Skip to content
Post Views: 125
ஓம் ஸ்ரீ சாய்ராம்
அன்று மாலையே வீட்டில் ஒரு பெரும் காதல் மழை பெய்யப் போகிறது என ஆசையுடன் காத்திருந்த உத்ராவையும் தருணையும் மேலும் இரண்டு வாரங்கங்கள் காக்க வைத்துச் சோதித்தான் காதல் மன்னன்.
மனையாளுடன் இணைந்து ஒன்பதாவது வார சாயி விரதம் செய்தபின், அனைவரின் முன்னிலையிலும் பகிரங்கமாக அறிவிக்க விரும்புவதாய் கூறி அவர்கள் வாயடைத்திருந்தான் ஷ்ரவன்.
தீபாரதனையுடன் எதிரில் நிற்கும் தோழியின் கண்களைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது தருணுக்கு. நிறைவேறாத ஆசைகளின் வலியை மறைத்து புன்னகைக்கிறாள் என அவனுக்குச் சொல்லத் தேவையிருக்கவில்லை.
Advertisement
“உன்னுடைய இந்த விடாமுயற்சிக்கு கடவுள் நீ எதிர்பார்க்காத நேரத்துல சந்தோஷத்த அள்ளி அள்ளி தரப்போகுறாரு பாரு,” துப்புக் கொடுத்தபடி கற்பூர ஆரத்தியைக் கண்களில் ஒத்திக்கொண்டான்.
பாவை விரக்தி சிரிப்பு உதிர்க்க, அடக்கிவாசி என தம்பிக்குக் கண்ணசைத்து மிரட்டினான் ஷ்ரவன்.
பூஜையின் ஓர் அங்கமான அன்னதானம் செய்ய கோவிலுக்குப் புறப்பட ஆயத்தமானார்கள் தம்பதிகள். கோவிலில் வைத்துச் சொல்ல நினைக்கிறானோ என்ற தருணின் எதிர்பார்ப்பும் ஏமாற்றத்தில் முடிந்தது. அன்று மலர்ந்த கதிரவன் கூட உறங்கச் சென்றிருந்தான். ஷ்ரவன்தான் வாயைத் திறந்த பாடில்லை.
Advertisement
தருணின் பொறுமை எல்லையைக் கடந்திருந்தது. அறையில் பதுங்கிக்கிடந்த அண்ணனைத் தேடி வேகநடையிட்டான். தம்பி உள்ளே வரும் வேகத்திலேயே அவன் கேள்வியை உணர்ந்தவன்,
Advertisement
“கீழே போ! சந்தோஷத்துல உன் ஃப்ரெண்ட் அழுது அழுது வீட்டையே குட்டிக் கடலா மாத்திடுவா. எதுக்கும் நாலு டவல் கையில் வச்சுகோ,” தம்பியை விரட்டினான்.
“அதெல்லாம் அழமாட்டா! உன் கன்னம்தான் பழுக்கப்போகுது. வேணும்னா ஒரு சேஃப்டிக்கு ஃபர்ஸ்ட் எய்ட் கிட் வச்சிக்கிறேன்,” வாயாடி முறைத்துவிட்டு நகர்ந்தான்.
அடியோ! அணைப்போ! எதையும் மனமுவந்து ஏற்றுக்கொள்ளத் தயாராக கீழே இறங்கி வந்தான் ஷ்ரவன். விரூகுட்டிக்கு பென்சில் பிடிக்கக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கும் பாவையின் மென்சிரிப்பில் மனம் கனத்துப் போனது அவனுக்கு.
Advertisement
நிதர்சனங்களை ஏற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும் என ஆழ்ந்த பெருமூச்சுடன் அவள் எதிரில் வந்து நின்றவன்,
“ரம்யா!” என மென்மையிலும் மென்மையாக அழைத்து, பின்னால் மறைத்து வைத்திருந்த A4 அளவிலான வெள்ளை நிற என்வெலப்பை அவள் முகமருகே நீட்டினான்.
மறுகணமே பேதையின் கண்கள் பேரதிர்ச்சியில் விரிந்தன. ஒரே தாவில் அவனைக் கட்டியணைத்து,
“ஏன் ஷ்ரவன் என்னை மறந்தீங்க? உங்களால எப்படி என்னை மறக்க முடிஞ்சுது?” விக்கித்து அழுதாள்.
விலா எலும்புகள் உடையும் அளவிற்கு மார்பில் முகம் புதைத்து முறையிடும் பாவையின் காதலில் அவனுக்குத்தான் துக்கம் தொண்டையை அடைத்தது.
தோள்சாய்ந்த மனையாளை மறுபடியும் தொலைத்துவிடக்கூடாது என்ற அதீத பயத்துடன் தன் இரு கரங்களையும் வளைத்து அவளை இறுக்க அணைத்துக் கொண்டவனுக்கு மன்னிப்புக் கேட்க கூடத் திராணி இல்லை.
“உன்னை அளவுக்கு மீறி கஷ்டப்படுத்திட்டேன் ரம்யா” என அவள் உச்சந்தலையில் முகம் சாய்த்து கண்ணீர் சிந்தினான்.
‘எந்த விளக்கமும் இல்லை; எந்தக் கேள்வியும் இல்லை; அவன் காட்டிய என்வெலப்பைத் திறந்து கூடப் பார்க்கவில்லை,’ என்ற கேள்விகளுடன், குழம்பி நின்றனர் குடும்பத்தினர்.
சுற்றம் மறந்தவர்களாக ஒருவரின் ஒருவர் அணைப்பில் மனக்காயங்களை ஆற்றிக் கொண்டிருப்பவர்களைத் தொந்தரவு செய்ய யாருக்கும் மனம் வரவில்லை.
வண்ணம் தீட்டக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்த பெரியம்மா தன்னைச் சட்டைச் செய்யவில்லையே என்ற யோசனையில் தலை உயர்த்திப் பார்த்த விரூபாதான் அங்கு நிலவிய மௌனத்தைக் களைந்தாள்.
“மம்மா….மம்மா” என ரம்யாவின் காலில் சுராண்டினாள்.
கண்களைத் துடைத்துக்கொண்டு குழந்தையைத் தூக்கி முத்தமிட்டவள், தங்களையே ஏறிடும் குடும்பத்தினரைப் பார்த்ததும்,
“தருண்! உன் வாய்க்குச் சர்க்கரைத்தான் போடணும்டா. நீ சொன்னமாதிரி நான் எதிர்பார்க்காத நேரத்துல கடவுள் எனக்குச் சந்தோஷத்தை அள்ளி அள்ளி தந்திருக்காரு பாரு,” அவனிடம் ஓடி பூரித்தாள்.
தோழியிடம் உண்மையை மறைக்க மனமில்லாதவன், அவள் முகத்தைக் கண்பார்க்க பிடித்துக்கொண்டு, “உன் புருஷனுக்குக் குணமாகி ரெண்டு வாரமாகப்போகுது ரம்யா. விரதம் முடியுற அன்னைக்குத்தான் சொல்லணும்னு என் வாயைக் கட்டிப்போட்டுட்டான்,” தலைகுனிந்து மன்னிப்பை யாசித்தான்.
“ஏன் ஷ்ரவன் உடனே சொல்லல? ரெண்டு வாரத்துக்கு மனசுக்குள்ளேயே மறைச்சு வச்சுக்க உங்களால எப்படி முடிஞ்சுது?” கசந்த குரலில் வினவினாள்.
“நீ ஏன் ரம்யா இதை ஒன்றரை வருஷமா உன் மனசுக்குள்ளேயே மறைச்சு வச்சிருந்த? என்வெலப்பை உயர்த்திக் காட்டினான்.
அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல், “அது… அது… என்னோட முடிஞ்சுபோன விஷயத்தைப்பற்றி எதுக்குச் சொல்லணும்னுதான்…” திக்கினாள் பாவை.
“உன்னோடவா?” அதட்டியவன்,
“இது நம்ம விஷயம் ரம்யா. சுகம் துக்கம் இரண்டிலும் எனக்கும் சரிபங்கு இருக்கு,” எகிற, பொலபொலவெனக் கண்ணீர் வடிக்கத் தொடங்கினாள் பாவை.
“இப்ப எதுக்குடா அவளை அழவைக்கிற,” தாமோதரன் மகனைக் கண்டிக்கவும்,
“ப்ளீஸ் ஷ்ரவன்! இதைப்பற்றி அப்புறம் பேசலாமே,” அவன் கன்னத்தில் வருடி கெஞ்சினாள். வம்படியாக முகத்தைத் திருப்பிக்கொண்டான் அவன்.
“அப்படி என்னதான்டா வச்சிருக்கீங்க அந்த கவர்ல?” மண்டையே வெடித்தது தருணுக்கு.
“என் ஃப்ரெண்ட் என்கிட்ட எதையும் மறைக்கமாட்டான்னு ஜம்பம் அடிப்பியே. அவகிட்டயே கேளு,” மனையாளைக் கோத்துவிட்டான் ஷ்ரவன்.
பெண்ணவள் தலைகுனிந்து கண்ணீர் வடித்தாள்.
தனக்குக் கோபமில்லை; ஆதங்கம் மட்டுமே என உணர்த்தும் விதமாக, மனையாளின் தோளினைச் சுற்றி இறுக அரவணைத்துக் கொண்ட ஷ்ரவன்,
“நாங்க பறிகொடுத்தது ஒரு குழந்தையை இல்ல. ரெண்டு குழந்தைகளை. உன் சுமைத்தாங்கி ஃப்ரெண்ட் இத்தனை நாளா தனக்குள்ளேயே மறைச்சு வச்சு மனசுக்குள்ள புழுங்கியிருக்காடா, ” ஆற்றாமையில் தம்பியிடம் கவரை நீட்டினான்.
அனைவரும் பேரதிர்ச்சியில் உறைந்து நிற்க, தோழியை ஏறிட்ட தருணின் விழிகளில் வலி தொக்கி நின்றது. கனத்த மனத்துடன் கவரை பிரித்தான். குனிந்த தலை நிமிராமல் விசும்பினாள் அவன் அன்புத்தோழி.
அழக்கூடாது எனத் தன் பிஞ்சுவிரல்களால் கண்களைத் துடைத்துவிடும் குழந்தையின் ஸ்பரிசத்தில் மனபாரம் கூட, விரூபாவை மாமியாரிடம் இறக்கிவிட்டாள்.
அல்ட்ரா சவுண்ட் நிழற்படங்களைக் கண்ட குடும்பத்தினரின் அங்கமெல்லாம் சிலிர்த்தது. பின்னிப் பிணைந்திருந்த சிசுக்களின் தரிசனத்தில் மூச்சுமுட்டியது.
ஆண்கள் மனத்துக்குள் புழுங்க, படத்தைக் கையில் வாங்கிக்கொண்ட சாருலதாவுக்கும், பரிதவிப்புடன் வருடிய திலகாவுக்கும் உத்ராவுக்கும் கண்கள் குளமாகின. அழுதுவிடக்கூடாது எனப் பெரும் தவிப்புடன் சிலையாக நின்றிருந்தான் தருண்.
அந்தக் கவர் முழுவதிலும் நிரம்பியிருந்த பென்சில் வரைப்படங்களை உற்று நோக்கிய உத்ரா,
“அண்ணா! இதெல்லாம் அந்த மான்டசரி ஸ்கூலுக்கு டிசைன் பண்ண மாதிரியே இருக்கே,” என வியந்தாள்.
“ஆமாம் உத்ரா. எனக்கு விபத்து நடந்த அன்னைக்குக் காலையில தான் ஸ்கேன்னுக்குப் போயிட்டு வந்தோம்; ஸ்கேன் ரிப்போர்ட் டாக்டர்கிட்ட காட்ட வெயிட் பண்ணும்போது புது பிராஜக்ட் டிஸைன்ஸ், பேடன்ட் பற்றி எல்லாம் ரம்யாகிட்ட சொல்லிட்டு இருந்தேன்.
முதல் க்ரிப் நம்ம குழந்தைக்குத் தான்னு நான் சொல்லவும், இரட்டை குழந்தைகளில் ஃப்ர்ஸ்ட் செகண்டுன்ற பேச்சுக்கே இடம் வரக்கூடாது ஷ்ரவன்னு, இவ என்னை ரெண்டு குழந்தைகளையும் விடுற மாதிரி ட்வின்ஸ்க்கான க்ரிப் டிசைன் பண்ண முடியுமான்னு கேட்டா. அப்போ வரைஞ்ச ஸ்கெட்சஸ் தான் அத்தனையும்,” என விளக்கினான்.
அதுவே அவன் நினைவுகள் திரும்ப தூண்டலாக இருந்த மூலப்பொருள் என அலுவலகத்தில் நடந்த அத்தனையையும் எடுத்துச்சொன்னாள் உத்ரா.
“என் அஜாக்கிரதையினால உங்க கனவுல மண்ணளிப் போட்டுட்டேனே ஷ்ரவன்,” கூனிக்குறுகிப் போனாள் பெண்.
“இதுல உன் தப்பு எதுவுமில்லன்னு எத்தனைமுறை சொல்றது,” தலைகோதி ஆறுதல் சொல்லியும் சாமாதானம் ஆகவில்லை.
“மனச தளரவிடாதீங்க ‘க்கா. அதே குழந்தைகள் உங்ககிட்ட வரத்தான் போகுறாங்க,” தேற்றினாள் உத்ரா.
ஜோடிகளின் எட்டு வருட காத்திருப்புக்குக் கிடைத்த பலனா இது என மனம் நொந்த பெற்றோர், ரம்யாவின் கன்னத்தை வருடி கேள்விகளால் துளைத்தனர்.
மிகுந்த அன்பிலும் அக்கறையிலும்தான் வினவுகிறார்கள் என்ற போதிலும், சங்கடத்தில் அசையாது நிற்கும் பாவையின் பரிதவிப்பைக் காண சகிக்காகமல், தன்னருகே இழுத்துக்கொண்டான் ஷ்ரவன்.
“போதும் நிறுத்துங்க! என் பொண்டாட்டியைக் கேள்வி கேக்குற உரிமையை யாரு உங்களுக்குக் கொடுத்தா,” குரலை உயர்த்தினான்.
“நீதானேடா அவ நம்ம யார்கிட்டயும் சொல்லாம மறைச்சிட்டான்னு குறைபட்ட,” திலகா கவலைக்கொள்ள,
“ஹான்! குறைபட்டேன் அவ்வளவுதான்! உங்க எல்லாரையும் எனக்கு வக்கீலா மாதிரி குறுக்குவிசாரணை செய்யச்சொல்லல,” என எகிற, அனைவரும் வாயைடைத்து நின்றனர்.
பெரியப்பாவிற்கு ஜால்ரா அடிப்பதுபோல விரூபா, கண்களைச் சுருக்கி, தன் பிஞ்சு விரல்களை அசைத்து, அனைவரையும் ஆ… ஊ…ஏ…அடி… என மழலை மொழியில் அதட்டி,
“மம்மா… ஈஈஈஈ” என ரம்யாவின் முகத்தை வருடி சிரிக்கச்சொல்லி பல்லிளித்தாள்.
குழந்தையின் பளிங்கு முகத்தில் உள்ளத்தைத் தொலைத்த பெண் கண்ணீரும் சிரிப்புமாய் தலையசைத்து அவள் நெற்றி முட்டினாள்.
அதில் உச்சிகுளிர்ந்த குழந்தை, “பெப்பா! பெப்பா!” என கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தாள்.
“நீதான்டா உன் பெரியம்மாவை வழிக்கு கொண்டுவர சரியான ஆளு,” மெச்சி குழந்தையைத் தூக்கிக்கொண்டவன்,
மறுகையால் மனையாளின் முகத்தைக் கண்பார்க்க நிமிர்த்தி, “நீ கேட்ட மாதிரியே உன்னுடைய ஷ்ரவனா வந்துட்டேன் ரம்யா. இனி நீ எதையும் எந்தக் காரணத்துக்காகவும் என்கிட்டேந்து மறைக்கக் கூடாது,” எனக் கைநீட்டி காத்திருந்தான்.
“பிராமிஸ்!” என்றவள் கர்ப்பப்பை எடுத்ததைப்பற்றி உடனே சொல்லலாமா வேண்டாமா என மனத்தில் ஊசலாடினாள்.
“குணமானதும் இந்த இழப்புக்கான தீர்வை சேர்ந்து கண்டுபிடிக்கலாம்னு சொன்னீங்களே ஷ்ரவன். மனசுல ஏதாவது வச்சிருக்கீங்களா,” அவன் உள்ளத்தை அறிய விழைந்தாள்.
இரண்டு வார தேடல்களின் பதில்கள் கண்முன் நிழலாட, “ம்ம்… ஆனால் அதுக்கான நேரமும் இடமும் இது இல்ல,” என்றதும்,
ரம்யா உட்பட அனைவரும் அவனை யோசனையாக ஏறிட்டனர்.
“டின்னர் முடிஞ்சதும் நாம நம்ம ஹனிமூன் ரெசார்ட்டுக்குக் கிளம்புறோம்,” என நுனிமூக்கைக் கிள்ளி கண்சிமிட்ட, கலவரமானாள் பெண்.
ஷ்ரவனின் திட்டத்தைக் கேட்ட குடும்பத்தினர் நெகிழ்ந்தபோதிலும், வழக்கம்போல அலப்பறை செய்யும் மனநிலையில் இல்லை. பல வலிகளைக் கடந்துவந்திருக்கும் தம்பதிகளுக்கு அந்தத் தனிமை எத்தனை அவசியம் என உணர்ந்து அமைதிகாத்தனர்.
வீட்டின் சாவியை முன்வந்து கொடுத்தார் ரவிச்சந்திரன். தாங்கிப்பிடிக்க நான் இருக்கிறேன் என உறுதியளித்து மகனின் தோளில் தட்டியும், மருமகளின் கன்னத்தை வருடியும் புன்னகைத்தார் தாமோதரன். இரவு உணவுக்குப் பின் கிளம்பச்சொல்லி திலகா சமையலறைக்குள் புக, அவருக்கு உதவுகிறேன் எனப் பின்தொடர்ந்தார் சாருலதா.
உத்ராவும் குழந்தைக்குச் சாப்பாடு ஊட்ட நகர, தன் அசைவுகளையே கவனித்து நிற்கும் நண்பன் அருகில் நடந்தாள் ரம்யா.
“உன்கிட்ட சொல்லக்கூடாதுன்னு இல்லடா…” தொடங்கியதுமே,
“நீ எது செஞ்சாலும் யோசிச்சுத்தான் செய்வன்னு எனக்குத் தெரியும் ரம்யா,” அவன் தடுக்க, குற்றவுணர்ச்சியில் பரிதவித்தாள் பெண்.
அழுது அழுது வீங்கிப்போயிருந்த தோழியின் கன்னங்களை ஆதுரமாய்த் துடைத்துவிட்டவன், “உன் வலி எனக்குப் புரியாம இல்ல ரம்யா. அதுக்காக நடந்ததையே நெனச்சு அழுதுட்டு இருந்தால் எதையாவது மாத்த முடியுமா சொல்லு,” என்றான்.
இல்லை என்று அவள் உதட்டைப் பிதுக்கி தலையசைக்க,
“நீ கேட்டா மாதிரியே என் அண்ணன் உன் ஷ்ரவனா திரும்பிவந்துட்டான். இப்போ இந்த நிமிஷத்துலேந்து என் ஃப்ரெண்டும் ஷ்ரவனோட ரம்யாவா மாறணும்னு விரும்புறேன்,” எனத் தெளிவுபடுத்தினான்.
அவன் எண்ணத்தைப் படித்தவள், “ம்ம்! இனி எதுக்காகவும் அழவே மாட்டேன். ஒன்லி சட்டையைப் பிடிச்சு சண்டைதான், ஒகேவா!” எனத் தன்னவனின் பக்கவாட்டில் இடித்துக் குழைந்தாள்.
அவள் சண்டை என்றதும் ஷ்ரவனின் வலதுகரம் தன்னிச்சையாக அவன் கன்னத்துக்கு அரணாக, அதைக் கண்டுகொண்ட தருண் வாய்க்குள் சிரித்துக்கொண்டான்.
சகோதரர்களின் பரிபாஷைகளைக் கண்ட பாவை, தோழனிடம் சங்கதி என்னவென்று கண்ணசைத்தாள்.
துண்டா முதலுதவி பெட்டியா எனத் தங்கள் பந்தயத்தை ஒப்பித்தான் தருண்.
“நான்தானே ஜெயிச்சேன்,” ஷ்ரவன் தம்பியைச் சீண்ட,
“என்னை மறந்துபோனதும் இல்லாம பெட் வேற கட்டி விளையாடுறீங்களா,” பெண்மான் நறுக்கென்று கிள்ளியதில் அந்த நிமிடமே அவன் கன்னமும் பழுத்திருந்தது.
மணி எட்டாகிவிட்டது எனச் சுவர் கடிகாரத்தைப் பார்த்தவள், சமையலறைக்குள் நகர, அவள் கையைப் பிடித்துத் தடுத்த ஷ்ரவன்,
“அந்த கிளாக் தானே இவனோட ஃப்ரெண்ட்ஸ் நம்ம கல்யாணத்துக்குத் தந்த கிஃப்ட்,” எனப் புருவங்களை வளைத்தான்.
ஆமாம் என ரம்யா புன்னகை முகமாய் தலையசைக்கவும்,
“சூப்பர் அண்ணா!” என மூவருடனும் இணைந்துகொண்டாள் உத்ரா.
“வாங்க மேடம்! உங்களத்தான் தேடிட்டு இருந்தேன்,” என அவள் காதுகளைத் திருகிய ஷ்ரவன், “எங்க கல்யாணத்துக்குப் பரிசு கொடுக்கும் சாக்கில், உங்க லவ்வை வீட்டுல சொல்ல நீ தந்த ஐடியா தானே அது,” என மடக்கினான்.
“அம்மாடியோ! குணமானது தான் ஆனீங்க, உங்களுக்கு எலிஃபேன்ட் மெமரி வந்துடுத்து ‘ண்ணா,” மெச்சி அசடுவழிந்தாள் உத்ரா.
“பேச்சை மாத்தாம என் கேள்விக்குப் பதில்சொல்லு!” என்றான் விடாப்பிடியாக.
ஷ்ரவன் ரம்யா நிச்சயதார்த்த ஆல்பத்திலிருந்து, குடும்பத்தினரின் இனிமையான தருணங்களை நினைவூட்டும் நிழற்படங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை குட்டிக் குட்டியாக வெட்டி கடிகாரத்தின் பன்னிரண்டு எண்களுக்கும் இடையில் ஒட்டியிருந்தனர் தருணின் நண்பர்கள். குடும்பத்தினருக்கு இடையில் சம்பந்தமே இல்லாமல் தம்பியுடனும், மனையாளுடனும் ஒட்டியும் ஒட்டாமல் இருக்கும் அந்தச் சுட்டிப் பெண்ணின் உருவத்தைத் தற்செயலாக ஒட்டியிருக்கிறார்கள் என்று ஷ்ரவனால் அவ்வளவு எளிதாக விடவில்லை.
ஷ்ரவனின் துப்பறியும் திறத்தால் தம்பியின் காதல் கதை வெளிச்சத்திற்கு வந்திருந்தது.
அதை நினைவுகூர்ந்தவள், “பின்ன என்ன ‘ண்ணா. இவன் எங்க லவ் மேட்டர் வீட்டுல சொல்லுவான்னு நானும் எத்தனை நாளுக்குத்தான் காத்திட்டிருக்கிறது,” அப்பாவியாக தன்னவனை முறைக்க, அந்தநாள் நினைவில் நால்வரும் லேசான மனத்துடன் அளவளாவினர்.
error: Content is protected !!