காதலும் கடத்தப்படும் – 41 (Final)

காதலும் கடத்தப்படும் – 41
“மருது, நீயா?” கேள்வியானார், வேதநாயகம்.
“ஆமா அண்ணே, அஞ்சலியோடு ஆசையை நிறைவேத்த எனக்கு வேற வழி தெரியல. இந்த அர்ஜுனை தான் அவ விரும்பறா. அதான் கல்யாணத்தை நிறுத்த அவளை தூக்கிட்டேன்… என்னை மன்னிச்சிடுங்க… எனக்கு என் பொண்ணு சந்தோஷமும், வாழ்க்கையும் தான் முக்கியம். நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் வாங்கிக்கறேன். ஆனா பிள்ளைங்களுக்கு கல்யாணம் செய்து வச்சுடுங்க…”
Advertisement
வேதநாயகம் அஞ்சலியை நோக்க, அவள் தலை கவிழ்ந்துகொண்டாள்.
“என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே?”
“இன்னைக்கு காலைல தான் எதேச்சையா எனக்கு தெரிய வந்தது. எப்படி உங்ககிட்ட சொல்லி, கடைசி நேரத்துல கல்யாணத்தை நிறுத்தறது? அதான், நானே ஒரு ப்ளான் போட்டு, அஞ்சலியை மாட்டுக்கு பழம் கொடுக்க வெளிய வர வச்சு, நம்ம பசங்கள விட்டு தூக்கிட்டேன். அப்படியே ஏர்போர்ட் போற வழியில, இவனுங்க ரெண்டு பேரையும் தூக்கிட்டு வர சொன்னேன். பயலுக சிறப்பா முடிச்சுட்டானுங்க. கோவிலுக்கு போய் கல்யாணத்தை பண்ணி வச்சுடலாம்னு நினைச்சேன், ஆனா அஞ்சலியும் அர்ஜுனும் உங்க ஆசீர்வாதத்தோட தான் கல்யாணம் செய்துப்போம்னு சொல்லிட்டாங்க…”
Advertisement
மருதநாயகம் பேசி முடிக்க, “தலைவரே, இவனுங்க ரெண்டு பேரும் ஏர்போர்டுக்கெல்லாம் போகல. நம்ம மண்டபத்துக்கு வெளிய சின்னம்மா கூட தான் பேசிக்கிட்டு இருந்தானுங்க. நாங்க தூக்கறதுக்குள்ள, எவனோ தூக்க பார்த்தான். அவனை அடிச்சு போட்டுட்டு இவங்களை தூக்கிட்டோம்…” என்றான் மருதநாயகத்தின் அடியாள் ஒருவன்.
Advertisement
வேதநாயகம் கேள்வியாய் அர்ஜுனை பார்க்க,
“மன்னிச்சுடுங்க சார். அஞ்சலி என்னை விரும்பறதுக்கு முன்னாடியே நான் அவளை விரும்ப ஆரம்பிச்சுட்டேன். இருந்தாலும் எனக்கு அவளை கட்டிக்க தகுதியில்லன்னு நினைச்சு விலகி போயிட்டேன். நேத்து உங்கள பார்த்தது பேசின பிறகு, அஞ்சலியோட பேசின பிறகு மனசு தாங்க முடியல. அஞ்சலியை மிஸ் பண்ணிடக்கூடாதுன்னு முடிவு செஞ்சு, இன்னைக்கு கல்யாணத்துக்கு முன்னாடி அவளை கடத்திட்டு போய்டலாம்னு தான் வந்தேன். ஆனா, என்னை எவனோ கடத்த முயற்சி பண்ணியிருக்கான்…”
மருதநாயகம் அவன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் நின்றார்.
Advertisement
“மன்னிச்சுடு அஜூ…” என்றான் மதன்.
“இப்ப நீ என்ன பண்ண?” என்று பதறினார், மருதநாயகம்.
“அஞ்சலியை கல்யாணம் செய்துக்க சொல்லி, நேத்து ரொம்ப நேரம் அஜுக்கு அட்வைஸ் பண்ணேன்.. அவன் கேட்கறதா தெரியல. ஆனா அவன் மனசுக்குள்ள அஞ்சலி மேல எவ்வளவு ஆசை வச்சிருக்கான்னு எனக்கு தெரியும். இதுக்கு மேல நாம ஏதாவது செய்யலேன்னா எல்லாம் கையை விட்டு போயிடும்னு, அஞ்சலிக்கு ஃபோன் பண்ணி அவன் மனசுல உள்ளதை சொன்னேன். அப்போ தான் நான் ராபர்ட் அண்ணனை வச்சு, அஜூவை கடத்த ஐடியா கொடுத்தேன்…”
“என்னடா சொல்ற?” – இம்முறை அர்ஜுன் பதறினான்.
“கடத்தி என்ன பண்றதா உத்தேசம்? அவனை கடத்தினா கல்யாணம் எப்படி நிக்கும்?” என்றார், மருதநாயகம்.
“என்னை மன்னிச்சுடுங்க சித்தப்பா” என்றாள், அஞ்சலி.
“நீயுமா? எனக்கு நெஞ்சு வலி வர மாதிரி இருக்கு… விஷயத்தை சொல்லுமா” என்றார், மருதநாயகம்.
“மதன் சொன்னதுக்கு அப்புறம், எப்படியாவது அஜூவை கல்யாணம் செய்துக்கணும்னு முடிவு பண்ணி, நான் ஒரு ப்ளான் போட்டேன்…”
“என்ன ப்ளான்?”
“அந்த கவுன்சிலர் பையனை வச்சு, மாப்பிள்ளையை தூக்கிட்டேன்…”
மாப்பிள்ளை வீட்டார் அவளை திட்ட, வேதநாயகம் சமாதானம் செய்து, அவர்களை அமைதியாக்கினார். இந்த குழப்பத்தின் மத்தியில், கஜாவிடம் பணிபுரியும் இரண்டு காவலாளிகள், மாப்பிள்ளையை அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர்.
“சார், ஒரு கிலோமீட்டர் தூரத்துல, ஒரு கார்ல இவரை கட்டிப்போட்டு வச்சிருந்தாங்க. ரெண்டு அக்கியூஸ்ட் மாட்டியிருக்காங்க. ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போயாச்சு. இவரை இங்க கூட்டிட்டு வந்துட்டோம். இன்னும் ஸ்டேட்மென்ட் வாங்கணும்” என்றனர் அவர்கள், கஜாவிடம்.
“ஏன்மா ஒரு பொம்பள புள்ள பண்ற வேலையா இது? நல்லா பொண்ண வளர்த்திருக்கீங்க” என்று மாப்பிள்ளை வீட்டார் அவளை நிந்தித்தபடி மாப்பிளையை சூழ்ந்துகொள்ள,
“என் பொண்ணு சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்” என்றார் வேதநாயகம்.
“அண்ணன் எந்த தப்பும் பண்ணல. எல்லா குழப்பமும் என்னால தான். நான் உங்க எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்கறேன்” என்றார், மருதநாயகம்.
“இல்லை, நான் தான் மாப்பிளையை கடத்த சொன்னேன். என்னால தான் எல்லா பிரச்சனையும். தயவு செய்து மன்னிச்சுடுங்க” என்றாள், அஞ்சலி.
“நீ எதுக்கு அஞ்சலி மன்னிப்பு கேட்கற?” என்ற அர்ஜுன், “மொத்த குழப்பத்துக்கும் நான் தான் காரணம். மனசு விட்டு பேசியிருந்தா இதெல்லாம் நடந்திருக்காது. நான் எல்லார் சார்பா மன்னிப்பு கேட்டுக்கறேன்” என்றான், அர்ஜுன்.
“நான் தான் கடைசி நேரத்துல அஞ்சலி கிட்ட உண்மைய சொல்லி, இந்த ப்ளானுக்கெல்லாம் காரணமாயிட்டேன். என்னால தான் எல்லா பிரச்சனையும். எல்லாரும் மன்னிச்சுடுங்க” என்றான் மதன், அவன் பங்கிற்கு.
“குடும்பமே சேர்ந்து மன்னிப்பு கேட்டா மன்னிச்சுட முடியுமா?” பொங்கினான், அமெரிக்க மாப்பிள்ளை.
“தமிழ் சினிமா வரலாறுல, அமெரிக்க மாப்பிள்ளை கூட ஹீரோயினுக்கு கல்யாணம் நடந்ததே கிடையாது. என்னமோ புதுசா பொங்கறீங்க?” என்று மதன் கூற,
“இதை நாங்க சும்மா விடமாட்டோம்” என்று கூச்சலிட்டபடி, மாப்பிள்ளை வீட்டார் கிளம்பிச் சென்றனர்.
“நீ எதுக்கு அஞ்சலி இந்த ரிஸ்கெல்லாம் எடுத்த?” என்றார் மருதநாயகம்.
“எனக்கு வேற வழி தெரியல சித்தப்பா…”
“காலைல உன் ரூம்ல காதல் தோல்வில அழுதுட்டு இருந்த. திடீர்னு மாப்பிள்ளையை கடத்தியிருக்க… ஒன்னும் புரியல…”
“நான் அதுக்கு அழல. எப்படியும் அர்ஜுன் கூட எனக்கு கல்யாணம் நடந்துடும்னு சந்தோஷத்துல அழுதுட்டு இருந்தேன். இருந்தாலும், அந்த மாப்பிளை பையனை கடத்தினா வேற என்ன பிரச்சை வருமோன்னு டென்ஷன்ல வேற இருந்தேன். அதான் உங்களுக்கு நான் வருத்தத்துல அழற மாதிரி இருந்தது…”
“அர்ஜுனை கடத்தினா கல்யாணம் எப்படி நடக்கும்?” குறுக்கிட்டான், கஜா.
“மதன் அர்ஜுனை கடத்தி மண்டபத்துக்கு கூட்டிட்டு வரதுக்குள்ள, இங்க அமெரிக்க மாப்பிள்ளையைக் காணோம்னு குழப்பம் வந்திருக்கோம். நான் கல்யாணம் நின்ன துக்கத்துல அழுதுட்டு நிக்கும்போது, நாலு பேரு, ‘இது பசகுனம்’, ‘கல்யாணம் மேடை வரை வந்து நிக்கக்கூடாது’, ‘இனி யாரும் இந்த பொண்ணை கல்யாணம் செய்துக்க மாட்டாங்க’, அது இதுனு சொல்ல வச்சு, அர்ஜுனை ஃபோர்ஸ் பண்ணி தாலி கட்ட வச்சுடலாம்னு நினைச்சேன்…”
“யாரு அதெல்லாம் சொல்லுவானு நினைக்கற?”
“ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் நாலு பேரு ஏற்பாடு பண்ணியிருக்கேன்” என்க, கூட்டத்திலிருந்து நால்வர் வெளியே வந்தனர்.
“எப்போ நாங்க எங்க வசனத்தை பேசறது?” என்றார் ஒருவர்.
“எப்பவுமே பேசவேண்டாம். அந்த பொண்ணே உங்க வசனத்தை பேசிடுச்சு” என்ற கஜா, “இதெல்லாம் எப்படி வொர்க் அவுட் ஆகும்?” என்றான், அஞ்சலியிடம்.
“அதெல்லாம் ஆகும். அஜூ சரியான செண்டிமெண்ட் பார்ட்டி. நிச்சயம் இந்த சீன் வொர்க் ஆகும்” என்றவள் அர்ஜுனைக் காண, அவனோ தலையாட்டியபடி சிரித்துக்கொண்டான்.
“என்னை காப்பாத்துங்கோ, காப்பாத்துங்கோ” என்று கூச்சலிட்டபடி, இவர்களின் மத்தியில் ஓடி வந்து நின்றான், புரோகிதர்.
“நீங்க யாரு?” என்றார் மருதநாயகம்.
“மறந்துட்டேளா? கல்யாணம் செய்து வைக்க என்னைத்தானே புக் பண்ணியிருந்தேள்?!! என்ன கூத்து இங்க நடக்கறது?”
“அது புரியாமத்தான் நாங்க முழிச்சுகிட்டு இருக்கோம். நீங்க எதுக்கு இப்போ காப்ப்பாத்துங்க’னு ஓடி வரீங்க?”
“என்னை யாரோ கை காலெல்லாம் கட்டி ஸ்டோர் ரூம்ல பூட்டி வச்சுட்டா. யாரு அந்த அபிஷ்டு?” என்று புரோகிதர் பொங்க,
“அய்யா, என்ன மன்னிச்சுக்கோங்க…” என்றபடி தோட்டத்து தாத்தா வந்து நின்றார்.
“டேய் முடியல டா டேய், பிரஷர் சுகர் கொலஸ்ட்ரால் எல்லாம் வந்துடும் போல இருக்கு. நீ எதுக்குயா இந்த ஆள பூட்டி வச்ச?”
“அஞ்சலியம்மா கல்யாணத்தை நிறுத்தி, இந்த அர்ஜுன் பயலோட சேத்து வைக்கணும்னு நீங்க உங்க அடியாளுங்களோட பேசினதை நான் கேட்டேன். அஞ்சலியம்மா சந்தோஷத்தை விட வேற என்ன வேணும். அதான் என் பங்குக்கு ஏதாவது செஞ்சு இந்த கல்யாணத்தை நிறுத்தணும்னு நினைச்சேன்.”
“அதுக்குனு மந்திரம் சொல்ல வந்தவன், பந்தியிலே சாம்பார் ஊத்த வந்தவனையெல்லாமா தூக்குவ?”
“பின்ன பெரிய அய்யாவையா தூக்க முடியும்?”
வேதநாயகம் உட்பட அனைவருமே தாத்தாவை அதிர்ந்து நோக்கினர்.
“அஞ்சலி, என்னமா இதெல்லாம்?”
“அப்பா, சித்தப்பா ஒரு பிளானோட உள்ள வருவாங்க, இது இவ்வளவு பெரிய சீன் ஆகும்னு எதிர்பார்க்கல… என்ன மன்னிச்சுடுங்க பா…” என்றவள், ஓடிச்சென்று தந்தையை கட்டிக்கொண்டாள்.
மகள் தன்னை அணைத்துக்கொண்டதும், தந்தைக்கு அவள் மீது இருந்த சின்ன வருத்தமும் மறைந்து போனது. கலங்கிய அவளது கண்களை துடைத்தவர்,
“நீ ஆசைப்பட்ட மாதிரி அர்ஜுனோட உனக்கு கல்யாணம் நடக்கபோகுது. இப்போவே இங்கயே…” என்றவர், “எல்லாரும் கல்யாண ஏற்பாட கவனிங்க…” என்றார்.
மண்டபம் மீண்டும் பரபரப்பானது. அர்ஜுன் உடைமாற்றி மாப்பிள்ளை கோலத்தில் வர, அஞ்சலி தனது ஒப்பனையை சரி செய்துகொண்டு மேடை ஏறினாள்.
கெட்டிமேளம் கொட்ட, மங்கள வாத்தியங்கள் முழங்க, உற்றார் உறவினர் அட்சதை தூவி ஆசீர்வதிக்க, கையில் திருமாங்கல்யத்தை எடுத்த அஜூ ஒருமுறை அஞ்சலியைக் கண்டான். அவள் முகம் முழுதும் புன்னகையாய் அமர்ந்திருந்தாள். அவன் முழித்துக்கொண்டிருப்பதை கண்டவள், ‘என்ன’ என்றாள் விழிகளால்.
“ஒண்ணுமில்ல… ஒரு குழப்பம்…” என்று அவன் கூற,
“டேய், ஒழுங்கு மரியாதையா கட்டுடா” என்று அஞ்சலி அவனை முறைக்க, சிரித்துக்கொண்டவன், அவளது காதில் ஏதோ முணுமுணுக்க, அவளும் ‘சரி’ என்று தலையாட்டினாள். அவளுக்கு திருமாங்கல்யம் அணிவித்து, கன்னத்தில் முத்தமிட்டான். அவள் நாணி தலை கவிழ, கண்கள் கலங்கினர் வேதநாயகமும், மருதநாயகமும்.
“ஒரு வழியா அஞ்சலி முகத்துல சிரிப்பு வந்துடுச்சு அண்ணே…” என்று மருதநாயகம் கூற, ‘ஆம்’ என்று தலையசைத்த வேதநாயகம், கண்களை துடைத்துக்கொண்டார்.
“பிள்ளையாண்டான் நல்லா பாட்டு பாடுவானோலியோ, எங்க ஒரு சிச்சுவேஷன் சாங் பாடுங்கோ…” என்று புரோகிதர் கூற,
“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும், நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்…” என்று அவன் அஞ்சலியினின்று விழி நீங்காது பாட, அவள் தன்னை மறந்து அதனை ரசித்துக்கொண்டிருந்தாள்.
மற்ற சடங்குகள் முடிந்து, இருவரும் சற்று இளைப்பாற அவளது அறைக்குள் செல்ல, அவளை பார்த்தபடியே நின்றிருந்தான், அர்ஜுன்.
“என்ன அஜூ அப்படி பார்க்கற?”
“என் கண்டிஷனுக்கு ஓகே சொன்னல்ல?! அதுனால தான தாலி கட்டினேன்?” என்றான்.
“இப்பவும் ஓகே தான்… கிளம்பலாம்…” என்று அவள் கூற, அவன் பெரிதாய் சிரித்திருந்தான்.
விருந்தினர் பலர் கிளம்பியிருக்க, மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே மண்டபத்தில் இருந்தனர். வீட்டிற்கு புறப்பட அனைவரும் தயாராக,
“மாமா பொண்ணையும், மாப்பிள்ளையும் காணோம்” என்றபடி மருதநாயகத்தின் மனைவி அவன் எதிரே வந்து நின்றாள்.
“தயவு செஞ்சு யாராவது என்னை கடத்திட்டு போயிடுங்க, என்னால முடியல” என்றவர், பணியாட்களிடம், “என்னத்தடா பார்த்துக்கறீங்க?” என்று எகிற, வேதநாயகம் கவலையாக,
“யாரும் டென்ஷன் ஆகாதீங்க. அவங்க ரெண்டு பேரும் எங்க போயிருப்பாங்கன்னு எனக்கு தெரியும்” என்று மதன் கூற, அனைவரும் அவனோடு கிளம்பிச் சென்றனர்.
புனித தாமஸ் மலையின் உச்சியிலிருந்து கண்முன்னே விரிந்திருக்கும் நகரத்தை ரசித்தபடி அஞ்சலி நின்றிருக்க, கண்முன்னே நின்றிருக்கும் தனது உலகமான அஞ்சலியை அவன் ரசித்திருந்தான். தலை திருப்பி அர்ஜுனைக் கண்டவள், அவன் மெய்மறந்து நிற்பதைக் கண்டு, அவனது விழிகளோடு விழி மோதி இவளும் உறைந்து போனாள்.
“என்ன பார்க்குற அஞ்சலி?”
“கொஞ்ச நாள் முன்னாடி என்னை ஒருத்தன் கடத்திட்டு போனான். அவன் என்னை மட்டுமில்ல என் மனசையும் சேர்த்து கடத்திட்டான். நீ பார்க்க அந்த கள்வனை மாதிரியே இருக்க” என்றாள். அவள் சிரிக்க, அவனும் சிரித்துக்கொண்டான்.
“கடத்தாம? ராஜாத்தியா வளர்ந்த பிள்ளை, என்னோட சின்ன வீட்ல தங்கி, வீட்டை கோவிலா மாத்தி, என்னை பெத்தவங்கள தெய்வமா கும்பிட்டு, அவங்க கதையை கேட்டு கண்ணீர் வடிச்சு, அவங்க நிலையில இருந்து என்னை கை தூக்கிவிட்டா, கிறுக்கு பிடிக்கத்தான் செய்யும். அந்த புள்ளையோட மனசை கவரத்தான் செய்வாங்க…”
“நான் சொல்லாம என் மனசை படிச்சு, அதுக்கு மருந்து போட்டபோதுதான் தெரிஞ்சுது, இவன் கள்வன் இல்லை, கடத்தல் காரன் இல்லை, என்னை மீட்டெடுக்க வந்த ஹீரோன்னு… மனசை திருட தேவையில்லை, நானே அள்ளி கையில குடுத்துடறேன்…”
“உன் கண்ணுக்கு ஹீரோவா தெரிஞ்சதாலயே, இந்த உலகத்தையே என்னை கொண்டாட வச்சுட்ட. என் தேவதை நீ… கொடுக்க மட்டுமே தெரிஞ்ச தேவதை நீ!!”
“உன் தேவதை தான்… காதல சொல்லாம சொல்லி கவிதையா வாசிச்சிட்டியே…”
“காதலை சொல்லியிருக்கணும். என் தேவதை என்கிட்ட கேட்டது அது மட்டும் தான்”
“நீ உன் மனசை சொல்லிக்கிட்டே தான் இருந்த. நீ தான் உணரல. ஆனா எனக்கு தெரியும்…”
“ம்ம்… என் தேவதைக்கு என்னை பத்தி எல்லாமே தெரியும்…”
“தெரியும்” என்றவள், அவனது மார்மீது கை வைத்து, “இந்த குட்டி மனசுக்குள்ள எவ்வளவு காதல் இருக்குனு தெரியும்” என்றாள்.
தனது கைப்பையை திறந்து, பரிசு ஒன்றினை எடுத்து நீட்டினாள். அதனை பிரித்துப்பார்க்க, சற்று வாடிய ரோஜாவோன்று செயற்கை பிசினிற்குள் பதப்படுத்தப்பட்டிருந்தது.
“என் ஹீரோ பாட்டு பாடும்போது, தனக்கே தெரியாம என் மேல வீசின காதல் பரிசு. சருகாகி உதிர்ந்திடாம இருக்க, இப்படி ஒரு ஏற்பாடு”
அவளை அவன் கட்டிக்கொண்டான்.
“கண்ணாக கருத்தாக
உனைக் காப்பேன் உயிராக
உனைக் கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
அட உன்னுள் உறைந்தேனே
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே“ என்று பாடினான். அவளது கண்கள் மெலிதாக ஈரம் கொண்டன.
“அஞ்சலி, நான் உன்னை உயிருக்கு உயிரா காதலிக்கறேன். என்னுடைய எல்லாமும் நீதான். என் சந்தோஷம், துக்கம், வெற்றி, தோல்வி, கோவம், சிரிப்பு… எல்லாமே உனக்கு மட்டும் தான்… வாழ்க்கையோட கடைசி நொடி வரை உன்னை காதலிச்சுட்டே இருக்கணும். பக்கத்துல கமா போடல, கேள்விக்குறி போடல, ஆச்சர்யக்குறி போடல, முற்றுப்புள்ளியும் வைக்கல. இந்த நேசம், இந்த காதல், என் தேவதை – இந்த பிறப்புல மட்டுமில்ல என்னோட எல்லா பிறப்புலயும் கூட இருக்கணும். வேற எதுவும் தேவை இல்லை…” என்றவன் அவளை மீண்டும் கட்டிக்கொண்டான்.
தொலைவில் சத்தம் கேட்டு இருவரும் காண, மதன் அனைவரையும் அழைத்துக்கொண்டு அங்கு வந்து சேர்ந்திருந்தான்.
“என்ன மாப்பிள்ளை இது? கல்யாணம் தான் முடிஞ்சிடுச்சே அப்புறம் எதுக்கு கடத்தறது?” என்றார், மருதநாயகம்.
“அதே தான் நானும் கேட்கறேன். கல்யாணம் தான் முடிஞ்சிடுச்சே. அப்புறம் எதுக்கு கடத்தறது? நாங்களே கிளம்பிட்டோம்…”
“சரி, இப்படி கேட்கறேன். எதுக்கு சொல்லாம கொள்ளாம இந்த மலைக்கு வந்தீங்க?”
“என் பொண்டாட்டிக்கு ப்ரொபோஸ் பண்ணத்தான்… தாலி கட்டும்போதே என் காதலை சொல்லணும்னு கண்டிஷனோடத்தான் அவளைக் கட்டிக்கிட்டேன்…”
“அதுக்கு இவ்வளவு தூரம் வரணுமா?”
“இங்க வச்சு தான் முதன் முதல்ல அஞ்சலியை பார்த்தேன். பார்த்தேன்னு கூட சொல்லிட முடியாது, பார்த்து ரசிச்சேன்… காதல் வயப்பட்டேன்… அதான்…”
“நானும் தான் காதல் கல்யாணம் பண்ணேன் அதுக்குன்னு இவ்வளவு அக்கப்போர் பண்ணல…”
“ரொம்ப நாள் ஆசை மாமா”
மகள் சிரிப்பதை பார்த்து மனநிம்மதியோடு நின்றிருந்த வேதநாயகம்,
“விடு மருது… பிள்ளைங்க ஆசை தான் முக்கியம்” என்றவர், “ரெண்டு பேரும் இதே மாதிரி நூறு வருஷம் சந்தோஷமா இருக்கணும்…” என்று ஆசீர்வதித்தார்.
அனைவரும் புறப்பட்டு அர்ஜுனின் இல்லத்திற்கு சென்றனர். அங்கே இந்துமதி, இளமாறனின் படத்தின் முன் விளக்கேற்றி அவர்களை வணங்கி, காதலாகி, காதல்கொண்டு, காதலாலே அழகியதொரு வாழ்வைத் தொடங்கினர், அர்ஜுனும் அஞ்சலியும்.
பி.கு.: இந்த களேபரத்தின் மத்தியில், தனக்கு ரன்வீர் ரோஷனோடு திருமண ஏற்பாடு முடிவாகிவிட்டதாக கரீனா சோப்ராவிடமிருந்து குறுஞ்செய்தி வர, தனது கைபேசியை உடைத்துவிட்டு, காசிக்கு புறப்பட்டான், கஜா.
வாழ்க வளமுடன்!!
