Skip to content
Post Views: 130
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை.
விடுமுறை!
மெதுவாக எழுந்தால் போதும் என்று படுக்கையை விட்டு எழாமலே இருந்தாள் கவி.
வேகமாக எழுந்து செய்ய வேண்டிய காரியம் என்று ஒன்றும் இல்லை.
Advertisement
எனவே வழக்கம் போல ஆறு மணிக்கு எழுந்தவள் பல் துலக்கி முகம் கழுவி விட்டு வந்து வீட்டின் முன் கேட்டை மட்டும் திறந்து வைத்து விட்டு மீண்டும் வந்து படுத்துக் கொண்டாள்.
வாசல் தெளிக்கும் தெய்வானை வந்து காம்பவுண்ட் கேட்டிற்கு வெளியேயும், அதைக் கடந்து வந்து வீட்டின் முன் வாசலையும் பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போட்டு விட்டு போய் விடுவாள்.
பின் ஏழு மணி வாக்கில் மீண்டும் வந்து வீட்டில் இருக்கும் கழுநீர் பக்கெட்டை எடுத்துக் கொண்டு வேறு ஒன்றை வைத்து விட்டு போவாள்.
Advertisement
அவள் வந்து செல்வதற்காக கேட்டை மட்டும் திறந்து வைத்து விட்டு கட்டிலில் படுத்த கவிக்கு மீண்டும் தூக்கம் வரவில்லை.
Advertisement
அதற்கு பதில் நேற்று நந்தினி கேட்ட கேள்வியே மீண்டும் காதில் கேட்டது.
மற்றவர்கள் மாதிரி வம்பு பேசவென்று அவள் கேட்கவில்லை என்றாலும், அந்த கேள்வி அவளை போன வருடம் அவளது வாழ்க்கையில் ஒரு மின்னல் போல நடந்து மின்னல் போலவே நடந்து முடிந்து விட்ட அவளது திருமண வாழ்வைப் பற்றி நினைக்க வைத்தது.
—–
Advertisement
“கவி சரின்னு சொல்லுடி.. மாப்பிள்ளை வீட்டுல கொஞ்சம் அவசரப்படுறாங்க. இப்ப பண்ணலைன்னா அப்புறம் ஆறு ஏழு வருஷம் ஆகுமாமாம்!
மாப்பிள்ளைக்கு ஜாதகத்தில் ஏதோ அப்படி கட்டங்கள் இருக்காம்.
அவங்க அம்மாவுக்கு வேற உடம்பு சரியில்லையாம்!
அவங்களுக்கு ஏதாச்சும் ஆகுறதுக்கு முன்னாடி பையன் கல்யாணத்தை நடத்தி பார்த்திடனும்னு ஆசைப் படுறாங்க.
பாவம்டி.. அந்த அம்மாவும். என்னை மாதிரியே புருசனை இழந்துட்டு தனியாளா நின்னு மகனை வளர்த்து படிக்க வச்சு ஆளாக்கி இருக்காங்க.
ஒத்துக்கோடி கவி.. “ கவியின் அம்மா அவளை கெஞ்சல் குரலில் வற்புறுத்தினார்.
“அம்மா புரிஞ்சுக்கோ. கவின் இன்னும் படிச்சு முடிக்கல. அவன் படிச்சு முடிச்சு ப்ராக்டிஸ் பண்ணி கொஞ்சம் சம்பாதிக்க ஆரம்பிச்ச பின்னே நான் கல்யாணம் பண்ணிக்கிறேனே! நான் என்ன கல்யாணமே வேண்டாம்னா சொல்றேன்!”
கவியின் அப்பா கல்வித்துறை அதிகாரியாக இருந்தார். பணிக் காலத்தின் போதே அவர் இறந்து விட்டதால், அவள் குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு அடிப்படையில் வேலை கிடைக்கவிருக்க, அப்போது ஆசிரியர் தகுதி தேர்வு பாஸாகி வேலைக்கு காத்திருந்த கவிக்கு அது தரப்பட்டது!
அப்போது கவின் பள்ளி இறுதி மாணவன் மட்டுமே. அதனால் கவிக்கு அரசு ஆசிரியை வேலை கிடைத்தது.
அப்பா வேலையை தான் வாங்கி கொண்டு விட்டதால், தம்பி படிப்பு முடிந்து கொஞ்சம் செட்டில் ஆன பின்னே தான் தனது திருமணம் என்று இருந்தாள் கவி!
ஆனால் மாப்பிள்ளையின் அம்மா செண்பகம் ஒரு பிடிவாதக்கார பெண்மணி! தான் நினைத்தால் நினைத்தை சாதித்தே ஆக வேண்டும் என்ற புத்தி உடையவர்!
அவருக்கு கவியை மிகவும் பிடித்து விட்டது! கூடவே அவளது வேலையும் தான்!
“நான் டீச்சர் ஆகணும்னு ஆசைப்பட்டேன் முடியல. எனக்கு பொண்ணு பொறந்தா அவளையாச்சும் டீச்சர் ஆக்கி பாக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுவும் நடக்கல! எனக்கு ஒரே பையன்!
அதான் வர்ற மருமகளாவது டீச்சர் ஆக பார்ப்போம்னு பார்த்தேன்!
நான் செஞ்ச புண்ணியம் தான் கவியை என் கண்ணில் காட்டி இருக்கு! கவியாய் மருமகளா அடைய நான் கொடுத்து வச்சுருக்கணும்” என்று எல்லாம் பார் கணக்கில் கவி அம்மாவுக்கு ஐஸ் வைத்து அவரை சம்மதிக்க வைத்திருந்தார்.
கவி அம்மா, அவர் பங்கிற்கு கவியிடம் பலவிதமாக பேசி பேசி, அதற்கு பாயிண்ட்கள் கூட சம்மந்தியிடம் இரவல் வாங்கி ஒரு வழியாக கவியை சம்மத்திக்க வைத்திருந்தார்.
“அது தான் கல்யாணம் ஆன பின்னே கூட கவின் படிப்புக்கு நீ உதவலாம்னு சொல்றாங்களே சம்மந்தி அம்மா.. இந்த காலத்துல யாருக்கு இந்த மனசு வரும்?” என்று பலதும் சொல்லி கவி கல்யாணத்திற்கு தயாரானாள்.
இந்த இரண்டு அம்மாக்களும் பண்ணிய களேபரத்தில் மாப்பிள்ளை தன்னிடம் இது வரை போனில் ஒரு முறை கூட பேசியிருக்கவில்லை என்பதை கவி கவனிக்க வில்லை!
அல்லது கவியை அப்படி யோசிக்க கூட விடாமல் பெண் பார்த்த அடுத்த ஒரு வாரத்திலேயே கல்யாணமும் நடத்தி முடித்து விட்டார்.
மாப்பிள்ளையை நேருக்கு நேர் காணும் சந்தர்ப்பத்தில் ஒரு ஒற்றை சிரிப்பை மட்டுமே, அதாவது அலுவலத்தில் ஒரு புதியவரை அறிமுகப்படுத்தி வைத்தால் புன்னகைப்பது போல ஒரு சின்ன சினேக புன்னகை மட்டுமே வந்தது அவனிடமிருந்து!
மாப்பிள்ளை ரொம்ப ரிசர்வ்டு டைப் என்று பேசிக் கொண்டார்கள்.
திருமணமும் முடிந்தது.
இரவு தனிமையிலாவது பேசுவானா? அவன் பேசினால் நாம் என்ன பேசுவது? அவனுக்கு என்ன பிடிக்கும்?
உள்ளே போனவுடன் சினிமாவில் காட்டுவது போல அவன் காலில் ஏதும் விழணுமா? கவிக்கு அவள் வயதை ஒத்த நெருக்கமான தோழிகள் யாருமில்லை!
அவள் இப்படியாக யோசித்துக் கொண்டிருக்க, அங்கு நடந்ததோ வேறு!
உள்ளே போனவுடன் மாப்பிள்ளை மவுலி தான் அவள் காலில் விழுந்தான்!
அதிர்ச்சியில் கவி பின்னால் நகர்ந்தாள்!
“என்ன பண்றீங்க நீங்க?” அதிர்ச்சி மாறாத குரலில் கேட்டாள் கவி.
“என்னை மன்னிச்சுடுங்க. எங்கம்மாவுக்கு பயந்து உங்கள கல்யாணம் பண்ணி உங்க லைஃபை கெடுத்துட்டேன் நான்!”
“என்ன சொல்றீங்க நீங்க? முதல்ல எழுந்துருங்க. என்னை பிடிக்காம கல்யாணம் பண்ணிட்டீங்களா?
எனக்கும் உங்க மேல பெரிசா எல்லாம் விருப்பம் இல்லை தாங்க.
அம்மா சொல்லி தான் நானும் கல்யாணம் பண்ணி இருக்கேன்.
சரி.. பார்ப்போம். காலம் எல்லாத்தையும் மாத்திடும்.
என்னை உங்களுக்கு பிடிக்கிற வரைக்கும் நான் காத்திருக்கேன்!”
“எத்தனை வருசம் எத்தனை யுகம் ஆனாலும் என் மனசு மாறாதுங்க. ஏன்னா அது பூராவும் என்னோட பவி தான் இருக்கா!”
“பவியா யார் அது? உங்க லவ்வரா?”
“லவ்வர் மட்டுமில்ல அதுக்கும் மேலே! நாங்க ஸ்கூல் படிக்கும் போதிலிருந்தே லவ் பண்றோம்!
படிச்சு முடிச்சு இப்ப பெங்களூருக்கு வேலைக்கு போன பிறகு நாலு வருசமா லிவ்இன்ல தான் இருக்கோம்”.
“அவ்வளவு வருஷ லவ்வுன்னா, அப்ப உங்க அம்மா கிட்ட பேசி அவங்க சம்மதம் வாங்கி அவங்கள கல்யாணம் பண்ணி இருக்க வேண்டியது தானே!”
“எங்கம்மா அவள என்னோட பிரண்டா கூட அக்செப்ட் பண்ண மாட்டாங்க. பவி ஆர்ஃபனேஜ்ல வளர்ந்தவ. அம்மா வேற ரொம்ப ஜாதி பார்ப்பாங்க”.
“இருந்தா என்ன.. நீங்க ஒரே மகன். கொஞ்சம் அடம் பிடிச்சு நின்னு இருக்கலாம்ல!”
“எங்க.. அவங்க தான் என்னை பயமுறுத்தி வச்சுருந்தாங்களே!
அட்டை அட்டையா நிறைய தூக்க மாத்திரைய காமிச்சு, எல்லாத்தையும் போட்டுக்குவேன். நான் செத்தா சாகட்டும்னு நீ நினைச்சுடாத! என் சாவுக்கு காரணம் அந்த பவி தான்னு எழுதி வச்சுட்டு தான் சாவேன்னு வேற மிரட்டல்!
வயித்தில் பிள்ளையோட போலிஸ் கோர்ட்ன்னு என்னோட பவி அலைய முடியுமா சொல்லுங்க?”
“என்ன.. உங்க பவி கன்சீவா இருக்காங்களா?”
“ஆமாம் இப்ப அஞ்சு மாசம்! இப்ப கூட என் பிள்ளைய வயித்துல வச்சுகிட்டு என் கல்யாணத்தை அவ்வளவோ வேதனையோட சகிச்சுட்டு இருக்கா அவ!” சொல்லும் போதே அவன் கண்களில் கண்ணீர்!
“சரி.. அழாதீங்க. போய் படுங்க. காலையில பேசி ஒரு முடிவு பண்ணலாம்” என்று சொல்லி விட்டு கட்டிலில் போய் அயர்வாக படுத்தாள் கவி.
ஒரே நாளில் தன் திருமண வாழ்க்கை இப்படி முடிந்து போன வருத்தம் அவளை உள்ளுக்குள் அழுத்தியது!
இனி என்ன செய்ய? கேள்வி வேறு அவளை துளைக்க, அந்த மவுலி சோபாவில் போய் படுத்துக் கொண்டு போனில் ஏதோ டைப் செய்து கொண்டிருந்தான்.
கவி அம்மாவை எப்படி சமாதானம் செய்வது என்று யோசித்து குழம்பி கொண்டிருந்தாள்.
பக்கத்தில் அந்த மவுலி வந்து நிற்பது தெரிந்து எழுந்து உட்கார்ந்தாள்!
என்ன என்பது போல பார்த்தவளிடம் அவனது போனை நீட்டினான்!
“பவி உங்க கிட்ட தேங்க்ஸ் சொல்லணுமாம். வீடியோ காலில் இருக்காள்!”
வாங்கினாள். என்ன பேசுவது அவளிடம் போய்?
வெறுமனே பார்த்தாள்.
அந்த பவி தான் மேடிட்ட வயிற்றோடு போன் திரையில் வந்தாள்.
“ரொம்ப தேங்க்ஸ்ங்க. அப்புறம் ரொம்ப ரொம்ப சாரி. அவங்க அம்மா மிரட்டலுக்கு பயந்து செல்ஃபிஸா யோசிச்சு உங்க லைஃபை கெடுத்துட்டோம் எல்லோருமா சேர்ந்து.
ஆனா ப்ளீஸ் உங்க கெஞ்சி கேட்டுகிறேன். எங்கள சபிச்சுடாதீங்க ப்ளீஸ்.. “பவி கையெடுத்து கும்பிட்டாள்.
“ஏங்க.. என்னாங்க நீங்க.. எனக்கு வருத்தம் தான்! இப்ப என்னோட வாழ்க்கை கேள்விக் குறி தான்! அடுத்து என்ன செய்ய போறேன்னு தெரியல தான்!
ஆனா அதுக்காக உங்கள சபிக்கவெல்லாம் மாட்டேன்! பயப்படாதீங்க! எத்தன மாசம் இது? செக்கப் எல்லாம் ஒழுங்கா பண்றீங்களா?”
“ம்ம் அஞ்சு மாசம் இப்போ.”
“சரி உடம்பைப் பார்த்துக்கங்க. நீங்களாச்சும் என்னைய தனியா மீட் பண்ணி உண்மைய சொல்லி இருக்கலாம்!”
“சொல்ல விடலங்க. இவங்க அம்மா. எந்த வகையிலும் உங்க போன் நம்பர் இவருக்கு கிடைக்க விடாம பண்ணிட்டாங்க. உங்க அம்மாவையோ தம்பியையோ தனியா சந்திக்கவே விடல அவங்க!”
“எல்லாம் விதி! நானாச்சும் இவர் நம்பர் வாங்கி பேசி இருக்கலாம்! மாப்பிள்ளையே பேசாம இருக்கிறப்போ, நாம போன் நம்பர் கேட்டா தப்பாகிடுமோன்னு இருந்திட்டேன். கண் மூடி திறக்குறதுக்குள் கல்யாண தேதியும் வந்துடுச்சு! இப்ப யோசிச்சு என்ன பண்றது? எல்லாம் தலை விதி!
சரிங்க பார்ப்போம். டேக் கேர்.” என்றுசொல்லி விட்டு போனை அவனிடம் கொடுத்தாள்!
—-
மறுநாள் விடிந்ததும் அவள் அம்மாவிடம் விஷயத்தை சொல்லி விட்டாள் கவி.
அவர் அதிர்ச்சியில் தலையில் கை வைத்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்து விட்டார்.
“கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொன்னவள கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சி நானே அவ வாழ்க்கைய கெடுத்துட்டேனே!”
கவின் மவுலியை அடிக்கவே போய் விட்டான்!
“உங்கம்மா மிரட்டலுக்கு எங்க அக்கா லைஃபை கெடுப்பியா நீ? உன் மேல கேசை போட்டு உள்ள வைக்கல நான் கவின் இல்லடா”.
“தம்பி. .தம்பி வேகப்படாதீங்க. நான் சரி பண்ணிடுறேன். அந்த குட்டிய துரத்தி விட்டுட்டு உங்க அக்காவை வாழ வைக்கிறேன். கொஞ்சம் அமைதியா இருங்க” என்று அந்த செண்பகம் சமாதானம் செய்ய முயல, இப்போது மட்டும் அந்த மவுலிக்கு எங்கிருந்தோ வீரம் வந்து விட்டது!
“கவின் அவங்க பேச்சை கேக்காதீங்க. நான் வீட்டில் கல்யாணத்துக்கு ஒத்துக்காம சண்டைப் போட்டப்போ, இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா? கவி நம்ம ஜாதி பொண்ணுடா. அவள கல்யாணம் பண்ணிக்கோ. அந்த குட்டிய அப்படியே வச்சுக்கோ. ஆனா அவ வீட்டுக்கு எல்லாம் வரக் கூடாது. இது நம்ம குடும்பத்தில் சிலர் செய்றது தான் அப்படின்னு சொன்னாங்க” என்று சொல்லி விட்டான்.
கவின் செண்பகத்தின் குரல்வளையையே நெரிக்க போய் விட்டான்.
கவியும் அவள் அம்மாவும் சேர்ந்து மிகவும் கஷ்டப்பட்டு அவனிடமிருந்து அந்த பெண்மணியைக் காப்பாற்றி இருவரையும் அனுப்பி வைத்தார்கள்.
அதன் பின்னும் கவின் அவர்களை சும்மா விடவில்லை!
கல்யாணத்திற்கு செய்த செலவை எல்லாம் வசூலித்து விட்டு தான் விட்டான்.
பணம் காசு என்னமோ திரும்ப வந்து விட்டது ஆனால் வாழ்க்கை!
கவியின் திருமணம் கோவிலில் வைத்து நடந்ததால் அது அங்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
சட்டபடி விவாகரத்து பெற கவின் தன் சீனியர் மூலம் ஏற்பாடு செய்து விட்டான்.
ஒரு நாள் நடந்த திருமணக் கூத்தில் கவிக்கு தற்போது விவாகரத்து ஆனவள் பட்டம்!
இந்த அடைமொழியோடு மீண்டும் கல்யாணத்திற்கு நிற்க அவளுக்கு விருப்பம் இல்லை.
ஆனால் அவளுக்கு குழந்தை ஆசை மட்டும் இருப்பது, ஒருநாள் அந்த மவுலியை பவியோடு அவர்கள் குழந்தையையும் ஹாஸ்பிட்டலில் வைத்து கண்டபோது தான் அவளுக்கே தெரிந்தது!
பெண் குழந்தை!
கவியின் பெயரை தான் வைத்து இருக்கிறார்களாம்!
குழந்தையை அவளிடம் நீட்டினான்.
கைகள் நடுங்க வாங்கி பார்த்தாள் கவி. அந்த குழந்தை அவள் நெஞ்சில் லேசாக எட்டி உதைத்த போது ஏற்பட்ட ஒரு உணர்ச்சி அவளுக்குள்ளும் இருக்கும் தாய்மை உணர்ச்சியை அவளுக்குப் புரிய வைத்தது!
குழந்தையின் கையில் இரு ஐநூறு ரூபாய் நோட்டுகளை திணித்து விட்டு வந்தாள் கவி.
அறையின் பின் புற ஜன்னல் பக்கமிருந்து குருவிகள் கிரீச்சிடும் சத்தம் கேட்டு பழைய நினைவுகளில் இருந்து மீண்டாள் கவி.
இன்று சமைக்கும் வேலையும் இல்லை!
ரஞ்சிதா போனில் பிடிவாதமாக சொல்லி இருந்தாள்.
“சண்டே எங்க வீட்டில் இருந்து மீன் குழம்பு அனுப்புறேன். நீங்க பாட்டுக்கு சமைச்சுட்டு இருக்காதீங்க”.
“இல்லங்க. அதெல்லாம் வேண்டாம்!” என்று கவி சங்கோஜமாக மறுத்ததற்கு, “நீங்க வேண்டாம்னு சொன்னா, நான் எங்க மீனுகிட்ட டீச்சர் எது கொடுத்தாலும் வாங்கி சாப்பிடக் கூடாதுன்னு சொல்லிடுவேன்” என்று செல்ல மிரட்டல் வேறு!
மீனுவுக்கு சாப்பிட தின்பண்டங்கள் கொடுப்பது கவிக்கு ஒரு சந்தோசம்!
அதைக் கெடுத்துக் கொள்ள விரும்பாமல் சரி என்று சொல்லி விட்டாள்.
கருவிகள் இரைச்சல் மேலும் கேட்க, “இருங்கடா” என்று சொல்லி விட்டு வீட்டில் இருந்து ஒரு பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து வந்தாள்.
அதில் இருந்த தினையை எடுத்து ஜன்னல் திண்டில் வைத்தாள்.
அப்போது வெளிப்பக்கம் கேட் திறக்கப்படும் ஓசையும், நந்தினியின் மொபெட் சத்தமும் கேட்டது.
சத்தம் கேட்டு கவி திரும்பி பார்க்கும் முன்னரே, அதில் இருந்து ஏறக்குறைய குதித்து ஓடி வந்திருந்த மீனுக் குட்டி,
“ஐய்.. அம்மா வந்தாச்சு!” என்று சந்தோஷ கூக்குரலுடன் கவியை பின் புறமாக கட்டிக் கொண்டது!
கவி திகைத்தாள்!
error: Content is protected !!