Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

25. Kala Palaniappan - காஃபி வித் காதல்

காஃபி வித் காதல் 29 Final

அத்தியாயம் 29

“பெரியம்மா ரெடியா?” என்று கேட்டுக்கொண்டே மீனா வீட்டிற்குள் வந்தாள் எழிலரசி.



Advertisement

“இதோ, ஆச்சு டா.. பாக்ஸ்ல பேக் பண்ணனும் அவ்வளவு தான்” என்று பரபரப்பாக கூறினார் மீனா.

அன்பரசிக்கு ஆண் குழந்தை பிறந்து இரண்டு நாட்கள் ஆகிறது. மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உணவை தயார் செய்து கொண்டிருந்தார் மீனா.

Advertisement

Advertisement

சாந்தியும் அருணும் மருத்துவமனையில் இருக்கிறார்கள்.

“நீங்க போய் குளிச்சிட்டு வாங்க பெரியம்மா, நான் எல்லாத்தையும் எடுத்து வைக்கிறேன்” என்று எழில் மீனா சமைத்திருந்த உணவுகளை அழகாக பேக் செய்தாள்.

Advertisement

அன்று அக்ஷ்யதிரிதியை என்பதால் ரேவதிக்கு அந்த வாரம் முழுவதும் லீவ் கிடைக்கவில்லை. அது மட்டுமில்லாமல் அந்த வாரம் காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணிவரையிலுமே அவர் வேலைக்கு செல்ல வேண்டியதாய் இருந்தது.

“நான் கூட நிக்க முடியலை அக்கா” என்று மிகவும் வருந்தினார் சாந்தியிடம்.

“ஆல்ரெடி ஓவர் டைம்னு கடையில வேலை பிழியறாங்க.. நீ வேற கவலை பட்டு உடம்புக்கு இழுத்து விட்டுக்காத ரேவதி. அன்பும் குழந்தையும் வீட்டுக்கு வந்தப்புறம் நீ பாரு.. சும்மா கண்டதையும் யோசிச்சு மனசை குழப்பிக்காதே” என்று சாந்தி அதட்டலிட்டு ரேவதியை சமாதான படுத்தி இருந்தார்.

எழிலின் காதல் விஷயம் தெரிந்த நாளிலிருந்து ரேவதி ஒரு வித மன அழுத்தத்தில் தான் இருக்கிறார்.

“சரவணன் தான் அவரை தேற்றிக்கொண்டிருக்கிறார். மகளிடமும், அம்மாவுக்கு இதை ஏத்துக்க டைம் ஆகும், நாம அவளுக்கு அந்த ஸ்பேஸை கொடுக்கணும் எழில்” என்று கூறி இருந்தார்.

ரேவதி தேவைக்கு மட்டுமே மகளுடன் பேசிக்கொண்டிருந்தார். எழிலுக்கு அதில் மிகவும் வருத்தம். இருந்தாலும் அமைதியாகவே இருந்தாள்.

இப்பொழுது அவள் தான் சாந்திக்கும் மீனாவுக்கும் துணையாக இருக்கிறாள். மீனாவை உணவுடன் மருத்துவமனையில் இறக்கிவிட்டு சாந்தியை வீட்டிற்கு அழைத்து வர கிளம்பி கொண்டிருக்கிறாள்.

இன்று அருணின் வீட்டில் இருந்து அனைவரும் குழந்தையை பார்க்க வருகிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை லாவண்யாவும் பாலுவும் செய்கின்றனர். லாவண்யாவிற்கு செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பழக்கம் இல்லை. ஆனால் எழில் அனைத்தையும் அழகாக திட்டமிட்டாள்.

என்ன வாங்க வேண்டும், எவ்வளவு வாங்க வேண்டும் என்று லிஸ்ட் போட்டு பாலுவிடம் கொடுத்தாள். லாவண்யாவிடமும், காலையில் எந்த எந்த வேலைகளை முதலில் செய்ய வேண்டும் என்று முதல் நாள் இரவே கூறி இருந்தாள்.

மீனா கிளம்புவதற்குள் லாவண்யாவிற்கு அழைத்து, “நான் அரை மணி நேரத்துல வந்துடுவேன் அண்ணி, நீங்க டென்ஷன் ஆகாம மெதுவா பாருங்க.. நான் வந்து உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்” என்று கூறினாள்.

“உங்க தங்கச்சசி சூப்பர் பாலன். என்னைவிட சின்ன பொண்ணு தானே, ஆனா எப்படி அழகாக எல்லாத்தையும் ஹாண்டில் செய்றா?” என்று கணவரிடம் ஆச்சர்யமாக கூறினாள்.

“அது அவ சின்ன வயசுல இருந்தே அப்படித்தான். எல்லார் மேலயும் அக்கறையா இருப்பா.. எல்லார் கூடவும் பிரியமா பழகுவா. எல்லாருக்கும் என்ன தேவைன்னு பார்த்திட்டே இருப்பா.. நாங்க எல்லாம் அவளை நாட்டாமைன்னு தான் கூப்பிடுவோம்..”

“நாட்டம்மைன்னு எல்லாம் ஏன் கூப்பிடறீங்க? எழில் ரொம்ப நல்ல பொண்ணு தெரியுமா?”

“இங்க பார்றா.. எனக்கே சொல்ற நீ.. சரி சரி.. சீக்கிரம் வேலையை பார்ப்போம் லயா.. அவங்க வந்திட போறாங்க.”

“சரி பாலன்..”

இப்படியாக அன்பரசியும் குட்டி பையனும் அடுத்த இரண்டு வாரங்கள் அனைவரையும் பிசியாக வைத்திருந்தார்கள்.

அன்று ஞாயிற்று கிழமை. எழிலும் தமிழும் டிவி பார்த்து கொண்டிருந்தார்கள்.

சரவணன் பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். ரேவதி காலை உணவிற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.

“ஏங்க உங்க பொண்ணு கிட்ட கேட்டு சொல்லுங்க, நான் ரத்னாகிட்ட கல்யாண பேச்சை எடுக்கவா? இல்லை அவளே பேசிப்பாளான்னு” என்றார் ரேவதி உள்ளிருந்து.

எழிலரசி கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்து.

தமிழுக்கு அக்காவை பார்த்தால் பாவமாக இருந்தது. சரவணனுக்கு கூட மகளின் கலங்கிய முகம் மனதிற்கு கஷ்டமாக இருந்தது. மூவரும் அமைதியாகவே இருந்தார்கள்.

“கேட்கிறது காதுல விழுதா இல்லையா?” என்று சுருதியை ஏற்றினார் ரேவதி.

“எனக்கு கார்த்தியை பிடிச்சிருக்கு ப்பா. பிடித்தம் எப்ப எப்படி வந்துச்சுன்னு எல்லாம் எனக்கு தெரியலை. அதுக்காக நானா போய் கல்யாணம் பேசி செஞ்சுக்குவேனா? நான் என்ன அவ்வளவு கெட்ட பொண்ணா ப்பா“ என்று அப்பாவிடம் கேட்கையில் அழ ஆரம்பித்து விட்டாள் எழில்.

மகள் அழுதால் அப்பாவால் தாங்கிக்க முடியுமா..

“அம்மா கோவத்துல பேசுறா.. விடுடா.. அப்பா பேசுறேன்.. நீங்க ரெண்டு பேரும் குளிச்சிட்டு கோவிலுக்கு போய்ட்டு வாங்க” என்று மகள்களை கோவிலுக்கு அனுப்பிவிட்டு மனைவியிடம் வந்தார்.

ரேவதியின் மூக்கும் அழுகையை அடக்கி அடக்கி சிவந்து போயிருந்தது.

“முதல்ல, யார் என்ன நினைப்பாங்க.. என்ன சொல்லுவாங்கன்னு நினைக்கிறதை விட்டுட்டு நம்ம பொண்ணுக்கு இது சரியா.. அவ சந்தோசமா இருப்பாள்ன்னு பார்க்கணும் ரேவஸ்..”

“ம்ம்..”

“சும்மா எதுக்கு வார்த்தையை விட்டுட்டு அவளும் கஷ்டப்பட்டு நீயும் கஷ்டப்பட்டு..”

“ம்ம்ம்ம்”

“இப்ப என்ன செய்யலாம் சொல்லு. இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பம் இல்லைன்னா சொல்லிடு. நான் எழில் கிட்ட பேசுறேன். இந்த காதல் வேண்டாம்னு எடுத்து சொல்றேன்”

“அப்படி எல்லாம் சொன்னா மனசை மாத்திக்க மாட்டா..”

“அவ என்ன செய்வான்னு அப்புறம் பார்ப்போம்.. உனக்கு என்ன வேண்டும்?”

“கார்த்தி நல்ல பையன் தான். எனக்கு அவனை எப்பவுமே ரொம்ப பிடிக்கும். பொறுப்பானவான்.. அவன் கிட்ட குறை எல்லாம் இல்லை. என்ன, எனக்கு ஒரு சின்ன உறுத்தல் இருந்துட்டே இருக்கு மனசுக்குள்ள”

“அது எனக்கும் தான் இருக்கு. அதை ஒதுக்கி வச்சிட்டு தான் மேலே யோசிக்கணும். அந்த உறுத்தலுக்கு காலம் தான் மருந்தாகும். இப்ப முழு மனசா நாம் இந்த கல்யாணத்தை நடத்தி முடிக்கணும். அப்ப தான் எழிலும் சந்தோசமா இருப்பா ம்மா”

பேசி பேசி ஒரு வழியாக ரேவதியை சமாதானம் செய்து வழிக்கு கொண்டு வந்திருந்தார் சரவணன்.

பின் அவரே மகளிடம், “கார்த்தி அம்மாக்கு விஷயம் தெரியுமா?” என்று கேட்டார்.

“இல்லப்பா இன்னும் சொல்லலை. நீங்க ஒத்துக்கிட்டதும் சொல்லிக்கலாம்னு இருந்தோம்”

“சரி, நாங்க அவங்க கிட்ட இந்த வாரம் பேசலாம்னு இருக்கோம். அதுக்குள்ள சொல்லிடுங்க” என்றார்.

எழில் சரி என்று அப்பாவிடம் பதில் கூறினாலும், அம்மாவையே திரும்பி திரும்பி பார்த்தாள்.

“ரொம்ப ஒன்னும் அப்பாவி மாதிரி என்னை பார்த்து வைக்காத.. எனக்கும் ஓகே தான்..” என்றார் உர்ரென்று.

எழில் எழுந்து வந்து அம்மாவை கட்டி அனைத்து கொண்டாள். “இப்ப தான் ம்மா உர்ருன்னு அழகா இருக்க” என்று கூறி அவர் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.

————

கார்த்தியிடம் விஷயத்தை கூறி ரத்னாவிடம் அவர்களை பற்றி கூற சொன்னாள்.

அன்று இரவு உணவு முடிந்ததும் கார்த்தி,

“உங்க ரெண்டு பேர் கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்” என்றான் அம்மாவிடமும் தம்பியிடமும்.

“சொல்லு டா” என்றார் ரத்னா சாப்பிட்டவற்றை ஒதுங்க வைத்து கொண்டே.

“நீ வேலையை முடிச்சிட்டு வாம்மா..” என்று சென்று ஹாலில் அமர்ந்து கொண்டான்.

பத்து மிடத்தில் ரத்னாவும் விக்கியும் சோபாவில் அமர்ந்து கார்த்தியை ‘இப்ப சொல்லு’ என்று பார்த்தனர்.

கார்த்தி ஒன்றும் பேசாமல் குறுக்கும் நெடுக்கும் ஐந்து நிமிடங்கள் நடந்தான்.

“என்ன கார்த்தி சொல்லு..” என்றார் ரத்னா..

“இருங்க ம்மா நான் போய் தண்ணி குடிச்சிட்டு வரேன்” என்று சென்று இரண்டு டம்பளர் தண்ணீர் குடித்து வந்தான்.

வந்தவன் மீண்டும் குறுக்கும் நெடுக்கும் நடந்தான்.

“என்ன அண்ணா.. எதுக்கு இப்படி நடந்துட்டு இருக்க?”

“அது வந்து விக்கி.. அது வந்து ம்மா..” சொல்லும் பொழுது நாக்கு வறண்ட மாதிரி இருந்தது.

“இருங்க தண்ணி குடிச்சிட்டு வரேன்” என்று மீண்டும் சென்று இரண்டு டம்பளர் நீர் அருந்தி வந்தான்.

அவனுக்கு வேர்த்து வழிந்தது.

“என்ன அண்ணா செய்யுது, உடம்பு சரி இல்லையா? ஏன் இப்படி வேர்குது உனக்கு?” என்று சென்று பேஃன் ஸ்பீடை அதிகம் வைத்தான்.

“அது எல்லாம் இல்லை டா..” என்று சென்று அம்மாவின் அருகில் அமர்ந்தான்.

பின், “அது வந்து ம்மா..” என்று ரத்னாவின் காலடியில் அமர்ந்தான்.

“சொல்லு கார்த்தி.. எதுக்கு இப்படி டென்ஷனா இருக்க?”

“நான் சொல்றதை கேட்டு என்னை தப்பா நினைக்க கூடாது ம்மா..”

“அது எல்லாம் என் புள்ளையை நான் எப்பவுமே தப்பா நினைக்க மாட்டேன் டா..”

“அது வந்து ம்மா.. மறுபடியும் நாக்கு வறண்ட மாதிரி இருக்கு.. இருங்க நான் போய் தண்ணீர் குடிச்சிட்டு வரேன்” என்று எழ போனவனை பிடித்து அமர வைத்தார் ரத்னா.

“ஏற்கனவே இரண்டு லிட்டர் தண்ணீ குடிச்சாச்சு.. “

“ம்மா..”

“ஏன்டா.. அம்மா நான் ஒரு பொண்ணை காதலிக்கிறேன்னு சொல்ல எதுக்கு டா இப்படி தடுமார்ற ?”

“ம்மா.. உங்களுக்கு எப்படி தெரியும்?”

“மொசபிடிக்கிற நாய் மூஞ்சிய பார்த்தா தெரியாதுன்னு சொல்ற மாதிரி.. உன் மூஞ்சிய பார்த்தாலே தெரியுது டா” என்றார் ரத்னா சிரித்து கொண்டே.

தம்பியை பார்த்தான்.. அவனும் ‘நானும் இதை தான் எதிர்பார்த்தேன்’ என்பது போல கூலாக அமர்ந்திருந்தான்.

“பொண்ணு யாருன்னா..” என்று கார்த்தி தலையை சொரிந்து கொண்டே ஆரம்பிக்க..

“நம்ம எழிலரசி தானே?” என்றார் ரத்னா.

‘ஆங்’ என்று வாய் பிளந்து நின்றுவிட்டான் கார்த்தி.

“ஏன்டா.. என்னை பார்த்தா அவ்வளவு அம்மாஞ்சி மாதிரியா இருக்கு. அந்த பிள்ளையை பார்க்கும் போது உன் முஞ்சியில தான் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரியுதே.. என்னமோ சாமிய பார்த்த மாதிரி பரவசமா இல்ல பார்க்கிற அந்த பிள்ளையை.. அதை பார்த்தது கூடவா எனக்கு தெரியாம போகும்?”

“அப்புறம் நீ ஒன்னும் சொல்லல?”

“நீயா சொல்றதுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.”

“உனக்கு ஓகேவா ம்மா?”

“தங்கமான பிள்ளை கார்த்தி.. அதைவிட இந்த காலத்துல அவங்க குடும்பம் மாதிரி எல்லாம் பார்க்கவே முடியாது. எனக்கு மனப்பூர்வமான சம்மதம் டா..”

கார்த்தி அப்படியே அம்மாவின் மடியில் தலை சாய்த்து கொண்டான்.

“டேய் விக்கி உனக்கு?” என்று திரும்பி தம்பியை பார்த்தான்.

“எனக்கும் ஓகே தான் அண்ணா.. எழில் அக்கா எனக்கு அண்ணியா வந்தா சூப்பர் அண்ணா.. ரொம்ப ரொம்ப ஹாப்பி.. “ என்றான் விக்கி அண்ணனின் கைகளை இறுக்கமாக பிடித்து கொண்டு.

மறு நாள் காமாட்சி அம்மா சுந்தரேசனிடம் நேரில் சென்று விஷயத்தை கூறினார் ரத்னா. “நீங்க தான் முன்ன நின்னு பேசணும்” என்று கேட்டு கொண்டார்.

காமாட்சி அம்மா மூலமாக தான் எழில் வீட்டுடன் சம்பந்த பேச்சை ஆரம்பித்தார் ரத்னா. காமாட்சி மூலம் பேச்சு வார்த்தைகள் நடைபெறவே அனாவசிய கேள்விகள் எதுவும் எழவில்லை. அதிலே ரேவதியின் பதற்றம் குறைந்து போனது.

ரத்னாவின் பெற்றோர், உடன் பிறப்புக்கள் எல்லோருக்கும் அழைத்து விஷயத்தை கூறினார் ரத்னா.

“என் கல்யாணம் தான் யாருமில்லாமல் நடந்தது. கார்த்தி கல்யாணத்தை நீங்க எல்லாம் வந்து சிறப்பா செஞ்சு கொடுக்கணும்” என்று கேட்டு கொண்டார்.

அடுத்து வந்த சுபமுகூர்த்தத்தில் கார்த்திகேயன் எழிலரசி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

கண்ணன் வீட்டு ஆட்களாக காமாட்சியும் சுந்தரேசனும் முன்னின்றார்கள். தாய்மாமன்களாக ரத்னாவின் அண்ணனும் தம்பியும் சபை நிறைய எல்லாம் சிறப்பாக செய்தனர். ரத்னாவின் அப்பா அம்மா முன்னின்று அனைத்தையும் எடுத்து கட்டிச்செய்தார்கள். அண்ணி, தம்பி மனைவி, அக்காக்கள், அவர்கள் குடும்பம், பிள்ளைகள் என்று சொந்தங்கள் நிரம்பி இருந்தனர்.

ரிச்சர்டும் நந்திதா மேம்மும் இவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.

“நம்ம கார்த்தி கல்யாணத்துக்கு எல்லாரும் நம்ம கூட இருக்காங்க பார்த்தீங்களா? எத்தனை பேர் பாருங்க கண்ணத்தான்..” என்று மனதிற்குள் கணவனுடன் பேசிக்கொண்டிருந்தார் ரத்னா. நாகரத்னாவிற்கு கணவனின் நினைவில் கண்கள் கலங்கி போயின. “சீக்கிரம் என் கிட்டே வந்திடுங்க கண்ணத்தான். கார்த்தி பையனா என் கிட்டவே வந்துடுங்க..” என்று வேண்டி கொண்டார்.

அவர் உணர்ச்சி வசமாக இருப்பது தெரிந்து அம்மாவுடனே இருந்தான் விக்கி.

—————-

பெண் வீட்டில் எப்பொழுதுமே அனைவரும் ஒன்றாக தானே இருப்பார்கள். இப்பொழுதோ அவர்கள் வீட்டு பெண்ணரசியின் கல்யாணம். ஏற்பாடுகளை எல்லாம் ப்ரமாதமாக செய்திருந்தார்கள். பாலு, குகன், தமிழ் மூருவரும் ஓரிடத்தில் நிற்கவில்லை. பம்பரமாக சுழன்று அனைவரையும் கவனித்தார்கள்.

அன்பரசி கவியரசி அவர்கள் குடும்பம், குழந்தைகள் என்று ஒரு பக்கம் கலகலப்பாக இருந்தது.

அப்பாக்கள் மூவரும் வழக்கம் போல விஜயனை கவனிக்க அவரோ, “காப்பாத்த எழில் கூட இங்க இல்லையே” என்று மகிழ்ச்சியாக நொந்துகொண்டார்.

 எழிலரசிக்கு தான் அத்தை இல்லையே என்று வருத்தம். “நீ மட்டும் என்கூட இல்ல அத்தை.. நீ சொன்ன மாதிரி சீக்கிரமா எனக்கு பொண்ணா வந்து பொறக்கணும் சரியா..” என்று மனதினுள் அத்தையிடம் பேசிக்கொண்டாள்.

பொன்தாலி கழுத்தில் ஏற தன் அன்புக்குரிய பாஸ்சுக்கு முழு அதிகாரத்துடன் பாஸாக மாறினாள் எழிலரசி. ஆசையாக காதலாக ஜில்லென்று தன ஜில்லுவின் கரம் பிடித்தான் கார்த்திகேயன்.

சுற்றமும் நட்பும் வாழ்த்து கூற சீரும் சிறப்புமாக நடந்தது கார்த்திகேயன் எழிலரசியின் திருமணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!