Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

14. விர்சாலி - மீண்டும் கேட்குமா பூபாளம்

மீண்டும் கேட்குமா பூபாளம் எபிலாக்

எபிலாக்

அந்த ஊரின் கல்யாண மண்டபம் ஆடம்பரமாக அலங்காரிக்கப்பட்டு ஊர் மக்களால் நிரம்பி வழிந்தது.



Advertisement

துர்க்காவிற்கும் அஞ்சனாவிற்கும் ஒரே மேடையில் வளைகாப்பு.

ஆம் வாழ தகுதி இல்லாதவள் என்று சொல்லப்பட்டவளுக்கும்

Advertisement

Advertisement

குழந்தை பிறக்காது என்று ஒதுக்கி வைக்கப்பட்டவளுக்கும்

ஊர் மெச்ச வளை பூட்டும் விழாவை நடத்த இருக்கின்றனர் அவர்களின் நாயகர்கள் .

Advertisement

மஞ்சள் நிறத்தில் உடலை உருத்தாத மென்பட்டு சேலை உடுத்தி, ஏழு மாத மேடிட்டு வயிற்றுடன் துர்க்கா பரணியின் கையைப் பிடித்துக் கொண்டு மேடைக்கு வர

மேடையின் மற்றைய பக்கம் இருந்து நாவல் நிறத்தில் மென்பட்டு உடுத்தி, தன் ஏழு மாத மேடிட்ட வயிற்றில் ஒற்றை கையையும், தன் காதல் கணவன் பிரபாகரன் கையோடு மற்ற கையையும் கோர்த்துக்கொண்டு மேடை ஏறினாள் அஞ்சனா.

பரணியும் பிரபாகரனும் விழாவின் நாயகிகள் இருவரையும் அவர்களுக்காக போடப்பட்டிருந்த இருக்கையில் அமர வைத்து விட்டு, ஆசை தீர ரசித்துப் பார்த்தனர்.

கண்ணாளன்கள் கண் பார்வை போதுமே காரிகைகளின் கன்னங்கள் ஜொலிக்க, தாய்மை அழகோடு தங்க தேர் என அமர்ந்து இருந்தனர் இரு பதுமைகளும்.

காதல் கிளிகள் இந்த நாளில் கனவுலகை விட்டு வெளியே வரப் போவதில்லை என்பதை உணர்ந்த, அங்கு இருந்த வயதான ஒரு பெண்மணி “எப்பா நேரம் போகுது உங்க பொண்டாட்டிக்கு வளைகாப்ப முடிச்சிட்டு அடுத்த விஷயத்த பாக்க வேணாமா…” என்று கேட்க

சரி ஆரம்பிக்கலாம் என்று சொன்ன பிரபாகரன் கண்களால் கூட்டத்தை துலாவ, இளஞ்சிவப்பு நிற புடவையில் ஜொலித்துக் கொண்டிருந்த நித்தியா, கணவனுடன் வந்திருந்த தர்ஷனாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.

மேடையில் அஞ்சனாவின் பெற்றோர் நித்தியாவின் தந்தை ராஜாகண்ணு என்று அனைவரும் இருக்க, அவன் தம்பியை மட்டும் மண்டபத்தின் எந்த மூலையிலும் காணவில்லை.

அவன் எப்படி மண்டபத்தில் இருப்பான், அவன் தான் அந்த மண்டபத்தின் ஒரு அறையில் வேஷ்டி கூட கட்டாமல் ஷோட்ஸூடன் இரண்டு குட்டி தேவதைகளுடன் போராடிக் கொண்டிருக்கின்றானே.

ஆம் பெண் குழந்தை வேணும் என்று கேட்டதற்கு ஒன்றுக்கு இரண்டாக பெற்று கொடுத்திருந்தாள் நித்தியா.

குழந்தைகளுக்கு இப்போது மூன்று மாதங்கள். இன்னமும் குழந்தைகள் இருவருக்கும் பெயர் சூட்டவில்லை, இதுதான் பெயர் என்று முடிவு செய்து வைத்தாலும், பெயர் சூட்டு விழாவை பெரிய வைபோகமாக செய்ய வேண்டும் என்பதற்காக காத்திருந்து, இதோ வளைகாப்போடு சேர்த்து அந்த குட்டி தேவதைகள் இருவருக்கும் இன்று பெயர் சூட்டு விழா.

இரட்டை குழந்தைகள், அதுவும் அவனுக்கு பிடித்த பெண் குழந்தைகள் என்றதும் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தவன், இப்போது இன்பமான அவஸ்தையை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.

நீதானே பெண் குழந்தை கேட்டாய், ஒன்றுக்கு இரண்டாக பெற்று கொடுத்துவிட்டேன் பார்த்துக்கொள் என்பது போல் நித்தியா குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை கிருபாகரனிடம் தள்ளிவிட்டாள்.

அவளும் எவ்வளவு தான் சமாளிப்பது, ஒரு குழந்தைக்கு பால் கொடுக்கும் போது மற்றொரு குழந்தை அழும், சமாளிக்க முடியாமல் புட்டியில் பாலை எடுத்து கிருபாகரன் கையில் கொடுத்து விடுவாள், நீயாவது உன் பொண்ணாவது என்று.

அவனும் வெளியே அழுத்துக் கொள்வது போல் காட்டிக்கொண்டாலும், குழந்தைகளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்வான்.

அதனால் அந்த சின்ன வாண்டுகள் இரண்டுக்கும் தந்தை தான் வேண்டும். இப்போதும் நித்தியா இருவரையும் உடைமாற்றி விழாவிற்கு தயார்படுத்த முயற்சிக்க, அவளது இரண்டு மகள்களும் தந்தை தான் வேண்டும் என்று அடம் பிடிக்க, அவனிடமே விட்டுவிட்டு நித்தியா கழண்டு கொண்டாள்.

இதோ ஒரு குட்டிக்கு உடைமாற்றி விட்டால் மற்றைய குட்டி போட்டிருந்த உடைய ஈரம் செய்து விட்டாள்.

அந்த குட்டிக்கு சுத்தம் செய்து வேறு உடை மாற்றி விட, இந்த குட்டி தாயிடம் குடித்திருந்த பாலை உடையில் வாந்தி எடுத்து விட்டாள்.

இது எப்போதும் நடப்பது தான் என்பதால் அந்த குட்டியையும் சுத்தம் செய்து, தோளில் போட்டு தட்டிக் கொடுத்து, அதன்பின் உடை மாற்றி என்று அவன் பாடு திண்டாட்டம் தான்.

பிரபாகரன் நித்தியாவிடம் “நித்தி கிருபா எங்க?…” என்று கேட்க

“ரூம்ல இருப்பாரு மாமா.. குழந்தைகள ரெடி பண்ணி எடுத்துட்டு வாரேன்னு சொன்னாரு.. நான் என்னன்னு பாக்கிறேன்…” என்றவள்

அறைக்கு வந்து பார்க்க, குழந்தைகள் இருவரையும் தயார் செய்தவன் களைத்துப் போய் பாவமாக மனைவியை பார்க்க, உதட்டுக்குள் சிரித்துக் கொண்டவள்

“வளையல் போடப் போறாங்க.. மாமா உங்கள தேடுறாங்க வாங்க…” என்று சொல்ல

“நித்தி முடியலடி.. டயர்டாகிட்டேன் நீயே எனக்கு வேட்டி கட்டி விடேன்…” என்று கேட்க

“ஆசதான்.. ஒருத்திய நான் தூக்கிட்டு போறேன்.. மத்தவள தூக்கிட்டு வந்து சேருங்க…” என்ற நித்தியா ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு செல்ல, கிருபாகரனும் வேஷ்டி கட்டி ரெடியானவன் மற்ற குழந்தையுடன் மேடைக்கு வந்தான்.

அப்போது மண்டபத்தின் உள் நுழைந்தார் சகுந்தலா. கூடவே இருபது வயதில் சின்ன சிட்டாக அழகிய பெண் ஒருத்தியும், ஐந்து வயது குழந்தையின் மனநிலையுடன் உலகம் அறியாத 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும்.

சகுந்தலா நெற்றியில் வட்ட பொட்டு வைத்து, நீல நிற சேலையில் தலையை முடியை கொண்டை போட்டு அதில் பூவை சுற்றி இருந்தார்.

அவரின் இரு பக்கமும் அந்த இளம் பெண்ணும், அந்த வயதான ஆணும் அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு வர, அதை பார்த்த கிருபாகரன் பிரபாகரனிடம் “அண்ணா அத்த வாறாங்க…” என்று சொல்ல

அவனும் அவர்களை நோக்கி சென்று, வரவேற்று முன் இருக்கையில் அமர வைத்தான்.

“வரமாட்டேன்னு சொன்னீங்க.. ஆனா நீங்க வந்தது சந்தோஷம் அத்த…” என்று பிரபாகரன் சொல்ல

“நீ எனக்கு தந்த மன்னிப்பு, என் வாழ்க்கைய எவ்வளவு மகிழ்ச்சியா வச்சு இருக்குனு நான் காட்ட வேணாமா.. அதுக்காகத்தான் வந்தேன்…” என்று சொன்னார் சகுந்தலா.

ஆம் சகுந்தலா விரக்தியின் உச்சத்தில் ஆதி சிவன் ஆசிரமத்தில் நாட்களை கடத்திக் கொண்டிருக்க, அங்கு சென்ற இரண்டு நாட்களில் இருந்து இந்த தந்தையும் மகளும் அவர் பார்வையில் விழுந்தனர்.

பால் மணம் மாறாத அந்த பெண்தான் தன் தந்தையை குழந்தை போன்று பார்த்துக் கொண்டாள். அவளது வெள்ளை மனம் இவரிடமும் அன்பை காட்ட ஆரம்பித்தது, தனியாக அமர்ந்து சாப்பிடும் சகுந்தலாவுடன் அவளும் தந்தையை கூட்டிக்கொண்டு வந்து இணைந்து கொள்வாள்.

எப்போதும் தனிமை சகுந்தலாவை அண்ட விடாமல் கூடவே இருந்தாள். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போன போது கூட பெற்ற தாயைப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டாள்.

விரக்தியில் வெதும்பி இருந்த சகுந்தலாவின் மனது அந்த சிறியவளின் அன்பினால் கொஞ்சம் கொஞ்சமாக புத்துயிர் பெற ஆரம்பித்தது.

உள்ளுக்குள் ரணமாக இருந்த காயங்கள், தேவையில்லாமல் மண்டி கிடந்த வன்மங்கள் எல்லாம் அந்த சிறியவளின் மழலை சிரிப்பில் காணாமல் போனது.

சகுந்தலாவும் அவள் மீது தன் சொந்த பொண்ணை போல் பாசத்தை வைக்க தொடங்கினார்.

அவள் ஆதினி, அவள் தந்தை கணேசன் மனவளர்ச்சி குறைந்தவர். அவரையும் நேசித்து அவர் அத்தை மகளான துளசி திருமணம் செய்து, இன்பமாக வாழ்ந்தனர். அவர்கள் வாழ்வின் அடையாளமாக பிறந்தவள் தான் ஆதினி. அவளின் 15 வயதில் துளிசி விபத்து ஒன்றில் இறந்து விட, குமரியவள் குழந்தை தந்தைக்கு தாயாய மாற வேண்டிய சூழ்நிலை.

ஆனால் இந்த சமூகத்தின் சில விஷ களைகள் அவர்களை நிம்மதியாக வாழ விடவில்லை. பெண் பிள்ளைக்கு பாதுகாப்பு இல்லை, கணேசன் துளசி திருமணத்திற்கு வீட்டினர் எதிர்ப்பு என்றதால் உறவினர்கள் யார் என்பது ஆதினிக்கு தெரியாது.

அந்த நேரத்தில் உதவியது பிரபாகரன் தான். அவன் தான் அவர்களை ஆதிசிவன் ஆசிரமத்தில் சேர்த்து விட்டு, ஆதினியின் படிப்பு செலவையும் பார்த்துக் கொள்கின்றான்.

என்ன தான் சகுந்தலா துர்க்காவிற்கு நல்லது நடக்க கூடாது என்று நினைத்திருந்தாலும், அவரை எப்படியோ போ என்று பிரபாகரனால் விட முடியவில்லை.

எனவே மாதம் ஒருமுறை அவரை ஆசிரமத்திற்கு சென்று பார்த்து விட்டு தான் வருவான். அப்போதெல்லாம் சகுந்தலா ஆதினி, கணேசனுடன் இணக்கமாக, உள்ளார்ந்த அன்போடு பழகுவதை கவனித்தவன், ஒரு முடிவுக்கு வந்து அடுத்த தடவை பரணியோடு சென்றான்.

எப்போதும் போல் தந்தையும் மகளும் கொஞ்சிக் கொள்வதை ஆசையாக பார்த்திருந்தார் சகுந்தலா. அவரின் அருகில் அமர்ந்தவன் “நீங்க நினைச்சா அவங்க கூட சேர்ந்து ஒரு அழகான குடும்பத்த அமைச்சுகிட்டு சந்தோஷமா வாழ முடியும்…” என்று சொல்ல

அவனை திரும்பி யோசனையாக பார்த்தவர் “என்ன சொல்ற?…” என்று புரியாமல் கேட்க

“ஆதினிக்கு அம்மாவா.. கணேசன் என்றவரோட மனைவியா.. அழகான குடும்பமா வாழலாமே…” என்று சொல்ல

“பைத்தியம் மாதிரி உளராத பிரபா…” என்று சகுந்தலா கடிந்து கொள்ள

“நான் தப்பா சொல்லல அத்த.. ஆதினிக்கு அம்மா வேணும்.. கணேசன் ஐயா வேற ஒரு குழந்த அவர பாத்துகிறதுக்கு ஒருத்தவங்க வேணும்.. அவங்க ரெண்டு பேருக்கும் இது நம்ம குடும்பம் என்ற நினைப்பு கொடுக்க ஒரு குடும்ப தலைவி வேணும்.. உங்களுக்கு என் புருஷன், என் பொண்ணு, என் குடும்பம்னு வாழ ஆசை இல்லையா.. இப்பதான் உங்களுக்கு 47 வயசு.. நீங்க நினைச்சா அடுத்து வரப்போற நாட்கள அர்த்தமானதா மாத்தலாம்.. இன்னும் கொஞ்ச நாள் தானே நீங்க ஆசைப்பட்ட மாதிரி வாழுங்க…” என்று சொல்லி

தயங்கி, மறுத்து, தவித்தவரை பேசி சம்மதிக்க வைத்து, கோயிலில் எளிமையாக கணேசனையும் சகுந்தலாவையும் மாலை மாற்றிக் கொள்ள வைத்து, ஒரே கும்பமாக இணைத்து விட்டான்.

பரணி “உன் கிட்ட இத எதிர்பாக்கல…” என்று சொல்ல

“எந்த குடும்பம் என் தங்கச்சிக்கு கிடைக்கக்கூடாதுனு நினைச்சாங்களோ அதே அழகான குடும்பத்த அவங்களுக்கு கொடுத்து இருக்கேன்.. இதுதான் நான் அவங்களுக்கு கொடுக்குற தண்டனை…” என்று சிரித்துக் கொண்டே சொல்ல

நண்பனை மனதில் மெச்சிக் கொண்டான் பரணி.

இப்போது அந்த இரண்டு ஜீவன்களும் சகுந்தலாவின் பொறுப்பு. அவரும் இதற்கு முன் இருந்த எந்த உறவுகளையும் தன் அருகில் சேர்த்துக் கொள்ளவில்லை.

ஆதினியுடன் அவர்கள் வீட்டிலேயே அவளுக்கு அம்மாவாகவும், கணேசனுக்கு துணையாகவும் இருக்கின்றார்.

பழைய நினைவில் இருந்த பிரபாகரனை “பிரபா!…” என்று மேடையில் இருந்து பரணி அழைக்க அவனும் மேடைக்கு சென்றான்.

அதன் பின் சடங்குகள் ஆரம்பமாக, பெண்கள் இருவருக்கும் கன்னங்களில் சந்தனம் பூசி, நெற்றியில் பொட்டு வைத்து, கை நிறைய கண்ணாடி வளையல்கள் போட்டு, அர்ச்சனை தூவி ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.

பரணி பிரபாகரன் இருவரும் ஒன்று போல் ஒற்றை காலை மடக்கி அமர்ந்தவர்கள், தங்கள் மனம் கொய்தவர்களின் பூங்கரத்தை பற்றி, கண்ணாடி வளையல்களுடன் தங்க வளையல்களும் அணிவித்து விட்டு, தங்கள் வாரிசை சுமக்கும் மணி வயிற்றில் முத்தம் வைக்க, அழகான கவிதையாக இருந்தத அந்த காட்சி. அதை தவற விடாமல் படம் பிடித்துக் கொண்டான் புகைப்பட கலைஞன்.

வளைகாப்பு வைபோகம் முடிய, கிருபாகரனின் இரண்டு குட்டி தேவதைகளுக்கும் பெயர் சூட்டும் விழா. நொடி நேரத்தில் மேடையை அதற்கு ஏற்றது போல் வடிவமைத்து விட்டன மூன்று ஆண்களும்.

ஒரு குழந்தையை பரணி துர்க்காவும்

மற்ற குழந்தையை பிரபாகரன் அஞ்சனாவும் என்று இருவரையும் தனி தனியாக பூக்களால் அலங்காரிக்கப்பட்ட தொட்டியில் படுக்க வைத்தனர்.

“குழந்தைங்க காதுல மூன்று முறை பேர சொல்லுங்க…” என்று சொல்ல

மூத்தவள் திகழினி,

இளையவள் தீர்த்திகா என்று இரு குழந்தைகள் காதிலும் மூன்று முறை கூறப்பட்டது.

ஊரில் உள்ள அத்தனை பேரின் கண்களை நிறைத்த விழாவை காண முடியாமல் போனது முருகானந்தம் பிரேமாவதி தம்பதிகளால் மட்டுமே.

அவர்கள் வம்சம் வளர்கின்றது. ஆனால் அவர்கள் மட்டும் அனாதையாக. முதுமையில் தனிமை கொடுமைதான் போலும் அதை அவர்கள் உணர்ந்து கொண்ட தருணம் அது.

******

நாட்கள் அழகாக செல்ல, அடுத்தடுத்து வந்த நாட்களில் துர்க்காவிற்கும் அஞ்சனாவிற்கும் ஆண் குழந்தைகள் பிறந்தது.

பரணி துர்க்காவின் மகனுக்கு பிரபவன் என்றும்

பிரபாகரன் அஞ்சனாவின் மகனுக்கு யுதிஷ்டிரன் என்றும் பெயர் சூட்டப்பட்டது .

******

இன்று பிரபவன், யுதிஷ்டிரன் இருவருக்கும் மொட்டை அடித்து காது குத்தும் வைபோகம்.

நித்தியா அதற்காக தயாராகி கொண்டிருக்க, கிருபாகரன் “கண்ணுகுட்டி எங்க?…” என்று அவளிடம் கேட்க

“கண்ணு குட்டியா?.. எந்த கண்ணு குட்டி?…” அவள் புரியாமல் கேட்க

“ஹா, உன் அப்பாவ தான்…” என்று கிருபாகரன் சொல்ல

அவள் அவனை முறைத்துப் பார்க்க, “என்ன முறைக்கிற.. உன் அப்பா பேர் ராஜாகண்ணு தானே…” என்று கேட்க

“ராஜான்னு சொல்ல வேண்டியதுதானே…”

“அதெல்லாம் முடியாது.. கண்ணு குட்டினு தான் கூப்பிடுவேன்…”

“ஏங்க அவர் உங்க மாமனார்.. அவர் கிட்டயே வம்பு பண்ணுவீங்களா?…”

“பின்ன என்னடி.. மாட்டுப்பண்ணைய கவனிக்க நான், அண்ணா, போதாததுக்கு வேலைக்கு ஆள் இருக்கு .. மாமா என்னடானா அங்க போயிட்டு வேல பாக்குறாரு…”

“இதுதான் விஷயமா.. மாப்பிள வீட்டுல சும்மா இருந்து சாப்பிட ஒரு மாதிரி இருந்திருக்கும்.. அதான் ஒத்தாசையா இருப்போம்னு போயிருப்பாரு…”

“அதெல்லாம் அங்க வந்து ஒன்னும் கிழிக்க வேணாம்.. இருக்கிற மூணு பேர புள்ளைங்களையும் பாத்துக்குறதே பெரிய ஒத்தாசைனு உன் அப்பா கிட்ட சொல்லி வையி…”

“பொட்ட புள்ள கேட்டது நீங்கதானே.. அப்ப நீங்க தான் பாத்துக்கணும்…”

“அதுக்கு தான் ஒரேடியா ரெண்டு புள்ளைய பெத்து கொடுத்து பழிவாங்கிட்ட இல்ல…”

“ஆமா, எப்படி!…” என்று அவள் புருவம் உயர்த்த,

அவள் இடையை பற்றி தன்னுடன் நெருக்கியவன் “இந்த பழிவாங்கல் கூட நல்லா தான் இருக்கு.. அடுத்து ரெண்டு பையன் பெத்துக்கலாமா…?” என்றவன் அதற்கான வேலையில் இறங்கி விட்டான்.

*****

இங்கோ பிரபாகரன் அறையில் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தான் பிரபாகரன். அவன் இரு புறமும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தனர் அஞ்சனாவும், ஆதூரியும்.

வேறு ஒன்றுமில்லை பழக்க தோஷத்தில் அதூரியை செல்லம்மா என்று அழைக்க, அஞ்சனா முகத்தை சுருக்க, “என்னப்பா அம்மா இல்லாத நேரம் தானே கூப்பிட சொன்னேன்…” என்று ஆதூரி தந்தையை போட்டுக் கொடுக்க, மீண்டும் அதே பஞ்சாயத்து யார் அவனது செல்லமா என்று.

“ரெண்டு பேரும் ஒரு முடிவுக்கு வர மாட்டீங்கல்ல.. எனக்கு ரெண்டு பேரும் செல்லம்மா தான்.. ஆனா எனக்கு நீங்க ரெண்டு பேரும் வேணாம்.. எனக்கு என் பையன் இருக்கான்.. வாடா கண்ணா…” என்று சொல்லி மகனை தூக்கிக் கொண்டவன், இப்போதைக்கு தப்பித்தால் போதும் என்று அறையை விட்டு வெளியேறி விட்டான்.

அஞ்சனா ஆதூரி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டு, “பாவம் இல்ல…” இன்று ஒரேடியாக சொல்லிக் கொண்டவர்கள், கோயிலுக்கு செல்ல தயாராகி வெளியே வந்தனர்.

அவர்களது எண்ணம் பிரபாகரனை மண்டை காய வைப்பது மட்டுமே. மற்றும் படி அம்மா மகள் இருவருக்குள்ளும் எப்போதுமே அளவிட முடியாத பாசம் ஒட்டிக் கொண்டுதான் இருக்கும்.

நித்தியா ஒரு வழியாக கிருபாகரனை சமாளித்து, அவனையும் இழுத்துக் கொண்டு கோயில் செல்ல தயாராகி வெளியே வர, பிரபாகரன் அஞ்சனா தயாராக இருக்க, நித்தியாவின் தந்தை எப்போதோ ஜீப்பில் குழந்தைகள் அனைவரையும் ஏற்றி இருந்தார். எனவே நால்வரும் கிளம்பி வரவும், வாகனம் கோயிலை நோக்கி புறப்பட்டது.

*****

இங்கு பரணியின் வீட்டில் துர்க்கா கத்தி கொண்டு இருந்தாள் தன்னை விடுமாறு, பரணயும் அவளை விட மாட்டேன் என்று பிடித்து வைத்து கொண்டான்.

“ஐயோ அத்தான், அண்ணங்க கோயிலுக்கு வந்திருப்பாங்க.. நேரமாச்சு கிளம்பலாம்…” என்று துர்க்கா கெஞ்ச

“போகலாம் போகலாம்.. என்ன அவசரம்…” என்றவன் அவனுக்கு பிடித்த அவள் கூந்தலை அள்ளி, அதற்கு சாம்பிராணி புகை போட்டுக் கொண்டிருந்தான்.

“தல இன்னும் ஈரம் காயல.. இப்படியே இருந்தா உனக்கு சளி பிடிச்சுக்கும்.. உனக்கு சளி புடிச்சிகிட்டா என் தங்க பிள்ளைக்கு சளி பிடிக்கும்.. உங்க ரெண்டு பேருக்கும் உடம்பு சரி இல்லாம போனா நான் எப்படி நிம்மதியா இருக்க முடியும்.. அதனால வாய மூடிட்டு இரு…” என்றவன்

தலை காயும்வரை அவளை விட்டான் இல்லை.

தனக்கு திருப்தி என்ற பின்னரே, அவள் கார் கூந்தலில் முகத்தை புதைத்து ஆழ நுகர்ந்து, வாசம் பிடித்தவன் “ம்ஹும்!.. என்ன முதல்ல கவுத்தது உன்னோட முடி தான்…” என்று சொல்ல

“போதும், போதும்…” என்றவள் அவனிடம் இருந்து தப்பித்து ஓடப் பார்க்க,

அவள் முடியை இழுத்துப் பிடித்தவன், அழகாக வாரி, பின்னல்லிட்டு, நான்கு அடுக்கு மல்லிகை பூச்சரத்தை அவள் தலையில் சூட்டி விட்டு, அவளை திருப்பி அழகு பார்த்தவன், கைகளால் திருஷ்டி சுத்தி ” என் அழகு அம்மு!…” என்று கொஞ்சி விட்டு தான் அவளை விட்டான்.

அதன் பின் மகனையும் அவனே ரெடி பண்ணி எடுத்துக்கொண்டு மனைவியுடன் கோயில் வந்து சேர்ந்தான்.

*****

மாரியம்மன் கோயிலின் பின், ஆத்தங்கரையை ஒட்டிய மண்டபம்.

பிரபாகரன் மடியில் பிரபவனையும்,

பரணியின் மடியில் யுதிஷ்டிரனையும் அமர வைத்து மொட்டை போட்டு, காது குத்தினர்.

தாய் மாமன் சீராக பரணி, பிரபாகரன் இருவரும் தங்கை மகனுக்கு தங்கத்தில் கழுத்துக்கு செயினும், கைகளுக்கு தங்க காப்பும் ஒன்று போல் போட்டனர்.

விழா முடிய விருந்து சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் அனைவரும்.

அப்போது கோயிலுக்கு வந்த முருகானந்தம், பிரேமாவதி விளையாடிக் கொண்டிருந்த விகர்ணனை தூக்க வரவும், வேகமாக வந்து குழந்தையை தூக்கி கொண்ட பிரபாகரன்

“பிள்ளைகளே இல்லையாம்.. இதுல பேரப்பிள்ள மேல உரிமை வேறயோ…” என்று கோபமாக கேட்க

“டேய் எத்தன நாளைக்கு இப்படியே இருப்ப.. என்ன இருந்தாலும் அவங்க எங்க பேரப்பிள்ளைங்கடா.. கடைசி காலத்துக்கு போற வழிக்கு எங்களுக்கு பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் வேணாமா…” என்று பிரேமாவதி ஆதங்கம், கவலை என சோர்ந்து போய் கேட்க

“அதுதான் கௌரவம், அந்தஸ்துனு பணத்தையும் பகட்டையும் தூக்கி புடிச்சிட்டு, செய்யாத அநியாயம் எல்லாம் செஞ்சாரே உங்க புருஷன்.. அந்த கௌரவத்த நெய் பந்தம் புடிக்க சொல்லுங்க, அந்தஸ்த கூட்டி வந்து கொல்லி வைக்க சொல்லுங்க…” என்று இறுக்கமாகவே சொன்னவன் அவ்விடம் விட்டு நகர,

அவனை பின் தொடர போன பிரேமாவதியை தடுத்து “விடு.. நம்ம செஞ்ச பாவத்துக்கு அனுபவிக்க தான் வேணும்.. என் புள்ளைங்க அப்படி அனாத பொணமா நம்மள விட்டுடாதுங்க.. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு…” என்று சொன்னவர்

மண்டபத்தில் தங்களது துணைகளுடன், தங்களது வாரிசுகளுடன், முகம் கொள்ளா புன்னகையுடன், மகிழ்ச்சியாக இருக்கும் மூன்று பெற்ற பிள்ளைகளையும் பார்த்துவிட்டு நகர்ந்தனர்.

முருகானந்தம் பிரேமாவதி வாழ்வில் கூட அடுத்த விடியலில் மீண்டும் கேட்கலாம் பூபாளம் நாமும். நம்புவோம்…

****

காது குத்து நிகழ்வு இனிதே முடிய, அனைவரும் பிரபாகரன் வீட்டிற்கு தான் வந்திருந்தனர்.

அது அவர்களது வழக்கம். மாதத்தில் ஒரு நாள் அங்கு கூடி மகிழ்வார்கள். அன்றும் மாமர சோலை நடுவே ஆட்டம் பாட்டம் என்று செல்ல, அவரவர் அறையில் நிம்மதியாக, சந்தோஷமாக தூங்கினர்.

பரணி துர்க்காவிற்கு என்று தனி அறை அங்கும் உண்டு. தன் கண்ணாளனின் கை வளைவில், அவன் தோளில் தலையை வைத்து படுத்து இருந்தவள், கண் விழித்தது என்னவோ அவள் மகனின் அழு குரலில் தான்.

பிரபவன் பெரும்குரல் எடுத்து அழ, பக்கத்து அறையில் இருந்த யுதிஷ்டிரன் அழ ஆரம்பித்தான். தம்பியும் குட்டி மாமனும் அழுத சத்தம் தீர்த்திகா, திகழினி காதுகளில் விழ அவர்களும் அழ ஆரம்பித்தனர்.

குழந்தைகளின் அழு குரலில் தான் அனைவரும் அடித்து பிடித்து எழுந்தனர்.

தங்களது குழந்தைகளை தூக்கிக் கொண்டு தட்டி கொடுத்து வெளியே வந்த துர்க்கா, அஞ்சனா, நித்தியா மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, இதழ் பிரித்து அழகாக சிரித்தனர்.

அவர்களின் ஒவ்வொரு விடியலும் மழலைகளின் ஓசை தான் பூபாளமாக…

அனைவர் வாழ்விலும் மீண்டும் கேட்கட்டும் பூபாளம் 💕

சுபம் 💕

2 thoughts on “மீண்டும் கேட்குமா பூபாளம் எபிலாக்

  • Gayathri Sgh

    Woww super ending dear 👌👌👌😍😍💞💞💞💞💞..
    Rompa alaga kadhal, anpuna enna pasamna ennanu puriya vachirukan parabhavum, paraniyum super….
    Prabha love jeichiduchi. Kidaikathunu ninachan avan sellama avanukku oru santhosamana vallgaiya kuduthurukan 😍👌💕💞.
    Thurukavuku oru vidivu kaalatha kudithurukan parani. Super da parani 👏👏👌😍…
    Nithiya asa ipa niravethitan ava purushan..
    Alaga kulanthaigal anpana manaivugal vallgai inikirathu yellorukum..
    Vaalga valamutan 😍💐

    Reply
  • kani mozhi

    Semma story 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜 super super super super super super super super ❤️❤️❤️❤️❤️❤️

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!