Skip to content
Post Views: 161
அத்தியாயம் 14
நான்கு மூலைக்கும், நான்கு பெட்கள் போடப்பட்டு, பொதுவான இரண்டு கழிப்பறைகள், ஒரே ஒரு சமையலறை என இருந்த அந்த அப்பார்ட்மெண்டில் தான் ராம், கிரி மேலும் இருவர் என நான்கு பேர் இருக்கின்றனர்.
வசதியாய் இருவர் மட்டும் தங்கி கொள்ளும் இடங்களும் உண்டு, வாடகை மிச்சமாகுமே என நால்வாராய் இருக்கின்றனர்.
சத்துள்ள உணவாய் மூன்று நாட்களும், குபூஸ் எனும் விலை மலிவான ரொட்டிகளை நான்கு நாட்களும் உண்டு செலவை குறைத்து கொள்பவர்கள் ராமும் கிரியும். அப்படி சேமித்து அனுப்பப்படும் பணமானது ராமின் வீட்டில் பத்திரமாகவும், தன்னுடைய வீட்டில் தண்ணீராகவும் இருப்பதை நினைத்து நிம்மதி இழந்தான். காரணம் வசந்தா இம்முறை அதிகமாக ஏழாயிர ரூபாய் கேட்டிருந்தார்.
Advertisement
ஏற்கனவே இருபத்தைந்தாயிரம் அனுப்பப்பட்டிருந்த நிலையில், வழக்கத்தை விட ஏழாயிரம் அதிகமாய் பணம் கேட்ட வசந்தாவிற்கு ஐந்தாயிரம் மட்டும் அதிகமாய் அனுப்பிவிட்டு வந்து ஹாலில் நான்கு மூலையிலும் கிடந்த கட்டில்களில், தன்னுடையதில் போய் அமர்ந்தான்.
அடுத்த நிமிடமே அவரிடமிருந்து போன் வந்தது, “என்னடா ஏழாயிரம் கூட கேட்டா.. ஐயாயிரம் போட்டு விட்ருக்க! எனக்கு மட்டுமே இருபத்தைஞ்சாயிரம் அனுப்புவடா.. இப்போ ராஜி குழந்தைகள் எல்லாரும் இங்க தான் இருக்காங்க. எப்படிடா பத்தும்” எடுத்ததுமே கத்த துவங்கிவிட்டார்.
“அப்ப மொத்தம் நாலு பேர் இருக்கீங்கனு, ஒரு லட்சம் போட்டு விடவா” நக்கலாய் கேட்டான் கிரி.
Advertisement
முன்னெல்லாம் வசந்தா பணம் ஏதாவது கேட்டால், ஏன் எதற்கு என கேட்காமல் அனுப்பி விடுவான். இப்போதெல்லாம் ‘ஏமாற்ற ஒரு அளவில்லையா?’ என்ற எண்ணம் தான் மேலோங்கியது.
Advertisement
“என்னடா, பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு.. எப்போவும் லோன் லோன்னு கணக்கு சொல்லுவ.. உன் கல்யாணம் முடிஞ்சப்போ வீட்டு லோனும் முடிஞ்சதோடா.. லோனுக்கு கட்டுற நாப்பதாயிரம் உன் கிட்ட தானே இருக்கும்.. உன்கிட்ட தான் இருக்கா.. இல்லை உன் பொண்டாட்டி கிட்ட கொடுத்திட்டியா?” மூச்சடைக்க பேசினார் வசந்தா.
அவ்வளவு தான் மனதே விட்டு போனது கிரிக்கு, இங்கே இவன் எவ்வளவு செலவுகளை குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து சிக்கனமாய் இருக்க, இவர்கள் தண்ணீராய் செலவு செய்கிறார்களே என்ற எரிச்சல் தான் மேலோங்கியது. அது போதாதென்று என்னிடமே கணக்கு வேறு கேட்கிறாரே..! என உச்ச எரிச்சலுக்கு ஆளானான்..
இவன் வசந்தாவிடம் பேசிக் கொண்டிருக்கையிலேயே கமலியிடமிருந்து மிஸ்ட்கால் வந்தது. அவன் பிசியாக இருப்பது தெரிந்து உடனே கட் செய்து விட்டாள். அவள் அப்படி தான், ஒரு முறை அழைப்பை ஏற்கவில்லையானால் மீண்டும் அழைத்து தொந்தரவு தர மாட்டாள்.
Advertisement
அதை நினைப்பது கூட பிடிக்காமல் “டேய், பதில் சொல்லுடா” என இடையில் வந்து நின்றார் வசந்தா.
“முதல்ல நீங்க வாங்கின இருபத்தைஞ்சாயிரத்துக்கு கணக்கு சொல்லுங்க. அப்புறம் இப்போ அனுப்பின ஐயாயிரத்துக்கு அப்புறமா கணக்கு சொல்லுங்க. எல்லா கணக்கும் சரியா இருந்தா, மறுபடியும் என் கிட்ட வந்து கணக்கு கேளுங்க. அப்போ சொல்றேன், நாப்பதாயிரத்துக்கு கணக்கு” எனவும்
பேசவே இல்லையே வசந்தா.. வாய் பசை போட்டது போல் ஒட்டிக்கொண்டது.
ஸ்பீக்கர் வழியாய் கேட்டு கொண்டிருந்த ராஜிக்கோ உள்ளம் கொதிகலனானது.
“பக்கத்து வீடு எதிர்த்த வீடு, தெரிஞ்சவங்க, தெரியாதவங்கனு நிறைய பேருக்கு வட்டிக்கு குடுத்து வச்சிருக்கல்ல.. அதை முதலில் வாங்கு. அதுவே குறைஞ்சது இரண்டு லட்சம் வரும்.. அம்மாவும் மகளும் உக்காந்து நல்லா செலவு பண்ணுங்க” நறுக்கென கேட்டுவிட்டு வைத்தான் கிரி. அதற்கு மேல் பேச பிடிக்காமல் போனையும் வைத்துவிட்டான்.
எப்போதும் கமலியோடு கழியும் இந்நேரம் இன்று வசந்தாவுடன் கழிந்திருக்க, சற்று நேரம் போனை தூக்கி போட்டுவிட்டு, தலையில் கை வைத்தபடி படுத்துவிட்டான்.
“போன் செய்தாலே, சாப்டாச்சா? என்ன சாப்பாடு?” என அக்கறையாய் கேட்கும் கமலியும், அவனின் முகத்தை வைத்தே “டென்சனா இருக்கீங்களா?” என கண்டறியும் கமலியும் தான் நினைவடுக்கில் ஓடிக்கொண்டிருந்தாள்.
மீண்டும் போன் வர “ப்ச்.. மறுபடியும் அம்மாவோ” என எரிச்சலில் எழுந்து மீண்டும் போனை எடுத்து பார்க்க
வைப் காலிங் என வர, தானாகவே புன்னகை பூசியது இவன் முகம். மறுபடியும் இவள் போன் பண்ண்மாட்டான்னு நினைச்சேன். பரவாயில்லையே முறுபடியும் கூப்பிட முகத்தில் சந்தோஷம் படர்ந்தது.
உடனே எடுத்துவிட்டான். “சாப்பிடங்களா..” என்ற வார்தையே அவன் முகத்தில் புன்னகையை மலர வைத்தது.
“ம்ஹூம் இல்லை” என மறுத்து “நீ சாப்பிட்டியா” என்றான் இவன்.
“ம்.. சாப்பிட்டேன் கிரி..” என்றாள்.
“ம் முன்னலாம் ஒன்னா சாப்பிடுவோம்.. இப்ப.. மாறிட்டடி நீ” என்றான் மனசாட்சியே இல்லாமல்.
ஆனால் அப்போதும் “இங்க ஹாஸ்டலில் டையத்துக்கு போகலைன்னா சாப்பாடு கிடைக்காது.. அதான் சீக்கரமே முடிஞ்ச்சு. ஆனா இவ்வளவு நேரமாச்சு.. நீங்க இன்னுமா சாப்பிடல” இவள் கேட்க,
“ப்ச்.. இல்லை” என்றான்.
“போங்க போய் சாப்பிடுங்க” என்றாள் அரட்டலாய்.
“அப்போ வெயிட் பண்றியா.. எடுத்துட்டு வாரேன்” என கேட்டான்.
“ப்போங்க.. போங்க.. எடுத்துட்டு வாங்க” என இவள் விரட்டி அடிக்க
சிறு புன்னகையோடு எழுந்து சென்று உணவை எடுத்து வந்தவன், உண்ண துவங்கினான்.
அவன் முகத்தையே பார்த்திருந்தவள் “ஏன் முகம் டல்லா இருக்கு” இவள் கேட்ட நிமிடம் தட்டை விட்டு இவளை நிமிர்ந்து பார்த்தான்.
“உடம்பு சரியில்லையா..” மேலும் இவளே ஒன்றை யூகித்து கேட்க, உயர்ந்தது இவன் புருவங்கள்.
“இல்லை” என மட்டும் தலையசைக்க
“நிஜம்மா..” என அழுத்தமாய் கேட்க
அதற்கு மேல் அவளிடம் அவனால் பொய்வுரைக்க முடியவில்லை. “அம்மா போன் பண்ணி இருந்தாங்க பேசிட்டு இருந்தேன்” என்ற இரு வாக்கியங்களில் என்ன கண்டாளோ
“என்ன டென்சன் ஆக்கிட்டாங்களா! அதான் இவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருந்தீங்களா” என மெதுவாய் கேட்க
தட்டில் கையை உதறிவிட்டு, சாப்பிடுவதையே நிறுத்திவிட்டான் கிரி, கண்கள் கூட கலங்கும் நிலைக்கு போய் விட்டது. முகத்தை அவளுக்கு காட்டாமல் இருக்க மிக சிரமபட்டு போனான். “இவ்வளவு பாசத்துக்கும் தகுதியில்லாதவன் கமலி நான்” இதை சொல்கையில் கூட அவள் முகத்தை பார்க்க முடியவில்லை.
“அதெல்லாம் நிறைய இருக்கு, முன்ன விட இப்ப ரொம்ப டல்லா இருக்கீங்க. எனக்கு பிடிச்ச அந்த ஆறடி கிரி, ஊரில் இருந்து திரும்ப வரும்போதும் அதே கிரியா தான் வரனும். சாப்பிடாமல் சும்மா சோகத்தோட இருந்தா, சீக்கிரமா கிழவனாகிட போறீங்க” இவனை இலகுவாக்க பேசினாள்.
அதே போல இவனும் லேசாய் புன்னைகை செய்து “ஏன் இந்த கிழவனை அந்த கிழவி பார்த்துக்க மாட்டாளா என்ன?”
“இந்த கிழவி இருக்குற வெயிட்டுக்கு, அந்த கிழவனை கையில் வச்சு தாங்கு தாங்குனு தாங்குவா. ஆனால் என்னை பார்த்துக்க அந்த கிழவனுக்கும் எனர்ஜி வேணுமே. அதான் கவலை பட்டு எனர்ஜியை வேஸ்ட் பண்ணாதீங்கனு சொல்றேன்” கிளாஸ் எடுத்தாள் இவனுக்கு. கூடவே “சாப்பிடுங்க தட்டை காய விடாதீங்க” என சேர்த்தும் சொன்னாள்.
மற்ற நேரமாக இருந்தால் “வேற வேலையே இல்லாடி உனக்கு” என வம்பிழுப்பான் இப்போதோ “அப்படிங்களா மேடம் ஓகே மேடம்” என பதிலுக்கு இவனும் பேசி “நீ ஏன் டல்லா இருக்க?” இப்போது இவன் இவன் திருப்பினான் கேள்வியை.
“டல்லாவா? நல்லா பாருங்க கிரி.. தூக்க கலக்கத்துல இருக்கேன். வீட்டிலனா இஷ்டத்துக்கு தூங்குவேன். இங்க ஐஞ்சு, அஞ்சரைக்கே எழும்பனும். டிபன் இன்சார்ஜ் நானும் தர்ஷியும் தான் கிரி.. பக்கத்துல இருந்து பார்க்கலன்னா, அன்னைக்கு தான் பிரச்சனையாகும். எதுக்கு வம்புன்னு கூடவே போய் நின்னுடுவேன்” எவ்வளவு அடக்கியும் வந்து விட்டது கொட்டாவி.
“வேலை ரொம்ப கஷ்டமா இருக்கா. கமலி”
“உங்க அளவுக்கு இல்லை” என்றாள் உடனே.
பதிலுக்கோ வாஞ்சையாய் இவளை தான் பார்த்து வைத்தான்.
கணவனின் கஷ்டங்களை புரிந்து கொள்ளும் மனைவி கிடைப்பதெல்லாம் வரம். இப்படியாக இவன் நினைத்து “நீ என்கிட்ட எதுவுமே கேட்க மாட்ற கமலி. ஏன்.” என்றான் சம்பந்தமில்லாமல்
“என்ன கேட்கனும்” இவளும் குழம்பினாள்.
“ம்.. செலவுக்கு பணம் தான்னு கேட்கனும்”
“என்கிட்ட இருக்கு கிரி, அது போக அப்பா வேற அக்கவுண்ட்ல போட்டு விட்ருவாரு” இவள் சொல்லி முடிக்க
இவன் முகமோ சட்டென மாறிப்போக, முறைத்து வைத்தான் கமலியை.
“நான் அப்பாகிட்ட கேட்டதில்லை கிரி.. அவரா தான் அனுப்புறாரு, நான் என்ன பண்ண?” இவள் முகத்தை சுருக்க
“இனி வேண்டாம்னு சொல்லி பழகு. எனக்கு செலவு பண்ண என் புருஷன் இருக்கான்னு சொல்லு” வீரமாய் இவன் கூற
“நாலு மாசமா அந்த புருஷன் என்ன பண்ணிட்டு இருந்தாராம்” வீரனை ஜீரோவாக்கினாள் கமலி. சொல்லிவிட்டு நாக்கையும் கடித்து கொண்டாள்.
“என்னடி, சண்டைக்கு வாடான்னு இழுக்குறியா?” உணவுண்டு முடித்துவிட்டு அதில் கைகழுவியபடி இவன் கேட்க.
“ச்சே… ச்சே..” அப்படியெல்லாம் இழுக்க மாட்டேன் “சண்டைக்கு வாங்களேன்”னு தான் இழுப்பேன்.. மரியாதை தெரிஞ்ச பொண்ணாக்கும் நானு” இல்லாத காலரை ஏற்றி விட்டு கொண்டாள் கமலி.
“நீ.. சண்டை.. அதுவும் என்கிட்ட.. போட்டுட்டாலும்” இவன் நக்கல் பேச
“ஒரு நாள் கமலியா இதுன்னு ஆச்சர்யபடுற அளவுக்கு, சண்டையை கூட்டுறனா இல்லையான்னு மட்டும் பாருங்க” குறையாத நக்கலுடன் இவள் பேச, “அதையும் பார்த்துட வேண்டிது தான்” நமட்டு சிரிப்பு சிரித்தான் கிரி.
அங்கே இந்திய நேரத்தை கணக்கு செய்து, பின் “நேரமாச்சு தூங்கு, நாளைக்கு சீக்கிரமா கூப்பிடுறேன்” என வைத்துவிட்டான் கிரி.
********
கமலியிடம் பேசுகையில் நன்றாக இருந்த முகம், போனை வைத்தபிறகு கவலையை பூசிக்கொண்டது. அப்படியே படுத்தும் விட்டான் கிரி.
பால்கனியில் துணிகளை துவைத்து காயப்போட்டுவிட்டு, தட்டில் உணவை எடுத்து கொண்டு வந்தான் ராம்.
இவனை ஒரு மார்க்கமாய் பார்த்தபடி வந்தவன், “என்னடா கொஞ்ச நாளா நல்லா தானே இருந்த? இப்போ என்ன, மூஞ்ச ஏன் இப்படி வச்சிருக்க?” இரவு உணவை உண்ட பின், எதிரெதிரில் போடப்பட்ட கட்டிலில் அமர்ந்தபடி சாவாகாசமாய் கிரியிடம் கேட்டான் ராம்.
“பச்..” என்றவன் “இந்த ராஜியால.. இன்னும் என்னலாம் பார்க்க போறேன்னு தெரியல” என கிரி முகம் சுருக்க
“திரும்பவும் ராஜியா.. இப்போ என்ன பண்ணினா?” என இவன் கேட்க
ராமிடமும் மேலோட்டமாய் பிரச்சனையை எடுத்து கூற, “இதென்னடா புது பிரச்சனை” என நொந்து போனான் ராம்.
அவன் முகத்தை பார்த்தபடியே “அம்மாகிட்ட பேசின வரை இனி அவ, பிள்ளைக எல்லாம் செந்தில் கிட்ட போறதுக்கு வாய்ப்பு கம்மினு சொல்றாங்க. அம்மா கூட தான் இருப்பாங்க போல” கவலையோடு வந்த கிரியின் குரலிலேயே..
“சரி.. அதுக்கு நீ என்னடா செய்ய முடியும். விட்டு பிடி. பொண்டாட்டி புள்ள வேணும்னா செந்திலே தேடி வருவான்.” ராம் சமாதானம் கூற
“அக்காவா பிறந்திட்டா.. ஏதாவது ஒரு வழி பண்ணனுமே” கிரி பேச
“வழியா.. என்ன வழி.. மறுபடியும் சீர் செய்ய போறியா..?” அதிர்வாய் கேட்டான் ராம்.
பதிலுக்கு கிரியோ முறைப்பொன்றை பதிலாய் கொடுக்க, அவன் பார்வையை கொண்டே, “நீ அப்படிலாம் திருந்துற ஆள் இல்லையேடா, இப்பவும் ராஜி இரண்டு சொட்டு கண்ணீர் விட்டா, பாசமலரேனு ஓடுறவனாச்சே” என தாடையை தடவிக்கொண்டே, இவனை ஒரு மார்க்கமாய் பார்த்து வைக்க, அருகில் இருந்த தலையனையை விட்டெறிந்தான் ராமின் மீது.
“அடேய்..” என அதை தடுத்து சிரித்த ராம்.. “அளவுக்கு மீறி செய்யாதாடா, வேணாம் வேணாம்னு மறுக்காம வாங்கி கிட்டு கடைசில “நானா செய்ய சொன்னேன், நீயா செஞ்ச! அதுக்கு நானா பொறுப்புனு’ அசால்ட்டா சொல்லிடுவாங்க, பார்த்து சூதானமா இருக்க கத்துக்க. முன்ன நீ சிங்கிள், இப்போ மிங்கிள், ப்யூட்சர்ல மிங்கிள் ஆகி, மூனு பேரா கூட மாறாலாம், மூனு நாலாகலாம்.. அவங்களுக்கும் வேணும்” எச்சரித்தான் ராம்.
உண்மையான வார்த்தைகளாயிற்றே, சற்றும் தயங்காமல் தலையசைத்து ஏற்று கொண்டான்.
பின் அவனை நிமிர்ந்து பார்த்தவன் “ண்ணா.. நீ எப்படி அண்ணி குழந்தைகள் எல்லாத்தையும் விட்டுட்டு இருக்கிற..” கேட்டு வைத்தான் கிரி
ஆச்சர்யமாய் அவனை பார்த்து “கொஞ்ச நாள் தானடா கமலிகிட்ட போனில் பேசுன? அதுக்கேவாடா?” ராம் இவனை நக்கலடிக்க
“அதெல்லாம் இல்லை” வேகமாய் வந்த பதிலிலேயே, ‘அதுக்கு தான்’ என்ற பதில் ஒளிந்திருக்க நமட்டு சிரிப்பொன்றை உதிர்த்தான் ராம்
பிறகு “பொண்டாட்டி, புள்ளைய எல்லாம் விட்டு இருக்க கஷ்டமா தானிருக்கு. என்ன பண்றது ஆம்பளைக வாழ்க்கை அப்படி..” என சளைத்து கொண்டவன், “இந்த கஷ்டமெல்லாம் இன்னும் ஒரு வருஷம் தான் அதுக்குள்ள கடனெல்லாம் அடஞ்சிடும்.. ஊர பார்த்து ஓட வேண்டியது தான்” சீதா, குழந்தைகள் நினைவில் இவனும் பேசி,
பின் நினைவு வந்தவனாய் “நீயும் பேசாமல் என்கூடவே கிளம்பிடேன் கிரி. அதான் வீட்டு பிரச்சனையை சரி பண்ணிட்டியே! நீ இங்க இருக்க இருக்க ரிஸ்க் தான். ராஜி வேற இப்போ பெரியம்மா கூட இருக்குறா! தேவையில்லாம ஏதாவது வேலை பார்த்து வப்பா..! தவிர கமலியையும் நீ பார்க்கனுமே” என ராம் அவனுக்கு அறிவுரை கூற
“ம், எனக்கும் தோனுச்சுண்ணா.. நீ தான் இங்க எனக்கிருக்குற ஒரே துணை.. நீயும் போய்ட்டா, எனக்கும் இங்க என்ன வேலை. நானும் கிளம்ப வேண்டிது தான்.
“சரி எங்கூடயே ஊருக்கு வந்திடுவ.. ஆனா ஊருக்கு போயி.. அதுக்கு பிறகு என்ன பண்ண போற, ஐடியா நல்லா இருந்தா பாட்னர் ஆகிடலாம்” எடுத்து கொடுத்தான்.
ஏற்கனவே யோசித்திருப்பான் போல “இங்க மாதிரி அங்க சம்பளத்துக்கெல்லாம் வேலைக்கு போக முடியாதுன்னா.. ரொம்ப கம்மியா இருக்கும். சூப்பர்மார்க்கெட் போடனும்னு ஆசை.. ஆனா அவ்வளவு பணம் தேத்த முடியுமா தெரில, அட்லீஸ்ட் டிபார்மண்ட் ஸ்டோர் போடனும்னே.. அதுவும் நம்ப ஏரியாலேயே” என இவன் கூற
“நல்லாருக்கே.. இரண்டு பேரும் சேர்ந்தே பண்ணலாம்டா, அதுல கண்டிப்பா லாபம் பார்க்கலாம். சொந்த பந்தங்களை விட்டுட்டு இனி அநாதை மாதிரி இனி இங்க வர வேண்டியதில்லைல” என கூற, கிரியும் ஆமோதித்தான்,
************
error: Content is protected !!