Skip to content
Post Views: 54
கண்ணாமூச்சி 34
அவர் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை, அந்த ஹாலில் ஒரு அணுகுண்டைப் போல வெடித்தது. நிலா அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனாள், அவளது இதயம் ஒரு நொடி துடிப்பதை நிறுத்தியது போல இருந்தது. விஷ்வாவும் இந்தத் திடீர் மறுப்பைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“என்னங்க இது? என்ன பேசுறீங்க நீங்க?” என்று தங்கம் பதறியபடி கணவனின் கைகளைப் பற்றினார்.
“நான் சொல்றதுல எந்தத் தப்பும் இல்லை தங்கம்,” என்று தன் மனைவியை அதட்டிய ரங்கநாதன், மீண்டும் விஷ்வாவை நோக்கித் திரும்பினார்.
Advertisement
“தம்பி, நீங்க தப்பானவர்னு நான் சொல்லல. ஆனா, நீங்க இருக்குற இந்த சினிமா உலகம், இந்தத் தொழில்… இது எதுவுமே என் மகளோட வாழ்க்கைக்கும், இந்தக் குடும்பத்துக்கும் சரிவராது. இன்னைக்கு நடந்த இந்தச் சம்பவம் ஒரு சின்ன உதாரணம்தான். சினிமாவுல இருக்குற ஒருத்தரோட வாழ்க்கை எவ்வளவு ஆபத்தானது, நிம்மதி இல்லாததுன்னு இப்போவே புரியுது. இதையெல்லாம் சகிச்சுக்க மத்தவங்க வேணா தயாரா இருக்கலாம், ஆனா இந்தக் குடும்பத்துப் பழக்கவழக்கத்துக்கும், உணர்வுகளுக்கும் இது ஒத்து வராது. என் பொண்ணை இந்த மீடியா வெளிச்சத்துல காட்டி தினம் தினம் சாகடிக்க எனக்கு விருப்பம் இல்லை,” என்று கறாராகக் கூறி முடித்தார்.
நிலா தன் தாயின் பின்னால் இருந்து ஓடிவந்து, “அப்பா… ப்ளீஸ் அப்பா…” என்று கதறத் தொடங்கினாள்.
அப்போது, அதுவரை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த பாட்டி, தன் இடுப்பில் இருந்த முந்தானையை உதறிச் சொருகிக் கொண்டு முன்னால் வந்தார். “ஏண்டா ரங்கா! நேத்து மீடியாக்காரன் தப்பாப் பேசினான்னு குதிச்ச… இன்னைக்கு இந்தத் தம்பி எல்லாத்தையும் சரி பண்ணிட்டு வந்து நிக்குது. இப்போ என்னடான்னா அவன் தொழில் சரியில்லைன்னு புதுசா நொண்டிச்சாக்கு சொல்ற? இந்தப் புள்ளைக்கு என்னடா குறைச்சல்?” என்று ரங்கநாதனை ஏசினார்.
Advertisement
பிறகு விஷ்வாவின் பக்கம் திரும்பி, “தம்பி, இவன விடு, புடிவாதம் புடிச்சவன். நான் கேக்குறேன் சொல்லு… உன் பெத்தவங்க என்ன பண்றாங்க? அவங்க எங்க இருக்காங்க?” என்று கேட்டார் பாட்டி.
Advertisement
விஷ்வா தன் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, நிதானமாகப் பாட்டிக்குப் பதில் சொன்னான். “என் அப்பா, அம்மா ரெண்டு பேருமே டாக்டருங்க பாட்டி. அவங்க அமெரிக்காவுல இருக்காங்க,” என்றான் விஷ்வா.
“கேட்டியாடா ரங்கா… டாக்டரு புள்ளையாம்!” என்று ரங்கநாதனை முறைத்த பாட்டி, மீண்டும் விஷ்வாவிடம், “சரி தம்பி, சினிமாவுல நடிச்சா மாசம் எவ்வளவு சம்பளம் கிடைக்கும்? என் பேத்தியைக் கட்டிக் குடுத்தா அவளை கஷ்டப்படுத்தாம சுகமா வச்சுப்பியா? அவ ஆசைப்பட்டதை வாங்கிக் குடுப்பியா? வெளியில தெருவுக்கு கூட்டிட்டுப் போவியா?” என்று கிராமத்து வெள்ளந்தித் தனத்தோடு கேட்டார்.
விஷ்வா அவளது கேள்வியில் இருந்த பாசத்தைப் புரிந்து கொண்டு லேசாகப் புன்னகைத்தான். “பாட்டி, நான் நிறைய சம்பாதிக்கிறேன். நிலாவை என் கண்ணுக்குள்ள வச்சு, ராணி மாதிரி பார்த்துப்பேன். அவ கேக்குறதெல்லாம் வாங்கிக் குடுக்குறேன். அவளுக்கு எந்தக் கஷ்டமும் வராம நான் பாத்துக்குறேன். அதுக்கு நான் கேரண்டி,” என்றான் உறுதியோடு.
Advertisement
பாட்டிக்கு அந்தப் பதில் திருப்தியாக இருந்தது. விஷ்வாவின் அருகில் நெருங்கியவர், அவனது தாடையைப் பிடித்து முகத்தை அங்கிட்டும் இங்கிட்டும் திருப்பிப் பார்த்து, “ஆமா… பார்க்குறதுக்கும் லட்சணமா, ராஜா வீட்டுப் புள்ளை மாதிரிதான் இருக்கான்,” என்று தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டார்.
பின்னர் மீண்டும் ரங்கநாதனை நோக்கித் திரும்பி, “ஏண்டா ரங்கா, உனக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம்? படிச்ச புள்ளை, நல்ல குடும்பம், பார்க்கவும் லட்சணமா இருக்கான், என் பேத்தியைக் ராணி மாதிரி வச்சுப்பேன்னு சொல்றான். எனக்கு இந்தப் புள்ளையை ரொம்பப் பிடிச்சிருக்கு. இதுல நீ என்ன குறையக் கண்டுட்ட?” என்று சத்தமிட்டார்.
ரங்கநாதன் தன் தாயைப் பார்த்து வேதனையுடன், “அம்மா, நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. சினிமாவுல இருக்குறவங்களுக்கு ஒரு ஒழுக்கம், கட்டுப்பாடு எதுவும் இருக்காதுமா. இன்னைக்கு நயனிகான்னு ஒருத்தி சதி பண்ணா… நாளைக்கு வேற ஒருத்தி வருவா. இவரைச் சுத்தி எத்தனையோ பொண்ணுங்க இருப்பாங்க. நாளைக்கு என் பொண்ணு அவங்களையெல்லாம் பார்த்துட்டு மனசு உடைஞ்சு கஷ்டப்படக் கூடாது. அதுதான் என் பயம்,” என்றார் கவலையுடன்.
“ஆமா, சினிமால வேலை பாக்கதவன் மட்டும் என்னவோ ஒழுக்கமா இருக்குற மாதிரி பேசுற, இந்தா, இந்தக் கோடி வீட்டுக் குமரேசன் மவன், உன்னை மாதிரி பேங்க்லதான் வேலை பாக்குறான், வேண்டி வந்து பொண்ணு குடுத்து, கட்டி வைச்சாங்க, ஆனா இப்போ பாரு கூட வேலை பாக்குற புள்ளை ஒருத்தியைப் புடிச்சிருக்குன்னு கட்டுனவளவிட்டுட்டுப் போயிட்டான்,” என்று கூறியவர்,
“ஒழுக்கம் அவவனுக்கு மனசுல இருக்கணும், வளர்ப்புல இருக்கணும், அப்பறம் அவன் எங்க வேலை பார்த்தா என்ன, என்னிக்கும் தப்பு பண்ண மாட்டான்,” என்று விஷ்வாவுக்கு வக்காலத்து வாங்கினார்.
அதைக் கேட்டு ஆமோதிப்பாய்த் தலையசைத்த விஷ்வாவும், ரங்கநாதனின் கைகளைப் பற்றிக் கொண்டான். அவனது கண்கள் நேராக ரங்கநாதனின் கண்களை ஊடுருவின.
“சார்… என் சினிமா வாழ்க்கையில எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கேன். ஆனா, என் வாழ்க்கையில நான் நிலாவை மட்டும்தான் காதலிச்சேன், நேசிச்சேன். அவளுக்கு முன்னாடியும் என் மனசுல யாரும் இருந்ததில்லை… இனிமே என் ஆயுசுக்கும் நிலாவைத் தவிர வேற எந்தப் பெண்ணும் என் மனசுல வர மாட்டாங்க. என் நிலா மட்டும்தான் எனக்கு எல்லாமே,” என்று விஷ்வா தீர்க்கமாகவும், நெஞ்சாரவும் கூறினான்.
விஷ்வாவின் அந்த அசைக்க முடியாத காதலின் பிரகடனத்தைக் கேட்ட நிலாவின் கண்கள், பேரன்போடு அவனை நோக்கிக் கண்ணீர் உதிர்த்தன. ரங்கநாதனும் விஷ்வாவின் கண்களில் தெரிந்த உண்மையை உணர்ந்து, மேற்கொண்டு பேச வார்த்தைகளின்றித் திகைத்து நின்றார்.
விஷ்வா தன் கை நீட்டி அவளது கண்ணீரைத் துடைக்க முற்பட்டான். ஆனால், பெரியவர்கள் முன்னிலையில் இருக்கும் தயக்கத்தால் தன் கைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அவளது கண்களை ஆழமாகப் பார்த்தான். ‘உனக்காக நான் எதையும் செய்வேன் நிலா’ என்ற அவனது பார்வையின் பாஷை அவளுக்குப் புரிந்தது. நிலா தன் துப்பட்டாவின் முனையால் கண்களைத் துடைத்துக் கொண்டு, அவனைப் பார்த்து வெட்கத்தோடும் காதலோடும் புன்னகைத்தாள்.
இதையெல்லாம் கண்டும் காணாததுபோல நடந்துகொண்ட ரங்கநாதன், “சரிங்க தம்பி, வீட்டுல பெரியவங்களை வந்து பேசச் சொல்லுங்க,” என்று தன் ஆமோதிப்பைத் தெரிவித்தார்.
பின்னர் தன் மகளின் கைகளைப் பற்றிக்கொண்டு, “நிலாம்மா… அப்பாவை மன்னிச்சிடுடா. இனிமே உன்னோட எந்த முடிவுலயும் நான் குறுக்கே நிற்க மாட்டேன்,” என்று கூற, நிலா தந்தையைக் கட்டிக்கொண்டாள். அந்த வீட்டின் ஒட்டுமொத்தப் பதற்றமும் அந்த நொடியில் கரைந்து காணாமல் போயிருந்தது.
“சரி, புள்ளைகளா, எல்லாரும் சாப்புட வாங்க… என் பேத்தி ரெண்டு நாளா ஒண்ணுமே சாப்பிடலை,” என்றவர், “நீ கடைசியா எப்போ சாப்ட பேராண்டி,” என்று விஷ்வாவைக் கேட்க, அவன் எப்போது சாப்பிட்டோம் நினைவுப் படுத்திப் பார்க்க முயன்று, முடியாமல் அவரைப் பார்த்து புன்னகைத்தான்.
“நிலாகுட்டி, எல்லாரையும் சாப்பிட கூட்டிக்கிட்டு வா, திண்ணையில் உக்காந்துட்டு இருக்குற அந்தப் பையனையும் கூட்டிக்கிட்டு வா,” என்று அரவிந்தையும் சாப்பிட அழைத்தார்.
மூவரையும் கீழே அமரவைத்து, பாத்திரத்தில் சாதம் பிசைந்து உருட்டி பாட்டி மூவருக்கும் கையில் கொடுக்க, விஷ்வாவின் கண்களைச் சந்தித்த நிலாவின் கண்களிலும் அதே நினைவின் அலைகள்… இந்த அன்பின் ஒரு கவளம்தான் அன்று விர்ச்சுவல் உலகின் தன் பசியையும் ஆற்றியது என்று விஷ்வா உணர்ந்தவன் அவளைப் பார்த்து குறும்பாகக் கண் சிமிட்டினான்.
அன்று மாலை, கிராமத்து வீட்டின் புழக்கடைத் தோட்டத்தில் பவளமல்லி மரம் தன் மலர்களைத் தரையெங்கும் உதிர்த்து, அந்த இடத்தையே ஒரு நறுமணக் காடாக மாற்றியிருந்தது.
தோட்டத்துத் திண்ணையில் நிலா அமர்ந்திருக்க, அவளருகே வந்து அமர்ந்தான் விஷ்வா. மலர்களின் மணமும், இத்தனை நேரமாக ஏங்கித் தவித்த நிலாவின் அருகாமையும் விஷ்வாவிற்குள் ஏதேதோ எண்ணங்களை விதைத்துக் கொண்டிருந்தது. மெதுவாக நகர்ந்து நிலாவுக்கு நெருக்கமாக அவன் அமர,
சட்டென்று திரும்பிய நிலா, “விஷ்வா… என்ன பண்றீங்க? யாரவது பார்த்துடப் போறாங்க” என்று பதற்றமாக அவனிடமிருந்து விலக முயன்றாள். பின்னர் திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தவள், மெதுவாக விஷ்வாவின் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.
“விஷ்வா… இன்னும் என்னால நம்பவே முடியல. அப்பாவை எப்படி இவ்வளவு சீக்கிரம் சம்மதிக்க வச்சீங்க?” என்றால் நிலா வியப்புடன்.
விஷ்வா அவளது இடுப்பைத் தன் கரங்களால் வளைத்து, தன் நெஞ்சோடு இன்னும் நெருக்கமாக அணைத்துக் கொண்டான். “நான் எதையும் பிளான் பண்ணிப் பேசல நிலா. என் மனசுல உன்னைத் தவிர வேற யாரும் இல்லைன்றதுதான் நிஜம். அந்த நிஜத்தைத்தான் உங்க அப்பாகிட்ட சொன்னேன்,” என்று கூறி, அவளது முகத்தை நிமிர்த்தி அவளது கண்களை ஆழமாகப் பார்த்தான்.
நிலாவின் முகத்தில் வெட்கமும் காதலும் போட்டி போட்டுக்கொண்டு சிவந்தன.
“உலகமே உங்களைக் கொண்டாடுது விஷ்வா… ஆனா நீங்க எனக்காக இவ்வளவு தூரம் இறங்கி வருவீங்கன்னு நான் கனவுல கூட நினைக்கல,” என்று நிலா வெட்கத்தில் நெளிந்தபடி அவனது சட்டைக் காலரைப் பற்றிக் கொண்டாள்.
“உலகமே என்னைக் கொண்டாடினாலும்… இந்த விஷ்வாவோட உலகம் உன்னோட இந்த ஒற்றைப் புன்னகையிலதான் நிலா அடங்கியிருக்கு. அங்கே நான் எப்பவுமே ராஜா… நீதான் என் ராணி,” என்று ஆளுமையோடு சொன்ன விஷ்வா, தன் முகத்தை இன்னும் நெருக்கமாக்கினான்.
அவளது வெட்கச் சிவப்பை ரசித்தபடி, அவளது நெற்றியில் இருந்த அந்தத் தழும்பின் மீது தன் இதழ்களை ஆழமாகப் பதித்தான். அந்த முத்தம் அப்படியே மெதுவாக இறங்கி அவளது மூக்கு நுனியைத் தீண்டி, இறுதியாக அவளது தவித்துக் கொண்டிருந்த இதழ்களோடு ஐக்கியமானது!
அவனது அசைக்க முடியாத காதலின் வேகத்திலும், அந்த அக்னி முத்தத்தின் வீரியத்திலும் நிலா ஒட்டுமொத்தமாய் உருகி, அவனது அகன்ற மார்பில் தஞ்சமடைந்தாள். பவளமல்லியின் நறுமணமும், கிராமத்துத் தென்றலின் குளிர்ச்சியும் அவர்களைத் தாலாட்ட… கோடிக்கணக்கான ரசிகர்களின் சூப்பர் ஸ்டார் விஷ்வாவின் காதல், தன் நிலாவின் மடியில் உயிர்ப்போடு, என்றென்றைக்குமாக அடைக்கலமானது!
error: Content is protected !!