Skip to content
Post Views: 127
அத்தியாயம் 15
ஹாஸ்டலில் சார்ட்ஸூம் டீசர்ட்டும் டைட்ஸூம் என குட்டி குட்டி உடைகளோடு சுற்றிய மாணவிகளை விடாமல் பார்த்து கொண்டிருந்தாள் தர்ஷி.
அவள் முதுகிலேயே இரண்டு வைத்து, “நீயேண்டி அந்த பொண்ணுகளை இப்படி பார்த்துவைக்க” என அப்போது தான் வேலை முடித்து வந்த கமலி, டிவி ஹாலில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த தர்ஷியிடம் கேட்டபடி அருகில் அமர்ந்தாள் கமலி.
Advertisement
“இவளுக இவ்வளவு ஒல்லியா எப்படி இருக்காங்க..? என்ன சாப்பிடுறாங்க? எப்படி சாப்பிடுறாங்க? டிப்ஸ் யார்கிட்ட கேட்கலாம்னு பார்த்துட்டு இருக்கேன்” சீரியசாக பேசினாள் தர்ஷினி.
“கேட்டு” என இழுத்தாள் கமலி.
“ப்ச்..” என சலித்து கொண்ட தர்ஷி.. “மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சு ஒன்னு பிக்ஸ் ஆகுற ஸ்டேஜில் இருக்கு” இவள் கவலையாய் கூற
Advertisement
“ஏய்..” என சந்தோஷமாய் அலறியவள் “சொல்லவேயில்லைடி.. எப்போ இருந்து பார்க்க ஆரம்பிச்சாங்க.. பிக்ஸ் ஆன தான் சொல்வ போல” சலித்து கொண்டாள் கமலி.
Advertisement
“ப்ச்.. அதெல்லாம் அப்பாக்கு உடம்பு சரியில்லாம போனதில் இருந்தே பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. பார்த்திட்டே இருக்கட்டும் பிக்ஸ் ஆக நாளாகும்னு நினைச்சேன்.. ஆனா இவ்வளவு சீக்கிரம் முடியும்னு எதிர்பார்க்கல”
“சரி.. சந்தோஷமான விசயம் தானே.. அதுக்கு ஏன் முகத்தை இப்படி வச்சிருக்க, கன்றாவியா இருக்குடி”
“ம்.. அவங்களும் அத தான் சொல்றாங்க.. கொஞ்சம் பூசுனாபோல கன்றாவியா இருக்க, ஒன்னு அளவா சாப்பிடு.. இல்லை ஜிம்மு கிம்முனு போய் கொஞ்சம் பிட்டாகி வா. அப்ப தான் நல்லா இருப்பனு சொல்றாங்க!” அவள் பாட்டுக்கு பேசி கொண்டே செல்ல
Advertisement
இருண்டது இவள் முகம், இப்போது இவள் பார்வையும், அங்கே இங்கே என சுற்றி கொண்டிருந்த மாணவிகளின் பக்கம் திரும்பியது.
“இப்போ தெரியுதா, நான் ஏன் இந்த பொண்ணுகளை பார்த்துட்டு இருந்தேன்னு” கன்னத்தில் கை வைத்தபடி கேட்டவள், கமலியிடம் கவனம் பதிக்காததால் அவள் முக மாற்றத்தையும் கவனிக்கவில்லை.
“நானாவது வெயிட்டு.. நீ கொஞ்சம் பூசினா போல தானடி இருக்க, அதுக்கு ஏன் வெயிட்லாஸ் லாம் பண்ண சொல்றாங்க” திரும்பி தர்ஷியை பார்த்து கேட்டாள்.
“நானும் அதை தான் நினைச்சேன்டி.. உன்கூட வீடியோ காலில் தினமும் டைமுக்கு பேசுறார் உன் ஹஸ்பண்ட்.. அவரோட போட்டோ தான் இப்போவரை காட்டிருக்க, அதிலேயே அவ்வளவு அழகுன்னா, நேரில் எவ்வளவு அழகா இருப்பார். ஏதாவது சொல்றாரா உன்னை.. ஆனா இவரு கொஞ்சமே கொஞ்சம் அழகாம், அவருக்கு ஈக்குவளா இருக்கனுமாம், தயவு செஞ்சு கொஞ்சம் வெயிட்டை குறைனு அட்வைஸ போடுறாரு, இந்த ஒரு நாளிலேயே! ஆனா மாம்ஸ், உன்னை அப்படியே ஏத்துகிட்டாரு.. இவரும் இருக்காரே” என நொடித்து கொள்ள
கமலிக்கோ சுருக்கென தைத்தது. எத்தனை நாள் தான் வலிக்காதது போல நடிப்பாள். இத்தனை நாட்களாய் தனக்கு தானே தேற்றிகொண்ட ஆறுதல்கள் எல்லாம், காயங்களை கீறி விட்டது போல வலியெடுக்க ஆரம்பித்தது.
முகத்தை தர்ஷிக்கு காட்டாமல் மறுபக்கமாய் திருப்பி கொண்டாள் கமலி.. அவள் கஷ்டம் அவளுக்கு.
இவள் முக திருப்பலை பார்த்தவள், கமலியின் தோளில் டங் என இடித்து “என்னடி பொறாமையா.. நான் மாம்ஸ்னு சொன்னதும் முகத்தை திருப்புற” என்றாள் தர்ஷினி
அதை கேட்டு கோபம் உச்சிக்கு ஏற “பொறாமையா.. ச்சே ச்சே.. வேணும்னா நீயே இரண்டாந்தாரமா கட்டிக்கோயேன்” என இவள் சீண்ட
“ஒய் நாட்.. மாம்ஸ்கிட்ட கேளுடி, எனக்கு ஓகே தான். அவங்க அவங்கள அப்படி அப்படியே ஏத்துகிறதுக்கும் ஒரு மனசு வேணும். அப்படி பட்ட பெரிய மனசுல என் மாம்ஸ்க்கு. கசக்குமா என்ன?” என பேசியவளின் தலையிலேயே ஹேண்ட் பேக்கினால் ஒன்று போட்டவள்,
“என்னமும் பண்ணு.. எனக்கு பசிக்கு நான் போறேன்” என டைனிங் ஹால் நோக்கி இவள் நடக்க
“பொறாமையே இல்லாம்பாளாம், இரண்டாந்தரம் கட்டி வைப்பளாம், ஆனால் கோபமும் படுவாளாம்.. வில்லி..” என விலகியவளை கை பிடித்து இழுத்து மீண்டும் தன் பக்கமே அமர வைத்தாள்.
“என்ன கோச்சுகிட்டியா?” என கமலியின் முகம் பிடித்து தன் பக்கமாய் திருப்ப
‘நான் என்ன அவ்வளவு குண்டாவா இருக்கேன், கிரிக்கு பொருத்தமே இல்லாத மாதிரி ஆளாளுக்கு பேசுறீங்க’ என கேட்க வந்தவள், அப்படியே உள்ளுக்குள் போட்டு மறைத்துவிட்டு
“ம்ஹூம்” என வெளியே மறுப்பாய் தலையசைத்து, புன்னகை செய்தாள்.
“அண்ணா பேர், ஊர், என்ன பண்றாங்க” இவள் சகஜமானது போல் கேட்க துவங்கினாள்.
“பேர், கோகுல், ஊர் எங்க ஊர் தான், வேலை ஜிம் டிரையினர்” என உதட்டை பிதுக்க
“என்னடி சொல்ற.. ஜிம் டிரையினரா?” இவள் ஆச்சர்யபட..
“இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமே அந்த ஜிம் டிரைனர் வேலை தான். அவரு பிட்டா இருக்காராம். அவர் வேலை பார்க்குற அதே கம்பெனி பிரான்ச் இந்த ஊரில் கூட ஒன்னு இருக்காம். நாளைக்கு வர்ற ஜிம்மில் சேருற ன்னு ஒரே ஆர்டர். முடியாதுன்னு சொல்ல கூட முடியலடி” இப்போது முழு கவலையும் நிறைந்து கிடந்தது தர்ஷி முகத்தில்.
“சரி இப்போ என்ன செய்ய போற?” கமலி கேட்டிட
“நாளையில் இருந்து போகனும். இப்போ தான் வார்டன்கிட்ட பர்மிஷன் கேட்டேன். உனக்கும் எனக்கும் காலையில் டிபன் இன்சார்ஜ் ஒர்க் தானே. அதனால் நாலு மணிக்கு போய்ட்டு ஆறுக்குள்ள வர சொல்லி இருக்காங்க டெப்யூட்டி வார்டன்”
“சரிடி.. அழுவாத.. அதான் போகனும்னு முடிவு பண்ணிட்டல்ல.. போயிட்டு வா..” என தோளில் தட்டி கொடுத்தாள் கமலி.
அவளுக்கு ஆறுதல் சொன்ன கமலியோ, அறைக்கு வந்த பிறகு தனக்கு யார் ஆறுதல் சொல்ல போகிறார்கள், என கண் மூடி கட்டிலில் அமர்ந்துவிட்டாள்.
‘சரி கவலை படாதே அதான் கிரி டைம் கேட்டுருக்கார் தானே.. திரும்ப வந்து கண்டிப்பா உன்னை ஏத்துப்பார்’ என மூளை இவளுக்கு ஆறுதல் கூற
‘ஆமாம், அப்படியே ஏத்துகிட்டாலும் முழுமனசா ஏத்துபாரு பாரு.. ஏதோ தாலி கட்டின கடமைக்கு தான் இருக்கும் வாழ்க்கை’ என மனம் சண்டையிட
‘அப்போ அவனோட வாழ மாட்டியா நீ’ மூளை கேட்க
‘இப்போ பிரிஞ்சு இருக்குற வாழ்க்கையை விட, கிரிகூட வாழ்ற வாழ்க்கை இன்னும் நரகமா இருக்கும்’ மனம் கூற
‘ஏன்?.. ஏன்?’ மூளை வரிந்துகட்டி கொண்ட வர
‘ஐ.. கமலி’னு சந்தோஷமா என்னை தேட மாட்டான்.. ஐய்யய்யோ கமலினு எரிச்சலா தான் பார்ப்பான்’ மனம் எகத்தாளமாய் பேச
‘சரி.. இப்போ என்ன தான் பண்ண போற’ என கேட்க’
‘ஈவ்னிங் ஸ்னாக்ஸ் குடுக்க ஆரம்பிச்சிருப்பாங்க.. நான் அங்க போறேன். நீ எங்கையாவது போ’ என்றது மனம்.
இப்போதும் சூடான டீ, வடை, சட்னியை வாசம் பிடிக்கும் மூக்கை என்ன செய்வது? சுவை கேட்கும் நாக்கை என்ன செய்வது.
நீங்க இரண்டு பேரும் தான் நான் இப்படி இருக்குறதுக்கே காரணம். அதான் கிரிக்கு என்னை பிடிக்கலை.
இறுதியில் நாக்கிற்க்கும் மூக்கிற்கும் தண்டனை கொடுத்து அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள் கமலி.
அடுத்த நாள் மாலை நான்கு பதினைந்து போல கமலியின் அறை கதவை தட்டிக்கொண்டிருந்தாள் தர்ஷி.
அப்போது வேலை முடித்து வந்த கமலி, அப்பாடா என கட்டிலில் அமர கூட இல்லை.. டப டப என கதவு தட்டும் சத்தம் கேட்க, வந்து கதவை திறந்தாள். வெளியே தர்ஷி நின்றிருந்தாள்.
“என்னடி.. இந்நேரமே..” கமலி கேட்டு கொண்டிருக்கையிலே, அவளை தள்ளிக்கொண்டு உள்ளே வந்து கட்டிலில் அமர அறையை நோட்டமிட்டது இவள் விழிகள்.
ஹாஸ்டல் வந்ததில் இருந்து இன்று வரை அவள் அறைப்பக்கம் வராதவள் இன்று தான் வந்திருந்தாள்.
ஷெல்ப் நிறைய உடைகள், இரண்டு பேக், அதனுடன் ஹேண்ட் பேக், வாட்டர் பாட்டில், அது போக மிக அத்யாவசியமான பொருட்கள் மட்டுமே இடம் பிடித்திருந்தது.
பவுடர், சீப்பு, கிளிப் என ஒரு டிரேயில் அடுக்கி இருந்தாள். அதில் ஒரு மேக் அப் திங்க்ஸ் கூட இல்லை என்பதில் இவள் ஆச்சர்யமானாள்.
“என்னடி ஒரு செட் மேக்கப் ஐட்டம் கூட இல்லை, கண்ணாடி கூட இல்ல ரூமில், எப்படி நீ ரெடியாகுற.. அதுவும் இவ்வளவு அழகா வேற மடிப்பெடித்து புடவை கட்டுற” யோசனையாய் இவள் பார்க்க
கண்ணாடி என்றதும் இறுகி போனாள் கமலி. அதில் தன் உருவத்தை பார்ப்பதையே அடியோடு நிறுத்திவிட்டாளே. ஆனால் அதையெல்லாம் விளாவரியாய் சொல்ல தான் முடியுமா?
“கை தான் கட்ட போகுது! கண்ணாடியா கட்ட போகுது.. தவிர என் மூஞ்சிக்கு பவுடரே போதும். ஆமா இத கேட்க தான் இங்க வந்தியா” இவன் முறைத்து பார்க்க
“ஆமா இதை கேட்க, கீழ் ப்ளோரில் இருந்து மேல் ப்ளோருக்கு வந்தேன் பாரு, இன்னைக்கு தான் உன் ரூமுக்கே வரேன்.. அதான் தான் கேட்குறேன்” இவள் பதில் கொடுக்க
“நீ காரணமில்லாமல் என்னை தேடி வர மாட்டியே?” என்றபடி மேலும் கீழும் கமலி அவளை பார்த்து வைக்க. பதிலுக்கு முகத்தை தொங்க போட்டவளாய் “இன்னையில இருந்து ஜிம் போகனும்ல” என்றாள்.
“சரி அதுக்கு” இவள் எடுத்து கொடுக்க
“என்னை காணுமேன்னு நீ தேடக்கூடாதுல்ல.. அதான் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்” என முறைத்தபடி தர்ஷி கூற
“அதெல்லாம் தேட மாட்டேன்.. உன் ஸ்னாக்ஸ், டீ எல்லாத்தையும் நானே சாப்பிட்டுட்டு, ஜாலியா இருப்பேன். ஒரு வேளை டயட்ல இருந்தேன்னா, உன்னோட பூரி கிழங்கும் எனக்கு தானே” என சிரிப்போடு இவள் பேச
“அடிப்பாவி.. நீயெல்லாம் ஒரு ப்ரண்டா..” என கமலியின் முதுகிலேயே இரண்டு வைத்து, “நான் போறேன்.. இஷ்டத்துக்கு என்ன வேணுமே தின்னு.. நான் போறேன்” என இவள் நிஜமான கோபத்தோடு வெளியே செல்ல, இழுத்து மீண்டும் கட்டிலில் அமர வைத்தாள் கமலி.
“சரிடி, கோப படாத.. என்ன பண்ணனும்..?” இவள் கேட்க
பாவமாய் முகத்தை வைத்து கொண்டு இவள் அமைதி காக்க “உன் கூட துணைக்கு வரணுமா.. வெயிட் பண்ணு பத்தே நிமிஷம் வந்திடுறேன்” என தர்ஷியின் எண்ணம் புரிந்தவளாய் இவள் சொல்ல
“முதல் நாளில்லையா.. அதுவும் அவர் அவர் வேற வரேனு சொல்லி இருககாங்க. பர்ஸ்ட் டைம் நேரில் பார்க்க போறேன். தனியா போக ஒரு மாதிரி இருக்குடி. முன்னாடி வேலை பார்த்தபோ நீயும் நானும் ரொம்ப குளோஸ் இல்லைடி. இப்போ ரொம்ப கொளோஸ் ஆன பீல்டி..”
“சரி சரி அழுவாத.. உன் கூட வரனும் அவ்வளவு தானே. விடு வரேன்.. நீ கீழ வெயிட் பண்ணு” என இவளை அனுப்பிவிட்டு, சுடிதார் ஒன்றை அணிந்தபடி தயாரானாள் கமலி.
டெப்யூட்டி வார்டனிடம் போய் நின்றனர் இருவரும், அவரோ “எங்க வேணா போங்க, ஆனா சாயந்தரம் ஆறு மணிக்குள்ள நீங்க இங்க இருந்தாகனும். இல்லைனா, பிரின்சிபல்கிட்ட கம்ளைண்ட் பண்ணிடுவேன்” என்றார் மூக்கு கண்ணாடியை உயர்த்தியபடி. அதன் பின் எடுத்தேன் பாரு ஓட்டம் என ஓடி விட்டனர் இருவரும்.
கல்லூரியில் இருந்து சரியாய் பத்து நிமிடங்கள் தான் கோகுல் சொன்ன அந்த ஜிம் இருந்தது. சொன்னது போல நான்கரைக்கு ஆட்டோவில் வந்து இறங்கினர்.
‘ஜிம் ஆப் கிங் அண்ட் க்வின்’ என்ற பேரே அவளுக்க மிகவும் பிடித்து போனது.
வாசலுக்கே வந்து வரவேற்றான், தர்ஷியின் பியான்சே கோகுல்.
error: Content is protected !!