Skip to content
Post Views: 99
அத்தியாயம் – 14 – 1
நிலா எதிர்பாராமல் நிலவன் அன்றைக்கு வருகை தந்திருந்தான். முதல் நாள் அவனுக்குப் பரிசுகள் இருக்கவே, அதற்காக வந்திருந்தான். அப்படியே தங்கையின் நடனமும் பார்க்கத் தங்கி இருந்தான். நிலவனின் பெற்றோரும் வந்திருந்தனர். நிலவன் மற்றும் அவன் பெற்றோர் ஹோட்டலில் தங்கியிருந்தனர்.
எழிலனுக்கும் அவனின் துறையில் பரிசுகள் இருந்தது. எழிலனுக்குப் பரிசுகள் வழங்கும் போது அவன் நண்பர்கள் மட்டுமின்றி மொத்த கல்லூரியும் கைதட்டி, விசில் அடித்து அமர்க்களம் செய்தனர். வைஸ் பிரின்சிபாலாக செழியன் கண்டிப்புடன் பார்த்தாலும், யாரும் கண்டு கொள்ளவில்லை. செழியனின் அப்பா, அம்மா இருவரும் கூட வந்திருந்தனர். மலர்விழி அவர்களைத் தன் அருகில் அமர வைத்திருந்தாள்.
நிலவனுக்குப் பரிசுகள் வழங்கும் போது அவனின் துறையினர் தவிர பெண்கள் பக்கமிருந்து தான் கைத்தட்டல் பலமாக இருந்தது. கல்லூரி மேடி என்றால் அது நிலவன் தான். யாரிடமும் அனாவசியமாக ஒற்றை வார்த்தைப் பேச மாட்டான். ஆனால் நிலவனுக்காக நிலாவிடம் வந்துப் பேசிச் செல்பவர்கள் ஏராளம். அதிலும் வேறு துறை மாணவர்கள் கூட வருவது தான் அதிசயம்.
Advertisement
நிலாவிற்கு நிலவன் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தபடியால், நிலா பொதுப்படையாகப் பேசிவிட்டு அதோடு நிறுத்தி விடுவாள். அப்படியும் இன்றைக்கு பெண்கள் பக்கம் இருந்து ஆர்ப்பரிப்பு அதிகம் தான். அதை அதியமான் பெருமையாகப் பார்த்தார்.
அடுத்தநாள் கலைநிகழ்ச்சிகள் மாலை ஐந்து மணி முதல் ஆரம்பமாக, முதலில் நடனம் என்று விட்டனர். மேக்கப் மற்றும் பெண்கள் அதிகமாகக் கலந்து கொள்வது நடனம் என்பதால் சீக்கிரமாக முடித்துவிட அதை முதலில் திட்டமிட்டு இருந்தனர். இது முழுக்க முழுக்க மாணவர்கள் மட்டுமே நடத்துவது என்பதால் அவர்களைக் கேள்வி கேட்க முடியாது.
நிலாவிற்கு முன்னர் இருவர் நடனமாடி விட்டுச் சென்றிருக்க, நிலா மூன்றாவது ஆளாக நடனமாட வந்தாள். நிகழ்ச்சித் தொகுப்பாளர் “அடுத்து டான்ஸ் பை நிலவழகி, ஃபர்ஸ்ட் இயர் ஹிஸ்டரி” என அறிவிக்க, எழிலன் மேடைக்கு அருகில் வந்து நின்றான். அது வரை ஆர்க்கெஸ்ட்ரா குழுவினருக்கு ஏதோ குறிப்புகள் கொடுத்துக் கொண்டிருந்தான். எழிலன் வந்து நின்றதை நிலவன் மட்டுமே கவனித்தான்.
Advertisement
நிலா மேடை ஏறியதும் “கா.. கா..” என எஸ்பிபியின் காந்தக் குரல் ஒலிக்க, எழிலனின் விழிகள் பளிச்சிட்டது. ” வேதம் அனுவிலும் ஒரு நாதம்” பாடலுக்கு ஏற்ப நிலாவின் பாவனைகள் பார்ப்பவர்களைக் கட்டிப் போட்டது.
Advertisement
“கனவிலும், நனவிலும் அழகிய பரதங்கள் ஆட” .. என முடிக்கும்போதே அரங்கம் எழுந்து நின்று கை தட்ட ஆரம்பித்தது. அதோடு அந்த ஸ்லோகமும் பாடி முடிய, சற்று நேரம் கைதட்டல் ஒலி மட்டுமே கேட்டது. கல்லூரி நிர்வாகத்தினர் சார்பாக நிலாவை மேடை ஏறிப் பாராட்டினார்கள்.
நிலவன் குடும்பத்தினருக்கு தன் மகளின் திறமையைப் பார்த்து ரசித்ததோடு, பெருமையாகவும இருந்தது.
நிலாவின் விழிகள் எழிலனைத் தேட, அவனோ அசையாமல் நின்றிருந்தான். பின் மேடையிலிருந்து இறங்கி வரும்போது, எழிலன் அவளுக்குக் கை கொடுத்து அனுப்பி வைத்தான். இதை யாரும் அறியவில்லை.
Advertisement
நிலா எழிலனிடம் நின்று பேசுவதை மட்டும் நிலவன் கவனித்து இருந்தான். அவள் தன் பெற்றோர் அருகே வரவும் அதியமான் “ரொம்ப நல்லா ஆடினமா. பிராக்டிஸ் ரொம்ப கஷ்டமா இருந்துதா?” எனக் கேட்டார்.
“ம்ச். கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும் இந்த பாட்டு யுட்யூப்லே பார்த்தப் போது கண்டிப்பா இதை பெஸ்ட்டாக் கொடுக்கணும்னு எஃபர்ட் போட்டேன்.”
நிலாவின் அன்னை தேன்மொழி தன் மகளின் தலையை வருடிக் கொடுத்தார்.
நிலவன் “நிலாமா, உன்னை ஹாஸ்டலில் விட்டுட்டு நாங்க கிளம்பட்டுமா?” எனக் கேட்டான்.
ஆஹா. ஆரம்பிச்சுட்டான்யா.. என மனதினுள் நினைத்தாள் நிலா.
நிலவன் முகம் பார்த்துவிட்டு, “அண்ணா, ஹாஸ்டல் ஃபிரண்ட்ஸ் எல்லாம் ஆர்க்கெஸ்ட்ரா முடிச்சிட்டுப் போகலாம்னு சொன்னாங்க. ஹாஸ்டல் போனாலும் யாரும் இருக்க மாட்டாங்க. நான் இங்கே பார்த்திட்டுப் போறேனே.” என மெதுவாகக் கேட்டாள்.
நிலவன் சில வினாடிகள் யோசிக்கும் முன் அவளின் தந்தை “டேய், நிலாமா ஆசையாக் கேட்கறா. இருந்து என்ஜாய் பண்ணிட்டுப் போகட்டும். இப்போவே போய் என்னப் பண்ணப் போறா?” என்றார்.
நிலவனும் சரி எனத் தலையசைக்க அதியமான் மீண்டும் “நிலாமா, இந்த டிரஸ் கச கசனு இருக்குமே. எங்க கூட வந்து ஹாஸ்டலில் மாத்திட்டு, திரும்பி இங்கே வாயேன்” என்றார.
“அது ஒண்ணும் பிரச்சினையில்லை டாடி. இங்கே எங்களுக்கு டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கத் தனி கிளாஸ் ரூம் கொடுத்து இருக்காங்க. நானும் மாத்திக்க டிரஸ் எடுத்திட்டு வந்திட்டேன்” என்றாள் நிலா.
அதியமான் “அது சேஃப்பா நிலா?” எனக் கவலையுடன் கேட்டார்.
அதற்கு நிலவனே “அது எல்லாம் ஒரு லேடி லெக்சரர் அங்கே இன்சார்ஜ் போட்டிருப்பாங்க. ஹாஸ்டல் தனியா போயிட்டு வரது தான் சேஃப் இருக்காது. அந்த ஏரியாவே காலியா இருக்கும்” என்றான்.
பின் “நிலா, நீ டிரஸ் மாத்திட்டு வர வரைக்கும் நாங்க வெயிட் பண்ணறோம்” என்றான் நிலவன்.
நிலாவும் துள்ளலோடு சென்று விட்டாள். பதினைந்து நிமிஷத்தில் நிலா வரும்போது கூடவே ஒரு லேடி புரொஃபசரும் வந்தார்.
நிலாவின் அம்மாவிடத்தில் “மேடம், நிலா பெர்ஃபார்மன்ஸ் அவுட் ஸ்டாண்டிங்கா இருந்தது. என் இன்லாஸ் ரெண்டு பேரும் நிலாவைப் பார்க்கணும்னு சொன்னாங்க. ஜஸ்ட் ஒரு ஃபைவ் மினிட்ஸ் தான். இன்ட்ரோ பண்ணிட்டு நிலாவை அனுப்பி வைக்கிறேன்” என்றார் அந்த புரொஃபசர்.
நிலாவின் அம்மாவிற்கு பெருமையாக இருக்க, நிலவன் யோசனையோடுப் பார்த்தான். ஏன் என்றால் நிலாவோடு வந்தது, எழிலனின் அன்னை மலர்விழி.
நிலவன் அதெல்லாம் வேண்டாம் எனச் சொல்ல வருமுன், தேன்மொழி “தாராளமாக் கூட்டிட்டுப் போங்க. பெரியவங்க ஆசீர்வாதம் அவளின் திறமையை இன்னும் மெருகேற்றும் தானே” என்றார். நிலவனோ ‘அம்மா’ எனப் பல்லைக் கடித்தான்.
நிலாவிற்கு எழிலனின் குடும்பத்தைச் சந்திக்கப் போகிறோம் என ஒரே சந்தோஷம்.
நிலவன் “நானும் வரலாமா மேடம்” எனக் கேட்டான்.
“சூர். சூர். அவங்களுக்கு நிலாவை நேரில் பாராட்டனும். அதுக்குத் தான் கூப்பிடறாங்க” என்றார் மலர்விழி.
பின் எல்லோருமே சென்று எழிலனின் தாத்தா சிவஞானத்திடம் பேசினார்கள். முதலில் நிலாவைப் பாராட்டிவிட்டு, நிலாவின் தந்தையிடம் அவர்களின் பூர்வீகம் குறித்து எல்லாம் கேட்டுக் கொண்டார் சிவஞானம். எழிலனின் பாட்டி பார்வதி நிலாவின் அன்னையிடம் உரையாடினார்கள்.
பின் நிலாவின் குடும்பத்தினர் அவளின் தோழிகள் இருக்கும் இடத்தில் விட்டுவிட்டு விடைபெற்றுச் சென்றனர். அவர்கள் கிளம்பவும் இசை நிகழ்ச்சி ஆரம்பமாகியது.
முதலில் எழிலன் “ஆயர் பாடி மாளிகையில்” பக்திப் பாடல் பாடி நிகழ்ச்சியைத் துவக்கினான். பின் சில புதுப்பாடல்கள் மேடையில் சில மாணவர்கள் பாடிச் சென்றனர். அவை எல்லாம் குத்துப்பாடல்கள். அதற்கு ஒரு பக்க கேலரியே ஆடிக் கொண்டிருந்தது. அதில் ஆண், பெண் பேதமும் இல்லை.
பின் எழிலன் மேடையில் தோன்றி இதற்கு முன் பாடிய இரண்டு எஸ்பிபி பாடல்களைத் தொடர்ந்து பாடி முடித்தான். பின் மீண்டும் வேறு மாணவர்கள் பாடினார்.
அடுத்து எழிலன் மீண்டும் மேடையில் தோன்றி “நண்பர்களே, உங்களுக்காக இந்த வருடம் நான் முதல் முதலில் பாடும் எஸ்பிபி அவர்களின் பாடல். இதோ” என்றான்.
மெல்லிய குரலில் “தம் தனதன .. தம் தனா தனா ..” என ஆரம்பிக்க விசில் பறந்தது.
“பூவில் வண்டு கூடும் கண்டு’ எனப் பாடல் ஆரம்பிக்கவும், பின் டிராப் சைலன்சாக அமைதியாகினர் மாணவர்கள்.
“நாதம் ஒன்று போதும்.. எந்தன் ஆயுள் கோடி மாதம் ..தீயில் வெந்த போதும் அந்தக் தீயே வெந்து போகும். நானே நாதம்” என வரிகள் வரும்போது எழிலனின் குரல் எஸ்பிபி அவர்களை அச்சடித்தது போல இருந்தது.
பாடல் முடிந்த பின், அந்த அரங்கம் மீண்டும் கைதட்டலில் அதிர்ந்தது. இந்த முறை கல்லூரியின் தாளாளர் எழுந்து வந்து “நமது கல்லூரியின் தற்போதைய மாணவர்களின் திறமை என்னை வியக்க வைக்கிறது. ஆடல், பாடல், படிப்பு என எல்லாவற்றிலும் சிறப்பாகச் செயல்படும் இந்த பேட்ச் மாணவர்கள் தொடர்ந்து கல்லூரியோடு தொடர்பில் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என எல்லோரையும் பாராட்டினார்.
பின் கேலரி மீண்டும் குத்துப் பாடல்களால் களை கட்டியது. என்னதான் மாணவர்கள் அந்த கொண்டாட்டத்தை ரசித்தாலும், கிளம்பும்போது எல்லோர் மனதில் நின்றது எழிலனின் பாடல் தான்.
error: Content is protected !!