தேன் சிந்துமோ மேகம்-11(2)
அத்தியாயம் – 11 (2)
கல்லூரி திறந்து சில நாட்கள் சென்று இருந்தது. நிலாவிற்கு விருப்பமான பாடம் என்பதால் புரொஃபசர்கள் நடத்துவதை ஊன்றிக் கவனிப்பதும், அடுத்து அதை மாலையில் திருப்பிப் பார்ப்பதுமாக அவளின் நேரம் கழிந்தது.
பிரேஷர்ஸ் பார்ட்டி சீனியர் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் முதல் வருட மாணவர்களின் தனித் திறமைகள் எதுவும் இருந்தால் குறிப்பிடும்படி சர்க்குலர் வந்தது. நிலா நன்றாக நடனம் ஆடுவாள். பரதநாட்டியம் அரங்கேற்றம் வரை சென்றிருக்கிறது. இங்கே வந்தும் தினமும் சில நிமிடங்களாவது நடனப் பயிற்சி செய்வாள். அதற்காகத் தான் தனி அறை வேண்டும் எனக் கேட்டு வாங்கியிருந்தாள். அதைக் குறிப்பிட்டு இருக்கவே, அவள் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என அறிவிப்பு வந்திருந்தது.
முதல் நாள் எழிலனை நேராகப் பார்த்தத்தோடு சரி. அதற்கு பின் அவ்வப்போது எதிர்ப் படும்போது சிறு புன்னகையுடன் கடந்து விடுவான்.
Advertisement
அன்றைக்கு கிளாஸ் முடிந்து வந்ததும், எழிலனுக்கு மெசேஜ் அனுப்பினாள் நிலா. இதுவரை தினமும் காலை வணக்கம் மட்டும் எழிலன் மெசேஜ் அனுப்புவான். நிலாவும் பதில் அனுப்புவாள்.
மறுநாள் ஆட வேண்டும் எனவும் அவளுக்குச் சில சந்தேகங்கள் வரவே, எழிலனை நாடினாள். முதலில் நிலவனிடம் தான் கேட்க நினைத்தாள். ஆனால் இந்த பார்ட்டி தனித் தனி டிபார்ட்மெண்ட்டாக நடக்கவே நிலவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தாள். அதனால் எழிலனுக்குப் பேசினாள் நிலா.
“ஹலோ சீனியர்” என மெசேஜ் போட்டாள்.
Advertisement
சற்று நேரம் பதில் வரவில்லை. நிலா டென்ஷனுடன் நகம் கடித்தபடி ஃபோனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
Advertisement
அரை மணி நேரம் கடந்தும் பதில் வரவில்லை எனவும், நிலாவிற்கு என்னவோ போல ஆனது. இப்படி எல்லாம் எதற்கும், யாருக்கும் காத்திருந்தது இல்லை என்பதால் இதைப் புறக்கணிப்பாகவே எண்ணினாள்.
சரி நாளைக்கு ஆடவே வேண்டாம் என முடிவு செய்து தன் வேலையைப் பார்க்கத் திரும்பும் வேளையில், மெசேஜ் டோன் கேட்டது.
“சொல்லுங்க நிலவழகி” என ரிப்ளை செய்திருந்தான். அதில் நிலாவிற்கு லேசாக வெட்கம் வந்தது. இவளின் முழுப்பெயர் சொல்லி அழைக்கும் முதல் நபர் எழிலன் தான்.
Advertisement
இதுவரை வீட்டிலும் சரி, தோழிகள் வட்டத்திலும் சரி நிலா என்றே எல்லோரும் அழைத்து வந்திருந்தனர்.
முழுப்பெயர் எல்லாம் அட்டெண்டன்ஸ் எடுக்கும்போது கேட்பதோடு சரி. அப்போதும் நிலா என ஆரம்பிக்கும்போதே அவள் ப்ரெசெண்ட் சொல்லி விடுவதால் நிலவழகி என்ற பெயர் காதில் விழாது.
நிலா சுதாரித்துக் கொண்டு “சீனியர், நாளைக்கு ஃபிரெஷர்ஸ் பார்ட்டியில் நான் பரதநாட்டியம் ஆடறேன். ஆனால் என்கிட்டே அந்த டிரஸ் எல்லாம் இல்லை. அதோட ஒரே நாள் டைம்லே என்ன மாதிரி பாட்டுக்கு ஆடுறது தெரியலை” என மெசேஜ் அனுப்பினாள்.
“இது காலேஜ் ஈவண்ட் இல்லைமா. ஸ்டூடண்ட்ஸ்குள்ளே ஒரு கம்ஃபர்ட் கொண்டு வர ஏற்பாடு செய்திருக்கோம். சோ பெரிசா ரெடி ஆகணும்னு எல்லாம் இல்லை. ஜஸ்ட் உங்களுக்கு வசதியான உடையில் வந்து ஆடினால் போதும்” எனக் கூறினான் எழிலன்.
“பாட்டு? சினிமா ஸாங்க்ஸ் ஆடலாமா?”
“உங்க சாய்ஸ் தான். டீசண்ட் ஸாங்க்ஸ் அவளோதான்”
“ஓகே சீனியர். தாங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப்’
“இட்ஸ் ஓகேமா” என்றவனுக்கு, லேசாக குறுகுறுக்க “எந்த பாட்டு ஆடப் போறீங்க?” எனக் கேட்டான்.
“லாஸ்ட் டைம் ஸ்கூல் ஃபேர்வெல்ல இளஞ்சோலைப் பூத்ததா பாட்டு ஆடினேன். அது ஸ்டெப்ஸ் நியாபகம் இருக்கு. இப்போ ரிகர்சல் பார்த்தால் போதும். சோ அதையே ஆடலாம்னு நினைக்கிறேன்”
எழிலன் முகத்தில் பெரிய புன்னகை வந்தது. “வெரி குட் சாய்ஸ். ஆல் தி பெஸ்ட்” என மெசேஜ் செய்தான்.
ஏனோ அந்தப் பாடலைக் கேட்க வேண்டும் எனத் தோன்ற, எழிலன் தன் போனில் ஒலிக்க விட்டான். ஏதோ யோசித்த எழிலன், தன் சகாக்களிடம் பேசி நிகழ்ச்சி ஏற்பாட்டில் சில மாறுதல்கள் செய்தபின், அந்த பாடலைப் பாடிப் பார்த்தான்.
எழிலன் பிராக்டிஸ் செய்து முடித்தப் பின், அவனின் தந்தை, தாய் இருவரும் அவனை அணைத்துக் கொண்டனர்.
எழிலனின் அன்னை மலர்விழி “எழிலா, நாளைக்கு காலேஜ்லே பாடப் போறியா?” எனக் கேட்டார்.
“ஆமாம்மா.”
எழிலனின் அப்பா செழியன் யோசனையோடு “நாளைக்கு எந்த நிகழ்ச்சியும் இருக்கிறதா எனக்கு நோட்டீஸ் வரலையே” என்றார்.
“இது ஃபிரெஷர்ஸ் பார்ட்டி தான்பா. டிபார்ட்மெண்ட்குள்ளே பண்ணிக்கிறோம்” என்றான் எழிலன்.
“ஓ. எத்தனை மணிக்கு?”
“லாஸ்ட் ஹவர் மட்டும் தான்பா”
“சரி. ஆல் தி பெஸ்ட்” எனக் கூறிவிட்டுச் சென்று விட்டார் செழியன்.
மலர்விழியும் தலையில் கைவைத்து ஆசி கூறிவிட்டுச் சென்றார்.
நிலா தன் அண்ணனிடம் பார்ட்டி பற்றியும், அதில் நடனம் ஆடுவது பற்றியும் கூறினாள். இது எப்போதும் நடப்பது தான் என்பதால் நிலவன் சரி என்று கூறிவிட்டான். எப்போது பார்ட்டி என்று மட்டும் கேட்டுக் கொண்டான்.
மாலை மூன்று மணியிலிருந்து முதல் வருட வரலாறு மாணவர்கள் ஆடிடோரியம் வந்து சேர்ந்தனர். சீனியர் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். முதலில் வரவேற்புரை முடித்து, ஜூனியர்ஸ் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஆரம்பித்தனர்.
சிலர் பாட, ஒரு சிலர் ஜோக்ஸ் சொல்ல, ஒரு சிலர் வெஸ்டர்ன் டான்ஸ் ஆட என சற்று நேரம் சென்றது. மாணவர்கள் மத்தியில் விரசமில்லாத கமெண்ட்ஸ் வர, அதோடு அவர்களும் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர்.
ஐந்து நிகழ்ச்சிகள் முடியும் வேளையில் வைஸ் பிரின்சிபால் உள்ளே வர, சட்டென்று ஒரு அமைதி. வரலாற்றுத் துறை டிபார்ட்மெண்ட் ஹெட் அவரை வரவேற்று அமர வைத்தார். அப்போது வேறு சில டிபார்ட்மெண்ட் புரொஃபசர்களும் வந்தனர். இது அவ்வப்போது நடப்பது தான். யார் ஃப்ரீயாக இருக்கிறார்களோ அவர்கள் கலந்துக் கொள்வார்கள்.
அடுத்து தொகுப்பாளர் “டான்ஸ் பை நிலவழகி ஃபர்ஸ்ட் இயர்” எனக் கூறும்போது சரியாக நிலவனும் பின் வரிசையில் நின்று கொண்டான்.
நிலா தனது பாடலுக்கான லிங்க் ஏற்கனவே அனுப்பி இருக்க, அது பிளே ஆகும் முன் தொகுப்பாளர் மற்றும் ஒரு அறிவிப்புக் கூறினார்.
“இந்தப் பாடலை பாடும் நிலா அவர்களின் மிகப் பெரிய ரசிகரான நமது எழிலன் பாடப் போகிறார்” எனக் கூற, கீழிருந்து கைதட்டல்களும் விசிலும் காதை அடைத்தது.
இது நிலாவிற்கே தெரியாது. அவள் கண் விரித்துப் பார்க்க, எழிலன் “நிலவழகி, இது என்னோட பேவரைட் பாட்டும் கூட. நீங்க நேத்திக்கு இந்த சாங்க் சொன்னதும், எனக்கும் பாடத் தோணியது. அதான் இந்த சேஞ்ச். டோன்ட் மிஸ்டேக்” என்றான்.
“இது சர்ப்ரைஸ் சீனியர். ஃபர்ஸ்ட் டே உங்க வாய்ஸ் கேட்டதுமே ரொம்ப பிடிச்சு இருந்தது. நீங்க பாடி, நான் ஆடினா, எனக்கு ரொம்பவே சந்தோஷம் தான்” என வெளிப்படையாகக் கூறினாள் நிலா.
எழிலனை அவளின் இந்த கள்ளமில்லாத பேச்சு வெகுவாகக் கவர்ந்தது.
தொகுப்பாளரின் அறிவிப்பைக் கேட்டு, நிலவன் ஸ்டேஜ் அருகே வரும் முன், இருவரும் மேடையில் ஏறி இருந்தனர்.
பாடலுக்கு உண்டான மியூசிக் மட்டும் கரோக்கி முறையில் ஒலிக்க, எழிலனின் குழைவான குரலில் “இளஞ்சோலைப் பூத்ததா” என ஆரம்பித்தது. நிலாவின் நடனமும் எல்லோரையும் கவர்ந்தது. அந்தப் பாட்டில் நதியா அணிந்திருக்கும் சுடிதார் போன்றே அணிந்து ஆடியது அத்தனை அழகாக இருந்தது. மேக்கப் கூட அதே போல போட்டிருந்தாள் நிலா.
“நம்மை யார் தான் கேட்பது.. விதிதானே சேர்த்தது” என்ற வரிகளில் எழிலன் எஸ்பிபியின் உருக்கத்தை அப்படியே கடத்தினான்.
பார்வையாளர்கள் அனைவருக்கும் இவர்கள் இருவரின் பெர்ஃபார்மன்ஸ் கண்களுக்கும், காதுகளுக்கும் நல்ல விருந்தாக அமைந்தது.
பாடல் முடிந்தபின் ஒரு நிமிடம் முழுதாக அரங்கத்தில் கைதட்டல் ஒலித்தது.
எழிலன் மேடையிலேயே நிலாவிற்கு கை கொடுத்தான். பின் மைக் எடுத்து “ஹாய் ஃபிரண்ட்ஸ், இந்த பாட்டு எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இவங்க பெர்ஃபார்மன்ஸ் ரொம்ப அழகா இருந்தது. நம்ம காலேஜ்க்கு வரும் காலத்தில் ஒரு நல்ல டான்ஸர் ஹிஸ்டரி டிபார்ட்மெண்ட்லே இருந்து வருவது ஹாப்பியா இருக்கு” எனக் கூறினான் எழிலன்.
வைஸ் பிரின்சிபால் செழியன் மேடை ஏறி “உங்க பேர் என்னமா?” எனக் கேட்டார்.
நிலா “நிலவழகி சர்” எனப் பதில் கூறினாள்.
“அழகான பெயர். உங்க டான்சும் அருமையா இருந்தது. இனிமேல் காலேஜ் ஈவண்ட்லே கண்டிப்பா உங்க டான்ஸ் இருக்கும். வாழ்த்துகள்” எனக் கூறியவர், எழிலன் புறம் திரும்பினார்.
“உங்க பாட்டும் ரொம்ப நல்லா இருந்தது. கீப் இட் அப்” என்றுவிட்டு இறங்கினார்.
எழிலன் மனதிற்குள் இவர் எப்போ வந்தார்னு கவனிக்கவே இல்லையே என நினைத்தான். அப்போது தான் ஐயோ அப்போ மலர் மேடமும் வந்திருக்கணுமே எனத் தேட, முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்.
எழிலா இன்னைக்கு வீட்டில் உனக்கு மண்டகப்படி தான்டா என நினைத்துக் கொண்டான்.
நிலவழகி எல்லோருக்கும் நன்றி எனக் கூறிவிட்டு இறங்க, ஸ்டேஜ் அருகிலேயே நிலவன் அவளை முறைத்தபடி நின்றான்.
நிலா ஏன் என்பது போல பார்க்க “இவன் பாடி, நீ ஆடப் போறதா சொல்லவே இல்லையே. அப்படினா நான் வேண்டாம்னு சொல்லிருப்பேன்” என்றான் நிலவன்.
“எனக்கேத் தெரியாது அண்ணா.”
“அப்போ எப்படி இந்த பாட்டை அவன் பாடினான்?”
“அவர் தான் எனக்கு மென்டார். நேத்திக்கு இந்த ஈவண்ட் பற்றி பேசினப்போ, அவர் எனக்கு கொஞ்சம் கைட் பண்ணினார். அப்போ என்ன சாங்க்னு கேட்டார். நான் இந்த சாங்க் பற்றி மட்டும் தான் சொன்னேன். அவர் இங்கே வந்து பாடுவார்னு எல்லாம் தெரியாது” என்றாள் நிலா.
இதைக் கூறும்போதே நிலாவின் குரல் உள்ளே போய், கண்களில் கலக்கம் தெரிந்தது. நிலவன் இருக்கும் இடம் கவனம் கொண்டு “சரி, சரி நாம அப்புறம் பேசிக்கலாம்.” எனக் கூறினான்.
“என் பெர்ஃபார்மன்ஸ் பத்தி நீ ஒண்ணுமே சொல்லலையே?” எனச் சிணுங்கலாக கேக்க, “என் செல்லத் தங்கையை மிஞ்ச யாரு இருக்கா?” என அவளின் தலையை வருடினான் நிலவன்.
இதைத் தூரத்தில் இருந்து பார்த்த எழிலன் ‘ம். நம்ம வீட்டுப் பிள்ளை படத்தை நல்லா தான் ஒட்டிக் கிட்டு இருக்காங்க அண்ணன் தங்கச்சி ரெண்டு பேரும்’ என நினைத்தான்.
நிலவன், நிலா இருவரும் பேசிக் கொண்டிருக்க, மலர்விழி அருகே வந்தார்.
நிலவழகி என அழைக்க, நிலா திரும்பினாள்.
“ரொம்ப நல்லா ஆடினமா. காட் பிளஸ் யு” எனக் கூற “தாங்க்ஸ் மேடம்” என்றாள் நிலா.
நிலாவிடம் தலையாட்டி விட்டுச் சென்றார் மலர்விழி.
நிலாவிற்கு அவர் வேறு டிபார்ட்மெண்ட் புரொஃபசர் எனத் தெரியும். இது பொதுவாக டிபார்ட்மெண்ட் ஈவண்ட் தானே. இவர்கள் ஏன் இப்போது வந்தார்கள் எனத் தோன்றியது. அதையே அவள் நிலவனிடம் கேட்டாள்.
“அவங்க பையன் பாடுறான்னு தெரிஞ்சிருக்கும். அதான் வந்திருப்பாங்க” என்றான் நிலவன்.
நிலாவிற்கு அப்போதுதான் எழிலன் அவர்களின் மகன் எனப் புரிந்தது.
நிலவன் மீண்டும் தன் தங்கையிடம் “அந்த எழிலனிடம் ஜாக்கிரதையா இரு. அவங்க குடும்பமா இந்த காலேஜ்லே தான் இருக்காங்க. சோ அந்த தைரியத்தில் எல்லாரையும் விரட்டுவான். உன்கிட்டேயும் அந்த திமிர் காட்டினா, என்கிட்டே சொல்லு. நான் பார்த்துக்கறேன்” என்றான்.
நிலாவிற்கு அப்படி எல்லாம் தோன்றவில்லை. ஆனாலும் அண்ணனிடம் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை.
-தொடரும்-
