Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

73. வேணு கானமிதுContest Stories 2026

கானம் 30

அத்தியாயம்: 30

“குட் ஆஃப்டர்நூன் அப்பா… ஆ….” என்று கேட்ட மகளின் குரல், கானமாய் இனித்தது பத்ரிக்கு. 



Advertisement

“ஆப்டர்நூன்னா!! அவ்ளோ நேரம் ஆச்சா! மணி என்ன பேபிம்மா.” என்றவனின் முதுகில் பாரம் ஏறியது.

“மத்தியானம் 7 மணி ஆகிடுச்சி…” என்று முரணாக பேசினாள். அவனின் முதுகில் ரட்டினக்கால் போட்டுப் படுத்திருந்தவளை இறக்கி, தன் கை வளைவிற்குள் பிடித்தவன், 

Advertisement

Advertisement

“இது மத்தியானமா!!! மத்தியானமா!!” என்று வயிற்றில் கிச்சு கிச்சு மூட்டி,

“பொய் பொய்யா பேசுறாளே இந்தப் பேரிக்கா… சொல்வியா… சொல்வியா…” என்று அவளின் சிரிப்பை அதிகப்படுத்தினான். 

Advertisement

“சொல்வேனே… நான் சொல்வேனே…” என்று கிண்கிணியாய் மொழிந்தவளின் தோளில் தலைச் சாய்த்தவன்,

“நீ இன்னும் ஸ்கூலுக்கு கிளம்பளயா?”

“இல்ல..‌. அதிக்கா ஸ்….. அதி மைனி குளிச்சிட்டு இருக்காங்க…” எனும் போதே, ரிதன்யா அழைக்கும் சத்தம் கேட்டது‌.

“சரிகா… எங்க இருக்க? அடுத்து நீ தான்.” என்று கத்தினாள். 

“அம்மா வந்திட்டா…” என்று அவனின் பனியனை இறுக்கிப் பிடித்தாள். 

“குளிக்க பயமா?”

“இல்லை… இன்னைக்கி மாசக் கடைசி.” என்றாள் ரகசியமாக.

“அதுனால…”

“அந்த நாள்ல அம்மா தலைக்கு சீயக்கா தேச்சி விடுவா… தலைல தட்டித் தட்டிக் குளிக்க ஊத்துவா… தலையெல்லாம் வலிக்கும் தெரியுமா.” என்று குற்றம் சுமத்திக் கொண்டிருக்கும் போதே, ரிதன்யா உள்ளே வந்தாள். 

அவளைக் கண்டதும், அப்பா… அப்பா என்று அவனோடு இடுங்கிக் கொண்டவளை, கோழிக் குஞ்சென அணைத்து, அரணாக பத்ரி காக்க, 

“மரியாதையா வந்திடு. இல்ல அடி வாங்குவ.” என்று மிரட்டினாள்.

“வந்தாலும் நீ அடிப்ப.” என்றவளைப் பிடித்து இழுத்தச் செல்ல முடியாதவாறு பத்ரியின் கரங்கள் வளைத்திருந்தன.

அவன் கரத்தைத் தட்டி விட்டு விட்டு அவளைத் தூக்கிச் செல்வது ஒன்றும் அவளால் முடியாத காரியம் அல்ல. இதற்கு முன்னால் செய்யாததும் அல்ல. 

ஆனால் இந்த ஒரு வாரமாக அவனின் முகத்தைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது அவளுக்கு. 

அவனைத் தொட விருப்பமில்லாது, “அவள எங்கிட்ட குடுங்க.” என்று விழிகளை எங்கோ பதித்து வைத்துக் கொண்டு, சின்னக் குரலில் சொன்னாள்.

“முடியாதுன்னு சொல்லுங்கப்பா.” என்றாள் மகள் கட்டளையாக.

“வாய் ரொம்ப பேசாத டி…” என்று அதட்டும் போதே,

“அவளுக்குச் சீயக்கா பிடிக்கலன்னா விட்டுடேன் தன்யா. சாம்பூ யூஸ் பண்ணேன்.” என்று சிபாரிசு செய்தான்.

“ஷாம்புவும் போடத்தான் செய்றேன். ஆனா மாசத்துக்கு ஒருக்க சீயக்கா தேச்சி குளிச்சாத்தான் உடம்பு சூடு குறையும்.” 

“அதெல்லாம் நான் குளிந்து போய்த்தான் கிடக்கேன்.” என்றவளின் முதுகில் அடி போட, அது பத்ரியின் முதுகில் விழுந்தது.

“ஸ்…. ஆ ராட்சசி… புருஷன்னு கூட பாக்காம இப்படியா அடிப்ப.” என்று அலற,

“பாருங்கப்பா… உங்களுக்கே இந்த நிலைமைன்னா! என்னோடது.” என்று மகள் ஏற்றி விட, கோபம் வரப்பெற்றவள்,

“அவள பாதுகாத்தா இன்னும் விழும். அதுவும் கரண்டியால. எப்படி வசதி?” என்றதும் அடி தாங்க முடியாது என்பது போல் இரு கையை உயர்த்தியவன், சரிகாவைத் தலைக்கு மேல் தூக்கி கொண்டு குளியலறையில் விட்டு விட்டு வந்தான்.

“அப்பா… இதெல்லாம் சீட்டிங்… அம்மாவ நீங்க தான் மிரட்டணும். அவங்க மிரட்டலுக்குப் பயப்பட கூடாது.” என்றவளின் காதில்,

“சமத்தா குளிச்சிட்டு வந்தா ஈவ்னிங் நாம அவுட்டிங் போகலாம். சீஸ் பீசா சாப்பிட.” என்று டீல் பேச, சந்தோஷமாக தலையசைத்தாள். 

“எனக்குத் தெரியாம என்ன டீல்?” என்றவளிடம்,

“அது சிக்ரெட் தன்யா… வா வந்து குளிக்க ஊத்து…” என்று சரிகா சொல்ல, இருவருக்கும் இடையே குளியலறையில் பெரிய யுத்தமே நடந்தது. அதைக் கேட்டவன், சிரித்தபடியே ஹாலுக்கு வந்தான். அங்கு கேசத்தை உலர்த்திக் கொண்டிருந்தாள் அதிதி.

“குட் மார்னிங் மாவய்யா.” என்று வரவேற்றவள், அவனின் அருகில் அமர்ந்து, “என்னையும் கூட்டீட்டு போகணும். பட் எனக்கு பீசா வேண்டாம். ஐஸ் க்ரீம் வேணும். பட்டர் ஸ்காட்ச் குல்பி.” என்றாள். 

“நான் வாங்கி தருவேன். ஆனா உன் அத்தை ஒத்துப்பாளா?” என்றான் சாம்பிராணி புகை பொங்கியக் கரண்டியுடன் வந்தவளைச் சுட்டிக் காட்டி.

“ப்ளீஸ் மாவய்யா… என்னையும் கூட்டீட்டு போங்க. பப்ளிக் எக்சாம் எழுதப் போறேன்னு வீட்டுல கேபிள் கணெக்சன கட் பண்ணிட்டாங்க. ஃப்ரெண்ட்ஸ் கூட பேச விட மாட்டேங்கிறாங்க. அம்மம்மாக்கு சீரியல் பாக்க மட்டும் தான் வைஃபை வச்சிருக்காங்க. காலைல ஐஞ்சு மணிக்கு எழுப்பி விட்டுறாங்க. பதினோரு மணிக்கு மேல ரூம்ல லைட் போட விட மாட்டேங்கிறாங்க. பயங்கர டார்ச்சர்.” என்று புலம்பினாலும், ரிதன்யா எழுப்புவதற்கு முன்னரே எழுந்து படிக்கும் அதிதியின் ஆர்வம் அவனுக்குத் தெரியும்.  

அவள் கூடவே எழுபவள், அவளுக்கு காபி போட்டுக் கொடுத்து, வெறும் வயிற்றில் இருக்க விடாது, சத்துள்ள உலர் விதைகளை கொடுத்து அவளின் அருகிலேயே அமர்ந்து பாடம் படிப்பாள் ரிதன்யா. 

மாமனும் மருமகளும் பேசியது அவளின் காதிலும் விழ, அதிதியின் தலையில் லேசாகத் தட்டியவள், 

“உனக்கு தான் ஐஸ்கிரீம் சாப்பிட்டா தொண்டை வலிக்குமே. அப்புறம் எதுக்கு அது. அதுவும் ரெண்டு நாள்ல பரீட்சைய வச்சிட்டு ஐஸ் கிரீம்லாம் சாப்பிடவே கூடாது.” என்றவள், 

“அவளுக்கு வாங்கி குடுக்கக் கூடாது.” என்று பத்ரியிடம் சொல்ல எத்தனிக்க, அவனின் குறுகுறுப் பார்வையைக் கண்டு வார்த்தைகளை விழுங்கிக் கொண்டு, 

“இப்படி வந்து உக்காரு.” என்று அதிதியின் முடிக்குத் தூபம் போட்டு விட்டு, தலை வாரி விட்டு, பூவையும் வைத்து விட்டாள். 

“லன்ச் என்ன அத்தை?” என்றாள்‌‌ சலுகையாக.

“எல்லாம் உனக்கு பிடிச்சது தான். இரு, தோசை ஊத்துறேன்.” 

“அத்தை… வேன் வந்திடும்.” என்று உடமைகளை எடுத்து வைத்தவளின் பின்னாலேயே சென்று ஊட்டி விட்டு, மத்திய உணவையும் டப்பாவில் அடைத்துக் கொடுத்தாள்.

“போய்ட்டு வர்றேன் அத்தை. பை மாமா…” என்று இருவருக்கும் பறக்கும் முத்தத்தைத் தந்துவிட்டு ஓடினாள். அவள் பத்தாம் வகுப்பின் இறுதியில் உள்ளதால் சிறப்பு வகுப்பிற்கு எட்டு மணிக்குள் பள்ளியில் இருக்க வேண்டும். 

அதிதி வேன் ஏறிச் சென்ற பின்னரும் சரிகா குளியலறையை விட்டு வெளியே வரவில்லை. அதட்டி உருட்டிய ரிதன்யாவிடமிருந்து அவளைக் காத்து, யூனிஃபார்ம் போட்டு சாப்பாடு கொடுத்ததெல்லாம் பத்ரி தான்.

இதில் இறைந்து கிடந்த புத்தகக் குவியலை பைக்குள் அடைக்கும் பொறுப்பை சுதாவிடம் கொடுக்க, “பாட்டிய வேலை வாங்க கூடாது சரிகா.” என்ற கண்டனம் பத்ரியிடம் இருந்து வந்தது. 

“அதைப் பாட்டி சொல்லட்டும் ப்பா. ஏன் பாட்டி! என்னோட புக்க எடுத்து வைக்கிறது உங்களுக்குச் சிரமமா இருக்கா?” என்க, 

“ஒரு சிரமமும் இல்ல செல்லம். எம்பேத்திக்கு நான் செய்றேன். உங்கப்பெ தான் என்னை இது செய்யாத அது செய்யாதன்னு சொல்லிச் சொல்லியே நோயாளியாக்கிட்டான். நான் நல்லாத்தான் இருக்கேன்.” என்றார் சுதா.

“அதை அப்பா கிட்ட சொல்லுங்க.” என்றாள் உத்தரவாக.

“டேய்… எம்பேத்தி என்னை வேலை ஏவுறா… உனக்கு என்னடா வந்தது?” என்றதும் தாய்க்கும் கண்டனம் தெரிவிக்க, 

“போடா… கண்டதையும் சொல்லிட்டு. எங்க ரெண்டு பேருக்குள்ள நீ வராத…”

“ஆமாம் ஆமாம்… வராதீங்க வராதீங்க.. போங்க போங்க…” என்று விரட்ட, பணிந்து விட்டான் பத்ரி.

அந்த வீட்டில் அவனை அதட்டும் ஆளும் அவள் தானே. மகளதிகாரம் பயின்று கொண்டிருக்கிறான்.

மகள் தயாராக இருந்த நேரம், ரிதன்யாவும் அழகிய ஊதா வண்ணப் புடவையில் ரெடியாகி வந்தாள். 

பத்ரியின் பார்வை அதீத ரசனையைக் காட்டியதில் முகம் சூடானது. 

கடந்த ஒரு வாரமாக அவன் முகம் பார்க்காது அவள் விளையாடும் கண்ணாமூச்சி ஆட்டம் அவனுக்குச் சுவாரஸ்யமாக இருந்தது. அவளைச் சீண்டும் எண்ணத்தையும் தந்தது. முதல் முதலில் பார்த்த, தன்னிடம் சீறிய பெண்ணா இது என்றிருந்தது பத்ரிக்கு. கூடவே அவளைத் தன்னிடம்  அடங்கிப் போக வைத்ததில் வெற்றிக் களிப்பு வேறு அவனுக்கு. 

எப்பொழுதும் அடுத்து என்ன என்ற சிந்தனையிலேயே உறக்கம் இழந்து, உடலும் மனமும் சோர்வுற்று உற்சாகம் இழந்து தவிப்பவள், திருமணத்திற்கு பின் எல்லாம் பத்ரி பார்த்துக் கொள்வான் என்ற நிம்மதியில், உடல் பூரிப்பையும் முகம் வசீகரத்தையும் தத்தெடுத்திருந்தது.

வீட்டில் இருக்கும் போது, சரிகாவை அவன் தான் பள்ளியில் விடுவான். மற்ற நேரங்களில் ரிதன்யா கூட்டிச் செல்வாள். ஆனால் பத்ரியுடன் மகள் ஏறிக் கொண்டால், தன் ஸ்கூட்டியில் தான் செல்வாள். 

அவனின் பைக்கில் அழைத்தும் வர மறுப்பாள்.

இன்று அவளைத் தன்னுடன் வரவழைக்க வேண்டும் என்பதற்காக,

வெளியே வந்தான். அங்கு நின்றிருந்த ரிதன்யாவின் ஸ்கூட்டியின் சக்கரத்தில் இருக்கும் காற்றுக்கு விடுதலை தந்துவிட்ட திருப்தியில் உள்ளே சென்று அமர்ந்து கொண்டான். 

ரிதன்யாவிற்கு, அவனுடன் சென்றாக வேண்டிய நிலையை ஏற்படுத்தினான். 

“சும்மா போம்மா… நேரமாகுதுல.” என்று சுதாவும் சொல்ல, கம்பியைப் பற்றியபடி ஏறி அமர்ந்தாள். 

வண்டி நகர்ந்த பின்னும், கம்பியில் இருந்த கரத்தை எடுக்காது இருக்க, வெடுக்கென அதை‌ எடுத்தவன் தன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். உடல் சிலிர்க்க, மூச்சு வாங்கத் தொடங்கியது அவளுக்கு. 

மகளின் பேச்சு காதில் விழுந்தாலும், மனைவியின் தவிப்பைக் கண்ணாடி வழியே பார்த்தபடியே வந்தான். நேற்றைய வெட்கத்தின் மிச்சத்தை அவளிடம் தேடி வெற்றியும் கொண்டான். 

அப்படி நேற்று என்ன நடந்தது…

கண்ணாமூச்சி ஆடுகிறாளா! ஏன்?

பள்ளியில் ஒரு விழா… மாணவர்கள் மத்தியப் பொழுதிலேயே வீடு வந்து விட்டனர். ஆனால் நிர்வாகப் பிரிவில் இருக்கும் ரிதன்யாவால் மாலை ஐந்து மணியாகியும் திரும்ப முடியவில்லை. வேலை இடித்தது அவளை. 

அனைத்தையும் முடித்து விட்டு கிளம்புகையில், பள்ளிக்கு முன் ஆர்ப்பாட்டம் என்று கூடிய மக்களால் கலவரம் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது. ரிதன்யா பள்ளிக்குள்ளேயே மாட்டிக் கொண்டாள். அந்தக் கூட்டம் பள்ளியையும் விட்டு வைக்காது கற்களால் தாக்கி உள்ளது. 

ஆசிரியர் மற்றும் அலுவலக ஊழியர் பாதுகாப்பாக லைப்ரரியில் இருந்தனர். அவரவர் வீட்டில் இருந்து, ஆள்களை வரச் சொல்லி, பாதுகாப்பாக அவர்களுடன் அனுப்பி வைத்தது பள்ளி. 

ஆனால் பத்ரியை வரச் சொல்ல முடியாது. ஏனெனில் அவனுக்கு அன்றைய நாளில் உள்ளூர் விமானப் பணி இருந்தது. வேறு யாரையும்… முடியவே முடியாது. 

கலவரம் என்று தெரிந்ததும் அவனுக்குத் தான் முதலில் தகவல் சொன்னாள். அது செல்லவே இல்லை. குறுஞ்செய்தி அனுப்பி விட்டு கலவரம் அடங்கும் வரை அமைதியாக அமர்ந்து விட்டாள்.

தரையிறங்கியதும் பார்த்தவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. வேலையை மற்றாட்களிடம் கொடுத்து விட்டு, சென்னையில் இருந்து பைக்கில் விரைந்து வந்தான். 

இரவு எட்டு மணியை நெருங்கும் போது பள்ளியில் அவளைத் தவிர யாருமில்லை.  

அடித்து பிடித்து வந்தவன், உடைந்து கிடந்த கண்ணாடி பாட்டில்களைக் கண்டு மேலும் பயந்து போனான். வந்து விட்டதாக தகவல் சொல்லி விட்டு அவள் இருக்கும் வளாகத்தை நோக்கி ஓடியவன், அவள் கண்ணில் பட்டதும் இழுத்தணைத்தான். அதுவும் அவளைத் தன்னுள் புதைத்து விடும் வேகத்தில்.

அவளுக்கோ அவன் வந்தது அதிர்ச்சி தான். கூடவே ‘அவன் விரைவாக வரவேண்டி, பைக்கை வேகமாக ஓட்டி வந்திருப்பான். விபத்து நடந்திருந்தால் என்னாவது’ என்று கோபம் வர,  

அவனின் ஒற்றை அணைப்பில், உண்டான கோபம் பனியென உருகியது. அவனின் நடுக்கம் கண்டவள், முதுகை நீவி விட்டு, தனக்கு ஒன்றுமில்லை என்க, அவன்‌ கேட்பதாக இல்லை. அவளை விடுவித்து விட்டு, கோபத்தில் என்னென்னமோ கத்தினான். 

“அதான் பிள்ளைங்க வீட்டுக்கு போய்டாங்கள்ல. நீயும் அவங்க கூடவே போயிருக்கலாம்ல. எதுக்கு இவ்ளோ சின்சியரா வேலை பாக்குற. நான் மேனேஜ்மென்ட் கிட்ட கம்ளைண்ட் பண்ணப் போறேன். ஒரு ஏற்பாடும் பண்ணாம உன்னை அம்போன்னு உக்கார வச்சிட்டானுங்கள்ல…” என்றவன் அப்போதே ஃபோனில் யாருடனோ காரசாரமான பேசினான்.

கூடவே அவசர நிலையில் உடன் இருக்க முடியாத தன் நிலையை வெறுத்தான்.

“முதல்ல அக்கா… அப்றம் அப்பா… என்னால இன்னொரு இழப்ப தாங்க முடியாது தன்யா. நீ, அம்மா, அதி, சரிகா இல்லாத வாழ்க்கைய என்னால நினைக்கவே முடியல.” என்றவனின், கன்னத்தைத் தன்‌ கரங்களுக்குள் தாங்கியவள், 

“ஒன்னுமில்ல… எல்லாரும் நல்லா இருக்கோம்.” என்று கண்களை ஆழ்ந்து பார்த்தபடி சொன்னாலும் அவனின் முகத்தில் தெளிவு பிறக்கவில்லை. 

எப்பொழுதெல்லாம் அவன் சந்தோஷமாக இருப்பதாக உணர்கிறானோ அப்பொழுதெல்லாம் ஏதாவது ஒன்று நிகழ்ந்து அவனின் சந்தோஷத்தைப் பறித்துச்‌ சென்று விடும்.

அதிதி பிறந்த சந்தோஷத்தைக் கொண்டாடி முடிக்கும் முன் ஜானின் விபத்து. அதிலிருந்து தெளிந்து வருவதற்குள் பவானி கோவித்துக் கொண்டு சென்றது. அடுத்து சீனிவாசனின் இழப்பு, சுதாவின் உடல் நிலை, அதிதியின் மனநிலை என்று வந்து கொண்டே இருந்ததால், அவனுக்கும் சந்தோஷத்திற்கும் தூரம் என்று நினைத்துக் கொண்டான்.

சமீப காலமாக சரிகா மற்றும் அதிதியுடன் மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருக்கும் அவனின் உலகிற்கு அச்சாணியான ரிதன்யாவையும் இழந்து விடுவோமோ என்ற பரிதவிப்பை அவனின் விழிகள் காட்டிக் கொடுக்க, கன்னம் தாங்கியிருந்த கையை வளைத்து, தன் குதிகாலை உயர்த்தி, அவனின் பரந்த நெற்றியில் இதழ் பதித்தாள். பின் மடைக்குள் தேங்கி நிற்கும் நீர் போல, உவர்நீர் கோர்த்து நின்ற விழிகள் ஒவ்வொன்றிற்கும் பாகுபாடு பார்க்காது இதழொற்றலைத் தந்தவள், அவனின் நெற்றி முட்டி, 

“அப்படிலாம் உங்கள பாதில விட்டுட்டு போக மாட்டேன். எங்கூர்ல இதை விட பெரிய பெரிய கலவரத்தையே பாத்திருக்கேன். அதுனால எப்படிப் பத்திரமா இருக்கணுங்கிறதுல எனக்கு அனுபவம் உண்டு.” என்றவளுக்கு பழைய வாழ்க்கை நினைவு வந்தது. 

ஆனால் அது முன் ஜென்மம். முடிந்த ஜென்மம் என்று தலையை உளுக்கி துரத்திவிட்டவள்,‌

“கடைசி வரை உங்க கூடவே இருப்பேன் பத்ரி. எதுவும் ஆகாது. நீங்க வொர்ரி பண்ணிக்காதீங்க ப்ளீஸ்…” என்க, அவளின் மதி முகத்தையே பார்த்தவன், சின்ன இடைவெளி விட்டு விலகி நின்ற அதரங்களைத் தன் உதடுகளுக்குள் புதைத்துக் கொண்டான். 

அன்று அவள் இதே வார்த்தையைச் சொல்லும் போதும் அவனுள் இதே எண்ணம் வந்தது உண்மை. ஆனால் அன்று உரிமையில்லாது, காதல் என்ற உணர்வில்லாது, இருக்கும் சூழ்நிலையைக் கொண்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவனால், இன்று முடியவில்லை. உரிமையோடு அவன் அணிவித்த தாலியுடன் தன் கண் முன்னேயே வளைய வருபவளைக் கண்டு பிரம்மச்சாரியம் காக்க முடியவில்லை. 

அன்று தோளைத் தொட்டதற்கே இறுக்கம் கொண்டு நின்றவள் அவள். 

இன்று சட்டென நடந்த நிகழ்வில் அவளின் தேகச் சிலிர்ப்பை அவனின் உடல் கண்டு கொண்டது. அது அவளின் விருப்பத்தை பறைசாற்ற, வேகம் கூடியது. ஆழ்ந்த இதழொற்றலுக்குள் சிக்கிக் கொண்டவர்களை, எங்கோ கேட்ட ஹாரன் சத்தம் பிரித்து விட்டது. 

அவனுக்கு அது எப்படியோ… 

ரிதன்யாவிற்குள் ஏகப்பட்டது தோன்றியது. தானா! அவனை முதலில் முத்தமிட்டது. தானா! அவன் நெற்றி முட்டி அவனின் உணர்வுகளோடு விளையாடியது. தானா! அவனின் முத்தத்தில் கிறங்கி நின்றது என்று எத்தனை தானா போட்டுப் பார்த்தாலும், முகம் வெட்கத்தில் சிவந்து போனது.‌

அது அவனின் முகம் பார்க்க விடாது கண்ணாமூச்சி விளையாட, தான் உடன் இல்லாது விளையாட்டா! என்பது போல் வந்து கலந்து கொண்டான், Flexible Schedule என்ற பெயரில் தன் பணி நேரத்தை மிகவும் குறைத்துக் கொண்டு. 

ஊதியம் குறையும் தான். ஆனால் அவர்களின் ஸ்டோரை விரிவுபடுத்தத் திட்டமிட்டான்.

இனியும் தன் குடும்பத்தை விட்டு தூர இருக்க மாட்டேன் என்று வந்து நிற்க, அது ரிதன்யாவிற்கு தான் அதீத சங்கடங்களைத் தந்தது. 

ஒரே வீட்டில் இருந்து கொண்டு அவனை எதிர்கொள்ள வெகுவாக சிரமப்பட்டாள். அதிலும் சரிகா, ஆனா உனா வென்றாலும் அப்பா அப்பா என்று அவன் வசமே சென்று அவளை பத்ரியின் முன் கொண்டு நிறுத்தினாள். 

சுதா கூட, “காலைல இருந்து பம்பரமா சுத்துறா… கூட மாட ஒத்தாச பண்ணேன்டா…” என்று இருக்கும் சின்னச் சமையலறைக்குள் தள்ளி விட்டுவார் மகனை. 

அவனை அண்மையில் வைத்துக் கொண்டு, அவ்வப்போது உரசிக் கொண்டும் சமைப்பது அவளுக்குள் தடுமாற்றத்தைத் தந்தது‌.

அவனும் அதை அவளிடம் எதிர்பார்த்தே செய்தான். இரவில் எத்தனை மணி நேரமானாலும் வராண்டாவில் அவளுடன் அமர்ந்து ஒரு கப் காபியை சுவைப்பதைப் பழக்கப்படுத்தினான். 

நேற்று அவளின் சம்பள நாள். இம்முறை சரிகாவின் உதவி இல்லாமலேயே ஒரு செட் உடையை அவனுக்குப் பரிசளிக்கத் தோன்றியது. 

அதை அவளே அவன் வசம் கொடுக்க,

“ஒன் மினிட்…” என்று வாங்க மறுத்தவன், தன் கபோர்டில் இருந்து ஒரு பெட்டியை எடுத்து வந்தான். அதில் இருந்தது பல சலங்கைகளைக் கொண்ட சால்ரா கொலுசு.

“அம்மாவ ஹாஸ்பிட்டல இருந்து டிஸ்சார்ஜ் பண்ணதுமே வாங்கிட்டேன். ஐ மீன் கல்யாணம் முடிவாகுறதுக்கு முன்ன. ஆனா குடுக்க முடியல. லைட்டா பயம்… என்ன நினைப்பியோன்னு. இப்ப பயம் இல்ல.” என்றவன் பட்டென அவளின் காலடியில் அமர்ந்து, அவளின் பாதத்தைத் தொடையில் வைத்து, காலில் அணிவித்து விட்டான். அதுமட்டுமல்ல வாழைத் தண்டென வளமான கணுக்காலைச் சூழ்ந்து கொண்டிருந்த சலங்கையைச் சுண்டி விட்டு விளையாடியவன், விளையாட்டின் முடிவில்,  தன் இதழொற்றி எடுக்க, உடலெங்கும் பூத்த மின்சாரத்தைக் காட்டாது பட்டென எழுந்து ஓடி விட்டாள். 

“இது அநியாயம். நான் குடுத்த பரிச போட்டு விட்டு நான் அழகு பாத்த மாதிரி. நீ குடுத்தத நீயே போட்டு விட்டு அழகு பாத்திருக்கணும். இப்ப வந்தா பாப்பியா?” என்று குறுஞ்செய்தி அனுப்ப, கன்னக் கதுப்புகள் சூடேற்றின. 

அதைக் குளிரவே விட மாட்டேன் என்பது போல், அவள் தந்த உடையை அணிந்து புகைப்படம் எடுத்து புலனத்தில் அவளுக்கு அனுப்பி வைத்தான். 

இதோ இப்பொழுது கூட கண்ணாடி வழியே தன் உணர்வுகளைப் படித்துக் கொண்டே வந்தவனைச் சிறு நாணச் சிரிப்புடன் ரசித்தாள்.

கள்ளத்தனம் காதலின் அடையாளம் அல்லவா…

அதிதியின் மாமாவாக, சரிகாவின் தந்தையாகப் பார்க்காது, முதல் முறை தன் கணவனாகப் பார்த்து  வைத்தாள். 

அதுவரை அவள் பத்ரியைக் கள்ளப் பார்வைக் பார்த்தது இல்லை. அனுபவம் அவளை எந்த ஆணையும் தள்ளியே நிக்க வைக்க பழக்கியது. முதல் முறை நெருங்கியது பத்ரி தான். நெருங்க அனுமதித்ததும் பத்ரியை மட்டும்தான். 

 

அவனுக்கும் அப்படித்தான் போலும். லூட்டி அடித்தபடியே மனைவியைப் பார்க்கிறான்.

கானம் இசைக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!