Skip to content
Post Views: 136
கையில் கனமான கட்டைப் பையுடன் தோளில் மாட்டிய ஹான்ட் பேக் சகிதம் பஸ்ஸை விட்டு இறங்கினாள் கவி.
கை வலித்தது. பையை கை மாற்றி பிடித்துக் கொண்டு வேகமாக நடையைப் போட்டாள்.
அன்று சனிக்கிழமை. அவளுக்கு பள்ளி விடுமுறை. பாங்க் வேலையாக அவள் டவுன் வரை செல்ல வேண்டியிருந்தது.
அப்படியே கொஞ்சம் காய்கறிகளும் தின்பண்டங்கள் மற்றும் ரஸ்க், பிரட் முதலான ரொட்டிகளும் கொஞ்சம் வாங்கி வந்திருந்தாள்.
Advertisement
மற்றபடி வேண்டும் வேண்டும் என்கிற அளவு அவள் வீட்டுத் தோட்டத்திலேயே பழங்கள் சாத்துக்குடி உட்பட கிடைக்கும்.
மாதுளை, கொய்யா, சீதா, சப்போட்டா, வாழைப்பழம் என்று எல்லாமே! அவள் ஒருவள் எவ்வளவு சாப்பிட்டு விடப் போகிறாள் என்று ரஞ்சிதாவும் பெரிதாக ஒன்றும் சொல்வதில்லை. கண்டு கொள்ள மாட்டாள். தின்பண்டங்கள் எல்லாம் அவளிடம் டுயுஷன் படிக்கும் குழந்தைகளுக்கு!
முக்கியமாக மீனுவுக்கு!
Advertisement
அவள் மேல் கொஞ்சம் கூடுதல் ப்ரியம் வந்து விட்டது கவிக்கு.
Advertisement
மீனுவின் மேல் கொஞ்சம் அதிகப்படியான அக்கறை அவள் அம்மா இப்போது அவளோடு இல்லாததால்!
எல்லாரும் இருந்தும் இல்லாத நிலை.. பாவம் அந்த பிஞ்சு குழந்தைக்கு என்று அவளின் மேல் ஏற்பட்ட அனுதாபமே இப்போது அக்கறையாகவும் பாசமாகவும் மாறி விட்டிருந்தது!
அதுவும் அப்படி தாங்கு தாங்கு என்று தாங்கி வளர்த்த அம்மா இப்போது என்ன ஆனாள் என்றே தெரியாது, அந்த பிஞ்சு மனம் அனுபவிக்கும் ஏக்கம் நன்றாகவே புரிந்தது கவிக்கு.
Advertisement
தான் போய் எதையும் மாற்றி விட முடியாது என்றாலும் தன்னால் ஆனது அந்த குழந்தையை தன்னிடம் டுயுஷன் படிக்க வரும் போதாதவது நன்றாக கவனித்து கொள்வது என்று நினைத்தே இதை எல்லாம் அவள் செய்தாள்.
மீனுவைப் பற்றி யோசித்தபடியே நடையை கொஞ்சம் எட்டிப் போட்டாள். வீட்டிற்கு போக கொஞ்ச தூரம் நடக்க வேண்டும்!
கிராமத்துக்குள் வரும் டவுன் பஸ்ஸில் வந்திருந்தால், இவ்வளவு தொலைவு நடக்க வேண்டியது இல்லை!
அவள் டவுன் பஸ்ஸில் ரொம்பவும் கூட்டம் என்று ஊர் எல்லையில் மட்டுமே நின்று செல்லும் புற நகர் பேருந்தில்(Mofussil bus) ஏறி விட்டாள்.
அது ஊருக்கு வெளியே பை பாஸ் சாலையில் அவளை இறக்கி விட்டு சென்றது.
வழியெங்கும் புளிய மரங்கள்!
அவள் மட்டுமே அந்த பின் மாலைப் பொழுதில் அந்த பக்கம் நடந்து கொண்டிருந்தாள்.
‘இருட்டும் முன் வீடு செல்ல வேண்டும்!
ச்சே.. கொஞ்சம் சீக்கிரமே கிளம்பி போய் இருக்கலாம்!’
பாங்க்கில் கூட கடைசி நிமிடத்தில் தான் போய் நின்றாள்.
சலித்துக் கொண்டு தான் செய்து கொடுத்தார்கள்!
வேகமாக வீட்டுக்கு போய் விட வேண்டும்.
அவளுக்கு அந்த புளிய மரங்கள் பற்றியோ அல்லது தனியாக நடந்து செல்வது பற்றியோ கூட பயம் இல்லை!
இன்னொரு இம்சையை நினைத்து தான் பயம்!
அவன் ரமேஷ்!
அன்று அவள் வீட்டிற்கு சிலிண்டர் கொண்டு வந்து போட்டவன்!
வெட்டி ஆபிசர்!
தெரியாமல் ஒரு முறை அவனை உதவிக்கு அழைத்து தொலைத்து விட்டாள்!
அவள் வீட்டில் மட்டும் ஒரு நாள் மின் தடை ஏற்பட்டு இருந்தது என்று!
உடனே அவன் எங்கிருந்தோ ஒரு ஈபி லைன் மேனை அழைத்து வந்து இபி போஸ்டில் ஏறி சரி செய்து கொடுக்க வைத்தான்.
அந்த லைன் மேனிடம், “அண்ணே டீச்சர் நமக்கு வேண்டப்பட்டவங்க. ஏதாச்சும் பிரச்சினைன்னா, உடனே வந்து சரி செய்து கொடுக்கணும்” என்று சொல்லிய போது கவி அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை!
ஆனால் இன்னொரு முறை, பள்ளி விட்டு வரும்போது ஒரு கீரைக்கார பெண்மணியிடம் கீரை வாங்கி விட்டு சில்லரைக்கு அவள் அல்லாடிய போது அந்த பக்கம் தான் பைக்கில் வந்தவன், தானே கீரைக்கு பணம் கொடுத்து விட்டு கீரைக் காரப் பெண்மணியிடமும் அவ்வாறே சொன்ன போது அவளுக்கு ஒரு மாதிரியாக போய் விட்டது.
இதை தூரத்தில் இருந்து கவனித்து விட்ட அன்னம் அவள் அருகில் வந்து,
“என்ன டீச்சர்? அவன் கிட்ட எதுக்கு பேசிட்டு இருக்கீங்க? அவன் கிட்ட எல்லாம் ரொம்ப பேசாதீங்க!
அவன் ஆள் சரியில்ல! நீங்க வந்த அன்னிக்கே சொல்லி இருப்பேன். எனக்கு அந்த வீட்டில் இருந்து பேச்சை வளர்க்க இஷ்டம் இல்லை! அதான் அன்னிக்கு ஒண்ணும் சொல்லாம போயிட்டேன்.
என் புருஷன் சொல்லுச்சு. போனவாரம் ரெண்டு பேரும் சேர்ந்து தண்ணி அடிச்சு இருக்காங்க. அப்ப போதையில இந்த பய, நம்ம ஊருக்கு புதுசா வந்திருக்க டீச்சர் பார்க்க ஆள் சூப்பரா இருக்காங்க. இன்னும் கல்யாணம் ஆகாத மாதிரி தான் தெரியுது.
அடிக்கடி அவங்களுக்கு ஹெல்ப் பண்ற மாதிரி அடிக்கடி போய் போய் பேசி பழகி எப்படியாச்சும் கரெக்ட் பண்ணிடனும்.
கரெக்ட் பண்ணி காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டா போதும்! கவர்மென்ட் வேலை!
அப்படியே லைஃபில் செட்டிலாகிடலாம்!
அப்புறம் அவங்கள ஸ்கூலுக்கு பிக்கப் டிராப் பண்றது மட்டுமே நம்ம வேலை!
அத மட்டும் பண்ணிட்டு அப்படியே ராஜா மாதிரி சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கி ஊரை சுத்திட்டு சினிமா பார்த்துட்டு வாழ்க்கையை ரிஸ்க் இல்லாம நோகாம ரிலாக்ஸா கொண்டு போய்டலாம்! எப்படி நம்ம ஐடியா என்று சொன்னானாம்!
என் வீட்டுல சொல்லுச்சு! உங்க ஸ்கூல் டீச்சர் தானே அவங்க! உன்கிட்ட பேசுவாங்க தானே! பார்த்து சூதானமா இருக்க சொல்லுன்னு சொல்லுச்சு டீச்சர்!
அவன் உதவி செய்றான்னு எதையும் ஏத்துக்காதீங்க நீங்க! முடிஞ்ச வரை அவன் கிட்ட பேசவே பேசாதீங்க” என்று எச்சரித்தாள்!
அன்னம் காசு ஆசைப் பிடித்தவள் தான் என்றாலும் இந்த விசயத்தில் அவள் பொய் சொல்வது போல தெரியவில்லை கவிக்கு!
உண்மையோ பொய்யோ எதுக்கு வம்பு? துஷ்டனைக் கண்டால் தூர விலகனும்!
அவனிடம் என்று இல்லை வேறு யாரிடமும் எந்த உதவியும் பெற்றுக் கொள்ளாமல் இருக்கவே கவி நினைத்தாள்!
எனவே தான் பார்த்து பார்த்து யோசித்து யோசித்து வீட்டிற்கு தேவையான ஒவ்வொரு பொருளாக தேடி அலைந்து வாங்கி வந்திருக்கிறாள்!
அது தான் கொஞ்சம் கனம் கூடி விட்டது!
ஆனால் அவள் பயந்தது போலவே, அந்த ரமேஷ் அவளை நோக்கி பைக்கில் வந்து விட்டான்!
எதாச்சும் உதவி வேணுமா என்று கேட்டு வர அவள் வீட்டுக்கு சென்றவன் அது பூட்டி இருக்க கண்டு, ‘ஓ! டவுனுக்கு போய் இருக்காங்க போல!’ என்று அந்த ஊர் டவுன் பஸ் நிற்கும் இடத்தில் நின்று அவளுக்காக காத்திருந்தான்.
வந்த பஸ்ஸில் அவள் இல்லை என்றதும், ஒரு வேளை ஊருக்கு போய் விட்டு திங்கள்கிழமை தான் வருவாள் போல என்று நினைத்திருக்க, பால்கார கிழவி அவள் வீட்டை எட்டிப் பார்த்து கையில் தூக்குடன் திரும்பி வரக் கண்டு, “என்ன அப்பாயி, இன்னமும் பால் ஊத்தி முடிக்கலையா?” என்று கேட்டான்.
“அதெல்லாம் எப்பவோ முடிஞ்சுடுச்சு. இது டீச்சர் வீட்டுக்கு. ஆறு மணிக்கு எல்லாம் வந்திடுவேன்னு சொல்லிட்டு போனாங்க காலையில! ஆனா இன்னுமும் வரல!” என்று சொல்லி விட்டு கடந்து சென்றாள் அந்த அம்மாள்.
‘அப்போ..ஒரு வேளை டீச்சர் ரூட் பஸ்ஸில் வருவாங்க போல!
நாம அப்ப அங்க போவோம்! இது நல்ல சான்ஸ்!’ என்று ஆசையாக முகம் முழுக்க அசட்டு இளிப்புடன் அவளை நோக்கி வந்தான்.
“என்ன டீச்சர் பை ரொம்ப வெயிட்டா இருக்கும் போல கொண்டாங்க. நான் கொண்டு போய் வீட்டில் விடறேன். வண்டியில ஏறுங்க” என்று சொல்லி, கிட்டத்தட்ட அவள் கையில் இருந்த கட்டைப்பையை பிடுங்கி பைக்கின் முன்னே வைத்துக் கொண்டு, தான் முன்னே நகர்ந்து உட்கார்ந்து கொண்டு அவளையும் ஏற சொன்னான்.
“இல்ல வேண்டாம்.. நான் போய்க்கிறேன்” என்று அவள் சொல்லியும்,
“டீச்சர்.. இந்த நேரத்துல இந்த இடத்துல இப்படி நடந்து போறது சேஃப்டிஇல்ல.. சொன்னா கேளுங்க..”
‘உன் கூட பைக்கில் வர்றது தாண்டா சேப்டி இல்ல..’ என்று மனதுள் நினைத்தவளை அவசரப்படுத்தினான் அவன்!
தான் இன்னமும் முன்னே நகர்ந்து கிட்டத்தட்ட பெட்ரோல் டாங்கின் மேல் அமர்ந்து கொண்டு அவளை வண்டியில் ஏற சொன்னான்.
ரொம்ம்ப்ப நல்லவனாமாம்!
தயக்கத்துடன் பைக்கில் ஏறி அமர்ந்தாள் கவி!
அப்போது வேகமாக ஒரு காற்று சுழற்றி அடித்தது!
இருவர் கண்களிலும் நிறைய மண் வந்து விழுந்தது!
கண்களை கசக்கிக் கொண்டு பைக்கை ஸ்டார்ட் பண்ணினான்!
ம்ஹும். அது ஸ்டார்ட் ஆகவே இல்லை!
பலமுறை முயற்சித்தான்!
பலனில்லை!
‘அடச்சே.. நேரம் பார்த்து இந்த வண்டி இப்படி காலை வாங்குதே!
இன்னிக்குன்னு பார்த்து டீச்சர் பைக்கில் ஏறியிருக்கு!
அப்படியே ஊர்க்குள்ள போய்.. ரவுண்ட் விட்டு, நானும் டீச்சரும் லவ் பண்றோம்னு ஒரு சீனைப் போடலாம்னு பார்த்தா.. ச்சே. இப்படி சொதப்புதே இந்த வண்டி!
இருடி.. உன்னை காயலான் கடையில் போட்டு பேரீச்சம்பழம் வாங்குறேன்’ என்று அதனிடம் மனதுள் அவன் சண்டையிட்டுக் கொண்டிருந்த போது,
சரியாக அவர்கள் அருகில் வந்தாள் நந்தினி தனது பழைய மொபெட்டில்!
“என்ன டீச்சர்.. இங்க நின்னுகிட்டு என்ன பண்றீங்க?”
“இல்ல டவுனுக்கு போய் இருந்தேன்! வழியில இவர் பார்த்துட்டு வீட்டில் ட்ராப் பண்ணுறேன்னு சொல்லி எத்திக்கிட்டார். பட் வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது!” என்றாள் கவி.
“சரி.. அண்ணே. நீங்க சரி பண்ணிட்டு பின்னால வாங்க. நான் டீச்சரை என் வண்டியில கூட்டிட்டு போய்க்கிறேன்” என்று சொல்லி அவனிடமிருந்த கட்டைப்பையை வாங்கி தன் வண்டியில் மாட்டி விட்டு, கவியை ஏற்றிக் கொண்டு சென்று விட்டாள் நந்தினி!
தன் முன்னே செல்லும் அவர்களை ஆத்திரமாக பார்த்துக் கொண்டிருந்தவன், அதே ஆத்திரத்தோடு பைக்கை உதைக்க இப்போது உடனே ஸ்டார்ட் ஆகியது அவனது பைக்!
அவர்கள் மூவரையும் மவுனமாக பார்த்துக் கொண்டிருந்தது அந்த பவுணர்மி நிலவு!
——-
வண்டியில் போகும் போது நந்தினி கேட்டாள்.
“நீங்க ஏன் டீச்சர், இந்த நேரத்துல அதுவும் அவன் கூட எல்லாம் பைக்கில் வர ஒத்துக்கிட்டீங்க!
அவன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க” என்றாள் நந்தினி!
“ம்ம். எனக்கும் புரியுது. ஆனா அந்த ஆள் அவ்வளவு ஃபோர்ஸ் பண்ணி என்னை அவர் பைக்கில் ஏத்திகிட்டார்!
ஏற்கனவே அன்னம் அக்கா வேற என்னை கொஞ்சம் அலர்ட் பண்ணி இருக்காங்க தான்!”
“அலர்ட் பண்ணிச்சா? என்ன சொல்லுச்சு?”
கவி அன்னம் சொன்னதை சொல்லவும்,
“அன்னம் மத்த விசயத்தில் முன்னே பின்னே இருந்தாலும் இதில் அவ சொன்னது முழுக்க நிஜம் தான்!
அவன் எல்லாம் எதுவும் செய்யக் கூடிய ஆள் தான்! நீங்க அவாய்ட் பண்ணிடுங்க எப்பவும்!
ஏதோ இன்னிக்கு நான் கொஞ்சம் சீக்கிரேமே டியூட்டி முடிஞ்சு வந்தேன். நான் கூட்டிட்டு வந்திட்டேன்! ஒரு நேரம் போல இப்படி ஆகாது இல்ல..
ஆமா கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க. உங்களுக்கு கல்யாணம் ஆச்சா..இல்லையா?”
“பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு?” வறண்ட சிரிப்பு ஒன்றை சிரித்த படியே கேட்டாள் கவி
“ஆனா மாதிரியும் இருக்கு! ஆகாத மாதிரியும் இருக்கு!”
“ஏன் அப்படி சொல்றீங்க?”
“கழுத்தில் ஒரு டாலர் செயின் தான் போட்டு இருக்கீங்க! தாலி எதுவும் இல்லை!
ஆனா உங்களுக்கு வந்த ரெஜிஸ்டர் லெட்டரில் மிசர்ஸ் கவிநயா அப்படின்னு போட்டு இருந்ததா நம்ம ஊர் போஸ்ட் உமன் சொன்னுச்சு! அதான் கேட்டேன்!”
“இதுக்கு நான் நாயகன் கமல் மாதிரி தான் பதில் சொல்லணும்!”
“எப்படி?”
“தெரியலையேம்மா! நான் மிசஸ் கவிநயாவா? இல்ல மிஸ் கவிநயாவான்னு!”
கேட்ட நந்தினி கொஞ்சம் அதிர்ந்து அவளைத் திரும்பிப் பார்த்தாள்!
error: Content is protected !!