Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

88. வித்யா வெங்கடேஷ் - நிழலாடும் நின் நினைவில்

நிழலாடும் நின் நினைவில் 28 (Epilogue)

ஓம் ஸ்ரீ சாய்ராம்

மார்ச் 2022

பொடிப்பொடியான ஹாட் வீல்ஸ் ரேஸ் கார்கள், பாம்பென வளைந்து நெளியும் தாமஸ் ட்ரெயின் செட், நூற்றுக்கணக்கான லெகோஸ் எனக் கால் வைக்கவே இடமில்லாத அளவிற்குப் பொம்மைகளைத் தரையில் பரப்பி விளையாடிக்கொண்டிருந்தனர் தருண்-உத்ராவின் ஐந்து வயது பூர்த்தியான இரட்டைப் புதல்வர்கள் வருணும் வினய்யும்.

பேரப்பிள்ளைகளைக் கண்டிக்கவும் முடியாமல் அவர்கள் இழுப்புக்கு ஈடுகொடுத்து விளையாடவும் முடியாமல் குழந்தைகளின் விஷமங்களை ரசித்துக் கொண்டிருந்தனர் திலகாவும் தாமோதரனும்.



Advertisement

“அச்சோ! ரெட் கலர் இல்ல தாமு தாத்தா. இன்ஸ்ட்ர்கஷ்ன் பாரு. இங்க ப்ளூ பீஸ் அட்டாச் பண்ணணும்,” கட்டிடக்கலை ஜாம்பவானுக்கே லெகோ ப்ளாக்ஸை எப்படி இணைக்க வேண்டுமென கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தான் வினய்.

“நான் ரெடி செட் கோன்னு சொன்னதுக்கு அப்புறம்தான் ட்ரிக்கெர் ரிலீஸ் பண்ணனும். கையாலயே காரைத் தள்ளி ஏமாத்தக் கூடாது,” கதவிடுக்கில் அகப்பட்ட எலியாய் ஓயாமல் கட்டளை இட்டுக்கொண்டிருந்தான் வருண்.

பூகம்பமே வந்தாலும் அசரமாட்டேன் என்ற ரீதியில் சோஃபாவில் சயனித்தபடி ஐபேடில் வர்ட் பசில் விளையாடிக் கொண்டிருந்தாள் விரூபா.

Advertisement

அலுவலக ஊழியரின் திருமண வரவேற்பு விழாவிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய இரண்டு ஜோடிகளும். உறங்காமல் அட்டகாசம் செய்துகொண்டிருக்கும் பிள்ளைகளைப் பார்த்து வாயைப்பிளந்தனர்.

Advertisement

ஷ்ரவனும் ரம்யாவும் உடைமாற்றிவிட்டு வருகிறோம் என நகர, பஞ்சாயத்தை எந்தப் பிள்ளையிடமிருந்து தொடங்குவது என மூவரையும் ஏறிட்டாள் உத்ரா.

“தம்பிங்கள தூங்க வச்சுட்டு நீயும் தூங்குன்னு சொல்லிட்டுத்தானே போனேன்,” மகளிடம் பாய்ந்தாள்.

“ரெண்டும் எழுந்து வந்தால்தானே,” சலித்துக்கொண்டவளின் விழிகள் மட்டும் ஐபேடிலிருந்து அகலவில்லை.

Advertisement

“அதுக்கு நீ முதல்ல எழுந்துக்கணும்டி,” மகளிடமிருந்து ஐபேடை வெடுக்கென்று பிடுங்கினான் தருண்.

“அப்பா… அப்பா… ப்ளீஸ்… டைம் அவுட் ஆயிடும்…” ஐபேடை உயரப் பிடித்துக்கொண்ட தந்தையிடம் நாய்க்குட்டி போல குதித்து குதித்து கெஞ்சினாள்.

அக்காவைச் சீண்டுவது என்றாள் இரட்டையர்களுக்குக் கொள்ளைப் ப்ரியம்.

அதுவும் தந்தையுடன் சேர்ந்து என்றால் கேட்கவே வேண்டாம்.

“அப்பா, என்கிட்ட தா!” வினய் துரத்த,

“டேடி! த்ரோ இட் டு மி!” வருண் இணைந்துகொள்ள ஆட்டம் சூடுகண்டது. தந்தையும் மகன்களும் வசிப்பறையைச் சுற்றி ஓடி விரூபாவை வெறுப்பேற்றினர்.

மாடிப்படியில் ஷ்ரவனைக் கண்டதும், “பாரு பெரியப்பா. மூணு பேரும் என்னை டீஸ் பண்ணறாங்க,” அவன் இடுப்போடு கட்டியணைத்து புகார் வாசித்தாள்.

“நீ வாடா தங்கம். என் ஐபேட்ல வர்ட் பசுல் விளையாடலாம்,” ஷ்ரவன் எதிரணியை உசுப்பேற்ற,

“இன்னுமா தூங்கப் போகல? நாளைக்கு ஸ்கூலுக்கு லேட்டா வந்தீங்கன்னா, உங்களுக்கும் சரி, உங்களைக் கொண்டுவந்து விடுறவங்களுக்கும் சரி, க்ரவுண்டல டென் ரவுண்ட்ஸ் ஓடச் சொல்லி பனிஷ்மென்ட் தருவேன்,” கணீர் என்ற ரம்யாவின் குரலில் இரண்டு அணிகளும் கப்சிப்பென்று ஆனார்கள்.

இமைக்கும் நேரத்தில் பொம்மைகள் அந்தந்த டப்பாக்களுக்கு இடம்பெயர்ந்தது.

“குட் நைட் பெரியம்மா!” என்ற இரட்டையர்கள் ரம்யாவில் தொடங்கி,

குடும்பத்தினர் அனைவருக்கும் முத்தமிட்டு தாஜாசெய்த பின், அவர்களுக்கென மறுவடிவமைக்கப்பட்டிருக்கும் விருந்தாளிகளின் அறைக்குள் நுழைந்தனர்.

மாலை முழுவதும் பேரப்பிள்ளைகளுடன் விளையாடிய களைப்பில் திலகாவும் தாமோதரனும் இரவு வணக்கம் சொல்லிவிட்டு நகர்ந்தனர்.

விரூபா மட்டும் சிலையாக நிற்க, அவள் உள்ளத்தைப் படித்த ரம்யா, “5 மினிட்ஸ்தான்,” கூறி, ஐபேடை தருமாறு தோழனுக்குக் கண்ணசைத்தாள்.

“ஸ்கூலுக்கு லேட்டா வந்தாலும் பனிஷ்மென்ட் தரமாட்டேன்னு சொல்லு, ஐபேடை தரேன்,” உம்மென்ற முகத்துடன் பேரம் பேசினான் தருண்.

“அட அப்பா! அது வினய்யையும் வருணையும் பயமுறுத்த பெரியம்மா அப்படிச் சொன்னாங்க.

ஸ்கூலுக்கு வந்ததும், ‘மை டியர் ஸ்டுடென்ட்ஸ்’ன்னு ஸ்வீட் ஸ்மைலிங்க் பிரின்சிபாலா மாறிடுவாங்க,” என நடித்தே காட்டினாள் அவன் செல்லமகள்.

“சீக்கிரம் கிளம்பி வரேன்னு சொல்ல வாய் வருதா…” தோழனைச் செல்லமாக அடித்து, ஐபேடை பிடுங்கினாள்.

கைக்குக் கிட்டிய புதையலுடன் ஷ்ரவன் அருகில் அமர்ந்துகொண்ட விரூபா, “இந்த நாலு வர்ட்ஸ் மட்டும் கண்டுபிடிக்க ஹெல்ப் பண்ணு ப்ளீஸ்,” எனக் கொஞ்சினாள்.

இரண்டே நிமிடங்களில் புதிரை விடுவித்த சந்தோஷத்தில் உறங்கச் சென்றாள்.

ஐபேடுடன் தன்னவன் அருகில் அமர்ந்துகொண்டாள் ரம்யா. திறம்பட புதிர்களைக் கண்டறியும் ஷ்ரவனின் தனித்துவமான வழிகாட்டல் குழந்தை கையாண்டிருக்கும் யுக்திகளில் பிரிதிபலித்தது.

“உங்கள மாதிரியே விளையாடுறா ஷ்ரவன்,” எனப் பூரித்தாள்.

“உன்னை மாதிரியே ஈசியான நாலு க்ளூஸ் கோட்டை விடுறதுலயும் அவளை அடிச்சுக்க ஆளே இல்ல,” அவன் சிரிக்க,

“அப்போ சொல்லிக்கொடுக்குற உங்ககிட்டதான் தப்பு இருக்கு,” அவன் புஜத்தில் நறுக்கென்று கிள்ளினாள்.

ஐபேடின் திரையில் உத்ரா சேமித்துவைத்திருக்கும் குடும்பப் புகைப்படத்தைக் கண்டதும் மெய்சிலிர்த்து வருடினாள்.

நடுநாயகமாக திலகாவும் தாமோதரனும் அமர்ந்திருக்க, விரூபா அவர்கள் மடியிலும், அவர்களுக்குப் பின்னால் ரம்யா வினய்யையும், ஷ்ரவன் வருணையும் ஒருமாத கைக்குழந்தைகளாய் ஏந்தியிருக்கு, ஒருமுனையில் தருண் தோழியின் தோள் சுற்றி வளைத்து நிற்க, மறுமுனையில் உத்ரா அண்ணனின் கைவளையத்தில் பின்னிக்கொள்ள என இரட்டையர்களின் பெயர் சூட்டு விழா அன்று எடுத்த புகைப்படம் அது.

“நீங்க சொன்னமாதிரியே, நம்ம குழந்தைங்க நம்மகிட்டயே வந்துட்டாங்கல ஷ்ரவன்,” எனக் கணவன் தோள்சாய்ந்து கொண்டவளின் நினைவுகள் பின்னோக்கி பயணித்தன.

வீட்டிற்கு ஒற்றைப் பிள்ளையாகப் பிறந்து வளர்ந்த உத்ரா, இரண்டு குழந்தைகளாவது பெற்றுக்கொள்வேன் எனத் திருமணமான நாள் முதலே சொல்லிக்கொண்டிருந்தாள். ஆனால் ஷ்ரவன் ரம்யாவின் நிலை அறிந்து தம்பதிகள் வேறுசில முடிவகள் எடுத்து, புத்தி தெளிந்து என விரூபா பிறக்கவே பல வருடங்கள் ஆகியிருந்தது.

விரூபாவுக்கு மூன்று வயதாகியும் அவர்கள் அடுத்த குழந்தைக்கு முயற்சிக்கவில்லையே என ரம்யாவிற்கு யோசனையாக இருந்தது. வாய்விட்டுக் கேட்கவும் சங்கடம்.

ரம்யாவின் மனத்தைப் படித்ததுபோல, “என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் தம்பி இல்லேன்னா தங்கை இருக்காங்க. நம்ம வீட்டுல மட்டும் ஏன் குட்டிப் பாப்பா யாருமே இல்ல,” விரூபா துருவித் துருவிக் கேட்க ஆரம்பித்தாள். அதுவே அப்பேச்சை எடுக்க ஏதுவாக அமைந்திருந்தது.

உத்ராவின் வயதை சுட்டிக்காட்டி தள்ளிப்போடுவது நல்லதில்லை என அறிவுறுத்தினாள். இம்முறை அவர்கள் மழுப்பவில்லை. நேரடியாகவே காரணத்தை உரைத்திருந்தனர்.

“உங்க மூலமா எங்களோட ட்வின்ஸ் மறுஜென்மம் எடுத்து நம்ம வீட்டுக்கே திரும்பி வந்து என்னை வாய்நிறைய பெரியப்பான்னு கூப்பிடுவாங்கன்னு நான் ரொம்ப ஆசையா காத்துட்டு இருக்கேன்,” ஷ்ரவனின் ஆதங்கம் உத்ராவின் வைராக்கியத்தை அசைத்தது.

தன் உடன்பிறவா அண்ணனுக்காக இன்னும் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்வேன் என உறுதியாகச் சொன்னாள். அவள் கண்மூடித்தனமான அன்பில் நெகிழ்ந்த கடவுள், இரட்டைக் கனிகளை வரமாக அளித்திருந்தார்.

மழலைச் செல்வத்திற்காக ஏங்கி தவமிருந்த தம்பதிகளுக்குத் தங்கள் குழந்தைகளே மறுஜென்மம் எடுத்து வந்துவிட்டது போல பேரானந்தம். தருண் தேர்ந்தெடுத்து வைத்திருந்த மற்ற இரண்டு பெயர்களான ‘வினய், வருண்’ என்ற பெயர்களையே சூட்டினர்.

மௌனமொழியில் உரையாடும் தம்பதிகளின் உடல்மொழியிலேயே அவர்கள் மனநிலையைக் கண்டுகொண்டாள் உத்ரா. விட்டால் விடிய விடிய சிந்தனையில் கரைந்திருப்பார்கள் என அறிந்தவள், இருவரையும் ஒருசேர உலுக்கி,

“மணி பத்தாகுது. ப்ரின்சிபாலே லேட்டா போனீங்கன்னா அப்புறம் ஸ்டுடென்ட்ஸையும் அவங்கள கொண்டுவந்து விடுற சோம்பேறி பேரன்ட்சையும் எப்படி பனிஷ் பண்ணறதாம்,” ரம்யாவின் வழியிலேயே மடக்கினாள்.

“அவளே மறந்தாலும், நீ எனக்கு பனிஷ்மென்ட் வாங்கித்தராம விடமாட்ட போலையே,” தருண் செல்லமாய்த் திட்ட நால்வரும் லேசான மனத்துடன் புன்னகைத்தனர்.

தருணுடன் ஓயாமல் செல்லச் சண்டையிட்டுக்கொண்டு மாடியேறும் உத்ராவைக் கண்கொட்டாமல் பார்த்து ரசித்த ரம்யா, “நமக்காக எல்லாத்தையும் செஞ்சிட்டு எனக்கும் அதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லன்ற மாதிரி போகுறா பாருங்க ஷ்ரவன்,” என்றாள் பாசம் பொங்க.

வாய்நிறைய அண்ணா என அழைத்து உறவாடும் அவள் கள்ளம் கபடமில்லாத சுபாவம் கண்முன் விரிய, “அவ எப்பவுமே அப்படித்தான்!” மென்னகையுடன் தலையைச் சிலுப்பிக்கொண்டான்.

நாட்கள் அதன் போக்கில் நகர, அந்த வருடத்திற்கான பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தது.

இந்த வருடமும் தேர்வு எழுதியிருக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் எனக் கண்டதிலேயே குடும்பத்தினர் தலைகால் புரியாத சந்தோஷத்தில் மிதந்தனர்.

முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கணக்கியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு வாங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டிய தருண், “இதுதான் ரம்யா டச்,” எனத் தோழியை மெச்சினான்.

மென்னகையுடன் முடிவுகளை ஆராய்ந்தவள், குறிப்பிட்ட பத்து மாணவர்களின் தனிப்பட்ட மதிப்பெண்களைச் சோதித்தாள். அனைவருமே எண்பதிலிருந்து தொண்ணூற்றைந்து சதவீதத்திற்குள் என மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.

“ஷ்ரவன்! இப்பவே ஹாஸ்டலுக்குக் கிளம்பி போகலாம்,” எனப் பூரித்தாள்.

ரம்யா சுழித்து வைத்திருந்த பெயர்களைக் கண்டதுமே அவள் உள்ளத்தைப் படித்தான் ஷ்ரவன்.

பள்ளிக்கூடம் துவங்கிய முதல் வருடத்தில் மாணவர்களைச் சேர்ப்பது பெரும் சவாலாக இருந்தது. புது பள்ளி எனச் சிலர் நிராகரிக்க, பணம் படைத்தவர்கள் தெருவிற்கு ஒரு தனியார் பள்ளி கட்டிவிடுகிறார்கள் எனப் பலர் ஏளனம் செய்ய என அவர்கள் தவமிருந்து எழுப்பிய பள்ளிக்கூடத்தை விமர்சித்தவர்கள்தான் ஏராளம்.

அப்போதுதான் காப்பகங்களில் வளரும் குழந்தைகளை உறவினர்களுடன் சேர்க்கும் பணியும் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. நிதி உதவியுடன், சென்னையில் தேவையான அத்தனை உதவிகளையும் ஷ்ரவனும் ரம்யாவும் இழுத்துப்போட்டுச் செய்துவந்தனர்.

சில குழந்தைகளுக்கு சென்னையில் உறவுக்காரர்கள் இருக்கிறார்கள் என்ற போதிலும், நாள்கிழமையில் அழைத்து வந்து உறவாட முடியுமே தவிர, அவர்களை நிரந்தரமாகத் தங்களுடன் வைத்து வளர்க்கமுடியாது எனக் கையை விரித்திருந்தனர்.

இரண்டு பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு என்றார் தாமோதரன். பள்ளிக் கட்டிடத்தின் ஒரு பகுதியை ஹாஸ்டலாக மாற்றி, அக்குழந்தைகள் போர்டிங்க் ஸ்கூலில் படிப்பதுபோல வசதி செய்து தரலாமே என்றார்.

இவர்கள் அந்த குழந்தைகளுக்கு அடைக்கலம் தந்தார்கள் எனச் சொல்வதை விட, குழந்தைகளால் இவர்கள் பள்ளிக்கு அடையாளம் கிட்டியது என்றுதான் சொல்லவேண்டும். கலைகள், விளையாட்டுகள் எனத் திறமைகளின் குவியலாகத் திகழ்ந்த பிள்ளைகள், பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைக் குவித்திருந்தனர்.

ஏளனம் செய்தவர்கள் திரும்பிப் பார்க்க, ‘வைஷ்ணவி வித்யாஷ்ரம்’ என்ற பெயரும் பலரின் மனத்தில் பதியத் தொடங்கியது.

கலையுடன் கல்வியிலும் இன்று வெற்றி வாகை சூடியிருக்கும் இவர்களின் சாதனைதான் நமக்குக் கிடைத்த உண்மையான பிரிதிபலன் எனப் பூரித்தாள் ரம்யா.

ரம்யாவைக் கண்டுகொண்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களும் அவர்கள் பெற்றோர்களும் , ஈ மொய்க்காத குறையாக அவளைச் சூழ்ந்துகொண்டு மதிப்பெண்களைப் பகிர்ந்தும், நன்றிகளை உரைத்தும் நெகிழ்ந்தார்கள்.

அவர்களிடம் பேசிமுடித்த கையோடு ஹாஸ்டலை நோக்கி நடந்தனர்.

“ஷ்ரவன்ப்பா!” என விளித்து உறவாடும் பிள்ளைகளின் அழகை கண்கொட்டாமல் ரசித்து நின்றாள் ரம்யா.

“ரம்யாம்மா! உங்க அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறோம்,” பனித்த கண்களுடன் அவளைக் கட்டியணைத்து உணர்ச்சிவசப்பட்டார்கள் இரு மாணவிகள்.

எந்தச் சூழ்நிலையில் இந்தப் பள்ளிக்கூடம் உருவானது என்ற மனக்காயங்கள் கண்முன் விரிய ஒருவரை ஒருவர் பார்த்து விரக்தியில் சிரித்துக்கொண்டார்கள் ரம்யாவும் ஷ்ரவனும்.

“உங்களால முடிஞ்ச நல்லதை இந்தச் சமுதாயத்துக்குச் செய்யுங்க. அதுவே எங்களுக்குப் போதும்,” ஆத்மார்த்தமாக வாழ்த்தினான் ஷ்ரவன்.

வீட்டிற்கு வந்த பின்னும் மாணவர்கள், பெற்றவர்கள், ஆசிரியர்கள், கல்வித் துறையினர், என யாரோ ஒருவர் நேரில் வந்தும், அலைபேசியில் அழைத்தும் வாழ்த்துகளையும் நன்றிகளையும் பகிர்ந்துகொண்டிருந்தனர். மதியம் இரண்டு மணியாகியும் உண்ணாமல் அலைபேசியே கதியென்று இருக்கும் தம்பதிகளின் எதிரில் வந்த உத்ரா,

“அடுத்த ஒருமணி நேரத்துக்கு ஃபோன் பக்கமே போகக்கூடாது சொல்லிட்டேன்,” அலைபேசியைப் பிடுங்கிக்கொண்டு அவர்களுக்கு உணவு பரிமாறினாள்.

ஒரு வாய் சோறுக்கு இடையில் பத்து வார்த்தைகள் பள்ளியைப்பற்றி அளவளாவிக்கொண்டிருந்தனர். கட்டுக்கடங்காத சந்தோஷத்துடன் உரையாடிய போதும் அடிமனத்தில் ஆழப் பதிந்திருந்த கசப்புகளும் தவிப்புகளும் அவ்வப்போது எட்டிப்பார்க்கவே செய்தது.

வெகு நேரமாய் அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த தருண்,

“கர்மவினை பிராயச்சித்தம்ன்னு குழம்புறத நிறுத்துங்க,” அதட்டி,

“நூற்றுக்கணக்கான குழந்தைகளோட அம்மாவா அப்பாவா உறவாடி, அவங்க வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தேடித் தரும் சக்தி உங்களுக்கு உண்டுன்னு தெரிஞ்சியிருந்ததுனால தான் கடவுள் உங்களுக்கு இப்படியொரு வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்ததெடுத்துக் கொடுத்திருக்காரு,” என அண்ணனையும் தோழியையும் ஆரத்தழுவிக்கொண்டான்.

நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல,
நல்லதும் கெட்டதும் நிறைந்ததுதான் இல்வாழ்க்கை;
பூவா? தலையா? சிறந்தது எது என ஆராயமல்,

பூவென வருடித் தரும் இன்பங்களை இன்முகத்துடன் ஏற்பதும்,
தலையில் இடியென இறங்கும் வலிகளை இணைந்து எதிர்கொள்வதும்,
தாம்பத்தியத்தின் தாரக மந்திரம் – விடை கண்டோம்
காதலே! நிழலாடும் நின் நினைவில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!