தேன் சிந்துமோ மேகம்-16
அத்தியாயம் – 16
அந்த வருட செமெஸ்டெர் முடியும் தருவாயில், எழிலன் எல்லா மாணவர்களுக்கும் அறிவுரை வகுப்பு ஒன்று நடத்தினான். கிளாஸ் முடியும் நேரம் எழுந்த வந்தனா, “சர், ஒரு சின்ன டவுட். அன்னிக்கு எங்களுக்கு ஸ்டூடண்ட், புரொஃபசர் உறவு பற்றி பாடம் எடுத்தீங்களே. இது என்ன உறவு சர்?” எனக் கேட்டு ஒரு வீடியோ ஓட விட்டாள்.
அது நிலா முதல் முறை ஆடிய இளஞ்சோலைப் பூத்ததா ஆடிய வீடியோ. அதில் எழிலன் பாடியதும் பதிவாகியிருந்தது.
மற்ற மாணவர்கள் எழிலனை ஒரு மாதிரியாகப் பார்க்க, வந்தனா ஏளனமாகப் பார்த்தாள்.
Advertisement
ஆனால் எழிலனோ எதற்கும் அசராமல் “இது நான் ஸ்டூடண்ட்டா இருந்தப்போ நடந்த புரோகிராம். அதோட நான் பாடியிருக்கேன், அவங்க ஆட்டியிருக்காங்க. அவ்வளவு தானே. இதில் என்ன தப்பு இருக்கு?” எனக் கேட்டான்.
மாணவர்கள் இப்போது வந்தனாவின் முகம் பார்க்க “இது ஒண்ணும் டிவி ஷோ கிடையாதே. இதே காலேஜ்லே எடுத்தது. இதை அல்லோவ் பண்ணின காலேஜ் எப்படி நல்ல காலேஜ்ஜா இருக்க முடியும்?” எனக் கேட்டாள்.
“உங்களுக்கு அப்படித் தோனிச்சுனா, நீங்க டிசி வாங்கிட்டுப் போங்க. உங்க வெட்டிச் சந்தேகங்களுக்குப் பதில் சொல்லணும்னு அவசியம் எங்களுக்கில்லை” என்றான் எழிலன்.
Advertisement
வந்தனாவோ “இப்போ நீங்க இதுக்கு பிராப்பர் ஆன்சர் பண்ணலைனா, நான் மீடியா மூலமா இதை வெளிலேக் கொண்டு வருவேன். உங்க பேர் கூட, காலேஜ் ரெபுடேஷனும் போகும் ஓகேவா” என மிரட்டும் தொனியில் பேச, மற்ற மாணவர்களே அஞ்சினர்.
Advertisement
அந்த நேரம் அங்கே வந்த செழியன் “மிஸ்டர் எழிலன், என்ன நடக்குது இங்கே?” எனக் கேட்டார்.
எழிலன் எதுவோ மழுப்புவான் என நினைக்க, அவனோ “சர், இந்த பெண் சில வீடியோஸ் பார்த்திட்டு, தேவயில்லாத சந்தேகங்கள் கேக்கறாங்க.” என மட்டும் கூறினான்.
செழியன் நேரிடயாக “உங்களுக்கு என்ன இஷ்யு மா?” எனக் கேட்க, வந்தனா சற்றுப் பயந்தாள். அவளுக்கும் இது பழைய வீடியோ என நன்றாகவேத் தெரியும். மற்றவர்கள் முன் தனக்கு நேர்ந்த அவமானம் எழிலனுக்கும் நேர வேண்டும் எனத் தான் இப்படிச் செய்தாள். ஆனால் வைஸ் பிரின்சிபால் வரைப் போகும் என நினைக்கவில்லை. இப்போது பின்வாங்க முடியாமல் நின்றாள் வந்தனா.
Advertisement
“சர், அது வந்து யாரோ காஸ்ஸிப் பேசினதை எங்க கிளாஸ் ஸ்டூடண்ட்ஸ் எழிலன் சர் கிட்டே கேட்டாங்க. அதுக்கு சர் ரொம்ப ஹார்ஷாப் பேசினார். புரொஃபசர், ஸ்டூடண்ட் ரிலேஷன்ஷிப் பற்றிப் பேசி எங்களை இன்சல்ட் பண்ணினார். ஆனால் அவரே ஒரு வீடியோவில் வேறே ஒரு சீனியர் ஸ்டூடண்ட் கூட டூயட் பாடி இருக்கார். அதைப் பற்றிக் கேட்டுட்டு இருக்கோம்” எனத் தான் மட்டுமில்லாது, மொத்த கிளாசையும் மாட்டி விட்டாள் வந்தனா. மற்றவர்கள் அவளை விட்டுக் கொடுக்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் தவித்தனர்.
வந்தனா அத்தோடு நிறுத்தவில்லை. “அவர் இன்னொரு லேடி புரொஃபசர் கூடவும் குளோஸ்சா இருக்கிறதா ஸ்டூடண்ட்ஸ் பேசிக்கறாங்க” என்றாள்.
இந்த வருட மாணவர்கள் பல பேருக்கு எழிலனின் அப்பா தான் வைஸ் பிரின்சிபால் எனத் தெரியாது. அவன் மாணவனாக இருந்த போது கூடப் பேராசிரியர்களுக்குத் தான் அவர்களின் உறவு தெரியும். மாணவர்களில் வெகு சிலர் மட்டுமே அறிவார்கள்.
எழிலனும் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்ந்த பிறகு, செழியன், மலர்விழி, எழிலன் மூன்று பேருமே தனிதனியாகத் தான் வருவார்கள். ஒருவர் டிபார்ட்மெண்ட் விஷயத்தில் மற்றவர்கள் தலையிடவே மாட்டார்கள். அதனால் புதிய மாணவர்களுக்கு அதைப் பற்றி எல்லாம் தெரியவில்லை.
வந்தனா கண்டபடிப் பேசவும், எழிலனை நேராகப் பார்த்துவிட்டு, “உன்னோட கம்ப்ளைண்ட்ஸ் எல்லாத்தையும் நேரா பிரின்சிபால் கிட்டே சொல்லுமா” என்றார் செழியன்.
“எழிலன், நீங்களும் வாங்க” எனக் கூறிவிட்டுச் சென்றார் செழியன்.
வந்தனா கர்வமாக எல்லாரையும் ஒரு பார்வைப் பார்த்துவிட்டுச் செழியனோடு சென்றாள். அவள் சென்றதும், முதல்நாள் எழிலனிடம் பேசிய அந்த மாணவன் மற்றவர்களிடம் “கைஸ், வந்தனா சொன்னதைப் பற்றி பிரின்சிபால் கேட்டாத் தெரியாதுன்னு சொல்லிடுங்க. அவ நிறையப் பொய் சொல்லியிருக்கா. அதோட எழிலன் சர் ரேஞ்ச் தெரியாமப் பேசிட்டு இருக்கா. நாமளும் அதில் மாட்டிக்க வேண்டாம்.” என்றான்.
“வந்தனா சொல்றது பொய் இருக்கட்டும். ஆனால் அந்த வீடியோ பற்றி சர் மறுக்கவும் இல்லையே” என்றனர் மற்றவர்கள்.
“அடேய் அறிவு வாளிகளா.. உண்மையா நடந்ததை அவர் ஏன் மறுக்கப் போறார். அந்த வீடியோ ஸ்டேஜ் மட்டும் பார்த்திட்டுப் பேசறா. கீழே அத்தனை ஸ்டாஃப் இருக்காங்க. முக்கியமா வைஸ் பிரின்சிபால் இருக்கார். இவ சொல்றபடி இருந்தா இந்நேரம் எழிலன் சர் இங்கே அசிஸ்டண்ட் புரொஃபசர் ஆகியிருக்க முடியுமா?” எனக் கேட்டான்.
மற்றவர்களும் அது சரிதானே என யோசித்தனர். வந்தனா என்ன சொல்லப் போகிறாள் எனக் காத்திருந்தனர்.
வந்தனா பெருமையாகப் பிரின்சிபால் அறைக்குச் சென்று நிற்க, எழிலன், செழியனும் உடன் இருந்தனர். அவர்கள் கல்லூரி விதிப்படி தனியாக ஒரு மாணவி வந்துப் பேசும்போது உடன் ஒரு பெண் பேராசிரியரும் இருக்க வேண்டும். எனவே வரலாற்றுத் துறையில் இருந்து ஒரு பேராசிரியை வரக் காத்திருந்தனர். அவர் வந்த பின் கல்லூரி முதல்வர் வந்தனாவிடம் கேட்க, அவள் எழிலன் மீது உள்ள வதந்திகளை எல்லாம் உண்மை போல பேசினாள். வந்தனா பேசப் பேச, அந்தப் பேராசிரியை மற்றும் முதல்வரின் முகம் மாறியது. எழிலன் மற்றும் செழியன் மட்டும் மிஸ்டர் கூலாக இருந்தனர்.
ஒரு கட்டத்தில் அந்த பேராசிரியை “அம்மா தாயே, கொஞ்சம் வாய் மூடறியா? யாரைப் பற்றி பேசிட்டு இருக்கனு உனக்குத் தெரியுமா?” எனக் கேட்டார்.
“மேடம், நீங்க உங்க கொலீக்கக் காப்பாத்த, என்னை அடக்காதீங்க?” என்றாள் வந்தனா. பின் முதல்வரிடம் திரும்பி “பாருங்க சர், உங்க முன்னாடியே இப்படி நடந்தா, ஸ்டூடண்ட்ஸ்கு எனப் பாதுகாப்பு இருக்கு?” எனக் கேட்டாள்.
முதல்வர் அவளிடம் “சரிம்மா, முதலில் லேடி புரொஃபசர் பற்றி ஏதோ சொன்னியே? அவங்க யாருனு தெரியுமா?” எனக் கேட்டார்.
“நான் கேள்விப்பட்டது அவங்க ஜியாலஜி டிபார்ட்மெண்ட் மேடம்” என்றாள்.
செழியனே ஒரு மாதிரி ஆகி விட்டான். என்ன இந்தப் பெண் என யோசித்தான்.
அந்தப் பெண் பேராசிரியை “அம்மா மகாராணி, அவங்க வேறே யாரும் இல்லை. எழிலன் சர் அம்மா” எனக் கூறினார். வந்தனாவின் முகம் செத்து விட்டது. இதை அவள் எதிர்பார்க்கவே இல்லை.
மலர்விழியும் எழிலனும் எங்கோ வெளியில் சென்றபோது அவர்களின் நெருக்கத்தைப் பார்த்து வந்தனாவாக இட்டுக் கட்டிய கதை தான் இது. ஏன் என்றால் கல்லூரிக்குள் மலர்விழி எழிலன் சர் என்று தான் கூப்பிடுவார். எழிலனும் மேடம் என்று தான் கூப்பிடுவான்.
வந்தனா சின்னக் குரலில் “சாரி, இந்த விஷயம் எனக்குத் தெரியாது” என்றாள்.
அடுத்து முதல்வர் மீண்டும் “நீ ஒரு வீடியோ காட்டினது எங்க எல்லோருக்கும் தெரியும். பிரேஷர்ஸ் பார்ட்டிலே நடந்தது. அப்போ வைஸ் பிரின்சிபாலும் அந்த ஈவண்ட் அட்டென்ட் பண்ணினார். அங்கே மேடையிலேயே எழிலன் இது எதேச்சையா நடந்ததுனு கன்ஃபஸ் பண்ணினார். அப்போதும் செழியன் சர் இனிமேல் இந்த மாதிரி நடக்கக் கூடாதுனு எல்லா ஸ்டூடண்ட்ஸ்கும் ஓரல் இன்ஸ்ட்ரக்ஷனும் கொடுத்தார். அதை இதுவரை யாரும் மீறினது இல்லை. எல்லாத்துக்கும் மேலே அப்போ எழிலன் புரொஃபசர் இல்லை. பிஜி ஸ்டூடண்ட் தான்” எனக் கூறினார்.
வந்தனாவின் முகம் சுத்தமாகக் களையிழந்தது. முதல்வர் “இப்போ உன் மேலே எழிலன் கம்ப்ளைண்ட் கொடுத்தா, உன் லைப் என்ன ஆகும் தெரியுமா? எழிலன் சர் நீங்க என்ன சொல்றீங்க?” எனக் கேட்டார்.
எழிலன் அமைதியாக “நான் எதுவும் கம்ப்ளைண்ட் பண்ணலை சர். மெச்சூரிட்டி இல்லாமல் பேசிட்டாங்க. அட்வைஸ் மட்டும் பண்ணுங்க போதும்” என்றான்.
இப்போது அந்தப் பெண் பேராசிரியை கல்லூரி முதல்வரிடம் “சர், இப்போ நான் இந்த பெண்ணின் மீது கம்ப்ளைண்ட் கொடுக்கிறேன். இவளை மாதிரி ஸ்டூடண்ட்ஸ், நாளைக்கு இல்லாத பழி எல்லாம் மற்ற புரொஃபசர் மேலே போட்டா, நாங்க என்ன பண்ணறது? எங்களுக்கும் சேஃப்டி முக்கியம் சர்” என்றார்.
வந்தனா நடுங்கி விட்டாள். செழியன் தான் “விட்டுடுங்க மேடம். சில நேரங்களில் நம்மளை அறியாமல் செய்யற ஒரு விஷயம் கூட வேறே கோணத்தில் பார்க்கப்படும்னு புரிஞ்சது. இது நமக்கு ஒரு பாடம். இனிமேல் இந்த மாதிரி விஷயங்களில் நாமளும் சரியா நடந்துப்போம்” என்றான்.
அந்தப் பெண் பேராசிரியை “அம்மா தாயே, இதையும் உனக்கு சாதாகமா வைஸ் பிரின்சிபால் பண்ணறார்னு சொல்லிட்டுத் திரியாத. சர் தான் எழிலன் சர் அப்பா” எனக் கூற, வந்தனாவிற்கு மயக்கமே வந்தது.
செழியன் நினைத்திருந்தால் இதைப் பிரின்சிபால் வரைக் கொண்டு செல்லலாமல், அவரே தீர்த்து இருக்கலாம். ஆனால் அவர் நியாயமாக நடந்துக் கொண்டது வந்தனாவின் மனசாட்சியைக் குத்தியது.
எல்லோரையும் பார்த்துவிட்டு தலைக் குனிந்தபடி சாரி எனக் கூறினாள் வந்தனா.
கல்லூரி முதல்வர் “இன்றோடு இந்தப் பேச்சுக்கள் நிற்க வேண்டும். இங்கே என்ன நடந்தது என்பதையும் நாங்க முழுசா ரெகார்ட் பண்ணியிருக்கோம். வெளியில் நீ உண்மையைச் சொல்வது தான் உனக்கு நல்லது. இப்போ கிளாசிற்கு போ” என்றார்.
வந்தனா வெளியே செல்லத் தொடங்கி, மீண்டும் முதல்வர் பக்கம் திரும்பினாள் . அவர் என்ன என்பது போலப் பார்க்க “சர், நான் திருப்பியும் சாரி கேட்டுக்கறேன், எனக்கு சர்வீஸ் கமிஷன் எழுதணும்னு ஆசை. இதை என்னோட இன்டெர்னல் மார்க்ஸ் அல்லது கண்டாக்ட் சர்டிபிகேட்டில் பிளாக் பண்ணிடாதீங்க.” என அழுதாள்.
எழிலன் தான் “ஏன்மா, இவ்ளோ பெரிய லட்சியம் வச்சிருக்கிற பொண்ணு இப்படியா மனசை குறுக்கி வச்சிருப்ப. இங்கே யாரும் எதுவும் பண்ண மாட்டாங்க. உன்னோட அறிவை படிப்பில் காட்டு.” என்றான்.
வந்தனா “தாங்க்ஸ் சர்” என எல்லோரையும் பார்த்துக் கூறிவிட்டுச் சென்றாள்.
எழிலனையும், அந்தப் பேராசிரியையும் அனுப்பி வைத்த பிரின்சிபாலிடம், செழியன் சற்று நேரம் பேசி விட்டு வந்தான்.
வந்தனா வந்ததும் அவள் முகம் வைத்தே, பலர் எதுவும் கேட்காமல் இருக்க, அவளின் நெருங்கிய தோழிகள் மட்டும் என்ன ஆச்சு எனக் கேட்டனர்.
வந்தனா தான் தவறாகப் புரிந்துக் கொண்டதாகவும், பிரின்சிபால் அதை விளக்கினார் என்று மட்டும் கூறி விட்டு நிறுத்திக் கொண்டாள்.
இந்த விஷயம் மெல்ல மற்ற டிபார்ட்மெண்ட்களுக்கும் பரவ, நிலாவின் காதுகளுக்கும் வந்து சேர்ந்தது. அத்தோடு நிலவனுக்கும் செய்தி சென்று சேர்ந்ததை யாரும் அறியவில்லை.
-தொடரும்-
