தேன் சிந்துமோ மேகம்-19
அத்தியாயம் – 19
செழியன் வந்ததும் மலர்விழி நடந்ததைக் கூற, எழிலனை அழைத்து நன்றாகத் திட்டி விட்டார். உடனே சென்று நிலாவை அழைத்துவரக் கூறினார். ஆனால் எழிலன் மறுத்து விட்டான். இன்னும் அவளுக்குப் பொறுப்பு வரவேண்டும் எனக் கூறினான்.
செழியன் எழிலனிடம் உனக்கு மட்டும் மெச்சூரிட்டி இருக்கா எனக் கேட்டு வாங்கு வாங்கு என வாங்கிவிட்டார்.
நிலாவின் வீட்டிலும் தேன்மொழி அண்ணன், தங்கை இருவருக்கும் சரியான மண்டகப்படி வைத்தார். பின் நிலா சில நாட்கள் இங்கே இருக்கட்டும் நாமே கொண்டுவிடலாம் எனக் கூறினார்.
Advertisement
முதலில் சில நாட்கள் இருக்க மட்டுமே வந்த நிலா, கருவுற்றச் சேதி அறிந்ததும், நிலவன் அவள் டெலிவெரி வரை இங்கே தான் என்று விட்டான்.
எழிலனுக்கு இந்த செய்தி போனதும், ஒருபக்கம் சந்தோஷமும், இன்னொரு பக்கம் தன்னைக் குறித்து வெட்கமும் வந்தது. இருபத்தி ஒரு வயதில் நிலாவிற்கு பொறுப்புகள் அதிகம் கொடுக்கிறோமே எனத் தோன்றியது.
எழிலனின் தாத்தா, பாட்டிகள், பெற்றவர்கள் என எல்லோரும் வந்து நிலாவைப் பார்த்து விட்டுச் சென்றனர். அவளின் உடம்பு வீக்காக இருக்கவே, நிலா அழைக்கழிக்க வேண்டாம் என்றுவிட்டனர்.
Advertisement
எழிலன் மட்டும் வரவேயில்லை. நிலாவின் போனிற்கு மட்டும் ‘தங்க நிலவுக்குள் நிலவு ஒன்று’ பாடலைப் பாடி அனுப்பி வைத்தான்.
Advertisement
அதற்கு பிறகு சில தாலாட்டுப் பாடல்களில் பரிந்துரைகள் மட்டுமே. நிலாவைப் பார்க்கத் தோன்றினால், அவளின் செக்கப் செல்லும் நாட்களில் சரியாக மருத்துவ மனைக்கு வந்துவிடுவான் எழிலன்.
நிலாவின் வளைகாப்பை சென்னையிலேயே வைக்க, அதற்கும் நேராக மண்டபத்திற்கு வந்துவிட்டான். நிலாவின் வீட்டிற்குச் செல்லவில்லை. நிலாவிடம் எதுவும் பேசுவதில்லை. மலர்விழி அவளை வருத்தப்படுத்தும் எதுவும் பேசக் கூடாது எனக் கண்டிப்பாக எழிலனிடம் கூறியிருந்தார்.
எழிலனிற்கு பயமாக இருந்தது. தான் எதுவும் பேசினால் நிலா டென்ஷன் ஆகி விடுவாளோ என. அதனால் அவளிடம் பேசுவதில்லை.
Advertisement
நிலாவிற்கு பிரசவ நாள் நெருங்கியது. இரு பாட்டிகள் உட்பட திருச்சியிலிருந்து எல்லோரும் வந்துவிட்டனர். நிலா நல்லபடியாகப் பெண் குழந்தை பெற்று எடுக்க, எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி.
நிலவன் அந்த மருத்துவமனைக்கே இனிப்புகள் கொடுத்துக் கொண்டாடினான். போதாதற்கு பெரிய தொகை செக் ஒன்றும் கொடுத்தான். அதுவே நல்ல பெரிய மருத்துவமனை தான். பிரசவ பில்லேப் பெரிதாகத் தான் வரும். இது வேறா என நினைத்தாலும் எதுவும் சொல்லாவில்லை.
எழிலன் முதலில் இங்கே பார்க்க மறுத்தாலும், நிலாவின் மனதிற்கு எது நல்லதோ அங்கேயே பார்க்கட்டும் என்று விட்டார்கள் அவனின் வீட்டுப் பெரியவர்கள்.
எழிலனும் தெரிந்தவர்களுக்கு எல்லாம் இனிப்பு கொடுத்து மகிழ்ந்தான். குழந்தைக்குப் மஞ்சரி எனப் பேர் செலக்ட் செய்து எழிலன் நிலாவிற்கு மீண்டும் மெசேஜ் அனுப்பினான். நிலாவும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. நிலவன் வேறு ஏதோ பெயர் சொல்ல, தேன்மொழி அவனை அடக்கினார்.
குழந்தை மஞ்சரிக்கு ஐந்தாம் மாதம் ஆனதும் எழிலன் வீட்டினர் அழைத்தனர். அப்போது தான் நிலா ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள்.
நிலா எழிலனிடம் எதுவும் கேட்காமல், சென்னை கல்லூரியில் முதுகலைப் படிப்பிற்கு விண்ணப்பம் செய்து விட்டதாகக் கூறினாள். எழிலனுக்கு மீண்டும் கோபம் வந்தது. அன்றைக்கு மட்டும் நிலாவின் வீட்டிற்கு வந்தான்.
“நிலவழகி, ஏன் எதுவும் சொல்லாம, இங்கே ஜாயின் பண்ணின?” எனக் கேட்டான் எழிலன்.
நிலா நிதானமாக “நான் டாடி லிட்டில் பிரின்ஸஸ் தான். ஆனால் எனக்கும் சில எண்ணங்கள் உண்டு. சும்மா பொழுது போக்கிற்காக ஹிஸ்டரி எடுத்துப் படிக்கலை. அதில் நிறையப் பிடிச்சு தான் படிச்சேன். ஒரு வருஷம் பிரேக் எடுத்துட்டேன். இனிமேல் நான் படிக்கப் போறேன்” என்றாள்.
எழிலனுக்கு நிலாவின் மனது இப்போதுதான் புரிந்தது. தனது பேச்சுக்கள் அவளை இந்த அளவுக் காயப்படுத்தி இருக்கிறதா என யோசித்தான்.
“சரி. நீ மேலே படி. ஆனால் அங்கே வா. நம்ம காலேஜ்லே ஜாயின் பண்ணு” என்றான் எழிலன்.
“இல்லை சரியா வராது. ஃபர்ஸ்ட் அத்தை வேலைக்குப் போறாங்க. பாட்டி வயசுக்கு குழந்தையைப் பார்த்துக்கிறது கஷ்டம். அடுத்து எல்லாரும் ஒரே காலேஜ்லே இருந்தா பின்னாடி லீவு தேவைப்பட்டாக் கஷ்டமாகிடும். அதனால் நான் இங்கேயே படிக்கிறேன்” என்றாள் நிலா.
எழிலனுக்கு அப்போதுதான் சண்டை நடந்த நாள் என்னவெல்லாம் பேசியிருக்கிறோம் என நினைவு வந்தது. மிகவும் வருத்தமாகப் போய்விட்டது.
“ம். அப்போ குழந்தையோட நீ இங்கே இருக்கப் போறே இல்லியா?” எனக் கேட்டான்.
நிலா அமைதியாக இருக்க, எழிலன் பெருமூச்சு விட்டான். “எனக்கும் குழந்தை கிட்டே உரிமை இருக்குனு தெரியுமா?” எனக் கேட்டான்.
நிலாவோ “ம். ஆனா இப்போ அவளுக்குத் தேவையானதை நான் தான் கொடுக்க முடியும்” எனப் பதில் கூறினாள்.
எழிலன் சிறிது நேரம் யோசித்து விட்டு “உன் விருப்பத்திற்கு சம்மதிதிக்கிறேன். ஆனால் அப்போ அப்போ குழந்தையை நம்ம வீட்டுக்கு அழைச்சுட்டு வரணும். இல்லைனா, அதை நான் வேறே மாதிரி ஃபேஸ் பண்ணுவேன். அதோட உனக்கு எப்போ அங்கே வரணும்ணு நினைச்சாலும் நீ அங்கே வரலாம். அது எழிலன் வீடு மட்டுமில்லை. நிலா, மஞ்சரிக்கும் என்னிக்கும் அதுதான் நிரந்தர வீடு” எனக் கூறிவிட்டுக் கிளம்பிவிட்டான்.
நிலா மேலே இங்கே படிக்கப் போவதாகச் சொன்னதும் தேன்மொழி லேசில் சம்மதிக்கவில்லை. எழிலன் சென்று மலர்விழியிடம் கூறியிருக்க, அவர் தான் எல்லோரையும் சமாதானம் செய்தார்.
நிலவனுக்கு மட்டும் அதில் மட்டற்ற மகிழ்ச்சி. தன் தங்கை மீண்டும் தங்களோடு இருப்பாள். கூடவே ஒரு குட்டி தேவதையும் இருப்பாள் எனவும் வீட்டையே தலைகீழ் ஆக்கினான்.
நிலாவோ, குழந்தையோ ஏறி இறங்கி கஷ்டபடக் கூடாது என, கீழே அவர்களுக்கு ஏற்றவாறு ரூம் ரெடி செய்தான். கண்ணுக்குள் இமையாக இருவரையும் பாதுகாத்தான்.
நிலாவின் அப்பா எழிலனின் ஊரான திருச்சிக்கு வர மிகவும் யோசிப்பார். சென்னை மட்டும் தான் வசதியான ஊர் எனவும், திருச்சியில் வசதியே இல்லாதது போலவே பேசுவார்கள். தேன்மொழி மட்டுமே இருவருக்கும் பாலமாக இருந்தார்.
எழிலனும் அன்றைக்கு நிலா வீட்டிலிருந்து கிளம்பி வந்த பின், மீண்டும் நிலாவைத் தொடர்பு தொடர்பு கொள்ளவில்லை. அவ்வப்போது தாலாட்டுப் பாடல்கள் பாடி அனுப்பி வைப்பது மட்டும் செய்வான். அதை நிலாவும் குழந்தைகக்குப் போட்டு விடுவாள்.
மஞ்சரிக்கு ஏழாம் மாதம் நடக்கும்போது நிலா கல்லூரி செல்ல ஆரம்பித்தாள். அவ்வப்போது சில உடல் உபாதைகள் இருந்தாலும், நிலா அதை மீறிச் சென்றுக் கொண்டிருந்தாள்.
மஞ்சரியின் முதல் பிறந்தநாள் திருச்சியா, சென்னையா என சண்டை ஆரம்பிக்கும் நேரம், சிவஞானம், வேலன் இருவரும் கிராமத்திற்கு வரவழைத்தனர். இரு பக்க உறவுகள், நட்புகள் எல்லோருக்கும் அங்கே வரவே அழைப்பு அனுப்பபட்டது. அப்போது நிலா சென்னையில் ஏன் படிக்கிறாள் எனப் பேச்சு வந்தபோது, மலர்விழி வேலைக்குச் செல்வதால், குழந்தையைப் பார்த்துக் கொள்ள நிலாவின் அம்மாவால் தான் முடியும். அதனால் நிலா அங்கே படிக்கிறாள் எனக் கூறிவிட்டனர்.
செழியன், மலர்விழி இருவருக்கும் வருத்தம் தான். ஆனால் எழிலனின் பேச்சு நிலாவைப் பாதித்து இருக்கிறது எனப் புரிந்து கொண்டனர். எழிலனும் அதை உணருகிறான் என்றும் தெரிந்தது. எழிலன் மேலும் ஒரு பிஹெச்டி முடித்தான். கல்லூரியில் இன்றியமையாதவன் ஆகினான்.
நிலாவின் படிப்பு முடிந்தாலும், இங்கே கொஞ்சநாள் வேலைப் பார்க்கிறேன் என மலரிடம் பேசி சம்மதம் வாங்கி விட்டாள் நிலா. இதை நிலவன், எழிலன் இருவருமே எதிர்பார்க்கவில்லை. எழிலன் கூட சரி என்று விட்டு விட்டான். நிலவன் வீட்டில் பெரிதாகச் சண்டையிட்டான்.
பின் நிலாவும் கோபமாகப் பேசி, கெஞ்சி நிலவனின் சம்மதம் வாங்கினாள். இதோ வேலையில் சேர்ந்தும் இரண்டு வருடங்கள் ஓடி விட்டது.
இப்போது எல்லாம் நிலா யோசிக்கிறாள் தான். ரொம்பவும் தான் வீம்பு பிடிக்கிறோமோ என்று. எழிலன் பேசியதை உணர்ந்தான் என்றால் பரவாயில்லை. ஆனால் அவனோ எதுவும் பேசாத போது என்ன செய்வது என்று விட்டுவிட்டாள்.
எழிலனுக்கும் கொஞ்ச நாளாக தனது அழகியின் நினைப்பு தான். கூடவே குழந்தையின் பேச்சும், விளையாட்டும் பார்க்கப் பார்க்கப் போதும் எனத் தோன்றவில்லை. இனியும் இருவரையும் தனியாக விட்டால் சரியாக வராது என நினைத்துக் கொண்டிருந்தான்.
சரியாக அதே நேரம் செழியன், மலர்விழி பேசவே இதோ சென்னை வந்துவிட்டான்.
எழிலன் சென்னை வந்ததற்கு காரணம் நிலவன் தான். மாதம் ஒருமுறை பார்க்கும் தனக்கே குழந்தையை அவ்வளவுத் தேடும்போது, நிலவன் தினமும் பார்க்கிறான். நிலாவை அதட்டி அவனின் பாசத்தைக் காட்டியவன், குழந்தையிடம் தணிந்து நின்றதைப் பல நேரங்களில் எழிலனே உணர்ந்தான். அதனால் சட்டென்றும் குழந்தையோடு கிளம்பினால் நிலவன் தவித்துப் போவான் என்றுதான் இரண்டு வருடங்கள் சென்னையில் வேலைப் பார்க்க வந்திருந்தான். எழிலன் வீட்டினருக்கும் இதில் சம்மதமே.
நிலாவைக் கல்லூரியில் சந்தித்தாலும் இருவருடைய மரியாதையை காக்கும் முன்னிட்டு, ஓரளவிற்கு மேல் பெர்சனல் விஷயங்கள் பேச முடியாது. கல்லூரிக்குச் சென்று திரும்பும் வழியில் சந்தித்து அடுத்த கட்டத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும் என யோசித்தான் எழிலன்.
அடுத்து தனது மகள் மஞ்சுவை அடிக்கடி பார்க்கலாம். இதுவரை குழந்தையைச் சந்திக்க மற்றவர் தயவு எதிர்பார்க்க வேண்டும். என்ன தான் நிலாவின் பெற்றோர் மஞ்சுவைச் சந்திக்க அனுமதித்தாலும், அவர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு தான் சந்திப்பு நடக்கும். அதற்கே எழிலன் நிலவனுடன் பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. அதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் சென்னைக்கு வந்தான் எழிலன்.
நிலாவும், எழிலனும் மட்டுமல்ல நிலவனும் எல்லாமே நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
-தொடரும்-
