Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

60. மதி இனியாள் - சின்னஞ்சிறு பூவேUncategorized

சின்னஞ் சிறு பூவே 24

பூவே 24

 

 

 



Advertisement

“அக்கா, ஆல் த பெஸ்ட் க்கா,” என்றாள் வேல்விழி.

 

அவள் சொன்னதைக் கேட்டு அபிராமி சிரித்து, “ஒவ்வொரு பரிட்சைக்கும் ஆல் த பெஸ்ட் சொல்லுவியா?” என்றாள்.

Advertisement

 

Advertisement

“சொல்லலாம்க்கா. டீச்சர் வாழ்த்து சொல்லும்போது கேட்கிறவங்களுக்கு சந்தோஷம் தரும்னு சொன்னாங்க. நீங்க என்னை எப்பவுமே திட்டுவீங்க. இப்ப நான் ஆல் த பெஸ்ட் சொன்னா சிரிக்குறீங்களே?” என்றாள் அவளும்.

 

“சரி, உனக்கும் ஆல் த பெஸ்ட். எனக்கு கடைசி பரிட்சை, உனக்கு முதல் பரிட்சை இல்லையா?” என்றதும்,

Advertisement

 

“ஆமா க்கா… தேங்க்ஸ்,” என்றாள்.

 

“ஆல் த பெஸ்ட் அபிராமி அவர்களே! பரிட்சையைப் பார்த்து எழுதாம, படிச்சு எழுதுங்க,” என்று சொல்லிக்கொண்டே வந்தாள் முனிஸ்வரி.

 

“உன்னை மாதிரியாடி நான் படிச்சுத்தான் எழுதுவேன். உன்னை மாதிரி நெத்தியில பட்டை போட்டு சாமியை ஏமாத்த மாட்டேன்,” என்று கழுத்தைச் சுலுக்கினாள்.

 

“பாத்து அபிராமி… கழுத்து சுளுக்கு விழப் போகுது. அப்புறம் பரிட்சை எப்படி  எழுதுவ?” என்றாள் அவளும் விடாமல்.

 

வேல்விழியிடம் திரும்பி, “இவ கூட சேராத. அப்புறம் அவ வாய் உனக்கு ஒட்டிக்கப் போகுது,” என்று வீட்டுக்குள் நுழைந்தாள்.

 

“அப்புறம் காவ்யாக்கா… கனவுல மாமாதான் வராராம். கேள்விப்பட்டேன், நிஜம்தானா?” என்று காவ்யா அருகே வந்தாள் முனிஸ்வரி.

 

“உனக்கு எப்படிடி தெரியும்?” என்றாள் தூக்கத்திலிருந்து எழுந்தவள் போல.

 

“சரியா போச்சு! மாமா ராத்திரிதான் கனவுல வருவாருன்னு பார்த்தா, பகல்லயே வராரு போல,” என்று காவ்யாவைக் கேலி செய்யவும்.

 

“ஏய், அமைதியா இருடி. உன்கூட சேர்ந்ததுக்கு என்னை அடி வாங்க வைக்கப் போறடி,” என்று முனிஸ்வரி  காதில் முணுமுணுத்தாள் வேல்விழி.

 

“அப்படின்னா சரி… பொழைச்சுப் போ. வரோம் க்கா, நீ ஜாலியா மாமா கூட கனவு காணு,” என்று சொல்லிக்கொண்டே நடந்தனர் தோழிகள் இருவரும்.

 

“ஏண்டி, கொஞ்சமாச்சும் வாயை அடக்கிப் பழகுடி,” என்று அவளைத் திட்டிக்கொண்டே நடந்தாள்.

 

“ஆமா, வாயை அடக்கினா மட்டும்.. எனக்கு பதக்கம் தர போறாங்களா, போடி வாயுள்ள புள்ளை தான் பொழைக்கும்” என்று தத்துவம் சொன்னவளை,

 

பார்த்து தலையில அடித்துக்கொண்டாள்..

 

இப்படியே! இருவரும் எதிரும் புதிருமாக , பள்ளிக்கூடம் வந்து சேர்ந்தனர்.

 

ஒன்பதாம் வகுப்புக்கும், ஏழாம் வகுப்புக்கும் மதியம்தான் பரிட்சை ஆரம்பிக்கும்.

 

இரண்டு வகுப்பு மாணவர்களையும் ஆலமரத்தடியில் அமர வைத்து படிக்க வைத்தனர்.

 

இங்கு புத்தகத்தைத் திறந்த வேல்விழி மும்முரமாகப் படிக்க, மற்றவர்களும் படிக்கும் வேலையில் மூழ்கி இருந்தனர்.

 

முனிஸ்வரி மட்டும் புத்தகத்தைத் திறந்த நொடியே கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தாள்.

 

“முனிஸ்வரி!” என்று தமிழ் ஆசிரியரின் குரல் கேட்க,

 

“டீச்சர்…” என்று கைகளைக் கட்டிக்கொண்டு நின்றாள்.

 

“நீ மட்டும் நின்னுக்கிட்டே படி. அப்பதான் தூக்கம் தூரப் போகும்,” என்றார்.

 

இவளோ பாவமாகப் பார்த்து வைக்க,

 

“ஒழுங்கா புக் எடுத்தா, நின்னுட்டாவது படிக்கலாம். முகத்தைப் பாவமா வைச்சிக்கிட்டு நின்னா, முட்டிபோட்டு படிக்கணும். எப்படி வசதி?” என்றதும்,

 

“இதோ! புக் எடுத்துட்டேன் டீச்சர்,” என்று அதிலிருந்த மனப்பாடப் பகுதியை மட்டும் அவளால் படிக்க முடிந்தது.

 

சற்று நேரம் கழித்து புத்தகத்தால் முகத்தை மறைத்துக்கொண்டு சுற்றியும் பார்வையை ஓட்டினாள்.

 

அவள் பார்வை வட்டத்துக்குள் வந்து நின்றான் ராஜன்.

 

‘இந்த லூசு இங்க என்ன பண்ணுது?’ என்று பார்வையாலேயே நோட்டம் விட்டவளின் தலையில் நங்கென்று ஒரு கொட்டு விழுந்தது.

 

“அம்மா!” என்று தலையைத் தேய்த்துக்கொண்டே பார்க்க,

 

அருகில் தமிழ் ஆசிரியர் அவளைப் பார்வையாலேயே எரித்துக்கொண்டிருந்தார்.

 

“ஹி… ஹி… ஹி…” என்று இளித்து வைக்க,

 

“புக் எடுத்துட்டு என் கூட வா,” என்று அவர் முன்னே செல்ல, பின் தொடர்ந்தாள் முனிஸ்வரி.

 

“என் பக்கத்திலேயே உட்கார்ந்து படிக்குற. படிச்சதை எழுதி காட்டுற நீ,” என்றார்.

 

தன் தலையிலேயே அடித்துக்கொண்டு புத்தகத்தைத் திறந்து படித்தாள்.

 

அவளின் நிலை கண்டு தோழிகள் மூவரும் சிரிக்க,

 

‘சிரிக்காதீங்கடி… வந்தேன்னு கழுத்தைப் புடிச்சு கடிச்சிடுவேன்,’ என்று அவளும் சைகையில் சொன்னாள்.

 

அந்த ஆண்டின் கடைசி பரிட்சை வரை சில பல கலாட்டாக்களோடுதான் முடிந்தது.

 

“ஏய், நாளைக்கு எங்கடி போகலாம்?” என்றாள் கலையரசி.

 

“நீ எங்க கூட்டிட்டுப் போகப்போற? அதை முதல்ல சொல்லு,” என்று குறுக்கே நுழைந்தாள் முனிஸ்வரி.

 

“முதல்ல அவளை சொல்ல விடுடி,” என்று வேல்விழி சொன்னதும்,

 

“தெரியலடி… எங்கனா வெறகு எடுக்கப் போலாம்டி. வீட்டிலேயே இருந்தா பைத்தியம் பிடிக்கும்,” என்றாள் கலையரசி.

 

“ஏய்! குலதெய்வ கோவில் தள்ளி வெறகு வெட்டி போட்டது காஞ்சிருக்கும். அப்படியே வெறகு எடுத்துட்டு, மதகுல குளிச்சிட்டு வரலாம்,” என்று விஜயா சொன்னதும்,

 

மற்ற இருவரும் சரி என்றனர்.

 

“நீ என்னடி அமைதியா இருக்க?” என்று வேல்விழியைப் பார்த்து கேட்க,

 

“பாட்டி விடுவாங்களா தெரியலடி. நான் கேட்டுப் பாக்குறேன்,” என்றாள் வேல்விழி.

 

“சரிடி. வர மாதிரி இருந்தா காலையிலேயே ரெடியா இருங்க,” என்று விஜயாவும் கலையரசியும் கிளம்பினர்.வீட்டிற்கு வந்த வேல்விழி, வீடு அமைதியாக இருப்பதைக் கண்டு,

 

வாசலிலே அமர்ந்திருந்த பாட்டியிடம், “பாட்டி, வீடு என்ன அமைதியா இருக்கு?” என்று அருகிலே அமர்ந்தாள்.

 

“உம்… சின்ன பாட்டி கல்யாணத்துக்கு சீலை எடுக்க டவுனுக்குப் போயிருக்கா. கூடவே மாமனும், தாத்தாவும் போயிருக்காங்க,” என்றார்.

 

“அப்போ சமையல் நான் செய்வா பாட்டி?” என்று ஆர்வமாகக் கேட்டாள்.

 

“சரித்தா… பாத்து செய். கை, காலை சுட்டுக்காத,” என்றதும்,

 

“சரி பாட்டி,” என்று அறைக்குள் சென்று துணியை மாற்றிக்கொண்டு அடுப்பாங்கரைக்கு வந்தாள்.

 

அரிசியைக் கையிலெடுத்தவள்,

 

“பாட்டி, எத்தனை படி அரிசி போடணும்?” என்று கேட்டாள்.

 

“முக்காப்படித்தா,” என்றார்.

 

“அரிசி எவ்வளோ நேரம் ஊறணும்?”

 

“___”

 

“எந்த குண்டான்ல ஒலை போடணும்?”

 

“__”

 

“தண்ணி கொதிச்சதும் ஒலை போடணுமா, இல்ல அரிசியைப் போட்டே ஒலை வைக்கவா?”

 

“…”

 

“என்னென்ன காய் போட்டு காரக்குழம்பு வைக்கணும் பாட்டி?”

 

“__”

 

“எத்தனை தக்காளி, வெங்காயம் போடணும்?”

 

“__”

 

“பாட்டி குழம்புக்கு காரம் எவ்வளோ போடணும்?”

 

“__”

 

“புளி இது போதுமா, இல்ல இன்னும் கூட ஊற வைக்கணுமா?”

 

“___”

 

“உப்பு இவ்வளோ போதுமா, இல்ல கை நிறைய போடணுமா பாட்டி?” என்றதும்,

 

 

“ஏத்தா, கொஞ்சம் மூச்சு விட்டு பேசுத்தா… நீ பேசுறதுல எனக்கு மூச்சு வாங்குது” என்ற,

 

பாட்டியை பார்த்து சிரித்தாள்..

 

“இவ்ளோ உப்பு போடக்கூடாதுத்தா. முதல்ல அடுப்புப் பத்த  வைச்சியா?” என்றார்.

 

“ஐயய்யோ! பாட்டி… ஒலை கொதிச்சுச்சு. இன்னும் அரிசி போடல!” என்று கையில் இருந்ததை மயிலம்மா கையில் கொடுத்துவிட்டு பின்கட்டுக்கு ஓடினாள்.

 

“பாத்து போத்தா!” என்ற குரல் காற்றில்தான் கரைந்தது.

 

இங்கு அடுப்பில் விறகு நிறைய வைத்திருக்க, அது அனல் கொழுந்துவிட்டு எரிந்தது.

 

அருகிலே அமர்ந்து காய்கறியை அருவாள் மனையில் அறிந்துகொண்டிருந்தாள்.

 

முதல்முறை பழக்கம் இல்லாததால், கைகளில் சின்னச் சின்ன வெட்டுக்காயமும் பரிசாகக் கிடைத்தது.

 

அடுப்பில் கொதித்த சோற்றைப் பதம் பார்க்காமல் விட்டதால், அது நன்றாகக் குழைந்து போனது.

 

தட்டுத் தடுமாறி கரித்துணி கொண்டு சோற்றை வடித்து,

 

அடுத்து வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் அளவு தெரியாமல் குத்துமதிப்பாக ஊற்றியிருக்க,

 

அனல் முகத்தில் அடிக்க, கடுகை அள்ளிப் போட்டாள்.

 

அனலில் விழுந்த கடுகு நாலாபக்கமும் தெறித்து விழுந்ததில், அவள் காலிலும் கையிலும் எண்ணெய் தெறித்தது.

 

“பாட்டி!” என்று காலைப் பிடித்துக்கொண்டு கத்தினாள்.

 

பேத்தியின் சத்தம் கேட்டு, “என்னத்தா?” என்று பதறிக்கொண்டு வந்தார்..

 

காலைப் பிடித்து அழுதவளைப் பார்த்ததும் உயிரே போனது.

 

இதில் அடுப்பிலிருந்த கடாய் வேறு தீப்பிடித்துக்கொண்டது.

 

அதைப் பார்த்துத்தான் இன்னும் கத்தினாள்.

 

அருகிலிருந்த விறகுக் கட்டையை எடுத்து, தீப்பிடித்த வாணலியை பின்பக்கம் தள்ளிவிட்டார்.

 

சொம்பில் இருந்த தண்ணீரை எடுத்து பேத்தியின் காலில் ஊற்றி,

 

“பாத்து செய்யக்கூடாதாத்தா,” என்று கொஞ்சம் கொஞ்சமாக ஒத்தடம் கொடுத்தார்.

 

“போதும் பாட்டி… இப்ப எரிச்சல் இல்லை,” என்றாள்.

 

“நீ அமைதியா திண்ணையில ஒக்காருத்தா. நான் குழம்பு வைக்குறேன்,” என்று பேத்தியின் கையைப் பிடித்து திண்ணையில் அமரவைத்து, வேறு ஒரு வாணலியை வைத்து குழம்பு வைக்கத் தொடங்கினார்.

 

அடுப்பில் குழம்பு கொதிக்கும் போதே வாசம் பிடித்தவள்,

 

“பாட்டி… குழம்பு வாசம் இங்க வரை வீசுது,” என்றாள்.”சாப்பிட்டுப் பாருத்தா… இன்னும் ருசி கூடும்னு,” சொல்லி அடுப்பிலிருந்த குழம்பை இறக்கி வைத்து,

 

தட்டுத்தடுமாறி சோற்றுப் பானையை நிமிர்த்திப் பார்த்தவருக்கு, சோறு குழைந்தது தெரிந்தது.

 

அகலமான பாத்திரம் ஒன்றை எடுத்து, அதில் சோற்றுப் பானையை கவிழ்த்தார். காற்றில் ஆறவிட்டு, பேத்திக்கு தட்டில் சோறு போட்டு குழம்பு ஊற்றி,

 

கொஞ்சம் கொஞ்சமாகப் பிசைந்தபடி அவள் அருகே அமர்ந்தார்.

 

“பாட்டி, எனக்கு ஊட்டிவிடப் போறீங்களா?” என்றாள் சந்தோஷத்தில்.

 

“ஆமாத்தா… எம் பேத்திக்கு ஊட்டி விட்டு எம்புட்டு காலமாச்சு,” என்று அவளுக்கு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து ஊட்டி விட்டார்.

 

கடைசி வாயையும் ஊட்டி, விரலில் ஒட்டியிருந்த சோற்றுப் பருக்கையை கைகளில் வைத்து,

 

பேத்திக்குச் சுற்றிப் போட்டார்..

 

“பாட்டி, நான் என்ன சின்ன பொண்ணா? எனக்குப் போய் சுத்தி போடுறீங்க,” என்று சிரித்தாள்.

 

தட்டைக் கழுவி வைத்து பேத்தி அருகே வந்ததும்.

 

“எனக்கு எப்பவும் எம் பேத்தி குழந்தைதான்,” என்றார்.

 

“பாட்டி, சொல்ல மறந்துட்டேன்… நாளைக்கு என் கூட்டாளிங்க கூட வேறகு எடுக்கப் போகட்டா?” என்றாள்.

 

“நீ எதுக்குடா அந்த வேகாத வெயில்ல போகணும்? வீட்டிலேயே இருத்தா,” என்றார்.

 

“இல்லை பாட்டி… காலையில போயிட்டு மதியம் வந்திடுவேன் பாட்டி,” என்று முகம் சுருங்கிச் சொல்ல,

 

“சரித்தா போ. ஆனா பத்திரமா இருக்கணும். நீ இன்னும் சின்ன புள்ளை இல்லை,” என்று பேத்திக்கு அறிவுரை சொல்லவும்,

 

“சரிங்க பாட்டி,” என்றாள் புன்னகையுடன்.

 

அதே நேரம் உள்ளே வந்த காளியம்மா,

 

“அய்யோ, அய்யோ! எங்கப்பா வீட்டுல சீதனமா கொடுத்ததை யாரு இப்படி கருக வச்சது?” என்று கேட்க,

 

“நான் தாண்டி கவனமில்லாம விட்டுட்டேன்,” என்று மயிலம்மா சொன்னதும்,

 

காளியம்மாவின் பார்வை மொத்தமும் வேல்விழியிடம்தான் இருந்தது.

 

‘மோசம் புடிக்குற நாய் முகத்தைப் பார்த்தாலே தெரியும்’ என்ற பழமொழிக்கு ஏற்ற மாதிரிதான், பயத்துடன் நின்றாள் வேல்விழி.

 

அங்கு சமையல் செய்த இடத்தைப் பார்த்து…

 

இன்னும் அதிர்ந்து போனார்.

 

அதே நேரம் வெற்றி வீட்டுக்குள் வர, அவன் யோசனை முழுவதும் ராஜனிடம் இருந்தால்.

 

‘இன்று அவன் பார்த்த பார்வை , ஒரு வித நக்கலாக தெரிந்தது’ வெற்றிக்கு..

 

எதற்கு என்ற சிந்தனையுடனே மாடி ஏறியவனைத்தான் அனைவரும் வித்தியாசமாகப் பார்த்தனர்.

 

“ஏட்டி, பேரனுக்கு என்னாச்சு? மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி குனிஞ்சு தலை நிமிராம போறாரு,” என்று மயிலம்மா மருமகளிடம் கேட்க,

 

‘பக்கத்துல இருக்குறவ ஏத்தா, வாத்தான்னு எம் மகனுக்குக்கூட மரியாதை இருக்கு. என்னை மட்டும் ஏட்டின்னு கூப்பிடுறாங்க. இருந்தாலும் எம் மாமியாருக்கு ரொம்ப கொழுப்பு கூடி போயிருக்கு. உப்பு இல்லாத சோறுதான் போடணும்,’ என்று மனதுக்குள் நினைக்க மட்டும்தான் முடிந்தது.

 

“என்னடி, பதிலை காணோம்?” என்றதும்,

 

“தெரியலத்தை… நான் என்னன்னு கேக்குறேன்,” என்று மாடி

ஏறிப் போன மருமகளைத் தடுத்து,

 

“வயசுப் புள்ளைக்கு ஆயிரம் ஜோலி இருக்கும். போய் வேலையைப் பாரு,” என்று மருமகளை விரட்டினார்.

 

தன்னை வைத்து வீட்டில் இருவரும் பேசுவது கூட அவன் காதில் விழவில்லை.

 

“மனம் முழுக்க ஏதோ ஒரு இனம் புரியாத தவிப்பு பரவியது.” அவனுக்குள்..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!