங்கநாதன், தன் அறைக்குள் சென்று கதவை டொம்மென்று சாத்திக் கொண்டார். ஹாலில் எஞ்சியிருந்தது டிவியின் சத்தமும், தங்கத்தின் தேம்பலும், நிலாவின் உடைந்த இதயமும் மட்டும்தான்.
தரையை வெறித்தபடி அப்படியே முடங்கிக் கிடந்த நிலாவை மெதுவாகத் தூக்கி சோபாவில் அமர வைத்தார் தங்கம். அவளது சிவந்த கன்னத்தை வருடி, முந்தானையால் அவளது கண்ணீரைத் துடைத்தவர், “நிலா… அம்மா கண்ணைப் பாருடி. நிஜமாவே அந்தத் தம்பிக்கும் உனக்கும்…?” என்று கேட்கும்போதே தங்கத்தின் குரல் நடுங்கியது.
நிலா தன் தாயின் கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள். “அம்மா… மீடியால சொல்ற மாதிரில்லாம் எதுவும் இல்லைம்மா. நாங்க ஒருத்தரையொருவர் உண்மையா நேசிக்கிறோம். அவர் ரொம்ப நல்லவர்மா. இன்னைக்குக் கூட உங்க ரெண்டு பேர்கிட்டயும் நேர்ல வந்து ஆசீர்வாதம் வாங்கணும்னுதான் கிளம்பினோம். அதுக்குள்ள…” என்று சொல்லும்போதே அவளது அழுகை நெஞ்சை அடைத்தது.
“சரி நிலாம்மா, அழாத… அப்பா இப்போ இருக்குற கோபத்துக்கு நீ எதைச் சொன்னாலும் கேக்குற நிலைமையில இல்லை. கொஞ்சம் போகட்டும்,” என்று தங்கம் அவளைத் தேற்ற முயன்றாலும், வெளியே சலசலக்கும் மீடியாக்காரர்களின் சத்தமும், தெருவில் கூடி நிற்கும் கூட்டத்தின் சலசலப்பும் அந்த வீட்டின் நிம்மதியை மொத்தமாக உறிஞ்சிவிட்டன.
மறுபுறம், விஷ்வாவின் அபார்ட்மெண்டில் ஒரு போர்க்களமே நடந்து கொண்டிருந்தது.
அரவிந்த் சோபாவில் அமர்ந்து தொடர்ந்து போனில் யாருக்கோ கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தான். “நம்ம பி.ஆர்.ஓ டீமை இப்போவே ஆக்டிவேட் பண்ணுங்க. சோசியல் மீடியால வர்ற அந்த போட்டோஸை முடிஞ்ச வரைக்கும் லீகல் நோட்டீஸ் அனுப்பி டெலிட் பண்ண வைங்க. இது முழுக்க முழுக்க பிரைவசி மீறல்!” என்று கத்தினான்.
போனை வைத்த அரவிந்த், விஷ்வாவின் அருகில் வந்து, “விஷ்வா, நயனிகாவோட இந்த மூவ் ரொம்ப சீப்பானது. ஆனா, அவ இதை ரொம்ப பக்காவா பிளான் பண்ணி செஞ்சிருக்கா. இப்போதைக்கு நீங்க மீடியா முன்னாடி போய் எந்த விளக்கமும் கொடுக்காம இருக்குறது நல்லது. ஏன்னா இப்போ நீங்க எதைச் சொன்னாலும் அதை அவங்களுக்கு சாதகமா திருப்பிடுவாங்க,” என்றான்.
விஷ்வா எதையும் கேட்கும் நிலையில் இல்லை. அவனது கைகள் போனைத் தேடின. “அரவிந்த், எனக்கு நயனிகா முக்கியம் இல்லை, என்னோட கரியர் முக்கியம் இல்லை. நிலா… அவ அங்கே என்ன பாடுபடுறாளோ? அவங்க அப்பா ரொம்ப கண்டிப்பானவர்னு சொன்னா. நான் அவளை இந்த நிலைமையில தனியா விட்டிருக்கக் கூடாது,” என்று சுவற்றில் குத்தினான்.
“விஷ்வா, ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர்செல்ஃப். நிலாவோட பாதுகாப்புக்காகத்தான் நாம அவளைத் தனியா அனுப்பினோம். நீங்க இப்போ அங்க போனா, அவங்க அப்பாவால ஒட்டுமொத்த மீடியா முன்னாடியும் தலைநிமிர்ந்து நிக்க முடியாது. கொஞ்சம் பொறுமையா இருங்க,” என்று அரவிந்த் அவனைச் சமாதானப்படுத்த முயன்றான்.
ஆனால், விஷ்வாவின் மனதில் கோபத்தின் அலைகள் சுழன்றடித்தன. நயனிகாவின் முகமும், அவளது மேனேஜரின் முகமும் அவனது நினைவுக்கு வந்து போயின. தன் காதலை அசிங்கப்படுத்திய அவளை சும்மா விடுவதாய் இல்லை அவன்.
அன்றைய இரவு அந்த இரண்டு வீடுகளுக்கும் நரகமாகவே இருந்தது. நிலா தன் பெற்றோருடன் கிராமத்திற்குக் கிளம்பிவிட்டாள். அனன்யா அவளுக்குப் பலமுறை அழைத்தும், நிலாவிடம் அவளால் பேசவே முடியவில்லை. 
நிலாவின் வீட்டு வாசலில் மீடியாகாரர்கள் முகாமிட்டிருந்ததால் அவளை அங்கு செல்ல வேண்டாமென அரவிந்த் எச்சரித்திருந்தான். விஷ்வாவின் நினைவுகளோடும் தந்தை எதுவுமே கேட்காமல் தன்னைக் குற்றம் சாத்திவிட்டார் என்ற மன வருத்ததோடும், என்ன செய்வதென்று தெரியாமல், தாயின் மொபைலில் இருந்து அனன்யாவிற்கு கிராமத்திற்குச் செல்லப்போகும் விவரத்தை மெசேஜ் அனுப்பினாள். அவளது இதழ்களில் இன்னும் விஷ்வாவின் முத்தத்தின் வெதுவெதுப்பு எஞ்சியிருக்க நெஞ்சில் நிறைந்த அவனது நினைவுகளுடன் நள்ளிரவில் பாட்டி வீட்டிற்குச் சென்று இறங்கினாள் நிலா.
பாட்டி வாசலிலேயே காத்திருந்தார், நிலாவைப் பார்த்ததும் விரைந்து வந்து அவளைக் கட்டிக் கொண்டார். ரங்கநாதன் அறைந்ததால் கன்றிப்  போயிருந்த பேத்தியின் கன்னம் பார்த்து, அவருக்குள் கோபம் வெகுண்டு எழுந்தது.
வீட்டிற்குள் அவர்கள் வந்ததும் வராததுமாக, “ஏண்டா ரங்கா, புத்தியே இல்லையா உனக்கு, பூப்போல வெச்சுக்க வேண்டிய குழந்தைய இப்புடி அடிச்சிருக்க?” என்று அவர் வைய, “இவ செஞ்சுட்டு வந்திருக்குற காரியத்துக்கு கொன்னு புதைக்காம அடிச்சதோட விட்டேனேன்னு சந்தோஷப்படுங்கம்மா, என்றார் இன்னும் கோபம் குறையாதவராக.
“ஆமா, என்னவோ எனக்குதான் தேவதையே புள்ளைய வந்து பொறந்துருக்கா… இளவரசி… ராஜகுமாரி… அப்படி இப்படின்னு பெருமை பேசுனீங்க… இப்போ அந்த தேவதைதான் சினிமா சோக்குல விழுந்து, சினிமாக்காரன் பின்னாடி போயி சீரழிஞ்சு வந்து நிக்குறா…” என்று இடிசொல் பேசினாள் நிலாவின் அத்தை, ரங்கநாதனின் தங்கை. அவளுடைய மகனுக்கு நிலாவைத் திருமணம் முடித்துக் கொடுக்க ரங்கநாதன் மறுத்ததில் இருந்து அவளுக்குள் கனன்று கொண்டிருந்த கோபம் இன்று சமயம் பார்த்து குத்தும் வார்த்தைகளாக வெளிப்பட்டது.
“இன்னொரு வார்த்தை பேசுன, மகள்னு கூட பார்க்க மாட்டேன், அடிச்சு வாயெல்லாம் உடைச்சிடுவேன் பார்த்துக்க… என்னோட நிலாவைப் பத்தி யாருக்கும் எதுவும் பேசத் தகுதியே இல்லை… இதுக்கு மேல அவளோட மனசை யாராவது கஷ்டப் படுத்த நினைச்சா… அவங்களுக்கும் எனக்கும் இனி எந்த ஓட்டும் உறவும் கிடையாது… நாளைக்கு அம்மான்னு கூப்பிட்டுக்கிட்டு உறவு கொண்டாடிக்கிட்டு யாராவது வந்தீங்கன்னா விளக்குமாத்துக் கட்டை பிஞ்சிடும்… இது உனக்கும் சேர்த்துதான் சொல்றேன் ரங்கா…” என்று அனைவரையும் எச்சரித்தவர், 
“இந்தா தங்கம்… பாப்பாவை ரூமுக்குக் கூட்டிட்டு போ… ஏய் அம்சா, பாப்பாவுக்கு பால் சூடு பண்ணி கொண்டு வா… அப்படியே ஃபிரிட்ஜ்ல இருந்து ஐஸ்கட்டி கொண்டு வா..” என்று கட்டளையிட்டுவிட்டு தனது கண்டாங்கியின் முந்தானையை உதறி இடுப்பில் சொருகிக் கொண்டு, அனைவரையும் முறைத்தபடியே உள்ளே சென்றுவிட்டார்.
அதற்குப் பின் ஒரு வார்த்தைகூடப் பேச ஒருவருக்கும் தைரியம் இருக்கவில்லை. அதனால் இரவு அமைதியாகவே கழிந்தது.
மறுநாள் காலை, விஷ்வாவின் வீட்டு வாசலில் நின்றிருந்த மீடியா கூட்டம் இன்னும் குறையவில்லை. விஷயத்தைக் கட்டுக்குள் கொண்டுவர, விஷ்வாவும் அவனும் இரவு முழுவதும் உறங்காமல், பல வேலைகளைச் செய்திருந்தனர்.   எதுவும் சாப்பிடாமல், சோகமாய் அமர்ந்திருந்த விஷ்வாவுக்கு காபி போடா எழுந்த அரவிந்திற்கு ஒரு ரகசிய மெசேஜ் வந்தது. அதைத் திறந்து பார்த்த அரவிந்தின் முகம் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனது.
“விஷ்வா… அடுத்த ஆபத்து வந்துடுச்சு,” என்றான் அரவிந்த் நடுங்கும் குரலில்.
“இனிமே என்ன அரவிந்த் வரப்போகுது?” என்று சலிப்புடன் கேட்டான் விஷ்வா.
“நயனிகா இன்னைக்கு மதியம் ஒரு பிரஸ் மீட் அரேஞ்ச் பண்ணியிருக்கா. அதுல உன்னைப் பத்தியும், நிலாவைப் பத்தியும் இன்னும் ஏதேதோ உண்மைகளைப் பேசப் போறாளாம். அதுமட்டும் இல்லாம, உன்னோட அடுத்த படத்தோட புரொடியூசர்ஸ் இப்போ இந்த விவகாரத்தால உன்னை படத்துல இருந்து தூக்கலாமான்னு யோசிச்சிட்டு இருக்காங்களாம்…”
விஷ்வா சோபாவிலிருந்து சட்டென்று எழுந்தான். அவனது கண்கள் சிவந்து, தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்திருந்தன. “அவ பிரஸ் மீட் வைக்கட்டும் அரவிந்த். ஆனா, அதுக்கு முன்னாடி நான் என்ன பண்ணப்போறேன்னு அவ பார்க்கணும். கார் சாவியை எடு!” என்றான் விஷ்வா, அத்தனை அதிகாரத்தோடு.
“விஷ்வா, வேண்டாம்! இப்போ வெளிய போறது தற்கொலைக்குச் சமம். கேட்ல இருக்குற பிரஸ்ஸை மீறி உங்களால காரை நகர்த்தக்கூட முடியாது,” என்று அரவிந்த் பதறினான்.
விஷ்வா அவனது எச்சரிக்கையைக் காதிலேயே வாங்கவில்லை. அவனது மனக்கண்ணில், நிலாவின் பயந்த முகமும் அவளது தவிப்பும் மட்டுமே வந்து போயின. வீட்டிற்குச் சென்ற நிலா என்ன ஆனாள் என்று இதுவரை அவனுக்குத் தெரியவில்லை. அனன்யாவாலும் அவளைத் தொடர்புகொள்ள முடியவில்லை. 
“அரவிந்த், நயனிகா என்னோட கரியரை அழிக்கணும்னு நினைக்கிறா… அதை எப்படி சமாளிக்கணும்னு எனக்குத் தெரியும். ஆனா, அவளோட இந்த அசிங்கமான பழிவாங்கலுக்கு நடுவுல நிலாவோட வாழ்க்கையும், அவளோட குடும்பத்தோட நிம்மதியும் சிதையுறதை என்னால பார்த்துட்டு இருக்க முடியாது. காரோட சாவியை நீ குடுக்கலைன்னா, நான் நேரா வாசல்ல நிக்கிற மீடியா முன்னாடியே போய் நின்னு உண்மையை உடைப்பேன். அப்போ நிலைமை இன்னும் மோசமாகும். சாய்ஸ் உன்னோடது,” என்றான் விஷ்வா, சற்றும் தளராத குரலில்.
அரவிந்த் பெருமூச்சு விட்டான். விஷ்வாவின் பிடிவாதம் அவனுக்குத் தெரியும். “சரி, போகலாம். ஆனா மெயின் கேட் வழியா இல்லை. நேத்து நிலாவை அனுப்பின அதே சர்வீஸ் என்ட்ரன்ஸ் வழியா, என்னோட இன்னொரு சாதாரண கார்ல கிளம்பலாம்.” என்றவன், “ஆனா, நாம இப்போ எங்க போறோம்?” என்று கேட்டான்.
“நேரா நயனிகா இருக்கிற இடத்துக்கு!” என்று விஷ்வா சொன்னபோது அவனது குரலில் இருந்த தீவிரம் அரவிந்திற்கு நடுக்கத்தைத் தந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!