தேன் சிந்துமோ மேகம்-07
அத்தியாயம் – 7
“காலை வணக்கம்பா” என இனிய மழலைக் குரல் கேட்கவும், மகிழ்ச்சியுடன் எழுந்த எழிலனுக்கு அன்றைய நாள் உற்சாகமாக ஆரம்பித்தது. அதே உற்சாகத்துடன் வழக்கமாக மெசேஜ் செய்யும் குழுக்களுக்கு காலை வணக்கம் மெசேஜ் அனுப்பி வைத்தான்.
இரவு மெசேஜ்கு பதில் சொல்லாத நிலா, காலை வணக்கத்திற்கு பெரிய கும்பிடு போட்டிருந்தாள். அதைப் பார்த்த எழிலன் சிரித்தான்.
அதன் பின் தனியாக நிலாவிற்கு மட்டும் காலை வணக்கத்தோடு பூக்கள் படம் அனுப்பி வைத்தான். அத்தோடு கண்ணடிக்கும் ஸ்மைலி ஒன்றும் சென்றது.
Advertisement
பின் எஸ்பிபியின் பக்தி ஆல்பத்தில் இருந்து ‘அனல் முக நாதனே.. அருள் நிறை மந்திரம்’ பாடல் ஒலிக்க விட்டபடி, தனக்கு காலை, மதிய உணவுகளை சமைத்து எடுத்துக் கொண்டான்.
நிலவனின் உதவியாளர் மேன்ஷன் போல பார்க்கவா எனக் கேட்ட போது இரண்டு பெட்ரூம் கொண்ட தனி வீடாகவேப் பார்த்துத் தரக் கேட்டிருந்தான் எழிலன்.
நிலவனுக்கு இந்த அபார்ட்மெண்டு செகரெட்டரி தெரியும் என்பதால், அவரின் மூலமாக மூன்றாம் மாடியில் இந்த வீடு கிடைத்தது. நிலவனுக்கு இதுவும் தீப்பெட்டி சைஸ் தான் என்றாலும், எழிலனுக்கு இது வசதியான வீடு தான்.
Advertisement
எப்படியும் குறைந்தது அவனின் ஆராய்ச்சி முடிய இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆகும் என்பதால், எழிலனின் பெற்றோர் வந்து செல்ல ஏதுவாக இந்த வீடே வசதி என நினைத்தான்.
Advertisement
ஆனால் எழிலனே நிலாவின் வீட்டு அருகில் இந்த அபார்ட்மெண்டு இருக்கும் எதிர்பார்க்கவில்லை.
எழிலன் வழக்கம் போல தனது புல்லட் எடுத்துக் கொண்டு கல்லூரி செல்ல, நிலாவை அவளின் தந்தை அதியமான் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் கொண்டு விட்டார்.
ஆதிராவும் முன்னதாகவே வந்து தனது கியூட்டியை ஸ்டண்ட்டில் நிறுத்தி விட்டு, பேருந்து நிற்கும் இடத்தில் காத்திருந்தாள்.
Advertisement
அதியமான் இறங்கி ஆதிராவிடம் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டுச் சென்றார். இந்த காட்சி நிலவன் உடன் இருந்தால் நடக்காது. யாரிடமும் அனாவசியமாக நின்று பேசும் சுபாவம் கொண்டவன் அல்ல நிலவன்.
அதியமான் அல்லது நிலவன் இருவரில் ஒருவர் தான் நிலாவை அழைக்க வருபவர்கள். முதல்முறை நிலவனை நிலா அறிமுகப்படுத்த சின்ன சிரிப்புடன் ஹலோ என்றவன், எந்த ஏரியாவில் வசிக்கிறாள் என சில அடிப்படை விவரங்களைக் கேட்டுக் கொண்டான். அதற்கு பின் நிலவன் அதிகம் வருவதில்லை.
அதனால் ஒருமுறை நிலவன் நிலாவை அழைக்க வந்தபோது, ஆதிரா “ஹலோ மிஸ்டர் நிலவன், பார்த்து ரொம்ப நாள் ஆச்சே? வேலை அதிகமா?” எனச் சாதரணமாகத் தான் கேட்டாள்.
நிலவன் என்ன நினைத்தானோ “வேலை வெட்டி இல்லாத ஆள்னு என்னை நினைச்சீங்களா? என கோபத்துடன் கேட்டான்.
ஆதிரா திடுக்கிட்டுப் பார்க்க, நிலா “அண்ணா, ஆதிரா சாதாரணமாதான் கேக்கறா? நீ ஏன் இப்படிப் பதில் சொல்ற?” எனப் பதறினாள்.
நிலாவின் குரலில் சற்றுத் தணிந்த நிலவன், “சும்மா எல்லாம் என்கிட்டே யாரும் பேச வேண்டாம் நிலா. சொல்லி வை. இப்போ காரில் ஏறு” எனக் கூறிவிட்டுத் தன் காருக்குச் சென்றான்.
நிலா தான் “சாரி ஆதி. அண்ணனுக்கு என்ன டென்ஷன் தெரியலை. தப்பா எடுத்துக்காத” என மன்னிப்பு கேட்க, ஆதிராவிற்கு என்ன சொல்ல முடியும்.
“எனக்குப் புரியுது. நீ கிளம்பு. நாளைக்குக் காலேஜ்லே பேசிக்கலாம்” எனத் தன் வண்டியில் சென்று விட்டாள் ஆதிரா.
நிலா வண்டியில் செல்லும்போது நிலவனோடு சண்டையிட, நிலவன் “நான் காரணமில்லாமல் எதுவும் செய்யலை. கொஞ்சம் இடம் கொடுத்தா அட்வாண்டேஜ் எடுத்துப்பாங்க. அதை உன் விஷயத்தில் நான் பார்த்துட்டேன். நான் யாருக்கும் இடம் கொடுக்கிறதா இல்லை. என்ன இதனால் என்னைத் தப்பா நினைப்பாங்களா. நினைச்சுட்டுப் போகட்டும். ஐ டோன்ட் மைண்ட். பட் நீ பண்ணத் தப்ப நானும் பண்ணத் தயாராயில்லை.” என்றான்.
இந்த வார்த்தைகளுக்குப் பிறகு நிலா அமைதியாகிவிட, நிலவனும் வண்டி ஓட்டுவதில் கவனம் வைத்தான். சற்று நேரம் கழித்து நிலாவின் முகத்தைப் பார்த்த நிலவனுக்கு வலித்தது. இப்படி எந்த கஷ்டமும் நேரக் கூடாது என்று தானே நிலாவை அப்படிப் பார்த்துக் கொண்டேன். இருந்தும் எல்லா துன்பங்களும் அவளுக்கு வந்ததை விதி என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல?
நிலாவின் அமைதி, நிலவனை ஏதோ செய்ய “நிலாமா” என மெதுவாக அழைத்தான்.
நிலா அவன் புறம் திரும்ப, “அண்ணா மேல் கோபமா?” எனக் கேட்டான்.
நிலா பதில் கூறாமல் இருக்க, ஒரு பெருமூச்சுடன் “நிலா, நான் உன் ஃப்ரெண்ட்க்காகவும் சேர்த்து தான் இப்படிச் செய்தேன். நான் சாதாரணமா பேசினா, அவங்க அதை வேறே அர்த்தத்தில் எடுத்துக்கிட்டா தப்பாப் போகும். அதோட உன் ஃப்ரெண்ட் சொசைட்டிலே நம்ம மாதிரி செல்வாக்கானவங்க பற்றி தப்பான அபிபிப்ராயம் இருக்கு. நாளைக்கு அவங்க ஸைட்லே யாரோ இப்படிப் பேசுறதைப் பார்த்திட்டு, அந்த பொண்ணுக்குப் பிரச்சினை ஆகிடக் கூடாது. அதான் சட்டுன்னு எடுத்தெறிஞ்சு பேசிட்டு வந்தேன்” என விளக்கம் கொடுத்தான் நிலவன்.
“அண்ணா, எந்த காலத்தில் இருக்க? இன்னிக்கு செலிப்ரிட்டி கூட போட்டோ எடுத்து, அதை இன்ஸ்டாலே ரீல்ஸ் போடற காலக் கட்டத்தில் இருக்கோம். அப்படி எல்லாம் பேசினதுக்காகவே தப்பா நினைக்கிறவங்க யாரும் இல்லை” என்றாள் நிலா.
“ஹ. ஹ. நீ இன்னும் விவரம் தெரியாத பொண்ணுதான்னு அடிக்கடி ப்ரூவ் பண்ணற. உன்னோட சேஃப்டி எனக்கு முக்கியம்னு உனக்குத் தெரியும் தானே. நீ உன் ஃப்ரெண்ட் கூட காலேஜ் பஸ்லே போறனு தெரிஞ்சதும், அவங்க டீடெயில் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டேன். அதில் எனக்குக் கிடைச்ச இன்ஃபர்மேஷன் தான் இது எல்லாம். அவங்க சொசைட்டிலே வெளியில் வேலைக்கு அனுப்புறது எல்லாம் வெளிப் பார்வைக்குத் தான். சின்ன பிரச்சினைனு தெரிஞ்சா போதும் வேறே மாதிரி ரியாக்ட் பண்ணக் கூடியவங்க. முடிஞ்ச வரை நமமாலே யாருக்கும் தொந்தரவு வரக் கூடாது. அது தான் என் பாலிசி” என்றான் நிலவன்.
நிலாவிற்கு நிலவனின் பேச்சில் நம்பிக்கை வரவில்லை. குறும்பான பெண் என்றாலும் ஆதிராவின் பேச்சு, செயல்கள் எல்லாம் மெச்சுர்ட்டாகவே இருக்கும். ஆனால் நிலவனும் பொய் சொல்லக் கூடியவன் கிடையாது.
நிலாவிற்கு எழிலன் மீது விருப்பம் என அறிந்த போதும் கூட உனக்கு ஒத்துவர மாட்டான். ஆனால் நல்லவன் என்று தான் நிலாவிடம் கூறினான். எழிலனைத் தகாத செயல்கள் செய்பவன் என்றோ, கெட்ட பழக்கங்கள் கொண்டவன் என்றோ வாதத்திற்கு கூட நிலவன் சொல்லவில்லை.
அப்படிப்பட்டவன் ஆதிராவைப் பற்றிப் பொய் சொல்ல வாய்ப்பில்லை. நிலவனுக்குத் தவறான தகவல்கள் கிடைத்திருக்கலாம். அல்லது தவறாகப் புரிந்துக் கொண்டிருக்கலாம் எனதான் நினைத்தாள் நிலா.
நிலா அதற்குமேல் நிலவனிடம் ஆதிரா பற்றி எதுவும் பேசவில்லை. மறுநாள் நிலா மீண்டும் அண்ணனுக்காக மன்னிப்புக் கேட்க, ஆதிரா “உன் அண்ணன் பெரிய ஆளாக இருக்கலாம். அதுக்காக பார்க்கிற எல்லாரும் அவர் மேல் பாய்வதாக நினைக்கிறது எல்லாம் ஓவர் கான்ஃபிடன்ஸ். ஏதோ பார்க்க சுமாரா இருக்கிறதால், நாலு பேர் அவருக்குப் ப்ரபோஸ் பண்ணிருக்கலாம். இந்த ஆதிரா ரேஞ்ச்சே வேறே. அதனால் கவலைப்படாம இருக்கச் சொல்லு” என நக்கலாகப் பதில் கூறினாள்.
நிலாவிற்கு வருத்தமாக இருந்தாலும், அண்ணன் செய்ததும் தவறு தானே என நினைத்தவள், ஆதிராவிற்கு ஒன்றும் பதில் கூறவில்லை.
அதற்கு பிறகு நிலவன்தான் நிலாவை அழைக்க வருவான் எனத் தெரிந்தால், ஆதிரா நிற்காமல் சென்று விடுவாள். நிலாவிடம் சரியான பாசமலர் எனக் கிண்டலும் செய்வாள் ஆதிரா.
அதே சமயம் அதியமான் வந்தால் இரண்டு ஒரு வார்த்தை மரியாதையாகப் பேசுவாள் ஆதிரா.
இன்றைக்கும் அப்படிப் பேசிவிட்டு அதியமான் கிளம்பிவிட, இவர்கள் இருவரும் பேருந்து வரக் காத்திருந்தனர்.
அப்போது எழிலன் புல்லட்டில் வந்து நின்றான். ஆதிரா “குட் மார்னிங் எழிலன் சர்” எனக் கூற, அவனும் பதிலுக்கு குட் மார்னிங் கூறினான். நிலா எதுவும் கூறவில்லை. ஆதிரா நிலாவின் தோளில் இடிக்க, நிலாவோ வேண்டா வெறுப்பாகக் கூறுவது போல காலை வணக்கம் என்றாள்.
எழிலனோ விழிகள் பளிச்சிட “காலை வணக்கம் நிலவழகி மேடம்” என்றான்.
நிலா முறைக்க, கண்டு கொள்ளாத எழிலன் “எப்போதும் இந்த டைம் தான் பஸ் வருமா?” எனக் கேட்டான்.
ஆதிரா “இன்னும் ஐஞ்சு நிமிஷம் டைம் இருக்கு சர். நாங்க கொஞ்சம் முன்னாடி வந்திடுவோம். இன்னும் நாலு ஸ்டூடண்ட்ஸ் வருவாங்க. நாங்க லேட்டா வந்தா, அவங்களும் நாளைக்கு அதையே ஃபாலோ பண்ண வாய்ப்பாகும். சோ பதினைந்து நிமிஷம் டைம் இருக்கிற மாதிரி பார்த்துப்போம்” என்றாள்.
“குட்” எனக் கூறிய பின் “ஓகே. நான் கிளம்பறேன் ஆதிரா மேடம், நிலவழகி மேடம்” என்றான்.
ஆதிரா சும்மா இருக்காமல் ‘சர், நீங்களும் இந்த ஏரியா தானே. வண்டியை இங்கே போட்டுட்டு பஸ்லே வரலாமே. இந்த டிராஃபிக்லே லேட் ஆகிடுமே.” என்றாள்.
எழிலன் “மேடம் உங்க கியூட்டியை இங்கே விட்டா எந்த பிரச்சினையும் வராது. ஆனால் என் புல்லட் விட்டுட்டுப் போனா, காயலன் கடைக்குப் போட்டாக் கூட அவன் ஒரு மாசத்துக்கு நல்லா சாப்பிடலாம். அதனால் நம்பி இங்கே எல்லாம் விட முடியாது. அதோட உங்களை மாதிரி தான் நானும். அரை மணி நேரம் டைம் வச்சுத் தான் காலேஜ் கிளம்புவேன். சோ டைம்கு ரீச் ஆகிடுவேன்.” என பல்பு கொடுத்தான்.
நிலா பக்கென்று சிரிக்க, ஆதிரா அசடு வழிந்தாள். நிலாவின் சிரிப்பை ரசித்துப் பார்த்தவன், ஆதிராவையும் சமாதானபடுத்தும் முயற்சியாக “ஆதிரா மேடம், நீங்க ரொம்ப இயல்பா இருக்கீங்க. இந்த ஆட்டியுட் நிஜமாவே எல்லாருக்கும் வராது. குட்” என்றான் எழிலன்.
இந்த பேச்சில் ஆதிரா உச்சி குளிர்ந்து விட “தாங்க்ஸ் சர்” என்றாள். பின் எழிலன் இருவருக்கும் தலையசைத்துவிட்டு கிளம்பினான்.
எழிலன் கிளம்பிய அடுத்த ஐந்து நிமிடத்தில் கல்லூரி பேருந்து வந்திட, இருவரும் ஏறினர்.
ஆதிரா “எழிலன் சர், நல்ல டைப்பா தெரியறார்லே நிலா” என்றாள்.
நிலா வெறுமனே ‘ம்” எனக் கூறினாள்.
“இன்னிக்கு எங்க காஸ்ஸிப் குரூப்லே மெசேஜ். எழிலன் சர் நல்லா பாட்டுப் பாடுவாராம். நேத்திக்கு ஏதோ வெல்கம் பார்ட்டிலே அவர் பாடி, அந்த வீடியோவ ஷேர் பண்ணிருக்காங்க. அது நம்ம குரூப்லே வந்திருக்கு.” என்றாள் ஆதிரா.
“ஓ” என்ற நிலா, “வேறே என்ன நியூஸ் வந்திருக்கு?” எனக் கேட்டாள்.
“பார்றா. நிலாவுக்குக் கூட காஸ்ஸிப் பிடிக்குது” என ஆதிரா கூற, “ஏய் அப்படி எல்லாம் இல்லை. நீ சொன்னதால் வேறே என்னவெல்லாம் வந்திருக்குனு கேட்டேன். சொன்னா சொல்லு. இல்லைனா விடு. ஐ டோன்ட் கேர்” எனப் பதில் உரைத்தாள் நிலா.
“உடனே கோபம் வந்திடுமே நிலவுக்கு” என்ற ஆதிரா, “ஸ்பெஷல் நியூஸ் ஒண்ணுமில்லை. அந்த பார்ட்டிலே உன் அண்ணனும் ஹோஸ்ட் பண்ணிருக்கார். ஆனா அது எங்க வம்பர் சபைக்குத் தெரியாது. அவங்க உன் அண்ணனை யாரோ அலுமினினு பேசிட்டு இருக்காங்க.” என்றாள்.
“உண்மைதான். நான் யுஜி ஜாயின் பண்ணும்போது என் அண்ணனும் அங்கே எம்பிஏ பண்ணினார். அதனால் அந்த காலேஜ் அலுமினி தான் என் அண்ணன்” என்றாள் நிலா.
“ஓ. இப்படி ஒரு வரலாறு வேறே இருக்கா அந்த பாஷா பாய்க்கு. இதை வச்சே இந்த காஸ்ஸிப் குரூப்ப இன்னிக்கு களை கட்ட விடறேன்” என்றாள் ஆதிரா.
“அம்மா தாயே. உனக்குப் புண்ணியமா போகும். என் அண்ணன் பத்தி எதுவும் அங்கே பேசாதே. அப்புறம் அவன் என்னை உண்டு, இல்லைனு ஆக்கிடுவான்” என்றாள் நிலா.
“பிழைச்சுப் போ. ஆனால் கூட எழிலன் சர் வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு. நீயும் கேட்டுப் பாரு” என்றாள் ஆதிரா.
நிலாவும் எங்கோ பார்த்தபடி “ரொம்பவே நல்லா இருக்கும்.” என்றாள்.
“நீ ஏற்கனவே கேட்டிருக்கியா?”
ஆதிராவைப் பார்த்த நிலா “ம். காலேஜ்லே அடிக்கடி கேட்டிருக்கேன்” எனக் கூறினாள். மனதினுள் ‘கேட்க மட்டுமா செய்தேன். அந்த குரலோடு வாழ்ந்தும் இருக்கிறேன்’ என நினைத்தவள் கண்களில் லேசான கண்ணீர். ஆதிரா அதை கவனிக்கவில்லை.
நிலாவிற்கு ஏனோ தெரிந்துக் கொள்ள வேண்டும் போலிருக்க, “என்ன பாட்டுப் பாடினாராம் அந்த வெல்கம் பார்ட்டிலே ?” என ஆதிராவிடம் கேட்டாள்.
“ஹ. ஹ. அந்தப் பாட்டை கேட்டுட்டு நம்ம குரூப்லே எல்லோரும் சிரிச்சோம்” என்றாள் ஆதிரா.
“ஏன் நல்லாதானே பாடுவார்?”
“நல்லாதான் பாடியிருந்தார். ஆனால் பாட்டு செலெக்ஷன் தான் எல்லாருக்கும் சிரிப்பு”
“என்ன பாட்டு?”
“ம். நீயே கேளு” என ஆதிரா அனுப்பி விட, அட மாப்பிள்ளை சும்மா முறைக்காத பாட்டு பாடிய வீடியோ பார்த்த நிலாவிற்கு சிரிப்பும், அழுகையும் வந்தது. முதல் நாள் அவள் அண்ணனை மச்சான் எனக் கூறியதாகச் சொன்னபோது ஏற்பட்ட அதே உணர்வு.
சரியாக காலேஜ் வந்துவிட, தன்னைச் சுதாரித்தபடி இறங்கினாள் நிலா. புல்லட் சகிதம் அங்கே வந்த எழிலனின் கண்களில் நிலாவின் கண்ணீர் சிந்திய விழிகள் பட்டது. எல்லோரும் அவரவர் இடத்திற்குச் சென்றனர்.
-தொடரும் –
