Skip to content
Post Views: 244
அத்தியாயம் 17
இந்த கமலி என்னவெல்லாம் பேசிவிட்டாள். எப்போது தான் தன்னை நம்ப போகிறாள்? என் மனம் மாறியதை என் பேச்சில் இருந்து கூட இவளால் கணிக்க முடிவில்லையா? என்னை புரிந்து கொள்ள முடியவில்லையா? ஏன்? எத்தனையோ கேள்விகள் வரிசைகட்டி நின்றது.
முதலில் கமலியை பிடிக்கவில்லை என இறுகி கிடந்தவன், இந்த வாழ்கை தான் நிதர்சனம், கமலி தான் நிஜமான வாழ்க்கை என தன்னை தானே தேற்றி, நிலை நிறுத்தி, அவளிடம் நிரூபிப்பதற்குள் மீண்டும் தோற்று போனான்.
பால்கனி கம்பியை பிடித்து நின்றிருந்தவனின் மனம் ஆறவே இல்லை. திகு திகுவென எரிந்து கொண்டே இருந்தது இவன் மனம்.
Advertisement
எத்தனை முறை தான் வாழ்வில் தோற்றி கொண்டே இருப்பது. தோற்பது மட்டும் தான் வாழ்கையா? தேற்ற ஆளில்லாமல் அயர்ந்து போனான் கிரி.
போன் செய்தாலே, தன் நலனை பற்றி ஏதுவுமே கேட்காமல், பணம், பணம், பணம், பணத்தை தவிர எதுவும் பேசாத அம்மா, அக்கா.
பணத்தை மட்டுமே பிரதானமாக்கி, கிரி என்ற ஒருவனை சம்பாதிக்கும் மிஷினாக்கி வைத்திருந்தார்கள் வசந்தாவும் ராஜியும்.
Advertisement
கமலி வருவதற்கு முன்பு இத்தனை வருடங்களாய் அப்படி தான் இருந்தான் கிரியும். ஆனால் கமலி வந்த பிறகு, சாப்பிட்டிங்களா? ஏன் டல்லா இருக்கீங்க? என தன்னையும் கேட்க, பார்த்துகொள்ள ஓர் உறவு வந்ததை மூளை ஏற்கவே சிறிது நாட்களானது. மனம் ஏற்றுகொள்ள சில மாதங்களே ஆனது.
Advertisement
உணர்வுகள் ஆசைகளாய், எதிர்பார்ப்புகளாய் மாறும் நேரத்தில் எட்டி உதைத்துவிட்டாள் கமலி. போக போக கமலியிடம் உண்டான பிடிப்பும் உடைந்திடுமோனு என பயம் கொண்டான்.
என்னடா வாழ்க்கை இது. அம்மா, அக்கா, இப்போது மனைவி என எந்த பிடிப்பும் இல்லாமல் இப்படியே சூனியமாய் போய்விடுமா வாழ்க்கை. என வெறுத்தே போனான் கிரி.
பேசாமல் கிப்ட் பற்றி சொல்லாமலேயே விட்டிருக்கலாமோ! என எண்ணி முடிப்பதற்குள், ‘நீயாக சொல்லியே இத்தனை வாக்கு வாதம். ஒருவேளை அவளாக பார்த்து என்ன ஏது என்று கேட்டிருந்தால், இன்னும் இரு மடங்காய் வெடித்திருக்கும் என சந்தோஷபட்டு கொண்டது அவன் மனம்.
Advertisement
இவளுக்கோ, தான் பேசியதும், அதற்கு கிரி பதில் பேசியதும் தான் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
யார் மேல் தவறு என ஒரு நிலைக்கு வரவே முடியவில்லை. அதே போல் கிரி செய்து வைப்பவைகளையும் அப்படியே ஏற்கவும் முடியவில்லை, அதைவிட, இனி எப்படி இதை கையாளப்போகிறோம் என தெரியாமல் விழி பிதுங்கி நின்றுவிட்டாள்..
இப்படிபட்ட மனநிலையிலேயே சனி ஞாயிறு என இரு நாட்களும் எப்படி கழிந்ததென தெரியாமல், தாய் தந்தையுடன் நேரத்தை கழித்தாள்.
கரிக்கும் தனக்குமான பிரச்சனையை, தன் முகம் பார்த்து ஏதும் கண்டுபிடித்து விடுவார்களோ என சர்வ சாதரணமாய் முகத்தை வைப்பதற்குள் போதும் போதுமென்றானது.
உள்ளே ஒன்றும் வெளியே ஒன்றும் என முக மூடி போட்டு திரிவது போல் அவ்வளவு கஷ்டமாக இருந்தது. எப்படியோ இரு நாட்களையும் கழித்துவிட்டு, மீண்டும் திங்கள் கிழமை காலை ஆறு மணிக்கு கல்லூரிக்கு கிளம்பிவிட்டாள்.
எட்டு, எட்டரை போல கல்லூரி போய் சேர்ந்துவிட செல்வத்திற்கு போன் செய்து, கல்லூரி வந்து விட்டதை கூறினாள். பிறகு எப்போதும் போல நேரம் அவளை சுற்றி சக்கரமாய் சுழல துவங்கிவிட்டது.
முன்பாவது கிரியின் மேல் இருந்த காதலால் ஜிம்மிற்கு ஓடிக்கொண்டிருந்தவள், இப்போது எந்த பேய் பிடித்து ஆட்டியதோ.. பேய் பிடித்தார்ப்போல் தான் ஓடிக்கொண்டிருந்தாள்.
காலையில் மேனகா சொன்னதை போல் பிகினிங் ஒர்க்கவுட்டுகளை ஹாஸ்டல் மொட்டை மாடியிலேயே முடித்துவிட்டு லைப்பிரேரிக்கு ஓடிடுவாள். தர்ஷி தான் தூக்கத்தை விட்டு வரமாட்டள்.
மாலை தர்ஷியோடு சேர்ந்து ஜிம்மில் மேனகாவின் அறிவுரைப்படி ஏதாவது மிஷின் ஒர்க்கவுட்டுகளை ஓய்வே எடுக்காது செய்தாள்.
இப்படி அயராத பயிற்சியை அவள் உடல் எங்கனம் தாங்கும், உடல் வலியில் காய்ச்சல் கூட வந்தது. கல்லூரிக்குள்ளேயே இருக்கும் ஹெல்த் சென்டரில் ஊசி போட்டு விட்டு அங்கே கேட்காமல், ஜிம்மோடு சேர்ந்திருக்கும் டாக்டர் ராஜின் மருத்துவமணைக்கு சென்றாள். அங்கே அவர், “அதிகமா ஒர்க் பண்ணினா தான் இப்படி காய்சல் வரும். உங்க டிரைனர் யாரு” என முகம் இறுக இவர் விசாரிக்க… “சார் அவங்க லிமிட்டா தான் பண்ண சொன்னாங்க, நான் தான் ஆர்வ கோளாரில்..” என இவள் முடிக்கும் முன்னே.. விளாசி தள்ளிவிட்டார் மருத்துவர்.
“உங்க டிரைனர் சொல்றதை மட்டும் கேளுங்க, வீணா எங்களுக்கு எதுவும் பிரச்சனையை இழுத்து விட்டுடாதீங்க” என அழுத்தமாய் கூறி ‘முழுதாய் ஒரு வாரம், நோ ஒர்க்அவுட்’ என தடை போட்டு ஓய்வு கொடுத்துவிட. தர்ஷி மட்டுமே ஜிம் சென்று வந்தாள்.
ஒரு வாரம் ஒய்வில் தான் இருந்தாள். ஓய்வெடுக்கையில் நன்றாக தான் இருந்தது கமலிக்கு. அதன் பிறகு ஈகோ எட்டி பார்க்க சிறிது சிறிதாய் ஒர்க்அவுட்களை தொடங்கி விட்டாள். ஏனெனில் முன்பு கண்ணாடியை பார்க்கும் போது எழும் ஈகோ, இப்போது கண்ணாடி வளையல்களை பார்த்தால் கூட எழுந்தது ஈகோ. எங்கும் எதிலும் கிரியின் வைப்ரேஷன்களே! ஆனால் என்ன நெகட்டிவ் வைப்பிரேஷனாக இருந்தது.
இதில் எங்கே இவள் ஓய்வை தொடர, உடற்பயிற்சியை கைவிட? உடற்பயிற்சி செய்கையில் வலிக்கிறதே என எண்ணிய காலம் போய் நன்றாக வலிக்கட்டும் என்ற நிலைக்கு தள்ளபட்டாள்.
உடற்பயிற்சி செய்தபடி இப்படியே இவளது வாழ்க்கை ‘ஜிம் ஆஃப் கிங் அண்ட் க்வின்’ லேயே ஓடியது அடுத்த மூன்று மாதங்களும்.
*******
“ம்மா, போட்டுக்க டிரஸ் இல்லை. துவைக்கலையா?” காந்திமதியிடம் கடுகடுப்பாய் கேட்டுக்கொண்டிருந்தான் செந்தில்.
“ஏண்டா, உன் துணிய கூட துவைச்சுக்க மாட்டியா? எனக்கென்ன பதினாறு வயசா ஆகுது. ஓடியாடி வேலை பார்க்க என்னால முடியாது” என்றார் ஒரேயடியாக.
“ம்மா.. இத்தனை நாளா நான் தானே துவைச்சேன். இரண்டு நாளா வேலை பின்னி எடுக்குறாங்க ம்மா.. முடியலை, ஒரு நாளைக்கு துவைச்சு போடுன்னு தானே சொன்னேன்”
“எனக்கும் தான் முடியலை. நான் யார்கிட்ட போய்சொல்ல” சட்டமாய் சொன்னார் காந்திமதி.
“ஒழுங்கா சமைக்கவும் மாட்ற.. சாப்பிட்டியா வச்சியானு கூட கேட்க மாட்றம்மா நீ” என எரிச்சலானான் செந்தில்.
“இதெல்லாம் செய்ய நான் என்ன உன் பொண்டாட்டியா.. உன் அம்மாடா.. போ.. சும்மா புலம்பிட்டே இருக்காமல் போய் ஆக வேண்டிய வேலைய பாரு” என காந்திமதி வள்ளென்று விழுந்து வைக்க, மறு நாள் விடுமுறை எடுத்து விட்டான் துணி துவைப்பதற்காகவே.
குப்பை போல் கிடந்த அறையை ஒதுக்கி, அழுக்கு துணிகளை கூடையில் போட்டு, தூசி அடைந்த அறையை மூக்கில் கர்சீப்பை கட்டி கொண்டு சுத்தம் செய்வதற்குள் ஞாயிற்று கிழமையில் அரைநாள் ஓடியிருந்தது. காலை நான்கு இட்லிகளுடன் முடித்து கொண்டவன், மதியம், அன்னை சாப்பிட அழைத்தும், சாப்பிட பிடிக்காமல் இதோ வீட்டு வேலையில் கவனமாகிப்போனான்.
அதன் பின் துணிகளை வாசிங் மெஷினில் போட்டுவிட்டு, அதை காயபோடுகையில் மாலை முடிந்திருந்தது. குளித்து வந்து தன்னந்தனியாய் கண் மூடி படுத்திருந்தான் கட்டிலில். பெரும் அமைதியோடு இருந்தது அந்த அறை.
அன்றிலிருந்து காந்திமதியிடம் எதுவும் சொல்வதில்லை. சமைத்தால் வீட்டில் சாப்பாடு, இல்லையானால் வெளியில் என பார்த்து கொண்டான்.
ராஜி வீட்டை விட்டு போய் பல மாதங்கள் கடந்து விட்டது.
அன்று அவள் சண்டை போட்டு கிளம்பி சென்ற போது சரியாய் பட்டது. தவிர ‘எப்படியும் இங்கே தானே வந்தாக வேண்டும். வீடில்லை என்றால், அதற்கு ஈடாக நகையோ, பணமோ கண்டிப்பாக கிரி கொடுத்துவிடுவான்’ என்ற நம்பிக்கையில் அசால்ட்டாய் இருந்தான் செந்தில். ஆனால் நாளாக நாளாக அந்த எண்ணம் ஆட்டம் கண்டது.
அதன் பின் கிரி செய்ய மாட்டானோ, ராஜி வரமாட்டாளோ என மனம் உறுத்த துவங்கியது.
அதே போல காந்திமதிக்கும் தோன்றியதோ என்னவோ “ஏண்டா, உம்பொண்டாட்டி நகை, பணமாவது கொண்டு வருவாளா? இல்லை அப்படியே போய்டுவாளா? பேசாம டைவர்ஸ் கேளுடா” என அதிரடியாய் கூற, செந்திலோ அதிர்ந்தான்.
அவனது அதிர்ந்த முகத்தை பார்த்து, “அதுக்காக டைவர்ஸ் வாங்குனு சொல்லலைடா.. நீ டைவர்ஸ் கேளு, தன்னால கிரி செய்ய வேண்டியதை சிறப்பா செஞ்சு ராஜியையும் பிள்ளைகளையும் அனுப்பிடுவான். புருஷன் பொண்டாட்டிய பிரிச்ச பாவம் எனக்கு வேணாம்பா” என வக்கனையாய் பேசி செல்பவரை, எரிச்சலாய் பார்த்து வைத்தான் செந்தில்.
error: Content is protected !!