Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

95. தேவி - தேன் சிந்துமோ மேகம்

தேன் சிந்துமோ மேகம்11(1)

அத்தியாயம் – 11 (1)
பத்து வருடங்களுக்கு முன், திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்த அந்த கல்லூரியின் கலை அரங்கத்தில் முதல் வருட மாணவ மாணவியர்களுக்கு அறிமுகக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
சீனியர் மாணவர்கள் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்க, இறை வணக்கப் பாடல் மற்றும் தேசிய கீதம் பாடிய மாணவனையே இரு கண்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.
கடவுள் வாழ்த்துப் பாடலாக எஸ்பிபி அவர்களின் குரலில் ‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி’ பாடல் பாட, அத்தனை இனிமையாக இருந்தது. இத்தனைக்கும் எந்த இசைக் கருவிகளும் இல்லாமல், வெறுமனே பாடல் மட்டுமே ஒலித்தது.


Advertisement

தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து, தேசிய கீதம் எல்லாமே அவனின் தலைமையில் மேலும் சிலர் இணைந்து பாடினார்கள்.
இதுவரை பள்ளிகளில் கொயர் எனக் குழுவாக, அதிலும் பெரும்பாலும் பெண்களே அதிகமாக இருப்பதை மட்டுமே பார்த்து இருந்தவளுக்கு, தனியாக ஒரு மாணவன் பாடியது ஆச்சரியத்தைத் தந்தது. குரல் வசீகரமாக இருந்தது.
பதினேழு வயதில் காணும் எல்லாம் அதிசயம் தானே. அப்படிப் பார்த்தால் அங்கிருந்த அநேக மாணவர்களுக்கும் அப்படித் தான். ஆனால் நம் நாயகிக்கோ அது பேரதிசயம் தான்.

Advertisement

பதினேழு வயது வரை குடும்பத்தினரின் நிழலில் வளர்ந்தவளுக்கு, தனியாக ஹாஸ்டலில் தங்கிப் படிக்க வருகிறாள் என்பதே பெரிய விஷயம். கூட்டுப் புழு பட்டாம்பூச்சியாக சிறகை விரித்துப் பறக்கக் காத்திருக்கும் நிலையில் தான் இருந்தாள் நிலவழகி.

Advertisement

ஆம். அவளின் பெயர் நிலவழகி. இதுவரை தலைநகரில் படித்துக் கொண்டிருந்தாள். இப்போது தலைநகரை விட்டுத் தள்ளி இருக்கும் கல்லூரியில் இளங்கலைப் பிரிவில் வரலாறு பாடம் படிக்க வந்திருக்கிறாள்.
நிலவழகி பெரிய செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளின் அண்ணன் நிலவன் முதுகலை மேலாண்மைப் படிப்பிற்காக இந்தக் கல்லூரியில் சேர்ந்திருக்க, தங்கையும் அங்கேயே படிக்க வந்திருக்கிறாள்.
உடன் பிறந்தவர்கள் இருவருக்கும் ஆறு வயது வித்தியாசம். நிலவன் படித்த பள்ளியில் தான் அவனின் தங்கை நிலாவும் படித்தாள். பள்ளிக்குச் செல்வதும், வீடு திரும்புவதும் அவளின் அண்ணனுடன் மட்டுமே. 

Advertisement

நிலவன் இளங்கலைப் படிப்பை சென்னையிலேயே படித்ததால், அவன் கல்லூரி சென்று வரும்போது தங்கையையும் பள்ளியிலிருந்து அழைத்து வந்து விடுவான். கடந்த வருடம் தான் மேலாண்மைப் படிப்பு இங்கே நன்றாக இருக்கும் என இந்தக் கல்லூரியில் சேர்ந்திருந்தான். அப்போதும் தினமும் காலை, மாலை பள்ளிக்குத் தங்கை காரில் செல்ல, வீட்டின் நம்பிக்கையான டிரைவர் மற்றும் அவன் அன்னை இருவரும் உடன் செல்வதை உறுதி செய்துக் கொள்வான்.
நிலா இளங்கலைப் படிப்பை வரலாறு எனத் தேர்ந்தெடுத்தது கொஞ்சம் பிடிக்கவில்லை தான். ஆனால் நிலாவிற்கு சிறு வயதில் இருந்தே ராஜா, ராணி கதைகள் அதிகம் பிடிக்கும். அதிலும் பொன்னியின் செல்வன் கதையின் மீது தீராத காதல் என்பதால், வரலாறு தேர்வு செய்திருக்கிறாள் என்று அவளின் குடும்பத்தினருக்கு புரிந்தது.
நிலவனுக்கு என்னவோ சென்னையில் வேறு கல்லூரியில் சேர்க்க விருப்பம் இல்லை. இந்த கல்லூரியில் கண்டிப்பு, படிப்பு அனைத்தும் நன்றாக இருக்கவே, இங்கேயே சேர்த்துவிடலாம் என்று கூறிவிட்டான்.
ஹாஸ்டலில் தங்கிப் படிக்க நிலா விருப்பம் தெரிவிக்க, முதலில் அவளின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. நிலவனுக்கு இங்கே பெண்கள் ஹாஸ்டல் நிர்வாகம் பற்றி நல்ல அபிப்ராயம் இருக்கவே பெற்றோரைச்  சம்மதிக்க வைத்தான்.
இதோ ஹாஸ்டலில் விட்டுவிட்டு இருவரின் பெற்றோரும் சென்று விட்டனர். நிலாவைக் காலையில் கலையரங்கத்தில் கொண்டு விட்டுத் தான் தன் வகுப்பிற்குச் சென்றிருந்தான் நிலவன்.  
வழக்கமான அறிமுக உரைகள் முடிந்த பின், எந்த எந்த டிபார்ட்மெண்ட்டிற்கு மாணவர்கள் தலைவன் யார் யாரென அறிமுகப்படுத்தினார் கல்லூரி முதல்வர்.
நிலவழகிப் பார்த்து பிரமித்த அந்த மாணவன் தான் வரலாறு பிரிவிற்கு தலைவன் எனக் கூறி மைக்கில் அழைத்தனர்.
“ஹலோ ஸ்டூடண்ட்ஸ், என் பெயர் எழிலன். வரலாற்றுத் துறையின் மாணவர் தலைவன். இன்னும் இரண்டு நாட்களில் நம் ஸ்டூடண்ட்ஸ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மென்டார் அறிமுகப்படுத்தி விடுவோம். படிப்பு சம்பந்தமாகவும் சரி, வேறு எந்த அகட்டிவிட்டீஸ் என்றாலும் அவர்கள் மூலமாக நீங்கள் எங்களை அணுகலாம். சீனியர், ஜூனியர் என்ற பாகுபாடு இல்லாமல், எல்லோரும் நல்ல ஃபிரண்ட்சாக இருப்போம். வணக்கம்” என்று கூறி விடை பெற்றான்.
நிலவழகி அவனின் பெயரை ‘எழிலன்’ நல்லாத் தான் இருக்கு எனத்  தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
பின் எல்லோரையும் அவர் அவர் டிபார்ட்மெண்ட் அனுப்பி வைத்தனர். இவர்கள் வரலாறு டிபார்ட்மெண்ட் செல்ல, எழிலன் தான் வழி நடத்தினான்.
அன்றைக்கு முழுதும் இன்ட்ரோ கிளாஸ் மட்டும் நடந்தது. மாலையில் அவளின் டிபார்ட்மெண்ட் வாசலுக்கு வந்து விட்டான் அண்ணன் நிலவன்.
இதற்குள் ஹாஸ்டல் ஸ்டூடண்ட்ஸ் இருவர் ஃபிரண்ட்ஸ் ஆகியிருக்க, நிலவனை யார் என்பது போல பார்த்தனர்.
நிலா “அண்ணா” எனவும், அவர்கள் பார்வை ஆவலாக நிலவனைச் சுற்றியது. நிலவன் அதைக் கண்டுகொள்ளாமல் “நிலா, ஃபர்ஸ்ட் டே கிளாஸ் ஓகே தானே வா. உன்னை ஹாஸ்டலில் கொண்டு விடுகிறேன்” என்றான்.
“இருக்கட்டும் அண்ணா. நானே போகிறேன்” என்றாள்.
“ம்ச். அது எல்லாம் வேண்டாம். கிளாஸ் முடிஞ்சதும் நான் உன்னைக் கொண்டு விட்டுப் போறேன்” என்றான்.
“அண்ணா, உன் ஹாஸ்டல் வெளியில் இருக்கு. எனக்கு கேம்பஸ் உள்ளே இருக்கு. உனக்கு கிளாஸ் ஹவர்ஸ் வேறே வேறே இருக்கும். எனக்காக நீ கஷ்டப்பட வேண்டாம். எதுவும் வேணும்னா உன்னைக் கூப்பிடறேன்”
“இதில் என்ன இருக்கு? நான் எப்போதும் உன்னைக் கொண்டுவிட்டுத் தானே எங்கேயும் போவேன். அப்புறம் என்ன?”
நிலவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, அந்த வழியாகச் சென்ற எழிலன், அவர்கள் அருகில் வந்தான். நிலவன் மேனேஜ்மெண்ட் ஸ்டூடண்ட் என்று எழிலனுக்குத் தெரியும். இருவரும் ஒரே வருடம் தான். டிபார்ட்மெண்ட் தான் வேறு. கல்லூரியில் நிலவன் ஒரு மாதிரி ரஃப் அண்ட் டஃப் என எல்லோருக்கும் தெரியும். தங்கள் டிபார்ட்மெண்ட்டில் அவனுக்கு என்ன வேலை என்று நினைத்தான். நிலாவும் ஒரு மாதிரி நிற்பதாகத் தெரியவே ஏதோ பிரச்சினை என்று நினைத்தான். அவனுக்கு நிலவன் அவளின் சகோதரன் என்று தெரியாது. தங்கள் டிபார்ட்மெண்ட் மாணவிக்கு உதவி செய்ய நினைத்தான்.
“நிலவன், இங்கே என்ன வேலை உனக்கு?” என்றான் எழிலன்.
நிலவனுக்கு எழிலன் மீது லேசான பொறாமை உண்டு. அவன் இருக்கும் இடங்களில் எல்லாம் நிலவன் தான் முதலில் நிற்பான். படிப்பு, மற்ற அகட்டிவிட்டீஸ் எல்லாவற்றிலுமே அவன் தான் முதல். ஆனால் இந்தக் கல்லூரியில் அது முடிவதில்லை. காரணம் எழிலன். படிப்பில் அவர் அவர் துறையில் இருவருமே முதல் மாணவர்கள் தான். ஆனால் மற்றவற்றில் எழிலன்  முன்னிலை வகிப்பதில் நிலவனுக்கு எரிச்சல். எழிலன் ஏற்கனவே இளங்கலைப் பாடமும் அங்கயே படித்ததால், பேராசிரியர்களளுக்கு அவனை நன்றாகவேத் தெரியும். அதனால் பல விஷயங்களில் எழிலனை முன்னிலைப்படுத்துவார்கள்.
இப்போதும் அந்த எரிச்சலில் “அதைப் பற்றி உனக்கென்ன?” என எழிலனை எடுத்தெறிந்து பேசினான்.
எழிலன் “ஹலோ, எங்க டிபார்ட்மெண்ட் ஸ்டூடண்ட் கிட்டே எதுக்கு வம்பு பண்ணிக்கிட்டு இருக்க? பிரின்சிபால் கிட்டே கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன்” என்றான்.
“ஹ. கம்ப்ளைண்ட் பண்ணித் தான் பாரேன்” என அப்போதும் திமிராகவேப் பதில் கூறினான் நிலவன்.
“உன் பேர் என்னமா? பிரின்சிபால் கிட்டே நான் கூட்டிட்டு போறேன். இல்லை வேறே லேடி புரொஃபசர் கிட்டேப் போகலாம். நீ கம்ப்ளைண்ட் பண்ணினா, ஆக்ஷன் எடுப்பாங்க” என்றான் நிலவன்.
நிலா தர்ம சங்கடமடைந்தாள். பின் மெதுவாக “பிரச்சினை ஒண்ணுமில்லை சர். இவர் என்னோட அண்ணன்” என்றாள்.
எழிலன் முதலில் “என்னமா சொல்ற? சத்தமாவே சொல்லு. அவன் எதுவும் பண்ணாம பார்த்துக்கறேன்” என்றான்.
நிலா மீண்டும் “சர், அவர் என்னோட அண்ணன்” எனச் சத்தமாகக் கூறினாள்.
நிலவன் எழிலனைக் கெத்தாகப் பார்க்க, எழிலனோ இருவரையும் ஒரு மாதிரிப் பார்த்துவிட்டு “சர் எல்லாம் சொல்ல வேண்டாம். சீனியர்னு சொல்லு போதும்.” எனச் சொன்னான்.
பின் “உனக்கு இப்படி ஒரு அண்ணனா? கஷ்டம் தான்” என்றுவிட்டு நடந்தான் எழிலன்.
நிலவன் எழிலனைப் பார்த்து “ஏய்” எனும்போதே, நிலா “அண்ணா” என அழைத்தாள்.
நிலவன் திரும்பவும் “இங்கேருந்து எனக்கு ஹாஸ்டல் பக்கம் தானே. நானே பார்த்துக்கறேன். நீ கிளம்பு” என்றாள்.
கொஞ்சம் யோசித்து விட்டு “சரி. பார்த்துப் போ. ரூமிற்கு போயிட்டு எனக்கு கூப்பிடு. அப்புறம் இந்த எழிலன் கூட பேச்சு வச்சுக்காத. ரொம்ப திமிர் பிடிச்சவன்.” என்றான்.
நிலா “அப்படித் தெரியலையே அண்ணா. வாலண்டியரா வந்து ஹெல்ப் பண்ணுறவங்க, அப்படி இருக்கமாட்டாங்க” என்றாள.
“ம்ச். உனக்கு உலகம் தெரியாது. நான் சொன்னா கேட்டுக்கோ. அவளோதான்” என்றான் நிலவன்.
நிலா அதற்கு மேல் அண்ணனிடம் வாதாடவில்லை “சரி அண்ணா” எனக் கூறிவிட்டு ஹாஸ்டல் நோக்கி நடந்தாள்.
நடக்கும்போதே நிலாவிற்கு யோசனைதான். நிலவன் எடுத்தெறிந்து பேசியதுமே, அவனுக்கு எழிலனைப் பிடிக்கவில்லை எனப் புரிந்தது. நிலாவிற்கு அது வருத்தமாக இருந்தது. இப்படி இதுவரை உணர்ந்தது இல்லை. அண்ணன் தான் அவளுக்கு எல்லாமே. அவனுக்கு வேண்டாதது எதுவும் தனக்கும் வேண்டாம் என்று விடுவாள். இப்போது அண்ணனுக்கு ஏன் இவரைப் பிடிக்கவில்லை எனச்  சிந்தனை ஓடியது.
ஹாஸ்டல் சென்றதும் அண்ணனிடம் பேசிவிட்டாள். அவளுக்குத் தனி ஏசி அறை தான். சாப்பாடும் ஓரளவு நன்றாகவே இருக்கும். அது எல்லாம் விசாரித்து விட்டு தான் ஹாஸ்டலுக்கு நிலவனும், அவன் பெற்றோரும் ஓகே சொன்னதே.
அன்றைக்கு எதுவும் வேலை இல்லாததால், பெற்றோரிடம் பேசி, அண்ணனிடம் பேசி எனப் பொழுதைக் கழித்தாள் நிலா.
இரவு உணவு முடிந்து வந்ததும், இவர்கள் டிபார்ட்மெண்ட் ஒவ்வொரு சப்ஜெக்ட்டிற்கும் ஒரு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்து இருந்தார்கள். பின் ஒவ்வொரு ஸ்டூடண்ட்டிற்கும் ஒரு மென்டார் என அவர்கள் லிஸ்ட் அண்ட் நம்பர் வந்தது,
நிலா தனக்கு யார் மென்டார் எனப் பார்க்க எழிலன் எனப் போட்டிருந்தது.    ஏற்கனவே அவனின் குரல் அவளைக் கட்டிப் போட்டிருக்க, மாலையில் தானாகவே வந்து விசாரித்து அவளுக்கு உதவ வந்தது எழிலனின் மேல் நல்ல அபிபிப்ராயம் வந்திருந்தது. இப்போது அவனே மென்டார் எனவும் ரொம்பவே சந்தோஷமாக இருந்தது.
நிலாவிற்கு வந்தது போல எழிலனுக்கும் குரூப் செய்தி சென்றிருக்க, அவன் உடனடியாக அவளின் நம்பருக்கு மெசேஜ் செய்தான்.
“ஹாய் நிலவழகி. நான் தான் உன்னோட மென்டார் எழிலன். எப்போ வேணும்னாலும் எனக்கு காண்டாக்ட் பண்ணுங்க” என அனுப்பினான் எழிலன்.
“சரி சர்” என நிலா பதில் அனுப்ப, எழிலன் “சர் எல்லாம் வேண்டாம். சீனியர்னு சொல்லுங்க போதும்” எனப் பதில் அனுப்பினான்.
“ஓகே சீனியர்” என நிலாவோடு எழிலனின் முதல் உரையாடல் மென்டாராக ஆரம்பித்தது.
நிலாவிற்கு ஹாஸ்டலில் சில தோழிகள் சேர்ந்தனர். எல்லோரும் சேர்ந்து வகுப்புகளுக்கு வருவது, சாப்பிடச் செல்வது என்பது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்பார்கள். நிலா பார்ன் வித் கோல்டன் ஸ்பூன் வகையறா. கேட்கும் முன் என்ன, நினைக்கும் போதே கிடைக்கும் செழிப்பில் வளர்ந்தவள். அப்படிப்பட்டவளுக்கு தட்டை எடுத்துக் கொண்டு வரிசையில் நிற்பது, விடுதியில் இருந்து கிளாஸ் வரை நடந்து வருவது எல்லாம் த்ரில்லிங்காகவேப் பார்த்தாள்.
தெருவில் இறங்கி டிராஃபிக் என்ற ஒன்றைப் பார்த்ததே இல்லை நிலா. இங்கே காலேஜ் கேம்பஸ்குள்ளே நடந்து வருவதற்குள் பைக், கார் எல்லாம் க்ராஸ் செய்ய, முதலில் பயந்தாலும், பிறகு அதைச் சமாளிக்கக் கற்றுக் கொண்டாள்.
தினமும் ஒரு முறையாவது நிலாவைப் பார்க்க வருவான் நிலவன். அந்த சமயங்களில் அவளின் தோழிகள் அவனோடு பேச முயற்சி செய்தால், வெடுக்கென்று பதில் கொடுத்து விடுவான். என்றாலும் அந்தப் பெண்களுக்கு நிலவன் மேல் ஒரு க்ரஷ்தான். அதை நிலவன் உணர்ந்த அளவு, நிலாப் புரிந்துக் கொள்ளவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!