Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

60. மதி இனியாள் - சின்னஞ்சிறு பூவே

சின்னஞ் சிறு பூவே 19

பூவே 19



Advertisement

“பாட்டி, நா எப்படி டான்ஸ் ஆடினேன்னு சொல்லவா?” என்று ஆரம்பித்தவளை,

“போதும் தத்தா, காலையில் இருந்து இது நூறாவது தடவை நீ சொல்லுறது…” என்று அந்த பெரிய மனிஷி பாவமாக சொல்லவும்,

Advertisement

Advertisement

சத்தமாக சிரித்தாள். “சத்தம் போட்டு சிரிக்காதத்தா, கண்ணுப்பட்டு போகும்,” என்று சொல்லிக்கொண்டே, தன் கைகளால் பேத்தியின் முகத்தை சுற்றி திருஷ்டி கழித்தார்.

“பட படவென” கைகளில் சத்தம் கேட்டதும்,

Advertisement

“பாருத்தா, எம்பேத்தி மேல் எம்புட்டு கண்ணு பட்டுருக்கு…” என்று சொன்னவர்,

“இங்கே இருத்தா,” என்று மெல்ல கால்களை வைத்து நடக்க பார்க்க,

“எங்க பாட்டி போறீங்க? இங்கே இருங்க, நா எடுத்துட்டு வரேன்,” என்றாள் அவரை தடுத்து.

“உப்பு, மொளகா தான் எடுக்கணும்த்தா, எம்புட்டு கொள்ளிக்கண்ணு பட்டுச்சோ! திருஷ்டி சுத்தி போட்டு தான். எனக்கு மத்த வேலையே,” என்று சொல்லிக்கொண்டே உள்ளே போனவர், அவர் கைபட உப்பு, மொளகா கூடவே மூணு வீட்டு கூரையிலிருந்து ஓலையையும் சேர்த்து எடுத்து வந்தார்.

“ஏம்த்தா, கிழக்கு பாத்து நில்லுவே,” என்றதும்,

அவளும் நிற்க, அதே நேரம் உள்ளே வந்த வெற்றி.

“என்ன அப்பத்தா, பேத்திக்கு மட்டும் தான் திருஷ்டி சுத்துவ போல, பேரனுக்கு இல்லையா?” என்றான் வருத்தம்போல.

“வா மாமா, நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து நிக்கலாம்,” என்று ஓடி போய் அவன் கைகளை பிடித்துக்கொண்டு நின்றாள்.

இருவரின் ஜோடி பொருத்தம் கண்ட பெரிய மனிஷிக்கு கண்கள் கலங்க, மெய் சிலிர்த்து நின்றார்.

“என்ன பாட்டி, சீக்கிரம் திருஷ்டி சுத்துங்க,” என்றாள்.

வெற்றிக்கு ஒன்னுமே புரியாமல் நின்ற நிலை தான். அவளின் ஸ்பரிசம் இன்று அவனுக்கு புதிதாய் தெரிந்தது.

“நாய் கண்ணு, பூனை கண்ணு, பேய்கண்ணு, பிசாசுகண்டு, கண்டவகண்ணு, கொண்டவகண்ணு, எல்லா கண்ணும் நாசமா போகட்டும். எம் வம்சம் நோய் நொடி இல்லாம, தீர்க்காயுசா வாழனும் முனிய்யா,” என்று மூன்று சுற்று சுற்றி, இருவரையும் உப்பு, மொளகாவில் துப்ப சொன்னதும்,

வேல்விழி மூன்று தடவை தூ, தூ, தூ என துப்பி வைக்க,

வெற்றி அசையாமல் இருப்பதை கண்டு,

“மாமா…”

“என்ன வேலு?” என்றான் தூக்கத்தில் இருந்து எழுந்தவன் போல்.

“அங்க பாரு,” பார்வையாலே காட்ட, அவனும் மூன்று முறை துப்பி வைத்தான்.

அப்பத்தா கையிலிருந்ததை அடுப்பில் போட்ட நொடி, படபடவென வெடிக்க தொடங்கியது…

“பாருய்யா, உங்க ரெண்டு பேர் மேலையும் எம்புட்டு திருஷ்டி இருக்கு” என்ற மயிலம்மா சொன்னதும்..

இருவரும் சிரித்தனர்..

“அப்பத்தா, உப்பு மொளகா நெருப்புல போட்டா ,வெடிக்கத் தான் செய்யும்” என்றான் வெற்றி சிரித்தபடி,

“போய்யா, உனக்கு ஒன்னும் தெரியாது.. இம்புட்டும் திருஷ்டி தான்” என்றவர், “என்னைய்யா  வந்துட்டா அங்க வேலை எல்லாம் எப்படி போகுது” என்றார்..

“சமையல் வேலைக்கு அடுப்பு மூட்டிட்டாங்க அப்பத்தா, நா டவுனுக்கு போகுற வேலை இருக்கு.. துணி மாத்திட்டு போகலாம்னு வந்தேன்.. வேலு என் கூட வா” என்று அவன்  மாடிக்கு படியேறினான்..

“மாமா , எதுக்கு பாட்டி என்னை கூப்பிடுது” என்றாள்..

“எதாவது எடுக்க கூப்பிடுவான்த்தா, போய் என்ன ஏதுன்னு கேட்டு எடுத்து கொடுத்துட்டு வா.. நா செத்த நேரம் காலை நீட்டிறேன்னு‌” சொல்லி மீண்டும் போய்  அமர்ந்தார்..

இவளும் குடுகுடுவென‌ மாடி படி ஏறினாள்..

அறைக்குள் மூச்சு வாங்க வந்து நின்றவளை தான் முறைத்தான்..

“எதுக்கு மாமா முறைக்குற” என்று அதையும் வேக மூச்சு விட்டுக்கொண்டு தான் கேட்டாள்..

“ஒரு ஒரு படியா ஏறி வந்தா ஆகாதா , கால் தடுத்து விழுந்து வச்சா யாரு பாக்குறது”என்று  சொல்லிக்கொண்டே முறைத்தான்..

“என்னை பாக்குறதுக்கு தான்.. நீ இருக்குயே மாமா” என்றாள் சிரித்து..

“வாய் அதிகமாகிடிச்சு” என்று , அவளிடம் ஒரு பையை நீட்டினான்..

“என்ன மாமா, இது” என்று பிரித்து பார்த்தவளுக்கு, “மாமா புதுத்துணி எனக்கா” என்று ஆச்சரியமாக கேட்டாள்..

“ஆமா, இன்னைக்கு இராத்திரி  நிச்சயத்துக்கு.. இதை போட்டுக்க” என்றான்.

“வேணாம் மாமா, இதை நா காவ்யாக்கா கல்யாணத்துக்கு கட்டிக்குறேன்.. இன்னைக்கு நா இந்த பொங்கலுக்கு எடுத்த பாவாடை ,சட்டை போட்டுக்குறேன்னு” என்று அவனை பார்த்தாள்..

“கல்யாணத்துக்கு நா வேற எடுத்து தரேன் வேலு, இன்னைக்கு இதை போட்டுக்க” என்றான்..

“அப்படி என்ன அவசரம் மாமா.. அந்த துணி கூட புதுசு தான்.. இதுவரை நான் ஒரு தடவை தான் போட்டிருக்கேன்” என்றாள்‌. அவன் முகம் பார்த்து..

“உனக்கு சொன்னா புரியாதா” என்று அவள் வலது கையை பிடித்து “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வேல்விழி” என்றான் அவள் கண்களை நேராக பார்த்து…

அவன் சொன்னதை கேட்டு கண்கள் அகலாமாக விரித்தாள்.. சந்தோஷத்தில் அவளுக்கு பேச்சே வரவில்லை, மூச்சு அடைப்பது போல் இருந்தது..

“மாமா.. மாமா எனக்கு பொறந்த நாளா இன்னைக்கு”என்று சொல்லும் போதே கண்களும் கலங்கியது.

“மருதாணி இன்னைக்கு மட்டும் நீ அழுகவே கூடாது” என்றான்.

கைகளால் கண்ணீரை துடைத்து.. “ஏன்? மாமா” என்று நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்..

“ஏன்னா, இன்னைக்கு என் மருதாணிக்கு பதினைந்தாவது வயசு ஆரம்பிச்சிருக்கு” என்று புன்னகையுடன் சொன்னான்…

“எனக்கு பதினைஞ்சாவது வயசா..?” என்று வாயை பிளந்தாள்..

அவள் வாயை தன் கைகளை கொண்டு மூடியவன்.. “ஆமா” என்றான்..

“இன்னைக்கு உன் கண்ணீலிருந்து ஒரு சொட்டு தண்ணீ கூட வரக்கூடாது” என்றான் கட்டளையாக,

“ஒரு வேளை நா அழுதுட்டா”  என்று விளையாட்டாக கேட்க,

அவள் முகத்தை பார்த்தவன்.. “இன்னைக்கு மட்டும் உன் கண்ணீலிருந்து ஒரு சொட்டு தண்ணீ வந்தாலும்.. நா செத்ததுக்கு சமம்” என்ற வார்த்தை அவள் வலக்கையால் , அவன் வாயை அடைத்தான்..

“இப்படி பேசாத மாமா.. நா , இன்னைக்கு என் கண்ணீலிருந்து இனிமே ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது” என்றாள்..

இவர்களின் விதி காளியம்மா விழிகளில் விழுந்தது தான்.. மகள் வீட்டிலிருந்து வந்தவர் மகனை டவுனுக்கு போக வேணாம்னு சொல்ல வந்தவர் பார்வையில் விழுந்ததோ!

இருவரும் ஜோடியாக நின்று திருஷ்டி சுத்தும் காட்சியை பார்த்தவருக்கு இதயத்தில் எரிமலை வெடிக்காத குறை தான்..

சமையலறைக்குள் மறைந்து நின்று என்னென்ன நடக்குது என்று பார்த்தவருக்கு.. மகன் அவளை அறைக்கு வரச்சொல்லவும்.. என்ன என்ற அதிர்வுடன் தான்,

வேல்விழி அறைக்குள் நுழைந்த சிறிது நேரத்தில் இவரும் நான்கு நான்கு படி இடைவெளி விட்டு கீழே நின்று அவர்கள் பேசுவதை கேட்க வசதியாக நின்றார்..

பாவம் வெற்றி அவளை தப்பான எண்ணத்தோடு வரவழைத்திருந்தால்.. சூது வாது தெரிந்திருக்குமோ! என்னவோ! இவர்கள் மனதில் எந்த கள்ளமும் இல்லாததால்.. அவர்கள் பேசிய அத்தனை வார்த்தையையும் அவர் காதில் பிசிறு தட்டாமல் விழுந்திருந்தது..

மனதில் வன்மத்தை வளர்துக்கொண்டார்..

‘இவ அழுக கூடாதா’ என்று வன்மத்துடன் கீழே இறங்கியவர்.. முன் வாசலுக்கு போகாமல் பின் வாசல் வழியாக மகள் வீட்டை நோக்கி நடந்தார்..

***

மின் விளக்கு வெளிச்சம் அந்தத் தெரு முழுக்க பரவி இருந்தது.

சரசு வீட்டு வாசலில் ஜமக்காளம் விரித்திருக்க, அதில் தாய்மாமன் சீரும் சபையை நிறைத்திருந்தது.

“அட, இந்த பொம்பளைங்ககிட்ட ஒரே வேலை கொடுத்தா ஆகுதா பாரு,” என்று ஊர் தலைவர் சத்தம் போட்டதும்,

“ஆம்பளை உங்களுக்கு என்ன? வெள்ளையும் ஜொள்ளையுமா சபைக்கு வந்து நின்னுடுவீங்க. நாங்க அப்படியா?” என்று நீட்டி முழக்கி சரளா சொன்னதும்,

“தப்பு தாண்டி…” என்று கையெடுத்து கும்பிட்டதும்,

“பாத்தியலா, ஊர் நாட்டாமை நிலமை. நம்மளை விட மோசமா இருக்கே,” என்று இன்னொருவர் சொல்ல,

“அங்க மட்டும் என்ன வாழுதாம்? நா சபையில என் பொண்டாட்டிகிட்ட மன்னிப்புதான் கேட்டேன். மத்தவனெல்லாம் பொண்டாட்டி கால்ல விழுந்து கிடக்குறானே,” என்று தலைவர் சொன்னதும்.

“நண்பன்னு நம்பி உங்கிட்ட சொன்னது தப்பாப் போச்சுய்யா. சடங்கு நடத்துற வழியைப் பாரு. மாப்பிள்ளை வீடு வர நேரமாகுது,” என்று தலைவரை கேலி செய்தவர் சொல்ல,

“ஏய்யா, வெற்றி போய் அக்கா மகளை கூட்டிட்டு வரச் சொல்லுய்யா! இந்த பொம்பளைங்களுக்கு விசேஷ வீட்டுல மட்டும் வாய் ஓயவே மாட்டுதுய்யா,” என்று அருகிலிருந்த நண்பனிடம் குறை சொன்னார் தலைவர்.

“மாமோய், அத்தைக்கு நீ பேசினது கேட்டு வெளியே வராங்க,” என்று மாறன் சொன்னதும்,

“ஐய்யோ! சரளா, நா இல்லைடி. இவனுங்க சும்மா சொல்லுறாங்கடி,” என்று பதறி சொன்னவரைக் கண்டு,

இளவட்டங்களின் சிரிப்பு விழாவை இன்னும் தூக்கி நிறுத்தியது.

அதே நேரம், மூத்த பெண்கள் காவ்யாவை கை பிடித்து அழைத்து வந்து சபை முன்னே நிறுத்தினர்.

“ரெண்டு கையும் சேர்த்து கும்பிடுத்தா,” என்று காளியம்மா சொல்லவும்,

அதே மாதிரி கைகளைக் குவித்து நின்றாள்.

“எய்யா, பொண்ணுக்கு தாய்மாமன் முறைக்கு மாலை போட்டு, நலுங்கு ஆரம்பிச்சு வைய்யா,” என்று சரளா சொன்னதும்,

“சரிங்க சித்தி,” என்று வந்தவன்,

நின்றிருந்த அக்கா மகளின் கழுத்தில், சீர் வரிசையிலிருந்து மாலையை எடுத்து போட்டான்.

சரளா சொல்லச் சொல்ல நலுங்கு வைத்தவன்,

கடைசியாக குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துவிட்டு, திரும்பி அன்னையை பார்த்தான்.

அவர் நகைப் பெட்டியைத் தர, அதை வாங்கியவன் காவ்யாவின் கைகளில் கொடுத்தான்.

“எய்யா, அதையும் கழுத்துல போட்டு விடுய்யா,” என்ற உறவுகளின் பேச்சைக் கேட்டு,

“அம்மா, அந்த நகையை காவ்யா கழுத்துல போட்டு விடுங்க,” என்று விலகி நின்றான்.

காளியம்மா பேத்திக்கு நலுங்கு வைத்து, அந்த ஆரத்தை பேத்தியின் கழுத்தில் போட்டு, “தீர்க்க சுமங்கலியா இருக்கணும் தாயி,” என்று வாழ்த்தினார்.

அடுத்தடுத்து ஊர் பெண்களும் நலுங்கு முடிச்சு, கடைசியாக ஆலம் சுற்றி முடித்தனர்.

அதே நேரம், மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் வந்த வேன் தெருமுனையில் நிற்கும் செய்தி வரவும், மாப்பிள்ளையை மேளதாளத்தோடு அழைத்து வந்தனர்.

அவர்கள் எடுத்துவந்த சீர் வரிசையை ஒரு பக்கம் அடுக்கி வைத்தனர்.

மணியரசு, மனைவி, மச்சானோடு வந்து வரவேற்பு கொடுத்தார்.

நலவிசாரிப்புகள் முடிந்து, மீண்டும் சபை கூடியது.

சிறுசிறு சலசலப்பு அடங்கியதும், அனைவரும் அமைதி காத்தனர்.

மாப்பிள்ளையின் பார்வை மட்டும் அடிக்கடி வீட்டிற்குள் போய் வந்தது.

“சபையோருக்கு வணக்கம். உங்களுக்குள்ள நீங்க பேச வேண்டியதை பேசிட்டீங்கன்னா, நிச்சய ஓலையைப் படிச்சிடலாம். என்ன சொல்லுறீங்க, ரெண்டு வீட்டாரும்?” என்று இரண்டு ஊர் தலைவர்களும் சேர்ந்தாற்போல் கேட்க,

“அதெல்லாம் முடிஞ்சதுங்கைய்யா. என்ன தம்பி, ஓலையைப் படிக்க சொல்லலாமா?” என்று தம்பி வீட்டினரைப் பார்த்துக் கேட்டார்.

“என் மச்சானுக்கு சம்மதம்னா படிச்சிடலாம் க்கா. என்ன வெற்றி, சொல்லுற?” என்றார் மணியரசு.

“படிக்கலாம் மாமா,” என்றான்..

ஒரு பக்கம் பெண் வீட்டினர் அமர்ந்திருக்க, எதிர்ப்புறம் மாப்பிள்ளை வீட்டின‌ர் அமர்ந்திருந்தனர்.

சபை தலைவர்கள் ஓலையை வாசித்ததும், இரு வீட்டாரிடமும் தாம்பூலத் தட்டை மாற்றி வைத்தனர்.

அதன்பிறகு காவ்யாவை சபைக்கு அழைத்து வந்தனர்.

நிச்சயப் புடவையை வாங்கிக் கட்டிக்கொண்டு மீண்டும் சபைக்கு வந்து நிற்க, மாப்பிள்ளையும் பொண்ணும் மாலை மாற்றிக்கொள்ளச் சொல்லி, அதேபோல் மோதிரமும் மாற்றிக்கொண்டனர்.

இருவரும் பெரியவர்களிடம் ஆசிர்வாதமுமீ பெற்றக்கொண்டனர்.

  அடுத்து விருந்து பலமாக நடந்தது. ஊர் ஆட்கள் ஆளுக்கொரு வேலையை எடுத்துச் செய்தனர்.

“இங்க சோறு வைங்க…”

“அந்த இலையில ரசம் ஊத்துங்க…”

“மாப்பிள்ளை வீட்டாருக்கு பாயாசம் மறக்காதீங்க…” என்று வீடு முழுக்க சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

உள்ளே மாப்பிள்ளையையும் பொண்ணையும் ஒன்றாக அமர வைத்து விருந்து பரிமாறினர்.

அதை பார்த்துக்கொண்டிருந்த வேல்விழி, எதையோ புதுசாகக் கண்ட குழந்தை போல அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ஏம்த்தா, நீயும் வந்து சாப்பிடும்மா,” என்று மயிலம்மா அழைக்க,

“இல்லை பாட்டி… நா மாமா கூட சேர்ந்து சாப்பிடுறேன்,” என்றாள் சுற்றிலும் அவனைத் தேடிக்கொண்டே,

அந்த வார்த்தை காளியம்மாவின் காதில் விழுந்த நொடி, ஏற்கனவே பற்றியிருந்த நெஞ்சுத்தீ இன்னும் கொழுந்துவிட்டு எரிந்தது.

‘இவளை இப்படி விட்டா, என் மகள் வாழ்க்கையே கேள்விக்குறி ஆயிடும்…’ என்று மனதுக்குள் கருவிக்கொண்டவர், எதுவும் தெரியாதது போல அத்தையின் அருகே சென்றார்.

“இந்தாங்க அத்தை… மாத்திரை போட்டுக்கோங்க,” என்று கையில் இருந்த மாத்திரையை நீட்டினார்.

“வேணாண்டி… இதை சாப்பிட்டா தூக்கம் தூக்கமா வருது,” என்று முகம் சுளித்தார் மயிலம்மா.

‘இன்னைக்கு நீங்க தூங்கித்தான் ஆகணும்…’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்ட காளியம்மா,

“நல்லா தூங்குனா தான் அத்தை, சீக்கிரம் கால் பழைய மாதிரி சரியாகிடும்,” என்றார்.

“ஆமா பாட்டி, சாப்பிடுங்க,” என்று வேல்விழியும் சொல்ல,

“நீ சொல்ற சரித்தா,” என்று மாத்திரையை வாயில் போட்டுக்கொண்டு தண்ணீர் குடித்தார்.

சிறிது நேரத்திலேயே மருந்து வேலை செய்ய, மயிலம்மாவின் கண்கள் சொருக ஆரம்பித்தன. இன்னும் பத்து நிமிடங்களில் ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றுவிட்டார்.

நேரம் செல்லச் செல்ல, ஒவ்வொருவரும் அவரவர் வேலையில் மூழ்கினர்.

வெளியே…

“அப்புறம் பங்காளி, அக்கா பொண்ணு நிச்சயம் முடிஞ்சிருச்சு. எங்களுக்கு எதுவுமில்லையா?” என்று மாணிக்கம் கேட்க,

“வயசுல மூத்தவன் நீயே. இப்படி இருந்தா, உங்களைப் பார்த்து நாங்க என்ன கத்துக்குறது?” என்ற வெற்றி சிரித்தான்.

“அடேய்,  மாப்பிள்ளை வீடு கிளம்பினதும் முதல் ஆளா உன் மாமனும் அந்த பெருசுகளும் தான் கேப்பாங்க,” என்று மாணிக்கம் சொல்ல,

“சரி, எடுத்துட்டு வரேன். குடிச்சிட்டு அமைதியா படுத்துக்கணும். சலம்பல் பண்ணக்கூடாது,” என்று சொல்லிவிட்டு வைக்கோல் போரை நோக்கி நடந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!