Skip to content
Post Views: 239
நிலவின் ஒளியை மறைத்திருந்த மேகமானது காரிருளை பூசி இரவின் இருளை மேலும் முழுமையாக்கியது. தன் அறையின் பால்கனியில் நின்று இருள் சூழ்ந்திருந்த வானத்தை வெறித்த விஜய சிவமாறனும் தன்னை சுற்றி இருள் சூழ்ந்திருப்பதை போல் உணர்ச்சியற்று நின்றிருந்தான்.
இத்தனை நாட்களாய் மனதிலிருந்த உற்சாகம் அனைத்தும் அவனை சூழ்ந்திருந்த இருளில் மறைவதை போல் உணர்ந்தவன், தானும் அதேபோல் எங்காவது மறைந்துவிடவேண்டும் என்று தவியாய் தவித்து ஏங்கியது.
Advertisement
தான் அணிந்திருந்த வெள்ளை நிற சட்டையின் மேலிருந்த இரண்டு பொத்தானை கழற்றியவன் இடது பக்க மார்பில் மூன்று நாட்களுக்கு முன்பு ‘செல்லம்மா’ என்று பச்சை குத்தியிருக்கும் பெயரினை வலிகளுடன் வருடி கொண்டான். தன் மனையாளுக்கு (ஆழினிக்கு) முதல் முதலாக தர கூடிய பரிசு, பொக்கிஷமாக அவள் கருதவேண்டும் குறிப்பாக தன்னவளது மீது தான் கொண்டிருக்கும் காதலை உணர்த்துவது போல் இருக்க வேண்டும் என்று நினைத்தவன் பல பரிசுகளை யோசித்து கடைசியாக தனக்கு தானே பரிசு அளித்து திருமணமான முதல் நாள் இரவன்று அவளிடம் இதை காட்டவேண்டும் என்ற கனவோடும் ஆசையோடும் காத்திருந்தவனுக்கு அனைத்தும் கனவாகவே முடிந்துவிட்டது.
பல நாட்கள் பார்த்து பழகவில்லை என்றாலும், ஒருமுறை கூட பேசவில்லை என்றாலும் மனதில் ஆணி அடித்தார் போல் நின்றவள், மனைவி என்ற உரிமையில் முதன் முதலாய் தோன்றிய அவனின் அந்தரங்க கனவுகளுக்கு சொந்தமனவள், இன்று அவள் இல்லாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதை எண்ணி தவித்து கொண்டிருந்தது. குறிப்பாக, விருப்பமே இல்லாமல் தன்னை விருப்பப்பட்டு ஏற்றுக்கொண்ட ஷைலஜாவிற்கு துரோகம் செய்துவிட்டோமோ என்று விஜய சிவமாறனின் மனம் நினைத்து வேதனையில் நெருப்பின் மீது நின்றிருப்பதை போல் அனலாய் கொதித்தது.
Advertisement
Advertisement
தன் சட்டை பொத்தானை மாட்டியவாறு அறைக்குள் நுழைந்த விஜய சிவமாறனின் பார்வை, பல வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மெத்தையின் மீது விழுந்தது. மலர் படுக்கை முள் படுக்கை போல் காட்சியளிக்க, அதை கண்டவனின் மனம் மேலும் மேலும் இரணமாய் துடித்தது. அவனிற்கு மேலும் வலிகள் கொடுக்கும் விதமாய் அறைக்குள் ஷைலஜா நுழைந்திருந்தாள்.
வெள்ளை நிற சிந்தெட்டிக் புடவையை ஒற்றை முந்தானையாக தோளில் தவழவிட்டு கையில் பால் சொம்புடன் அழகிய பதுமையாய் நடந்துவரும் ஷைலஜாவை கண்டவனின் கண்கள் அவளது அழகை இரசிக்க மறுத்தது. வேறொருவளை மனைவியாய் நினைத்த மனமானது தன்னெதிரில் நின்றிருப்பவளை ஏற்க மறுத்தாலும் நிதர்சனத்தை உணர்ந்து ‘இனி உன் வாழ்வு அவளுடன் தான்’ என்று அவனுக்கு உரக்க உரைத்தது.
Advertisement
கணவன் மனைவி இடையில் இருவரது மனமும் முதலில் இணைந்த பிறகு தான் உடல் இணையவேண்டும் என்ற எண்ணம் உடையவன் அதை ஷைலாஜாவிடம் உணர்த்த தொடங்கினான். அறையிலிருந்த மெத்தையில் அவளை அமர சொல்லியவன்
“ரெண்டு பேரும் இதுவரை ஒரு தடவை கூட பார்த்து பழகி பேசினது இல்ல, இதுல இதெல்லாம்….” என்று கூறி ஒருநொடி அமைதிகாத்து தன் நீண்ட பெருமூச்சை உள்ளிழுத்து வெளியில் விடுத்துவிட்டு
“முதல நாம ஃபிரண்ட்ஸா பழகலாம், ஒருத்தருக்கொருத்தர் பழகி புரிஞ்சிக்கலாம்…. புரிதல் தான் ஹஸ்பென்ட் அன்ட் வொய்ஃப்க்கு நடுவுல நல்ல பான்டிங் கிரியட் பண்ணும்…. காலையிலிருந்து இப்போ வரைக்கும் ரெஸ்ட் இல்லாம இருக்கோம், தூங்கலாமா?” என்று வினவிய விஜய சிவமாறனிடம்
“ஓகே….” என்று ஒற்றை வார்த்தையில் தன் பதிலை கூறிய ஷைலஜா படுத்தவுடன் உறங்கிவிட, இங்கு விஜய சிவமாறனுக்கு தான் அன்றிரவு தூங்கா இரவாகி போனது.
தன் செங்கதிர்களை பூமகள் மீது படரவிட்டு அந்நாளின் காலை பொழுதை அழகாக தொடங்கியிருந்தார் சூரியதேவன். புதுமண தம்பதிகளான விஜய சிவமாறனையும் ஷைலஜாவையும் கோவிலுக்கு சென்றுவிட்டு வருமாறு பெரியவர்கள் கூற, அவர்களின் சொல்படியே இருவரும் தயாராகி வந்தனர்.
சந்தன நிறத்தில் சட்டையும் கருப்பு நிற கால்சாரையும் அணிந்திருந்த விஜய சிவமாறனின் அருகில் ஊதா நிறத்தில் வெள்ளை நிற கற்கள் வைத்த புடவையை ஒற்றை முந்தானையாய் தோளில் தவழவிட்டு தன் ஈர தலையை காற்றில் பறக்கவிட்டவாறு நின்றிருந்த ஷைலஜாவின் அருகில் வந்தவர்
“பூ வச்சுக்கோங்க ஷைலஜா…. நான் வச்சிவிடவா?” என்று செல்வி ஆசையாக வினவியாறு அவள் தலையில் பூச்சூட வர, அவரிடமிருந்து இரண்டடி பின் சென்றவள்
“கொடுங்க, நானே வச்சிக்குறேன்….” என்று சிடுசிடுவென கூறிய ஷைலஜாவின் செயலை கண்ட செல்வியின் மனம் வருந்திய அந்நொடி முதலே, தன் உடன்பிறவா தம்பி என்று நினைத்த விஜய சிவமாறனின் மனைவியிடமிருந்து சற்று விலகியே இருந்துவிட்டார்.
விஜய சிவமாறன் மற்றும் ஷைலஜா இருவரும் பருவதமிடம் விடைப்பெற்று மகிழூந்தில் கோயில் நோக்கி சென்றுவிட, செல்வியின் மனநிலையை புரிந்தவர்
“அந்த பொண்ணு அப்படி வெட்டுக்குன்னு பேசிடுச்சுன்னு கவலைப்பாடத செல்வி, இப்போத்தான வந்திருக்கு போக போக நம்ம கிட்ட பழகிடும்….” என்று பருவதம் தனக்கும் சேர்த்து ஆறுதல் கூற, தன் நீண்ட பெருமூச்சை உள்ளிழுத்து வெளியில் விட்டவர்
“நீங்க சொல்ற மாதிரி நடந்தா சந்தோஷம் தான் அம்மா….” என்று செல்வி சுரத்தேயில்லாமல் கூறிவிட்டு சமையலறை நோக்கி சென்றுவிட்டார்.
தன் மகிழூந்தை இயக்கி கொண்டிருந்த விஜய சிவமாறனும் ஷைலஜாவின் செயலில் சற்று கோபத்தில் தான் இருத்தான். அதை தனக்குள் மறைத்தவன் தன்னருகில் அமர்ந்திருந்தவளிடம்
“செல்வி அக்கா உனக்கு ஆசையா தான பூ வச்சிவிட வந்தாங்க, ஏன் ஷைலஜா வேண்டாம்னு சொன்ன?” என்று விஜய சிவமாறன் பொறுமையாக வினவ, அவன் கூறியதை கேட்ட மறுநொடியே
“பிடிக்கல….” என்று பட்டென்று உரைத்தவளின் பதிலில் அவனின் மனைவியை கூர்மையாக பார்த்தவன்
“பூ வச்சிவிடுறது பிடிக்கலையா? இல்ல, பூ வச்சிவிடுறவங்களை பிடிக்கலையா?” என்று விஜய சிவமாறன் பீடிகையுடன் வினவ, அவனது கேள்விக்கு தன் அமைதியை பதிலாக அளித்த ஷைலஜாவிடம் எதுவும் பேசாமல் அமைதியாகவே மகிழூந்தை இயக்கி கொண்டிருந்தான்.
அவர்களது நீண்ட நேர மௌனத்தை ஷைலஜா தான் முதலில் தகர்த்திருந்தாள்.
“இன்னிக்கு ஈவ்னிங் என் ஃபிரண்ட்ஸ் நமக்கு பார்ட்டி கொடுக்காறாங்க…. நாம போகனும்….” என்று கூறியவளின் கூற்றை கேட்டு ‘போகலாமா’ என்று கேளாமல் ‘போகனும்’ என்ற வார்த்தையை அழுத்தி அதிகாரத்தோணியில் விளிக்கும் தன் மனையாளின் நடையை கண்டும் காணாததை போல் இருந்தவன்
“போகலாம்…. எத்தனை மணிக்கு?” என்று விஜய சிவமாறன் வினவ, அவனை கண்டு மெலிதாக சிரித்தவள்
“ஏழு மணிக்கு, பிளாக் கலர் தான் தீம்…. நீங்களும் பிளாக் கலர் ட்ரஸ் போட்டுட்டு வாங்க….” என்று உற்சாகமாக கூறி சிரிக்கும் ஷைலஜாவிடம் சரியென்பதை போல் தலையசைத்து புன்னகை புரிந்தவனின் நிம்மதியானது இன்று இரவு காணாமல் போகப்போகிறது என்று நினைத்த விதியோ அவனை கண்டு ஏளனமாக சிரித்து கொண்டிருந்தது.
விஜய சிவமாறனும் ஷைலஜாவும் பார்ட்டிக்கு செல்லும் நேரமும் வந்தது. கருப்பு நிறத்தில் முட்டிக்கு சற்று கீழ் வரையிருக்கும் கையில்லா மேக்ஸி கவுன் அணிந்து கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தை கண்டவளின் முன் வந்து நின்றவனை பார்த்த அந்நொடியில் பட்டென்று சிரித்து விட்டாள் அவள்.
தன்னை கண்டு சிரிப்பவளை புரியாமல் பார்த்தவனிடம்
“என்ன ஷிவ்? இன்டெர்வியூக்கா போறீங்க? இப்படி ஃபார்மல் ட்ரெஸ் போட்டுட்டு வந்திருக்கீங்க?” என்று ஷைலஜா நக்கலாக கூறிவிட்டு
“பிளாக் ஷேர்ட் ப்ளு ஜீன்ஸ் போடுங்க ஷிவ், அதான் உங்களுக்கு அழகாயிருக்கும்….” என்று கூறியவளின் கூற்றில் சலித்தவன் வாக்குவாதம் எதுவும் செய்யாமல் அவளுடன் செல்ல ஆயத்தமானான்.
‘லெட் ஈட் அன்ட் டான்ஸ், ரெஸ்டோ பார்‘ என்று வண்ண நிற மின்விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருக்கும் கட்டிடத்திற்குள் நுழைந்த விஜய சிவமாறனும் ஷைலஜாவும் அவ்விடத்திலிருந்த ‘பப்’ என்று அங்கிலத்தில் அழைக்கப்படும் கேலிக்கூத்துகள் நடக்கும் குடிக்கூடத்திற்கு சென்றனர்.
அனைத்திலும் சிறந்தவன்(ள்) நான் தான், யாரை பற்றியும் எனக்கு கவலை கிடையாது, மை லைஃப் மை ரூல்ஸ், மதுவும் மாதுவும் தான் என் வாழ்வு என்ற பல அரியவகை சிந்தனைகளோடு இருக்கும் மக்களிடமிருந்து சற்று விலகியே இருப்பவன் விஜய சிவமாறன். ஆனால் இவை அனைத்தும் ஒன்றிணைந்தது போலிருந்தது ஷைலஜாவின் நண்பர்கள் பட்டாளம். மதுவோடு மாதுவிடம் நடனமாடும் ஆண்கள் ஒருபுறம் என்றால், மதுவை மட்டுமே குடிநீராக கருதி குடித்து கொண்டிருந்த பெண்களை கண்டு மானசீகமாக தலையில் அடிக்காத குறையில் நின்றிருந்தான் விஜய சிவமாறன்.
லண்டனில் ஐந்து வருட காலங்கள் வசித்திருந்த சமயத்தில் இது போன்ற இடங்களுக்கு நண்பர்களுடன் அவ்வபோது சென்று வருபவன் தான். ஆண்கள், பெண்கள் என அனைவரும் மதுவோடு கும்மாளமிடும் காட்சிகளை பார்த்து பழகியவன், சோஷியல் ட்ரிங்கிங்க் பழக்கமும் அவனிடம் உள்ளது தான். ஆனால் இப்படி இரவு பகல் பாராமல் மதுவும் கூத்தும் மட்டுமே உயிர் சுவாசமாய் வழுபவர்களிடம் ஒதுங்கி இருக்க பழகி கொண்டான் விஜய சிவமாறன்.
இவ்வாறான சூழலிலிருந்து எப்பொழுதடா வீட்டிற்கு செல்வோம் என்று நின்றிருந்தவனை அதிர்ச்சியாக்கும் விதமாய்
“டூ வோட்கா ஷாட்ஸ் பிளீஸ்….” என்று ஆடர் செய்யும் ஷைலஜாவின் குரல் கேட்டு திடுக்கிட்டவன்
“உனக்கு ட்ரிங்க்ஸ் பழக்கமிருக்கா?”
“இருக்கே, அதுனால தான் ஆடர் பண்ணேன்…. ஏன், நீங்க ட்ரிங்க்ஸ் பண்ணமாட்டீங்களா?”
“வொய்ன், பீர் தவிர வேறெதுவும் ட்ரை பண்ணது கிடையாது….”
“அப்படியா? இன்ட்ரெஸ்டிங்…. டூ ப்ரோ கோட் பீர் பிளீஸ்….” என்று நக்கலாக கூறியவாறு மதுபானம் கேட்ட ஷைலஜாவை கண்டு விஜய சிவமாறனின் உள்ளம் கொதித்து கொண்டிருந்தது.
கணவன் மனைவி இருவரும் இணைந்து மதுபானம் பருகி கொண்டிருக்க, அவர்கள் அருகில் குடிபோதையில் ஷைலஜாவின் தோழி ஒருவள் வந்து விஜய சிவமாறனை அணைக்க முயல அவளிடமிருந்து விலகியவனை கண்டு கேலியாக சிரித்தவள் ஷைலஜாவை நடனமாடுவதற்கு தன்னுடன் அழைத்து சென்றுவிட்டாள்.
தன் மனைவி குடிபோதையில் ஆடி கொண்டிருப்பதை கண்டு விஜய சிவமாறனின் மனம் அனலாய் கொதித்ததால் அதை அடக்க வழியறியாது வழக்கத்திற்கு மாறாக சற்று அதிகமாகவே மதுபானம் பருக ஆரம்பித்துவிட்டான். ஏனோ, இந்நிமிடம் ஷைலஜா என்று நினைத்த ஆழினியின் பிம்பம் அவன் முன்பு தோன்றியது.
ஒருவேளை அன்று நான் பார்த்த ஆழினியை திருமணம் செய்திருந்தால் இந்நேரம் இந்நிமிடங்கள் யாவும் அழகாக மாறியிருக்குமோ என்று கூட அவனுக்கு தோன்றியது. விஜய சிவமாறனின் மனமானது அன்னிச்சையாக ஆழினியையும் ஷைலஜாவையும் ஒப்பிட்டு பார்க்க தொடங்கிவிட்டது. ஆழினியை விட ஷைலஜா பேரழகி தான், ஆனால் அவனின் மனம் தன் மனைவி என்று தாலி கட்டியவளின் அழகை சிறிதேனும் இரசிக்க தோன்றவில்லை. இந்நிலை மாறவேண்டும் என்று நினைத்தவனுக்கு பலன் என்னவோ பூஜ்ஜியம் தான் கிட்டும் என்று அவன் அறியவில்லை.
நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் இல்லத்திற்குள் தள்ளாடியவாறு தன் மனைவியுடன் நுழைந்திருந்தான் விஜய சிவமாறன். விஜய திருநாவுக்கரசரும் பருவதமும் உறங்கிவிட, தன்னிடமிருந்த சாவி கொண்டு இல்லத்திற்குள் வந்தவன் ஷைலஜாவை அழைத்து (இழுத்து) கொண்டு மாடியிலிருக்கும் தன் அறைக்கு சென்றிருந்தான்.
விஜய சிவமாறனின் சட்டையை பற்றியவாறு மெத்தையில் சரிந்தவள்
“ஷிவ்…. அழகன்டா நீ…. இன்னிக்கு உன்னை என் ஃபிரண்ட்ஸ் எத்தனை பேர் சைட் அடிச்சாளுங்க தெரியுமா…. உன் ஃபோட்டோ பார்த்ததும் நான் ஓகே சொல்லிட்டேன்….” என்று போதையில் பிதற்றி கொண்டிருந்தவளை தன் பலம் கொண்டு தள்ள முயற்சித்த விஜய சிவமாறனை தன்னுள் இறுக்கமாக அணைத்தவள் அவனின் இதழில் தன் இதழை பொருத்தியிருந்தாள்.
ஷைலஜாவின் செயலில் அதிர்ந்தவன் அவளை தன்னிடமிருந்து விலக்க முயற்சித்து தோற்று போனான். அவளிடமிருந்து விலக வேண்டும் என்று மனமும் மூளையும் உரக்க உரைத்தாலும் ஏதோ வசியம் செய்தது போல் அவளுடன் ஒன்றியிருக்கும் தன்னிலையை நினைத்து அந்நொடியிலும் விஜய சிவமாறனின் உள்ளம் நெருப்பாய் கொதித்தது. சிறிது நேரத்தில் இதழ் யுத்தமானது வேறு பாதையில் முன்னேற ஆரம்பிக்க, இரண்டு மனங்கள் இணைந்த பிறகே இல்லற வாழ்க்கை தொடங்கவேண்டும் என்றிருந்த விஜய சிவமாறனின் கொள்கையானது அவனால் குறிப்பாக அவளால் அழிந்து இரு மனங்கள் இணைவதற்கு முன்பே இருவரின் உடல்களும் இணைந்துவிட்டது.
மறுநாள் காலையில் வெகுநேரத்திற்கு பிறகே விஜய சிவமாறன் கண் விழித்தான். துயில் கலைந்து எழுந்தவன் உடைகளின்றி இருக்கும் தன் உடலை போர்வையால் போர்த்தியிருப்பதை கண்டு திடுக்கிட்டிருந்தான். தலைவேறு வின்னென்று வலிப்பதை போலிருக்க, கரங்களால் தன் தலையை அழுந்த பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவன் தன்னருகில் துயில் கொள்ளும் ஷைலஜாவின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்திருந்தான்.
இரவு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக விஜய சிவமாறனின் கண்முன் ஒளிபரப்பாக தொடங்க, அதை நினைத்தவனின் மனம் ஒருநொடி நின்று துடித்தது. புயலென வேகமாய் அறையிலிருந்த குளியலறைக்குள் புகுந்து அங்கிருந்த ஷவரில் வரும் தண்ணீரை தன் உடலை நனைத்தவனின் விழியோரம் கண்ணீர் துளிகள் கசிய தொடங்கிவிட்டது.
தன் மனதிற்கு பிடித்த மனைவியின் முழு சம்மதத்துடன் குறிப்பாக புரிதலுடன் தன் இல்லற வாழ்க்கையை அழகாக ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை கல்லூரி பயின்ற காலத்திலேயே விஜய சிவமாறன் மனதில் துளிர்விட தொடங்கியிருந்தது. ஆனால் இன்றோ அந்த எண்ணமானது முற்றிலுமாய் மாறியிருப்பதை நினைத்தவனின் மனம் அனலாய் கொதிக்க, அதைவிட அதிகமாய் ஷைலஜாவுடன் இணைந்திருந்த போது ஆழினி மட்டுமே அவனது நினைவில் ஆட்கொண்டிருந்ததை நினைக்க நினைக்க விஜய சிவமாறனின் உடலும் உள்ளமும் நெருப்பிலிட்ட புழுபோல் துடித்தது.
தன் மனைவியானாலும், மது போதையில் அவளுடன் தன்னால் எப்படி இணைந்திருக்க முடிந்தது? அந்த அளவிற்கு மனவலிமை இல்லாதவனா நான்? அதுவும் வேறொருத்தியை மனதில் நினைத்து கொண்டு ஷைலஜாவுடன் இருந்த அந்த நொடிகள்…. இதுவும் ஒருவகையில் அவளுக்குச் செய்யும் துரோகம் தானே என்று எண்ணியவன், தன் மீது விழும் தண்ணீர் துளிகள் யாவும் அமிலமாகவே உணர்ந்தான்.
தன் மனதில் காதல் மனைவியாய் நினைத்த பெண்ணோடு இல்லாமல் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்த அந்நொடியிலேயே சுற்றியெங்கும் இருள் சூழ்வதை போல் உணர்ந்தவன், இன்னும் சில காலங்களுக்கு விதி விரிக்கப்போகும் பேரிருளானது தன்னை முழுவதுமாய் மூழ்கடிக்க போகிறது என்று விஜய சிவமாறன் அறியவில்லை.
ஒளி வீசும்….
error: Content is protected !!