Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

88. வித்யா வெங்கடேஷ் - நிழலாடும் நின் நினைவில்

நிழலாடும் நின் நினைவில் – 26.02

ஓம் ஸ்ரீ சாய்ராம்

வழக்கத்திற்கு மாறாக மாமனார் வீட்டிற்குத் தோள்பையுடன் புறப்பட்ட கணவனை ஏற இறக்கப் பார்த்தாள் ரம்யா. வீட்டிற்குச் செல்லும்வரை வாய்திறக்கக் கூடாது எனக் கட்டளையிட்டவன், நடுவழியில் மருந்தகத்திற்கு வேறு சென்றுவர, திக்திக் என்றிருந்தது பெண்ணுக்கு.

“என்… என்ன வாங்கிருக்கீங்க ஷ்ரவன்,” அந்தப் பழுப்பு நிற பேப்பர் பையையே வெறித்துப் பார்த்தாள்.

“ஏன் உனக்குத் தெரியாதா!” எனக் கண்சிமிட்டி சிரித்தவனின் முகபாவனையில் விதிர்விதிர்த்துப்போனாள்.



Advertisement

“10 மினிட்ஸ்! குளிச்சிட்டு வரேன்!” என்றவன் பையிலிருந்து லிரில் சோப்புக்கட்டியை எடுத்துக்கொண்டு உள்ளக்கிளர்ச்சியுன் குளியலறைக்குள் செல்ல, அந்தப் பழுப்பு நிற பேப்பர் பையையே வெறித்துப் பார்த்தபடி ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் அமர்ந்திருந்தாள்.

குளித்து முடித்து வந்தவன், பின்னாலிருந்து அணைத்தபடி, முகத்தை அவள் கழுத்தில் புதைத்துக்கொண்டு, “ஐ லவ் யூ பொண்டாட்டி,” எனக் காதோரம் கிசுகிசுத்தான்.

லிரில் சோப்பின் வாசத்திலேயே பெண்ணவளின் உணர்ச்சிகள் ஆட்டம் கண்டன.

Advertisement

அவன் ஆசைகளுக்குத் தடைவிதித்துக் காயப்படுத்தி விடக்கூடாது எனத் தன் கண்களையும் கைவிரல்களையும் இறுக்க மடக்கிக்கொண்டாள்.

Advertisement

அவனோ, “கண்ணைத் திறந்து என்னைப் பாருடி,” என வலிய கன்னத்தில் முத்தமிட்டு, அவள் மறக்க நினைத்த அந்தப் பையையே கையில் திணித்துத் திறந்துபார் எனக் குழைந்தான்.

இனியும் வாய்திறந்து சொல்லாவிட்டால் தங்கள் உறவில் நிரந்தர விரிசல் ஏற்பட்டுவிடும் என அஞ்சியவள், வெடுக்கென்று எழுந்து “ஷ்ரவன் ப்ளிஸ்! நீங்க கணவன்ற உரிமை எடுத்துக்கிறதுக்கு முன்னாடி நான் உங்ககிட்ட ஒரு உண்மையைச் சொல்லணும்,” எனப் படபடத்தாள்.

“நீ முதல்ல கவர திறந்து பார்,” அவனிடமும் அதே பிடிவாதம்.

Advertisement

“இங்க வரும்போதெல்லாம் பர்த் கன்ட்ரோல் பில்ஸ் வாங்கிட்டு வருமோன்னு எனக்குத் தெரியும்,” என அவள் பையை டேபிளில் வீசவும்,

அவள் பதற்றத்தை எண்ணி உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவன், தானே கவரில் வைத்திருந்த 5ஸ்டார் சாக்லேட்டுகளை எடுத்துத்தந்து, “ஸாரி ஃபோர் எவ்ரிதிங்க் ரம்யா,” என்றான் காதலாக.

“சோப்பும் சாக்லேட்டும் வாங்க உங்களுக்கு வேற கடையே கிடைக்கலையா?” பெரும் பாரம் நீங்கியதில் அவன் மார்பில் அடித்துச் செல்லச்சண்டையிட்டாள்.

“ராத்திரி பத்து மணிக்கு மெடிகல் ஷாப் தவிர வேறெந்த கடை திறந்திருக்கும்?” நமுட்டுச் சிரிப்புடன் கேள்வியைத் திருப்பினான்.

அதுவும் சரிதான் என அசடுவழிந்தவள், ஒரு சாக்லேட்டை அவனிடம் திருப்பித்தந்து, “எனக்கு அபார்ஷன் மட்டுமாகல ஷ்ரவன்….” தொடங்கவும்,

மறுநொடியே எதுவும் சொல்லவேண்டாம் என அவள் வாயைப் பொத்தியவன்,

“இத்தனை விஷயம் தெரிஞ்சுகிட்ட நான் உன் யூட்ரெஸ் ரிமூவ் பண்ணிணத பற்றி தெரிஞ்சுக்காம இருப்பேனா,” கேட்கவும் விழி அகல அவனை நோக்கினாள்.

அப்போதுதான் அவன் அந்த அல்ட்ராசவுண்ட் நிழற்படங்களை அத்தனை நாட்களாக எங்கே எப்படி அத்தனை பத்திரமாக வைத்திருந்தான் என்ற கேள்வியே மண்டையில் உரைத்தது.

உத்ரா தற்செயலாகக் காட்டிய மான்டசரி பள்ளிக்காக வடிமைத்த கிரிப், அதைத் தொடர்ந்து வந்த கனவு, நிழற்பட நிலையத்திற்குச் சென்றதுவரை மூச்சுவிடாமல் விவரித்தவன், அங்கு நினைவு வந்தது எனப் பொத்தாம் பொதுவாகக் கூறி அதில் விபத்திற்கு முன் அலுவலகத்தில் விட்டுவிட்டுப் போன வடிவமைப்புகளின் கோப்புகளுடன் கோப்பாக அல்ட்ராசவுண்ட் படங்களையும் வைத்திருந்தது நினைவுக்கு வந்தது எனக் கூறினான்.

“அப்படியே இருந்தாலும், உங்களுக்கு ஆக்சிடென்ட் ஆனதுக்கு அப்புறம் தானே எனக்கு அபார்ஷன் ஆச்சு. எனக்கு யூட்ரெஸ் ரிமூவ் பண்ணது பற்றி உங்களுக்கு எப்படித் தெரியவந்தது,” மடக்கினாள் அவன் சரிபாதி.

“ஞானதிருஷ்டில தெரிஞ்சுது,” வம்புசெய்தான் அவன்.

முறைப்பைப் பரிசாய் தந்தவள், “என்னைத் தவிர யாருக்குமே தெரியாதே…” இடை நிறுத்தி,

“அவதானே சொன்னா…. அவள…” வெடுக்கென்று அலைபேசியை எடுத்தாள்.

“நடுஜாமத்தில் இருப்பாடி,” வலிய அவளிடமிருந்து அலைபேசியக் கைப்பற்றியவன்,

“ட்வின்ஸ் பற்றி வீட்டுல யாருக்குமே தெரியலன்னு முதல்ல கண்டுபிடிச்சேன். நீதான் ஒரு பில் விடாம அத்தனையும் ஃபைல் பண்ணி வச்சிருப்பீயே. உனக்கு ட்ரீட்மென்ட் தந்த டாக்டர்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்னு ரிப்போர்ட்ஸ் எடுத்தேன். டாக்டர், கார்டியன்னு எல்லா இடத்துலயும் மேடம்தான் சைன் போட்டிருந்தாங்க. ரிப்போர்ட்லே உனக்கு யூட்ரெஸ் ரிமூவ் பண்ணிட்டாங்கன்னு புரிஞ்சுது. என்ன ஏதுன்னு கன்ஃப்ர்ம் பண்ணிக்க அவளுக்குக் கால் பண்ணேன்,” விவரிக்கவும்,

“ஹரிச்சந்திரனுக்கு அக்கா எல்லாத்தையும் சொல்லிட்டாளா!” கழுத்தை நொடித்தாள் ரம்யா.

“உன்னை மீறி சொல்லிடுவாளா,” சலித்துக்கொண்டவன்,

“எங்க வாழ்க்கை மேல உண்மையிலேயே அக்கறை இருந்தா என்ன நடந்துதுன்னு சொல்லு ஷர்மிலா, அப்படின்னு மிரட்டினதுக்கு அப்புறம்தான் வாயே திறந்தா,” எனப் பெருமூச்சுவிட்டான்.

நிதர்சனம் எதிர்காலத்தைப் பளிச்சிட்டுக் காட்ட, “இன்னைக்கு ஒருநாள் எதைப்பற்றியும் யோசிக்காம உங்க கை அணைப்பில் நிம்மதியா தூங்கணும்னு ஆசையா இருக்கு ஷ்ரவன்,” எனக் கசந்த குரலில் கேட்டாள்.

“எனக்கும்தான் ரம்யா,” உடைந்தவன் உச்சந்தலையில் முத்தமிட்டான்.

கை சேர்ந்த தாரகையின் ஸ்பரிசத்தில் லயித்தவனாக அவன் கண்ணசர,

“அது சரி! சம்பந்தமே இல்லாம அந்த ஃபோட்டோ ஸ்டுடியோ ஏன் உங்க கனவுல வந்துது. அங்க அப்படி என்னத்த பார்த்து உங்களுக்கு நினைவுகள் திரும்பித்து,” என எழுந்து அமர்ந்தாள்.

அல்ட்ராசவுண்ட் நிழற்படங்களுக்கே விடாமல் கண்ணீர் சிந்தியவள், பரிசுப்பொருளைக் காட்டினால் மொத்தமாய் உடைந்துவிடுவாளே என எண்ணியவன்,

“நாளைக்குச் சொல்றேனே ப்ளீஸ்,” என அவளை இழுத்தான்.

அவன் தோரணையிலேயே ஏதோ விவகாரம் இருக்கிறது என உணர்ந்தவள் உடனுக்குடன் சொல்லியே ஆகவேண்டும் எனத் தர்க்கம் செய்தாள்.

பெருமூச்சுடன் எழுந்தமர்ந்தவன், “சரி! சொல்றேன். ஆனால் அழக்கூடாது; அப்செட் ஆகக்கூடாது,” நிபந்தனைகளை அடுக்கினான்.

“தருண் பிராமிஸ்! அழமாட்டேன்,” என்றாள் திடமாக.

சொல்கிறேன் என்றவன் அலமாரியை நோக்கி நகர அவனைக் கேள்வியாகப் பார்த்தாள். தவிப்புடனும் தயக்கத்துடனும் பையில் வைத்திருந்த கிரிஸ்டல் பந்தை அவளிடம் நீட்டினான்.

கருப்பையில் உருளுவது போலவே இதய வடிவில் இணைந்திருக்கும் தன் இரு செல்வங்களையும் கண்டவளுக்கு மூச்சுமுட்டியது. சிசுக்களின் அழகை கருவிழிகளில் நிரப்பிக்கொண்டவள், சத்தியம் செய்த ஒரே காரணத்திற்காக, மடை திறந்த வெள்ளமாய் பொழியயிருந்த கண்ணீருக்கு அணைக்கட்டினாள்.

அழவில்லை என்ற பெரும் நிம்மதியுடன் அன்று அந்தக் கடைக்குச் சென்ற காரணத்தை விவரிக்கத் தொடங்கினான் ஷ்ரவன்.

“அன்னைக்கு உன்னை வீட்டுல இறக்கிவிட்டுட்டு சைட்டுக்குப் போகுற வழியில் டிரைவிங்க் லைசென்ஸ் எக்ஸ்பயர் ஆக இருந்தது நியாபகம் வந்துது. பாஸ்போர்ட் ஃபோட்டோ எடுத்துட்டா ஒரு வேலை மிச்சம்ன்னு வழில கண்ணுக்குத் தென்படுற ஸ்டுடியோக்குப் போகலாம்னு இருந்தேன். அப்படித்தான் அங்க போனேன்.

ஃபோட்டோக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கும்போது அங்க இருந்த விதவிதமான பரிசுப்பொருள்களைப் பார்த்ததும், உன் பர்த்டேக்கு இதைவிட வேறென்ன பெஸ்ட் கிஃப்ட் தரமுடியும்ன்னு யோசிச்சேன்.

ஸ்கேன் ரிப்போர்ட் எடுக்க திரும்பி வரதாதான் இருந்தேன். அன்னைக்குன்னு பார்த்து நீ ஸ்கேன் ரிப்போர்ட்ட என் லேப்டாப் பேக்ல வச்சிருந்த. உடனே ஆர்டர் செஞ்சேன். டெலிவர் பண்ண ரெண்டு நாள் ஆகும்னு சொன்னாங்க. ஆனால்…”என்றவன்,

அவள் செய்துகொண்டு இருப்பதைக் கண்டு பதறிப்போனான். தான் சொன்னதில் ஒரு பங்குக் கூட அவள் செவிகளில் எட்டவே இல்லை என்பதை அவள் உடல் மொழியே சொன்னது.

அந்த கிரிஸ்டல் பந்தைத் தன் வயிற்றோடு அணைத்து கர்ப்பத்தின் சுகமான உணர்வுகளை, தன்போக்கில் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தாள் பேதை.

“ரம்யா….” உலுக்கியவனின் மனம்தான் மங்கையின் எதிர்வினையில் சுக்குநூறாய் உடைந்தது.

“நம்ம குழந்தைகள் ரெண்டு பேரும் இந்த க்ரிஸ்டல்குள்ள பத்திரமா இருக்குற மாதிரி எனக்குத் தோணுது ஷ்ரவன்,” என்றவள் பந்தை மென்மையிலும் மென்மையாக அசைக்க, சிசுக்களின் உருவங்களும் திரவத்தில் அழகாய் மிதந்தன.

இப்படி ஒரு நினைவு சின்னமாய் ஆகும் எனக் கனவிலும் நினைக்கவில்லை அவன்.

“எல்லாம் என்னாலதான் ரம்யா! எல்லாம் என்னாலதான்!” அவன் தலையில் அடித்துக்கொண்டு ஓ என்று கதறினான்.

பதறியவள் அவனை மொத்தமாய் தன்னுடன் அணைத்துக்கொண்டு,
“என்னை அழக்கூடாதுன்னு சொல்லிட்டு நீங்க இப்படி இமோஷனல் ஆனா என்ன அர்த்தம் ஷ்ரவன்,” மிரண்டு போன சேயை ஆசுவாசப்படுத்துவது போல கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள்.

அந்த இறுக்கத்தை மீறியும் அவன் உடல் நடுக்கத்தில் அதிர்வதை உணரவே செய்தாள் பெண்.

தான் ஒன்றரை வருடங்களாக மெல்ல மெல்ல கண்ணீர் வழியே கரைத்த மனத்துயரை அவன் ஒரேநாளில் கரைக்கிறான் எனத் தன்னவனின் வலியை உணர்ந்தவள், விடியும் பொழுதில் புதியதொரு வாழ்க்கையை வாழ்வோம் என மனதளவில் சொல்லிக்கொண்டு, அழுது தீர்க்கட்டும் என அமைதிகாத்தாள்.

அழுது அழுது ஓய்ந்தவன் அவள் அரவணைப்பில் அப்படியே உறங்கியும் இருந்தான்.


ஏழு மணி அளவில் உணவு மேஜைக்கு வந்தவனின் கோலம் கண்டு பெருமூச்சுவிட்டாள் பெண். க்ரிஸ்டல் பந்தை இயந்திர கதியாகப் பந்தாடிக்கொண்டிருந்தான்.

அவளைப் பார்த்ததும், “இதெல்லாம் எனக்கான கர்மவினை ரம்யா…” புலம்பத் தொடங்கினான்.

காபி குடித்து முடித்துவிட்ட பிறகே பேசவேண்டும் என அன்புக்கட்டளையிட்டாள் பாவை.

அவன் குடித்து முடிக்க எடுத்துக்கொண்ட அந்த இடைவெளியில் ‘நான் உயிருக்கு உயிரா நேசிக்குற என்னோட ஷ்ரவன் என்கிட்டயே வந்துட்டாரு. இனி எப்பேர்ப்பட்ட சவாலையும் தலைநிமிர்ந்து ஃபேஸ் பண்ணுவேன்,’ தனக்குத்தானே உறுதிமொழி எடுத்துக்கொண்டாள்.

அவன் காலி டம்ளரை கீழே வைக்கவும், “மனசுல இருக்கறத எல்லாம் கொட்டித் தீர்த்துடங்க ஷ்ரவன்,” ஆறுதலாய் பேசினாள்.

“அநாதையா கிடந்த இரட்டைக் குழந்தைகள வளர்க்கிறத விட என் கெரியர்தான் பெருசுன்னு சுயநலமா சிந்திச்சதுக்கும், எனக்குன்னு குழந்தைகளே வேண்டாம்னு அலட்சியமா முடிவெடுத்ததுக்குமான தண்டனைதான் இது ரம்யா.

மனசளவுல வருந்தினா மட்டும் நீ செஞ்சது தப்பில்லன்னு ஆயிடுமான்னு,கடவுள் இந்த வலியையும் வேதனையையும் நேரடியா அனுபவிக்க வைக்குறாருன்னு புரியுது.

ஆனால் எந்தத் தப்பும் செய்யாத நீ என்னைவிட அதிகமா தண்டனையை அனுபவிக்கிறியே… அதை நினைக்கும்போது மனசு வலிக்குதுடி. எல்லா வலியையும் எனக்கே ஒட்டு மொத்தமா கொடுத்திருக்கலாம்ல.” இயலாமையில் பரிதவித்தான்.

தன் மீது கண்மூடித்தனமான காதலை மட்டுமே பொழியும் தன்னுடைய ஷ்ரவனை அந்தக் குமுறலில் கண்டுகொண்ட பெண்ணவள் சொல்லில் அடங்கா உணர்வுகளில் மிதந்தாள். அவன் வழியிலேயே பேசிப் புரியவைப்பது ஒன்றுதான் வழி என மனத்தை திடப்படுத்திக்கொண்டு,

“சரி! நீங்கதான் கடவுள்ன்னு வச்சுப்போம். இந்த சிடுவேஷன்ல  ஷ்ரவனுக்கு மட்டும் தண்டனையைக் கொடுக்க ஏதாவது வழி இருக்கான்னு சொல்லுங்க?” கேள்வியை எழுப்பினாள்.

“விபத்துல என்னை ஒரேடியா கொன்னுருக்கலாமே!” மின்னல் வேகத்தில் பதிலளித்தான்.

“ஓ! அப்படின்னா, நீங்க உயிரோட இல்லேன்னாலும் பரவாயில்லன்னு, நானும் குழந்தைகளும் சந்தோஷமா இருந்திருப்போமா,” கண்களை உருட்டினாள்.

சிந்திக்காமல் பேசிவிட்டேன் என அவள் முகத்தை ஏந்தி மன்னிப்பை யாசித்தவன், “விபத்துல கை கால் விளங்காம போய், கண்ணெதிரில் இருக்கும் குழந்தைகளை தூக்கி கொஞ்ச முடியாம… அப்படின்னு ஏதாவது….” அவள் முகபாவனையிலேயே வாயை மூடிக்கொள்ள,

“காலத்துக்கும் குழந்தைகளுக்குச் சுமையா இருக்கும் அப்பாவா வாழுறததான் விரும்புறீங்களா,” இடித்துக்காட்டினாள்.

தலை குனிந்து மௌனம் சாதித்தான். இரண்டு நிமிடங்கள் காத்திருந்தவள், அவன் முகத்தைக் கண்பார்க்க நிமிர்த்தினாள்.

“கர்மவினைன்னு நானும் ஒத்துக்கிறேன். ஆனால் எனக்கும் சரிபங்கு உண்டு,” என்றவளைப் புருவங்கள் வளைய ஏறிட்டான்.

“குடும்பக் கட்டுப்பாடு செஞ்சுகிட்டது உங்க தப்புன்னா, நமக்கு குழந்தைகளே இல்லேனாலும் பரவாயில்ல; தாம்பத்திய சுகம் மட்டும் போதும்னு பில்ஸ் எடுத்துக்கிட்டது என் தப்பு,” பகிரங்கமாய்க் கூற, ஆடிப்போனான் அவன்.

“பிள்ளைவரம் தந்து ஆசைக்காட்டின கடவுள், இத்தனை நடந்தும், உங்களை என்கிட்டேந்தும் என்னை உங்ககிட்டேந்தும் பிரிச்சு தண்டிக்கலையே. ஏன் தெரியுமா?” எனச் சிந்திக்கச் சொன்னாள்.

எதிர்மறையான எண்ணங்கள் மட்டுமே மனக்கண்ணில் நிழலாட, வாய்விட்டுச் சொல்லி மனையாளிடம் வாங்கிக்கட்டிக் கொள்ள வேண்டுமா என யோசித்தவன், தெரியவில்லை என இடவலமாய்த் தலையசைத்தான்.

“இதே காதலோட உறவாடி செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தேடுங்கன்னு நமக்கு மறுஜென்மம் தந்திருக்காரு,” பதில்சொல்லி கணவனின் தோள்சாய்ந்தாள் பாவை.

இன்பத்திலும் துன்பத்திலும் சரிபங்கு உண்டு,
இல்லற தர்மத்தின் வழிநடந்தால் போதுமென்று இருந்தோம்;
பாவத்திற்கும் புண்ணியத்திற்கும் சன்மானம் உண்டு,
பயணப் பாதையில் விழித்துக் கொண்டோம்;
ஆட்டிப்படைக்கும் கர்மவினைகள் தீர – விடை தேடுகிறோம்
ஆண்டவனே! நிழலாடும் நின் நினைவில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!