உத்தராகண்டின் மியூசோரி மலைப்பகுதி அது. கடல் மட்டத்திலிருந்து ஆறாயிரத்து ஐந்நூறு அடி உயரத்தில் அந்த அகாடமி அமைந்திருந்தது. சுற்றிலும் அடர்ந்த ஓக் மற்றும் தேவதாரு மரங்கள் சூழ, மேகங்கள் அகாடமியின் கட்டிடங்களுக்குள் வந்து செல்லும் அந்த இடம், இந்தியாவின் அதிகார மையத்தின் இதயமாகத் திகழ்ந்தது.
அகாடமிக்குச் செல்லும் அந்த மலைப்பாதையில் இருந்த சிறிய பேருந்து நிலையமே வெறிச்சோடி இருந்தது. சுற்றிலும் அடர்ந்த பனித்திரை, பார்வையை மறைக்கும் அளவுக்கு அடர்த்தியாக இருந்தது.
அந்த வெறிச்சோடிய இடத்தில் மீரா தனித்து நின்றிருந்தாள்.
மீராவுக்கு இப்போது ஒரே ஒரு எண்ணம்தான்— “ஓடு.”
ஆனால் ஓட முடியவில்லை.
அந்த இரண்டு பேரும் அவளை வளைத்துக்கொண்டிருந்தனர்.முகங்களை மூக்கு வரை கட்டியிருந்தனர். ஒருவனின் கண்கள் மட்டும் தெரிந்தன . அதில் எந்த உணர்வும் இல்லை. வேட்டையாடும் நாயின் கண்ணில் இரக்கம் தேடுவது போல் இருந்தது.
பேருந்து நிலையம் என்று சொல்வதற்கும் வெட்கப்படும் அந்த இடம். ஒரு பழைய கூரை, ஒரு கறை படிந்த பெஞ்ச், அவ்வளவுதான். சுற்றிலும்பனிமூட்டம். கண்ணுக்கு எட்டும் தூரம் வெண்மை மட்டுமே. உதவிக்கு அழைக்க ஒரு ஆத்மாவும் இல்லை.
“கேப்(cab)பிற்காக காத்திருக்காமல் நடந்தே போயிருக்கலாம்.”
தன்னை தானே திட்டிக்கொள்ள நேரமில்லை.
முன்னால் இருந்தவன் திடீரென்று கைநீட்டினான்.
மீராவின் உடல் அவளுக்கே தெரியாமல் செயல்பட்டது
தன் கையை வேகமாய் உதறி, அந்த நபரின் கன்னத்தில் ஒரு அறை விட்டாள். அந்த அறை மியூசோரியின் அமைதியான மலைப்பாதையில் எதிரொலித்தது.
அறைந்த அந்த அடுத்த நொடியே அவளுக்கு உண்மை உரைத்தது. அவர்கள் இருவரும் அவளை விட உருவத்திலும், உடல் பலத்திலும் பல மடங்கு பெரியவர்கள். அவர்கள் நிலைகுலைவதற்குப் பதில், மீராவைப் பார்த்து ஒரு கொடூரமான புன்னகையை உதிர்த்தனர்.
அந்தப் பனிப்பாதையில், மீராவின் கண்கள் இப்போது ஒரு வேட்டையாடும் சிறுத்தையின் கூர்மையைப் பெற்றிருந்தன.
அவள் தன் உடலை ஒரு சிலையாக இறுக்கினாள். அவளது மூச்சுக் காற்று மெல்லச் சீராகி, தியான நிலையில் இருப்பது போல ஒரு வினாடி அமைதிநிலவியது.
அவள் கால்கள் தரையில் உறுதியாகப் பதிந்தன.அவள் வெறும் சாதாரணப் பெண் அல்ல. தற்காப்புக் கலையில் (Karate) கறுப்புப் பட்டை பெற்றவள்.
அந்த இருவர் மீண்டும் அவளை நெருங்கியபோது, அவளது உடல் ஒரு மின்னல் வேகத்தில் செயல்படத் தொடங்கியது.
முன்னால் வந்தவனின் சட்டையைப் பிடித்து, அவனது பலவீனமான புள்ளியில் ஒரு துல்லியமான ‘சுட்டோ-உச்சி’ (Shuto-uchi) தாக்குதலைத் தொடுத்தாள். அடுத்த நொடி, மற்றொருவன் அவளைப் பற்ற முயன்றபோது, அவள் லாவகமாக வளைந்து,அவனது மார்பில் ஓங்கி ஒரு ‘மே-கிரி’ (Mae-geri) உதை கொடுத்தாள். அந்தப் பனிக்காற்றின் குளிரில், அவளது தற்காப்புக் கலைத் திறமை ஒரு நடனத்தைப் போலவும், அதேசமயம் ஒரு கத்திவீச்சைப் போலவும் இருந்தது.
இரண்டு தாக்குதல்கள். இரண்டு நொடிகள்.
அவர்கள் தடுமாறி நின்றனர்.
மீரா மீண்டும் நிலை எடுத்தாள். கைகளை மார்புக்கு முன் கட்டி, காத்திருந்தாள்.
அப்போதுதான் அந்த சத்தம் கேட்டது.
டக்… டக்… டக்…
குளம்படிச் சத்தம். தூரத்திலிருந்து …வேகமாக, கம்பீரமாக, ஆனால் கட்டுப்பாட்டுடன்.
பனிமூட்டம் பிளந்தது.
ஒரு வெள்ளை நிறக்குதிரை சீறி வந்தது. குளிரையும் பொருட்படுத்தாமல், காற்றைக் கிழித்து கம்பீரமாக ஓடிவரும் அந்த வெள்ளை நிறக்குதிரை பார்ப்பதற்கே ஒரு ரம்மியமான ஓவியம் போல இருந்தது. அந்த நிலையிலும் அந்த காட்சி மீராவின் மனதில் அழகோவியமாய் பதிய சட்டென தலை உலுக்கி நிசர்சனத்துக்கு வந்தாள்.
அதன் மேல் இருந்தவன் … ஒரே ஒரு பார்வையில் தெரிந்தது, இவன் வேறு மாதிரியானவன் என்று. உடல் வாகு, தலைமுடி வெட்டு, கண்கள் … ஒரு அதிகாரத் தோரணை!
அவன் குதிரையை அவளுக்கு அருகில் கொண்டு வந்து நிறுத்தினான். அவனது முகம் பனிக் காற்றிலும் ஒருவிதமான வெப்பத்துடன் இருந்தது.
அந்த தீயவர்கள் இருவரும் குதிரை மீதிருந்த அவனது கண்களில் தெரிந்த அந்தத் தீயை கண்ட அடுத்த நொடியே தங்களுக்குள் ஒரு பார்வையைப் பரிமாறிக்கொண்டனர். பனிச்சரிவில் தடுமாறித் தடுமாறி அடித்துப் பிடித்து ஓட்டம் பிடித்தனர்.
முகத்தில் பனிக்காற்று அடிக்க, இப்போது அவன் கண்கள் நேரே மீராவை நோக்கி நிலையாக நின்றன.
அந்தப் பனிக்காற்றின் குளிரில் அவளது உடல் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தது. ஆனால், அந்த நடுக்கத்திற்கு மத்தியிலும் அவளது உடல்வாகு ஒரு வீராங்கனைக்குரிய உறுதியைக் கொண்டிருந்ததை கண்டான் . அவளது நீண்ட கூந்தல் பனியில் நனைந்து தோளில் அலைபாய்ந்தது.
அவளது முகம்… அது அவளது அந்த உறுதியான உடல்வாகுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாதது போல இருந்தது. அவ்வளவு மென்மை! பனிக்காற்று முகத்தில் அறைய, வெண்மையான பனிப்பரப்பில் சிவந்த இதழ்களுடன் பூத்திருக்கும் ஒரு ரோஜாவைப் போல அவள் அந்தப் பனித்திரைக்கிடையே காட்சியளித்தாள். செர்ரிபோன்று துளிர்த்து நின்ற அந்த இதழ்களிலிருந்து வெகு வேகமாக விழிகளை அவனும் விலக்கிக் கொண்டான்.
“சும்மா சொல்லக்கூடாது… செம தைரியம் போலயே பொண்ணு!”என்று தனக்குத்தானே சொல்லியபடி..
“தமிழா நீங்க?”
அவன் கேட்டது மீராவைச் சற்றே ஆச்சரியப்பட வைத்தது.
மீரா தன் தலையை மெதுவாக அசைத்து, “ஆமாம்,”என்று உறுதிப்படுத்தினாள்.
“நானும்தான், மதுரை” என்றான்.
“அகாடமிதானே போகணும்? இந்த நேரத்துல இங்க கேப் (cab) வர்றதுக்கு இன்னும் ரெண்டு மணிநேரம் ஆகும். பனியும் அதிகமாயிட்டே இருக்கு.நான் அங்க தான் போகிறேன், என் கூடவே வாங்க… உங்களை அங்க விட்டுடுறேன்.”
மீரா சற்று தயங்கினாள். “இவனைப் பார்த்தால் ஏதோ பெரிய அதிகாரி மாதிரி இருக்கிறது. ஆனால், முதல் சந்திப்பிலேயே இப்படி ஒரு உதவியைப் பெறுவதா?” அவளுக்குள் ஒரு இனம் புரியாத ஈகோ தடுத்தது.
“அவன் கண்களைப் பார்த்தாள்… “இவனிடம் நெருங்காதே” என்பது போல உள்ளிருந்து ஒரு பட்சி சொல்லியது.
ஆனால், சுற்றியிருந்த கடும் குளிரும், அகாடமிக்குச் சேர வேண்டிய அவசரமும் அவளை யோசிக்க வைத்தன.
அவளது யோசனையை ‘கட்டிங் இட் ஷார்ட்” என்பார்களே.. அதுபோல…
” மேல ஏறுறீங்களா இல்லையா?”
அவனது பேச்சில் இருந்த அந்த அதிரடித்தொனி மீராவுக்குப் பிடிக்கவில்லை.
அந்தப் பனிப்புயலின் நடுவே, மீராவின்இதயம் விர்ரென்று துடித்தது.
அவன் கை நீட்டினான். சிவந்த விரல்கள்.குளிரில் கறுத்த மணிக்கட்டு. ஆனால் அந்தக் கையில் ஒரு விதமான உறுதி இருந்தது …இந்தக்கை விழவிடாது என்று சொல்வது போல!
Advertisement
மீரா ஒரு நீண்ட மூச்சை இழுத்துவிட்டு, அவனது உதவியை ஏற்க முடிவு செய்தாள்.
அவன் அவளை லாவகமாகத் தூக்கி, குதிரையின் பின்னால் ஏற்றினான். ஒரு காந்தவிசை போல, அவளது உடலில் மெல்லிய அதிர்வு பரவியது.
குதிரையின் கடிவாளத்தைப் பிடிக்க, அவர்கள் இருவரும் பனிபடர்ந்த பாதையில் அகாடமியை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினர்.
“நான் மீரா, ஐ.ஏ.எஸ் (IAS) டிரெய்னி. இப்பதான் அகாடமில ரிப்போர்ட் பண்ணப் போறேன். இன்னைக்குத் தான் என்னோட முதல் நாள்.”
“பை த வே, நான் வர்மன், ஐ.பி.எஸ்(IPS) டிரெய்னி. நானும் உங்களோட சேர்ந்த பேட்ச் தான்.
UPSC குரூப்-A தேர்வுகள் என்பது வெறும்பதவி மட்டுமல்ல. அது பல லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்நாள் கனவு. அந்தப் பெரும் போட்டியில், முதற்கட்டத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் ஆளுமைத் திறனைச் சோதிக்கும் நேர்முகத்தேர்வு என மூன்று கடினமான படிகளைக் கடந்து, அகில இந்திய அளவில் மீராவும் வர்மனும் வெற்றிபெற்றிருந்தார்கள்.
அவர்களது இந்தத் தேர்வுப் பயணத்தின் அத்தனை போராட்டங்களுக்கும் பிறகு, இப்போது மசூரியின் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் அந்தப்புகழ்பெற்ற அகாடமியில் (LBSNAA), தங்களது அடித்தளப் பயிற்சிக்காக (FoundationCourse) வந்து இறங்கியிருக்கிறார்கள். இதில் மீரா இரு தினங்கள் தாமதமாக வந்து பயிற்சியில் சேர இப்போதுதான் வர, வர்மன் இரு தினங்கள் முன்னதாகவே உரித்த நேரத்தில் வந்திருந்தான்.
இங்குதான் அந்த கேப்பிற்காகக் காத்திருந்த தருணத்தில் எங்கிருந்தோ வந்த அந்த வம்பர்கள் அவளைச் சீண்டியிருந்தனர்.
மீரா அவனுக்குப் பின்னால் அமர்ந்திருந்தாள். குளிர் அதிகமாக இருந்தாலும், அந்தப் பயணம் இருவருக்கும் ஒரு புதிய உணர்வைத் தந்தது.
மீரா, குளிரின் தாக்கத்தால் அவனது தோள்களைத் தற்செயலாகத் தொட்டுக்கொள்ள, ஒரு நொடி அவன் சட்டென நிமிர்ந்து அமர்ந்தான்.
வர்மன் நேராக முன்னே கடிவாளம் பிடித்தது பிடித்தபடி போனான். பேசவில்லை.
மீராவும் பேசவில்லை.
குளிர் பேசியது. முகத்தில் அறைந்தது, காதை கடித்தது, விரல்களை உறைய வைத்தது.
பாதை இப்போது குறுகியது. மரங்கள் இருபுறமும் சுருங்கி வந்தன. பனிக்காற்று அதிகரித்தது. குதிரை லயமாக நகர்ந்தது.
ஒரு திருப்பத்தில் குதிரை சற்று வேகமாகத் திரும்பியது.
மீரா சமநிலை தவறினாள்.
“அய்யோ,விழுவேன்!”
அவளது கைகள் தன்னிச்சையாக வர்மனின் இடுப்பைப்பிடித்துக்கொண்டன. இரண்டே நொடிகள். குதிரை நிலை சரியானது. மீரா உடனே கைகளை விலக்கிக்கொண்டாள்.
ஆனால் அவன் தோள்கள் ஒரு நொடி ஏறி இறங்கி குலுங்க, அவன் சிரித்ததாகத் தோன்ற, இவளுக்கு இப்போதும் “அய்யோ” என்று இருந்தது.
குதிரை மீண்டும் ஒரு வளைவில் திரும்பியது. இம்முறை மீரா முன்கூட்டியே குதிரையின் பின்னாலிருந்த சேணத்தை இறுக்கப் பிடித்துக்கொண்டாள்.
திடீரென்று பாதையின் நடுவே ஒரு பெரிய மரக்கிளை விழுந்து கிடந்தது.பனியின் எடையில் முறிந்து விழுந்து பாதை முழுக்க மறைத்திருந்தது.
முன்னங்கால்களை உயர்த்தி குதிரை நின்றது..
வர்மன் குதிரையிலிருந்து இறங்கினான்.மரக்கிளையை பார்த்தான். கனமாக இருந்தது.
“இதை விலக்காம போக முடியாது.”
மீரா இறங்கினாள். மரக்கிளையை பார்த்தாள்.பிறகு வர்மனை பார்த்தாள்.
இருவரும் தள்ளினர். மரக்கிளை நகரவில்லை.
“இன்னும் சேர்ந்து தள்ளணும்.”வர்மன் சொன்னான்.
“தெரியும்.”
இருவரும் மறுபடி தள்ளினர். இம்முறை சேர்ந்து, ஒரே நேரத்தில். மரக்கிளை பனியில் சறுக்கி ஒரு பக்கமாக விழுந்தது.
இருவரும் ஒரே நேரத்தில் பின்னால் தள்ளாடினர்.
வர்மன் சமாளித்துக்கொண்டான்.
மீரா….அவளது காலணி பனியில் வழுக்கியது.
மீண்டும்!
இம்முறை அவளே தன்னை சமாளிக்க முயன்றாள்.ஆனால் பனி விடவில்லை. அவள் பின்னால் சரிந்தாள்.
வர்மன் அவளை பிடிக்க நீட்டினான். அவள் அவனது கையை தட்டிவிட்டாள் … ஒரு ரிஃப்ளெக்சிவ் கராத்தே பிளாக்!
அடுத்த நொடி பனியில் படுத்தாள்.
அமைதி.
வர்மன் கீழே பார்த்தான். மீரா மேலே பார்த்தாள்.
Advertisement
மீரா கீழே பப்பரப்பா என விழுந்திருந்தாள். ஒரு நொடி. வர்மன் முகம் முழுதும் கொள்ளாமல் சிரிப்பு அள்ள… அவன் சிரிக்காமல் இருக்க போராட…. முகம் சிவந்தது. உதடுகள் துடித்தன. இவள் அவனை விழி விரியப் பார்த்தாள்.
சட்டென இறுகிக் கொண்டான்.
ஒன்றும் நடவாதது போல் மீண்டும் குதிரை ஏறினார்கள்.
வர்மன் குதிரையைச் சற்று வேகப்படுத்தினான்.
“இந்த அகாடமிக்கு இப்படி வருவதை நான் என் கனவிலும் நினைக்கவில்லை,” என்று மீரா மெல்லிய குரலில் மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.
பனித்துளிகள் அவர்களின் முகத்தில் பட்டுத்தெறிக்க, அவன் சிரித்துக்கொண்டே கூறினான்,
“எதிர்பாராத பயணங்கள் தான் வாழ்க்கையின் மிகச்சிறந்த பாடங்களைக் கற்றுக்கொடுக்கும்.”
மீரா உறைந்தாள்.
“என்னடா இது, இவன் என் மைண்ட் வாய்ஸை எப்படி கேட்ச் பண்ணுனான்??”என்று திகைத்தாள்.
“என்னது, நான் நினைச்சதைச் சத்தமா பேசிட்டேனா?”
அவன் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் ஒரு குறும்புச் புன்னகை தெரிந்தது.
“ச்ச… ச்ச… நீங்க ரொம்பப மெதுவா தான் நினைக்கிறீங்க .. உங்க மைண்ட் வாய்ஸ் தான் ரொம்ப சத்தமா கேக்குதுங்க ! “ அவன் கிண்டல் தொனி புரிய இவள் முறைத்தாள்.
அகாடமியின் பிரம்மாண்டமான கல் கட்டிடங்கள் கண்ணில் படத் தொடங்கின. பனிமூட்டத்திற்கு நடுவே அந்த நுழைவாயில் ஒரு வரலாற்றுச் சின்னமாக கம்பீரமாக நின்றது. வர்மன் குதிரையை மெதுவாகச் செலுத்திக்கொண்டே, ஒரு கையில் கடிவாளத்தைப்பிடித்து, மறு கையால் அகாடமியின் முகப்பைச் சுட்டிக்காட்டினான். உற்சாகத்துடன் சொன்னான்,
“இதோ… வந்துட்டோம்!” அகாடமியின் அதிகார மையம்.”
இந்த இடத்துலதான் அடுத்த சில மாதங்கள் நம்ம வாழ்க்கை.”
அவர்கள் இருவரும் அகாடமியின் பெரிய கதவுகளை நோக்கி நடக்கத் தொடங்கினர். மீரா அந்த கதவைப் பார்த்தாள்.
Advertisement
அவளது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் அந்த கதவுக்கு உள்ளே காத்திருந்தது … தெரியாத சவால்களுடன், தெரியாத மனிதர்களுடன், இன்று தான் சந்தித்த ஒருவனுடன் தொடங்கிய ஒரு விசித்திரமான தொடக்கத்துடன்.