Skip to content
Post Views: 168
நான்கு வருடங்களுக்கு பிறகு….
விஜய சிவமாறனின் இல்லமானது விழாக்கோலம் பூண்டிருந்தது. வண்ண வண்ண பூக்களால் இல்லம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுற்றி எங்கும் சொந்தங்களின் பேச்சு சத்தங்களும், குழந்தைகளின் விளையாட்டு சத்தங்களும் மட்டுமே ஒலித்து கொண்டிருக்க அதைவிட அதிகமாய் பத்து வயது பாலகனின் குரல் இல்லத்தின் எட்டு திசைகளிலும் ஒலித்து கொண்டிருந்தது. அவன் வேறு யாரும் அல்ல, சுருள் முடி அழகன் ஆதவ் கிருஷ்ணன் தான்.
Advertisement
தன் கன்னக்குழி சிரிப்பில் மற்றவரை மயக்கிய மாய கண்ணனோ தன் பரு பாட்டியின் அறைக்குள் வேகமாக சென்று
“பருஸ் எவ்வளவு நேரம் கிளம்புவீங்க? டைம் ஆச்சு சீக்கிரம் ரெடியாகுங்க…. ராணி பாட்டி ஆறுமுகம் தாத்தா எங்க? சமையல் அண்ணா அவரை கூப்பிட்டாரு….” என்று ஆதவ் கிருஷ்ணன் வினவ
Advertisement
Advertisement
“உன் ஆறுமுகம் தாத்தா முன்னாடியே அங்க போயிட்டாரு கண்ணா” என்று ராணி கூற
“நீ எங்களை கிளப்புறதை விட்டுட்டு போய் உன் பன்னு மாமா கிளம்பிட்டாரா பாரு….” என்று கூறியவாறு பருவதம்மா தயாராகி கொண்டிருக்க, அவர்களை கண்டு சிரித்தவன்
Advertisement
“ரெண்டு பேருக்கும் மேக்கப் போடவே நேரம் சரியா இருக்கு, எல்லா வேலையும் நான் தான் பார்க்குறேன்….” என்று ஆதவ் கிருஷ்ணன் சலித்தவாறு கூற, அதை கேட்டு இருவரும் அவனை முறைக்க, அவர்களை கண்டு கன்னக்குழி தெரியும் அளவிற்கு அழகாக சிரித்தவன் அவ்விடத்திலிருந்து சிட்டாக பறந்துவிட்டான்.
அறையிலிருந்த கண்ணாடியின் முன்பு நின்றிருந்த நீலவேணி தன் புடவை முந்தானையை சரிசெய்தவாறு தயாராகி கொண்டிருக்க, அவளை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான் இன்பன். தன்னவனின் காதல் பார்வையினது வீச்சினை தாங்கும் சக்தியற்றவள் கண்ணாடியின் வழியை அவனை பார்த்தவாறு தன் புருவங்களை உயர்த்தி என்னவென்று வினவ, தன்னவளை கண்டு அழகாக சிரித்தவன்
“அழகூரில் பூத்தவளே.. என்னை அடியோடு சாய்த்தவளே….” என்று பாட ஆரம்பித்த அந்நொடியே அவன் மடியில் படுத்திருந்த இன்பன் மற்றும் நீலவேணியின் ஆறு மாத வயது நிரம்பிய நிரூபன் அழ ஆரம்பிக்க, அவனை கண்டு நீலவேணியும் அறைக்குள் நுழைந்த ஆதவ் கிருஷ்ணனும் சத்தமாக சிரித்து கொண்டிருந்தனர்.
அறைக்குள் நுழைந்த ஆதவ் கிருஷ்ணனை கண்டு அதிர்ந்தவன்
“ஐயோ, இவன் முன்னாடியே நம்ம மானம் போகனும்…. எல்லார் கிட்டயும் டமார் அடிச்சிடுவானே….” என்று இன்பன் தன் மனதில் நினைத்து வருந்தி கொண்டிருக்க, அவன் மனதில் நினைப்பதை அறிந்தவன் போல்
“கவலைப்படாத பன்னு, யார் கிட்டயும் சொல்லமாட்டேன்….” என்று ஆதவ் கிருஷ்ணன் கூறியவாறு நிரூபனை கொஞ்ச ஆரம்பிக்க, அவன் கூறியதை கேட்டு சிரித்த நீலவேணியை இன்பனாத் முறைக்க மட்டுமே முடிந்தது.
“வேணி அத்தை, கிளம்பிட்டீங்களா? என் மொசக்குட்டி எங்க?” என்று ஆதவ் கிருஷ்ணன் வினவ
“ஆத்து குட்டி….” என்று தன் மழலை மொழியில் ஆதவ் கிருஷ்ணனை அழைத்தவாறு அவ்விடத்திற்கு வந்திருந்தாள் இன்பன் மற்றும் நீலவேணியின் மூன்று வயது மகள் இளமொழி.
இளமொழியை கண்டு அழகாக சிரித்தவன்
“அடடா, என் மொசக்குட்டி பாவாடை சட்டையில இன்னிக்கு ரொம்ப அழகா இருக்காங்களே….” என்று கூறியவன் தன்னெதிரில் அமர்ந்திருந்த இன்பனிடம்
“பன்னு மாமா, நீ ஏன் இன்னும் கிளம்பாம பனியனோட உட்காந்திருக்க? சீக்கிரம் கிளம்பு, ஃபங்க்ஷனுக்கு லேட்டாகுது….” என்று ஆதவ் கிருஷ்ணன் கோபமாக வினவ, அவனை இன்பன் தீயாக முறைத்து கொண்டிருந்தான்.
“ஏன் பன்னு முறைக்கிற?” என்று ஆதவ் கிருஷ்ணன் சந்தேகமாக வினவ, அவனை கண்டு சிரித்தவள்
“அது ஒன்னுமில்ல ஆது கண்ணா, உன் பன்னு மாமா ஒருமணிநேரத்துக்கு முன்னாடியே கிளம்பிட்டாரு ஆனா நிரூபன் அவங்க மேல பாத்ரூம் போயிட்டான் இப்போ குளிச்சிட்டு மறுபடியும் கிளம்பனுமே அதான் முறைக்கிறாரு….” என்று நீலவேணி கூறியதை கேட்டு சிரித்தவன் இன்பனின் மடியிலிருந்த குழந்தையை செல்லம் கொஞ்சியவாறு
“டேய் சின்ன பன்னு, பன்னு மாமா மேல பாத்ரூம் போனீங்களா? நம்பர் ஒன்னா? நம்பர் டூவா பன்னு?” என்று ஆதவ் கிருஷ்ணன் அதிமுக்கிய கேள்வியை வினவ
“இது ரொம்ப முக்கியம் பாரு? என்னைய உன் ஆத்தா பன்னுன்னு கூப்பிட்டு உனக்கு பழகிவிட்டா, இப்போ நீ என் புள்ளையை சின்ன பன்னுன்னு கூப்பிட்டு இந்த வீட்டிலிருக்க எல்லாரையும் பழகிவிடுற? போடா பப்பாளி, போய் உன் ஆத்தாளும் அப்பனும் ரெடியாகிட்டாங்களா பாரு….” என்று இன்பன் கோபமாக கூறிய கூற்றை கேட்டவன் தன் பன்னு மாமா கன்னத்தில் முத்தம் பதித்துவிட்டு அவனின் மொசக்குட்டியை அழைத்து கொண்டு அங்கிருந்து சென்றுவிட, அவன் செயலை கண்ட இன்பன் சிரித்து கொண்டிருந்தான்.
தன் புடவை முந்தானையை சரிசெய்தவள் தனது காலுக்கு கீழ் அமர்ந்திருந்தவனிடம்
“கல்யாணமாகி அஞ்சு வருஷமாகுது, ஒழுங்கா ஒரு ஃபீலீட் வைக்க தெரியுதா? அச்சச்சோ அது இல்ல இதை புடி…. டேய் ஒழுங்கா புடி டா….” என்று ஆழினி கூறியதை கேட்டு அவளை பாவமாக பார்த்தவன்
“செல்லம்மா, கொஞ்சம் பொறுமையா கூப்பிடும்மா…. ஊருக்குள்ள உன் புருஷனுக்கு பெரிய மரியாதை இருக்கு எல்லாத்தையும் நம்ம ரூம் உள்ள வச்சிக்கோ வெளிய இப்படி கூப்பிடாத என் மானம் கப்பல் ஏறிடும்….” என்று கூறிய விஜய சிவமாறனை கண்டு அழகாக சிரித்தவள் கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தை கண்டுவிட்டு
“மாறா…. நான் குண்டாகிட்டேனா?” என்று ஆழினி சோகமாக வினவ, அவளது புடவையை சரி செய்துவிட்டு எழுந்தவன் தன்னவளின் இடையை பற்றி தன்னருகில் வேகமாக இருத்திருந்தான்.
விஜய சிவமாறன் இழுத்த வேகத்தில் அவன் நெஞ்சோடு மோதி நின்றவளின் வெற்றிடையில் தன் கரங்களால் ஊர்வலம் நடத்தியவனின் செயலால் நெளிந்தவாறு
“மாறா…. என்ன பண்றீங்க? விடுங்க….” என்று கூறிய ஆழினியின் முகம் நாணத்தில் அந்திவானமாய் சிவக்க ஆரம்பிக்க, அவளது நாணத்தை இரசித்தவன் தன்னவளின் இடையை அழுத்தமாக கிள்ளி வைத்துவிட்டான்.
அவளவனின் செயலால் துடித்தவள் அவனிடமிருந்து வேகமாக விலக்கிவிட்டு தன்னெதிரிலிருப்பவனை தீயாய் முறைக்க, அவளை கண்டு சிரித்தவன்
“நல்லா செக் பண்ணிட்டேன் செல்லம்மா, அப்படியொன்னும் நீ குண்டாகவேயில்ல…. எதுக்கும் நான் மறுபடியும் செக் பண்ணவா?” என்று கூறியவன் அவளருகில் வேகமாக வர, அச்சமயத்தில் விஜய சிவமாறனின் ஒன்றரை மாத ஆண் குழந்தை வீரிட்டு அழ ஆரம்பித்துவிட்டது.
தன் மகன் அழும் சத்தத்தை கேட்டு சலித்தவன்
“அழ ஆரம்பிச்சிட்டானா? உன் அம்மா கிட்ட போனா போதும் உடனே உனககு மூக்கு வேர்த்துடுமே…. இவன் ஸ்டார்ட் பண்ணா இந்நேரம் என் பொண்ணும் ஸ்டார்ட் பண்ணியிருக்காங்களே?” என்று விஜய சிவமாறன் கூறி முடிக்கவும், சிறிது நொடிகளுக்கு முன்பு அழுதவனின் இரட்டை சகோதரியும் அழ தொடங்கியிருந்தாள்.
இன்று விஜய சிவமாறன் மற்றும் ஆழினியின் இரட்டை செல்வங்களுக்கு பெயர் சூட்டும் விழா நடைப்பெறவிருக்கிறது. அதற்காக தான் ஆதவ் கிருஷ்ணன் அனைவரையும் தயாராக கூறி வீட்டையே இரண்டாக்கி கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் ஆதவ் கிருஷ்ணனும் இளமொழியும் அறைக்குள் நுழைய, அவர்களுடன் தன் ஒன்றரை மாத மகள் மற்றும் மகனையும், பத்து வயது மகனையும், மூன்றரை வயது மருமகளையும் அவர்களுடன் தன் காதல் மனைவியையும் அழைத்து கொண்டு இல்லத்தின் கூடத்திற்கு வருகை புரிந்திருந்தான் விஜய சிவமாறன்.
தன் தம்பி மற்றும் தங்கைக்கு தான் தான் பெயர் சூட்டுவேன் என்கிற பெரிய பொறுப்பை ஏற்ற ஆதவ் கிருஷ்ணனும் அவர்களின் காதில் மூன்று முறை பெயர் கூற தொடங்கியிருந்தான்.
“சிற்பிகா தேவி.. சிற்பிகா தேவி.. சிற்பிகா தேவி….” என்று தன் தங்கையின் காதுகளிலும்
“சித்தார்த் தேவன்.. சித்தார்த் தேவன்.. சித்தார்த் தேவன்….” என்று தன் தம்பியின் காதுகளில் தன் கன்னக்குழி சிரிப்பில் அழகாக கூறிய ஆதவ் கிருஷ்ணனின் சூட்டிய பெயர் கேட்டு அங்கிருந்த அனைவரும் உற்சாகமாக கைத்தட்டி சிரித்தனர்.
இரவின் ராணி பௌர்ணமி நிலவவள் இருளை நீக்கி ஒளி வீசி கொண்டிருக்க, இங்கு விஜய சிவமாறன் மற்றும் ஆழினியின் படுக்கை அறையில் ஆதவ் கிருஷ்ணன், இளமொழி, சிற்பிகா தேவி, சித்தார்த் தேவன், நிரூபன் என அனைத்து குழந்தைகளும் ஆஜராகியிருந்தனர். ஆதவ் கிருஷ்ணன் மட்டுமல்லாது இரவு நேரம் வந்தால் மற்ற குழந்தைகள் அனைவருக்கும் ஆழினியின் பாடலை கேட்காது தூக்கம் வாராது. தன் கண்களை மூடி மெத்தையில் படுத்திருக்கும் குழந்தைகளை இரசித்தவள் தன்னருகில் அமர்ந்திருந்த தன்னவனின் நெஞ்சில் சாய்ந்து இடது புறத்திலிருக்கும் தன் பெயர் ‘செல்லம்மா’வின் மீது மென்மையாக இதழ் பதித்தவள் பாடலை பாட தொடங்கியிருந்தாள்.
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை..
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை..
எதை நான் கேட்பின்.. உனையே தருவாய்..
எதை நான் கேட்பின் உனையே தருவாய்
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா்க் கேட்டேன் அமிர்தம் தந்தனை….
என்ற பாடலை ஆழினி பாடி முடித்ததும் அனைத்து குழந்தைகளும் உறங்கிவிட, தன் தோள்களில் சாய்ந்தவளை தன்னுள் இறுக்கமாக அணைத்து கொண்டான் விஜய சிவமாறன்.
விஜய சிவமாறனும் ஆழினியும் தங்களின் இல்லற வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை காதலாலும் புரிதலாலும் அழகாக வடிவமைத்து கொண்டிருக்கின்றனர். திருமணத்தின் தொடக்கத்தில் இருந்த தயக்கங்களும், மனக்கசப்புகளும், ஒருவரையொருவர் புரிந்துகொள்ள எடுத்த முயற்சிகளின் முன்னால் மெல்ல மெல்ல கரைந்து மறைந்திருந்தன.
இன்று அவர்கள் இருவரின் வாழ்க்கை, வெறும் கணவன் மனைவி என்ற உறவைத் தாண்டி, ஒருவரின் மகிழ்ச்சியில் மற்றொருவர் மகிழவும், ஒருவரின் வலியை மற்றொருவர் தாங்கவும் தெரிந்த ஆன்மார்த்தமான துணைகளின் பயணமாக மாறியிருந்தது. வார்த்தைகளால் மட்டுமல்ல, சிறு சிறு அக்கறைகளாலும், பார்வைகளாலும், மௌனங்களாலும் கூட தங்களின் அன்பை வெளிப்படுத்த கற்றிருந்தனர்.
விஜய சிவமாறனின் ஒவ்வொரு நாளிலும் ஆழினி தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டாள். அதேபோல், ஆழினியின் உலகமும் விஜய சிவமாறனை மையமாகக் கொண்டு இனிதே சுழல தொடங்கியிருந்தது. அவர்களுக்கிடையே மலர்ந்த காதல், ஒவ்வொரு நாளும் புதிய வண்ணம் பூசி, இல்லற வாழ்க்கையை இன்னும் இனிமையாக்கி கொண்டே இருக்கிறது.
அந்த அன்பும் புரிதலும் கலந்த இல்லற பயணத்தில், இருவரின் மனங்களிலும் இனி இருளுக்கு இடமில்லை. ஒருவருக்கொருவர் ஒளியாகவும், நம்பிக்கையாகவும், வாழ்நாள் முழுவதும் இணைந்து பயணிக்கும் உயிராகவும் அவர்கள் மாறியிருந்தனர்.
விஜய சிவமாறன் மற்றும் ஆழினியின் காதலும் புரிதலும் இன்றும் போல் என்றும் வளர நாமும் வாழ்த்தி விடைப்பெறுவோம்
ஒளி வீசியது….
error: Content is protected !!