Skip to content
Post Views: 32
கண்ணாமூச்சி 33
ரங்கநாதனின் கோப வார்த்தைகள் பாட்டி வீட்டின் சுவர்களில் முட்டி மோதி அடங்கியது. நயனிகாவின் சதி அம்பலமாகி, உலகமே விஷ்வாவைக் கொண்டாடிக்கொண்டிருந்த அந்த விநாடியிலும், ரங்கநாதனின் மனம் தன் பிடிவாதத்தை விட மறுத்து, கௌரவம் என்ற போலித் திரைக்குள் ஒளிந்து கொள்ளவே முயன்றது.
அப்போது, அதுவரை அமைதியாகப் பேத்தியின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்த பாட்டி, தன் கட்டிலில் இருந்து மெதுவாக எழுந்து ஹாலுக்குள் வந்தார். அவளது முகம் தங்கம் மற்றும் ரங்கநாதனை விடவும் அத்தனை தீர்க்கமாக இருந்தது.
“டேய் ரங்கா! இன்னும் உன் வாய் அடங்கலையாடா?” என்று பாட்டியின் குரல் கம்பீரமாக ஒலித்தது.
Advertisement
ரங்கநாதன் தன் தாயைப் பார்த்து, “அம்மா, நான் சொல்றதைக் கேளுங்க… மீடியால இப்போ மன்னிப்பு கேட்டா, நேத்துல இருந்து நம்ம குடும்பத்தைப் பத்தி தப்பாப் பேசின நாலு பேரோட நாக்கை அடக்க முடியுமா? இவ செஞ்ச காரியத்தால…” என்று மீண்டும் நிலாவை நோக்கிக் கை நீட்டினார்.
“நிறுத்துடா!” என்று பாட்டி கையை உயர்த்தி அவனது வார்த்தைகளைத் தடுத்தார். “நேத்துல இருந்து என் பேத்தி தப்பு செஞ்சிட்டா, மானம் போயிடுச்சுன்னு குதிச்சியே… இப்போ அந்தத் தம்பி டிவியில வந்து பேசுனதெல்லாம் உன் காதுல விழலையா? அந்தப் புள்ளை கோடிக்கணக்கான ஜனங்க முன்னாடி நின்னு, ‘நான் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு’ன்னு என் பேத்தியை நெஞ்சை நிமிர்த்திச் சொல்லியிருக்குடா! இன்னைக்கு இருக்குற உலகத்துல, ஒரு சின்னப் பழின்னா கூடப் பொண்ணைக் கைவிடுற ஆம்பளைங்களுக்கு மத்தியில, உலகமே எதிர்த்து நின்னாலும் நான் நேசிச்சவளோட கௌரவம் தான் எனக்கு முக்கியம்னு வந்து நிக்கிறான் பாரு… அவன் தான்டா நிஜமான ஆம்பள!” என்று பாட்டி ஆவேசமாகப் பேசினார்.
பாட்டியின் வார்த்தைகளில் இருந்த உண்மை ரங்கநாதனைச் சுட்டெரித்தது. அவர் பேச வார்த்தைகளின்றித் தலையைக் குனிந்து கொண்டார்.
Advertisement
“பெத்த மகளோட கண்ணுல இருக்குற உண்மையை விட, உனக்கு இந்த ஊர்க்காரன் பேசுற வெத்து வார்த்தைதான் பெருசாப் போச்சா? அவசரப்பட்டுப் புள்ளை மேல கைய வச்சியே… இப்போ அந்தத் தம்பி தன் பக்கத்து நியாயத்தை நிரூபிச்சுட்டான். இனிமே என் பேத்தியை நினைச்சு நான் பெருமைதான் படுவேனே தவிர, ஒரு நாளும் தலைகுனிய மாட்டேன். இனிமே அவளைப் பத்தி யாராவது ஒரு வார்த்தை தப்பாப் பேசினா… நான் சும்மா இருக்க மாட்டேன்,” என்று ரங்கநாதனின் தங்கை அம்சாவையும் சேர்த்து முறைத்தார் பாட்டி. அத்தை அம்சா பயத்தில் அடுக்களைக்குள் புகுந்துகொண்டாள்.
Advertisement
தங்கம் தன் கணவனின் அருகில் வந்து, “இங்க பாருங்க… அந்தத் தம்பி நமக்காகவும் நம்ம நிலாவுக்காகவும் தான் அத்தனை பெரிய மீடியா கூட்டத்தையும் எதிர்த்து நின்னு பேசியிருக்காரு. அவங்க காதல் உண்மையானதுங்க. நீங்க இன்னும் கோபப்பட்டு நம்ம பொண்ணோட வாழ்க்கையை நாசம் பண்ணிடாதீங்க,” என்று அழுதுகொண்டே கெஞ்சினார்.
அறையினுள் படுக்கையில் முடங்கிக் கிடந்த நிலா, பாட்டியின் பேச்சைக் கேட்டுத் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். அவளது மனதில் விஷ்வாவின் அந்த கோப முகமும், இறுதியாக அவன் கேமராவைப் பார்த்து வீசிய அந்தப் பார்வையும் மட்டுமே நிழலாடிக் கொண்டிருந்தது. ‘நான் இருக்கேன் நிலா, பயப்படாதே’ என்று அவன் சொல்லாமல் சொன்ன வார்த்தைகள் அவளுக்குள் புதிய தெம்பைக் கொடுத்தன.
அதே நேரத்தில், சென்னையில்…
Advertisement
பிரஸ் மீட்டை முடித்துவிட்டு காரில் ஏறிய விஷ்வாவின் வேகம் குறையவில்லை. அரவிந்த் தொடர்ந்து அவனது போனைப் பார்த்துக்கொண்டே வந்தான். “விஷ்வா! நீங்க பிரஸ்மீட்ல பேசுனது இப்போ சோசியல் மீடியாவுல காட்டுத்தீ மாதிரி பரவிட்டு இருக்கு. நீங்க சொன்ன அந்த ஒரு மணிநேரக் கெடுவுக்குப் பயந்து, அந்த சேனல் அந்த டிபேட் வீடியோக்களை யூடியூபல இருந்து தூக்கிட்டாங்க. பல இன்ஃப்ளூயன்சர்ஸ் பகிரங்கமா மன்னிப்புக் கேட்டுப் போஸ்ட் போடுறாங்க,” என்றான் அரவிந்த் சற்றே நிம்மதியுடன்.
“அது மட்டும் பத்தாது அரவிந்த். நிலாவோட குடும்பத்துக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு அவங்க சட்டரீதியா பதில் சொல்லியே ஆகணும். லீகல் நோட்டீஸ் அனுப்புற வேலையை நிறுத்தாதே,” என்றான் விஷ்வா, ஜன்னல் வழியே வெறித்தபடி.
“சரி விஷ்வா, ஆனா… நிலா அவங்க அம்மா போன்ல இருந்து அனன்யாவுக்கு மெசேஜ் பண்ணியிருக்காங்க. அவங்க நேத்து ராத்திரியே அவங்களோட சொந்த கிராமத்துக்குக் கிளம்பிப் போயிட்டாங்களாம். அவங்க அப்பா இன்னும் கோபத்துலதான் இருக்காராம்,” என்று அரவிந்த் சொன்னதும் விஷ்வாவின் முகம் இன்னும் தீவிரமானது.
“அவங்க கிராமம் எதுன்னு அனன்யாகிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோ அரவிந்த். நாம இப்போவே அங்கே கிளம்புறோம்,” என்றான் விஷ்வா.
“விஷ்வா! இப்போவா? பிரஸ் மீட் முடிஞ்சு மீடியா மொத்தமும் உங்களைத்தான் கவனிச்சுக்கிட்டு இருக்கு. நீங்க இப்போ கிராமத்துக்குப் போனா…” என்று அரவிந்த் இழுக்க, விஷ்வா அதையெல்லாம் கேட்கத் தயாராக இல்லை.
“அரவிந்த், என் நிலா அங்கே தனியா இருப்பா. அவங்க அப்பா அவ மேல ரொம்ப கோபமா இருக்காருன்னு வேற சொல்ற, அவ என்ன பண்றாளோன்னு என் நெஞ்சு பதறிட்டே இருக்கு. உலகத்துக்கு முன்னாடி என் காதலை நிரூபிச்சது முக்கியமில்லை, ஆனா நிலாவோட பெத்தவங்களுக்கு முன்னாடி நான் போய் நின்னு அவங்க சம்மதத்தை வாங்குற வரைக்கும் எனக்கு நிம்மதி வராது. வண்டியை அவங்க ஊருக்கு விடு!” என்றான் விஷ்வா, அசைக்க முடியாத உறுதியோடு.
அடுத்த சில மணிநேரப் பயணத்திற்குப் பின், விஷ்வாவின் கார் நிலாவின் பாட்டி வீடு இருக்கும் அந்தப் பச்சைப் பசேல் கிராமத்துத் தெருவுக்குள் நுழைந்தது. ஒரு சொகுசு கார் அந்தச் சிறிய தெருவில் வந்து நின்றதும், அக்கம் பக்கத்தினர் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.
காரை விட்டு இறங்கிய விஷ்வா, நேராகப் பாட்டி வீட்டின் வாசலை நோக்கி நடந்தான்.
ஹாலில் அமர்ந்திருந்த தங்கம், வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு வெளியே வர, அங்கே கம்பீரமாக நடந்து வரும் விஷ்வாவைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். “தம்பி… நீங்களா?” என்று தங்கம் பதற, அந்தச் சத்தம் கேட்டு ரங்கநாதனும், உள்ளே அறையில் இருந்த நிலாவும் வெளியே வந்தனர்.
தன் வாசலில் வந்து நிற்கும் விஷ்வாவைக் கண்டதும் நிலாவின் கண்கள் அகல விரிந்தன. அவளது இதழ்களிலிருந்து, “விஷ்வா…” என்ற வார்த்தை மிக மெல்லிய முனகலாக வெளிவந்தது.
வாசலில் நின்றிருந்தவர்களைத் தாண்டி விஷ்வாவின் கண்களும் நிலாவைத்தான் தேடின. அலைபாய்ந்த கண்களுக்கு ஆறுதல் அளிப்பது போல் அனைவருக்கும் பின்னால் ஓரத்தில் கண்களில் தவிப்போடு நின்றுகொண்டிருந்த தன் உயிரைப் பார்த்த பிறகுதான் விஷ்வாவுக்கு உயிரே வந்தது.
விஷ்வா நேராக வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்த ரங்கநாதனின் முன்னால் வந்து நின்றான். கோடிக்கணக்கான ரசிகர்களின் நாயகனான அந்த விஷ்வா, இப்போது தன் ஒட்டுமொத்தப் புகழையும் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு, ஒரு சாதாரண இளைஞனாக ரங்கநாதனின் முன்னால் கைகளைக் கூப்பி நின்றான்.
“சார்… என்னை மன்னிச்சிடுங்க,” என்றான் விஷ்வா, அவனது குரலில் வினயமும் உண்மையும் கலந்திருந்தது.
விஷ்வா கைகளைக் கூப்பி நின்ற அந்த விநாடி, அந்தப் பெரிய ஓட்டு வீட்டின் கூடம் அப்படியே ஸ்தம்பித்துப் போனது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம், தன் வீட்டு வாசலில் வந்து தலைகுனிந்து நிற்பதை கோமதி அம்மாளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மகனின் உள்ளத்தில் இருந்த கோபமும், பிடிவாதமும் வந்தவனைப் புண்படுத்திவிடக் கூடாது என்று பதற்றம் கொண்டவர்,
“நீ ஏன் தம்பி மன்னிப்பு கேக்குற? நீ எதுவும் தப்பு பண்ணலியே,” என்றார் முன்னால் வந்து. “டிவியில வர்ற அசிங்கத்தைப் பார்த்துட்டு, பெத்த மகளோட நியாயத்தைக் கூடக் கேட்காம அவ மேல கையை வச்சுட்ட்டான் என் புள்ளை. ஆனா நீ… உலகமே பார்க்குற மாதிரி டிவில எல்லா உண்மையும் சொல்லி என் நிலாவோட கௌரவத்தைக் காப்பாத்தியிருக்க. இந்த கோமதியோட தலைமுறையே தலைநிமிர்ற மாதிரி பண்ணிட்ட தம்பி,” என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்.
விஷ்வா மெதுவாக பாட்டியின் கைகளைப் பற்றிக் கொண்டான். “இல்லை பாட்டி, நிலாவை அவங்க அப்பா அடிச்சதுக்குக் காரணம் நான்தான். என் உலகத்தோட அசிங்கங்களும், பழிவாங்கல்களும் உங்க வீட்டுப் படி வரைக்கும் வந்து உங்க நிம்மதியைக் கெடுத்திருக்கு. என்னால உங்களுக்கெல்லாம் ரொம்ப தொந்தரவு, அவமானம் உண்டாயிருச்சு, அதுக்கு நான்தான் பொறுப்பேத்துக்கிட்டு மன்னிப்பு கேக்கேணும்” என்று விஷ்வா நிதானமாகவும் உறுதியாகவும் பேசினான்.
ஆனால் இது எதுவும் ரங்கநாதனின் மனதை இளக்கியதாகத் தெரியவில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டு வேறெங்கோ பார்த்தபடி நின்றிருந்தார். அவரைக் கண்களில் கவலையோடு பார்த்த விஷ்வாவின் கையில் மென்மையாகத் தட்டிய பாட்டி, அவனது முகத்தைத் தன் சுருங்கிய கரங்களால் வருடி, “நல்லா இருப்பா தம்பி! டிவியில நீ பேசுன ஒவ்வொரு வார்த்தையும் என் பேத்தியோட உசிரைக் காப்பாத்தியிருக்கு. பாவம் புள்ளை, ராத்திரியெல்லாம் அழுது கரைஞ்சிடுச்சி,” என்றார்.
விஷ்வா ஹாலின் ஒரு ஓரமாக நின்றிருந்த நிலாவைத் திரும்பிப் பார்த்தான். நிலா இப்போதும் அழுதுகொண்டே தன் தாயின் பின்னால் நின்றிருந்தாள். அவளது வெளிறிய கன்னத்தில் இன்னும் ரங்கநாதனின் விரல் தழும்புகள் லேசாகச் சிவந்து தெரிந்தன. அதைப் பார்த்த கணத்தில் விஷ்வாவின் இதயம் சுக்குநூறாக உடைந்தது. அவளருகே சென்று, அவளுக்கு ஆறுதல் அளிக்க அவன் மனம் துடித்தாலும், இன்னும் கரையாமல் நின்றிருந்த ரங்கநாதனை மீறி அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.
“என்ன ரங்கா, இப்படி முகத்தைத் திருப்பிக்கிட்டு நின்னா எப்படி, உனக்கு மரியாதை குடுத்து அந்தப் புள்ளை வீடு தேடி வந்திருக்கு, ஏதாவது பேசுப்பா…” என்றார் கோமதி அம்மாள் மகனைப் பார்த்து.
தாயின் அதட்டலுக்குப் பிறகு மெதுவாகத் திரும்பிய ரங்கநாதன், நேராக விஷ்வாவின் கண்களைப் பார்த்தார். அவரது முகத்தில் இருந்த அந்தக் கடுமை இன்னும் முழுமையாக மறையவில்லை என்றாலும், அவரது குரலில் இப்போது ஆத்திரத்திற்குப் பதிலாக ஒருவித பாரமும் பிடிவாதமும் கலந்திருந்தன.
“தம்பி… நீங்க பெரிய இடத்துப் பிள்ளை. நேத்துல இருந்து மீடியால எங்களப் பத்தி வந்த தப்பான பேச்சுக்கெல்லாம் உங்க பிரஸ் மீட் மூலமா முற்றுப்புள்ளி வச்சதுக்கு ரொம்ப நன்றி. அதுமட்டும் இல்லாம, எங்களத் தேடி இந்த கிராமத்துக்கு வந்து இவ்வளவு தூரம் இறங்கி வந்து மன்னிப்பு கேட்டீங்களே… அதுக்கு இந்த ரங்கநாதன் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கான்,” என்று சற்று இடைவெளி விட்டவர், தன் கைகளைக் கட்டிக் கொண்டு தீர்க்கமாகச் சொன்னார்,
“ஆனா, இதோட எல்லாத்தையும் முடிச்சுப்போம் தம்பி. என் மகளை உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க என்னால முடியாது.”
error: Content is protected !!