Skip to content
Post Views: 50
அத்தியாயம் – 17-2
செழியன் வீட்டில் பெரியவர்களோடு இதைப் பற்றிக் கலந்து பேச, மலர்விழி எழிலனை அடிக்கவேப் பாய்ந்தார். இதுவரை மலர் அப்படி நடந்துக் கொண்டதே இல்லை. சிவஞானம் தான் அவளைத் தடுத்தார்.
அதே தான் நிலாவின் வீட்டிலும் நடந்தது. ஆனால் அடி நிலாவிற்கு அல்ல. நிலவனிற்கு. தேவையில்லாமல் அவன் செய்த செயல் தான் இந்த பிரச்சினைக்குக் காரணம் என அவனின் தந்தை நன்றாகத் திட்டினார். அவர்கள் யாரும் நிலாவின் மனதில் என்ன இருக்கிறது எனக் கேட்கவே இல்லை.
பின் நிலாவின் தந்தை நேராக செழியன் வீட்டிற்கு வர, அங்கே சிவஞானம் தான் பேச்சு வார்த்தை நடத்தினார். தங்கள் குடும்பம் பற்றிக் கூறி, எழிலன் தற்போது நடந்துக் கொண்டது பிழை தான். ஆனாலும் அது அவனின் விருப்பமும் கூட. இதை நாம் ஏன் மேலே ப்ரோசீட் செய்யக் கூடாது எனக் கேட்டார்.
Advertisement
செழியன், மலர்விழி இருவரும் அவசரம் வேண்டாம், எல்லாவற்றையும் ஆறப் போடலாம் எனக் கூறினார்கள். ஆனால் எழிலனுக்கு இதற்கு மேல் இதை விட்டுவிட மனம் இல்லை. அதனால் தாத்தாவின் பேச்சிற்கு ஒத்து ஊதினான்.
நிலாவின் தந்தையும் சிறிது யோசனை செய்தார். பின் எழிலன் தாத்தா பேச்சிற்கு சம்மதித்தார். நிலா, எழிலனுக்கு சிம்பிளாக நிச்சயம் செய்து விட்டு, திருமணம் நிலாவின் படிப்பு முடிந்ததும் வைத்து விடலாம் என்றும் கூறினார்.
செழியன் இரண்டு பேருக்கும் வயது இருக்கிறது. இப்போதே இதைப் பேச வேண்டாம் என எவ்வளவோ கூறினார். ஆனால் சிவஞானம் ஒரு பெண்ணை நேரடியாகக் கேட்ட பின் அதைத் தள்ளிப் போடுவது நல்லது அல்ல என முடிவாகக் கூறிவிட்டார்.
Advertisement
நிலவன் நிலாவிடம் தனியாகப் பேசிப் பார்த்தான். அவள் மறுப்புக் கூறவில்லை. அதே சமயம் பெரிதாகத் துள்ளிக் குதிக்கவும் இல்லை. அவள் நினைத்தபடி நடந்திருந்தால் ஒருவேளை நிலாவின் மகிழ்ச்சி வெளிப்படையாகத் தெரிந்திருக்கும். ஆனால் அவசரம் அவசரமாக எல்லாம் நடப்பதாகத் தோன்றவே, நிலாவும் அப்படியே விட்டுவிட்டாள்.
Advertisement
நிலவனுக்கு அதுவே நிலாவிற்கு எழிலன் மேல் பெரிதாக விருப்பம் இல்லை என நினைக்க வைத்தது. அவன் நினைத்ததைச் சாதிக்க சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டான் என நிலவன் நினைத்தான். அதனால் எழிலன் மீது பெரிய மதிப்பு நிலவனுக்கு ஏற்படவில்லை.
நிலவன் நினைத்ததும் ஒரு விதத்தில் சரிதான். எழிலன் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டான் தான். ஆனால் நிலவன் வந்தனா விஷயத்தில் அப்படிப் பிடிவாதமாகப் பேசியது எழிலனைக் கோபப்படுத்தியது.
கல்லூரியின் சில முக்கியஸ்தர்களுக்கு மட்டும் எழிலன், நிலா இருவருக்கும் நிச்சயம் செய்யப்பட்டதைக் கூறினார்கள். விழாவை இரண்டு குடும்பத்தினரை மட்டுமே வைத்து நடத்திக் கொண்டனர்.
Advertisement
அந்த ஆண்டு எந்த கலை நிகழ்ச்சிகளிலும் நிலா கலந்து கொள்ளவில்லை. எல்லோரும் கேட்டதற்கு படிப்பைக் காரணம் சொல்லிவிட்டாள். எழிலனோ உற்சாகத்தில் தான் இருந்தான். நிலாவிடம் பேசுவதில்லை தான். ஆனால் மனது சந்தோஷமாக இருக்கும் நேரங்களில் ஏதாவது பாடல் பாடி அனுப்பி வைப்பான். நிலா பார்த்தாலும், கேட்டாலும் பதில் வராது. எழிலன் அதைப் பொருட்படுத்துவதில்லை.
எழிலன் பழைய மாதிரி இல்லை என்றாலும், எப்போதாவது கல்லூரி மேடையில் பாடிக் கொண்டுதான் இருந்தான் .
எழிலன் மீது செழியன், மலர்விழி இருவரும் கடும் கோபத்திலிருந்தனர். வேலனும், வள்ளியும் வந்துதான் அவர்களைச் சமாதானம் செய்தனர். வள்ளி, நான்தான் ஒரு வருஷம் முன்னாடியே அவனுக்கு ஏதோ பொண்ணைப் பிடிச்சுருக்குன்னு சொன்னேனே என மலர்விழியிடம் கூறினார்.
மலர்விழியும் அதன் பின் தான் எழிலன் சமீபத்திய நடவடிக்கைகளை யோசித்தார். நிலாவின் மேல் அவனுக்கு இருக்கும் அன்பு அவருக்கும் புரிந்தது.
மலர்விழி மெதுவாக செழியனிடம் எடுத்துக் கூற, ஒரு பெருமூச்சுடன் இனி என்ன செய்ய முடியும் எனக் கூறிவிட்டார் செழியன்.
அந்த ஒரு வருடமும் எப்படிச் சென்றது எனக் கேட்டால் யாருக்கும் தெரியாது. ஆனால் நாட்கள் மட்டும் ஜெட் வேகத்தில் பறந்துதான் இருந்தது.
அவ்வப்போது கல்லூரியில் சந்திக்கும் போது மலர்விழி நிலாவிடம் இரண்டு வார்த்தைப் பேசிவிட்டுச் செல்வார். அவரின் மென்மையான அணுகுமுறை நிலாவிற்கு பிடித்தது.
செழியன், மலர்விழி இருவரும் நிலாவை முழுப் பெயர் மட்டுமே சொல்லி அழைப்பார்கள்.
நிலா தனது மனதை எழிலனோடு வாழத் தயார்படுத்திக் கொண்டாள்.
நிலாவின் கடைசி செமெஸ்டெர் முடியும் தருவாயில் இருந்தது. எழிலனின் பெற்றவர்கள் கல்லூரியில் மற்ற பேரசிரியர்களுக்கு இவர்களின் திருமணத்தைப் பற்றிக் கூறினார்கள். முழுக்கவே இது பெரியவர்கள் பேசி வைத்தத் திருமணம் என்றே கூறினார்கள்.
மாணவர்களிலும் ஒரு சிலருக்குத் தெரிந்தது தான். ஆனால் யாருக்கும் சென்று கேட்கும் தைரியமில்லை.
எழிலன் அவன் வகுப்பு மாணவர்களிடம் தனக்குத் திருமணம் என்றும், நிலா தான் மணமகள் என்றும் கூறிவிட்டான். எல்லோரும் குறிப்பாக வந்தனா அதிர்ச்சியாகப் பார்க்க, இது பெரியவர்கள் நிச்சயித்தத் திருமணம் எனக் கூறினான்.
வந்தனா மட்டும் தனியாக எழிலனைச் சந்தித்து “சாரி சர், இப்படி ஒரு விஷயம் இருக்கும்னு நான் நினைக்கவே இல்லை. உங்களுக்கும், உங்க பியான்சிக்கும் எவ்ளோ எம்பரசிங்கா இருந்திருக்கும்னு புரியுது. ரியல்லி வெரி சாரி” என்றாள்.
“இட்ஸ் ஓகே மா. உன்னோட கோல் பெரிசு. அதை கைப்பற்றுவதற்குப் பல விஷயங்கள் தடங்கலா இருக்கும். அதை எல்லாம் தட்டிட்டு முன்னேறிப் போயிட்டே இருக்கணும் சரியா?” என்றான் எழிலன்.
“எஸ் சர்” எனக் கூறிவிட்டுக் கிளம்பினாள் வந்தனா.
இன்றைக்கும் இது எல்லாம் நிலா கேட்டு விட்டாள். அன்றைக்கு ஊருக்குக் கிளம்புவதால் எழிலனிடம் சொல்லிக் கொண்டு போக வந்தாள். மலர்விழியிடம் சொல்லிக் கொள்ள வந்தபோது, எழிலன் கிட்டேயும் சொல்லிட்டுப் போ எனக் கூறினார். அதற்காக வந்தவளின் காதில் தான் இந்தப் பேச்சுக்கள் விழுந்தது. நிலவன் எழிலனைச் சந்திக்க வரவில்லை எனக் கூறிவிடவே, நிலா மட்டுமே வந்தாள்.
நிலாவின் மனதில் யாரோ ஒரு பெண்ணின் மேல் காட்டும் அக்கறை, அவனது வருங்கால மனைவியின் மனதில் என்ன இருக்கிறது எனக் கேட்கத் தெரியவில்லையே எனத் தோன்றியது.
இன்னும் ஒரு மாதத்தில் திருமணம். இதற்கு பின் திருமணத்தில் தான் சந்திப்பு என்பதால், தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு எழிலன் முன் நின்றாள் நிலா.
எழிலன் அவளை எதிர்பார்க்கவில்லை.
“வா நிலவழகி” என்றான்.
“நான் இன்னிக்கு ஊருக்குக் கிளம்பறேன்” என மொட்டையாகக் கூறினாள் நிலா.
ஏன் என யோசித்தவனுக்கு அவளுக்குப் பரீட்சைகள் முடிந்து இருக்கும் எனப் புரிந்தது.
“எக்ஸாம்ஸ் எப்படிப் பண்ணியிருக்க?” எனக் கேட்டான் எழிலன். அவனின் நண்பர்கள் தான் யாரும் இல்லையே. அவனின் மனசாட்சியே ‘அட தத்தி. இதைக் கேட்கத் தான் கிடைச்ச கேப்பில் கிடா வெட்டி கல்யாணம் பண்ணப் போறியா?” எனக் கேட்டது.
நிலா “ம்” என மட்டும் கூறினாள். எழிலன் மேலே என்ன சொல்வது என யோசிக்கும் முன் “அண்ணா, கார்லே வெயிட் பண்ணறான். நான் கிளம்பறேன்” எனக் கூறிவிட்டு கிளம்பிவிட்டாள்.
எழிலன் மனதில் “எனக்கு வில்லனே மச்சான் தான்’ என நினைத்தான். முதல் முறையாக நிலவனை மச்சான் எனச் சிந்திக்க ஒரு மாதிரி நன்றாக இருந்தது. அதனால் நிலாவிடம் “மச்சான் சாரைக் கேட்டதாச் சொல்லு” எனக் கூற, நிலா எழிலனை முறைத்தாள்.
அந்த முறைப்பு எழிலனுக்குப் பிடிக்கவே அதிலிருந்து நிலவனைக் காணும்போது எல்லாம் மச்சான் சர் என அழைக்க ஆரம்பித்தான் எழிலன்.
நிலா ஊருக்குச் சென்ற பிறகும் அவ்வப்போது எழிலன் பாடல்கள் மட்டுமே மெசேஜ் செய்வான். பிறகு மச்சான் சர் எப்படி இருக்கார் எனக் கேட்டு ஒரு கண்ணடிக்கும் ஸ்மைலி அனுப்பி வைப்பான்.
நிலா இதை எல்லாம் நிலவனிடம் கூறவில்லை. அவனுக்கு தன்னால் தானோ எனக் குற்ற உணர்ச்சி ஒரு பக்கம். எழிலனைப் பிடிக்கவில்லை என ஒருபக்கம் என வீட்டில் நில்லாது சுற்றிக் கொண்டிருத்தான்.
நிலா சில நாட்கள் கவனித்து விட்டு, அண்ணனை அழைத்துப் பேசினாள். அவனின் குற்றஉணர்ச்சி பற்றிக் கூறியதும், அப்படி எல்லாம் இல்லை எழிலனை எனக்கும் பிடிக்கும் என உண்மையைக் கூறினாள் நிலா. ஆனால் நிலவன் நம்பத் தான் இல்லை.
அப்படி இப்படி என்று திருமண நாளும் வந்தது. ஊர் மெச்ச நன்றாகவே நடந்தது.
திருமணம் சென்னையில் நடந்தாதல், திருச்சியில் வரவேற்பு வைத்தனர் எழிலன் வீட்டினர்.
திருமணம் முடித்த அடுத்த நாளே விருந்து முடித்து விடலாம் என செழியன் கூறியதால், அன்றைக்கு எழிலனின் வீட்டினர் நிலாவின் வீட்டில் தங்கினார்கள். நிலவன் சற்றுச் செருக்குடன் நடந்து கொண்டாலும் தேன்மொழி நல்ல விதமாக நடந்துக் கொண்டார். எழிலனின் இரண்டு பக்கத் தாத்தா, பாட்டிகளுக்கும் தனி தனி அறை. செழியன் மலர்விழிக்குத் தனி அறை. என நன்றாகவே கவனித்துக் கொண்டனர்.
செழியன் யோசனையோடு அடுத்த நாள் ரிசப்ஷன் வரும் நிலாவின் குடும்பத்தினருக்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு வைத்தார்.
எழிலன் திருமண இரவைப் பற்றிப் பெரிதாக எதுவும் செய்ய வேண்டாம் எனக் கூறிவிட, இயல்பாக நிலாவின் படுக்கை அறைக்குச் சென்றனர் இருவரும்.
அங்கே எழிலன் சுற்றிப் பார்த்துவிட்டு, இரவு உடைக்கு மாறிக் கொண்டான். நிலாவிடமும் நீயும் மாற்றிக் கொள் எனக் கூற, நிலாவும் மாத்திவிட்டு வந்தாள். அவளின் அறையின் உள்ளேயே உடை மாற்றும் அறை தனியாக இருந்தது.
நிலா வருவதற்குள் எழிலன் தன்னுடைய போனில் “இது மௌனமான நேரம் . . இள மனதில் என்ன பாரம்” பாடலை ஒலிக்க விட்டான்.
பாடலோடு தானும் பாடி, நிலாவினை ஆட்கொண்டான் எழிலன். நிலாவும் அதற்கு உடன்பட்டாள்.
-தொடரும்-
error: Content is protected !!