Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

95. தேவி - தேன் சிந்துமோ மேகம்

தேன் சிந்துமோ மேகம்-09

அத்தியாயம் – ஒன்பது
இங்கே அதியமான் வீட்டில் எல்லோரும் அன்று ஒரு பார்ட்டிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அதியமானின் தொழில் துறை நண்பர் ஒருவரின் மகளுக்கு பர்த்டே பார்ட்டி.
நிலாவிற்கு பார்ட்டி செல்வதில் எல்லாம் தற்போது இஷ்டமே இல்லை. தேவையில்லாத வம்பளப்புகள் தான் அதிகம் பேசுவதாக அவளின் எண்ணம். கடந்த ஐந்தாண்டுகளாகவே அவளுக்கு இப்படித் தான் தோன்றுகிறது. ஆனால் நிலாவின் பேச்சைக் கேட்பவர் தான் யாருமில்லை.
நிலாவின் குடும்பத்தினரையும் குறைகூற முடியாது. நிலா கல்லூரிப் படிப்பிற்கு வெளியூரில் தங்கிப் படிக்கும் காலத்திற்கு முன்னதாக எல்லாம் பார்ட்டிகளுக்குச் செல்ல ஆர்வமாகவே இருந்திருக்கிறாள். அவர்கள் இன்னும் நிலாவை அப்படித் தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னால் அவள் வாழ்வில் நடந்த விஷயங்களை ரப்பர் கொண்டு அழித்தாக அவர்கள் எண்ணம். அது கல்லில் வடித்தச் சிற்பமாக நிலாவின் நெஞ்சில் பதிந்து இருக்கிறது என்பதை அவளின் குடும்பத்தினர் உணரவில்லை.


Advertisement

இன்றைக்குப் பார்ட்டி கொடுக்கும் அதியமானின் நண்பர் நல்லவர் தான். நிலாவிற்கு நடந்த விஷயங்கள் அனைத்தும் அறிந்தவர். அதனால் அனாவாசியமாக நிலாவிடம் கேள்விகள் கேட்காமல், அவளின் தற்போதைய விஷயங்கள் மட்டுமே பேசுவார்.
ஆனால் பார்ட்டிக்கு வருகிறவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியா என்ன? அநேக பேரின் கேள்விகள் நிலாவின் வாழ்க்கைக் குறித்தானதாகவே இருக்கும். இங்கேயும் நிலவன் அவளுக்கு பாஷா பாய் தான். அவன் அருகில் இருந்தால் யாரும் திரும்பக் கூட மாட்டார்கள். ஆனால் அவனுக்கும் தனிப்பட்ட நண்பர்கள், விருந்தினர்கள் இருப்பார்களே. அவர்களைச் சந்திக்கச் செல்கின்ற இடைவேளையில் வம்பு பேசுபவர்கள் நிலாவிடம் வந்து விடுவார்கள். முதலில் எல்லாம்  பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்த நிலாவிற்கு, தற்போது எரிச்சல் வர ஆரம்பித்து இருந்தது. அதனால் பார்ட்டிகளை அவாய்ட் செய்ய ஆரம்பித்து இருந்தாள். இன்றைக்கு அது முடியாது என்பதால் கடனே என்று தயாராகி நின்றாள்.
நிலா வெளியே வரவும், அவளின் மகள் மஞ்சுவும் அதே நிற உடை அணிந்து வர, அவளுக்கு வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. மயில் கழுத்து நிறத்தில் ஃப்ராக். நெட்டட்  பிரில் எல்லாம் இல்லாமல், சாதரண காட்டன் ஃப்ராக். அதே சமயம் அதில் இருந்த கற்கள் வேலைப்பாடு பார்ட்டிக்கு அணிவது போல கிராண்ட்டாகவே இருந்தது.

Advertisement

“மஞ்சு குட்டி. இந்த டிரஸ் எப்போடா வாங்கின?” எனக் கேட்டாள் நிலா.

Advertisement

“இது எங்க டாடி வாங்கிக் கொடுத்த டிரஸ். பாட்டி இது எடுத்துக் கொடுத்தா” என மழலையில் கூறியது மஞ்சு குட்டி.
அன்றைக்கு நிலா அணிந்து இருந்ததும், மயில் கழுத்து நிறத்தில் அமைந்த பார்ட்டி வியர் சுடிதார் தான். இதுவும் அவளின் கணவன் வாங்கிக் கொடுத்தது தான். அவனின் தேர்வுகள் விலையை விட, உடலுக்கு உறுத்தாமல் இருப்பதையே விரும்புவான். நிலாவிற்கும் அப்படித் தான் பிடிக்கும் என்றாலும், பல நேரங்களில் தங்களின் அந்தஸ்துக்கேற்ப அணிய வேண்டி வரும்.
இந்த மயில் கழுத்து நிறம் நிலாவிற்கு மிகவும் பிடித்த நிறம். அதையே மகளுக்கும் வாங்கி இருக்கிறான் என்றால் தன் நினைவில் தான் அதைச் செய்திருப்பானோ எனத் தோன்றியது. கேட்டு விடலாமா என எண்ணம் தோன்றும் போதே, பதில் சொல்லிட்டுத் தான் அடுத்த வேலைப் பார்ப்பார் என நினைத்தாள்.

Advertisement

நக்கலாக ‘ஏன் உன் அண்ணன் மட்டும் தான் உலகத்திலே பாசக்காரர். மத்தவங்க எல்லாம் வேஷம் போடுவாங்கனு நினைப்பா? எனக்குப் பிடிச்சது. நான் வாங்கினேன்” அப்படின்னு தான் பதில் வரும். எதுக்கு வம்பு என அதை விடுத்து தன் மகளோடு ஒரு செல்ஃபி எடுத்து அதை ஸ்டேட்டசாக வைத்தாள் நிலா.
பொதுவாக நிலா ஸ்டேட்டஸ் வைப்பது இல்லை. அவள் பெர்சனல் பற்றி யாருக்கும் பெரிதாகத் தெரியாது என்றாலும், திருமணம் ஆனவள் என்றும், மகள் இருப்பதையும் நிலா மறைத்தது இல்லை. ஆதிரா மஞ்சுவின் அப்பா எனக் கேட்ட போது வெளியூரில் வேலை செய்கிறார் எனக் கூறியிருக்கிறாள்.
ஆதிராவும் ஏனோ அதற்கு மேல் கேட்கவில்லை. நிலவன் மீதுள்ள பயம் காரணமாக இருக்கலாம். சும்மாவே எகிறுபவன், பெர்சனல் விஷயங்களை கேட்பதாகத் தெரிந்தால் நிலாவிடம் பேசுவதற்கும் தடை போடுவான் எனத் தோன்றியது. அத்தோடு அந்த படிப்பிற்கேற்ற மெச்சூரிட்டி என்பதும் இருக்கிறதே.
வழக்கமாக ஸ்டேட்டஸ் வைக்காதவள் வைத்ததும் முதலில் ரிப்ளை செய்தது ஆதிரா தான்.
“ஆஹா. ரெண்டு மயிலும் ஜோரா இருக்கு” எனக் கூறியிருந்தாள். அவளைத் தவிர மற்ற யாரும் தனிப்பட மெசேஜ் செய்யவில்லை. பொதுவாக விருப்பக் குறியீடு மட்டுமே.
இந்த படத்தைப் பார்த்துவிட்டு வெகு நாட்கள் கழித்து எழிலனின் அன்னை மலர்விழி நிலாவிற்கு மெசேஜ் செய்திருந்தார். எழிலன் பேசாவிட்டாலும் அவனின் அன்னை நாள், கிழமைகளில் வாழ்த்துகள் அனுப்புவார். அவ்வப்போது கோவில் சென்று வந்தால், நிலாவிற்கும், குழந்தைக்கும் பிரசாதங்கள் அனுப்பி வைப்பார். நிலாவின் பக்கத்திலிருந்து கொஞ்சமாவது யோசிக்கக் கூடியவர் என்றால் அது மலர்விழி மட்டும் தான். நிலாவின் அன்னை கூட சமயத்தில் நிலாவையேச் சாடுவார். அப்படி புரிதல் உள்ள மாமியார். அதை அனுபவிக்க நிலாவிற்கு கொடுத்து வைக்கவில்லை.
நிலாவின் ஸ்டேட்டஸ் பார்த்துவிட்டு “ரெண்டு நிலாவும் கைக்கு எட்டாத தூரத்தில் இருக்கீங்க. சீக்கிரம் நம்ம வீட்டு முற்றத்திற்கு வந்து சேருங்க” என மெசேஜ் அனுப்பினார் மலர்விழி.
நிலாவின் கண்களில் லேசாகக் கண்ணீர் வந்தது. என்றாலும் “எனக்கும் அதுதான் ஆசை அத்தை. காலம் என்ன வச்சிருக்குனு தெரியலை” எனப் பதில் அனுப்பினாள் நிலா.
அதே நேரத்தில் எழிலன் போனிற்கு ஏதோ மெசேஜ் வர எடுத்துப் பார்த்தான். பின், எதேச்சையாக வாட்ஸ்அப் பார்க்க, நிலாவின் ஸ்டேட்டஸ் பார்த்துவிட்டான்.
அதிலும் அம்மாவும், மகளுமான அந்த செல்ஃப்பியில் தான் இல்லையே என வருந்தினாலும், அந்த படத்தை டவுண்லோட் செய்ய மறக்கவில்லை. நிலாவும் மற்றவர்களுக்கு டவுண்லோட் ஆப்ஷன் மறைத்து வைத்தவள், அவனின் நம்பருக்கு மட்டும் அதைச் செய்யவில்லை.
சட்டென்று புன்னகை வர, யுட்யூப் மியூசிக்கில் தேடி “தோகை இளமயில் ஆடி வருகுது .. வானில் மழை வருமோ” என்ற பாடலை நிலாவிற்கு அனுப்பி வைத்தான். பின் மீண்டும் ஒரு ஆடியோ மெசேஜ்.
அதில் “அருவிகளோ  ராகம் தரும். அதில் நனைந்தால் தாகம் வரும்.” என்ற வரிகளை மட்டும் எழிலனே பாடி அனுப்பி இருந்தான்.
எழிலன் அனுப்பிய பாடலை ஓபன் செய்தவள், பாடலின் வரிகள் கேட்டதும் கன்னம் சிவந்தாள்.
இது எல்லாம் பார்ட்டிக்குக் கிளம்பிச் செல்கையில் நடந்தது. காரில் எல்லோரின் கவனமும் மஞ்சுவின் மேல் இருந்ததால், நிலாவின் செயல்களை யாரும் கவனிக்கவில்லை.
அதியமானின் நண்பர் மாதவன் கொடுக்கும் பார்ட்டிக்க்கு குடும்பமாகச் சென்றவர்களுக்கு நல்ல வரவேற்பு தான். அதிலும் அம்மா, மகள் இருவரின் டிரஸ் காம்பினேஷனுக்கு நிறைய பாராட்டுக்கள். நண்பரின் மனைவி நிலாவிடம் வந்து “ரெண்டு பேருக்கும் நீதான் டிரஸ் செலக்ட் பண்ணினியா நிலா?”எனக் கேட்டார்.
“இல்லை ஆண்ட்டி. நான் நார்மலா இது எடுத்தேன். அம்மா தான் மஞ்சுக்கு இதை எடுத்துக் கொடுத்திருக்காங்க” என்றாள் நிலா.
அந்தப் பெண்மணி நிலாவின் அன்னை தேன்மொழியிடம் “தேன்மொழி , பாப்பாவோட டிரஸ் எங்கே வாங்கினீங்க? ரொம்ப நல்லா இருக்கு. சின்ன பசங்களுக்கு உறுத்தாமலும் இருக்கு” எனக் கேட்டார்.
தேன்மொழியோ “இது பாப்பாக்க்கு அவங்க அப்பா எடுத்துக் கொடுத்ததுமா. கொஞ்ச நாள் வேறே எங்கேயும் வெளியில் வரலையா, இன்னிக்குத் தான் போட சான்ஸ்னு போட்டு விட்டேன்” என்றார்.
அந்த பெண்மணி அதற்கு மேல் ஏதும் கேட்கவில்லை. ஆனால் அவரின் தோழி ஒருத்தி அவரோடு இருந்தவர் சும்மா இல்லாமல் “அப்போ நிலா அவ ஹஸ்பண்ட் கூட பேசிட்டுதான் இருக்காளா, நான் கூட ஐஞ்சு வருஷமா உங்க கூடவே இருக்கவும், டிவோர்ஸ் ஆகிடுச்சுனு நினைச்சேன்” என்றார்.
நிலா துடித்து விட்டாள். இதுவரை அந்த வார்த்தையை அவளின் குடும்பத்தினர் மட்டுமில்லை, தெரிந்தவர்கள் கூட சொன்னதில்லை. நிலாவைப் பற்றி வம்பு பேசவேண்டும் என நினைத்தாலும் எப்போ உன் புகுந்த வீட்டுக்குப் போகப் போற. இல்லை மஞ்சு அப்பாவை இங்கே வரச் சொல்லப் போறியா என கேட்பார்கள். அவ்வளவு தான். அதற்கு மேல் பிரிவு என்ற வார்த்தைக் கூட அதிகம் கூறமாட்டார்கள்.
ஏன் என்றால் நிலா  பிரசவத்திற்கு வந்தாள்.  அப்படியே மேலே படிக்க காலேஜ் இங்கே சேர்ந்ததால் பிறந்த வீட்டில் இருக்கிறாள் என நிலாவின் பெற்றோர் எல்லோருக்கும் சொல்லியிருந்தனர். அதற்கு பின் எனக்  கேட்ட போதும், இங்கே வேலை கிடைத்து இருக்கிறது எனச் சொல்லி விட்டனர். அதைத் தவிர யாருக்கும் வேறு எதுவும் தெரியாது.
நிலாவின் கண்கள் கலங்க, நிலவன் மற்றும் அவன் அன்னை இருவரும் பதறி விட்டனர். நல்லவேளையாக குழந்தை ஏதோ விளையாட்டுப் பொம்மைகள் இருக்கவே அங்கே சென்றிருந்தது.
தந்தையின் நண்பர் மாதவனின் மனைவி பேசியது எல்லாம் கவனிக்கவில்லை நிலவன். எல்லோரின் கண்களும் தங்கள் வீட்டுத் தேவதைகளிடமே இருக்கிறதே. கண் பட்டு விடக் கூடாதே என்ற கவலை தான் அவனுக்கு.
இன்னொரு பெண்மணி பேசும்போது தான் நிலவனின்  கவனம் அவர்கள் பக்கம் சென்றது. அவரின் பேச்சில் அடிக்கச் செல்வது போல  அருகிலேயே சென்று விட்டான். தேன்மொழி தான் அவனின் கையைப் பிடித்தார்.
நிலவன் ஏதும் பதில் சொல்வதற்குள் அவனின் அன்னையே “எங்க நிலா அப்படிப்பட்டவ கிடையாது. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக் கொடுத்தோம். குழந்தையும் பிறந்திடுச்சு. அவளுக்கு எல்லாம் பழகட்டும்னு தான் எங்க கூட இருக்க வச்சிருக்கோம். எங்க சமபந்தி வீட்டுக்கு நாங்க பாப்பாவையும் கூட்டிட்டு போயிட்டு தான் வந்திட்டு இருக்கோம். இப்போ தான் ரெண்டு வருஷமா வேலைக்குப் போறா. கொஞ்சம் வெளியுலகம் தெரியட்டும்னு இருக்கா.  அதுக்குள்ளே என்ன பேச்சுப் பேசறீங்க?” என்றார்.
அத்தோடு விடாமல் “யார் எதிர நின்னுப் பேசிட்டு இருக்கீங்க தெரியுமா? என் பையன் நினைச்சா ஐஞ்சு நிமிஷத்தில் உங்க மொத்த பிசினஸ் காலி பண்ணிடுவான். ஏதோ பார்ட்டி நடத்தற எங்க ஃப்ரெண்ட்காக பேசாம இருக்கோம். இந்த மாதிரி இன்னொரு தடவை பேசினா, நல்லா இருக்காது ஜாக்கிரதை.” எனப் பொரிந்து தள்ளி விட்டார் தேன்மொழி.
நிலவன் “ச்சீ” என ஒரே வார்த்தையில் அந்த பெண்மணிக்குப் பதில் கூறிவிட்டுத் தன் தங்கையைக் கவனிக்கத் திரும்பினான்.
நிலாவின் உடல் நடுங்குவது வெளிப்படையாகத் தெரிய, சட்டென்று அவளை நாற்காலியில் அமர வைத்தான். கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் கொடுக்க, நிலா அதை வாங்கும்போதே கைகள் நடுங்கியது.
நிலவன் “நிலா, இப்போ எதுக்கு இந்த பயம்? அவங்க சொல்றது எதுவும் நடக்காது.” என்றாள்.
முதல்முறையாக “எவ்ளோ நாளைக்கு அண்ணா? இன்னிக்கு இவங்க கேட்ட மாதிரி, நாளைக்கு வேறே யாரும் கேட்க மாட்டாங்களா? அவர்கிட்டேயும் எல்லாரும் கேட்பாங்க தானே. அப்போ அவரும் இந்த முடிவு எடுக்க மாட்டார்னு என்ன நிச்சயம்? இப்போவரை மஞ்சு நர்ஸரி தான் போயிட்டு இருக்கா.  அடுத்த வருஷம் பிராப்பரா ஸ்கூல் சேர்க்கப் போகும்போது, அவளும் இந்த மாதிரி கேள்விகள் ஃபேஸ் பண்ண வேண்டி வருமே?” என நிலாக் கூறவும், நிலவன் அதிர்ந்து விட்டான்.
-தொடரும்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!