Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

49. பிரியா முரளி - கண்ணாமூச்சி ஏனடா

கண்ணாமூச்சி ஏனடா… – 32

கண்ணாமூச்சி 32

அடுத்த அரை மணி நேரத்தில், மீடியாவின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, அரவிந்தின் சாதாரண செடான் காரில் விஷ்வா நயனிகாவின் சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பைச் சென்றடைந்தான். மதியம் நடக்கவிருக்கும் பிரஸ் மீட்டுக்காகத் தன் மேனேஜருடன் சேர்ந்து வஞ்சகமான புன்னகையோடு தயாராகிக் கொண்டிருந்த நயனிகாவின் வரவேற்பறைக்குள், விஷ்வா புயலென நுழைந்தான்.
அவனை அங்கே சற்றும் எதிர்பார்க்காத நயனிகா, அதிர்ச்சியில் கையில் இருந்த காபி கப்பைத் தவறவிட்டாள். அது தரையில் விழுந்து சிதறியது. “விஷ்வா… நீ… நீங்க எப்படி இங்க?” என்று தடுமாறினாள்.
அவளது மேனேஜர் உடனே குறுக்கே வந்து, “ஹலோ விஷ்வா, இது பிரைவேட் பிராபர்ட்டி. நீங்க எப்படி பர்மிஷன் இல்லாம உள்ள வரலாம்? அத்துமீறி நுழைஞ்சீங்கன்னு நான் லீகல் ஆக்ஷன் எடுப்பேன்” என்று அதட்டினான்.


Advertisement

விஷ்வா அந்த மேனேஜரின் சட்டைக் காலரை ஒரே கையில் பற்றி, சுவற்றோடு சேர்த்து அழுத்தினான். அவனது கண்களில் இருந்த வீரியத்தைக் கண்டு அந்த மேனேஜர் பயந்து நடுங்கினான். “உன் லீகல் நோட்டீஸையும், பிரைவேட் பிராபர்ட்டியையும் தூக்கி குப்பையில போடு! நேத்து என் பால்கனியை போட்டோ எடுத்தப்போ உனக்கு இந்த பிரைவசி ஞாபகம் வரலையா?” என்று கர்ஜித்துவிட்டு, அவனை ஒரே தள்ளாக சோபாவில் தள்ளினான்.
பின்னர் நயனிகாவை நோக்கித் திரும்பினான். அவளது கண்களுக்கு நேரே தன் விரலை நீட்டி, அத்தனை ஆத்திரத்தையும் அடக்கிக் கொண்டு பேசினான். “நயனிகா… உன்னோட வஞ்சம், கோபம் எல்லாம் என்மேல மட்டும்தான் இருக்கணும். ஏன்னா, உன்னோட காதலை நிராகரிச்சது நான். ஆனா, அதுக்காக எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு சாதாரணப் பெண்ணோட வாழ்க்கையையும், அவளோட குடும்பத்தோட மானத்தையும் தெருவுக்கு இழுக்க உனக்கு எவ்வளவு தைரியம்?”
நயனிகா சட்டென்று தன் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, முகத்தில் ஒரு போலி நையாண்டியை வரவழைத்துக் கொண்டாள். “ஓ… அந்தப் பொண்ணுக்காக சூப்பர் ஸ்டார் ரொம்பத்தான் துடிக்கிறாரே… அவளைப் பேசினா உனக்கு இவ்வளவு கோபம் வருதா? விஷ்வா, நீ என்னை அன்னைக்கு அந்த பிரஸ்மீட்ல எல்லாரும் முன்னாடியும் அசிங்கப்படுத்தினப்போ என் மனசு எவ்வளவு புண்பட்டிருக்கும்? இப்போ பாரு, ஒட்டுமொத்த மீடியாவும் உன்னோட கரியரையும், உன்னோட அந்தத் தங்கமான காதலியையும் வச்சு எப்படி விளையாடுறாங்கன்னு! இன்னைக்கு மதியம் நான் வைக்கப்போற பிரஸ் மீட்ல இன்னும் பல உண்மைகளை உடைக்கப் போறேன். உன்னோட அடுத்த படத்தோட புரொடியூசர்ஸ் இப்போவே பயந்துட்டாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல நீ ரோட்டுக்கு வரப்போற விஷ்வா!” என்று விஷமத்தனமாகச் சிரித்தாள்.

Advertisement

விஷ்வா அவளது பேச்சைக் கேட்டு ஆத்திரப்படாமல், லேசாகப் புன்னகைத்தான். அந்தப் புன்னகை நயனிகாவிற்குள் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியது.

Advertisement

தன் பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்து நயனிகாவின் முகத்திற்கு நேரே காட்டினான் விஷ்வா. அதில் ஒரு ஆடியோ ஃபைல் ஓடிக்கொண்டிருந்தது.
அதில், நயனிகாவின் மேனேஜர் சோசியல் மீடியா அட்மின்களிடமும், சில யூடியூப் சேனல்களிடமும், “விஸ்வநாத்தோட பால்கனி போட்டோஸை இப்போவே ரிலீஸ் பண்ணுங்க. நயனிகா மேடமோட ஆர்டர் இது. அந்தப் பொண்ணோட பேக்ட்ரவுண்ட் டீடைல்ஸையும் சேர்த்துப் போடுங்க. அப்போதான் விஸ்வநாத்தோட இமேஜ் மொத்தமா டேமேஜ் ஆகும். உங்களுக்குப் பேசின பணம் அக்கவுன்ட்ல கிரெடிட் ஆயிடும்,” என்று பேசி முடித்த அத்தனை உரையாடல்களும் மிகத் தெளிவாகப் பதிவாகியிருந்தன.
நயனிகாவின் முகம் அடுத்த நொடியே வெளுத்துப் போனது. அவளது மேனேஜர் வாயடைத்துப் போய் நின்றான்.

Advertisement

“என்ன நயனிகா, ஷாக் ஆயிட்டியா? நீ மட்டும் தான் பிளான் பண்ணுவியா? நேத்து சோசியல் மீடியாவுல போட்டோ லீக் ஆன அடுத்த பத்தாவது நிமிஷம், என் டீம் சைபர் க்ரைம் மூலமா இந்த போட்டோஸ் எந்த ஐபியில இருந்து, யார் மூலமா பரப்பப்பட்டுச்சுன்னு எல்லா ஆதாரத்தையும் திரட்டிட்டாங்க. இந்த ஆடியோவும், நீ உன் மேனேஜர் அக்கவுண்ட்ல இருந்து அந்த மீடியா ஆட்களுக்குப் பணம் அனுப்பின பேங்க் ஸ்டேட்மென்ட்டும் இப்போ என் கையில இருக்கு,” என்றான் விஷ்வா தீர்க்கமாக.
அவளருகே நெருங்கி, குரலைத் தாழ்த்தி எச்சரித்தான், “இன்னைக்கு மதியம் நீ பிரஸ் மீட் வைப்பியோ, லைவ்ஸ்ட்ரீமிங் பண்ணுவியோ, எனக்குக் கவலை இல்லை. ஆனா, அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ள… நீயும் உன் மேனேஜரும் சேர்ந்து, இது விஷ்வாவோட இமேஜைக் கெடுக்க நீங்க பண்ணின சதிதான்கிற உண்மையை ஒத்துக்கிட்டு, சோசியல் மீடியாவுல ஒரு அதிகாரப்பூர்வமான மன்னிப்புக் கடிதத்தையும், வீடியோவையும் வெளியிடணும். அப்படி மட்டும் நீ பண்ணலைன்னா… இந்த ஆடியோவும், ஆதாரங்களும் நேரா போலீஸ் கமிஷனர் ஆபீஸ்க்கும், மீடியாவுக்கும் போகும். சட்டவிரோதமா ஒருத்தரோட பிரைவசியை படம் பிடிச்சதுக்கும், என்னோட தனிப்பட்ட விஷயத்தை என்னோட அனுமதி இல்லாம ரிலீஸ் பண்ணுனதுக்கும் நீயும் உன் மேனேஜரும் ஜெயிலுக்குப் போறதை யாராலயும் தடுக்க முடியாது. உன்னோட சினிமா கரியர் இதோட மொத்தமா முடிஞ்சுடும்!”
விஷ்வாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சம்மட்டி அடியாக நயனிகாவின் தலையில் விழுந்தன. பழிவாங்க நினைத்தவள், இப்போது தன் சொந்த வினையாலேயே கூண்டில் மாட்டிக்கொண்டதை உணர்ந்து, செய்வதறியாது தன் மேனேஜரைப் பார்த்தாள். அவனோ பயத்தில் தலையைக் குனிந்து கொண்டிருந்தான்.
“டைம் ஸ்டார்ட்ஸ் நவ், நயனிகா!” என்று கூறிவிட்டு விஷ்வா அங்கிருந்து கம்பீரமாக வெளியேறினான்.
நயனிகாவின் வீட்டை விட்டு வெளியேறிய விஷ்வாவிற்குள் தகித்துக் கொண்டிருந்த ஆத்திரம் இன்னும் அடங்கவில்லை. நேராக அரவிந்தின் காரில் ஏறியவன், “அரவிந்த், இப்போவே பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு பண்ணு. மீடியா கிளப்ல இன்னும் அரை மணி நேரத்துல எல்லாரும் இருக்கணும்,” என்று உத்தரவிட்டான்.
அரவிந்த் பதறிப்போய், “விஷ்வா, இப்போதான் நயனிகாகிட்ட பேசிட்டு வரோம், அதுக்குள்ள பிரஸ் மீட்டா? இன்னும் அவ வீடியோவே ரிலீஸ் பண்ணலையே,” என்றான்.
“அவ வீடியோ ரிலீஸ் பண்றதும் பண்ணாததும் அவளோட விருப்பம். ஆனா, என் பர்சனல் லைஃபை வச்சு இத்தனை மணி நேரமா, கூத்தடிச்சு வேடிக்கை பார்த்த மீடியாவுக்கு நான் இன்னைக்கு ஒரு பாடம் கத்துக் குடுக்கணும். நான் பேசறதெல்லாம் லைவ் டெலிகாஸ்ட் ஆகணும். ஏற்பாடு பண்ணு, இப்போ வண்டியை எடு!” என்றான் விஷ்வா ஆவேசமாக.
அடுத்த முப்பது நிமிடங்களில் மீடியா கிளப் அரங்கம் செய்தி நிறுவனங்களின் கேமராக்களாலும் மைக்ரோஃபோன்களாலும் நிரம்பி வழிந்தது. விஷ்வா மேடைக்கு வந்ததும், அங்கிருந்த செய்தியாளர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை அவசர அவசரமாகக் கேட்கத் தொடங்கினர். 
“சைலன்ஸ்” என்று முழங்கிய விஷ்வாவின் குரலும், அவனது கண்களில் இருந்த உக்கிரமும் அங்கிருந்த ஒட்டுமொத்தக் கூட்டத்தையும் மௌனமாக்கியது.
“நான் இங்க உங்க கேள்விகளுக்குப் பதில் சொல்ல வரல. எனக்குன்னு சில கருத்துக்கள் இருக்கு, அதை உங்ககிட்ட தெளிவா சொல்லிட்டுப் போகத்தான் வந்திருக்கேன்,” என்று கறாரான குரலில் பேசத் தொடங்கினான் விஷ்வா.
அப்போது ஒரு நிருபர் குறுக்கிட்டு, “சார், அந்த பால்கனி போட்டோஸ் பத்தி…” என்று கேட்க முயன்றார்.
விஷ்வா அந்த நிருபரைத் தன் கூர்மையான பார்வையால் அடக்கினான். “உங்களுக்கு அசிங்கமா இல்லை? என் வீட்டு பால்கனில என்ன நடக்குதுன்னு நீங்கல்லாம் ஏன் தெரிஞ்சுக்கணும்? ஒருத்தரோட தனிப்பட்ட வாழ்க்கையில எட்டிப் பார்த்து அதை நியூசாக்கி வேடிக்கைப் பாக்க உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்லை? அந்த ஃபோட்டோவை ரிலீஸ் பண்றதுக்கு முன்னாடி அதை வெளியிடலாமான்னு என்கிட்ட கேக்கணுங்குற ஒரு சின்ன நாகரிகம் கூட உங்களுக்கு இல்லையா? அந்தப் போட்டோவுல இருக்குற பொண்ணு யாருன்னு தெரிஞ்சுக்காம, உங்கள் இஷ்டத்துக்குப் பேசி, அவளோட இமேஜை டேமேஜ் பண்றதுக்கு முன்னாடி, என்கிட்ட நேரடியா வந்து கேக்கணுங்குற பேசிக் டீசன்சி கூட உங்க யாருக்கும் இல்லையா? சினிமாவுக்கும் மீடியாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாத ஒரு சாதாரணப் பெண்ணை, இத்தனை மணி நேரமா அசிங்கப்படுத்தியிருக்கீங்களே, இதுக்கு உங்களுக்கு யாரு ரைட்ஸ் குடுத்தது?” என்று விஷ்வா கர்ஜித்தான்.
அங்கிருந்த செய்தியாளர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு வாயடைத்து நின்றனர்.
விஷ்வா விடவில்லை, அவனது குரல் இன்னும் உச்சத்திற்குச் சென்றது. “இன்னைக்கு என்னைக் கேள்வி கேட்க நீங்க எல்லாரும் மைக் பிடிச்சிட்டு நிக்கிறீங்க. ஆனா, என்கிட்ட கேள்வி கேட்க உங்க யாருக்கும் எந்தத் தகுதியும் இல்லை, இனிமேலும் இருக்காது.. நான் உங்ககிட்ட கேக்குறேன்… உங்க வீட்டுப் பொண்ணுங்களோட, உங்க மகள்களோட, அக்கா தங்கச்சிகளோட தனிப்பட்ட வாழ்க்கையில இப்படித்தான் நீங்க தலையிடுவீங்களா? அவங்க கணவர்களோட இருக்குற பர்சனல் தருணங்களை இப்படித்தான் ஃபோட்டோ பிடிச்சு சோசியல் மீடியாவுல ரிலீஸ் பண்ணி விவாதம் நடத்துவீங்களா? உங்க வீட்டுப் பெண்களுக்கு ஒரு நியாயம், என் வீட்டுப் பெண்ணுக்கு ஒரு நியாயமா?” என்று கேட்கும்போது விஷ்வாவின் நரம்புகள் புடைத்தன.
அரங்கமே மயான அமைதியில் மூழ்கியிருந்தது.
“நான் இப்போ இங்க வந்ததே ஒரு முக்கியமான விஷயத்தை முறைப்படி அறிவிக்கத்தான்,” என்று தன் கையில் இருந்த காகிதங்களைக் காட்டினான். நிமிர்த்தினான். “நேத்துல இருந்து சில டிவி சேனல்கள்ல ‘இது காதலா, களியாட்டமா… சூப்பர் ஸ்டார் விஸ்வநாத்தின் ரகசிய உறவு… உண்மை என்ன?’ அப்படின்னு ரொம்ப கேவலமான தலைப்புகள்ல விவாதங்கள் நடத்தியிருக்கீங்க. இதை பிரேக்கிங் நியூஸா போட்டு டிஆர்பி ஏத்தியிருக்கீங்க? என் பெர்மிஷன் இல்லாம இந்த போட்டோஸை சோசியல் மீடியாவுல போஸ்ட் பண்ணின அத்தனை சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்ஸ், அதுக்குக் கீழே தப்புத் தப்பா கமெண்ட் பண்ணினவங்க… இந்த டிபேட் நடத்தின டிவி செபல், அந்த டிபேட் நடத்துன லேடி, அவங்க கூட உக்காந்து அதுல கலந்துகிட்ட அந்த ஆறு சமூக ஆர்வலர்கள், இவங்க எல்லார் மேலயும் சைபர் க்ரைம், பிரைவசி மீறல், அப்பறம் அவதூறு வழக்குகள் போட்டு, பல கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு இப்போவே லீகல் ஆக்ஷன் ஸ்டார்ட் பண்ணியாச்சு!” என்று அதிரடியாக அறிவித்தான்.
செய்தியாளர்கள் மத்தியில் ஒரு பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கேமராக்கள் விஷ்வாவின் முகத்தை இன்னும் உன்னிப்பாகப் பதிவு செய்தன.
“உங்க எல்லாருக்கும் நான் இப்போ கரெக்டா ஒரு மணி நேரம் டைம் தர்றேன். இதுவரைக்கும் நிலாவைப் பத்தியும், எங்களோட ரிலேஷன்ஷிப் பத்தியும் சோசியல் மீடியாவுல நீங்க போஸ்ட் பண்ணின அத்தனை பதிவுகளையும், போட்ட கமெண்ட்களையும் உடனடியாக டெலிட் பண்ணி, அதைத் திரும்பப் பெறணும். எந்த பிரைம்டைம்ல டிபேட் நடந்துச்சோ அதே பிரைம்டைம்ல அவங்க எல்லாரும்… நீங்க எல்லாரும்… பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும். நீங்க அப்படிச் செய்யலைன்னா, அந்தந்த நிறுவனங்களும், இதை செஞ்சவங்களும் சட்டத்தின் முன்னாடி நிக்க வேண்டியிருக்கும், ஒவ்வொருத்தரும், யாரையும் விடமாட்டேன், இது என்னோட இறுதி எச்சரிக்கை!” என்றான் விஷ்வா தீர்க்கமாக.
தொடர்ந்து பேசியவன், தன் குரலில் லேசான நையாண்டியை வரவழைத்துக் கொண்டான். “அப்புறம் இன்னொன்னு… இந்த அசிங்கமான வேலை எங்க ஆரம்பிச்சது, இதுக்குப் பின்னால இருந்து இதை யார் செய்ய வச்சாங்க அப்படின்ற அத்தனை ஆதாரமும் இப்போ என் கையில இருக்கு. அவங்களுக்கான தண்டனை ரொம்ப சீக்கிரமே முறைப்படி கிடைக்கும். இந்த பிரஸ் மீட் முடிஞ்ச அடுத்த நிமிஷமே அதுதான் உங்களோட அடுத்த பிளாஷ் நியூஸா இருக்கப்போகுது, பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க.”
இறுதியாக, தன் ரசிகர்களை நோக்கித் திரும்பிய விஷ்வாவின் குரலில் கோபமும் ஏமாற்றமும் கலந்திருந்தது. “என்னைத் தன் வீட்டுப் பிள்ளையா கொண்டாடுற என் ரசிகர்கள்கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கல. தன்னை ஒரு உண்மையான ரசிகன்னு சொல்லிக்கிற எவனும், அவனோட தலைவனோட பிரைவசியை இப்படித் தெருவுக்கு இழுக்க மாட்டான். நான் கல்யாணம் பண்ணிக்கப்போற பெண்ணைப் பத்தி ஒரு வார்த்தை கூடத் தப்பா பேச மாட்டான். இதுல இருந்து என் உண்மையான ரசிகர்கள் யாருன்னு எனக்குத் தெரிஞ்சிடுச்சு,” என்று கூறிவிட்டு, தன் கையில் இருந்த மைக்கை மேஜையின் மீது ஆத்திரத்துடன் தூக்கிப் போட்டுவிட்டு, அந்த இடத்தை விட்டு புயலென வெளியேற முற்பட்ட விஷ்வா, ஒரு நொடி நின்று அங்கிருந்த ஒரு கேமராவை ஊடுருவிப் பார்த்துவிட்டு நகர்ந்தான்.
அவன் பின்னாடியே அரவிந்தும் வேகமாக ஓடினான். அரங்கத்தில் இருந்த செய்தியாளர்கள் அனைவரும் அடுத்து வரப்போகும் அந்தப் பெரிய ‘பிளாஷ் நியூஸுக்காக’ தங்களின் மொபைல்களையும், டிவி திரைகளையும் பதற்றத்துடன் பார்த்தபடி காத்திருக்கத் தொடங்கினர்.
அதே நேரத்தில், கிராமத்து வீட்டுக் கூடத்தில்…
அனைவரும் டிவியைத்தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். தன் அறையின் படுக்கையில் முகம் புதைத்துக் கிடந்த நிலாவின் காதுகளில், ஹாலில் ஓடிக்கொண்டிருந்த டிவியில் விஷ்வாவின் குரல் கேட்டதும், அவளும் தலைதெறிக்க ஓடி வந்தாள்… தன்னவன் தனக்காக இவ்வளவு மெனக்கெடுகிறானே என்ற உணர்வே அவள் கண்களில் கண்ணீர் ஊற்றெடுக்கச் செய்தது. 
கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட விஷ்வாவின் கோப வார்த்தைகள் ஒவ்வொன்றையும் கேட்டவளுக்குள் ஓர் இனம்புரியாத நிம்மதி வந்து ஆட்கொண்டது. அரங்கைவிட்டு வெளியேறும்போது திரும்பி விஷ்வா பார்த்த அந்தப் பார்வை தனக்கானதுதான் என்பதை உணர்ந்த நிலா, அருகிலிருந்த பாட்டியைக் கட்டிக் கொண்டு தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள்.
அதற்குள் காட்சி மாறி அடுத்த பிரேக்கிங் நியூஸ் வரத் தொடங்கியது.
“சற்று முன் கிடைத்த அதிரடித் திருப்புமுனைச் செய்தி! சூப்பர் ஸ்டார் விஷ்வா மற்றும் நிலா ஆகியோரின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் திட்டமிட்டு பரப்பப்பட்ட சதி அம்பலமாகியுள்ளது. நடிகை நயனிகாவும் அவரது மேனேஜர் தீபக் என்பவரும் விஷ்வாவின் புகழைக் கெடுப்பதற்காகச் சட்டவிரோதமாகப் புகைப்படங்களை எடுத்துப் பரப்பியது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகை நயனிகா தற்போது தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்…” என்று நயனிகாவின் மன்னிப்பு வீடியோ ஒளிபரப்பப்பட்டது.
இந்தச் செய்தியைக் கேட்டதும், நிலா சட்டென்று அங்கிருந்து விலகி, கண்களில் கண்ணீரோடு தன அறை நோக்கி ஓடினாள். ஹாலில் அவளது தந்தை ரங்கநாதன், டிவியை உறைந்து போய் பார்த்துக் கொண்டிருந்தார்.
விஷ்வா சொன்னபடியே, அவளது குடும்பத்தின் மீது விழுந்த பழி துடைக்கப்பட்டது, ஆனாலும் ரங்கநாதனின் கோபம் அடங்கவில்லை… “எல்லாம் நடந்ததுக்கு அப்பறம் வந்து மறுப்பு சொல்லி, ஊரை மிரட்டி என்ன ஆகப் போகுது? பேரு கெட்டது, கெட்டதுதானே… அதை எப்படி மாத்துறது?” என்று கத்தத் தொடங்கினார். ஆனால் அவரைக் கண்டுகொள்ளத்தான் அங்கு யாரும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!