Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

19. தாமரை - பாறையில் மலர்ந்த தாமரையே

பாறையில் மலர்ந்த தாமரையே! 32

“சந்தா.. சந்தா கொஞ்சம் சீக்கிரம் வாம்மா.. நேரமாகுது..!” கைகடிகாரத்தை சரிபடுத்திக் கொண்டே வீட்டுவாசலிலிருந்து உட்பக்கம் பார்வையை செலுத்தி குரல் கொடுத்தான் வாத்சல்யன்

எதிர்வீட்டு திண்ணையில் பென்சில் நோட் சகிதம் அமர்ந்து ஏதோ மும்முரமாய் கிறுக்கிக் கொண்டிருந்த தீப்தி வாத்சல்யனின் குரலில் நிமிர்ந்து பார்த்து பளீரென சிரித்து வைக்க..! இந்த கணம் எந்தவித குற்ற குறுகுறுப்புமின்றி விசாலமான மனதுடன் மனம் தெளிந்து சிரிக்க முடிந்தது அவனால்..

“இதோ வந்துட்டேன்..! ஏன் இப்படி கத்தறீங்க..?” என்றபடியே அவசரமாக ஓடி வந்த சந்தான லஷ்மி.. கால் தடுக்கி முதல் படிக்கட்டிலிருந்து மூன்றாவது படிக்கட்டை நோக்கி கீழே விழப் போக.. நேக்காக வயிற்றில் ஒரு கரமும் முதுகில் ஒரு கரமும் கொண்டு பக்குவமாக பிடித்து நிறுத்தினான் அவளின் அன்பு கணவன்.

“பாத்துடி..!” என்ற கர்ஜனையுடன் தொடங்கியது அவனது அறிவுரை சொற்பொழிவுகள்.. “ஏன்டி! எத்தனை முறைதான் சொல்றது..! பொறுமையா நிதானமா நடந்து வரத் தெரியாதா உனக்கு..?” முகத்தில் எரிச்சலை காட்டினான் வாத்சல்யன்.



Advertisement

“ஏன் இப்படி கத்தறீங்க..? கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரணும்னு நினைச்சது ஒரு தப்பா..! நேரமாச்சு.. சீக்கிரம் போகணும்னு வீட்டுக்கும் ரோட்டுக்குமா நடையா நடக்கறீங்களேன்னு..” அவள் சொல்லி முடிப்பதற்குள்..

“ஆமா.. இவ பெரிய வள்ளுவர் பொண்டாட்டி வாசுகி..! புருஷன் கூப்பிட்டவுடனே.. கிணத்துல தண்ணி இறைக்கறதை அப்படியே போட்டுட்டு ஓடி வர்றாளாக்கும்..! வயித்துல குழந்தை இருக்கு..! ப்ச்..! குழந்தைங்க இருக்கு.. ஞாபகம் இருக்கா இல்லையா..?” என்றபடியே லேசாக நடுங்கிக் கொண்டிருந்த விரல்களால் அவள் ஆறு மாத மேடிட்ட வயிற்றை மெல்ல வருடினான் அவன்.

“மறப்பேனா நான்..? அதான் நிமிஷத்துக்கொரு தடவை குட்டிக் காலை எட்டி உதைச்சு அவங்க இருப்பை உணர்த்தறாங்களே..! இரண்டும் சரியான வாலுங்க..! அப்படியே உங்கள மாதிரி..!” வெயில் பட்டதும் நெற்றியும் கழுத்தும் வியர்வையால் பிசுபிசுக்கத் தொடங்க.. துப்பட்டா முனையால் துடைத்துக் கொண்டே சொன்னாள் சந்தானலஷ்மி..

Advertisement

“ஆமா..! என் பிள்ளைங்க என்னை மாதிரிதானே இருப்பாங்க..!” அவன் கண்களில் குறுகுறுத்த விஷமப் பார்வையை ரசித்தபடி என்னை மாதிரி பொறுமைசாலியா புத்திசாலியாவும் இருக்கலாம் தப்பில்லை..” என்றாள் இவள்..!

Advertisement

“எது.. இப்படி வயித்துல குழந்தையை வச்சுக்கிட்டு குதிச்சு குதிச்சு ஓடிவந்து தடுக்கி விழறதுதான் புத்திசாலித்தனமா மேடம்..?”

“இப்ப மட்டும் உங்களுக்கு டைம் ஆகலையா..? என்னை கரிச்சு கொட்டனும்னா மட்டும் உங்களுக்கு நேரம் போறதே தெரியாதே..!”

“பார்த்து கவனமா இருன்னு சொன்னது ஒரு தப்பா..?”

Advertisement

“பேசிக்கிட்டே இருக்காம போய் காரை எடுங்க..!” எனும்போதே “அம்மா” என அழைத்துக் கொண்டே துள்ளி குதித்துக் கொண்டு அவர்களிடம் ஓடிவந்தது தீப்தி..

குழந்தையை கண்டதும் மலர்ந்து இதழ் விரித்து புன்னகைத்தாள் சந்தா.. அவளோடு சேர்ந்து வயிற்றிலிருந்த பொன்மணிகளும் மென்மையாக மோதி தீப்தியோடு மானசீகமாக hify போட்டுக்கொண்டன.

“பாத்து பாத்து..! வண்டி ஏதாவது வருதான்னு பார்த்து கிராஸ் பண்ணி வரணும் புரியுதா..?” என்றபடி தீப்தியை தூக்கிக் கொண்டான் வாத்சல்யன்.

இரண்டு வீடுகளுக்கு இடைப்பட்ட தூரம் அந்த தெருவின் சின்ன சாலைதான் என்றாலும்.. சில நேரங்களில் பெரிய வாகனங்களும், கார்களும் பைக்குகளும்.. அதி வேகமாக அந்தப்பக்கம் வருவதும் உண்டு.

“தீப்தி குட்டிக்கு என்ன வேணுமாம் இவ்வளவு அவசரமா ஓடி வந்துருக்கு..?” செல்லங் கொஞ்சியபடி அவள் கன்னத்தை கிள்ளினாள் லஷ்மி..! வயிற்றில் உருக் கொண்டிருக்கும் இந்த பிள்ளைகளுக்கு முன்பே, பல வருடங்களாக ஏங்கித் தவித்த அந்த தாய்மை உணர்வை அள்ளிக்கொடுத்து அவள் தாகத்தை தணித்தவள் இந்த சின்னஞ்சிறு தேவதைதானே..! இப்போதும் இந்த லஷ்மி தீப்திக்கு அம்மாதான்..!

ஒரு முறை தீப்தி அம்மாவென அழைத்தபோது சங்கடத்தோடு மீனாட்சியை பார்க்க, அந்தப் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவளாக.. “அதனால என்னக்கா..! நான் ஒன்னும் தப்பா நினைச்சுக்க மாட்டேன்..” என்று சிரித்தவளை பக்கத்தில் வந்து அணைத்துக் கொண்டு உச்சி முகர்ந்தாள் லஷ்மி.

“பாப்பா என்ன பண்ணுது கேக்கணும்..!” இரண்டு கைகளையும் லஷ்மியின் மணி வயிற்றை நோக்கி நீட்டி குனிந்தவளை கீழே இறக்கி விட்டான் வாத்சல்யன்.

தினமும் ஒரு முறை சந்தான லஷ்மியின் வயிற்றில் தன் பிஞ்சு கரங்களை வைத்து பிள்ளையின் அசைவை உணராமல் போனால் தீப்திக்கு தூக்கம் வருவதில்லை..

இப்போதும் அதே வேலையை கருத்தாய் செய்ய, இரண்டு சிசுக்களும் தீப்திக்காக ஆளுக்கொரு ஒரு உதை விட்டன..

“ப்பாஆஆ..!” லேசாக வலியெடுத்ததில் வயிற்றைப் பிடித்துக் கொண்டாள் லஷ்மி!

“என்னடி..?” நாலுகால் பாய்ச்சலில் நெருங்கி பதறி அவள் தோளை அணைத்தான் வாத்சல்யன்.

இப்போதெல்லாம் பலமாக மூச்சு விட்டால் கூட பதட்டமாகி விடுகிறான் லஷ்மியின் கணவன்.

“ஒன்னுமில்லைங்க..! மூனும் சேர்ந்து போடற ஆட்டம் தாங்கல..!”

“மூணா..?” கண்களை விரித்தான் அவன்.

“இதோ.. இவளையும் சேர்த்து தான் சொல்றேன்..” என தீப்தியை கண் காட்டியவள்..‌ “சில நேரங்கள்ல மூணு நாலாகிடுது..!” என அவனையும் சேர்த்துக் கொண்டு சொல்ல கண்களை சுருக்கி முறைக்க தொடங்கினான் வாத்சல்யன்.

“ஹாஸ்பிடலுக்கு கிளம்பியாச்சா..?” என்றபடியே வந்தாள் மீனாட்சி.

“ஆமாம்மா..! பத்து மணிக்கு அப்பாயின்மென்ட்.. இப்பவே லேட்டாகிப்போச்சு..!” என்றவன் மீண்டும் மனைவியை முறைக்க..
நான் என்ன செய்வேன் என்பதைப் போல் தன்னவனை பரிதாபமாக பார்த்தாள் லஷ்மி..

“இவன் கிடக்கிறான்.. சும்மா நொய்.. நொய்யின்னு.. டாக்டர் வெயிட் பண்ணுவாங்க.. நீ மிச்சம் வைக்காம சாப்பிட்டுட்டுத்தான் எழுந்துக்கணும்” என அன்பு கட்டளை விதித்த மாமியாரின் வார்த்தையை மீற முடியாமல்.. கஷ்டப்பட்டு உண்டு முடித்துவிட்டு எழுந்து வருவதற்குள் தாமதமாகிவிட்டது.

“தீப்தி நீ வா.. அங்கிள் ஆன்ட்டிக்கு வழி விடு..! அவங்க கிளம்பட்டும்..” மீனாட்சி மகளை அழைக்க..

“நானும் அவங்களோட போகணும்..!” என்றது பாப்பா.

“வரலாம்.. ஆனா ஹாஸ்பிடல்ல ஊசி போடுவாங்களே..! தீப்தி குட்டிக்கு ஊசி ரொம்ப பிடிக்குமோ..!” வாத்சல்யன் கண் சிமிட்டிச் சொல்ல.. ஒரே ஓட்டமாக வீட்டுக்கு ஓடி விட்டது சின்னது.. வாத்சல்யன் லஷ்மி இதைக் கண்டு சத்தமாக சிரிக்க.. “பாத்து பத்திரமா போயிட்டு வாங்க..!” என வழியனுப்பி வைத்தாள் மீனாட்சி.

மருத்துவமனையை நோக்கி காரை செலுத்திக் கொண்டிருந்த வாத்சல்யனின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டாள் லஷ்மி..!

“என்னால நம்பவே முடியல வாத்சா.. ந.. நமக்கு குழந்தை பிறக்கப்போகுது..!”

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆச்சரியமும் அதீத சந்தோஷமுமாக இதையே சொல்லி சொல்லி மாய்ந்து போகிறாள் லஷ்மி!

“ஆமா.. சந்துமா..! நமக்கு குழந்தை பிறக்கப்போகுது..!” ஒவ்வொரு முறையும் அவள் ஆச்சர்யத்தை உள்வாங்கி இன்றுதான் அந்த மகா அதிசயம் நடந்ததை போல் அவனும் சந்தோஷிக்கிறான்..

அதெல்லாம் சரிதான் சாகப்போனவர்கள் இப்போது உயிரோடு.. அதுவும் லஷ்மி வயிற்றில் குழந்தையோடு.. ஒன்று அஸ்தமனமானால்தான் இன்னொன்று உதிக்கும் என்று அசரீரி சொன்ன வாக்கை பொய்யாக்கி.. தீப்தி குழந்தையின் உயிரையும் போராடி தக்கவைத்துக் கொண்டு இவளும் கருத்தரித்தது எப்படி..!

அப்படி எந்த போராட்டமும் அங்கே நடக்கவில்லை.. அன்று அந்த சின்னஞ்சிறு மழலையின் உயிரை காப்பாற்றி, அந்த குடும்பத்தின் சந்தோஷத்தையும் நிம்மதியையும் நிலை நிறுத்தும் பொருட்டு தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ளலாம்.. என ஆழ்கடலை நோக்கி போனவர்கள் வேகமாய் வீசி மேலே விழுந்த அலைகளால் பின்னோக்கி தள்ளப்பட்டு கொண்டே இருந்தார்கள்.

தன் மனைவியை கெட்டியாய் பிடித்துக் கொண்டு ஆழம் நோக்கி நகர்ந்தான் வாத்சல்யன்.

அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது.. இதுவரை துணிச்சலாய் வாழ்க்கையின் எல்லையைத் தொட்டு மரணத்தை முத்தமிட்டே ஆக வேண்டும் என்ற முடிவுடன் அவனோடு கைகோர்த்து நடந்து கொண்டிருந்த சந்தான லஷ்மி ஒருகட்டத்திற்கு மேல் நகர மறுத்து பிடிவாதமாய் அங்கேயே நின்றாள்.

தீடிரென தன் கைப்பிடிக்குள் அவள் உடம்பு விரைத்து போவதை உணர்ந்து என்ன நிகழ்கிறதென திரும்பிப் பார்க்கிறான் வாத்சல்யன்.

“சந்தா.. சந்துமா..” என்பதற்குள் மயங்கி அவன் மீது சரிகிறாள் சந்தானலஷ்மி!

இடுப்பளவு மட்டுமே கடல்நீர் அவர்களை சூழ்ந்திருக்க.. தண்ணீரால் மூச்சடைத்து மயங்கி விழ வாய்ப்பில்லை.. இது அதிர்ச்சியா அல்லது பயமா என தெரியாத நிலையில்.. மயங்கிய நிலையில் அவளோடு போய் கடலில் மூழ்கி முக்தியடையுமளவு தைரியமில்லை..

உள்ளுக்குள் ஏதோ ஒன்று வேண்டாமென தடுக்க.. இன்னொன்று வெளியே போ.. என உந்தித்தள்ள மனைவியை தூக்கிக் கொண்டு வேகமாக கடற்கரைக்கு திரும்பி வருகிறான் வாத்சல்யன்..

அவளை மணலில் கிடத்தி மெல்ல கன்னத்தை தொட்டு உலுக்குகிறான்..

“அம்மு..! என்னடி ஆச்சு..! பயமா இருக்குடி! கண்ண திறந்து பாரு!” இருதயம் ஸ்வரம் தப்பி துடிக்க.. சர்வமும் நடுங்குகிறது அவனுக்கு.. கார் வரை அவளை தூக்கி செல்வதொன்றும் கடினமில்லை.. ஆனால் யாரையேனும் உதவிக்கு அழைக்கலாமா..? இப்ப என்னதான் செய்ய வேண்டும் என யோசிக்க இயலாமல் செயலிழந்து கிடந்தது அவன் புத்தி!

அந்தப் பக்கமா யாரேனும் வருகிறார்களா என சுற்றுமுற்றுமாக திரும்பி பார்க்க அவர்கள் நல்ல நேரத்துக்கு ஒரு நடுத்தர வயதை தொட்ட கணவனும் மனைவியும் செருப்பை கையில் தூக்கியபடி நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.

“சா..ர்.. மேடம்..!” தழுதழுத்தக் குரல் அதிர்ஷ்டவசமாக அவர்களை எட்டியதில் இருவரும் திரும்பி பார்க்க.. “ப்ளீஸ் ஹெல்ப் அஸ்!” என கைகளை மேலே தூக்கி அசைத்து அழைக்கிறான்.

அந்த தம்பதி சில நொடிகள் ஏதோ பேசிக்கொண்டிருந்து விட்டு பிறகு இவர்களை நோக்கி ஓட்டமும் நடையுமாக முன்னேறி வருகிறார்கள்.

“என்னப்பா என்ன ஆச்சு..?” மயங்கி அவன் மடியில் கிடக்கும் சந்தான லஷ்மியின் அருகில் அமர்கிறார் அந்த பெண்மணி..!

“என்னன்னு தெரியல மேடம்..! என் வைஃப் திடீர்னு மயங்கி விழுந்துட்டா..! தண்ணி.. தண்ணி! வாட்டர் ப்ளீஸ்..! ஏய்.. சந்து எழுந்திருடி..!” தேடிவந்து முத்தமிட்ட கடல்நீரை அள்ளி அவள் முகத்தில் தெளித்து பார்க்கிறான்.

“கொஞ்சம் பொறுமையா இருங்க சார்..!” என்றபடியே சந்தாவின் கை தொட்டு அவள் நாடித்துடிப்பை பரிசோதிக்கிறார் அந்த பெண்மணி.

“என்ன.. என்ன பண்றீங்க..?”

“பொறுமையா இருங்க மிஸ்டர்.. என் வைஃப் டாக்டர்தான்..! அவங்க என்னன்னு பாக்கட்டும்..!” நிதானமான குரலில் சொன்னார் அந்த மனிதர்.

தொண்டை குழிக்குள் எச்சில் கூட்டி விழுங்கி லஷ்மியை பரிசோதித்துக் கொண்டிருந்த பெண்மணியின் முக ஓட்டத்தை கவனித்துக் கொண்டிருந்தான் வாத்சல்யன்.

இழுத்து மூச்சுவிட்டு லேசாக புன்னகை அரும்பிய உதடுகளுடன்.. “ஐ திங்க் ஷீ இஸ் பிரகனண்ட்..!” என்றார் அவர்.

வாத்சல்யனுக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை..! ஒருவேளை அலையின் வேகத்தில் கடலில் மூழ்கி உயிர் துறந்து ஆன்மாவாகி கனவில் சஞ்சரிக்கிறோமோ.. என்ற நினைப்பு!

கண்கள் அந்த பெண் மருத்துவரை பார்த்துக் கொண்டிருந்தாலும் கைகள் தன்னையும் சந்தான லஷ்மியையும் இந்த கணம் நிஜமா பொய்யா என்று தொட்டு உணர்ந்து கொண்டிருக்கிறது.

“அவங்க கர்ப்பமா இருக்காங்கன்னு நினைக்கறேன்.. ஹாஸ்பிடல் போய் கன்ஃபார்ம் பண்ணிட்டு போங்க.. கங்கிராஜுலேஷன்ஸ்..!” பெண் மருத்துவர் மீண்டும் புன்னகைக்க.‌. வாத்சல்யன் இந்த உலகத்திலேயே இல்லை.!

உண்மையா பொய்யா என்று நம்ப முடியாத அளவிற்கு குழம்பிப் போயிருந்தான் வாத்சல்யன்.. கிட்டத்தட்ட அவனுக்கும் கண்கள் இருட்டி மயக்கநிலையோடு சந்தான லஷ்மி மீது விழும் தருணத்தில் மருத்துவரின் கணவர் அவனைத் தாங்கிப் பிடித்து அமர வைத்தார்.

“நீங்க ஓகேதானே தம்பி! என்ன இன்ப அதிர்ச்சியா..?” அவர் சிரித்தார்.

“நான் ஒகேதான்.. நான் ஓகேதான்..” அவரிடம் திரும்பத் திரும்ப தலையசைத்து சொல்லிக் கொண்டிருந்தவன்.
சந்தான லஷ்மி மெல்ல மயக்கம் தெளிந்து கண்களை சிரமப்பட்டு திறக்க முயற்சித்துக் கொண்டிருப்பதை உணரவில்லை.

“அவங்களுக்கு மயக்கம் தெளியுது.. ஏதாவது ஹெல்ப் வேணுமா.. ! நாங்க வேணும்னா உங்களை ஹாஸ்பிடல்ல டிராப் பண்ணட்டுமா..?”

“இல்ல வேண்டாம் சார் கார்லதான் வந்தோம்.”

“தண்ணி வாங்கி கொடுத்துட்டு போகட்டுமா..?”

“வேண்டாம்!”

அவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் சாவி கொடுத்த பொம்மை போல் மூளை டைப் செய்த வார்த்தைகளை உதடுகள் அதுபோக்கில் உச்சரித்தன.

“சரி பத்திரமா பாத்துக்கோங்க! பார்த்து வீட்டுக்கு போங்க.‌ நாங்களும் கிளம்பறோம்..” அவர்கள் எழுந்து இருபதடி நடந்து போன பிறகு லஷ்மி கண்விழித்து தட்டு தடுமாறி எழுந்து அமர்ந்தாள்.

கடலை வெறித்தபடி அமைதியாக அமர்ந்திருந்தான் வாத்சல்யன்..

“வா..த்சா.. வாத்..சா!” ஒரு கையால் தலையை பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் அவன் தோளை உலுக்குகிறாள் லஷ்மி..

“ஹா.. ஹான்!” தன்னிலைக்கு வந்து அவள் பக்கமாக திரும்புகிறான்.

“எனக்கு என்னாச்சு..? திடீர்னு கண்ணெல்லாம் இருட்டி.. எதுவுமே ஞாபகம் இல்லை வாத்சா..! என்னதான் நடந்தது..!” சோர்ந்த நிலையில் மெல்ல நகர்ந்து அவனை ஒட்டி அமர்ந்து கொள்கிறாள்.

“போகலாம் சந்தா எழுந்திரு! அவர் உணர்ச்சியற்ற குரலில் சொன்னதும்.. அப்ப நாம எடுத்த முடிவு..? பின்வாங்க வேண்டாம் வாத்சா.. போகலாம்” என்றாள் அவள்.

பதில் பேசாமல் அவன் எழுந்து நின்றான்.

“என்ன வாத்சா..?” லஷ்மி நிமிர்ந்து பார்க்கிறாள்.

“உனக்கு உடம்பு சரியில்லை ஹாஸ்பிடல் போகணும்.. எழுந்து வா..!” அவள் கை பிடித்து தூக்கி நிறுத்துகிறான்.

என்ன நடக்கிறதென புரியாத நிலையில்.. திருதிருவென விழிக்கிறாள் லஷ்மி!

“நான் சொன்னா கேக்கணும்! நட..” என அவளை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தவனின் வார்த்தைகளை மறுக்க முடியவில்லை அவளால்..

இதுவருமாக காரில் ஏறி அமர்ந்த பிறகு.. “என்னாச்சு வாத்சா?” மீண்டும் சோர்ந்த குரலோடு அவள் கேட்ட கேள்விக்கு.. “ஹாஸ்பிடல் போகலாம் சந்தா!” என அதே வார்த்தை மட்டுமே பதிலாக வந்தது.

“ஹலோ..! வேணு வீட்ல இருக்கீங்களா..!

தீப்தி.. இ..ரு..க்.. இருக்காளா..?

கொஞ்சம் பேசணுமே..!”

புதிராக தெரிந்த அவன் நடவடிக்கைகளை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சந்தானலஷ்மி!

“ஹலோ.. பாப்பா..!” என்றவனின் குரலில் எத்தனை பதட்டம்! சிரிக்கிறான்.. விழிகளில்ருந்து பட்டுத் தெறிப்பதென்ன கண்ணீர் துளியா..?

“என்னதான் ஆச்சு வாத்சா? பதில் சொல்லுங்க ப்ளீஸ்!” பதட்டம் தொற்றிக்கொள்ள கணவனை பார்க்க, கண்ணீரை துடைத்துக் கொண்டு புன்னகையோடு ஒன்றுமில்லை என தலையசைக்கிறான் வாத்சா..

முதலில் இது உண்மையா பொய்யா என உறுதிப்படுத்திக் கொள்ளாமல் மனைவியிடம் இதுபற்றி சொல்வது சரி வராது என்று நினைத்துக் கொண்டு காரை வேகமாகத்தான் மருத்துவமனையை நோக்கி செலுத்திக் கொண்டிருந்தான். ஆனால் நின்ற இடத்திலேயே ஓடுவதைப் போல் நேரம் பின்புறமிருந்து இழுத்துக் கொண்டே போவதாக தோன்றுகிறது.

ஒரு வழியாக இதோ மருத்துவமனை வந்தாயிற்று. மருத்துவர் ‌சந்தான லஷ்மியை பரிசோதித்துக் கொண்டிருக்கிறார்.

காத்திருப்பு கொடுமையாய் இருந்தது.. நொடிகள் நரகங்களாக கழிந்தன.

கங்கிராஜுலேஷன்ஸ்.. இந்த மனைவி கர்ப்பமா இருக்காங்க..! கடற்கரையில் சொல்லப்பட்ட அதே செய்தி..! பனிரென்டு ஆண்டுகளுக்கு பின் பூக்கும் குறிஞ்சி மலரை போல்.. இத்தனை வருட கடுந்தவத்திற்கு கிடைத்த வரமாய் இருவரின் இதயத்தையும் ஒரே நேரத்தில் மலரச் செய்த பொன்னான செய்தி.

இது உண்மையா..? இது நிஜமா..? சென்ற ரீதியில் கணவனையும் மருத்துவரையும் மாறி மாறி பார்க்கிறாள் லஷ்மி! கரகரவென கண்களில் வழிந்து கழுத்தை நனைக்கும் கண்ணீரை வாத்சல்யன் துடைத்து விடுகிறான்..

சரியாக ஆறு திங்களுக்கு பிறகுதான் கருத்தரிக்க போகிறோம்.. என்ற நம்பிக்கையில் ஐம்பது நாட்கள் தள்ளி போனதை கவனிக்காமல் விட்ட தன் மடத்தனத்தை நினைவு கூர்ந்து உண்மை உணர்ந்து.. மெல்லிய மின்சாரம் பாய்ந்த உணர்வுடன் கண்களை விரிக்கிறாள்..

“வா..த்..சா! வா..த்..சா!” தொண்டை விக்கி கதறவும் பலனற்று போகிறாள்..

தூசி துரும்பாய் சுருங்கி கிடக்கும் மனது பரந்து இலகுவாகி பிரபஞ்சத்தை தொட்டு விசாலமடைவதை போல் இருவருக்கும் மூச்சு முட்டி போகிறது..! சந்தோஷத்தின் எல்லை தாங்கவும் ஒரு அளவுண்டு.

கட்டி அணைத்தபடி இருவரும் வெகு நேரம் அழுது கொண்டிருப்பதை கண்ட மருத்துவருக்கு அந்த கண்ணீருக்கு பின் மறைந்திருந்த கடினமான பாதைகள் கண்ணுக்கு தெரிந்திருக்கலாம்.. மகப்பேறு மருத்துவராயிற்றே.. இதுபோல் எத்தனை பேரை கடந்து வந்திருப்பார்..

“கல்யாணமாகி எத்தனை வருஷமாகுது..?”

மனைவியின் தோள்பட்டையிலிருந்து முகத்தை நிமிர்த்தி மூக்கை உறிஞ்சிக் கொண்டு “பத்து வருஷம்” என்றான் அவன்.

“கங்கிராஜுலேஷன்ஸ்..!” வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு மருத்துவர் நாசூக்காக நகர்ந்து கொள்ள..

இருவரும் கூட தங்களுக்குள் மாறி மாறி வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.

“கங்கிராஜுலேஷன்ஸ்..”

“நமக்கு குழந்தை பிறக்க போகுது.”

“ஆனிவர்சரி கிப்ட்..”

“ஐ லவ் யூ..!”

இன்னும் என்னென்னவோ பிதற்றல்கள்..!

விடை தெரியாத கேள்விகளை தோண்டியெடுக்க விரும்பவில்லை அவர்கள்.

தொடரும்.

3 thoughts on “பாறையில் மலர்ந்த தாமரையே! 32

  • Krishnaveni

    வாத்து லச்சு வாழ்த்துக்கள் டா செல்லங்களா 🥹🥹🥹
    எத்தனை வருட காத்திருப்பு பலன் ரெண்டு மடங்காக திரும்ப கிடைச்சு இருக்கு 😍😍😍
    தீப்தி குட்டிமா 😘😘😘

    Reply
  • Divyalakshmi Sugumar

    🙏🙏🙏🙏🙏🙏🙏
    Thamarai sis 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Kadhaidhan aana nijama ah unarvu porvama ah
    Romba romba emotional ah irukku
    Arumai sis ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    Reply
  • Revathy Dhanda

    Writer ji romba aluthamana story real ah feel panni aluga vachiteengae ji 🤧🤧.
    Ovvoru epi um unarvu kuviyal , romba romba arumai 🥰🥰❤️❤️

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!