Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 16 3

அம்மாவும் மகளும் ஒரே நேரத்தில் “எப்படிம்மா இருக்க” இருவரும் கேட்டு வைக்க, பதில் சொல்வதற்கு பதிலாக தாயை கட்டி அணைத்து கொண்டாள் கமலி.

“சொல்ல சொல்ல கேட்காமல் ஹாஸ்டலில் போய் உட்கார்ந்துட்டல்ல” அன்றைய கோபம் இன்றும் தெரிந்தது மல்லி முகத்தில்.



Advertisement

“டெய்லி போனில் பேசும் போது கோபம் வர்லை, இன்னைக்கு வருதாக்கும்.. போம்மா.. நீயும் உன் கோபமும்” என இவள் சிலுப்பி கொள்ள

“பேசுவடி.. பேசுவ.. உன்னை அடிச்சு வளர்க்காமல் விட்டது என் தப்பு தான். இப்படி தனியா போய் வாழற அளவுக்கு வந்திருக்க மாட்ட. என்னை சொல்லனும்” என்றார் மல்லி.

பின்பு நியாபகம் வந்தவளாய் “அதெல்லாம் சரி, அண்ணா, அண்ணி, குட்டிலாம் எங்கம்மா?” என வீட்டை சுற்றி அலசி ஆராய்ந்தாள்.

Advertisement

“பிரபாவோட, சித்தி மகளுக்கு பூ வைக்கிறாங்களாங்களாம், அங்கே போயிருக்காங்க.. அப்படியே அவளோட அம்மா வீட்டுக்கும் போயிட்டு செவ்வா கிழமை தான் வருவாங்க போல”  மகளை பார்த்தபடியே பேசினார் மல்லி.

Advertisement

“ஏன்மா நீ போகலையா?” என இவள் கேட்க

“கல்யாணத்துக்கு அழைப்பாங்க.. அப்போ போயிக்கலாம் கமலி..” என மகளை வாஞ்சையாய் பார்த்தவர்

“என்னடி மெலிஞ்ச மாதிரி இருக்க சாப்பிடுறியா இல்லையா..” என மல்லி கவலையாய் கேட்க

Advertisement

“என்ன மெலிஞ்சிருக்கனா?” என சந்தோஷ கூச்சலிட்டாள். பின் மல்லியின் முகம் போன போக்கை கண்டு அலர்ட் ஆனவள் “ரொம்ப நாளா வீட்டிலேயே சுகவாசியா இருந்துட்டு, இப்போ வேலை பார்த்தா கொஞ்சம் உடம்பு குறைய தானே செய்யும்” ஏதோ சமாளித்தாள்.

அதன் பின் செல்வம் வந்துவிட, அதன் பின் சொல்லவும் வேண்டுமா? தந்தையின் உபசரிப்பில், அக்கறையில், பாசத்தில் வந்த வேலையை மறந்து,  கல்லூரி வேலை, ஹாஸ்டல்,  தர்ஷினி என வாய் ஓய்ந்து போகும் அளவுக்கு அனைத்தையும் பேசி தள்ளினாள்.

செல்வம் வாங்கி வந்த உணவை எடுத்து மகளிடம் கொடுத்து “உனக்கு பிடிக்கும்ல.. சாப்பிடுமா..” என கொடுக்க அதை ஆசை மின்ன பார்த்தாள். ஆனால் அந்த உணவு உடற்பயிற்சி செய்வோர் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய உணவு என்பதால், எச்சில் கூட்டி விழுங்கியவள், பெயருக்கு உண்டுவிட்டு தாய் தந்தையோடு அளவளாவினாள் நேரம் போவது தெரியாமல்.

இரவு பதினோறு மணி என காட்ட “நீ போய் தூங்குடி.. நேரமாச்சு” என மகளை அவள் அறைக்கு அனுப்பிவிட்டு, பெற்றவர்களும் உறங்க சென்று விட்டனர்.

அறைக்குள் நுழைந்ததுமே முதலில் பார்வை பட்டது அவர்களது அந்த பெரிய சைஸ் கல்யாண போட்டோ தான். சுத்தமாய் தூசி இல்லாது துடைக்கப்பட்டு இருந்தது. அருகில் சென்று கிரியின் உருவத்தை விரல்களால் வருடி கொடுத்தாள்.

அது மட்டுமல்ல அறையே சுத்தமாக தான் இருந்தது. இவள் உடைத்திருந்த பீரோ கண்ணாடி கூட சரி செய்யப்பட்டு வேறு கண்ணாடி பொருத்தப்பட்டு இருந்தது. அந்த வேலை தன் தந்தையின் வேலையாக தான் இருக்கும். அதை தவிர்த்து வேறு யாராக இருக்கும், மகிழ்வாய் சிரித்தது அவள் இதழ்கள்.

பின் தானாய் அவள் கால்கள் அவளது மர பீரோவை நோக்கி சென்றது. வெறுமனே சாத்தி வைத்திருந்த கதவை திறந்து, கிரி சொன்ன இடத்தில் பார்த்தாள். மூன்று பெட்டிகள் இருந்தன. பார்க்கும் போதே “இது எப்படி என் கண்ணில் தட்டுபடாமல் போனது” என்ற எண்ணத்துடனே மூன்றையும் எடுத்து கட்டிலில் வைத்தாள்.

இரண்டு பெட்டிகள் அழகான வடிவமைப்போடு வெல்வெட் கிளாத்தில் இருந்தது. இன்னொரு பெட்டி பார்க்கும் போதே தெரிந்தது அது புடவை பெட்டி என.

முதலில் புடவை பெட்டியை தான் பிரித்தாள். பால் நிற பிங்க் பட்டுபுடவை, மென்மை, நிறம், தரம், அதன் எடை என ஒன்றில் கூட குறை சொல்ல முடியாதளவிற்கு அத்தனை அழகு அந்த புடவை. ஆனால் அவளது மாநிறத்திற்கு அதிகமான கருநிறத்திற்கு பொருந்துமா? முதல் முறை சந்தேகம் வர, எடுத்து சென்று தன் மீது வைத்தபடி கண்ணாடி முன் போய் நின்றாள்.

புடவை அத்தனை அழுகு.. ஆனால் அவளுக்கு தான் ஏதோ வித்யாசமாய் இருந்தது. இது தான் ஒரு வேளை அந்த ‘செட்டாகாத பொருளோ’ என எண்ணியபடி, அதை அப்படியே கட்டிலில் வைத்துவிட்டு, மீதமிருந்த வெல்வெட் பெட்டியை எடுத்து வந்தாள்.

அதில் சிறிய பெட்டியை எடுத்து, பட்டன் லாக்கை விடுவித்து  பிரித்தாள். கண்கள் அகலமாய் விரிந்து கொண்டது. நான்கு அடுக்குகளாய் பிரிந்து நின்றது அந்த பெட்டி. ஒவ்வொரு அடுக்கிலும் மூன்று மூன்றாய் மூன்று வரிசைகளுடன் வேறு வேறு வடிவமைப்புடன் இருந்தது ஒன்பது ஜிமிக்கிகள். அவளுக்கு பிடித்த ஜிமிக்கிகள்.

அதுவும் மிக பெரிதும் இல்லாமல் மிக சிறிதும் இல்லாமல் ரெகுலராய் காதில் போட்டு கொள்ளும் அளவுடன், வெவ்வேறு நிறங்களில் கல் பதிக்கப்பட்டு, ஒன்பது வகை டிசைன்களுடன் இருந்தது. ‘ஒரு வேளை தங்கமோ’ என எண்ணும் படி இருந்தது, அதன் நிறமும், அழகும், தனித்துவ வடிவமைப்புமாய்.

அதை வைத்துவிட்டு மற்றொரு பெட்டியை எடுத்தாள். இது ஜிமிக்கி பெட்டியை விட இரு மடங்கு பெரிதாய் இருந்தது. அதே போல் லாக் பட்டனுடன் இருந்ததை பிரித்தாள். பார்த்ததுமே கண்களை இன்னுமே அகல விரித்தாள். அவளுக்கு மிகப்பிடித்த ரெயின் டிராப் பேங்கில். ஆசையாய் தொட்டு தொட்டு பார்த்தாள்.

கண்களை உறுத்தாத பத்து வகையான எலைட் கலர்களில் ரெயின் டிராப் வளையல்கள் அடுக்க பட்டிருந்தது. ஒவ்வொன்று அத்தனை அழகுடன் மிளிர்ந்தது.

வெங்காய நிறத்தில் இருந்த வளையல்கள் அவளை ஈர்க்க, அதில் இரு வளையல்களை மட்டும் எடுத்து கையில் வைத்து பார்த்தாள். மிக பிடித்திருந்தது.

வலது கையில் போட முயல.. முடியவில்லை. காரணம் வளையல் சின்ன சைஸ்ஸாக இருந்தது. முகம் அப்படியே கூம்பி போனது.

வளையல் பெட்டியை ஏக்கமாய் பார்த்தவளின் பார்வையில் பட்டது, எல்லா வளைகளுக்கும் மத்தியில் மகுடம் வைப்பது போல் இருந்த நான்கு தங்க நிற வளையல்கள்.

பச்சை, வெள்ளை, சிகப்பு என மூன்று கலரில் பளீரென்ற கற்களுடன் கொடியில் பூக்கள் படர்ந்தது போல் இருந்தது அந்த வளையல். கண்ணை பறித்தது. ஆனால் அதுவும் அவள் கைகளுக்கு சேரவில்லை. கொஞ்சம் பெரிதாக இருந்தால் தனக்கு சேர்ந்திருக்கும் என நினைக்காமல் இருக்க முடியவில்லை. இப்போது தான் புரிந்தது அந்த செட்டாகாத பொருள் வளையல் தான் என்று.

கட்டிலில் மூன்று பெட்டிகளும் கிடக்க அதன் நடுவில் இவள் கிடந்தாள்.

அதன் பின் ஒரு நொடி கூட தாமதிக்கவில்லை, நேரத்தை பார்த்துவிட்டு கிரிக்கு இவளே போன் செய்தாள்.

இரண்டு, மூன்று முறை போன் செய்தும் எடுக்கவில்லை இவன். முதலில் கமலியா போன் செய்வது என ஆச்சர்யபட்டவன், ‘ஒரு வாரமா பேசல தானே.. இப்போ நான் பேசனுமோ?’ என வீம்புக்காகவே எடுக்க மறுத்தான். இவளோ விடுவேனா என தொடர்ந்து அடித்து கொண்டே இருந்தாள்.

எங்கிருந்தோ வந்து கிரியின் மேல் விழுந்தது தலையணை, “போனை எடுத்துட்டு வெளியே போடா.. தூங்க விடாம டார்ச்சர் பண்ணிட்டு” என ராம் தூக்க கலக்கதில் கிரியை சரியாக திட்ட, போனை எடுத்து கொண்டு பால்கனி வந்தான்.

அடுத்த ரிங்கில் உடனே எடுத்தவன் “என்னடி, இப்போ தான் நான் இருக்குறது உனக்கு கண்ணுக்கு தெரியுதா” எடுத்தவுடன் எரிந்து விழுந்தான் கிரி.

“ஆமாமாம்.. நான் இருக்குறது மட்டும் சார்க்கு எப்பவுமே தெரியும் போல” இவளும் காட்டமாய் கேட்டாள்.

‘போச்து கிப்டை பார்த்துட்டா போல..’ என செருமிக்கொண்டவன் “உங்க வீட்டிலா இருக்க? கிப்டை பார்த்திட்டியா” அமைதியாய் கேட்க

பதிலுக்கோ “ரொம்ப அழகோ அவ..” என கேட்டு வைக்க

“எவ?” இவன் குழம்பி போக

“அதான் அந்த ஏஐ கமலி.. அவ அழகுக்கு தகுந்த மாதிரி புடவை என்ன, ஜிமிக்கி என்ன, வளையல் என்ன! ரொம்ப அலஞ்சீங்களோ இதெல்லாம் வாங்குறதுக்கு?” குரலில் அத்தனை வெறுப்பு.

கிரிக்கு தலையே சுற்றியது,

“லூசு மாதிரி பேசாத கமலி, உன் அண்ணன்கிட்ட, உனக்கு என்னலாம் பிடிக்கும்னு கேட்டு கேட்டு வாங்கினது. அசிங்க படுத்தாதே” பொறுமையாய் பேசினான் இவளிடம்.

“அதை கல்யாணம் முடிஞ்ச பிறகு கொடுத்திருந்தா, நான் ஏன் இப்போ பேச போறேன்.  ஆசையா வாங்கின உங்களுக்கு, ஏன் என் கையில் குடுக்க கூட முடியலை.. அந்தளவுக்கு பிடிக்காதவளா ஆயிட்டேன்ல்ல…” இவள் பேச்சு ஹார்ட் பீட்டை எகிற வைத்தது கிரிக்கு.

“அது அது அப்போடி.. இப்போ இப்போ அப்படியில்லையே.. முடிஞ்சதை விடு கமலி, கொஞ்ச நாளா தான் இரண்டு பேருக்கும் ஒரு பாண்டிங் கிரியேட் ஆச்சு. உடைச்சிடாத கமலி” உணர்வுபூர்வமாய் இவன் கூற

“ஓ.. அப்படின்னா, இப்போ என்னை பிடிக்குமோ. எங்க சொல்லுங்க பார்ப்போம், ‘கமலி உன்னை எனக்கு பிடிக்கும்னு’ ஒரு வார்த்தை ஒரே வார்த்தை சொல்லுங்க பார்ப்போம்” என தூண்டிவிட

“இவ்வளவு தூரத்தில் இருந்து சொல்ல முடியாது கமலி. நேரில் வச்சு சொல்றேன்” என்றான் பல்லை கடித்து கொண்டு. சொச்ச பொறுமையும் பறந்து கொண்டிருந்தது கிரிக்கு.

“ஏன் நேரில் இருந்தா கட்டி புடிச்சு முத்தம் குடுத்து கமலி ஐ லவ் யூனு பிரபோஸ் பண்ணிருப்பீங்களோ” எகத்தாளமாய் கேட்க

“நீ புள்ளையே குடுத்தாலும் நம்ப மாட்டடி.. உடம்புக்காக வந்தியானு கேட்ப..! என்னை, என் மனசை உன்கிட்ட நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் மாறவே இல்லைனு நீ் நினைக்கிற, நினைச்சிட்டு போ.. அதே மாதிரி நீ என்னை இப்போவும்  லவ் பண்றல்ல.. அதுவும் மாறாவே இல்லைனு நானும் நினைச்சிட்டு போறேன். என்னைக்கு நம்பிக்கை வருதோ அன்னைக்கு வாடி.. முத்தம் மட்டுமில்லை, மொத்தமும் தாரேன்” என இவன் கமலிக்கு மேல் பேச.. இறுதியில் விக்கித்து நின்றது என்னவோ கமலி தான்.

“அதுவரை எனக்கு போன் பண்ணாத..  அது தான் உனக்கும் நல்லது. நானும் பண்ண மாட்டேன்” என்று உறுதியாய் கூறி வைத்து விட்டான் கிரி.

‘எவ்வளவு தான் இவள் கிட்ட இறங்கி போறது.. ஒரு அளவு இல்லை..’ பால்கனியின் கம்பிகளை அழுந்தபிடித்தபடி நின்றுவிட்டான்.

கமலி தான் உண்மையா இவன் பேசுவதெல்லாம்.. என நம்ப முடியாமல் பிரம்மை பிடித்தவள் போல் ஆகிபோனாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!