Skip to content
Post Views: 257
உடைந்த மனங்கள் ஒட்டாதா?…
அத்தியாயம் 15
இப்போதெல்லாம் ஜெகன் சகஜமாக மீனாவின் வீட்டுக்கு வர ஆரம்பித்தான். ஆனால் மீனாவை அவன் நெருங்க நினைக்கவில்லை. அதனால்தான் அவன் சகஜமாக அந்த வீட்டுக்குள் நுழைய முடிகிறது. அவனின் நெருக்கம் எல்லாம் பிள்ளைகளோடு தான். மீனாவும் ஒரு எல்லைக்கோடு வரைந்து, அதற்குள் அவளும் நின்று கொண்டு ஜெகனைத் தள்ளி நிறுத்தினாள்.
பிள்ளைகளோடு இருக்கும்போதெல்லாம் ஜெகனின் பார்வை அடிக்கடி மனைவியை தொட்டு வரும்.. அதை உணர்ந்தாலும் மீனா கண்டு கொள்வதில்லை. பிள்ளைகள் மூவருமே தந்தையை அதிகமாக நெருங்கினார்கள். மீனாவிடம் எப்போதும் ஒரு கண்டிப்பு இருக்கும். அப்படி இல்லாமல் அதிக செல்லம் கொடுக்கும் தந்தையை பிள்ளைகள் தேடினார்கள். ஜெகன் தமிழுக்கும், புகழுக்கும் தனியாக டியூஷன் ஏற்பாடு செய்தான். ஜெகன் என்ன செல்லம் கொடுத்தாலும் படிப்பு விஷயத்தில் சரியாக இருக்க நினைத்தான் அவனுக்குமே மனைவியின் கருத்தில் மாற்றுக் கருத்து இல்லை.
Advertisement
என்ன ஒன்று மீனா கண்டிப்பு காட்டுவாள். சொல்லியதை கேட்கவில்லை என்றால் தயங்காமல் கை நீட்டி விடுவாள். ஜெகன் செல்லம் கொடுத்து அவர்களை சரிகட்டி விடுவான். பிள்ளைகளின் தந்தைக்காண ஏக்கம் தெரிந்த பின் மீனா அவர்களை தடுக்கவில்லை. ஆனால் ஜெகனுக்கு மனைவியின் நடவடிக்கையில் பெரிய நம்பிக்கை வந்தது கூடிய சீக்கிரம் தன் மனைவியோடு இணைந்து விடலாம் என்று நம்பினான். ஆனால் தான் வெகு ஜாக்கிரதையாக மீனாவை அணுகினான்.
அன்று பிரதோஷம் மீனா பொதுவாக வெளியில் இருக்கும் கோவிலுக்கு எல்லாம் செல்ல மாட்டாள். அங்கு வந்ததுல இருந்தே அவள் கணவன் உடன் இல்லை என்பதை எல்லோரும் அறிவர். அதனால் கோவில் விசேஷம் என்று எங்கு சென்றும் தன்னை பேசுபொருள் ஆக்காமல் தன் வீட்டோடு பூஜை செய்து கொள்வாள். அன்று பரமமும் வீட்டில் இருக்க மீனாவுக்கு வேலை ஏற கட்டியது. வீட்டில் இதுவரை துவைக்காமல் கிடந்த போர்வை, சின்ன மெத்தை, தலை உறை என்று எல்லாவற்றையும் இன்று துவைத்து எடுத்தவள் ஜெகன் வீட்டு மாடிக்கு ஏறினாள். பொதுவாக ஜெகன் மதிய நேரத்தில் வீட்டில் இருக்க மாட்டான். அதனால் கனமான உடைகளை அந்த நேரம் காய வைத்து எடுத்து விடுவாள் மீனா.
அன்று என்னவோ ஜெகனுக்கு மனைவியின் ஞாபகம் அதிகமாய் இருக்க வீட்டில் தான் இருந்தான். ஜெகனை அறியாத மீனா துணிகளை காய போட்டுக் கொண்டிருக்க, சத்தம் கேட்டு வெளியே வந்தவன் மனைவியை பார்த்து தன்னிலை இழந்தான்.
Advertisement
மீனா யூனிபார்ம் சேலை மாதிரி ஒரு குறிப்பிட்ட ஆறு சேலைகளை மட்டுமே வாரம் வாரம் பயன்படுத்துவாள். அடுப்பில் வெந்து நிற்க அந்த மாதிரி சேலைகளை மட்டுமே வைத்துக் கொள்வாள். அத்தோடு கணவனும் உடன் இல்லாத நிலையில் தனியாக கண்ணுக்கு குளிர்ச்சியாக எல்லாம் உடை அணிய மாட்டாள். இன்று பிரதோஷம் சாமி கும்பிடனும் என்பதால் நாவல் பல நேரத்தில் சேலை அணிந்து இருந்தாள். ஒரே மாதிரியாக மனைவியை பார்த்து பழகியவனுக்கு தலைக்கு குளித்து அவள் நிறத்தை எடுத்துக்காட்டும் சேலையை அணிந்து நின்றவளை பார்த்து மயங்கிப் போனான் ஜெகன். அதிலும் சேலையில் ஈரம் படாமல் இருக்க ஏத்தி சொருகி இருந்தாள். நீண்ட நாள் கழித்த மனைவியின் தரிசனம் ஜெகனுக்கு அவளை நோக்கி நெருங்கச் செய்தது.
Advertisement
“மீனு” என்று கிறக்கமாக அழைக்க,
இப்படி அழைப்பது அவன் மட்டும் தானே என்று யோசனை ஓடவே திரும்பிப் பார்த்தவள். கணவனின் பார்வை மூன்று வருடத்திற்கு முந்திய நிலையை படம் பிடித்து காட்ட அரண்டு போனாள்.
இவன் வீட்டில இருக்கான் என்று பார்த்தவள். அவனுக்கு பதில் கொடுக்காமல் நகர, மேலும் நகர விடாமல் அவள் கையை பிடித்து விட்டான்.
Advertisement
அதிர்ந்து போய் சுற்றும் முற்றும் பார்த்தவள் பல்லை கடித்துக்கொண்டு, “கையை விடு”
“அதெல்லாம் முடியாது. மீனா, ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோ.. நீயே என்னை ஒதுக்கி வச்சா நான் எங்கடி போவேன். இவ்வளவு நாள் என்னை பாக்கற இல்ல, நான் என்ன முன்னே மாதிரியா இருக்கேன்”
“கையை எடுன்னு சொன்னேன்”
“முடியாது. எனக்கு பதில் சொல்லு?”
“என்ன பதில்? நீ எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் உன் மேல என் பார்வை மாறாது”
“நான் மாறிட்டேன் மீனா. இப்ப எல்லாம் குடிக்கிறதே கிடையாது” என்றான் ஜெகன். தன்னை நிரூபிக்கும் வேகம்…
“சந்தோஷம். அப்ப மூணு பிள்ளைகளை பாரு. ஆனா என் பக்கம் திரும்பாத” காட்டமாக சொன்னாள் மீனா.
“நீயில்லாமவா” என்ற ஜெகனின் வார்த்தை அவளை கொதிக்க செய்தது.
“ரொம்ப நியாயஸ்தன் தான். மரியாதையாக கையை எடு”
“அடி என்னடி ரொம்ப ஓவரா தான் பண்ற? உன் கைய நான் புடிக்காம வேற யார் புடிப்பா? இங்க பாரு மீனா, உன் கோபத்துக்கு மதிப்பு கொடுத்து தான் நானும் ரொம்ப பொறுமையா போயிட்டு இருக்கேன். உன் பிடிவாதத்துக்கு அளவில்லாம போயிட்டு இருக்கு, என் பொறுமைக்கும் எல்லை இருக்கு” என்றான் கோபமாக.
பின்னே எவ்வளவு நாள் தான் அவள் முகத்தை பார்த்தே தள்ளி நிற்பது. எப்போதுதான் மனம் மாறுவாள். அவனும் எவ்வளவு நாளைக்கு ஒத்தையில் கிடந்து அல்லாடுவான்.
“அப்போ ஏன் என்னை புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க. உங்களுக்கு புடிச்ச வேற யாராவது பார்த்து தொங்க வேண்டி தானே” என்றாள் அவளும் கோபம் குறையாமல்,
“அதைத்தான் பண்ணிட்டு இருக்கேன். நீ யாரோ வா இருந்தா நான் ஏண்டி உன் பின்னாடி வரப் போறேன். என் பொண்டாட்டின்னுனால தான் வாரேன். கொஞ்சமாவது கருணை காட்டுறியா?”
“என் முடிவுல நான் தெளிவா இருக்கேன் என் வழியில என்னை போக விடுங்க”
“அப்படி எல்லாம் விட முடியாது மீனா. நீ, நான், நம்ம பிள்ளைகள் ஒரு குடும்பமா வாழ்ந்து தான் ஆகணும்” என்றான் உறுதியாக,
மீனாவுக்கு சலிப்பாக இருந்தது. அவளுக்கு எல்லாம் திரும்ப கணவன், குடும்பம் என்று வாழும் நினைப்பே இல்லை. ஜெகனின் பேச்சு எரிச்சலை தான் கொடுத்தது. இன்னும் ஜெகன் அவளைப் பிடித்த கையை விடவில்லை.
“எனக்கு உன் மேல எந்த விருப்பமும் கிடையாது” என்றதும், அவனுக்கு கோபம் கண்ணை மறைத்தது. அந்த வார்த்தையை அவனால் ஏற்க முடியவில்லை.
“என்ன விருப்பம் கிடையாது. இந்த சேலை உனக்கு நான் எடுத்துக் கொடுத்தது தானே. இன்னமும் மறக்காம கட்டி இருக்க” என்றதும் தான் மீனா குனிந்து தான் கட்டி இருந்த சேலையை பார்த்தாள்.
அவளுக்கு உண்மையில் அந்த நினைப்பெல்லாம் கிடையாது, “ஆமா எனக்கு இங்க வசதி கொட்டி கிடக்கு. சேலையா எடுத்து அடுக்க.. விதியேன்னு கட்டிட்டு இருக்கேன்” என்றாள் வெறுப்பாக.
“கொஞ்சம் கூட என் நினைப்பு உனக்கு இல்லையா மீனா?” அவனால் நம்பவே முடியவில்லை.
ஏன் இல்லாமல், அவன் சாப்பிட வருகிறான் என்றதும் தான் சாப்பிடாமல் உணவை அவனுக்காக பத்திரப்படுத்தினாள். அந்த அக்கறை எல்லாம் இருக்கிறது. ஆனால், திரும்ப அவனோடு சேர்ந்து வாழும் நம்பிக்கை மட்டும் இல்லை.
மீனா அமைதியாக நிற்க. ஜெகன் நினைப்பெல்லாம் ஒன்றுமே இல்லை என்றானது.
“ஏன் மீனா உனக்கு என் மேல அவ்வளவு வெறுப்பு?” என்றான் தளர்ந்து போன குரலில்.. கொஞ்சமும் இறங்கி வராமல் இருக்கும் மனைவியை எண்ணி மனம் கசந்தது.
“அதற்கான காரணம் உங்களுக்கே நல்லா தெரியும்”
“ம்ச், அதை விட்டு வேற நல்ல விஷயங்களை நமக்கு கிடையாதா என்ன? அதை தாண்டி நாம நல்லாத்தானே வாழ்ந்தோம்”
அவன் கையை வெடுக்கென்று உதறியவள், “என்னத்த உங்களை கட்டி நல்லா வாழ்ந்தேன்? என்னைக்காவது ஒரு நாள் ஒரு நல்ல ஆம்பளையா என்கிட்ட நீங்க நடந்துட்டு இருப்பீங்களா?” கோபத்தில் வார்த்தை தெறித்தது.
அவள் சொன்ன அர்த்தம் வேறு, ஜெகன் புரிந்து கொண்ட அர்த்தம் வேறு.. அவனால் அவள் வார்த்தைகளை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
“என்னடி சொல்ல வார?.. என்கிட்ட மூணு பிள்ளை பெறும் போது தெரியலையா நான் ஆம்பளைன்னு” பட்டென்று ஜெகன் வார்த்தைகளை விட அவ்வளவு தான் மீனாவுக்கு வந்ததே கோபம். மற்றொரு கையில் வைத்திருந்த இரும்பு வாலியை தூக்கி அவனை நோக்கி எறிந்தாள்.
எதிர்பாராத தாக்குதலில் கையை தூக்கித் தடுத்தவன் உள்ளங்கையில் நல்ல காயம்.
“அம்மாடி” என்றபடி கையைப் பார்க்க நன்றாக சிவந்து போயிருந்தது. அவசரத்தில் வார்த்தையை விட்டு விட்டோம் என்றும் புரிந்தது.
“மீனா” என்றான் தயக்கமா..
“நீயெல்லாம் என்னைக்கும் திருந்த மாட்ட. எத்தனை வருஷம் ஆனாலும் நம்ம பொழப்பு இப்படித்தான் போகும். உன்கிட்ட ஒரு பிரச்சனையை பேசினால் அந்த பிரச்சனையை தாண்டி வேறொரு பிரச்சனை தான் கொண்டு வருவ.. எனக்கு உன் கூட போராடி சலிச்சு போச்சு. தயவு செஞ்சு என்னை விட்டுடு. இந்தப் பிள்ளைகளுக்காக தான்னா.. ஆமா, மூணு பிள்ளைகளையும் உனக்குத்தான் பெத்தேன் நீயே வச்சுக்கோ” கோபமாக கத்தியவள் வேகமாக கீழே இறங்கி வந்து விட்டாள்.
ஜான் ஏறி முழம் சறுக்கின கதையாகி போனது ஜெகன் நிலை. அந்த வெயிலிலே தலையை கையில் வைத்து அமர்ந்து விட்டான்.
நீண்ட நேரம் மனது கொதித்துக் கொண்டிருக்க பரமு சத்தம் போட்ட பின் தான் சாமி கும்பிடும் வேலையை தொடங்கினாள் மீனா. பிரிட்ஜில் இருந்த பூவை எடுத்து சாமிக்கு வைத்து விட்டு, மகளுக்கும் அழகாக வைத்தவள்.. விளக்கு போட,
“ஏண்டி அவ்வளவு பூ இருக்கு, கொஞ்சம் எடுத்து உன் தலையில வச்சா என்ன? நான் தான் வயசானவ உன் வயசுக்கு நல்லாத்தான் இரேன். இப்பவே கிழவி மாதிரி நடந்துப்ப..” என்று சத்தம் போட்டவாரே மீனா தலையில் கொஞ்சம் பூவை வைத்துவிட, மீனா மனம் யோசனை ஆனது.
மெதுவாக எழுந்து அறையில் இருந்த கண்ணாடியில் தன்னை பார்த்தாள் மீனா. இதற்கு முன்பு தினமும் தன்னை பார்ப்பாள் தான். ஆனால் அப்பொழுதெல்லாம் தன்னைக் குறித்து கவனித்ததில்லை. இன்று தன்னை முழுதாக கவனிக்கிறாள்.
மீனா மாநிறமாக இருந்தாலும், எப்போதும் தன்னை நேர்த்தியாக வைத்திருப்பாள். என்று வாழ்க்கை போராட்டமாக மாறியதோ! அன்றே தன்னைக் குறித்த கவனிப்பு அவளிடம் விடை பெற்றுவிட்டது. பேருக்கு உணவு ,உடை பழக்க வழக்கம் என்று இருந்தாளே தவிர தனக்கு பிடித்த மாதிரி என்று ஒரு நாளும் வாழ்ந்ததில்லை. ஆரம்பத்தில் கணவன் உடன் இல்லாமல் மூன்று பிள்ளைகளோடு இளவயதில் தனியாக நிற்கிறோம் என்று தனக்கென சில கட்டுப்பாடுகளை விதித்து கொண்டவள். பின்னாளில் அது தன்னை அறியாமலே கடைபிடித்து விட்டாளோ!…
இந்த ஜெகன் சொல்லித்தான் சேலை விஷயமே அவளுக்கு தெரியும். தான் கட்டியிருந்த செயலையை ஒரு முறை தடவி பார்த்துக்கொண்டாள். இந்த நாவல்பழ கலர் ஜெகனுக்கு மிகப் பிடித்தம். மூன்றாவது குழந்தை உண்டாகி இருக்கும்போது ஆசையாக எடுத்துக் கொடுத்தது. தன் முகத்தை மீனா தடவி பார்த்துக் கொண்டாள். வயதின் முதிர்ச்சியை தாண்டி உழைப்பின் முதிர்ச்சி தான் அவள் முகத்தில் தெரிந்தது.
தற்போது தான் இருபத்தி ஐந்து வயதை மீனா தொடுகிறாள். நிறைய பேர் இந்த வயதில்தான் கல்யாண வாழ்க்கையில் அடி எடுத்து வைத்திருக்க, இவளுக்கு எல்லாம் முடிந்து போனது போல் ஒரு எண்ணம். அவளின் பெரிய வட்ட கருவிழி பள்ளமாகி இருந்தது. உடல் இளைத்து, கருத்து, செழிப்பில்லாமல் வறட்சியாக இருந்தாள். தன் உள்ளங்கையை தொட்டு பார்க்க, சொரசொரப்பாக இருந்தது. வெங்காயத்தை உரித்தால் நகம் உடைந்து போகும் என்று எப்போதோ தாயிடம் சண்டை போட்டது நினைவில் வந்தது. கையில் இருந்த கண்ணாடி வளையல்களை எப்போது போட்டாள் என்று கூட அவளுக்கு ஞாபகம் இல்லை. வயிறு மட்டும் தான் முன் தள்ளிக் கொண்டிருந்தது, மூன்று பிள்ளைகளை பெற்றதன் விளைவு.
ஜெகன் பிள்ளைகளை பார்க்க உள்ளே வந்தான். கண்ணாடி முன் நிற்கும் மனைவியை கவனித்தாலும் கண்டுகொள்ளாமல் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு மேலே சென்று விட்டான். மீனா அதைக் கூட உணரவில்லை. அவள் தன்னையே ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஜெகன் தன் மக்களோடு இருக்க, தமிழ் ஒரு கிண்ணத்தில் ஏதோ ஒன்றை தந்தையை நோக்கி நீட்டினாள்.
“என்னடா பாப்பா இது?”
“மருதாணி ப்பா, அம்மா அரைச்சு வச்சாங்க உங்களுக்கும்..” என்றதும்,
“அப்பா கிட்ட கொடுக்க சொல்லி அம்மா கொடுத்தாங்களா?” என்றான் ஜெகன்.
“அப்படி சொல்லல ஆனா என் கையில கொடுத்து விட்டாங்கப்பா” மகள் சொன்னதும் ஜெகன் புரிந்து கொண்டான். கை நன்றாக தடித்து சிவந்து போய் இருந்தது. உள்ளங்கையில் மருதாணி வைத்தால் கொஞ்சம் எரிச்சல் குறையும்.
மனைவிக்கு அக்கறையும் இருக்கு, கோபமும் இருக்கு. எப்படி அவளை சமாதானம் செய்து சரிகட்டி வாழ போகிறோம். அவளின் எதிர்பார்ப்பு தான் என்ன?
பிள்ளைகளை உறங்க வைத்தவன் வெளியில் வந்து எட்டிப் பார்த்தான். மீனா வெளி வராண்டாவில் தான் ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தாள். மீனாவுக்கு தன்னை குறித்து பயமாக இருந்தது. தன் மனநிலை எதுவும் பிறழ்கிறதோ என்று நினைத்தாள்.
ஏனெனில் அவளுக்கு என்று எதுவுமே செய்ய நினைப்பு வரமாட்டேன் என்கிறது. கையளவு பூ கூட தலையில் வைக்க யோசனை இல்லை. நல்ல நாளில் கூட பிடித்த சேலைலையை ஆசையாக எடுத்துக்கட்ட நினைப்பு இல்லை. கடைசியாக தனக்குப் பிடித்த உணவை எப்போது செய்து சாப்பிட்டாள் என்று கூட ஞாபகம் இல்லை. அந்த அளவுக்கா இந்த வாழ்க்கை எனக்கு பாரமாய் போனது. என் உடலை என்னால் கூட சுமக்க முடியவில்லையா?…
அழுகை வந்தது. எத்தனை கனவுகளோடு ஆசையாக ஆரம்பித்த வாழ்க்கை. புருஷன் பிள்ளைகள் என்று எல்லாம் இருந்தும் அனாதையாகி போனேனோ? மனசெல்லாம் பாரமாக அழுத்தியது.
மேலே இருந்து மனைவியையே பார்த்துக் கொண்டிருந்த ஜெகனுக்கும் நெஞ்சம் கனத்தது. மனைவி அழுகிறாள் என்று புரிந்தது. ஆனால், அருகில் சென்று ஆறுதல் சொல்ல முடியவில்லை. அவள் காதலுக்கு தான் உண்மையாகவும் இல்லை. நியாயமும் செய்யவில்லை. உறங்கும் பிள்ளைகளை ஒரு பார்வை பார்த்துக் கொண்டவன். கடந்த காலத்தை விட்டு வெளியே வாயேன் மீனா. தான் கொடுத்த வலி தான். அவ்வளவு எளிதாக வெளியே வர முடியாமல் போராடுகிறாள்.
மீனாவுக்கும் நெஞ்சம் கடந்த கால வாழ்க்கையில் தான் அழுத்தியது. இன்று அடியோடு வெறுக்கும் அளவுக்கு அன்று அத்தனை காதலை அவன் மேல் வைத்து விட்டாள். அன்று கணவனை விட்டு இரண்டு பிள்ளைகளோடு தாய்வீடு வந்த போது கூட கலங்கியெல்லாம் நிற்கவில்லை. நிச்சயமாக கணவன் வந்து விடுவான் என்றே நம்பினாள்.
நாட்கள் கடக்க, மீனா அமைதியாக இருந்தாலும் சுற்றி இருக்கும் அனைவரும் அவள் வாழா வெட்டியாக வந்து விட்டாள் என்றே நினைத்தார்கள். ஏனெனில் ஜெகன் விட்டுச் சென்று ஆறு மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஒரு போன் செய்து கூட மனைவி பிள்ளைகளை அவன் விசாரிக்கவில்லை. இதையே சொல்லி நாள் முழுவதும் பரமு புலம்பி கொண்டே இருந்தார்.
ஆரம்பத்தில் துணையாக இருந்த அண்ணன்களும் அடுத்தடுத்த நாட்களில் அவர்கள் குடும்பத்தை மட்டுமே பார்க்கத் தொடங்கினார்கள். ஏதோ கணவன் மனைவி சண்டை என்று இருந்தவர்கள். தொடர்ந்து ஜெகன் மீனாவை தள்ளி வைக்கவும், அவன் எங்கே இருக்கிறான் என்று தெரியாமல் இருந்ததும் கடன் தொல்லையால் மனைவி மக்களை விட்டு விட்டு ஓடிப் போய்விட்டான் என்றே பேசினார்கள்.
மீனா யாருக்கும் பதில் சொல்லவில்லை. அவளுக்கு தன்மேல் கணவன் கொண்ட காதல் நன்றாக தெரியும். அவள் கவலை எல்லாம் கணவன் எங்கோ கஷ்டப்படுகிறான் என்பதுதான். நன்றாக இருந்தால் நிச்சயம் மனைவி, மக்களை விட்டு அவன் இருக்க மாட்டான். ஆனால், தன் தேவை எல்லாவற்றிற்கும் தாயை எதிர்பார்ப்பது தான் சிரமமாக இருந்தது. தந்தை இல்லாமல் கூலி வேலை செய்யும் தாய்க்கு பாரமாக இருக்கிறோமோ என்று மனம் அழுத்தியது.
வெளியில் எல்லாம் மீனா கணவன் கடன் தொல்லை தாங்காமல் பொண்டாட்டி பிள்ளையை விட்டு ஓடி விட்டான் என்றே பேச, முன்ன மாதிரி மீனாவால் உறவுகளோடு கலக்க முடியவில்லை. அவளும் எல்லோரை விட்டும் தள்ளி நின்று கொண்டாள்.
மகனுக்கு காய்ச்சலாக இருக்கவும் பிள்ளைகளை தூக்கிக்கொண்டு ஊசி போட சென்று விட்டு வந்தாள் மீனா. வெயில் வேற அதிகமாக இருக்க, மகனை இடுப்பில் வைத்தவளால் மகளை நடக்க விட்டு தான் அழைத்து வர முடிந்தது.
தமிழும் சிறு குழந்தை அல்லவா! எவ்வளவு நேரம் நடக்க முடியும். பிள்ளை சிணுங்க ஆரம்பித்தது. மீனா செல்லம், தங்கம் என்று கொஞ்சி கெஞ்சி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து பிள்ளையை அழைத்துக் கொண்டு நடந்து வர, எதிரில் வந்தான் குமரன்.
“என்ன மீனா வெயில்ல நடந்து போற?”
“ஊசி போட்டு வந்தேன் குமரா”
“அடிக்கிற வெயிலுக்கு சின்ன பிள்ளையை நடக்க விட்டு கூட்டி வார” என்று அவன் கடிந்து கொள்ள, லேசாக சிரித்தவள் பதில் பேசவில்லை. என்ன சொல்ல முடியும் ஆட்டோ பிடிக்க கையில் காசு இல்லை என்றா?…
மாமன் மகளின் நிலை புரிந்தவன், “வா நான் வீட்டுக்கு தான் போறேன் உங்க வீட்டு கிட்ட உன்னை இறக்கி விடுறேன்” என்றான்.
மீனாவுக்கு கொஞ்சம் நிம்மதி. அவளை விட மகளை வெயிலில் நடக்க விடுவது தான் கஷ்டமாக இருந்தது. குமரன் கேட்டதும் சந்தோஷமாகவே அவனோடு வண்டியில் வந்து விட்டாள். ஆனால், மீனா மறந்த ஒன்று மற்றவர் பார்வையில் தான் எப்படி விழுவோம் என்று…
அப்போதுதான் பிள்ளைகளை உறங்க வைத்துவிட்டு, உணவை தட்டில் போட்டாள். வேகமா வந்தார் குமரனின் அம்மா..
“வாங்க அத்தை” என்று எழுந்து நிற்க.
அவளைக் கண்டு கொள்ளாமல் “உங்க அம்மா எங்க?”
“என்ன மதினி” என்று பரமு வரவும்..
“உன் மகன் செய்யறது எதுவும் சரி இல்ல பரமு. குமரனுக்கு பொண்ணு பார்த்து நிச்சயம் பண்ண போறோம். அவன் கூட ஜோடி போட்டு உன் மக வண்டில வாரா? பாக்குறவங்க என்ன நினைப்பாங்க? இதெல்லாம் நல்லாவா இருக்கு”
“அத்தை தப்பா பேசாதீங்க பிள்ளைக்கு ஊசி போட்டு வெயில்ல கூட்டிட்டு வர முடியல. அப்பவும் நான் வரல, நடந்து தான் வந்தேன். குமரன் தான் கூட்டிட்டு வந்துச்சு”
“அவனுக்கு நல்ல மனசு. மாமா மகன் உதவி செய்வான். ஊர் என்ன பேசும்”
“அப்ப என் மனசு கெட்டு போச்சுன்னு சொல்றீங்களா அத்தை” என்றாள் காட்டமாக.
“ஊர் சொல்லும்ன்னு சொல்றேன் மீனா. பார்த்து நடந்துக்க..” என்றதும் அவளால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.
ஜெகன் என்ற ஒருவனை தாண்டி சும்மா கூட யாரையும் நிமிர்ந்து பார்க்க மாட்டாள். கிராமத்தில் வளர்ந்தாலும் கேலி கிண்டலாக கூட மாமன்களோடு ஒரு வார்த்தை பேசமாட்டாள். இந்த ஆறு மாசமாகத்தானே கணவனை விட்டு பிரிந்து இருக்கிறாள். அதுவும் திருமணமாகி இரண்டு பிள்ளை பெற்றவள். கணவனை விட்டுப் பிரிந்த ஆறு மாசத்துலே அடுத்தவனை தேடும் அளவுக்கா தரம் தாழ்ந்து போனேன். நெஞ்சு கொதித்தது.
error: Content is protected !!